
“நான் சத்யவேணியைப் பாக்கப் போறேன்’’
“ஏ…வேணாம்டி… அவ ஒரு அரலூசு. நம்ம சீனியரைக் கூட கடிச்சு வச்சிருக்கா. இதெல்லாம் உனக்கே தெரியும். தெரிஞ்சும் அவளப் பாக்குறதெல்லாம் ரிஸ்க்குதான்.’’
“ என்ன ஆனாலும் பரவால்லடி. நான் பாக்கணும். நோ அதர் சாய்ஸ்’’
அர்ச்சனா தன் தோழியிடம் போனில் பேசிக்கொண்டிருந்த உரையாடலை நிறுத்திவிட்டு சத்யவேணியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு காலத்தில் ஊரையே திரும்பிப் பார்க்க வைத்தவள். “அழகு ராட்சஷி, மதுவில் ஊற வைத்து உருட்டிச் செய்த கண்கள், ஆப்பிளை அரைத்துச் செய்த கன்னங்கள், பேரீச்சையைக் குழைத்து வடித்த உதடுகள்…” என்றெல்லாம் அவளை வர்ணித்து உருவான பாடல்கள் ஏராளம். அவளது முகத்தின் பாகங்களை விளக்குவதெல்லாம் சைவக் கணக்கில் சேர்ந்துவிடும். அசைவக் கணக்கென்பது அவள் உள்ளங்கால் முதல் கழுத்துவரைக்கும். பாடல் வரிகளுக்காகவே உடலைச் செதுக்கிக் கொண்டவளா இல்லை, செதுக்கிய சிலைக்குத்தான் இவர்கள் எழுதிக் கொண்டார்களா என குழம்பச் செய்யும் கிராதகியின் பெயர்தான் சத்யவேணி.
துப்பட்டா காற்றில் பறக்காதபடிக்கு பின்பக்கமாக முடிச்சுப் போட்டுக் கொள்கிறாள் அர்ச்சனா. ஒரு நோட்பேட், பேனா, செல்போன், சிறிய பாட்டிலில் தண்ணீர் என இரண்டு மணி நேரத்துக்குத் தேவையான உபகரணங்களை தன் ஹேண்டுபேக்கில் போட்டுக் கொண்டாள். வாசலில் நிறுத்தியிருந்த தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்துகொண்டாள். அர்ச்சனா இப்போது சத்யவேணியின் வீட்டுக்குத்தான் போகிறாள்.
“சத்யவேணி நம்மையும் கடிச்சு வச்சிட்டா என்ன செய்றது? எதுக்கும் ஃபர்ஸ்டு எய்டு பாக்ஸை சேஃப்டிக்காக கொண்டு வந்திருக்கலாமோ? அதைவிட முக்கியம் அவகிட்ட இருந்து தப்பிக்கணுமே… பேசாம ஜாமெண்ட்ரி பாக்ஸ்ல காம்பஸை வச்சு எடுத்துட்டு வந்திருக்கலாமோ? எதுக்கும் அங்க போன பிறகு கரெண்ட் லோகேஷனை குரூப்ல ஷேர் பண்ணிவிட்ருவோம். 2 மணி நேரத்துல நான் திரும்பி வரலைனா என்னை தேடி வரச் சொல்லலாம். என்ன இருந்தாலும் வீட்ல அப்பா அம்மாவுக்கு தெரியாம அவளைப் பாக்கப் போறேன். மது சொன்னா மாதிரி ஏதாச்சும் ரிஸ்க் ஆச்சுனா பாவம் அவங்க. ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க’’ அர்ச்சனாவால் நிம்மதியாக வண்டி ஓட்ட முடியவில்லை. சிறிது தூரம் சென்றதும் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினாள். இப்போதைக்கு காம்பஸோ, ஃபஸ்ட் எய்ட் பாக்ஸோ கொண்டு வரவில்லை. கையில் இருக்கும் ஒரே ஆயுதம் மொபைல் போன் மட்டும்தான்.
“நான் சத்யவேணியைப் பாக்கப் போறேன். இன்னும் கொஞ்சம் நேரத்துல நான் ஒரு கரண்ட் லோகேஷன் ஷேர் பண்ணுவேன். அதுக்கப்புறம் 2 மணி நேரம் கழிச்சு நான் குரூப்ல மேசேஜ் எதுவும் பண்ணாட்டி அந்த லோகேஷன் வந்துடுங்க ப்ளீஸ்…’’ – தன் நண்பர்களின் க்ரூப்பில் மேசேஜைத் தட்டிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.
