இணைய இதழ்இணைய இதழ் 75சிறுகதைகள்

அம்மாவின் மூன்று நாட்கள் – தேவசீமா

சிறுகதை | வாசகசாலை

ன்று ஜனவரி மூன்றாம் தேதி, மருத்துவமனைக்கு வந்து இன்றோடு இருபத்து  மூன்று நாட்கள் ஆகி இருந்தன.  இவ்விடத்தில் ஒன்றும் 2012 ல் கடந்த அந்த இருபத்தி மூன்று நாட்களையும் குறித்து முழுமையாகப் பேசப் போவதில்லை.  பேசுவது போல் பேசிப் பேசி அந்நாட்கள் குறித்த நினைவுகளை ஓட்டி ஓட்டிப் பார்க்கப் போவதில்லை.  அந்நாட்களின் கடைசி மூன்று நாட்களும் முதன் முதல் நாள் ஒன்றும் தான் பேசப்பட வேண்டிய நாட்களில் முக்கியம் போல இப்போது தோன்றுகிறது. தோன்றுவதென்ன, அந்நாட்கள்  முக்கியமானவையே தான்.  அது தான் அந்நாட்களைக் கடந்து பத்து வருடங்களுக்குப் பிறகும் அந்நான்கு நாட்களில் நடந்தவை அனைத்தும்  ஒன்று விடாமல் ஓர்மையில் இருக்கின்றதே.  அது ஞாபகத்தில் இருப்பதற்கான காரணம் அவை அம்மாவின் இறுதியான நாட்கள் என்பதால் இருக்கலாம்.

அம்ம்ம்மா என்ற அலறலுடன் கேட்ட அம்மாவின் குரலுடன் தான் 2011 ன் அந்த டிசம்பர் இருபதாம் தேதி விடிந்தது.  நமக்கெந்த வயதானாலும் நமக்கொரு ஆபத்து என்று வரும்போது அம்மாவின் நினைவு தான் வரும் போலிருக்கிறது.  அம்மாவுக்கு ஐம்பத்தொன்பது முடிந்து அறுபது தொடங்கி நடக்கிறது.

அன்று காலை குளிக்கப் போனவர் குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டார் அம்மா.

அதுதான் முதல் டோமினோஸ் அட்டை, அதை யாரோ அறியாமல் தட்டி விட்டாற் போல் வரிசையாக அடுத்தடுத்த அட்டைகள் போல சரியத்  தொடங்கின அம்மாவின் மனமும் உடலும்.

அம்மா விழுந்த சத்தம் கேட்டு  மாஸ்டர் படுக்கை அறைக்கதவைத் திறந்து குளியலறை கதவைத் திறக்க  ஓடினேன்.  

அந்த அறையில் தான் அட்டாச்டு குளியலறை இருந்தது.  அது மூன்று அறைகளாக  மட்டுமே இருந்த வீட்டினை நான்கு அறைகளாக அப்பா இழுத்துக் கட்டியபோதில்  தோன்றிய ஒன்று.  பின்னால் வயதாகும்போது தேவைப்படும் என்று மேற்கத்தியப்  பாணி கழிப்பறை வைத்தார்.  அம்மாவுக்காகத்தான், ஆனால் வழக்கமான எல்லா  அன்புள்ள அப்பாக்களைப் போலத்தான், செய்வார் ஆனால் அதனைச் செய்த காரணத்தை சொல்ல  மாட்டார். குறிப்பாக யாருக்காக அதனைச் செய்தார் என்பதை.  

