இணைய இதழ் 112தொடர்கள்

காலம் கரைக்காத கணங்கள்- 18; மு.இராமனாதன்

தொடர் | வாசகசாலை

ஹாங்காங்கில் நவீன நாடகங்கள்

இந்தக் கட்டுரைக்கு, “நான் நடிகன் ஆக முடியாதது” என்கிற துணைத் தலைப்பை வைக்கலாம். கட்டுரை 2002-2003 காலகட்டத்தில் ஹாங்காங்கில் அரங்கேறிய நவீன நாடகங்களைப் பற்றித்தான் அதிகமும் பேசவிருக்கிறது. அதில் நான் நடிகன் ஆக முடியாமல் போன கதையும் ஓர் இடையீடாக வரும். மற்றபடி இஃதோர் சுயபுராணமாய் இராது என்றும், யாரும் மடங்கிச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு… 

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

ஹாங்காங்கில் 1992 முதல் 2001 வரை, ‘கானாஞ்சலி’ என்கிற அமைப்பு கர்னாடக இசைக்கான மேடையாக இருந்தது. அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் சிவா சிவானந்தன். ஈழத் தமிழர். இசை ரசிகர். லால்குடி, ஓ.எஸ்.டி, சௌம்யா, சுதா ரகுநாதன், சஞ்சய் சுப்பிரமணியம், என்.ரமணி முதலான பல கலைஞர்களின் கச்சேரிகளை ஹாங்காங்கில் நடத்தியவர். உள்ளூர்க் கலைஞர்களின் கச்சேரிகளையும் நடத்தினார். அவை தரமாகவும் இருந்தன. இதுவே அவருக்கு ஹாங்காங் தமிழர்களின் பங்களிப்பில் ஒரு முழு நீள நாடகத்தை நடத்தும் துணிவை வழங்கியது. 1997இல் அவர், ‘நாடகாஞ்சலி’யைத் தொடங்கினார். அது இந்தியாவின் விடுதலைப் பொன்விழா ஆண்டு. அவர் தேர்ந்த நாடகம் சோ-வின், ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?’. கதை மேலோகத்தில் நடக்கும். இந்திரனும் எமனும் நாரதரும் வருவார்கள். கூடவே ஓர் அரசியல்வாதி. பெரும்பாலான நடிகர்களைத் தேர்வு செய்து ஒத்திகையும் நடத்திக் கொண்டிருந்தார் சிவா. 

நான் ஹாங்காங் ஏகிக் குறுகிய காலமே ஆகி இருந்தது. இந்த நாடகம், ஒத்திகை எதைப் பற்றியும் நான் அறியவில்லை. ஹாங்காங் சீனாவிற்குக் கை மாறி இருந்தது. அது தொடர்பான எதிர்பார்ப்புகளும் அச்சங்களும் நாளிதழ்ப் பக்கங்களை நிறைத்தன. நான் அவற்றை ஆர்வமாகப் பின் தொடர்ந்தேன். 

நாடகத்தின் கடைசிக் காட்சியில் காந்தியும் நேருவும் பாரதியும் வருவார்கள். முதலிருவரும் இந்தியாவின் நிலையைக் கண்டு மனம் நொந்து பேசுவார்கள். பாரதி தனது கவிதைகளைப் பாடுவான். இந்த மூன்று பாத்திரங்களுக்கும்  சிவா நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்தார். அப்படியாக ஒரு நண்பர் நகருக்குப் புதியவனான என்னை அடைந்தார். நான் பள்ளியிலும் கல்லூரியிலும் நாடகங்களில் தலை காட்டியிருக்கிறேன். ஆகவே நடிக்க முடியும் என்று நம்பினேன். எனது தமிழ் உச்சரிப்பைக் கேட்ட சிவா என்னை பாரதி ஆக்கினார். வசனங்களைப் பாடம் பண்ணுகிற வேலை கூட இல்லை. பாரதியின் புகழ் பெற்ற பாடல் வரிகள்தான் வசனம். குழுவில் இணைந்த பிற்பாடு நான் எந்த ஒத்திகையையும் தவற விட்டதில்லை. ஒத்திகை முடிந்ததும் உணவு இருக்கும். எனது பங்களிப்பு கடைசிக் காட்சியில் மட்டும்தான் என்றாலும் எல்லோரையும் போல சாப்பிடலாம். எந்தத் தடையுமில்லை. 

