சிறுகதைகள்

கறி குழம்பு – இராம் சபரிஷ்

முத்துவேல் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் மூலத்தெரு அண்ணாச்சி கடையில் விற்கப்படும், மரத்தூள் கலந்த காபி பொடி நிறத்திலும், அல்லாமல் மாநிறத்திலும் அல்லாத இடைப்பட்ட ஒரு இளம்பழுப்பு நிறத்தில் இருந்த பாட்டா செருப்பை அணிந்து கொண்டு தெருவில் நடக்கலானார். சூரியன் தலைக்கு மேல் செங்குத்தாக இருந்தமையால் முத்துவேலின் நிழல் தரையில் விழவில்லை எனினும் வெயிலின் தாக்கம் மண்டையை கிறுகிறுக்க வைத்தது. அவர் கையில் மனைவி தனம் கைகளால் பின்னப்பட்ட சிவப்பு நிற “வயர்” கூடையொன்றை வைத்திருந்தார். அது முத்துவேல்‌ வீட்டினர்களால் பிரத்யேகமாக இறைச்சி வாங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

அவர் செருப்பில் கட்டைவிரல் இருக்கும் இடம் மிகவும் தேய்ந்திருந்தது. அது பல மாதங்கள் அந்த செருப்பு ஓய்வின்றி உழைத்ததிற்கான சாட்சியாக இருக்கலாம்.அத்தேய்மானத்தால் முத்துவேலின் வலது கட்டை விரல் பலமுறை தார் சாலையால் பதம்பார்க்கப்பட்டது.

‎ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையின் இருபுறமும் கடையைப் போட்டுக் கொண்டு சில பெண்கள் உற்சாகமாக மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். ஒரு காகம் மேலிருந்து சிறகுகளை சற்று கீழ்நோக்கி மடக்கி பறந்து வந்து தாழ்வான ஒரு மரக்கிளையில் தன்னை அமர்த்திக்கொண்டது. கா கா என்று இருமுறை கரைந்து விட்டு தன் களப்பணிக்கு செல்ல ஆயத்தமானது. ஒரு நொடிதான் சட்டென எழும்பி ஒரு ஓரமாய் ஒளிந்தவாறே பறந்து சென்று கூடையிலிருந்ந ஒரு மீனின் வால் பகுதியை தன் அலகால் இருமுறை கொத்திவிட்டு பின்னர் லாவகமாக அம்மீனை கவ்வி எடுத்துச் செல்ல முயற்சித்துக் கொண்டிருந்து. மீன்காரப் பெண் அதைப் பார்த்து விட்டாள். அவள் அமர்ந்தவாறே‌ ஒரு எழுபது டிகிரி இடப்பக்கம் பெண்டுலம் போல் சாய்ந்து தன் இடது கையை நீட்டி காகத்தை “சூ சூ” என்று விரட்டினாள். அவள் சாய்கையில் அவள் மேற் சேலை லேசாக விலகி சில அந்தரங்க பாகங்கள் ‌வெளியே எட்டிப் பார்த்தன. முத்துவேல் தற்செயலாக அவற்றை பார்க்க நேரிட்டது. உடனே தன் பார்வையை வெடுக்கென்று வேறு திசையில் திருப்பினான். அவன் கண்ணியவான் என்பதை ஊருக்கு வெளிக்காட்டும் செயலாகவே அது இருந்தது. இருப்பினும் மறுபடியும் அவளைப் பார்க்க வேண்டும் அவள்‌ அந்தரங்கத்தைப் பார்க்க வேண்டும் என்று ஏதோ ஒன்று அவனைத் தூண்டியது எதுவென்று ஊர்ஜிதமாய் தெரியவில்லை. அவன் ஓரக்கண்ணால் இடப்பக்கம் லேசாக அவளை நோட்டம் விட்டான்.அவள் தன் கையிலிருந்த சமீபத்தில் சானை பிடிக்கப்பட்ட கூர் கத்தி ஒன்றால் நகரை மீனின் தலையை ஓங்கி வெட்டினாள். தலைத் துண்டாக கீழே விழுந்தது. முத்துவேலின்‌ பார்வை இப்போது போனமுறையைக் காட்டிலும் படு வேகமாக வேறு திசைக்கு திரும்பியது அல்லது திருப்பப் பட்டது. அவன் ஒரு நொடி தன்னை அறுவருப்பாக எண்ணினான். வேண்டுமென்றே சிந்தனையை வேறு தடத்தில் மாற்ற விரும்பினான். மீன் வாங்கலாமா என்று ஒரு கணம் தோன்றியது பின்னர் அதை அவனே கைவிட்டு விட்டான்.