இப்படித்தான்  முன்னொரு முறை, அப்பாவின்  ஊருக்கு எல்லாருமாகப் போயிருந்த போது, ஆத்தா அப்பாவின் அம்மா கோழியடித்து குழம்பு வைத்தது.  அது இறக்கையைப் பிய்க்கும் போதே அப்பா சொல்லி விட்டார். எம்மா பாப்பா பசி  தாங்காது, சீக்கிரமா ஆக்கிடு வழக்கமா செய்றா மாதிரி இளுத்துறாத என்று.  உடனே ஆத்தா ,’ ஆமாண்டா, நீ தான்  ஓவியமா புள்ள பெத்து வளர்க்கிறியாட்டு, நானும் ஆறு பெத்து இரண்ட பறி கொடுத்து இருக்கவதான்டா, பெருசா சொல்ல வன்ட்டான்” ,என கிண்டலாய் ஆரம்பித்து காட்டமாய் முடித்தது.

 இத்தனைக்கும் எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் அதுவரை எனக்குப் பசி என்றால் என்னவென்று தெரியாது.  அதாவது வயிற்றில் எலிகள் ஓடுவது, தலை சுற்றுவது, இல்லை குறைந்தபட்சமாய்  ‘தொப்பை வலிக்கிது’ கூடத் தெரியாது.  பிறகு மனைவிக்குப் பசி தாங்காது என்றா பெற்ற அம்மாவிடம் அப்பாவால் சொல்ல  முடியும். 

ஆத்தா வாய் மண் தின்ற பிருந்தாவனக் கண்ணனைப் போல உலகையே சுற்றிக் காட்டுவதில் ஊர் பிரசித்தி பெற்றது.

நல்லவேளை, கதவைத் தாளிட்டு கொள்ள வேண்டாமென்று அம்மாவை முன்பே  நானும் தம்பியும் எச்சரித்திருந்ததால் அம்மா கதவைத்  தாளிட்டிருக்கவில்லை.                 நான் உள்ளே நுழைந்த போது அம்மா மெதுவாக கைகளை ஊன்றி எழ முயன்று  கொண்டிருந்தார்.  குளிப்பதற்காக உடைகளைக் களைந்திருந்ததனால் முழுவதுமாக ஆடைகளின்றி இருந்தார், அவர் கால்கள் உரிக்கப்பட்ட கோழியின் கால்களைப் போல் இருந்தன. தொடைகளின் அருகினில் வீங்கியும்,  மூட்டுகளுக்குக் கீழே குறுகிய வடிவிலுமாக இருந்தன. அதற்குள் குட்டி படுக்கையறையில் இருந்த தம்பியும் சத்தம் கேட்டு அம்மா இருந்த அறைக்குள் வந்திருந்தான். தம்பி அவர் இரண்டு  அக்குள்களிலும் கை கொடுத்துத் தூக்கினான். படுக்கை அறைக்குள் இருவருமாக அம்மாவை அழைத்து வந்து ஈர உடலைத் துவட்டி, பின்கழுத்தில் அம்மாவின் சுருள் முடியில் தணி காயப்போடும் கொடியில் தொங்கும் மழைத்துளிகளைப் போல் தொங்கிக் கொண்டிருந்த தண்ணீரை ஒற்றி  மொட மொடப்பாக உலர்ந்திருந்த ஒரு நைட்டியினை அணிவித்துப் படுக்க வைத்தோம்.