நாடகத்திற்கு ஹாங்காங் தமிழர்கள் திரளாக வந்தனர். நாடகம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. கடைசிக் காட்சியும் வந்தது.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? 

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

என்று எமது அன்னை கை விலங்குகள் போகும்? 

என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?

என்ற வரிகளை நான் பாடிய (பேசிய) போது பெரும் வரவேற்பு இருந்தது. நாடகத்திற்கு மதிப்புரை எழுதிய, Hong Kong Standard நாளிதழ் அந்தக் காட்சியில் எடுக்கப்பட்ட படத்தைத்தான் பிரசுரித்தது. நாடகம் முடிந்ததும் எல்லோரும் எழுந்து நின்று கை தட்டினார்கள். ஹாங்காங் தமிழ்ச் சமூகம் அளவிற் சிறியது. ஊருக்குப் புதியவனான என்னை அது சில காலம் பாரதி என்றே அழைத்தது. நானும் ஒரு நடிகனாகிவிட்டதாக நம்பினேன். அது விரைவில் உடையும் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

1998இல் சிவா லண்டனுக்குப் போனார். கானாஞ்சலி, நாடகாஞ்சலி  நிகழ்வுகள் மெல்லக் குறைந்தன. சிவா சுயேச்சையானவர். இசைக் கச்சேரிகளையும் நாடகத்தையும் தனது அமைப்புகளின் மூலமாகவே நடத்தினார். தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் எல்லா ஊர்களையும் போல ஹாங்காங்கிலும் ஒரு தமிழ்ச் சங்கம் இருக்கிறது. பெயர்: தமிழ்ப் பண்பாட்டுக் கழகம். அது இன்ன பிற தமிழ்ச் சங்கங்களைப் போல குழந்தை நிகழ்ச்சிகளையும் சுற்றுலாக்களையும் நடத்தி வந்தது. அவ்வப்போது சென்னையிலிருந்து, “காட்டுல மழை”யையும் “காதுல பூ”வையும் இறக்குமதி செய்து கிச்சு கிச்சு மூட்டி வந்தது. கலை, பொழுதைப் போக்கத்தானே?

யந்திரத் துடைப்பான்

ஹாங்காங்கில் நாடக ஆர்வலர்கள் இருந்தனர்; நாடகங்களும் நடந்தன. ஆயின், ஹாங்காங்கில் நவீன நாடகங்களுக்கான துவக்கம் குறித்தது மார்ச் 2002இல் தமிழ்ப் பண்பாட்டுக் கழக நிகழ்ச்சி ஒன்றில் மேடையேறிய சுந்தர ராமசாமியின் ‘யந்திரத் துடைப்பான்’ எனும் குறுநாடகம். நாடகத்தின் இயக்குநர்: பயணி தரன். இந்திய அயலுறவுப் பணி (IFS) அதிகாரி. சென்னையில், ‘ஐக்யா’ எனும் குழு அமைத்து நவீன நாடகங்களை நடத்தியவர். அந்த நாடகம் ஒரு சாமியாரின் உள்ளுக்குள் இருக்கும் மனிதனை வெளிக்கொணர்ந்தது. நாடகத்தில் இரண்டு பாத்திரங்கள்தான். சாமியாராகப் பயணி தரனே நடித்தார். யந்திரத் துடைப்பானை விற்க வரும் பெண்ணாக எஸ்.வைதேஹி நடித்தார். நாடக ஆர்வலர்களுக்கு நவீன நாடகத்தின் மீது ஆர்வத்தைத் தோற்றுவிக்க இந்த நாடகம் காரணமானது. அது ஒரு முழு நீள நவீன நாடகத்திற்கு வழி வகுத்தது.

நிரபராதிகளின் காலம்

அதுதான், ‘நிரபராதிகளின் காலம்’. ஜெர்மானிய நாடகாசிரியர் ஸீக்ப்ரெட் லென்ஸ் எழுதியது. பயணி தரன் இயக்கினார். ஒரு சமூகம் அச்சத்திலேயே இருக்கிறது. நாளடைவில் அது இயல்பாக மாறிவிடுகிறது. கெடு வாய்ப்பாக அது அவர்களுக்குத் தெரியவும் செய்கிறது. அது குற்ற உணர்வை உருவாக்குகிறது. சமூகத்தில் நடக்கும் அநீதிகளைக் கடந்து போகும் சாமானியர்கள் ஒரு கட்டத்தில் இந்தக் குற்ற உணர்வுக்கு உள்ளாகிறார்கள். இந்தக் கருதான் நாடகத்தின் ஊடும் பாவுமாக இருந்தது. நாடகம் ஜுன் 2002இல் அரங்கேறியது. 

