இணைய இதழ்இணைய இதழ் 75கட்டுரைகள்

தமிழ் சினிமாவும் மற்போரும் – அபுல் கலாம் ஆசாத் 

கட்டுரை | வாசகசாலை

1966ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஏவிஎம் தயாரிப்பில் ஏம்.ஜி.ஆர். நடித்தஅன்பே வாவெளியானது. எம்.ஜி.ஆர். படங்களில் எம்.ஜி.ஆரின் ரசிகன் எதிர்பார்க்கும் எதுவும் இல்லாமல் நகைச்சுவையும் காதலுமாக அன்பே வாவின் கதையமைப்பு இருந்தது. ஆனால், அதிலும் ஒரு சண்டைக்காட்சி இடம்பெற்றது. ஆந்திராவின் மல்லர் நெல்லூர் காந்தாராவுடன் எம்.ஜி.ஆர். மோதும் காட்சி. அது மற்போர் உத்தியில் அமைக்கப்பட்ட சண்டைக்காட்சி

நா. பார்த்தசாரதியின் மணிபல்லவம் நாவலில் கதாநாயகன் இளங்குமரன் மற்போரில் அறிமுகமாகிறான். இந்திர விழா மற்போர்ப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெறும் யவன மல்லன், தலைக்கனத்தால் சோழ நாட்டின் ஆண்மையைக் குறைத்துக் கூறும்போது, அங்கு இளங்குமரன் களம் இறங்கி யவன மல்லனை வீழ்த்தி சோழர் பெருமையை நிலை நாட்டுகிறான்.

1963இல் வெளியானகாஞ்சித் தலைவன்திரைப்படத்திலும் அறைகூவல் விட்டு பல்லவ நாட்டை அவமரியாதை செய்யும் மல்லனைப் பல்லவர் (எம்.ஜி.ஆர்.) களத்தில் இறங்கி வீழ்த்தும் மற்போர்க் காட்சி உள்ளது. பல்லவ நாட்டு மற்போர்ப் போட்டியில் பங்கேற்கும் மல்லர் சாளுக்கிய சௌரியர் தொடர்ந்து அனைத்து மல்லர்களையும் வீழ்த்துகிறார். இறுதியாகப் பல்லவ நாட்டின் மலையமானை வீழ்த்தியதும் பல்லவர் வெற்றிக் கேடயத்தை சௌரியருக்கு அளிக்கச் சொல்லும்போது சௌரியர், பல்லவர்களை நோக்கிதூவெனத் துப்பியதும், பல்லவ மன்னர் தங்கள் மண்ணின் வீரத்தை நிலைநாட்டக் களம் இறங்குகிறார்.

இன்றைக்கு தொழில்முறை மற்போர்ப் போட்டிகளில் காணப்படும் சில பிடி வகைகளை 1963இல் காஞ்சித் தலைவன் மற்போரில் காணலாம்

நெல்சன் பிடி (Nelson hold): எதிராளியின் கைகளுக்குக் கீழ் கைகளைக் கொடுத்து இழுத்துத் தன் கைகளை எதிராளியின் பின் கழுத்தில் இணைத்து அழுத்துவது

கரடிப் பிடி (Bear hug): எதிராளியின் விலாப் பகுதியைக் கட்டிப் பிடித்து இறுக்கி நெறித்து மூச்சுத் திணற வைப்பது.

மாலைப் பிடி (Hurricanrana): கால்களால் எதிராளியின் கழுத்தைச் சுற்றிக்கொண்டு தொங்கி, எதிராளியை இழுத்துத் தரையில் விழவைப்பது.

இந்தப் பிடிவகைகள் காஞ்சித் தலைவன் மற்போரில் கையாளப்பட்டிருக்கும். மாலைப் பிடி (Hurricanrana) காஞ்சித் தலைவனில் மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆரின் பல சண்டைக் காட்சிகளில் கையாளப்பட்டிருக்கும். ‘ரகசிய போலீஸ் 115′இல் எதிராளியின் முன்னிருந்து மேலேறி மாலைப் பிடி போடும் சவாலான நகர்வை ஷியாம் சுந்தர் அமைத்திருப்பார். திரைப்பட சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்த இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால் (தமிழில்துப்பாக்கி’ திரைப்படத்தின் வில்லன்) தன்னுடையகமாண்டோதிரைப்படத்தில் இந்தஹரிக்கேன் ராணாவை சிறப்பான ஒலிஒளியமைப்புடன் செய்திருப்பார். பழைய திரைப்படங்களில் மட்டும் மற்போரின் அமைப்பில் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டன என்றில்லாமல் தேவைப்படும் நேரங்களில் மற்போரை சண்டைக்காட்சிகளில் அமைப்பது இன்றும் தொடர்கிறது.  