அம்மாவுக்கு கர்ப்பப்பை வாயில் புற்று நோய்.  கண்டுபிடித்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இருக்கும். கண்டுபிடித்த போது ராஜி மட்டுமே உடனிருந்தாள்.  விஷயம் தெரிந்தவுடன் ராஜி நிலைகுலைந்து போனாள்.  கல்கத்தாவில் வேலை பார்த்த தம்பியிடம் அலைபேசியில் விவரம் சொன்ன போது அவனும் அவன் மனைவி உமாவும் முதலில் செய்வதறியாது திகைத்து நின்ற போதும், பின்னர் தெளிவாக சிகிச்சையினை தொடர்வது குறித்து அக்கா ராஜியுடன் சேர்ந்து திட்டமிட்டனர். அக்கா தம்பி ஆகிய இருவருடைய குடும்பமும்  சேர்ந்து அம்மாவுக்கு சிகிச்சை மேற்கொள்வதென. இரண்டாண்டு தீவிர சிகிச்சையின் பின்னும் கதிர்வீச்சு சிகிச்சை அளித்த இடத்திலேயே அம்மாவுக்கு புற்று மீண்டும் தோன்றியது.  சிகிச்சை அளித்த அந்த பெரிய முக்கியமான புற்று நோய் மருத்துவமனை தன் இரு பிரம்மாண்ட கரங்களை விரித்து விட்டது. ‘எவ்வளவு நாள் இருப்பாங்கன்னு தெரியாது’, இருக்கற வரைக்கும் நல்லா பார்த்துக்கோங்க’, கடைசில வலி அதிகமாக இருக்கும். அப்ப வாங்க, வலிக்கான மாத்திரை தரோம்”. என்று விட்டனர்.

ஏற்கனவே, வீடு பக்கத்தில் இருக்கும் உமா மருத்துவமனையில் பேசி வைத்திருந்தோம். நோயின் முற்றிய நாட்களில் இங்கு தான் கூட்டி வருவோம்  என்று.  அந்நாட்களின் தொடக்கம் 2011ன் டிசம்பர் இருபதாம் தேதியாய் இருந்தது. 

மெதுவாய் மாடிப்படிகளில் நைட்டி தடுக்கி விடாமல் கீழிறக்கி அம்மாவை ஆட்டோவில் அமர  வைத்தோம்.  அம்மா புடவை அணிந்து அப்போது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகியிருந்தது.  உமா மருத்துவமனையில் அம்மாவைச் சேர்த்த போது அம்மா மலம் கழித்து  இரண்டு நாட்கள் ஆகியிருந்தன.  ஒரு நாளைக்கு இரு முறை குளிப்பவர், இரு முறை பல் தேய்ப்பவர், இரு முறை வயிறு சுத்தம் செய்பவர்.  இதெல்லாம் செய்யாமல் அவருக்கு எவ்வளவு  சங்கடமாக இருந்திருக்கும் என்பதை எங்களால் உணர முடிந்தது. நன்றாக எங்களுடன், ஆட்டோ ஓட்டும் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தார். மருய்துவமனையில் ஒரு சிறந்த காற்றோட்டம் மிக்க அறையை அவருக்காக தஞர்ந்திருந்தோம்.  அந்த அறை அவரை  ஆதரவாய்ப் பற்றிக் கொண்டது போலிருந்தது. ‘எனிமா’ கொடுத்தனர் தாதியர். ‘எனிமா’ அவருக்கு சில நாட்களுக்கு பிறகான அமைதியான தூக்கத்தினை  கொடுத்திருந்தது.

அம்மா என்றைக்குமே நல்ல உடல்நிலை கொண்டவர் அல்ல, முப்பதுகளிலேயே உயர் இரத்த அழுத்தமும், தம்பி பிறந்த பின் ஒரு அறுவை சிகிச்சையும் அவரை பலவீனமாகத் தான் வைத்திருந்தன.  ஆனால் ஒருவரின்  இறுதி நாட்களில் அவருடைய உடல்நிலை எவ்வளவு சீரழிய முடியும் என்பதைக் கண்கூடாகப் பார்க்கும் நாட்களாக அவை வாய்த்தன ராஜிக்கு.  தம்பி, தம்பி மனைவி, ராஜியின் கணவர் ராஜி என  நால்வரும் அம்மாவை மருத்துவமனையில் வைத்துக் கவனித்தனர்.  அதுவரை,  அம்மாவுடன் கூட இருந்த வனஜா சித்தி இரண்டு நாட்களுக்கு முன் தான் சீரங்கத்திற்குப் போயிருந்தார். 