நாடகத்தில் சமூகத்தின் அங்கத்தினர்களாகக் கருதப்படக்கூடிய ஒன்பது பேரை ஒரே அறையில் அடைத்து வைப்பார்கள். வங்கி அதிகாரி, விவசாயி, லாரி ஓட்டி, ஹோட்டல் முதலாளி, டாக்டர், மாணவன், அச்சகத் தொழிலாளி,  பொறியாளர், பேராசிரியர் என ஒன்பது பேர். இதில் மூன்று பேர் தொழிலாளர்கள். இரண்டு பேர் இளைஞர்கள். பேராசிரியர் கொஞ்சம் அதீதமான ஆசாமி. வங்கி அதிகாரியும் டாக்டரும் உணர்ச்சிமயமானவர்கள். இந்தப் பாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள் தங்கள் பின்புலத்தையும் அடையாளங்களையும் அழித்துக்கொண்டு பாத்திரங்களுக்கு ஏற்றாற் போல் கூடு விட்டுக் கூடு பாய்ந்தார்கள். எனில், எனக்கு இவ்வகைச் சிரமங்கள் இல்லை. நான் நடித்தது ஹோட்டல் முதலாளியாக. உடையிலும் தோற்றத்திலும் வயதிலும் என்னைப் போன்ற பாத்திரம். எனது அடையாளங்களை நான் வெகுவாக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆயினும் ஒவ்வொரு உரையாடலிலும் ஒவ்வொரு அசைவிலும் வெவ்வேறு மனவெழுச்சிகளை வெளிக்கொணர வேண்டியிருந்தது. அதற்கு என்னுடைய சுயத்திலிருந்து முற்றாக வெளிவர வேண்டும். ஆனால் எனது தன்முனைப்பு அதை அனுமதிக்க மறுத்துக்கொண்டே இருந்தது.

குழுவில் யாரும் தொழில் முறை நடிகர்கள் அல்லர். ஆனால் பயிற்சி மேற்கொண்டார்கள். பலவாறு மெனக்கெட்டார்கள். அவசியமான இடங்களில் குமுறினார்கள், கமறினார்கள், அழக்கூடச் செய்தார்கள்.. நடந்துகொண்டே வசனம் பேசுகிற இடங்களில் அவர்கள் வசனம் பேசுவதும் நடக்கத் தொடங்குவதும் ஒரே நேரத்தில் இருக்கும். நடந்து முடியும்போது வசனமும் சரிகணக்காக முடியும். இந்த வித்தைகள் எனக்குக் கைகூடவில்லை.

ஒரு நடிகன் உடலாலும் மனத்தாலும் தனது சுயத்திலிருந்து  விட்டு விடுதலையானால் மட்டுமே பாத்திரமாக மாற முடியும். ‘என்று தணியும்’ நாடகத்தில் நான் நானாகவே இருந்துகொண்டு ஒரு மேடைப் பேச்சைப் போல பாரதியின் வரிகளை ஒப்புவித்துவிட்டேன். ஒரு மேடைப் பேச்சுக்குக் கைதட்டுவது போல ஜனங்களும் கைதட்டி விட்டார்கள். நான் என்னால் நடிக்க முடியும் என்று நம்பிவிட்டேன். அது பிழை. இப்போது அது எனக்குப் புரிந்தது. ஆனாலும் நடிகனாகிற கலை எனக்குக் கைகூடவில்லை. இயக்குநர் கடுமையானவர். என்னிலிருந்து எப்படியோ கொஞ்சம் ஹோட்டல் முதலாளியை வருவித்துவிட்டார். ஆனால் நாடகமும் ஒத்திகையும் ஒரு பேரனுபவமாக அமைந்தது. அந்தக் கதையை வாசிக்க: https://vasagasalai.com/kaalamkaraikkathakanangal10/

நாடகம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு குழுவினர் அனைவரும் சந்தித்தோம். எல்லோருக்கும் இயக்குநரிடம் ஒரு கேள்வி இருந்தது- “அடுத்த நாடகம் எப்போது?”ஆனால் யாரும் அந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன்னரே இயக்குநர் சொன்னார்: “இனி நான் ஹாங்காங்கில் எந்த நாடகத்தையும் இயக்கப் போவதில்லை.” எல்லோருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் அந்த முடிவு புதிய இயக்குநர்களை உருவாக்கியது. 