தீரன் அதிகாரம் ஒன்று’ (2017) திரைப்படத்தில் கார்த்தியும் அபிமன்யுவும் மோதும் கடைசி சண்டைக்காட்சியில் மற்போர் உத்திகளை வைத்து திலீப் சுப்ப்ராயன் சண்டையை அமைத்திருப்பார். அபிமன்யுவின் பிடிகளை மாற்றி கார்த்தி இழுத்துத் தள்ளும் உத்தியை தொழில்முறை மற்போர்களில் காணலாம். கார்த்தியை வீழ்த்த அபிமன்யு போடும் குறங்குப் பிடியும் (கு**ங்குதொடை, கு**ங்குப் பிடிநகரமுடியாதபடி தொடைகளால் அழுத்திப் பிடிப்பது), அதை கார்த்தி விடுவிப்பதும் நுட்பமான மற்போர் நகர்வுகள்.

சண்டைக்காட்சிகளில் மற்போர் உத்திகளாகவும் சண்டைக்காட்சிகளே மற்போராகவும் தமிழ்த் திரையில் மற்போர் தொடர்கிறது. ‘சக்கரவர்த்தித் திருமகள்‘ (1957) திரைப்படத்திலும் எம்.ஜி.ஆருக்கு மற்போர்க் காட்சி உண்டு. பரவலாக தொழில்முறை மற்போர்ப் போட்டிகளை மக்கள் ரசிக்கத் துவங்கிய பின்னர், அதன் அடிப்படையில்பட்டிக்காட்டுப் பொன்னையா‘ (1973) டபுள்யூ.டபுள்யூ.எஃப். வகை (WWF – World Wrestling Federation, now WWE – World Wrestling Entertainment) மற்போரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட்து. கல்வியா? செல்வமா? வீரமா? எனக் கேள்வி கேட்கப்பட்டு எடுக்கப்பட்டசரஸ்வதி சபதம்‘ (1966) திரைப்படத்தில் வீரத்தை முன்னிறுத்த மற்போர்தான் திரையில் காட்டப்பட்டது. சரஸ்வதி சபதத்தில் ஜெமினி கணேசனும் ஆசாத் பயில்வானும் மோதுகின்ற மற்போருக்கான உத்திகளை அமைத்தவர் அதில் மோதும் ஆசாத் பயில்வான்

அந்தக் காலகட்டத்தில், தமிழ்த் திரையில் மட்டுமல்லாது சென்னையிலும் மற்போர்ப் போட்டிகள் பிரபலமாக இருந்தன. ஈரானிய மல்லர்களும், வடஇந்திய மல்லர்களும், தமிழ்நாட்டின் மல்லர்களும் மற்போர்ப் போட்டிகளில் பங்கேற்றனர். காங்கிரஸ் மைதானத்தில் அப்போட்டிகள் நடந்தன. மற்போர்ப் போட்டிகளின் ஒப்பந்ததாரராக மறைந்த சின்னஅண்ணாமலை அவர்கள் இருந்தார். மறைந்த பத்திரிகையாளர் சாவி அவர்களும் மற்போர்ப் போட்டிகள் தொடர்பான தகவல் அறிவிப்புகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்திய அளவில் மல்லர்களுக்குப் பெயரும் புகழும் இருந்தன. பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் காமா பயில்வான் (1878-1960), தாரா சிங் (1928-2012) இருவரும் ருஸ்தம்ஹிந்த் (இந்தியாவின் வெற்றிவீரன்) விருது பெற்றவர்கள். தாரா சிங் இந்தியர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட மல்லர். சண்டை சாகச வீரனாக இந்தித் திரையில் 1952இல் நடிக்கத் துவங்கி 2007 வரையில் இந்தித் திரையில் இயங்கினார். இவர் ராமானந்த் சாகரின்இராமாயணம்தொலைக்காட்சித் தொடரில் அனுமனாக நடித்தார். உலக அளவில் புகழ் பெற்ற காமா பயில்வானையும் தமிழ்த் திரையின் நகைச்சுவை விட்டுவைக்கவில்லை. காமா பயில்வானின் சிஷ்யனாக கல்லாப்பெட்டி சிங்காரத்தைக் காட்டிஇன்று போய் நாளை வாவில் (1981) சண்டைக்காட்சி அமைத்தார்கள். போகிற போக்கில் நகைச்சுவையில் சொல்லப்பட்ட அந்தப் பெயருக்கு சொந்தக்காரர், இந்தியாவின்வெற்றி வீரன்விருது பெற்ற, உலகப் புகழ் பெற்ற காமா பயில்வான் என்னும்தி கிரேட் காமாஎன்னும் குலாம் முகமது என்பது சில தமிழ்த் திரை ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்த செய்தி.  