 பின் நாங்கள் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்த விவரம் சொல்லத் தம்பி  அவருக்கு அலைபேசிய போது, அம்மாவுக்கு என்னமோங்கிற மாதிரி தோனிகிட்டே இருந்தது தம்பி, அதான் பல்லவனில் வந்துட்டு இருக்கேன் என்றார். ஆம், அம்மா அவர் குடும்பத்தில் எல்லோருக்கும் ஸ்பெஷல் தான். படிப்பு, அழகு, அமைதி எல்லாவற்றிலும் ஒரு  மகாராணித்தனமிருக்கும். அவர் மனதில் நினைப்பதைக் கூட அவர் பெற்றோர், உடன் பிறந்த இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் நிறைவேற்றத் துடிப்பார்கள்.  இப்போதும் அப்படித்தான்.

நடுவில் இருந்த நாட்களில் இரத்த வங்கி, சிறப்பு மருத்துவர்கள், டயாபர், காற்று  சுழலும் மெத்தை  வாங்க அலைந்தது, ராஜி இரண்டாவது குழந்தைக்குப் பாலூட்டவும் சமைக்கவும்  வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாகவும் அலைந்ததும் இன்னும் பலவற்றிற்காகவும் அலைந்ததுமான அலைச்சல் நாட்கள் அவை.  எங்கள் கம்பீரமான அம்மாவை இப்படிக் கிடையில் யாரும் பார்த்து விடக் கூடாதெனப் பெரும்பாலும் தகவல் பரவுவதைத் தடுத்த நாட்களும் அவையே.  இடையில் அம்மாவின் நினைவு தப்பத் தொடங்கியது.  மருத்துவமனை செலவுகளைப் பற்றிச் சற்றே  உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்த ஒரு இரவில், அம்மா தம்பியைக் கண்ணா என்றழைத்தார். அழைத்ததும் தான் உணர்ந்தோம் அவர் இருப்பை மறந்து நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை.பேச்சை நிறுத்தி என்னம்மா? என்று கேட்க, அவர் பதிலேதும் கூறவில்லை. 

 அம்மா அத்துடன் எங்களுடன் தொடர்பு கொள்வதை நிறுத்தியிருந்தார். 

வினய், காம்பவுண்டு  சுவத்தில ஏறாத, இந்தி ஹோம் வொர்க் பண்ணியா, அப்பா வந்துட்டாரான்னு பாரு.  வினய், காம்பவுண்டு சுவத்தில ஏறாத, இந்தி ஹோம் வொர்க் பண்ணியா, அப்பா வந்துட்டாரான்னு பாரு. வினய், காம்பவுண்டு சுவத்தில ஏறாத, இந்தி ஹோம் வொர்க் பண்ணியா, அப்பா வந்துட்டாரான்னு பாரு. வினய், காம்பவுண்டு சுவத்தில ஏறாத, இந்தி ஹோம் வொர்க் பண்ணியா, அப்பா வந்துட்டாரான்னு பாரு. வினய் என் மகன்.  இச்சொற்றொடர்களை எத்தனை முறை கேட்பீர்கள், கேட்கும் போதே நமக்குச் சலிப்பும், ஒரு வித எரிச்சலும் ஏற்படுகிறதே.  ஆனால், இதனைத் தொடர்ந்து நூறு முறை, இருநூறு முறை, முந்நூறு முறை  சொன்ன அம்மாவுக்கு வாய் வலிப்பது கூடத் தெரியவில்லை. அம்மா தேவையானால் மட்டுமே பேசுவார்.  அவர் கம்பீரத்திற்கு அதுவும் ஒரு காரணம்.  குறிப்பிடப்பட்ட வினய், அம்மாவின் செல்லப் பேரன், ஒரே பேரன், என் மகன், வயது எட்டு.

