இணைய இதழ்இணைய இதழ் 73தொடர்கள்

இபோலாச்சி; 09 – நவீனா அமரன்

தொடர் | வாசகசாலை

அடிச்சி என்னும் அடங்கமறுக்கும் தேவதை

ற்கால நைஜீரியா இலக்கியவாதிகளில் அவசியம் அறிந்து கொள்ளப்பட வேண்டிய, அவசியம் வாசிக்கப்பட வேண்டிய இலக்கிய ஆளுமையாக சிமெமண்டா என்கோஜி அடிச்சி (Chimamanda Ngozi Adichie) திகழ்கிறார். புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளரான சின்னுவா ஆச்சிபியை (Chinua Achebe) தனது மானசீக குருவாக கொண்டு அடிச்சி இலக்கியம் படைக்கத் தொடங்கியவர். அடிச்சியின் முதல் நாவலான ஊதா நிற செம்பருத்தியின் (Purple Hibiscus) முதல் வரியை ‘Things Fall Apart’ என்னும் ஆச்சிபியின் நாவலின் தலைப்பை கொண்டு துவங்கியிருப்பது, அடிச்சி அவர் மீது கொண்ட எல்லையற்ற அன்பையும் மிகுந்த மரியாதையையும் வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்தது. ஆச்சிபியும் அடிச்சியை தனது இலக்கிய மகளாக ஏற்றுக்கொண்டு, அவருக்கு இலக்கிய வழிகாட்டியாகவும் ஆசானாகவும் திகழ்ந்தார். ‘Half of a Yellow Sun’ என்னும் அடிச்சியின் இரண்டாம் நாவலுக்கு ஆச்சிபி எழுதிய முன்னுரையில் ‘பழங்கால கதை சொல்லியின் திறமைகள் வாய்க்கப் பெற்ற ஒரு புதிய எழுத்தாளர்’ என அடிச்சிக்கு புகழாரம் சூட்டினார். 

சின்னுவா ஆச்சிபியின் பெண் பிரதியாகக் கொண்டாடப்படும் அடிச்சி இலக்கியம், மேடைப்பேச்சு, பெண்ணியம் மற்றும் நிறவெறிக்கு எதிரான முன்னெடுப்புகள் என பன்முக ஆளுமைகள் கொண்டவர். செப்டம்பர் 15, 1977ல் பிறந்த இவர் தனது நாற்பத்து ஐந்து வயதுக்குள் இலக்கியத்தில் எட்டிய உயரம் அசாதாரணமானது. அடிச்சியின் தந்தையான ஜேம்ஸ் நுவோயி அடிச்சி (James Nwoye Adichie) நைஜீரியாவின் முதல் புள்ளியியல் துறை பேராசிரியராவார். தாய் கிரேஸ் இஃபியோமா (Grace Ifeoma) நைஜீரிய பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பதிவாளராவார். படிப்பறிவு மற்றும் அரசுப்பணி என குறிப்பிடத்தகுந்த பின்புலத்தை கொண்ட குடும்பத்தில் அடிச்சி பிறந்திருந்தாலும், அவர் எழுத்தாளராவதற்கு முன்னும் பின்னும் மிகக் கடினமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 

சிமெமண்டா என்கோஜி அடிச்சி (Chimamanda Ngozi Adichie)

அடிச்சியின் சொந்த ஊரான அபா (Abba) ஒரு தென் கிழக்கு நைஜீரிய கிராமமாகும். நைஜீரியாவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும், தென்கிழக்கு நைஜீரியா மிகவும் பாதுகாப்பற்ற பகுதியாக இன்றளவும் இருந்து வருகிறது. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என அனைத்து வகை குற்றங்களும் சாதாரணமாக நடந்தேறும் பாதுகாப்பற்ற சூழலில் தான் அவரது பால்ய வாழ்வு கடந்தது. பாதுகாப்பற்ற சூழலில் வளர்க்கப்படும் பெண் பிள்ளைகளின் தகப்பனார் கூடுதல் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்பதை அடிச்சியின் தந்தை ஊர்ஜிதமாக நம்பினார். தந்தையின் அத்தகு கண்டிப்பையும், தந்தை மகளுக்கு இடையேயான கடினமான உணர்வுகளையும் மையமாகக் கொண்டே அடிச்சி தனது முதல் நாவலை எழுதினார். எழுத்தாளர் என்னும் சமூக அந்தஸ்து கிடைத்த பின்னரும், சொந்த ஊரில் அவர் எதிர்கொண்ட பாதுகாப்பற்ற சூழல் இன்னும் இறுக்கமானது. 

