ஆதிக்கதை
தாயின் கருப்பையில்
ஸ்கலிதமாய் விழும்முன்னே
எனக்கான தாலாட்டை
பாட ஆரம்பித்திருந்தாய்
சொற்கள் தேவையற்ற
அதன் ராகங்களிலிருந்து
வழிந்து
கிளைப் பரப்பி
உண்டாயின பெரும் நதிகள்.
உலகம் ஜெனிக்க ஆரம்பித்தது.
ஆம்.
ஆதியிலே வார்த்தை இருந்தது.
அந்த வார்த்தை எனக்கானதாயிருந்தது.
அந்த வார்த்தை நீயாயிருந்தாய்.
மொழி தன்னை அறியுமுன்னே
எனக்கான சொற்களை சேகரிக்க தொடங்கியிருந்தாய்.
அதில் நீ செய்த கவிதைகளை
நதியில் தூவிவிட
நீருக்கும் மண்ணுக்குமான
சகதியிலாகியிருந்த
மலர்களுக்குள்
மகரந்தமாகியிருந்தது.
வீறிட்டு அழுமுன்னே
எனக்கென உன் முலைகள்
சுரக்கத் தொடங்கின.
சிந்தப்பட்ட வெண்ணிற திரவம்
நதியில் அலையாடி அலையாடி
கடலானது.
கடலின் அடியாழத்தில்
என்மீதான அன்பின்
அத்தனை ரகசியங்களையும்
ஒளித்துவைத்தாய்.
சகல நீர்வாழுயிரியும் தோன்றின.
எனது நிர்வாணம் வெளிப்படுமுன்னே
எனக்கான ஆடையை நெய்திருந்தாய்.
உயரப் பறந்த அது
வானமாகியது.
என் கண்கள் திறக்குமுன்னே
உன் அழகை உருவாக்கியிருந்தாய்
அந்த அழகின் வனப்பில்
மலைகளும் மரம் செடிகளும்
பூமிக்கு மேலெழுந்தன.
இரு உடல் தழுவும்முன்னே
எனையுன் வயிற்றில்
சூல்கொண்டாய்.
விருட்சங்களின் சகல ருசிகளும்
அதிலிருந்து ஒழுகியது.
ஆம் ஜெனி.
இந்த உலகம் இப்படியாகத்தான் ஜெனித்தது.
ஆதியிலே நீயிருந்தாய்.
அந்த நீ எனக்கானவளாயிருந்தாய்.
நீ என்மீது கொண்டிருந்த பேரன்பின் பொருட்டாய்
இந்த உலகம் படைக்கப்பட்டது.
ஆம் ஜெனி இவ்வாறுதான் நான் ஜெனித்தேன்.
***
வெளிப்படுத்தின சுவிசேஷம்
துரோகம் என்பது வெறும் துரோகமில்லை
அது
இழைத்தவருக்கும் இழைக்கப்பட்டவருக்குமான உடன்படிக்கை
தூற்றித் திரிபவரின் தீநாக்கு
நிறுவனமயமாக்கலின் சம்பளப்பிடிப்பு
தேவதையொருவன் மோகங்கொண்ட அதிகாரத்தின் சிம்மாசனம்
நீங்கள் தெவ்டியா என்றழைத்தவரின்
அல்லது அவர் மகனின்
பின் மறைக்கப்பட்ட பிரிவின் மனவலி
காஸின்* அடக்கம் செய்யப்பட்டபிணம்
சத்தியங்களை மீறிய எதிர்பாராமுத்தம்
கலிலியோமீது பட்ட முதல் கல்லின் கூர்முனை
புரூட்டஸின் கருணை மனம்
தூக்கியெறியப்பட்ட அணையாத சிகரெட்டின் கங்கு
சாகஸக்காரனின் கயிற்று நடனம்
நெடுஞ்சாலையில் சிதறியவிலங்கைப் பற்றின நவீன ஓவியத்தின் வீச்சம்
தவறவிடப்பட்ட அழைப்பின் பின்னான குறுஞ்செய்தி
பின்னெப்போதும்
நீங்களோ நானோ பேசுவதற்கு ஒன்றுமில்லாதது
உண்மையில்
துரோகம் என்பது துரோகமேயில்லை
இருவருக்கு மட்டுமேயான பிரபஞ்சஇரகசியம்
(*காஸ்: சார்லஸ் பூக்கோவ்ஸ்கியின்“ஊரின் மிக அழகான பெண்”கதையின் பாத்திரம். மொ.பெ.: சாருநிவேதிதா)
***