தமிழாதியின் மரபியல் மீட்சிக்கான ‘யாத்திரை’ – ஜார்ஜ் ஜோசப்
கட்டுரை | வாசகசாலை

ஆர். என். ஜோ டி குருஸ்-இன் யாத்திரை நாவலை வாசிக்க நேர்ந்தது. தன் வரலாற்றுப் புதினக் கட்டமைப்பிலும் தொனியிலும் பயணப்படும் இந்நாவல், நீரை நிலமாகக் கொண்டவர்களின் வாழ்வையும், அரசியல் தேவையையும், மறைக்கப்பட்ட வரலாற்றையும், மெய்யியல் பின்னணியையும், பொருளாதாரத்தையும் பேசுகிறது. கேள்விகளோடும் ஆர்வத்தோடும் வளரும் சிறுபிள்ளையின் விசாரணையில் தொடங்குகிறது நாவல்.கிறிஸ்தவ மெய்யியல் சார்ந்த கேள்விகளுக்குள் பயணப்பட எத்தனித்த சிறுவனது மனம், கிறிஸ்தவ மதத்தின் நிறுவன அமைப்புகளைச் சுற்றியும் மீஎதார்த்த அதிசயச் சித்திரிப்புகளின் அ-தர்க்கத் தன்மைகளைச் சுற்றியுமே வளைய வருகிறது. கிறிஸ்தவம் சார்ந்த புரிதலுக்கு கிறிஸ்துவை வைத்துப் பின்னப்பட்ட ‘இஸத்தைக் கைவிட வேண்டும் என்பதையே பிரதான கதைவெளியாக நாவல் கட்டமைக்கிறது எனலாம்.
மீனவர்களின் கத்தோலிக்க அடையாளமும் அதன் பின்னணி அரசியலும்:
நம்மூரில் தம்மை அறிவுச் சமூகமாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், பிற சமூகங்களில் பிறந்த அறிவாளிகளையும் தங்களுக்குள் அடக்கிவிட அவ்வப்போது முனைவதுண்டு. வள்ளுவனின் தகப்பன் பகவன் பிராமணன் என்னும் கட்டுக்கதையை அதற்கான உதாரணமாகச் சொல்லலாம். அதேபோல், சாதாரண தச்சனின் மகனாகப் பிறந்த இயேசு கிறிஸ்து, முழுமையான மனிதனாய், அறிவுருவாய், தீர்க்க ஞானியாய் இருப்பதைத் தாங்கிக் கொள்ளாமலே அவரது பிறப்பு நிகழ்ச்சி அதிசயமாய்ச் சித்திரிக்கப்பட்டுள்ளது என்ற கோணத்தில் நாவல் முழுவதும் இயேசுவை ‘தச்சன் மகன்’ என்றே எழுதுகிறார். நிறுவனப்பட்ட கிறிஸ்தவ நம்பிக்கையின் வேரை அசைத்துப் பார்க்கும் அரசியல் சொல்லாக, ‘தச்சன் மகன்’ என்னும் பதம் இங்கு உருக்கொள்கிறது. அடங்காக் கடலை அடக்கியாளும் பரதவர்களால் தரையை அடக்கியாள முடியவில்லை என்ற இயலாமையையும், மீனவர்களின் அரசியல் அடையாளத்துவமற்ற எதார்த்தத்தையும் நாவலில் ஆசிரியர் பதிவு செய்கிறார். உழவைவிடப் பழமையான தொழில் மீன்பிடித் தொழில். ஆனாலும், போதிய பொருளாதாரம் இல்லாத வாழ்வு என்னும் இயல்பைக் காட்சிப்படுத்துகிறது நாவல்.