தமிழ்த் திரையோ, இந்தித் திரையோ, இந்தியாவை வெள்ளையர் ஆண்ட கதைப் பின்னணியில், கதாநாயகன் யாராவது வெள்ளையருடன் மோதும் காட்சியமைப்பு இருக்குமானால், அது மற்போர்தான். தமிழில் ஆர்யாவின்மதராச பட்டினத்திலும்‘ (2010), இந்தியில் ஆமீர் கானின்லகானிலும்‘ (2001) இப்படி வெள்ளையருடன் இந்தியர் பொருதும் மற்போர் இருந்தது.

திரைப்பட சண்டைக் காட்சிகளை விடுத்து, மற்போர்ப் போட்டிகள் என அணுகினாலும் இந்திய மல்லர்கள் தொட்டிருக்கும் உயரம் அதிகம். நேற்றைய காமா, தாராசிங், உதய் சந்தாகட்டும் இன்றைய பஜ்ரங் பூனியா, சுஷில் குமாராகட்டும், பெண்களில் சாக்ஷி மலிக், கீதா போகட் இவர்களாகட்டும், மற்போரில் தனி இடம் பெற்றுள்ளார்கள். நிஜம் அப்படியிருக்க, திரையில் மற்போர் காட்டப்பட்டு அந்தப் படம் வெற்றியடைந்தால், திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பொதுமக்களுக்கு மற்போரில் திடீரென ஆர்வம் உண்டாவதாகவும் செய்திக் குறிப்புகள் சொல்கின்றன.

இந்தியில் ஆமீர் கானின்தங்கல்’ (2016) திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மற்போர் பழகுவதில் பெண்கள் ஆர்வம் காட்டியதாக மற்போர்ப் பயிற்சியாளர் கிருபா ஷங்கர் பிஷ்னோய் சொன்னார். ஹரியானாவின் மல்லர் மகாவீர் சிங் போகாட், நிஜத்தில் தன் மகள்களையும் பெண் மல்லர்களாக்கி 2010 காமன் வெல்த் போட்டியிலும், 2012 பன்னாட்டு மற்போர்ப் போட்டிகளிலும் பதக்கம் வெல்ல வைத்தார். அவருடைய வாழ்க்கையைத் தழுவி 2016இல் தங்கல் திரைப்படம் எடுக்கப்பட்டது. தங்கலின் வெற்றிக்குப் பிறகுதான் மேற்சொன்ன கிருபா ஷங்கரின் கருத்து வெளியானது. தங்கலுக்கு முன்னும் இந்தியப் பெண் மல்லர்கள் சாதித்தனர், தங்கலுக்குப் பின்னும் சாதிக்கின்றனர். ஆனால், மற்போர் பரவலாகப் பொதுமக்களின் கவனத்திற்குச் செல்லத் திரைப்படம் தேவையாக இருக்கிறது. மகாவீர் சிங் போகாட்டைப் போல மற்போர் ஆசியர்கள் தமிழகத்திலும் இருந்தனர். கிராமங்களில்குஸ்தி வாத்தியார்என்பது பொறுப்பான பதவி. தங்களிடம் சேர்கின்ற இளைஞர்களுக்கு உடற்பயிற்சி, மற்போர் இவற்றுடன் ஒழுக்கத்தையும் கற்றுத் தரும் முக்கியமான பொறுப்பை கிராமத்து குஸ்தி வாத்தியார்கள் ஏற்றிருந்தனர்.

