
“ஒரு மனிதனின் வாழ்வில் மிக உன்னதமான ஒன்று உண்டென்றால் அது இந்த வாழ்க்கையேதான்”, சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் வசனம் இது.
இந்த உன்னதமான வாழ்க்கையை முழுமைப்படுத்த, நமக்கு வாழ்வில் பெற்றோர் என்ற பதவி உயர்வு கொடுக்க இம்மண்ணில் தோன்றும் விழுதுகள், குழந்தைகள்.
மனிதனின் வாழ்வில், பிறப்பு, ஒருவரை சார்ந்திருத்தல்(depending others), சுயசார்பு பெறுதல்(being independent), சார்ந்திருப்போரைப் பேணுதல் (protecting dependents), அவர்களை இம்மண்ணில் சுயாதீனமாக்குதல்(promoting as independents), இறப்பு என இவ்வளவே உயிரினமாக நாம் செய்ய வேண்டிய கடமைகள். இது சுழற்சி முறையில் காலம் காலமாய் நடக்கும் ஒரு நிகழ்வு. இதற்குள் சமூகக் கட்டமைப்பு, கலாச்சாரம், பண்பாடு என சிக்கலான பின்னலில் மாட்டிக்கொண்டு துன்பப்படுகிறோம். இயற்கையாக நிகழக்கூடிய சம்பவமான குழந்தைப்பேறு தடைபடும் போது செயற்கையான அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு நமக்கு உள்ளது. அதிலும் இந்த கலாச்சாரம், பண்பாடு படுத்தும் பாடுதான் – தாராளப் பிரபு (படம்)
படம் – தாராள பிரபு (மறு-ஆக்கம்)
இயக்கம் – கிருஷ்ணா மாரிமுத்து (முதல் படம்)
வகை – ROM COM
நடிகர்கள் – விவேக், ஹரீஷ் கல்யான், தாண்யா ஹோப்
கதை – ஜூஹி சதுவேதி, கிருஷ்ணா மாரிமுத்து (தமிழில்)
மூலப்படைப்பு – விக்கி டோனர் (சூஜித் சிர்கார்)
கண்ணதாசன் (விவேக்) ஒரு மகப்பேறு மருத்துவராக உள்ளார். அவரிடத்தில் வரும் தம்பதிகள் குழந்தைப் பேறு பெற, ஒரு விந்தணு கொடையாளியை(sperm donor) தேடி அலைகிறார் மருத்துவர் கண்ணதாசன். அவர் பிரபுவை(ஹரீஷ் கல்யான்) விந்தணு கொடையாளியாக வரும்படி கேட்டுக் கொள்கிறார். அதற்கு இசைவு தெரிவிக்கும் பிரபுவின் வாழ்வில் நடக்கும் திருப்பங்களே மீதிக் கதை. இப்போது அமேசான் ப்ரைமில் படம் பார்க்கக் கிடைக்கிறது.
விவேக் என்னும் கலைஞன் இந்தப் படத்தின் கணத்தைத் தாங்கி உள்ளார். ஹரீஷ் கல்யான், தாண்யா தங்களது பங்கை சிறப்பாகச் செய்துள்ளனர்.
பிரபுவின் நிலையை கால் பந்தாட்டத்துடன் ஒப்பிட்டு சொல்லியிருக்கும் காட்சிகள் நன்றாக உள்ளது. மிகவும் சென்சிடிவான ஒரு கதைக் களத்தை எடுத்து காமெடியாக சொல்லியிருப்பது சிறப்பு.
“வெட்டி கௌரவம், ஆம்பளங்கிற வெட்டி கௌரவம், சைன்ஸ் எவ்வளவோ வளந்திருச்சி அனா நான்தான் வளரலல்ல”,
“நான் பண்ணது தப்பானு பாக்குறவங்க பார்வைலதான் இருக்கு, ஒரு டாக்டரா எனக்கு சரினு தான் தோனுது, ஆனா ஒரு வைஃப்-ஆ எப்படி எடுத்துப்பனு தெரியல”
இது போன்ற வசனங்கள் ஆங்காங்கே நம்மைக் கைகாட்டி கேள்வி கேட்கிறது.
குழந்தை காணாமல் போகும் காட்சியில் நம்மைப் பதற வைக்கிறார் இயக்குநர்.
2020-ல் எம்ப்ளாய்மெண்ட் அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைப்பதாக நான் கேள்விபட்டதில்லை.
குழந்தை இல்லாதவர்களுக்கு, தத்தெடுத்தல் என்பதும் ஒரு வழியாக பரிசீலனை செய்து பார்க்கலாம் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தத்தில் தமிழ் சினிமாவுக்கு இம்மாதிரியான கதைக்களங்கள் மிகவும் புதிது என்பதால் தாராளப் பிரபுவை தாராளமாக வரவேற்கலாம்.