‎அவனுக்கு மீன் விருப்பம் தான் என்றாலும் மீன்களால் ஆட்டுக்கறியின் ருசிக்கு என்றுமே இணையாக முடியாது. மீன் அல்ல தேவாமிர்தமேயானாலும் முத்துவேலுக்கு ஆட்டுக்கறி தான் உசிரு. சில சமயங்களில் மனைவியை விடவும். இதற்கு காரணம் முத்துவேலின் இளமைக்கால வாழ்க்கை. ஒரு காலத்தில் நல்ல பேரோடும் புகழோடும் வாழ்ந்த குடும்பம். முத்துவேலின் தந்தை ஒன்டிமுத்துவின் புகழை அறியாதவர் ஒன்னு செவி, பார்வை திறன் இழந்தவராய் இருந்திருக்க வேண்டும் அல்லது புத்தி சுவாதீனம் இல்லாதவராய் இருந்திருக்க வேண்டும்.அந்தளவுக்கு உழைப்புக்கு பெயர் போன நல்ல தேங்காய் வியாபாரி. சமயங்களில் கேரளத்துக்கு கூட ஏற்றுமதி செய்திருக்கிறார். இருப்பினும்‌ அடிமை வாழ்வு வாழ்ந்தவனுக்கு திடீரென ஆண்டை வாழ்வு கிடைத்து விட்டதே என்று பலர் மனதுக்குள் புழுங்கிக்கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் ஒன்டிமுத்து‌ இவ்வுயரத்தை சொந்த உழைப்பின்‌ ஊடாகவே அடைந்திருந்தார்.

‎ஒற்றைப்‌பிள்ளை என்பதால் முத்துவேலிற்கு அளவுகடந்த சுதந்திரம் மற்றும் செல்லம். காலையில் முத்துவேல் எழுந்ததும் ஒரு சொம்பு நிறைய நீர் கலக்காத பசும்பாலில் இரண்டு நாட்டுக்கோழி முட்டையை அடித்துக் கலக்கி கொடுப்பாள்‌ அவன்‌ அம்மா. கண்ணை மூடியவாறே கப்பென்று அதை குடித்து முடித்த பின்னர் தான் கண்ணையே திறப்பான். காலை எட்டு மணிக்கே சிவா பிரியாணி கடையிலிருந்து அரைப் பிளேட் ஆட்டுக்கறி பிரியாணி சுடச்சுட வந்து காலையுணவிற்காக இறங்கி விடும். என்ன ஆனாலும் சரி முத்துவேலுக்கு மதிய உணவிற்கு ஆட்டுக்கறி குழம்பு இருந்தே ஆகவேண்டும் இல்லையெனில் வீட்டில் தட்டுகள் விண்ணிற்கும் மண்ணுக்குமாய் பறந்த வண்ணமிருக்கும்.

‎மிதமான அடுப்புச் சூட்டில், மண்சட்டியில் பசுநெய் ஊற்றி அதில் நன்கு அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சிவக்க வறுத்து தக்காளி வெங்காயம் மற்றும் நன்கு பதமாக அம்மியில் அரைத்த தேங்காய்ச் சீவலையும்‌ போட்டு வதக்கி தேவையான பொடிகளைத் தூவி இறுதியாக‌ கறித்துண்டுகளைப் போட்டு நன்கு கறி வெந்த பின் சிவக்க சிவக்க குழம்பை அடுப்பிலிருந்து இறக்கும்போது அதில் ஆட்டுக் கொழுப்பு போதையில் தள்ளாடி குழம்பின்‌ மேல்தளத்தில் கிரங்கி சுற்றித் திரியும். அதைச் சுடச்சுட சோற்றில் பறித்த குழியில் ஊற்றி வாயில் வைக்கயில் இதற்காக இன்னும் ஏழு பிறவிகள் கூட எடுக்கலாம் என்று முத்துவேல் பலமுறை‌ நினைத்ததுண்டு.

‎அவன்‌ அப்பா உடல் நொடித்து போனபின் இளம்வயதிலலேயே தொழில் தன் கையில் வந்து விட்டது.தொழிலை சமாளிக்கவும் தெரியாமல் மக்களை புரிந்து கொள்ளும் பக்குவமும் பத்தாமல் திணறி ஏமாந்து ஏமாற்றப்பட்டு சகலமும் கை நழுவ தினசரி உணவிற்கே பெரும் பாடாய் போன சூழல். அவன் மனதில் அப்போதும் கறிக்குழம்பு இல்லாமையின் ஏக்கமே அதிகமாய்‌ தென்பட்டது. இப்போதெல்லாம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இறைச்சி எடுப்பதே பெரும் போராட்டமாகிவிட்டது.