அடிச்சியின் தந்தை தனது 83 ஆம் வயதில், அபாவிலிருந்து நசுக்காவிற்குப் பயணம் செய்யும்போது வழியில் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். அவரை விடுதலை செய்ய பெரும் பொருளை பிணயமாக கேட்கிறார்கள். அடிச்சி மிகுந்த சிரமப்பட்டு, அவர்கள் கேட்ட தொகையை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பெற்று, பிணயமாக கொடுத்து தந்தையை மீட்கப் போராடுகிறார். மூன்று நாட்கள் கழித்து அவரது தந்தை விடுவிக்கப்படுகிறார். தள்ளாடி நடந்து வீடு திரும்பிய தந்தை, தான் கடத்தப்பட்ட சம்பவத்தை விவரிக்கும் போது, “உனது எழுத்தாளர் மகளிடம் பணத்தை ஏற்பாடு செய்து கொடுக்கச் சொல்” என கடத்தல்காரர்கள் அவரை மிரட்டியதாகக் குறிப்பிடுகிறார். இதைக் கேட்டதும் அடிச்சி மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறார். பின்னாளில் இந்த சம்பவம் குறித்து அடிச்சி விவரிக்கும் வேளைகளில், தான் எழுத்தாளர் என்னும் காரணத்தினாலே தனது தந்தை கடத்தப்பட்டதாகச் சொல்லி வருந்துவார். 

சொந்த நாட்டில் மட்டுமல்லாது, அடிச்சி தனது மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற போதும், எழுத்தாளரான பின்பு மேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்ட போதும், நிறவெறித் தாக்குதல்களையும், முற்சாருமைகளையும், காழ்ப்புணர்வு கொண்ட மக்களையும் அடிச்சி கடந்து வர வேண்டியிருந்தது. பிரான்சில் ஒரு நேர்காணலுக்காக அடிச்சி அழைக்கப்பட்டிருந்தபோது, நேர்கண்டவர் அடிச்சியைப் பார்த்து, நைஜீரியர்கள் படிப்பறிவும் எழுத்தறிவும் அற்றவர்கள் என்னும் பாங்குடன், “உங்கள் நாவல்களை நைஜீரியாவில் எவரேனும் வாசித்திருக்கிறார்களா? நைஜீரியாவில் புத்தக அங்காடிகள் இருக்கின்றனவா?” என கேள்வி எழுப்பினார். அடிச்சி அதற்கு, “பிரான்சை மனதில் வைத்து இத்தகைய கேள்விகளை நீங்கள் நைஜீரியா மீதும் முன் வைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்” என்று பதிலளித்ததும் அரங்கமே கொல்லென சிரித்தது. இருப்பினும் அடிச்சி இத்தகைய நிறவெறித் தாக்குதல்களையும், அசௌகரியமான வார்த்தைகளையும் சூழல்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார். 

அடிச்சி ‘Purple Hibiscus’, ‘Half of a Yellow Sun’ மற்றும் ‘Americanah’ ஆகிய மூன்று நாவல்களையும், ‘A Thing around your Neck’ என்னும் சிறுகதை தொகுப்பையும், ‘We should All be Feminists’ மற்றும் ‘Dear Ijeawele’ என்னும் பெண்ணிய நீள் கட்டுரைகளையும் இதுவரை எழுதியிருக்கிறார். பல புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைத்தளங்களில் எண்ணற்ற மேடைப்பேச்சுகளையும் நேர்காணல்களையும் சிறப்புரைகளையும் வழங்கியிருக்கிறார். அடிச்சி மிகச் சிறந்த ஆங்கில புலமை வாய்க்கப்பெற்றவர். 

