இணைய இதழ் 110கட்டுரைகள்

கம்பம் வாவேர் ராவுத்தரின் குடும்ப கதை ‘மூன்றாம் பிறை’ – பீட்டர் துரைராஜ்

கட்டுரை | வாசகசாலை

‘ஒத்தக்கை இபுராஹிம்’ என்ற சிறுகதையை யதேச்சையாக தமிழினி இணைய இதழில் படிக்க நேரிட்டது. அதன் நேர்த்தியும், ஆழமும் மானசீகன் என்ற பெயரை எனக்கு அறிமுகப்படுத்தியது. எனவே, சென்னை புத்தகக் கண்காட்சி சமயத்தில் வெளிவந்த ‘மூன்றாம் பிறை’ நாவலை தயக்கமில்லாமல் வாங்கிவிட்டேன். தி.ஜானகிராமன், பிரான்சிஸ் கிருபா, தஸ்தாயேவஸ்கி – இவர்களைப் படித்தால் எப்படி இருக்குமோ, அத்தகைய உணர்வுகளை இந்த நாவல் ஏற்படுத்துகிறது.

‘மகாமக விழாவில் நெரிசலால் செத்துப் போனவர்களைப்பற்றி தலைவர் எழுதிய இரங்கற்பா’ முரசொலியில் வந்த நாளில் கதை தொடங்குகிறது. அப்போது முகமது சேக் அப்துல் காதர் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான். கல்லூரிக்காலம் முடிந்து, குடும்பப் பொறுப்புகள் அவன் தோளில் விழும்போது கதை முடிகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் வீட்டில் ( உதயசூரியன் இல்லம்), அந்த ஊரில் (உத்தம பாளையம்) அவன் நண்பர்களுக்கு (திரு, ராஜா) என்னவெல்லாம் நடந்திருக்கும் ! அதுதான் கதை.

கம்பத்தில் ஏலக்காய் தோட்டம் வைத்திருந்த செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர் உதுமான் ராவுத்தர். படிக்கும்போதே தனது மோதிரத்தை பெரியாருக்கு நன்கொடையாகத் தந்தவர். தொழுகைக்குப் போகாதவர். இவர் மூலமாக பழைய திமுககாரரை அற்புதமாகச் சித்தரிக்கிறார் மானசீகன். எளிமையான வார்த்தைகள் மூலம் நெடிய நாவலை சோர்வின்றி எடுத்துச் செல்கிறார் மானசீகன்.

இவரது மகள் வஹிதா. வாழாவெட்டி. பேருந்தில் தன்னை சீண்டியவனை அறையும் அளவுக்கு தெளிவானவள். திருமணத்திற்காக கல்லூரிப் படிப்பை பாதியில் இழந்தவள். இவளது தோழி ஃபிர்தௌஸ் அக்கா (கணவன் வெளிநாட்டில்). இவர்கள் மூலமாக பெண்கள் திருமணத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், விழைவுகள், திருமணம், போன்றவை பேசப்படுகின்றன.

உதுமான் ராவுத்தர், அவரது மனைவி உபைதா, பெரிய மகன் ரௌடி கமர், இரண்டாவது மகன் திக்குவாய் ரசாக், நன்றாகப் படிக்கும் மூன்றாவது மகன் காதர் ஆகியோர் இந்தக் குடும்பத்தின் மாந்தர்கள். இவர்களோடு வீட்டின் பின்புறம் நிறுத்தி வைத்திருக்கப்பட்டுள்ள ஜீப், வஹதாவின் பூனை மீரா, ரசாக்கின் நாய் சில்பான்ஸ் – இவர்களும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். மானசீகன், மனதில் நிற்கும்படி ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிமுகப்படுத்துகிறார். அவர்களது பல்வேறு இயல்புகளையும், அவர்கள் எதிர்கொண்ட சம்பவங்களையும் போகப் போக விவரிக்கிறார்.

பாபர் மசூதி இடிப்பு, இசுலாமியர்களை அலைக்கழிக்க வைக்கிறது. தங்கள் அடையாளங்களைத் தேட வைக்கிறது. உதுமான் ராவுத்தரின் மூத்த மகன் கமருக்கும் இத்தகைய சூழல் வருகிறது. திமுகவிலிருந்து மெல்ல, மெல்ல தன்னையறியாமல் விலகுகிறான். மதக் கட்சியில் சேர்கிறான். ரௌடியான இவன் முதலாளிகளை மதிப்பதில்லை. இவனுக்கு திருமணம் ஆகவில்லை. பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை. ஜமாத்தோடு மோதுகிறான். ஏற்கனவே உள்ள வழக்கங்களிற்கும், புதிய போக்கிற்கும் முரண் (தர்கா வழிபாடு கூடாது போன்றவை) வருகிறது. இவன் மூலமாக அச்சமூகத்தில் எழும் புதிய போக்குகளை காட்டுகிறார் ஆசிரியர். அவருடைய புரிதலுக்கும், ஆழத்திற்கும் இன்னும் பேசியிருக்க வேண்டும். ஆனால், இத்தகைய போக்குகளை கோடிட்டு காட்டுவதோடு நிறுத்திக்கொள்கிறார்.