‎கறியை வாங்கிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவுடன் “எவ்வளவு வாங்கிருக்கீக“ என்றாள் தனம்.

”கால் கிலோ”

“காணாதுங்க”

“தெரியும். பிள்ளைங்களுக்கு பத்தும்.”

“இன்னிக்காவது நீங்க சாப்பிடுவீங்கனு பார்த்தேன்”

“ ஆமா‌ அது ஒன்னுதான் குறைச்சல் கிலோ நானூறுங்குறான் மனசாட்சியே இல்லாம”.
தனம் அவனையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
குழந்தைகள் சாப்பிட்ட பின் முத்துவேலும் தனமும் கறித்துண்டுகள் இல்லாத மீதமிருந்த அரைக்கரண்டி குழம்பை பகிர்ந்து கொண்டனர். இந்த‌ அரைக்கரண்டியும் இறுதியில் குழம்புச் சட்டியில் தண்ணீர் ஊற்றியதால் கிடைத்ததே. குழம்பைத் தட்டில் ஊற்றியதும் கொழுப்பு மிதந்து கறித் துண்டுகளுடன் வந்து சோற்றில் பொத்தென விழுந்தது. இதில் ஒரு‌சிறு ஈரல்‌ துண்டும் அடக்கம். முத்துவேல் சோற்றை உருண்டையாக பிடித்து ஒரு கறித்துண்டை அதனுள் புதைத்தான். அதனை லாவகமாக உடையாமல் வாயில் போட்டு இரசித்து அசைபோட தொடங்கினான். இதுபோன்று அரைக்கரண்டி தண்ணீர் குழும்பை வைத்துக் கொண்டே கற்பனையில் கறித்துண்டை புசிக்க முத்துவேல்‌ நன்கு கற்று வைத்திருந்தான். அவன் மட்டுமா நாட்டில் பல பேர் அதை கற்று வைத்திருக்கிறார்கள்தான்.

‎முத்துவேல் மிகவும் நலிந்த உடல்நிலையில் இடது பக்க உறுப்புகள் முழுதும் செயலிழந்த நிலையில் கயிற்றுக் கட்டிலில் எரியும் பிணம் போல் அவ்வப்போது எம்பி எம்பி மூச்சை விட்டவாறு இழுத்துக் கொண்டிருந்தான். அந்த சாலை விபத்துத்கு‌ பின்‌ அவன் படுத்த படுக்கையாகி நான்கு வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் கடந்த இரண்டு வாரமாய் அவன் படும் பாடுகளை யாராலும் பார்க்கவே முடிவதில்லை. அவ்வளவு குரூரம் கலந்த இரக்கமில்லா தருணங்கள் அவை. நாக்கு வலப்புறமாய் கோணிவிட்டது. அது போதாதன்றி நா பிரண்டு பச்சை நரம்பு ஒன்று புடைத்து சர்பம் ஒன்றைப் போல் நெளிந்து கொண்டிருந்து. பேச்சு அறவே அடங்கி விட்டதென்றாலும் நிசப்தம் அவன் இருப்பை உலகிற்கு உறுதிப்படுத்திக்‌கொண்டு தான் இருந்தது. நெஞ்சு விலா எலும்புகள் அனைத்தும் வரிசைக்கட்டி காட்சிக்கு வைத்தார் போன்று தெரிய‌ ஆரம்பித்துவிட்டன ஏதாவது துணியைக் கொண்டு மூடியிருந்திருக்கலாம். முத்துவேல் மூச்சை விட முடியாமல் இழுத்து விடும்போது விலா எலும்புகள் மேலும் துறுத்திக் கொண்டு நெஞ்சைப் பிளந்து வெளியே வந்துவிடுவதுபோல் பார்க்க பயங்கரமாக இருந்தது. கைவிரல்கள் நீட்டிய நிலையிலேயே விரைத்து இருந்தன.இரண்டுவாரத்திற்கு முன்னரே சோறாகாரத்தை உடல் நிறுத்திக் கொண்டது , நேற்றிலிருந்து நீராகாரமும் இல்லை.