 மறுநாள் ஜனவரி ஒன்றாம் தேதி. ராஜியின் கிறுக்குத்தனங்களும் பெரும்பாலான இரசனைகளும் அம்மாவிடமிருந்தே பெறப்பட்டவை.  அதில் ஒன்றான ரோஜாப்பூவினை தெருவில் பூ விற்கும் பெண்ணிடம்  டம்ப்ளரில் நீரில் வைக்கப்பட்டிருந்த பல நிற ரோஜாக்களில் அழகான ஒரு பீச் கலர் ரோசாப்பூவைப் பார்த்ததும் வாங்கிக் கொண்டாள் ராஜி.  

சிறுவயது முதலே அம்மாவிற்குத் தம்பியைத் தான் மிகவும் பிடிக்குமென்றும், தான் ஒரு இரண்டாந்தரப் பிரஜையாக  அவரால் நடத்தப்படுவதாகவும் நம்பினாள் ராஜி. அதை ருசுப்படுத்திக் கொள்ள வழக்கமான பல காரணங்கள் தேடிக் கண்டுபிடித்து வைத்திருந்தாள்.

தம்பி கல்லூரியில் படிக்கையில் காலையில் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி விடுவான்.  அப்போது ஒரு நாள்  மதிய உணவுப் பொதி தவறி விட்டால் கூட அம்மா ராஜியைப் பின்னி எடுத்து விடுவார்.  அப்போது ராஜி சமைக்கத் தொடங்கி இருந்தாள். இது ஒரு உதாரணம் தான். பின் அவன் திருமண விஷயத்தில் அம்மா இவளை படுத்திய பாடு. இவர்கள் இடும் கண்டிஷன்கள் ஏற்ப பெண் தேடுவது, பார்ப்பது, சடங்குகள் ஷாப்பிங் என உமாவைத் திருமணம் செய்து வீட்டு மருமகளும் கூட்டி வரும் வரை ஒரே இம்சை தான்.  இப்போது நினைத்தாலும் ராஜிக்கு பற்றிக் கொண்டு எரிச்சல் வரும்.

தம்பிக்கும் இதே எண்ணம் தான்.  அக்கா இல்லாமல் அம்மா கல்கத்தாவிற்கு வர மறுப்பது.  வினயை கண்ணின் மணி போல வளர்ப்பது. அவன் கேட்பதை எல்லாம் தன்னை வாங்கி வர சொல்வது. அக்காவிற்கு திருமணம் முடிந்த பின்னும் அவளையே எல்லாவற்றிற்கும் நம்பி இருப்பது என்பது அவன் பட்டியலில் சிறு பகுதி.

 முட்டாளாய் இருப்பது தான் இயற்கை, அறிந்தவனாய் அறிந்தவளாய் இருப்பது செயற்கையானது, நாம் உருவாக்கிக் கொள்வது. அறியாதவராய் இருப்பதே இயற்கை. அதாவது ஆடு மேய்த்த ‘ராபனாத்’  இயல்பு.  அறிந்தவனாய் மாறிய காளிதாசன் செயற்கை. அப்படித்தான் ராஜியும் தம்பியும் அறியாமையில் இயல்பாய் இருந்தார்கள்.

அந்த ரோஜாவை அம்மாவின் கையில் கொடுத்து ,’ஹாப்பி நியூ இயர் மம்மி’ என்றாள். அம்மா ஜன்னல் புறமாய்த் திரும்பி மாய வெளிச்சத்தை நோக்கிப் புன்னகைத்தார்.  ராஜியை அறிந்ததாய்ப் பார்வையில் எந்த அறிகுறியும் தெரியவில்லை.

செவிலிப் பெண் வந்தார். கையில் இருந்த ரோஜாவைப் பார்த்ததும், ‘ஆயா, பூ யார்  கொடுத்தது? உங்க பொண்ணா’, என்றவாறு என்னை நோக்கிச் சிரித்தார். ஆம் என்பது போல அம்மா புன்னகையுடன் தலையசைத்தார். 