அடிச்சி தனது புத்தகங்களில், தான் நேரில் கண்டிராத, அனுபவப்படாத எந்த ஒரு கருத்தையும் எழுதியது கிடையாது என பல நேர்காணல்களில் சொல்லி இருக்கிறார். உதாரணமாக அவரது முதல் இரண்டு புத்தகங்களிலும், அமெரிக்காவைப் பற்றி எந்த கருத்தையும் முன்வைக்காத அடிச்சி, தனது மூன்றாவது நாவலில் அமெரிக்காவை பற்றி எழுதியது ஏன் என ஒரு பேட்டியாளர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, தனது முதல் இரண்டு நாவல்களையும் அவர் எழுதிய போது, அமெரிக்காவில் நிகழும் நிறவெறித் தாக்குதல்களை பிறர் மூலமாக மட்டுமே கேள்வியுற்றிருந்ததாகவும், தனது மூன்றாவது நாவலை எழுதும்போது தனக்கு நிகழ்ந்த தாக்குதல் ஏற்படுத்திய தாக்கத்தின் முதல்நிலை அனுபவத்திலிருந்து எழுதியதாகவும் குறிப்பிடுகிறார். 

அடிச்சி தனது புத்தகங்களில் கையாளும் உண்மைத்தன்மை தான் அவரது வெற்றிக்கு காரணம் என்று அவரது நாவல்களை வாசிக்கும் எவரும் சான்று பகர்வர். உடைகள் முதல் சிகை அலங்காரம் வரை முழுக்க முழுக்க ஒரு நைஜீரியாராக மட்டுமே அடிச்சி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். பெண்கள் கூந்தலை இஸ்திரி செய்து நேராக்கிக் கொள்வது மட்டுமே நாகரிகம் எனக் கூறும் மேலைநாட்டு மனோபாவத்தை அடிச்சி முற்றிலுமாக எதிர்க்கிறார். எது நாகரிகம் என வரையறுக்கும் மேற்கத்திய நாடுகளின் ஏகாதிபத்திய மனோபாவத்திற்கு அடங்க மறுக்கும் பெண்ணாக தனது சிகை அலங்காரத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறார். இயல்பிலேயே மிகச் சுருண்ட கூந்தலை உடைய ஆப்பிரிக்க பெண்களின் சிகையை இஸ்திரி செய்து நேராக்குவதோடு மட்டுமல்லாமல், அது கலையாமல் இருப்பதற்கு எண்ணற்ற ரசாயனங்களையும் களிம்புகளையும் கூந்தலின் மீது அவர்கள் பூச வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் புற்றுநோய் முதலான உயிர் குடிக்கும் பல நோய்கள் கண்டு மாண்ட ஆப்பிரிக்க பெண்கள் ஏராளமானோர். மேலும் கூந்தலை நேராக்கும் சிகிச்சைகள் அனைத்தும் வலி மிகுந்ததாகவும் நேர விரையம் செய்வதாகவும் அடிச்சி எண்ணுகிறார். 

நைஜீரியர்களை அவர்களது இயல்பின் வழிநின்று, அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்வதற்கு, அமெரிக்கர்களிடமும் மற்ற மேற்கத்திய நாட்டினரிடமும் இருக்கும் மனத்தடையை உடைப்பதற்காகவே அடிச்சி எழுதுகிறார், பேசுகிறார், போராடுகிறார். அடிச்சியின் எழுத்துக்கள், மேடைப் பேச்சுகள், நேர்காணல்கள் மற்றும் பெண்ணிய உரைகள் அனைத்தும் தனித்தனியே அறிமுகப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட வேண்டியவை. இபோலாச்சியின் அடுத்தடுத்த கட்டுரைகளில் இவற்றை விரிவாக காணலாம்.

(தொடரும்…)

முந்தையது | அடுத்தது 

writernaveena@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button