வழியெல்லாம் பயத்தின் கோடுகள் வரையப்பட்டிருந்தன. அவை கானல் நீர் போல் தோன்றி கண்களில் குத்துவதுபோலவே இருந்தது. நீச்சல் தெரிந்தாலும் நடுக்கடலில் மூழ்கப்போகும் கப்பலைப் பார்த்து பயப்படாமலா இருக்க முடியும்? இருந்தாலும் இது, தானே தேடிக்கொண்ட பயணம்தானே. சத்யவேணி அப்படி ஒன்றும் கருணையில்லாதவளாகவா இருக்கப் போகிறாள்? அவள் ஏதாவது செய்யத் துணிந்தால் முதலில் மிரட்டிப் பார்க்கலாம். இல்லாவிட்டால் கூச்சமே இல்லாமல் அவள் காலில் விழுந்து அழுதுவிட வேண்டியதுதான். நமக்கு இது தேவையா என்றால் தேவைதான். இந்த வயதில் இதையெல்லாம் செய்யாமல் இன்னும் ஏழுகழுதை வயதான பிறகா இதையெல்லாம் செய்யப் போகிறோம்? அர்ச்சனாவின் முகத்தில் அட்ச ரேகை தீர்க்க ரேகை என அவ்வளவு ரேகைகளும் பயத்தின் கோடுகளாய்ப் படர்ந்திருந்தன.
அவள் தன் துப்பட்டாவால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள். வண்டியை சடார் என ப்ரேக் போடுகிறாள். இன்னும் 2 நிமிடங்களில் சத்யவேணியின் வீடு இருப்பதாக கூகுள் மேப் சொல்கிறது. `நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி ஊசி போடுவார்களே… இவளும் அப்படி ஏதாவது பன்ணிட்டா பாவம்ல இந்த தொப்புள்.’ தன் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டே தொப்புளைத் தடவிக்கொள்கிறாள். வண்டியின் சைட் மிர்ரரில் முகத்தைப் பார்த்துக் கொள்கிறாள். அதில் இருந்த நம்பிக்கையின் கோடுகள் அவளை மீண்டும் துரத்துகிறது. 2 வது நிமிடத்தின் முடிவில் காட்டிய அந்த வீட்டைப் பார்க்கிறாள். மிகச் சுமாரான வீடுதான். வாடகை என்றால் கூட அந்த வீட்டுக்கு சென்னையின் மதிப்பீட்டில் பத்தாயிரமே அதிகமாகத்தான் இருக்கும். காலிங் பெல்லை அழுத்துவதற்கு முன்பாக குரூப்பில் கரண்ட் லோகேஷனை ஷேர் செய்கிறாள்.
`பத்திரம்’, ‘பீ சேஃப்’, ‘ நாங்க இருக்கோம் பயப்படாத’ என்றெல்லாம் குவியும் குரூப் மெசேஜ்களை மியூட் செய்துவிட்டு மீண்டும் ஒருமுறை காலிங்பெல்லை அழுத்துகிறாள்.
நைட்டி போட்ட பெண் ஒருத்தி கதவைத் திறக்கிறாள். ‘என்ன’ என்பது போல் ஒரு பார்வை.
“ சத்யா மேம்… பாக்க வர சொல்லி இருந்தாங்க’’
`உள்ள வா’ என்பது போல் ஒரு ஜாடை காட்டிவிட்டு நைட்டிப் பெண் உள்ளே போகிறாள். ஹாலில் நின்று பார்த்தவரையில் மூன்று ஸ்கீரின்கள் தெரிந்தன. சமையலறை,படுக்கையறை போக மீதம் இருப்பது இன்னொரு படுக்கையறை அல்லது பூஜை அறையாக இருக்கலாம் எனத் தீர்மானித்து வைத்திருந்தாள்.