விதியோ கணவரே?’

அப்படித்தான், ‘பாஞ்சாலி சபதம்’ தொடங்கியது. என்னால் நடிகனாக முடியாது என்பதை இப்போது அறிந்துகொண்டதால், நான் கவனமாக நடிப்பிலிருந்து விலகி, இயக்குநராகினேன். பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’ படைப்பின் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு மறு வாசிப்புதான் இந்த நாடகம். இதற்கு ‘பாஞ்சாலி சபதம்’ என்றல்ல, ‘விதியோ கணவரே?’ என்று தலைப்பிட்டிருந்தோம். அதற்குக் காரணம் இருந்தது.

தருமன் சூதுக்கு இணங்குகிறான், ‘தாயம் உருட்ட லானார், அங்கே சகுனி ஆர்ப்பரித்தான்’. இந்த இடத்தில் நாடகம் தொடங்குகிறது. தருமன் பணயப் பொருட்களை இழந்த வண்ணம் இருக்கிறான். ‘நாடிழக்க வில்லை, தருமா! நாட்டை வைத்திடு’ என்கிறான் சகுனி. நாட்டை, தம்பியரை, தன்னை, கடைசியாகப் பாஞ்சாலியையும் வைத்து இழக்கிறான் தருமன். 

பாஞ்சாலியின் ‘நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி’ அவைக்கு இழுத்து வருகிறான். அவையில் அவளது நியாயங்களுக்குச் செவி சாய்ப்போர் இலர். ‘இது பொறுப்பதில்லை’ என்று வீமன் பொங்குகிறான். ஆனால் அவனால் எதையும் தடுக்க முடியவில்லை. ‘தையல் சேலையுங் களைவாய்’ என்று ஆணையிடுகிறான் கர்ணன். துச்சாதனன் எழுந்து பாஞ்சாலியின் ‘துகிலினை மன்றிடை உரிதலுற்றான்’

இந்த இடத்தில் நாடகம், கண்ணனையோ தம்பியரையோ முன்னிலைப்படுத்தாமல் பாஞ்சாலியை முன்னிலைப்படுத்தியது. பாஞ்சாலி ‘கண்ணா! அபயம், உனக்கு அபயம்’ என்று குரல் எழுப்பவில்லை. வண்ணப் பொற் சேலைகள் வளரவுமில்லை. துச்சாதனன் கை சோர்ந்து வீழவுமில்லை. ‘தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்’ என்று வீமனும், ‘பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்’ என்று அருச்சுனனும் மேற்கொள்ளும் சபதங்களும் நாடகத்தில் இல்லை. 

மாறாகப் பாஞ்சாலி துச்சாதனனிடமிருந்து விலகி நடக்கிறாள். அவையினரைப் பார்த்து, ‘மேலோர் இருக்கின்றீர். வெஞ்சினமேன் கொள்கிலரோ?’ என்று  கேட்கிறாள். அடுத்து, தலை குனிந்து நின்றிருக்கும் பாண்டவர்களை நோக்கிச் செல்கிறாள். முதலில், தருமனின் தாடையைப் பிடித்துத் தூக்கி அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்கிறாள்: ‘விதியோ கணவரே?’. பிறகு, வீமனின் முன்மயிரைப் பற்றியுயர்த்திக் கேட்கிறாள்: ‘விதியோ கணவரே?’. அருச்சுனனிடமும், நகுலனிடமும், சகாதேவனிடமும் அதே கேள்வியைக் கேட்கிறாள்: ‘விதியோ கணவரே?’. இறுதியாக வெறுப்பும் சினமும் மிக்க பாஞ்சாலியின் சபதம் நாடகத்தை நிறைவு செய்தது

பாவி துச்சாதனன் செந்நீர்-அந்தப்

பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்

மேவி இரண்டுங் கலந்து- குழல்

மீதினிற் பூசி நறுநெய் குளித்தே

சீவிக் குழல் முடிப்பேன் யான்- இது

செய்யு முன்னே முடியேன் 

‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்’ என்பதை ‘இயற்கை மருமம்’ என்றும் ‘விதி’ என்றும் அருச்சுனன் வாயிலாகப் பாரதி சொல்கிறான். ஆனால் நாடகம் விதியை நொந்தபடி கடந்து போவதில்லை. மாறாக அந்தச் செயலற்ற மனப்போக்குக்கு எதிரான செய்தியை வெளிப்படுத்தியது. கணவர்களின் முன் மயிரைப்பற்றி பாஞ்சாலி கேட்கும் ‘விதியோ கணவரே?’ என்கிற கேள்வியைத்தான் நாடகம் முன்னிருத்தியது. 

