மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதியின் “சங்ககால உணவு – மனித குல வரலாற்றில் பண்டைத் தமிழரின் உணவாதார வகிபாகங்கள்” குறுநூல் குறித்த வாசிப்பு அனுபவம் – செகுரா

நூல்: சங்ககால உணவு – மனித குல வரலாற்றில் பண்டைத் தமிழரின் உணவாதார வகிபாகங்கள்
ஆசிரியர் : மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதியின்
கி.பி. 21 நூற்றாண்டின் ஒரு நெருக்கடியான சூழலில் மனித குலம் சிக்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் என்கிற பெரும் கொள்ளை நோயால் மனிதனின் இயக்கங்கள் முடங்கி விட்டன. அவன் இயங்குவதற்கான தளங்கள் சுருங்கி விட்டன. பொருளதாரம் மந்தமாகி விட்டது. உற்பத்தி இல்லாமல் நாளுக்கு நாள் அவனின் உணவு ஆதாரங்கள் குறைந்து வரும் சூழல் உருவாகி வருகின்றது. உலகளாவிய உணவுகளை உண்டு களித்த தமிழ் மக்கள், அவர்களுக்கென்று ஒரு பாரம்பாரியமான உணவுக் கலச்சாரம் இருக்கிறது என்பதை மறந்து நோயில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
இப்படி ஒரு சூழலில், மனித குல வரலாற்றில் பண்டைத் தமிழரின் உணவாதாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி குறுநூல் வடிவில் மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி எழுதியுள்ளார். இது ஒரு ஆராய்ச்சி நூல். கிட்டதட்ட 15 நூல்கள்/கட்டுரைகளை நெறித்துணை நூல்களாகக் கொண்டு இந்நூலை இயற்றியுள்ளார்.
நாம் இன்றைக்கு இருக்கிற நுகர்வு கலாச்சாரத்திற்கு வருவதற்கு முன்னாடி பல படிநிலைகளைக் கடந்துதான் வந்திருக்கிறோம். அந்தப் படி நிலையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் , பாலை என சங்க காலத்திலிருந்தே தமிழர் வாழ்க்கைமுறை ஐந்திணைகளில் அடங்கியிருந்தது.
ஆரம்ப காலத்தில இயற்கையை சார்ந்துதான், நம் உணவு முறைகள் இருந்தன. அதாவது இயற்கை கொடுத்த மிச்ச மீதியைத்தான் மனிதன் சேகரித்து வந்து தன் குழுக்களுக்குள் அதைப் பங்கிட்டுக் கொண்டான். குறிஞ்சித் திணையில் ஆண் குழுவாகப் போய் வேட்டையாடுவான். பெண்கள் குழுவாகப் போய் காட்டில் இருக்கும் பொருள்களை சேகரிப்பார்கள். வேட்டையாடிய, சேகரித்த உணவுகளைத் தங்கள் குழுக்களுக்குள் பங்கிட்டுக் கொள்வார்கள்.
“………இத்தகைய இனக்குழு வாழ்வில் ‘உறவுமுறை சார்ந்த உற்பத்தி’ (kin based production) முறை காணப்பட்டது. உறவுமுறை சார்ந்த உழைப்பில் ‘பாதீடு’ அடிப்படையானது. ஈட்டிய உணவாதாரத்தைப் பொதுவில் பங்கிட்டுக் கொண்டதே பாதீடு. இது ஆதி பொதுவுடைமை (Primitive communism) சார்ந்தது. சமூக சமத்துவம் (egalitarianism) இதன் ஆதார சுருதியாகும். பண்டைய குறிஞ்சி நில வாழ்வில் இந்த அனைத்து கூறுகளையும் காண முடிகிறது…..”
(நூலிலிருந்து)
குறிஞ்சி நிலத்தைப் பொறுத்த வகையில், வேட்டையாடிய உணவு, சேகரித்த உணவு, வன்புல வேளாண் உணவு என அவர்களின் உணவாதாராங்கள் இருந்தது. பண்டைத் தமிழரின் மலை சார்ந்த குறிஞ்சிப் பொருளாதாரம் ஒரு கலப்புப் பொருளாதாரமாக (mixed economy) பரிணமித்தது என்று நூலாசிரியர் சொல்கிறார்.
குறிஞ்சி மக்கள் உணவில் பிரியாணி , வெஜிடபிள் பிரியாணி, பார்பிக்கூ (barbeque) ஆகியவை இருந்தன என்பதை சங்க கால பாடல்களின் சான்றுகளுடன் சொல்கிறார்.