கத்தோலிக்க அமைப்பு கடற்புற மீனவர்களின் வழிபாட்டு மதமானதும், அதன் பின்னணியில் நடக்கும் அதிகாரங்களும், பாதிரியார்களும் அவர்களின் அரசியலும் பதிவு செய்யப்பட வேண்டியவை. எழுத்தாளர் சோ. தர்மன் தனது ‘பதிமூணாவது மையவாடி’ நாவலில் கிறிஸ்தவப் பாதிரியார்கள் தங்கள் துறவறச் சத்தியத்தை எங்ஙனம் எல்லை மீறுகின்றனர் என்பதைப் பிரதானப்படுத்தி எழுதியிருப்பார். ஜோ டி குருஸ், பாதிரிகளின் ஒழுக்கச் சீர்கேட்டுடன் அவர்களது நிர்வாகச் சீர்கேட்டையும் மீனவப் பின்னணியிலிருந்து அரசியல் தலைமை எழாமல் பார்த்துக் கொள்ளும் அவர்களது அதிகார மேட்டிமையையும் இதில் பதிவு செய்திருக்கிறார். கேள்விகளோடு வளரும் வாலிபனும் இளம் பாதிரியும் நிகழ்த்தும் உரையாடல் பகுதிகள் நாவலில் தவிர்க்க முடியாப் பக்கங்கள். இளம் பாதிரியிடம் வாலிபன், ‘கிறிஸ்து வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை என்கிறார்களே?’ என்று கேட்கிறான். அதற்கு பாதிரி, ‘ஆமாம் அவருடைய சமகாலத்தைய வரலாற்று எழுத்துகளில் அவரைப் பற்றிய பதிவுகள் இல்லை’ என்கிறார். பாதிரி கூறியதைப் போலவே கிரேக்கத்தில் கிறிஸ்துவின் சமகாலத்தவர் என்று சொல்லப்படும் ஸ்தோயிக்க (Stoic) ஞானியான செனேகாவின் எழுத்துகளில் கிறிஸ்துவைப் பற்றிய எவ்வித அசைவுகளும் இல்லை. இத்தேடுதலின் பின்னணியில் ஜோசப் இடமருகு எழுதிய, ‘கிறிஸ்துவும் கண்ணனும் கற்பனையே’ போன்ற நூல்களும் நம்மிடையே உலவுகின்றன. அதேபோல வேலு நாச்சியாரின் படையிலிருந்து ஆங்கிலேயப் படையை வீழ்த்த மனித குண்டாக மாறிய வீரப்பெண் குயிலி முழுக்க முழுக்கக் கற்பனையே என்று குருசாமி மயில்வாகனன் என்னும் ஆய்வாளர் தான் எழுதிய, ‘குயிலி உண்மையாக்கப்படுகின்ற பொய்’ நூல் வழியே நிறுவியது போலவே, கிறிஸ்து ஒரு புனைவே என்பதற்கும் வருங்காலத்தில் மேலும் அழுத்தமான ஆதாரம் கிடைக்கலாம் அல்லது கிறிஸ்து வாழ்ந்ததையே மறைத்து எல்லாம் புனைவு எனச் சந்தேகம் கொள்ளும்படியான அரசியல் நிகழ்வுகளும் அப்போது நடந்திருக்கலாம்.
கான்ஸ்டண்டைன் என்னும் அரசனது காலத்தில், அப்போது பரவலாக வளர்ந்திருந்த கிறிஸ்துவின் கோட்பாட்டைத் தழுவி வாழ்ந்த போதகர்களை அழைத்து அமைக்கப்பட்ட ‘நிஸியன் கவுன்சில்’ என்னும் அமைப்பு, எப்படிக் கத்தோலிக்கக் கிறிஸ்தவம் என்னும் அரச மதத்தை வடிவமைத்தது என்ற முக்கியமான அரசியல் கண்ணி இந்நூலில் துணுக்கைப் போல் பதிவுச் செய்யப்படுகிறது. அந்நிகழ்வு கிறிஸ்து என்னும் மகான் வாழ்ந்துள்ளார் என்பதற்கான சான்றாகக் கொள்ளவே அதிக இடம் தருகிறது. என்னவாயினும், கிறிஸ்துவின் போதனையான எளிமையைக் கைவிட்டுவிட்டு அதிகாரமும் கேலி வழிபாட்டு முறைகளுமே கத்தோலிக்க கிறிஸ்தவமாக மாறி நின்று கடலோடிகளின் மரபார்ந்த பண்பாட்டை விழுங்கியுள்ளது என்று அழுத்தமாகத் தெளிவிக்கிறது நாவல்.