வீட்டின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது அவையெல்லாம் பெட்டிப்பெட்டியான சிறிய அறைகளாகத்தான் இருக்க முடியும். ஹாலில் ஒரு சோபாவும் கண்ணாடி பொருத்திய சிறிய மூங்கில் டீப்பாய் ஒன்றும் இருந்தது.ஹேஷ் ட்ரே, லைட்டர், தூவிவிட்டாற்போல் கிடந்த சிகரெட் சாம்பல் என ஒழுங்கின்மையைக் கொண்டிருந்தது அந்த டீப்பாய். சிகரெட் புகையும் விஸ்கியும் சேர்ந்தது போல் கலவையான ஒரு வாடையைக் கொண்டிருந்தது அந்த வீட்டின் ஹால். சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே சென்ற நைட்டிப் பெண் மீண்டும் வெளியே வந்தாள். `உட்காரு ‘ என்பது அவளுடைய ஜாடையாக இருந்தது. எதுவும் பேசாமல் உட்கார்ந்து கொண்டாள் அர்ச்சனா. ஒரு டிவி , ஏசி, ஃபிரிட்ஜ் போக சத்யவேணியின் ஆளுயர ஓவியம் தாங்கிய போட்டோ ஒன்றும் அங்கு இருந்தது. இப்போதைக்கு அந்த ஹாலில் இருந்துகொண்டு ரசித்துப் பார்ப்பதற்கு அந்த போட்டோ மட்டுமே பெரிய தீனியாக இருந்தது. ப்பா என்ன கண்கள்?ஓடிப்போய் இடுப்பைக் கிள்ளிவிட்டு வரலாம்போல தத்ரூபமாக இருந்தது ஓவியம். செக்ஸி என்கிற வார்த்தைக்கு வேறு பெயர்கள் எதுவும் இனி வைக்கவே கூடாது. எப்போதும் அதன் பெயர் சத்யவேணிதான். “அடச்சே… என்ன இது இவங்களைப் போய் இப்படி வச்சக்கண்ணு வாங்காம பாத்துட்டு இருக்கேன்….” தன்னைத் தானே சிலுப்பிக் கொண்டாள் அர்ச்சனா.
உள்ளிருந்து ஓர் உருவம் வருவதுபோல் அதிர்வுகள் தெரிகிறது. வாரக்கணக்கில் வெட்டாத கால் நகங்கள். அடர்த்தியாய் ரோமம் முளைத்த கால்கள் இரண்டும் நடந்து வருகின்றன. ஷாட்ஸும் லோ நெக் பனியனுமாய் சோபாவை நோக்கி நடந்துவந்த பெண்ணைப் பார்த்தால் சத்யவேணிக்கு அக்காள் மாதிரி தெரிந்தது. எதற்கும் எழுந்துகொள்ளலாம் என்று நினைத்து சோபாவைவிட்டு எழுந்து ‘ஹாய் மேம்’ என்கிறாள் .
“நீ தான் அர்ச்சனாவா?’’
“ம்ம்ம்ம்… ஆமா மேம்’’ கண்கள் மட்டும் வேறு யாரையோ தேடிக் கொண்டிருப்பதைப் போல் பதில் சொல்கிறாள்.
“ஆமா… எதுக்கு என்னை பாக்கணும்னு அடம் பிடிச்சிட்டே இருக்கே’’ அந்த குரலில் ஒரு மிரட்டல் இருந்தது.
தொண்டைக்குழி அடைத்துக் கொள்கிறது. கண்கள் குவியாடியையும் குழியாடியையும் மாற்றிமாற்றி அணிந்ததுபோல் தலைசுற்றி வருகிறது.
`என்னது இவங்கதான் சத்யவேணியா?’ அதிர்ச்சியாகிறாள் அர்ச்சனா. சற்றுமுன் ஓவியத்தில் பார்த்த என் ரசனைக்குரிய தேவதைப்பெண் இப்படி பெருத்துக்கிடக்கிறாளே என்பதாக அதிர்ச்சி ஒருபுறம் முட்டுகிறது. சத்யவேணி பேசும்போது தெரிந்த அந்த கறைபடிந்த பற்கள்தானே சீனியரைக் கடித்து வைத்தது என்று நினைக்கும்போது பயமும் முட்டுகிறது. இப்போதைக்கு வெளியில் காட்டிக்கொள்ள வேண்டாமென முடிவெடுக்கிறாள்.
“அத்… அத்… அதான் உங்ககிட்ட சொன்னேனே மேம்… நான் ஜர்னலிஸம் ஃபைனல் இயர் ஸ்டூடண்ட். என்னோட காலேஜ்ல இதுவரைக்கும் யாருமே பண்ணாத ,பண்ண முடியாத ஒரு வித்தியாசமான அசைன்மெண்ட் பண்ணனும்னு எனக்கு ஆசை. அப்பதான் உங்களைப் பத்தி ப்ரெண்ட்ஸ் சொல்லி கேள்விப்பட்டேன். நீங்க இப்ப ஒரு பத்து பதினஞ்சு வருஷமாவே யாருக்கும் இண்டர்வியூ தரதில்லன்னு தெரிஞ்சிக்கிடேன். அதான்… உங்ககிட்ட பேசலாம்னு ….’’