அம்மா நன்றாக , தன் உணர்வுடன் இருந்திருந்தால் தாதி இப்படி ஆயா என்று  அமைத்ததற்காக செம டோஸ் விழுந்திருக்கும்.  அம்மா மனதால் எப்போதும் இளமையானவர், பதினாறைத் தாண்டாதவர்.  கம்பீரமாகவும், கம்பீரமே அழகாகவும் இருந்தவர். அந்த காலத்து பி.எஸ்சி தாவரவியல் படித்தவர்.  அவர் எங்கும் வெளியே வேலைக்குச் சென்றது கிடையாது.  ஆனால், ராஜியின் தோழிகள், உங்கம்மா டீச்சரா என்று கேட்பார்கள், இவள் இல்லை என்றதும், ‘ஏய், பொய் சொல்லாத, டீச்சர் தான, அதுவும் ஸ்ட்ரிக்ட் டீச்சர் மாதிரியே இருக்காங்களே’ என்பர்.  கம்பீரம், கருணை மற்றும் அப்பாவித்தனம் அதான் அம்மா.  

அம்மா தான் பூ கொடுத்ததை உணர்ந்து கொண்டு விட்டார் போலும் என்று நினைத்த 

ராஜி மகிழ்வுடன் அப்ப அம்மாவுக்கு தன்னைத் தெரிகிறதா?  அடையாளம் புரிகிறதா என உடன் திரும்பி அம்மாவின் முகத்தினை கூர்ந்து பார்த்தாள்.  மறுபடி அதே அடையாளம் தெரியாத புரியாத பார்வை. 

புத்தாண்டு தொடங்கிய அன்று முழுவதும் ராஜிக்குட்டி வீட்டைக் கூட்டு, ராஜிக்குட்டி புக்க மூடி வையி, ராஜிக்குட்டி வீட்டைக் கூட்டு, ராஜிக்குட்டி புக்க மூடி வையி, ராஜிக்குட்டி வீட்டைக் கூட்டு, ராஜிக்குட்டி புக்க மூடி வையி, ராஜிக்குட்டி வீட்டைக் கூட்டு, ராஜிக்குட்டி புக்க மூடி வையி, ராஜிக்குட்டி  வீட்டைக் கூட்டு, ராஜிக்குட்டி புக்க மூடி வையி.  ராஜிக்குட்டி அவள்தான்.  நினைவு தப்பிய அம்மாவின் நினைவில் தப்பாத அந்த ராஜி அவள்தான்.

ஜனவரி இரண்டாம் தேதி வழமை போலவே அம்மாவின் உடல்நிலை குறித்த எவ்வித தெளிவுமின்றியே விடிந்தது.  மகாராணி போன்ற உடல்மொழியும் குடிகாரனின் மனைவி போன்ற மனவலிமையையும் கொண்ட அம்மாவை இப்படி தன்னையறியாத நிலையில் சத்தமிட்டபடி இருந்த அம்மாவை யாரும் பார்த்து விடக்கூடாது என்று கடுமையாக தடுக்க  முயன்றனர் ராஜியும் அவள் தம்பியும்.

அப்படி இவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு வராமலிருந்தால் அவர்கள் எப்படி சொந்தக்காரர்கள் ஆவார்கள்.  எவ்வளவோ தடுக்கப் பார்த்தும் தடுக்க முடியாமல் கடைசி சித்தி  மகள் மருமகனோடு வந்தார், அம்மாவின் சம்பந்திகள் கூட்டத்தோடு வந்தார்கள், அம்மாவிற்கு யாரையும் அடையாளம் தெரியவில்லை.  இவர்களையும் அடையாளம் தெரியவில்லை. 

பேசிப் பேசி வாய் வலித்ததன் காரணமோ,  இல்லை தூக்கத்திற்கு மருத்துவர்கள் அளித்த மருந்துகள் காரணமோ தெரியவில்லை பேச்சு அன்று  கிட்டத்தட்ட இல்லை என்றானது. 