காதருடன் கல்லூரிக் காலம் வரை இணைந்து பயணிக்கும் பூங்குழலிக்கு சாதி, மதம் ஒரு பொருட்டல்ல. இந்தக் கட்டத்தில்தான் பாபர் மசூதி இடிக்கப்படுகிறது. மைதானத்தில் சேர்ந்து விளையாடுபவர்களிடம் கூட அந்த மாற்றம் தெரிகிறது. இந்தச் சூழலில் காதர் – பூங்குழலி காதல்/ திருமணம் சாத்தியமா? அதிகம் பேசாத – அகவுலகில் வாழும் காதரும், பெரியாரைப் பேசும் – துடிப்பான பூங்குழலியும் நாவல் முழுவதும் வருகிறார்கள். அவர்களுக்கு மிகையான எதிர்பார்ப்புகள் இல்லை; அதே சமயம் ஆசிரியர் எந்த சாத்தியத்தையும் நிராகரிக்கவும் இல்லை. புலம்பவில்லை; வாழ்க்கையை நம்பிக்கையோடு பார்க்கிறார். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் !

பூங்குழலி சொத்தை அபகரிக்க சதி செய்யும், தாசில்தாராக இருக்கும் அவளது சித்தி மலர்க்கொடி எந்த சாதி? மலர்க்கொடியின் பித்தலாட்டங்கள், தங்கைக்கு திருமணம் செய்து, அந்தக் குடும்பத்தையும் தன்னோடு வைத்துக்கொண்டு – அவனையும் ‘வைத்துக் கொள்ளும்’ சாகசம் என பலவித குணாதிசயங்களைக் கொண்டவர்கள் இந்த நெடிய நாவலில் (792 பக்கம்) வருகிறார்கள். மலர்கொடியும், பூங்குழலியும் எதிர்கொள்ளும் இடங்கள் சுவாரசியமாகவும், வெகு வேகமாகவும் செல்கின்றன. சதி வெல்லுமா?! தெரியவில்லை. இதே சாதியைச் சேர்ந்தவள்தானே பேராசிரியர் சந்திரகலா. அவரைக் குறை சொல்ல முடியுமா? எத்தனை பேருக்கு அவர் உதவுகிறார்!

டியூஷன் டீச்சர் புவனா குடும்பம் வழியாக வேறொரு சாதி வருகிறது. பணம் மட்டுமே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லுமா? மோகமுள் நாவலை படிக்கச் சொல்லும் சொல்லும் டீச்சர், செம்பருத்தி புவனாவா? மோகமுள் யமுனாவா? புவனாவின் மாறும் சுபாவங்கள் கதையின் போக்கிலேயே வருகின்றன. மனிதன் முழுமையும் நல்லவனாக இருக்க முடியுமா என்ன? இதனை அவர் படைக்கும் எல்லா பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொருவருக்கும் அவரவர் நியாயங்கள். தாஸ்தேயேவஸ்கி மனிதர்களை நுட்பமாக பார்ப்பவர். முதலில் விவரிக்கும் ஒரு சம்பவம் நல்லதாகவும், அதே சம்பவத்தை வேறொரு தருணத்தில் பேசும்போது வேறு மாதிரியாகவும் சித்தரிக்கும் போக்கு அவரிடம் தென்படும். இதனை இந்த நாவலின் பல பாத்திரங்களில் காண முடியும். காதரின் அம்மா ‘ரேஷன் கடை’ சுபைதா வாயாடி தன் கணவன், மகள், மகன்களாலே மதிக்கப்படாதவள். ஏச்சுக்கு ஆளானவள். ஆனாலும் அவளுக்கு தன் பாவா (மாமனார்) மீதுள்ள மரியாதை, நன்றியுணர்ச்சி இறுதிவரை மாறவில்லை. அவளும் என்னதான் செய்வாள் பாவம்!

கதையில் அங்கதமும் அவ்வப்போது வருகின்றன. “ஆல்ரவுண்டர்” அரவிந்த்சாமி போன்ற அண்ணன்கள் இன்றைக்கும் ஏதோ ஒரு கிராமத்தில் இருக்கத்தானே செய்கிறார்கள்! பிரின்சிபல் சொன்னதாகச் சொல்லி கிரிக்கெட்டுக்காக பிரேயர் நடத்த வைக்கும் பூங்குழலி; கல்லூரித் தோழி இன்பாவை, காதர் காதலிப்பதாகச் சொல்லி ஏற்றிவிடும் துடுக்கு என பல சம்பவங்கள் வருகின்றன. காதரின் வகுப்புத் தோழன் திருவின் பாத்திரம் அத்தகையதுதான். இவன் என்ன சாதி எனத் தெரியவில்லை. காதரைவிட இரண்டு வயது மூத்தவனான திரு, இறுதிவரை வருகிறான். காதரின் நல்லது, கெட்டதுகளில் இருக்கிறான். எல்லோரும் கவனிக்கும்படி பேசுகிறான். சிரிக்க வைக்கிறான். இவனுக்கு ‘மதம்’ ஒரு பொருட்டே அல்ல. காதர் வீட்டில் அவன் சுதந்திரமாக உலாவுகிறான். அவனுக்கும் வஹிதா அக்காதான். இவன்தான் பொது சமூகம் காண விழையும் மனிதன். இவன் வகுப்பில் வெற்றி பெறாவிட்டால் என்ன? வாழ்க்கையில் வெற்றி பெறுவான்!