நாடகத்தில் பாத்திரங்கள் பாரதியின் கவிதை வரிகளையே பேசினார்கள். எல்லோரது ஒலிப்பும் நேர்த்தியாக இருந்தது. ஓரிரு குத்து விளக்குகளும், அகல் விளக்குகளும் தவிர வெற்றுமேடையே நடிப்புக்களமாகவும், தப்பட்டை போன்ற ஒலியே முக்கிய இசைக் கூறாகவும் அமைந்திருந்தன. கூடுதலாக ஒரு சூத்திரதாரியையும் சேர்த்துக்கொண்டோம். இதற்கு இரண்டு காரணங்கள். 

ஒன்று – “ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி”யாக பாரதி எழுதிய பாஞ்சாலி சபதம் இன்று செந்தமிழாகிவிட்டது. அவசியம் உள்ள இடங்களில் இதை பேச்சுத் தமிழில் சொல்ல சூத்ரதாரியைப் பயன்கொண்டோம். பாத்திரங்களை அறிமுகப்படுத்தவும், கதையைச் சுருக்கி நேரடியாகச் சொல்லவும் சூத்ரதாரியின் பாத்திரம் உதவியது. 

இரண்டு – பாரதி எனும் கதைசொல்லி வாசகரிடம் நேரடியாகப் பேசும் வசனங்கள் படைப்பில் முக்கியமானவை. ‘வெறும் மாடு நிகர்த்த துச்சாதனன்- அவள் மைக்குழல் பற்றி இழுக்கிறான்’ என்றும், ‘ஆயிரங்களான நீதி, அவை உ ணர்ந்த தருமன் தேயம் வைத்திழந்தான், சிச்சீ! சிறியர் செய்கை செய்தான்!’ என்றும் பாரதி சினக்கிறான். பாஞ்சாலியை துச்சாதனன் இழுத்துச் செல்லும் காட்சியை  ‘என்ன கொடுமையிது’ என்று பார்த்திருந்தார்’ என்று ஊரவரின் கீழ்மையைச் சாடுகிறான். இவையெல்லாம் சூத்ரதாரியாலே சொல்லப்பட்டன. கதை சொல்லும் சூத்திரதாரிக்கும், கதையை நகர்த்தும் சகுனிக்கும் மட்டும் கூத்தமைவு கொண்ட முகச்சாயங்கள் இருந்தன.

நாடகம், டிசம்பர் 2002இல் அரங்கேறியது. பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது குழுவினர் ‘அடுத்து என்ன?’ என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஈடிபஸ் 

அடுத்து வந்ததுதான் ஈடிபஸ். கி.மு.420இல் கிரேக்க நாடகாசிரியர் சோபாக்ளிஸ் எழுதிய ‘ஈடிபஸ் வேந்தன்’ நாடகத்தை அவல நாடகங்களுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்கிறார் அரிஸ்டாடில். பிராய்டின் Oedipus Complex கருத்தாக்கம் இந்நாடகத்தின் கருவிலிருந்து வந்ததுதான். நாடகத்தை இயக்கியவர் எஸ்.வைதேஹி.