‎தனத்தால் முத்துவேலை ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை. அவள் முகத்தில் நாட்கணக்கில் அழுத‌ தடமும் தூங்கா இரவுகளின் படிமங்களும் தென்பட்டன. செய்வதறியாது சுவற்றைப் பார்த்தவாறே இருந்தாள். அவன் விட முடியாமல் விடும் ஒவ்வொரு மூச்சின் இரைச்சல் சத்தமும் அவள் தலையில் யாரோ சுத்தியலை வைத்து பலமாக அடிப்பதாய்ப் பட்டது. ஒருகணம் முத்துவேல்‌ நெஞ்சு புடைக்க‌ மலையென‌ எழும்பி ஒரு மூச்சை உள் இழுத்தான்‌. ஆனால் வெளியே விடவில்லை. உடல் அசைவற்று இருந்தது. தனத்தின் இதயத் துடிப்பு உச்சகட்டத்தை எட்டியது கூடவே பயமும் சேர்ந்து கொண்டது. அவள் மெல்ல கைகளை அவன் நெஞ்சில் வைத்தாள். இதயம் துடிப்பதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. சில வினாடிகள் அங்கே ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. தனமும் செயலற்று உறைந்து போய் இருந்தாள். அந்த கணத்தில் இருவருமே பிணம் போல அசைவற்று இருந்தார்கள்.

‎சட்டென ‌முத்துவேல் மூச்சை வெளியே விட்டான். தன்னை மரணம் இன்னும் ஆட்கொள்ள வில்லை என்பதை காட்டும் செயல் அது.மீண்டும் மூச்சை இழுத்து இழுத்து விடத் தொடங்கினான்.

‎தனத்திற்கு அழுகை பீரிட்டுக் கொண்டு வந்தது. கைகளால் துடைத்துக் கொண்டே இருந்த போதும் வற்றாத ஜீவநதியைப்போல் அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

‎இவ்வளவு வலியை ஏன் அவர் தாங்கவேண்டும் உயிர் பிரிந்து விடாதா‌ என்று ஏங்கினாள். ஆம் தயவு செய்து உயிரைப் பிரித்து எடுத்துக் கொண்டு செல்லும்படி கைகூப்பி இறைவனை வேண்டினாள். மன்றாடினாள். நான் என்ன செய்கிறேன் என் துணைவனின் சாவை நானே வேண்டி கேட்கிறேனே நான் ஒரு பாவி மகாபாவி என்று கண்ணீர் மழுங்க அழுதவாறே சுவற்றில் தலையை மோதி புலம்பினாள். கண்ணில் கண்ணீர் வற்றும் வரை அழுதாள். பின்னர் அமைதியாகிவிட்டாள். அழுகை வரவில்லை. சற்றே நிதானித்தாள். மனதில் ஏதோ ஒன்று பட்டது. நீண்ட நேர யோசனைக்குப்பின் சட்டென தெளிவு பெற்றவளாய் எழுந்து தெருவீதியை நோக்கிச் சென்றாள். கையில் சிவப்பு நிற வயர் கூடை இருந்தது.

‎சில மணி நேரம் கழித்து, தனம் சற்றுமுன் அடுப்பிலிருந்து இறக்கிய கொழுப்பு மிதக்கும் கறிக் குழம்பை சோற்றில் ஊற்றிப் பிசைந்து ஒரு கறித் துண்டையும் சேர்த்துப் புதைத்து ஒரு பெரிய சோற்றுருண்டையை முத்துவேலுவிற்கு ஊட்ட கையிலெடுத்தாள். அவன் வாயருகே கொண்டு சென்றாள். அவன் கண்களில் இப்போதும் ஒரு வித ஏக்கம் நிறைந்திருந்தது. அவன் உடல் இப்போது அதை மறுக்கவில்லை. கறிக்குழம்பு மனம் அவன் நாசியில் நுழைந்து உயிர் வரை சென்று ஒரேநேரத்தில் மௌனமாகவும் கோரமாகவும் அவன் மொத்த உடலையும் ஒருமுறை பலமாக உலுக்கியது. அந்த சோற்றுருண்டையில் இருந்த கறிக்கொழுப்பு கோணிய‌ நாக்கை ஆறத் தழுவி மெல்ல முன்னகர்ந்து நாமுழுவதையும் மையிலிறகுபோல் மெல்ல வருடியது. அது தொண்டையில் இறங்கி பிரிய மனமில்லாமல் பிரிந்து வயிற்றுக்குள் போவது நன்றாகவே தனத்தின் கண்களுக்குத் தெரிந்தது. அக்கறிக்குழம்பில் நனைந்த சோற்றுருண்டை தொண்டை வழியே இறங்கி வயிற்றைத் தொட்ட அதே கணம் அந்த கணமே ஏதோ ஒன்று முத்துவேலின் உடலைவிட்டு வெளியே சென்றது.

‎அது என்னவாக இருக்கும் உஷ்ணமா காற்றா சரியாகத் தெரியவில்லை ‌அது அவனின் உயிராகவும் இருக்கலாம்.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button