
போர்க்களத்தின் பூ
மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி
போது விரி பல் மரனுள்ளும் சிறந்த
காதல் நல் மரம் நீ; நிழற்றிசினே
கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;
காப்புடைப் புரிசை புக்கு மாறு அழித்தலின்,
ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை
பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே.
புறநானூறு: 272
பாடியவர்: மோசி சாத்தனார்
திணை: நொச்சி
துறை : செருவிடை வீழ்தல்
மலர் பூத்த மரத்திற்கான பாடல் இது. நொச்சி போருக்கான மலர். போரில் வென்றவர்களோ தோற்றவர்களோ சூடிய மலர் அல்ல. போருக்குச் செல்லும் போது போர்வீரர்களால் சூடப்பட்ட மலர். எனில், அது எத்தனைக்கு ப்ரியமான மலராக இருந்திருக்கக் கூடும்?
அதனால்தான் மோசிக்கிரனார், ‘காதல் நன்மரம் நீ..’ என்கிறார். இன்று தெய்வங்களும் பெண்களும் மலர்களை சூடிக்கொள்கிறார்கள். அன்று மலரானது ஆண்களுக்குமானதாக இருந்திருக்கிறது. போருக்கு செல்லக்கூடிய போர்வீரர்கள் ஒரு மலரை சூடுவார்கள் என்றால், மலர் என்பது அங்கு ஓர் அடையாளம். வென்றெழும் வேட்கையின், ஆற்றலின் மலர் நொச்சி எனக்கொள்ளலாம்.
இந்தப்பாடல் காட்டும் சித்திரத்தைப் பார்க்கலாம். கோட்டையைச் சுற்றிலும், வீடுகளைச் சுற்றிலும் காவல் மரமாக நொச்சி இருந்திருக்கிறது. வேலிமரம். கோட்டை அரண்களும், வீட்டின் அரண்களும் நொச்சி மரங்களால் ஆனவை. அந்த மரங்களில் கோர்க்கப்பட்ட மணிச்சரம் போன்ற மலர்கொத்துகள் மலர்ந்துள்ளன. வளையல்கள் அணிந்த கரங்களை உடைய பெண்களின் ஆடையாகவும் நொச்சிமலர் கொத்துகளும், இலைக்கொத்துகளும் இருந்திருக்கின்றன. ‘தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி’ என்றால் வளையல்களை அணிந்த பெண்களின் ஆடையாக இருக்கிறாய் என்று மோசிக்கீரனார் நொச்சியைப் பார்த்துக்கூறுகிறார். [அல்குல் என்பது அரைஞாண் கயிறு கட்டக்கூடிய இடம்]. மரத்தின் பாகங்களில் இருந்து ஆடை தயாரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது தழையாடையாக பயன்பட்டிருக்கலாம். வீட்டைச் சுற்றி இயல்பாக வேலி மரமாக வளர்க்கப்படக்கூடியது என்பதால் ஆடையாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பெண்களின் அரணாகவும், வீட்டிற்கான அரணாகவும், நாட்டிற்குமான அரணாக இருப்பதால் போர் செய்ய புறப்படுபவர்களுக்கும் அரணாக அவர்கள் தலையில் இருக்கக்கூடிய பெருமை உனக்கே உரியது என்று கவிஞர் சொல்கிறார். நொச்சியின் கிளைகள் இல்லாத குச்சிகளைகே கொண்டு படல்கள் பின்னி வீட்டிற்கு சுற்று மதிலாக வைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. ஆட்டுப்பட்டிகளுக்கான படல்கள் இப்படித்தான் அமைக்கப்படுகின்றன.