மன்னன் லயஸ்-ராணி ஜொகஸ்டா தம்பதிகளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அது ‘தந்தையைக் கொல்லும்’ என்று நிமித்திகர்கள் சொன்னதால், லயஸ் குழந்தையைக் கொல்லுமாறு பணிக்கிறான். ஆனால் குழந்தை கைமாறி அண்டை நாட்டு அரசனிடம் வருகிறது. பிறப்பின் ரகசியம் தெரியாமல் அங்கு இளவரசனாய் வளர்கிறான் ஈடிபஸ். ஒரு நிமித்திகன் ‘தந்தையைக் கொல்வாய்; தாயை மணப்பாய் ‘ என்று சொன்ன வாக்கைக் கேட்டு மனம் உலைந்து நாட்டை விட்டுப் போகிறான். வழியில் தகராறு ஒன்றில் லயஸை, மன்னர் என்றோ தந்தை என்றோ அறியாமல் கொன்று விடுகிறான். பிறகு பிரபலமாகி, மன்னனாகி, ராணி ஜொகஸ்டாவையே மறுமணம் செய்து கொள்கிறான்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியக் கடவுளிடமிருந்து லயஸைக் கொன்றவனை நாடு கடத்த வேண்டும் என்ற செய்தி வருகிறது. உண்மையை நோக்கி ஈடிபஸின் தேடலும் துவங்குகிறது. நிமித்திகர் டைரேக்ஷியஸ் வருகிறாள்; ஈடிபஸ்தான் லயஸைக் கொன்றவன் என்கிறாள். ஈடிபஸ் சினக்கிறான்; டைரேக்ஷியஸை பழிக்கிறான்; மைத்துனன் கிறயனையும் இகழ்கிறான். ஆனல் உண்மை மெல்லக் கட்டவிழ்கிறது. தான் கொன்றது தந்தையை, மணந்தது தாயை என்று உணர்கிற ஈடிபஸ் நொறுங்கிப் போகிறான். ராணி ஜொகஸ்டாவின் தற்கொலை அவனது அவலத்தை உச்சத்திற்கு இட்டுச் செல்கிறது. கண்களைக் குருடாக்கிக் கொள்கிறான். உண்மையைத் தேடிய வேட்டையின் முடிவில் தானே வேட்டையாடப்பட்டதை உணர்கிறான் ஈடிபஸ்.

மூல நாடகத்தை ‘எல்லாம் விதியின் செயல் ‘ எனும் கருத்தை வலியுறுத்துகிறது என்பவருண்டு. ஈடிபஸின் மதியீனம்தான் அவனது இழி கதிக்கு காரணம் என்பவருமுண்டு. ஆயின், இந்த நாடகம் ஈடிபஸின் கர்வம் அழிந்துபடுகிற மாற்றத்தை முன்னிருத்தியிருந்தது.

நாடகம் துவங்க்கும்போது கரங்களை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, மாட்சிமை பொருந்திய கிரேக்க மன்னன் ஈடிபஸ் சொல்வான்: ‘பெருங்குடி மக்களே! உலகம் புகழும் வேந்தனாகிய நானே நேரே வந்திருக்கிறேன்’.

இறுதிக் காட்சியில் அவனே ஒரு ஆமையைப் போல் உடல் மடங்கி, சுயம் குத்திக் கொண்ட கண்களிலிருந்து குருதி வழியச் சொல்லுவான்: ‘குற்றம் இழைத்தவன் நான்தான் என்று தெரிந்த பிறகும், மக்களை ஏறெடுத்துப் பார்ப்பதற்கா கண்கள் வேண்டும்?’.

நாயகனில் நேர்கிற இந்த வீழ்ச்சியை, மாற்றத்தை, நாடகம் மையப்படுத்தியிருந்தது. கிரேக்க வரலாற்றை நினைவூட்டுகிற உடைகள், நேர்த்தியான நடிப்பு, நல்ல உச்சரிப்பு, எளிய மேடைக் களம், கதையோட்டதில் மெல்ல மங்குகிற ஒளி-என்று எல்லாக்கூறுகளும் மாற்றம் என்கிற மையக் கருத்தை நோக்கியே பின்னப் பட்டிருந்தது. வரும் பொருள் அறிந்த நிமித்திகர் டைரேக்ஷியஸிற்கும், கதைசொல்லும் சூத்ரதாரிக்கும் முகச்சாயம் இருந்தது.

மூல நாடகத்தில் ஆணாக இருந்த டைரேக்ஷியஸின் பாத்திரம் இங்கு பெண்ணாகி இருந்தது. ‘கண்கள் உண்டு உனக்கு; ஆனால் உன்னை எதிர் நோக்கும் பேரழிவைக் காண உன் கண்களுக்கு ஆற்றல் இல்லை ‘ என்று டைரேக்ஷியஸ் ஈடிபஸை நோக்கி சொல்கிற தொனி ஒப்பாரியை ஒத்திருந்தது. மொழிபெயர்ப்பு நாடகங்களில், நடிக்கப்படுகிற மொழியின் பண்பாட்டுக் கூறுகள் கவனமாக உட் செலுத்தப் படுகிறபோது, நாடகத்தின் பரிமாணம் விரிவடைகிறது.