தூறல் நின்னு போச்சு‘ (1982) திரைப்படத்தில் காலஞ்சென்ற எம்.என். நம்பியார் குஸ்தி வாத்தியாராக நடித்திருந்தார். கதாபாத்திரம் குஸ்தி வாத்தியாராக இருந்தாலும் சண்டைக்காட்சிகளில் குஸ்தி (மற்போர்) இல்லாமல் சிலம்பம் முதன்மையாக்க் காட்டப்பட்ட படம். நிஜத்திலும் மற்போர் உத்திகள் அறிந்து அதைச் செய்தும் காட்டியவர் நம்பியார். ‘உலகம் சுற்றும் வாலிபன்‘ (1973) திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் மற்போர் உத்திகள் கலந்த சண்டைக்காட்சி அவருக்கு இருந்தது.

உலகத் திரைப் படங்கள் அனைத்திலும் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் மற்போரில் துவங்கி, வாள் வீச்சு, குத்துச்சண்டை உத்திகள், தாவுதல், என்றுதான் படிப்படியாக மாறின. ‘டிஷ்யூம் டிஷ்யூம்ஒலிகளுக்கு எந்தத் திரையும் விதிவிலக்கு அல்ல. பிறகு மெல்ல திரைப்பட சண்டைக்காட்சிகளைஜூடோ’ (ஜப்பானிய சண்டைக்கலை) ஆக்கிரமித்துக்கொண்டது. ஏகத்துக்கு தசைப் பிடிப்புடன் இருக்கும் உடலைக் கொண்ட வில்லனின் அடியாட்களை விஷுக் விஷுக்கென ஜப்பானிய வெட்டுகளை வீசிக் கதாநாயகர்கள் வீழ்த்தினார்கள். அறுபதுகளுக்குப் பின்னர் வந்த தமிழ்த் திரைப்பட சண்டைக்காட்சிகளில் இந்த மாற்றத்தைக் காணலாம். ‘பறக்கும் பாவை‘ (1966) திரைப்படத்தில் ஜூடோ உத்திகள் இருந்தன. மற்போர்ப் பிடிகள் (holds and locks), குத்துச்சண்டைக் குத்துகள் (punches), மற்போரின் தூக்கியடித்தல் (throw), பாய்தல்கள் (dive) இவை மாறி சண்டைக்காட்சிகளில் ஜூடோ வந்த்து. ஹாலிவுட்டின் நிழலுகப் படங்களில் இத்தாலிய ஸ்டிலெட்டோக்களும் (stiletto), பிரெஞ்சு மடக்குக் கத்திகளும் (French butterfly knife) வந்ததால் இந்தியப் படங்களில் நேபாளிய குக்ரி (kukri) வந்தது. தமிழ்ப் படங்களிலும் ஸ்டிலெட்டோக்களும் மடக்குக் கத்திகளும் இடம் பெற்றன

 

வல்லவனுக்கு வல்லவனில்‘ (1965) ஆர்.எஸ். மனோகரின் கதாபாத்திரத்தின் பெயர்பிச்சுவாபக்கிரி. பிச்சுவா இந்தியிலிருந்து வந்த வார்த்தை, தமிழில் குறுவாள், குறும்பிடி, வஞ்சம். சண்டைக் காட்சிகளில் ஹாலிவுட் நிழலுக சண்டைக்காட்சிகளைப் பின்பற்றி கத்திக் குத்துப் பயன்பாட்டில் ஆர்.எஸ். மனோகர் முத்திரை இருந்தது. ‘ஒளிவிளக்கில்‘ (1968) சண்டைக்காட்சிகளில் குறுங்கத்திகளின் பயன்பாடு இருந்தது. ‘ரிக்ஷாக்காரனில் ‘(1971) ‘கத்திக்குத்துக் கார்மேகம்அவருடைய கதாபாத்திரத்தின் பெயர். கடைசியாக பிரெஞ்சு மடக்குக் கத்தி காட்டப்பட்ட படம்வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.’ (2004). பிரபு அந்தப் படத்தில் பிரெஞ்சு மடக்குக் கத்தியைச் சுழற்றிக்கொண்டிருப்பார்

