கவிதைகள்

தமிழ் உதயா கவிதைகள்

தமிழ் உதயா

எனக்கு கடல் முகம்

நீல நினைவுறும் ரயிலில்
கண்களைச் சாத்தி நகரும் நாளொன்றில்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
இளவேனிலின் புழுதி வாசம்,
தழைக்கும் நுனிகளிடை நடுங்கும் புலரொளி,
மெல்ல ஊர்ந்தெழும் ஈரம் கோர்த்த தூவான மிச்சம்,
புதைத்து நுழைவதற்கு தகுந்த கேசரக் கணம்,
துயிலைக் களவாடும் பனிகவிழ் நெஞ்சு,
விரிந்தகன்ற நதியின் குரலில்
தொலை கூர்ந்திழுக்கும் பைத்தியப் புல்வெளி,
தீண்டும் நாவுடை உதிரா இதழ்கள்,
அணுப்பாறையின் உணர் புலன்,
இந்த நீல அல்லிகள் எப்போது மலர்கின்றன?
நீங்கள் அறிவீர்கள்.
அதன் வாசத்தை மட்டும் நான் நன்கறிவேன்.

—-

ஒரு பறவை கடக்க முயல்கிறது,
இரு தரை பீதியுற்று கரைகிறது,
சில மீன்கள் துடிக்கின்றன,
ஒவ்வொரு முறையும் அகமுணர
அமைதியைக் கிழித்து
ததும்பும் அவனுக்கு ஓயாது ஊடாடும்
பிரத்தியேகமான ஓர் இசை இருக்கிறது.
ஒலியுறும் அவனது செவிகளுக்குள்
குரலூன்றும் அரவ நுனி
இமைப்பொழுதின்
தற்செயல் கணமாயிருக்கலாம்.
சில சமயங்களில் பேசும் நாவாகவும்
சில இடங்களில் மௌன சமாதியாகவும்
உயிர்ப்பின் இயங்கு பாறைகளுக்கிடையே
ஆழ் அலை சூலென
உரையாடி நெளிந்தோடுகிறது.
ஏனெனில் அகழ்சுழியில் நீந்தும்
அவனுக்கு கடல் என்றும் ஒரு பெயர்.
அந்த அவன் முகம்
உங்களுடையது
என்னுடையது
ஏன்
அவனுடையது என்றும்.

—-

மெலிதான விழி சொருகி
நெரிந்திருந்த விலாக்கூட்டின் வழி
இதயம் துடிப்புறும் கணம்
வலியுற்று உட்கசிவை வேகப்படுத்துகிறது
அதன் ஈர லயத்தில் வீணடையாதவாறு
துரிதமாக அதிர்கிறேன்
என்னுள் அகப்படுத்தி
துயிலுற அனுமதிக்கிறேன்
வனைகிறதும்
மையப்பகுதியில் வேவுறுவதுமாய்
கடல் நிறைந்த பொழுதின்
ஓசையுறும் பனிமூட்டம்
ஒன்றுள் ஒன்றாய் அமைதியுறுகிறது
மென்மையாய் ஊர்ந்த
நதியின் கிளையேறி
என்னுள் தஞ்சமடைகிறாய்
கொணர்ந்த மஞ்சள் ஒளியில்
செழிப்புற்ற வனம்
தன்னுள் பருகித் தீர்க்கிறது
மையக்கீற்றின் எரிவில்
உடல் நடுங்கி மேற்கிலிருந்து கிழக்காக
துஞ்சாத விழிகளுடன்
மெதுமெதுவாக அசைகிறேன்
நறுமணத்தில் நீட்சியுற்றிருக்கும்
திசையறியாத நீ
புலனற்ற உலகில் ஏதாயிருக்கிறாய்
இங்கென்றும் அங்கென்றும்
ஒவ்வாதவாறு அன்பூறிய வார்த்தைகள்
என் கைகளில் வீழ்கின்றன
மலையின் கீழ் ஊர்ந்து கடக்கிறது
செந்நிறத்தில் ஒரு பறவையின் பாடல்
ஆக. …..
ஆழ்தலும் உறைதலும் அன்றி
நீங்குதல் வேறில்லை.

——-

குரல்வளையை துளைக்கும்
வனவேடனின் நறும் வனைவில்
கேச இழைகளால் என் புறாக்கூட்டை
வாசனையோடு புனைகிறாய்
கழுத்தில் வளைந்த
கொவ்வைப்பழ வானவில்லின்
இரு நிலங்களின்
பசுஞ்சிறகுக் கதகதப்பாய்
காற்றில் முன்னோக்கி மிதக்கிறாய்
கேசரமாயிருக்கும் என்னுள்
விடிவின் கருவுறுதல்
செந்நிற விண்மீன்களாய்
ஆழி மணல் திட்டில்
திரண்டு புரள்கிறது
வாதையுற்ற வன மரத்தின் அடியில்
நேசம் பீடித்திருக்கிறது
கனவுகள் மறுவிழிப்புச் செய்கின்றன
தணிக்கவொணா வெம்மையின் பேருணர்வை
பள்ளத்தாக்கில் ஒலியுறும்
ஆற்றின் உள்மூச்சென்கிறேன்
புகலிடம் கனலுறச் செய்கிறது
பூர்த்தியாகும் இந்நாள்
நள்ளிரவில் உன்னுள் கருவுறுகிறது
ஆழ்கிறேன்
வியப்பதற்கேதுமில்லை
என் நேரம் இந்நேரம் விடிந்திருந்தது.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button