மூல நாடகத்தில் ‘கோரஸ் ‘ வருகிறது. கதையை நகர்த்திச் செல்லவது, கதாபாத்திரங்களோடு உரையாடுவது, செய்தி சொல்வது -எல்லாம் கோரஸின் பணிகள். இங்கே அது சூத்திரதாரியாய் மாறியிருந்தது. கூடவே ஈடிபஸின் உள் மன அதிர்வுகளை பின்னணியில் இருந்தபடி பிரதிபலிக்கிற பாத்திரமாகவும் சூத்ரதாரி படைக்கப்பட்டிருந்தது. சூத்திரதாரிக்கு முகத்தை மறைக்கும் முகக்கூடு ஒன்றும் இருந்தது. ஈடிபஸ் உண்மை உணர்கிறபோது முகக்கூடு மைய மேடையை நோக்கி வீசப்படுகிறது. சூத்திரதாரியின் முகமும் தெரிகிறது. அது மரபு, மாட்சி எல்லாம் மாயை என்று சொல்வது போலிருந்தது.

நாடகம் மார்ச் 2003இல் அரங்கேறியது. பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றது. ஈடிபஸிற்குப் பிறகு ஹாங்காங்கில் குறிப்பிடத்தக்க நவீன நாடகங்கள் நடக்கவில்லை. 2002-2003 கால கட்டத்தில் அரங்கேறிய நவீன நாடகங்களில் ‘யந்திரத் துடைப்பான்’ நீங்கலாக, மூன்று நாடகங்களில் (‘நிரபராதிகளின் காலம்’, ‘விதியோ கணவரே?’,  ‘ஈடிபஸ்’) பங்கேற்றவர்களில் பலரும் நவீன நாடகங்களுக்குப் பழக்கப்பட்டவர்களில்லை. பார்வையாளர்களும் அப்படியே. ஆனால் காத்திரமான நாடகங்கள் அரங்கேறவும் ரசிக்கப்படவும் எந்த முன் அனுபவமும் அவசியமாக இருக்கவில்லை. அதாவது ஹாங்காங்கில் நல்ல நாடகங்களுக்கான களம் இருக்கிறது. வருங்காலத்தில் அதை யாரேனும் பயன்கொள்வார்கள்.  

##

‘விதியோ கணவரே?’ நாடகக் குழு: சூத்திரதாரி – கே.ஜி. சீனிவாசன்; சகுனி – என். வெங்கட்; தருமன் – எஸ். வைத்தியநாதன்; துரியோதனன் – வி.ஆர். முரளி நாராயணன்; விதுரன்- சி.ஜி.கிருஷ்ணமூர்த்தி; தேரோட்டி- ஜே.முகுந்தன்; பாஞ்சாலி – அனுராதா முகுந்தன்; துச்சாதனன் – அப்துல் காதர்; பீஷ்மன் – கே. சிவகுமார்; வீமன்- ரமேஷ் கிருஷ்ணன்; அருச்சுனன் – வி.எஸ். சங்கரன்; கர்ணன் – எஸ். அருள்; நகுலன் – கார்த்திக் ஹரிஹரன்; சகாதேவன் – பிரகாஷ் நாகராஜ்; திருதராட்டிரன் – காசிம் அபிதி; உடை, ஒப்பனை – எஸ். வைதேஹி; இசை – ஆர்.பி. ஜெயராம்; ஒளியமைப்பு- பயணி தரன்; இயக்கம் – மு. இராமனாதன்

ஈடிபஸ் நாடகக் குழு: ஈடிபஸ், மன்னன்- கார்த்திக் ஹரிஹரன்; சூத்திரதாரி- அனுராதா முகுந்தன்; கிறயன், ராணியின் சகோதரன்- எஸ். வைத்தியநாதன்; டைரேக்ஷியஸ், நிமித்திகர்- ராஜலெட்சுமி சீனிவாசன்; ஜொகஸ்டா, ராணி- ராஜேஸ்வரி சீனிவாசன்; தூதுவன்- ஜே. முகுந்தன்; ஆயன்- எம்.ஆர். சீனிவாசன்; பணியாள்- கே.ஜி.சீனிவாசன்; ஒளி- பயணி தரன், மு இராமனாதன்; உடை, ஒப்பனை, இயக்கம்- எஸ் வைதேஹி
##

தொடரும்….

Mu.Ramanathan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button