 நாங்கள் அன்று மதியம் தம்பியின் ஆலோசனைப்படி இறைவனின் நாமத்தைச் தொடர்ந்து  செபிக்கத் தொடங்கினோம்.

‘ஸ்ரீ ராம ஜெய ராம
ராம ராம ஹரே ஹரே
ஸ்ரீ கிருஷ்ண ஜெய கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’

 ராஜிக்கு ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் சொல்லத் தொடங்கிய பின் தொடர்ந்து இந்த நாமங்களை ஊக்கத்துடன் சொல்லத் தொடங்கினாள் அவளும். மற்றவர்கள் முதலிலிருந்தே நம்பிக்கையுடன் தான் சொல்லிக் கொண்டு இருந்தனர்.சொன்னால் தானே அம்மா எழுந்து உட்காருவார், ராஜிக்குட்டி, வினய், உமா, தம்பி,  மாப்ள என்று அனைவரையும் பெயர் சொல்லி கூப்பிட்டு விடுவாரில்லையா? அதனால் தான் இறைவனின் பெயர்களை ஒரு பாடல் போல தொடர்ந்து ஒப்பிக்க ஆரம்பித்தோம். ஒப்பித்துக் கொண்டே இருந்தோம்.

ஜனவரி மூன்றாம் தேதி காலை உணவுக்குப் பின்னான எங்கள் ஒப்பித்தல் பனிரெண்டு மணிக்கு ஆட்டங்காணத் தொடங்கியது.  அம்மாவின் நாடித் துடிப்பினை கணக்கிட்டுக் கொண்டிருந்த திரை தனது கணக்கீட்டினை படிப்படியாக குறைத்துக் கொண்டது.  தம்பி நம்பிக்கையினை இழக்கவே கூடாதென்றும் தொடர்ந்து இறைவனின் நாமத்தைக் கூறினால் ஒரு அற்புதம் எப்படியாவது நிகழுமென்று நம்பினான். எங்களையும் நம்பச் சொன்னான். 

 கடவுள் ஒரு செவிடர் என்பது தான் இப்பிரபஞ்சத்தின் ஆகப் பெரிய அற்புதம், அற்புதமான உண்மை, சத்தியம் என்பதை அவன் அந்நொடி வரை உணரவேயில்லை. திரை வேலை செய்தது போதுமென சரியாக பிற்பகல் மூன்று  பத்திற்கு சுழியத்தைக் காட்டியது.  

எங்கள் செபங்கள், மன்றாடல்கள் தானாய் நின்று அழுகையாய் மாறியது, அழுகை சில விநாடிகளில் பெருங்கதறலாய், தீனமான ஊளையாய் மாறியது.

திடீரெனத் தம்பி அழுகையை நிறுத்திக் குழறலாய் வார்த்தைகள் விழ, ஆனாலும் தன்னால் முடிந்த வரை மனதை அடக்கி அழுத்தமாய்க்  கேட்டான்.  அக்கா,  உன் பேரச் சொல்லி சொல்லி ஏதேதோ சன்னமாவும் முணுமுணுப்பாவும் , சில நேரத்துல சத்தமாவும் சொன்னது போல அம்மா  கடைசியா என் பேரைச்   சொல்லி எப்ப என்னையக் கூப்டாங்க? இல்லை என்னைப் பத்தி ஏதாவது சொன்னாங்க? என்று கேட்டான்.  என்ன சொல்வதென்று குழம்பியபடி விழித்த ராஜி …..ம்ம்ம்  அவங்க நினைவு தப்பிப் போறதுக்கு முந்தி என  முட்டாள்தனமாய் இயல்பாய் வாய் சொல்ல வந்ததை,  உளற வந்த உண்மையைத் தடுத்து  புத்தியுடன் பிழைப்பவளாய் சரியா ஞாபகமில்ல தம்பி என்றாள் ராஜி.

******

priyasharo11@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button