பிரான்சிஸ் கிருபாவின், கன்னி நாவலின் கதாநாயகன் பாண்டி நாவல் நெடுங்கிலும் கவிதைகளை, சங்கப் பாடல்களைச் சொல்லுவான். அதைப் போல பாடல்கள், குறள்கள், ஷேக்ஸ்பியர், கு. அழகிரிசாமி என பலவற்றை இந்த நாவலின் பாத்திரங்கள் பேசுகிறார்கள்.

இந்த நாவல், இசுலாமிய இலக்கிய உலகில் முக்கியமான இடத்தைப் பெறும். விரசம் எங்கும் வரவில்லை. திருமணமான பெண்களின் நிலையை அனுதாபத்தோடு அணுகுகிறார். சொல்லியும், சொல்லாமலும் நுட்பமாக புரியவைக்கிறார். (உயிரைக் கொல்வது ஹராம் என்றால் உணர்வுகளை கொல்வது ஹராம் இல்லையா?) சமூக உணர்வோடு மானசீகன் நிகழ்வுகளை விவரிக்கிறார்.

இந்த நாவலில் பூனையும், நாயும் கூட கதாபாத்திரம்தான். ஏன் உதுமான் பயன்படுத்தி வீட்டின் பின்புறம் நிரந்தரமாக நிறுத்தி வைத்திருக்கும் ஜீப்பும் ஒரு பாத்திரம்தான். உதுமான் அந்த வாகனத்தை ஆசையாகப் பார்பதற்கும், அதே ஜீப்பை சுபைதா கரித்துக் கொட்டுவதற்கு வேறு, வேறு காரணங்கள் உள்ளன. வஹிதா தனது பூனைக்கு மீரா என பெயரிட்டு அழைக்கிறார் என்றால், காதரின் இரண்டாவது அண்ணன் ரசாக் எங்கு போனாலும் தன்னோடு சில்பான்ஸ் என்ற நாயை அழைத்துச் செல்கிறான். நாய் வளர்ப்பது இசுலாமியர்களுக்கு ஹாராம். (இந்த மீரா, சில்பான்ஸ்   மூலம் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார்?) இரண்டாவது அண்ணன் ரசாக் ஒரு அழுத்தமான பாத்திரம். தான் நோன்பு இருப்பதை விளம்பரப்படுத்துவதில் அவனுக்கு விருப்பமில்லை. போத்திராசாவிற்கு முன்னோடும் பிள்ளையாக இருக்கும் அவன், போத்திராசாவின் லீலைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவனுக்கு திக்குவாய் இருந்தால் என்ன? பெரிய வருமானம் இல்லையென்றால் என்ன? அவனை குறைவாக மதிப்பிட முடியுமா?

வஹிதாவை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டி, ஜஹாங்கீர் வாப்பா, கதையில் ஒரு பக்கத்திற்கும் குறைவாகவே வந்தாலும் அறத்தால் நம் மனதில் இருக்கிறார். (பொன்னீலனின் புதிய தரிசனங்களில், தன் குழந்தையின் கைகளில் இருந்து, ஊர்ப் பண்ணையார் கொடுத்த வாழைப்பழத்தை பிடுங்கி வீசும் அம்மா போல). இப்படிப்பட்ட நெகிழ்வான தருணங்களை நாம் இந்த நாவலில் காண இயலும். பரோட்டா கடை துரையத்தா அத்தகையவர்தான்.

திருச்சியில் படிக்கும் காதர், பூங்குழலி வாயிலாக கல்லூரிச் சேட்டைகளை விவரிக்கிறார். சாதி, மதச் சண்டை இல்லாத ஊரான திருச்சியைப் பார்த்து வியக்கிறார். இமயமலையை விட மூத்தது மலைக்கோட்டை என்கிறார்.

கதை ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரசியமாக உள்ளது. நெடிய நாவல் என்ற மலைப்பை ஏற்படுத்தவில்லை. இசுலாமிய வாழ்வியலைப் பேசும் நாவல் என்று சுருக்க இயலாது. கதை மாந்தர்கள் வாசகர்களை குழப்பவில்லை. சாதாரண வார்த்தைகளில் கதை சொல்லப் பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பு, நம்மை விடாமல் படிக்கத் தூண்டுகிறது. நாவலுக்கு உரிய எல்லா இலக்கணத்தையும் இது பெற்றுள்ளது. மானசீகன் வெற்றி பெற்றுள்ளார். தமிழினி, நாவலை வெளியிட்டுள்ளது ( விலை ரூ.940).

ppeterdurairaj@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button