
துர்கனவின் பகுதியில் மிகுதிப்பட்டு வெளிநீள்கிற மூன்றுவிரல்களுள்ள
ஒற்றைக்கையின் கோரசைவு
பலகனவுக்குமுன் துண்டிக்கப்பட்ட தலையிலிருந்து
சாம்பல்நிற மூளையின் சீழ்பிசுபிசுப்புடன் வெளியேறுகின்றது
ஒரு அரூபரூபம்
அறையெங்கும் ரத்தவாடை
உறங்கிக்கிடந்தவனின் ஆன்மாவரை நீட்சித்தது
அதனினும் விகாரபாவம் ஒருகணம் சலனித்தடங்கியது
இரண்டு நாவுள்ள அழுகிய அம்மிருகத்தின் முன்
காதறுத்தவனின் சூர்யகாந்திப்பூவின்
ஓவியத்தின் நூற்றாண்டு மஞ்சல் வெளிறியிருந்ததை
கனவின் கவனமின்மையின் தவறியதோடு நிறுத்தியிருக்கலாம்தான்
பெண் கொசுவின் வயிறு நிறைய என்விந்திற்கான ரத்தம்
தளும்பப் பறக்கிறது அங்கோர் ர்ர்ர்ர் ரீங்காரம்
காது ஜவ்வோடு ஒட்டிய மனித சப்தமற்ற இரைச்சல்
மனிதவுறுப்பு வெறியுடன் பசியடங்கா இருள் குடித்து
உயிருறிந்து இரத்தமற்ற உடல்களை இழுத்துக்கொண்டு
சவறையிலிருந்து மெர்குரி ஒளியில் ஓடுகிற
ஒன்றின் நீண்டநிழலில் மனிதசாயலேயில்லை
அதன் பின்தொடர்கிறதென் மற்றொரு ஜீவிதசெயல்
பீய்ச்சுகிற வெளிச்ச நிறமிகளின் ஊடுருவல்
அம்மிருகத்தின் உடலின் பொத்தல் உடல்வழி
பிரகாசித்த பயங்கரம்
என் தலை ஒருபக்கம் மயங்கிச் சரிந்து கிடத்தியது
என் முகம் முழுக்க வர்ணத்தீட்டு
வியர்வையோடு வழிகின்றன
நாடக அரங்கிலிருந்து எல்லோரும் வெளியேறுகையில்
பிரக்ஞைக்குத் திரும்புகிற அவசரத்தில் விழித்துப் பார்க்கிறேன்
எனக்குள்ளிருந்து தூரமாய் மனித சதையை சுவைத்தபடி
கொஞ்சம் சாய்ந்து பார்க்கிற அம்மிருகத்தின் கையில்
என் கனவின் இருதயம் கடைசி துடித்தலுக்கிடையில்
நிலம் வீழத் தொடங்கியது
தரையெங்கும் இரத்தம் ஒரே இரத்தம்
*****
பூஜ்யம்
ஆன்மா பயம் சுழியமிடும் நடுராத்திரி
ஓலங்கள் சுருள் சுருளாய் வளையங்கள் நெய்யும் அந்தகாரம்
பால்சிசுவைப்போல் ஜனனிக்கும் மூன்றாம் யாமயிருள்
தொப்பில்கொடியறுந்து இரத்தம் கசியும் அறைக்கனவு
வெளியே செந்நிற ஓநாயின் ஊளை சப்தம்
என் உள்வனம் நடுங்குகின்றன
ரோகிணி நக்ஷ்சத்திரம் அருகே நீலவானம்கீழ்
வெண்தீபச்சுடர் குளிர்ந்து ஒளிர்கின்றது
பிறழ்மனம் அழுத்தம் நெய்யும் பயங்கரம்
நான்கறை இருதயம் வேகமாய் துடிக்கின்றது
மூளை ஒருபாதி தன்னியல்பை சுருக்கிக்கொண்டது
முதுகெலும்பின் பலவீனம்
என் இரைப்பைக்குக்கீழ் இயங்காமல் நிறுத்திவிட்டன
வெள்ளையணுக்கள் குறைந்ததில் காயங்களிலிருந்து
சீழ் வழிந்துகொண்டேயிருக்கின்றது
ஆட்டிசவிரல்கள் நெளிந்தபடி வீல்ச்சேரை எட்டிப்பிடிக்க
பிடிமானம் தவறி மீண்டும் கைகள் தொங்கி விழுகின்றன
வாய் கோணி எச்சில் ஒழுக முன்பற்களால் கவ்வ
தளர்ந்த உதடு மெதுவாய் சரிந்தன
கண்களில் நோய்மைமுற்றிய பகுதிப்பார்வையில்
சுயமரணத்தின் மீதான பிரியம் பீறிடுகின்றன
யாரும் அறைக்கதவைத் தட்டுவதற்குள்
விட்டத்தில் தொங்கியிருக்கும் நைலான் கயிற்றின் ஒரு முனையை
சிநேகமாய் வளர்த்திய கொஞ்சம் வளர்ந்த நாயின் வாயால் பற்றி
உலகைவிட்டு ஓடும்படி செய்கையில் கட்டளையிட்டிருக்கிறேன்
இறுக்கிக்கொல்ல என் தலையை அப்பூஜியத்திற்குள் பொருத்த வேண்டும்
அதற்கும் யாரேனும் விளிக்க வேண்டும்
******
யா அல்லாஹ்
யா அல்லாஹ் என் சிரியாவைக் கைவிட்டீரே
அதோ என் பொசுபொசு பொம்மை ரத்தவெள்ளத்தில் மிதக்கிறது
துப்பாக்கியிலிருந்து ரவைகள் கருணையின்றி சீறிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன
எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு
திசை தெரியாமல் ஓடுகிறார்கள் மேலும்
வானிலிருந்து இயந்திரப்பறவை மெட்டீரியல் முட்டைகளை
ஈவு இரக்கமின்றி எம் நிலத்தில் இட்டுப்பொடிக்கின்றன
என் வாப்பா என் உம்மா என் தம்பி உடல்கள் சிதறி
சதையும் ரத்தமுமாக விழுந்து கொண்டிருக்கிறார்கள்
நான் அழுவதற்குச் சமயமில்லை
என் மூளை முதல் வெடிகுண்டில் செயல் இழந்து நின்றுவிட்டது
காதுக்குள் பலநூறு குரல்களின் கதறல்கள் இடைவிடாமல் கேட்கின்றன
என் நாசி அமில வாசனையை உறிந்து இருதயம் தகிக்கின்றது
தரையெங்கும் உறுப்புகள் பிய்ந்த உடல்களின் உஷ்ணம்
கந்தகத்தில் புகைகின்றன.
இரத்தச்சகதியில் எம் நிலத்தின் மண்ணில்
நான் தனித்து யாருமற்று நிற்கிறேன்
நிறைய உடல்களின்மேல் வானுயர்ந்த கட்டிடங்கள்
தரைமட்டத்தில் சுக்குநூறாய் குவிந்திருக்கின்றன
ஆகாயத்தில் இருந்து எனை அழிக்கும்
ஒரு ராக்ஷ்ஸச குண்டு விழுந்து கொண்டிருக்கிறது
நான் கடைசியாய் என் உலகத்தின் காற்றை உள்ளே இழுக்கிறேன்
டமார்.
நிகழ்காலத்தை பதிவு செய்யும் கவிதைகள்
பிரியங்கள் அனாமிகா