தேவாலயத்தில் காணப்படும் பாதிரியார் பிரிவும் – ஊர்ப்பிரிவும் சாதிய அமைப்பின் பிரிவாகவுள்ளது. அதிகாரத்தைத் தக்க வைக்க விரும்பும் பாதிரியார் தரப்பினர், பாதிரியார் குற்றம் செய்யும்போது அவருக்காக ஊர்ப் பிரிவிடம் வ(ச)ழக்காடுகின்றனர். ‘என் தந்தையின் இல்லத்தை வியாபாரக் கூடமாக்கிவிட்டீர்களே’ என்று கண்டித்த கிறிஸ்துவை வழிபடுவர்கள் (அதிகார நேசர்கள்), கிறிஸ்துவின் கூடாரத்தையே கயவர் கூடமாக்கியுள்ளார்கள். கைபர் கணவாய் வழியாய் வந்த ஆரிய சனாதனிகளுக்கும் பிரிவினை பார்க்கும் பாதிரிமார்க்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்று காட்டமாக விமர்சிக்கிறார், நாவலாசிரியர்.
பிரதியில் ஊடாடும் கனவுகள்:
இந்தக் கதையை, சிறுவனாக, வாலிபனாக, முதிர்ந்தவனாக நடத்திச் செல்லும் ‘அவன்’ அவ்வப்போது கனவுகள் காண்கிறான். அவனது கனவில் குமரி ஆத்தாளும், சந்தன மாரியும், நாச்சியாளும் வருகிறார்கள். கடலோடிகளைக் காக்கும் காவல் தெய்வங்கள், தங்களது சனம் தங்களைக் கைவிட்டுவிட்டதை நினைத்து வருந்துகிறார்கள். ஆனாலும் அவர்களுக்குக் காவல் நிற்கிறோம் என்கிறார்கள். அம்மூதாய்களின் மடியில் கதைசொல்லி தாலாட்டப்படுகிறான். அத்தாய்களின் நூற்றாண்டு ஏக்கத்துக்கான மருந்தாய் அத்தாலாட்டைப் நாம் பார்க்க இடமுண்டு. அவனோடு கனவில் பிரபஞ்ச ஆன்மாவும், காலவோட்டத்தைக் கண்ட வேப்ப மரமும், வாடைக் காற்றும் பேசுகின்றன. அவ்வுரையாடல்கள் அனைத்தும் இந்நிலத்தையும் மக்களையும் அறியாமையையும் சகித்துக்கொண்டு நேசிக்கும் மறக்கப்பட்ட ஆதி தெய்வங்களை நினைவூட்டுவதாகவே உள்ளன. அதேபோல் விவிலிய தீர்க்கதரிசி மோசே பற்றிய கனவானது, இவனும் தன் இனத்தையும் அதன் தொன்மத்தையும் மீட்டுவிட மோசேயைப் போலவே தலைவனாக வேண்டும் என்பதன் குறியீடாக வருகிறது. மோசே பற்றிய அக்கனவே நூலின் அட்டைப் படமாகவும் (கடலுக்குள் எரியும் பச்சை மரம் – கடற்கரையில் முழுந்தாளிட்ட கடலாதி) தீட்டப்பட்டுள்ளது. கனவுகள் அவன் சமூகத்திற்கான வருங்காலக் குறியீடாக, மறைசெய்தியாக வருகின்றன. நாவலின் கவித்துவமான பகுதிகளெனக் கனவுகளைக் குறிப்பிடலாம்.
