‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ பார்க்க போகிறீர்களா…அப்படியானால் அவசியம் இதைப் படியுங்கள்!
ஜெ.வசந்தகுமார்

இன்று (நவ.1) திரைக்கு வெளியாகியுள்ள ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ திரைப்படத்தை பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறீர்களா…அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்கானது!
1980-களில் ஹாலிவுட் திரையுலகில் வெளியான ஆக்க்ஷன் திரைப்படங்களிலேயே முக்கியமான படமாக ஜேம்ஸ் கேமரூனின் ‘தி டெர்மினேட்டர்’ அமைந்தது. அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘டெர்மினேட்டர்-2: ஜட்ஜ்மன்ட் டே’ ஒரு மாஸ்டர்பீஸ் ஆக்க்ஷன் திரைப்படமாக வரலாற்றில் இடம்பிடித்தது. டெர்மினேட்டர் திரைப்படத் தொடரில் ‘டெர்மினேட்டர்-2’ படத்துக்கு பிறகு வெவ்வேறு தயாரிப்பாளர்கள், வெவ்வேறு இயக்குநர்கள் அதன் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கினார்கள். ஆனால் அவை யாவும் ஜேம்ஸ் கேமரூனின் முதலிரண்டு பாகங்கள் பெற்ற வரவேற்பில் பாதியைக் கூட பெறவில்லை. அந்த வகையில் பார்த்தால் ஜேம்ஸ் கேமரூன் கையில் இருந்த நாட்கள் தான் டெர்மினேட்டர் திரைப்படத் தொடரின் பொற்காலம் என்று சொல்லலாம்.
இந்தநிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு டெர்மினேட்டர் உரிமை மீண்டும் ஜேம்ஸ் கேமரூன் கைக்கு வந்து சேர்ந்தது. அதைத் தொடர்ந்து ‘டெர்மினேட்டர்-2’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ படத்தை ஜேம்ஸ் கேமரூன் தயாரித்துள்ளார். அதாவது, ‘டெர்மினேட்டர்-2’ படத்துக்கு பிறகு வெளியான டெர்மினேட்டர் படங்களின் கதைகள் மாற்று காலவரிசையில் நடைபெற்றதாக கருத வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே ‘டெர்மினேட்டர்-2’ திரைப்படத்தின் சம்பவங்களுக்கு பிறகு என்ன நடந்தது என்கிற தொடர்ச்சியாக இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. முதலிரண்டு டெர்மினேட்டர் பாகங்களில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்த அர்னால்டு மற்றும் லிண்டா ஹாமில்டன் ஆகியோர் 28 ஆண்டுகளுக்கு பிறகு T-800 மற்றும் சாரா கானர் என்று தத்தமது கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.
‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ படத்தில் இளம்வயது அர்னால்டு கதாபாத்திரத்துக்கு டூப் நடிகராக ப்ரெட் அசார் என்பவர் நடித்திருந்தார். அவரே இந்தப் படத்திலும் அர்னால்டின் இளம்வயது கதாபாத்திரத்திரமாக நடித்துக் கொடுத்திருக்கிறார். அவருடைய முகத்தை இளம்வயது அர்னால்டு மாதிரி கிராஃபிக்ஸ் மூலம் வடிவமைத்திருக்கிறார்கள். 1990-களில் நடக்கிற மாதிரியான ஃபிளாஷ்பேக் காட்சிகளின்போது இளம்வயது அர்னால்டு கதாபாத்திரம் இந்தப் படத்தில் வருமாம். இதேபோல, இளம்வயது சாரா கானர் கதாபாத்திரத்திற்காக ஜெஸ்சி ஃபிஷர் என்ற பெண் சண்டைக் கலைஞர் லிண்டா ஹாமில்டனுக்கு டூப் நடிகையாக நடித்துள்ளார். மேலும், டெர்மினேட்டர் கதாபாத்திரமாக கேப்ரியல் லூனா என்பவர் நடித்திருக்கிறார். கிரேஸ் எனும் சைபோர்க் வகை கதாபாத்திரத்தில் மெக்கின்ஸி டேவிஸ் மற்றும் நடாலியா ரீயிஸ் கதாபாத்திரத்தில் டேனி ரேமாஸ் ஆகிய நடிகைகள் நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமில்லாது இன்னும் சில புதிய கதாபாத்திரங்கள் ‘டார்க் ஃபேட்’ படத்தில் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் டெர்மினேட்டர் திரைப்படத் தொடருக்கு புத்துணர்ச்சி ஊட்டப்பட்டிருக்கிறது.