“எயிற்றியர் ‘அட்ட வாடூண் புழுக்கல்’ (பிரியாணி) சமைத்தனர் (பெரும்பாண்.100)
இறைச்சியைச் சுட்டுக்கொலில் கோர்த்துத் தீயில் சுட்டு உண்டனர் (பொருநர். 103-108)
குறிஞ்சித் திணை மக்கள் வரகரிசியும் அவரையும் சேர்த்து ‘அவரை வான் புழுக்கு’ வெஜிடபிள் பிரியாணி) சமைத்துண்டனர் (பெரும்பாண்.195)
(நூலிலிருந்து)
முல்லைத் திணையில் கால்நடைகள் மூலமாகக் கிடைக்கிற உணவு தான் , அவங்களுக்க முதன்மையான உணவாக இருந்தது . ஆடு , மாடு மேய்த்து அதிலிருந்து பால் கறந்து, அதைத் தயிராக்கி, வெண்ணெயாக்கி, நெய்யாக்கி தன் உணவு உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டார்கள். தயாரித்த பால்பொருட்களை மற்ற குடியினருக்குக் கொடுத்து பண்டமாற்றமாக நெல், பொன், பசு, எருமை, உப்பு எனப் பொருள்களைப் பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறு கால்நடைகள் தரும் உணவு, பண்டமாற்றம் தரும் உணவு , வன்புல வேளாண்மை உணவு முல்லைத்திணை மக்களின் உணவாதாரங்களாக இருந்தது.
‘பாலுடை அடிசில்’ , ‘ஊன்துவை அடிசில்’ , மூங்கில் அரிசி சோறும் அவரைக்காய்ப் புளிக்குழம்பும் , மோர்குழம்பும் மாதுளைக் கறியும் முல்லைத்u திணை மக்கள் விரும்பி உண்ட அடிசில் வகைகளாகும்.
“ முல்லை மக்களின் விருப்பமான உணவு வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய ‘ஊன்துவை அடிசில்’ எனக்கூடிய கறிசோறு (பிரியாணி) ஆகும். அத்தோடு திணை மாவையும் தின்றனர் (பெரும்பாண். 470- 476)”
(நூலிலிருந்து)
நெய்தல் திணையில் மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், மீன் கருவாடு விற்றல், கடல்வழி வணிகம், கலங்கள் கட்டுதல் என அவர்களின் பொருளாதார அடித்தளம் இருந்தது. மற்ற திணையிலிருந்து இவர்களின் வாழ்வதாரம் வேறுபட்டு இருந்தது. சேகரித்தல், உற்பத்தி, பண்ட மாற்றம், வணிகம் ஆகிய நான்கு முக்கிய கூறுகள் இவர்களின் வாழ்வாதாரத்திற்கும் , உணவாதாரத்திற்கும் முக்கியமாக இருந்தது.
நெய்தலில் அடிசில் வகைகள் பெரிதும் மீன் பண்டங்களைச் சார்ந்ததாகும்
“விடியற் காலையிலேயே அகன்ற ஆம்பல் இலையில் திரளையான வெஞ்சோற்றினை (சூடான சோறு) இட்டு, புளிப்பான பழத்தைப் பெய்து ஆக்கிய புளிக்கறியுடன் உண்டனர்(அகம்.196)
“பண்டமாற்றம் செய்து வாங்கி வந்த நெல் அரிசியில் வெண்சோறு சமைத்து, சுவைமிகுந்த புளியங் கறியைச் சேர்த்து செய்த அயிரை மீன் குழம்பையும் , கொழுமீன் கருவாட்டையும் தன் தந்தைக்குச் சமைத்துக் கொடுத்தாள் ஓர் இளமகள் (அகம்.60; குறுந் 178:1)”
(நூலிலிருந்து)
மருதத் திணை நீர்ப்பாசன வேளாண்மை சார்ந்தது. அவர்கள் வாழ்வாதாரமும் உணவாதாரமும் வேளாண் உணவு, சந்தை உணவு, குடி ஊழியப்பரிமாற்றம் (தொழில்களை பரிமாறிக் கொள்ளுதல்) சார்ந்திருந்தது.