போர்க்களத்தில் ஒரு பூ அரணாகும் என்று நம்பும் வழக்கம் நமக்குள்ளது. மலர் எத்தனை மென்மையானது. போருக்கும் மலருக்கும் என்ன தொடர்பு? நமக்கு மலர்களுடனான தொடர்பு ஆதியில் இருந்து இன்றுவரை அறுபடாத ஒன்று. நாம் காலத்தால் எத்தனை எத்தனை விஷயங்களைக் கைவிட்ட பின்பும் நம் கைகளில் மலர்களுடனேயே வந்திருக்கிறோம். பல சமயங்களில் சொற்களின் பதிலியாக மலர்களே நமக்கு முன் நிற்கின்றன. நம் அன்றாடத்தில், விழாக்களில், மகிழ்ச்சியில், துக்கத்தில் உடனிருக்கின்றன. இறப்பு வீட்டில் ஒரு மலரை வைப்பதைவிட நம்மால் வேறென்ன பெரிதாய் சொல்லிவிட முடிகிறது? அதே தொடர்புதான்..! போர்வீரன் வாள் எடுக்கும் போது இணையாக ஒரு பூவையும் எடுக்கிறான். பாதுகாப்பிற்காக அணியும் ஆடைகளைப்போலவே ஒரு மலரை தன் தலையில் அணிகிறான். மலர் என்பது இங்கு போர் அடையாளம் என்பதிலிருந்து செயலிற்கான ஒன்றாக மாறுவதைக் காண்கிறோம். மதிலைத் தாக்கி அழிப்பதை ‘நொச்சித்திணை’ என்றே சங்க இலக்கியம் சொல்கிறது. முப்பது அடிவரை எளிதாக வளரக்கூடிய இம்மரங்களை உயிர்மதில்களாக வளர்ந்திருப்பார்கள். மேலும் கோட்டைகளுக்கு வெளியே வளர்த்து உருவாக்கப்படும் காவல் காடுகள் நொச்சிமரங்களால் ஆனவை என்ற குறிப்பும் உள்ளது.
‘நொச்சி மரமானாலும் வச்சிப்பாத்து வெட்டு’ என்ற பழமொழி இன்று வரை உள்ளது. இந்த பழமொழி பற்றி எனக்கு பலவித யோசனைகள் உண்டு. ஒரு நொச்சி மரம் எங்கள் வயலில் ஆற்றோரமாக வயல் மேட்டில் இருக்கிறது. நொச்சி எங்கும் அரணாகத்தான் நிற்கிறதோ என்று இப்போது தோன்றுகிறது. எந்த உறவையும் சட்டென்று நினைத்ததும் வெட்டிவிடக்கூடாது அல்லது எவ்வளவு எளிய பொருள் என்றாலும் அதை அழிக்கும் முன்பு யோசித்துச் செய்ய வேண்டும் என்ற அன்றாடப்பொருளில் இந்தப் பழமொழியை பயன்படுத்துகிறோம். காவலரண்களை மாற்றி அமைப்பதற்காக இந்த மரங்கள் அடிக்கடி வெட்டப்பட்டிருக்கலாம். சங்க காலத்தில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்ததால் காவலாக உள்ள நொச்சி வேலி அடிக்கடி அழிக்கப்பட்டிருக்கலாம். எளிதில் வெட்டக்கூடிய, மறுபடி வேலி அமைக்கும் அளவுக்கு எளிதில் வளரக்கூடிய ஒரு மரம். போரில் காவலே முதலில் அழிக்கப்படும் என்பதும் மாறாத நெறி. போர் வீரர்கள் வாள் எடுத்ததும் யோசிக்காமல் மதிலை அழிக்கும் வேகத்துடன் இருப்பார்கள். அதிலிருந்து இப்பழமொழி உருவாகியிருக்கலாம். போர்களுக்காக உருவான பழமொழியாகவும் இது இருக்கலாம். படையெடுத்தல் என்பதே எண்ணி எண்ணிச் செய்யவேண்டியது தானே. சங்ககாலத்தில் தமிழ்நிலத்தில் எத்தனை எத்தனை போர்கள்! அவற்றின் குறிப்புகளாக சங்கக்கவிதைகளே உள்ளன.
நொச்சியின் மலர்கள் நீலநிற கொத்துகளாக மலர்பவை. மிக அழகானவை. சங்கக் கவிதைகள் காதலை, போர்களை, வெற்றிகளை, தோல்விகளை, நடுகற்களை பாடுவதைப்போலவே இவை ஒவ்வொன்றுக்குமான பலவகையான பூக்களையும் சேர்த்தே சொல்கின்றன. அந்த வகையில் ‘காதல் நன் மரம்’ என்று ஒரு கவிஞன் போர்க்காலத்தில் நொச்சியைப் பாடி அம்மலரை காலத்திற்கும் மலர வைத்திருக்கிறான்.
கோர்த்த மணிச்சரம் போல
பூங்கொத்துகளை உடைய நொச்சியே,
மலரும் மரங்களில்
நீயே அன்பிற்குரிய மரம்.
அகன்ற நகரில்
கண்காணும் வரை நீயே பூத்திருக்கிறாய்.
வளைகரங்களை உடைய
பெண்களின் ஆடையானாய்.
கோட்டையின் காவலரண் ஆனாய்,
ஊரை பகைவரிடத்தில் விட்டுக்கொடுக்காமல் காக்கும் போர்வீரனின் தலையிலிருக்கும் உரிமையும் உன்னுடையதே.
(தொடரும்…)