டெட்பூல் திரைப்படத்தை இயக்கிய டிம் மில்லர் ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ படத்தை இயக்கியுள்ளார். டேவிட் எஸ்.கோயர், ஜஸ்டின் ரோட்ஸ், சார்லஸ் எச்.இக்லீ, ஜோஷ் ஃபிரீட்மேன், ஜேம்ஸ் கேமரூன் ஆகியோர் இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளனர். மேலும் டேவிட் எஸ்.கோயர், ஜஸ்டின் ரோட்ஸ், பில்லி ரே ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். டெர்மினேட்டர் திரைப்படத் தொடரில் இது ஆறாவது திரைப்படம் ஆகும். ஜேம்ஸ் கேமரூனின் முதலிரண்டு டெர்மினேட்டர் திரைப்படங்களை போலவே இந்தப் படமும் தணிக்கையில் ‘R’ ரேட்டிங் பெற்றுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு நவம்பர் மாதம் முடிவடைந்தது. ஹங்கேரி, இங்கிலாந்து, ஸ்பெயின், மெக்சிகோ, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
கதாபாத்திரங்களை சரியாக வடிவமைக்கும் நோக்கில் ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜேம்ஸ் கேமரூன் அவ்வப்போது ஸ்க்ரிப்ட்டில் மாற்றங்களை புகுத்திக் கொண்டே இருப்பாராம். சிலசமயம், ஒரு காட்சியை படம்பிடிப்பதற்கு முந்தைய நாள் கூட திடீரென இயக்குநர் டிம் மில்லரை தொடர்பு கொண்டு ஜேம்ஸ் கேமரூன் மாற்றங்களை சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ஒருமுறை கூட ஜேம்ஸ் கேமரூன் செல்லவில்லையாம். ‘அவதார்-2’ படப்பிடிப்பில் அவர் மும்முரமாக இருந்ததாலும், டிம் மில்லரின் இயக்குநர் வேலைகளில் தன்னுடைய தலையீடு இருக்கக் கூடாது என்ற நோக்கிலும் ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ படப்பிடிப்பு தளத்திற்கு அவர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. ஜேம்ஸ் கேமரூன் மட்டுமல்ல…அர்னால்டும், லிண்டா ஹாமில்டனும் கூட அவ்வப்போது சில வசனங்களை படப்பிடிப்பின்போது திருத்தியிருக்கிறார்கள். இந்தப் படம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக, தகுதியான மாற்றங்களை எவர் கூறினாலும் டிம் மில்லரும் அவற்றை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜேம்ஸ் கேமரூன் இந்தப் படத்தின் ரஃப் கட்டை பார்த்தாராம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சில மாறுதல்களை டிம் மில்லருக்கு அவர் கூறியுள்ளார். ஒரு தயாரிப்பாளராக, கதை-திரைக்கதை எழுத்தாளராக மட்டுமில்லாமல் ஒரு படத்தொகுப்பாளராகவும் ஜேம்ஸ் கேமரூன் இந்தப் படத்துக்காக அதிகம் உழைத்திருக்கிறார். இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக், ஸ்கேன்லைன் வி.எஃப்.எக்ஸ், ப்ளர் ஸ்டுடியோ, டிஜிட்டல் டொமைன், மெதேட் ஸ்டுடியோஸ், யுனிட் இமேஜ், ரிபில்லியன் வி.எஃப்.எக்ஸ், தி தேர்ட் ஃப்ளோர் இன்க் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை செய்து கொடுத்திருக்கிறார்கள். மொத்தம் 2600 வி.எஃப்.எக்ஸ் ஷாட்டுகளை அடோப் பிரீமியர் ப்ரோ மற்றும் அடோப் ஆஃப்டர் எஃபெக்ட்ஸ் மென்பொருள்களை கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.
நவம்பர் 1-ஆம் தேதி இந்தியாவில் திரைக்கு வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை தென்அமெரிக்காவில் பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனமும், சீனாவில் டென்சென்ட் பிக்சர்ஸ் நிறுவனமும், மற்ற நாடுகளில் ஃபாக்ஸ் நிறுவனமும் விநியோகம் செய்திருக்கிறார்கள். 300: ரைஸ் ஆஃப் அன் எம்பயர், மேட்மேக்ஸ்: ஃப்யூரி ரோட், பாய்ண்ட் பிரேக், டெட்பூல் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த டாம் ஹோக்கன்பார்க் இந்தப் படத்துக்கு பின்னணிஇசை அமைத்துள்ளார். கென் செங் ஒளிப்பதிவாளராகவும், ஜூலியன் கிளார்க் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ், ஸ்கைடான்ஸ் மீடியா, ஃபாக்ஸ், டென்சென்ட் பிக்சர்ஸ், லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மன்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
பிரதானமாக டால்பி சரவுண்ட் 7.1 ஆடியோ தொழில்நுட்பத்தில் இந்தப் படத்தின் சவுண்ட் மிக்சிங் செய்யப்பட்டுள்ளது. ஆரி அலெக்ஸா எல்.எஃப் கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் நீளம் இரண்டு மணி நேரம் எட்டு நிமிடங்களாகும். இந்திய மதிப்பில் தோராயமாக சுமார் ரூ.1120 கோடி முதல் ரூ.1400 கோடி வரை இப்படத்தின் பட்ஜெட் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய முதலிரண்டு டெர்மினேட்டர் பாகங்களைப் போலவே ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ திரைப்படமும் உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்று, மாபெரும் வசூல் சாதனைகளை படைக்கும் என்று ஹாலிவுட் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை நீங்கள் பார்த்து விட்டீர்களா என்பதை பற்றியும்…இந்தப் படம் குறித்த உங்களது கருத்துக்களையும் கீழே பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்!