மரபியல் புத்தாக்கமும் விடுதலையும்:
மீனவர்களுக்கான பொருளாதார விடுதலையாக, அடிப்படை மீன் கொள்முதல் விலை நிர்ணயம், சந்தைப்படுத்தும் உரிமை, கடல்சார் தொழில்கள் போன்றவற்றைப் பேசும் நாவலாசிரியர், உளவியல் – மெய்யியல் விடுதலையாக மூத்தோரை வழிபடுதல் வேண்டும் என்கிறார். நாவலின் கதைசொல்லி முதிர்ந்தவனானதும் அவனுடைய பிள்ளைகளுக்குப் பள்ளிச் சேர்க்கையின்போது இடையூறு ஏற்படக்கூடாது என கத்தோலிக்க முறைப்படி திருமுழுக்குச் சடங்கு செய்து வைத்ததாகக் குறிப்பிடுகிறார். கடல்புரத்தில் கிறிஸ்தவம் ஆழமாக வேர்பாவித்துவிட்டதை உணர்ந்துகொண்டதாலே அதை முழுவதும் தகர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இல்லாமல், கத்தோலிக்கத்தில் தங்கள் இன மூதாதைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார். ஒருவேளை மூதாதை வழிபாட்டுக்கு முழுமையாகத் திரும்பிவிட்டால் இந்து மதச் சாதியக் கட்டமைப்பின் பிடியில் மேலும் ஆழமாய் மாட்டிக் கொள்ள நேரிடும் என்று அவர் யோசித்திருக்கலாம். கத்தோலிக்கக் கிறிஸ்தவம் ஓரிறைக் கொள்கை பிடிப்புள்ள சமயம் என்றாலும், புனிதர்களை வேண்டுதலின் போது நினைவுகூறத் தவறாத ஒன்று. கத்தோலிக்கம் சவேரியார், அசிசி, லயோலா போன்ற புனிதர்களைக் கவுரப்படுத்தி அங்கீகரிக்கும் போது நாச்சியாளையும், குமரியாத்தாளையும், சந்தன மாரியையும் நினைவுகூறல் வேண்டும் என்கிறார்.
இத்தகையத் தீர்வு கடும் விவாதங்களையும் எதிர்ப்பையும் கிளப்பும் என்றாலும் இதன் பின்னணியை உணர்ந்து வாசிப்பிலும் தேடுதலிலும் நுழையும் அடுத்த தலைமுறை நிச்சயம் தங்களது மூத்தோரை கத்தோலிக்க பாதிரிமார்கள், ‘சாத்தான்கள், பிசாசுகள்’ என்றழைக்க இடம் தராது. கத்தோலிக்கமும் ஒரு வகையில் வைதீகம் போல்தான். தன்னால் அளவுக்கு மீறி எதிர்க்கமுடியாததை அணைத்துக்கொண்டுவிடும். அத்தீர்வுக்கான பயணம் எளிதில் எட்டக்கூடியதல்ல என்பதால்தான் யாத்திரை என ஜோ டி குருஸ் நாவலுக்குப் பெயரிட்டுள்ளார் போல.
இந்து மதம் இந்தியாவிலுள்ள மற்ற அனைத்து பூர்வீக சமயங்களையும் தன்னகத்துள் அடக்கிவரும் ஒற்றைத் தன்மையை எதிர்த்து வரும் அறிவுலகம், தன் மூதாதையை வணங்குவதன் மூலமாக நிறுவன மதங்களின் இறுக்கத்தையும் அதிகாரத்தையும் மட்டுப்படுத்த முனையும் இந்தக் கடலாதியின் அவாவையும் விவாதிக்காமல் கடக்கக் கூடாது.

நூலின் பெயர்: யாத்திரை
விலை: ₹. 175
வகைமை: நாவல்
ஆசிரியர்: ஆர். என். ஜோ டி குருஸ்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்.
******