“மருதத் திணையில் செந்நெல் சோறு சிறப்பான உணவு. இந்த நெல் சோறு மற்ற திணைகளில் இல்லாத ஒன்று”
(நூலிலிருந்து)
மருதத் திணையைப் பொறுத்தவரை உற்பத்தி அதிகமாகி , உபரியும் அதிகரித்தது. வேளாண்மை , வணிகம், கைவினைப் பொருட்கள் செய்யும் கலைகள் போன்ற அதிக தொழில்கள் இந்தத் திணையில் காணப்பட்டன.
இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு வல்லுநர் இருப்பது போல, மருதத் திணையில் தொழில் சார்ந்த வல்லுநர்கள் இருந்தனர். அவர்கள் ‘குடி ஊழிய முறை’ யில் (jajmani system) வேலைகளைப் பரிமாற்றிக் கொண்டனர். எடுத்துக்காட்டுக்கு, எனக்கு ஒரு வேலை தெரியும் அதை நான் உங்களுக்கு செய்வேன். என்னால் செய்ய முடியாத வேலை உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் எனக்கு அந்த வேலையை செய்யலாம்.
மருத நிலத்தின் உணவு அறுசுவைகள் நிரம்பியது.
“வயலில் கிடைக்கும் வள்ளைக் கீரையும் பாகற்காயையும் சமைத்தனர் (புறம்.399)’
வறுமை தாண்டவமாடும்போது குப்பைக் கீரையை உப்பிட்டுச் சமைக்க வழியில்லாமல் பச்சையாக உண்டனர். இதனைப் பாசடகு என்றனர். கீரையை ‘அடகு’, இலைக்கறி என்று அழைத்தனர். கைம்பெண்கள் இத்தகைய உணவை உண்டனர் (புறம். 140, 159,197,218)
குறிஞ்சியும் முல்லையும் கோடையில் திரிவதால் பாலை தோன்றுகிறது. வேட்டையாடுதல், கொள்ளையடித்தல், சேகரித்தல் ஆகியவை பாலைத்திணை மக்களின் வாழ்வதாரமாகவும் , உணவாதாரமாகவும் இருந்தது. பாலைத் திணையில் வழிப்பறி செய்வது, கொள்ளையடிப்பதைப் போரின் எச்சமாக ஆசிரியர் சொல்கிறார். ஒரு குழு அல்லது நாடு மீது போர் தொடுத்து வெற்றி கொண்ட பின்னர், அந்த நாட்டை அழிப்பது, கொள்ளையடிப்பது மரபு. அதுபோல், பாலைத் திணையில் போர் இல்லாத சூழலில் மக்கள் கொள்ளையடித்தலிலும் , ஆநிரை கவர்தலிலும் ஈடுப்பட்டனர்.
பாலைத் திணையில் “ எயினர் எனப்படும் இனக்குழுவினர் வில், அம்பு கொண்டு உடும்பு, முயல், கணமா , முளவுமா முதலான பல்வேறு விலங்குகளை வேட்டையாடி உண்டனர்.”
என்று அவர்கள் உணவதாரத்தை ஆசிரியர் சொல்கிறார்.
மேலும் பண்டைத் தமிழர்கள் இன்று காபி, தேநீர் குடிப்பது போல் மதுவை குடித்தனர். அது எல்லாராலும் விரும்பி குடிக்கப்பட்டது. 12 வகையான மது பானங்கள் குடிக்கும் வழக்கம் உணவின் ஒரு பகுதியாக இருந்தது என்றும், ஆண், பெண் இருபாலரும் விரும்பிக் குடித்தனர் என்றும் இருக்கும் செய்திகள் மூலம் சங்க காலத்தில் உணவு கொள்வதில் ஆண் பெண் சமத்துவம் இருந்தது என்பது புலப்படுகிறது.
இவ்வாறு ஐந்திணைகளில் பண்டைத் தமிழரின் உணவாதார வகிபாகங்களை மானிடவியல் பார்வையில் ஆசிரியார் விளக்கியிருக்கிறார். தமிழரின் பழக்கவழக்கம் எல்லாமே தனித்துவம் நிறைந்தது, முழுமையானது, பண்பாட்டு சூழலியல் சார்ந்தது. தமிழில் தமிழரின் பொருளாதாரம், உணவு, பழக்க வழக்கம், வாழ்வியல் கூறுகள் சங்க இலக்கியத்தில் மிகுந்து காணப்படுவதை அறிந்து கொள்ள இக்குறுநூல் மிகவும் உதவியாக இருக்கும். மேலும், இதைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்வதற்கு இது ஒரு ஆரம்ப நூலாக அமையும்.
குறிப்பு: அடிசில் சோறு – boiled rice