ஹாலிவுட்டைத் தொடர்ந்து இந்தியும் மற்ற மொழிப்படங்களும் சண்டைக்காட்சிகளை இற்றைப்படுத்திய நேரத்தில் தமிழ்த் திரையில் எம்.ஜி.ஆரின் அளப்பரிய பங்களிப்பால் சண்டைக்காட்சிகள் தனி இடத்தைப் பெற்றன. மற்போர், வாட்போர் இரண்டிலுமிருந்துடிஷ்யூம் டிஷ்யூம்வகைக் குத்துகளுக்கு சண்டைகள் மாறின. அப்படி மாறிய சண்டைகள் எம்.ஜி.ஆரால் அலுப்புத் தட்டாமல் இருந்தன. அதன் பின்னர், மற்போரும் குத்துச்சண்டையும் கலந்தடிஷ்யூம் டிஷ்யூம்கள் ஜூடோவின் வருகைக்குப் பின் பழையனவாயின. அறுபதுகளில் நடந்த இந்த அமைதியான மாற்றத்திலிருந்து இன்றுவரையில் சீன ஜப்பானிய தாய்லாந்திய கொரிய எனக் கிழக்காசிய சண்டைக்கலைகள் திரைத்துறையில் முன்னணியில் இருப்பது வியக்கவைக்கும் உண்மை.

தமிழ்த் திரையில் சண்டைக்கலை உத்திகள் தொட்டிருப்பது அசாத்தியமான எல்லை. ஒரு சண்டைக்காட்சிக்காகக்கூட ஹாலிவுட்டிலிருந்து புகழ்பெற்ற சண்டைக்கலை இயக்குநர்களைக் கொண்டுவரும் காலம் இது. இப்பொழுதுள்ள சண்டைக்காட்சிகளில் அவ்வப்போது மற்போர் உத்திகள் காணக்கிடைக்கின்றன. மற்போர் உத்திகள் அறிந்தோரால் சண்டைக்காட்சியில் இருக்கும் நுட்பத்தை வியக்கமுடிகிறது. ஆனால், முன்பு இருந்ததைப் போல முழுவதுமாக மற்போர் உத்திகளைத் திரையில் இனி காண முடியாதுமற்போரிலிருந்து டிஷ்யூம் டிஷ்யூமுக்கும், அதிலிருந்து ஜூடோவுக்கும், அதிலிருந்து ஜப்பானிய கராத்தே, சீன குங்ஃபூவுக்கும், பின்னர் தாய்லாந்தின் முவே தாய்க்குமாக அசுரப் பாய்ச்சலில் சண்டைக் காட்சிகள் சென்றுகொண்டிருக்கின்றன

இறுதிச்சுற்றில்‘ (2016) அமெச்சூர் குத்துச்சண்டையும், ‘பட்டாசில்‘ (2020) அடிமுறையும், ‘பூலோகத்தில்‘ (2015) வணிகமாக்கப்பட்ட குத்துச்சண்டையும், ‘சார்பட்டா பரம்பரையில்‘ (2021) பரம்பரைக் குத்துச்சண்டையும் கதைக்களமாக இருந்தன. அதனால், அந்தந்தப் படங்களில் அமைந்த சண்டைக்காட்சிகள் குறிப்பிட்ட சண்டைக்கலையை அடிப்படையாக்க்கொண்டு அமைந்தன.  

சமீபத்தில் (2022) ‘கட்டா குஸ்திதிரைப்படம் மற்போர் வீராங்கனையின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெளியானது. இதன் சண்டைக்காட்சிகளை அன்பறிவ் (இரட்டையர்) அமைத்திருந்தனர்.

தங்கல், சுல்தான், கட்டா குஸ்தி போல மற்போர்ப் பின்னணியில் அவ்வப்போது திரைப்படங்கள் வெளிவந்தால் மற்போர் உத்திகளுடன் திரைப்பட சண்டைக்காட்சிள் ரசிகர்களுக்குக் காணக்கிடைக்கும்.

குறிப்பு:

  • ஆமூர் மல்லனை வெற்றி கொண்ட சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளியின் பெயர்  சங்ககாலப் பாடல்களில் இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் சாண்டில்யனின்கோழைச் சோழன்சிறுகதையிலும் அப்பெயர் உள்ளது
  • மல்லன்மற்போர் வீரன், மாமல்லன்மல்லர்களிற் சிறந்தவன். மாமல்லன் என்றழைக்கப்பட்டவர் நரசிம்ம பல்லவன் (கி.பி. 630 – 668). இது மற்போர் தமிழ்நாட்டில் வீரத்துக்கு அடையாளமாக விளங்கியிருந்ததற்குச் சான்று.

********

azad_ak@yahoo.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button