“ஓஹோ…. யார் மூஞ்சயும் பாத்துட்டா எனக்கென்ன சோறுபோட போறாங்களா? கம்மனாட்டிப் பசங்க’’
அடுத்துவரும் வார்த்தைகள் எவ்வளவு உக்கிரமாக இருக்கப் போகிறதென தெரியவில்லை. மேற்கொண்டு என்ன பேசுவதென்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே நைட்டிப் பெண் வந்து நிற்கிறாள். ஒரு சிகரெட் பாக்கெட்டை டீப்பாயின் மீது வைத்துவிட்டு ஹாலின் கதவை அடைத்துவிட்டு ஏசியை ஆன் செய்கிறாள். புகைப்படிந்த ஏசி தன் நாக்கைத் தள்ளிக்கொண்டு காற்றை உமிழ்கிறது. அதுவரை ஹாலில் ஓடிக்கொண்டிருந்த ஃபேனை ஆஃப் செய்துவிட்டு மறுபடியும் உள்ளே போகிறாள் நைட்டி பெண்.
`இதென்னடா சோதனை. கதவை வேற பூட்டிட்டாங்களே… எதாச்சும் ஒன்னுகெடக்க ஒன்னு ஆயிடுச்சுனா… எப்படி தப்பிக்கிறது?’ மனம் முழுக்கவும் பீதி கிளம்புகிறது அர்ச்சனாவுக்கு. சிகரெட் பாக்கெட்டை முன்னும் பின்னுமாகத் தட்டிவிட்டு அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டதோடு, நைட்டிப் பெண்ணை அழைக்கிறாள் சத்யவேணி.
“ஏ… மஞ்சு … இப்பயே மிக்ஸ் பண்ணாத… நான் சொல்லறப்போ பண்ணிக்கலாம்… கொண்டுவந்து வச்சிரு’’ என்றதும் நைட்டிப் பெண் வேகமாக ஓடிவந்து `சரி’ என்பது போல் தலையாட்டிவிட்டுப் போகிறாள்.
பற்ற வைத்த சிகரெட்டை தன் விரல்களிடையே பிடித்துக்கொண்டு உறிஞ்சி உறிஞ்சி புகையை வெளியே தள்ள, ஏசி காற்றில் ஹாலெல்லாம் புகையின் வாடை.
மூக்கைப் பொத்திக் கொள்ளலாம் போல் இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் பேசுவதுதான் இப்போதைக்கு சரியாக இருக்குமென நினைத்துக் கொள்கிறாள். ஏதோ பேச வாயெடுத்துப்பின் மௌனமாக சத்யவேணியைப் பார்க்கிறாள்.
“கையில என்ன செல்போனா? ஆஃப் பண்ணி கீழ வச்சிரு. அப்புறம் இந்த பென் கேமரா அது இதுன்னு எதையாவது ஒளிச்சு வச்சிருந்தனா அதையும் எடுத்து வச்சிரு. ஹேண்ட் பேகையும் தொறந்து காட்டிரு… சரியா?’’ – சிகரெட் புகையினூடே சரசரவென விசாரணைகளும் ஆரம்பித்தன.
“ கேமரா எதுவும் இல்ல. ஹேண்ட் பேக் செக் பண்ணிக்கோங்க’’ என்று சொல்லிவிட்டு போனை ஸ்விட் ஆஃப் செய்துவிட்டு டீப்பாயின் மீது வைக்கிறாள் அர்ச்சனா.
சரி, சரி உட்கார் என்பதுபோல் கண்களால் ஜாடை செய்து அர்ச்சனாவை அமரச் சொல்கிறாள். அறையெங்கும் கரிய சுவாலைகள். கார்பன் படுத்தும்பாட்டில் மூச்சுத் திணறுவதுபோல் இருக்கிறது. சமாளித்து அமர்ந்துகொள்கிறாள்.
“மேம்… ஒரு சின்ன ரெக்வெக்ஸ்ட். நீங்க சொன்ன மாதிரி நான் போன்ல வீடியோவோ, வாய்ஸ் ரெக்கார்டிங்கோ எதுவுமே பண்ண மாட்டேன்… ஆனா உங்களை மீட் பண்ணிட்டுப் போனதுக்கு அடையாளமா கடைசியா உங்க கூட நின்னு ஒரே ஒரு செல்பி மட்டும் எடுத்துக்கலாமா?’’
“ம்ம்ம்… சொல்றேன்… சொல்றேன்’’
“அப்புறம்… மேம்’’
“வேறென்ன?’’
“நான் நோட்பேட் கொண்டு வந்திருக்கேன்… அட்லீஸ்ட் நோட்ஸ் எடுத்துக்கலாமா?’’
“இங்கபாரு ஏதோ படிக்கிற புள்ளையாச்சே… அதுவும் பொம்பளை புள்ளையாச்சே பாவம்னுதான் உள்ள விட்டிருக்கேன். வெளிய போனபிறகு சத்யவேணி தம் அடிச்சா தண்ணி அடிச்சா மேட்டர் பண்ணான்னு எதையாச்சும் எழுதி வச்சு , நீ ஃபேமஸ் ஆகிடலாம்னு நினைச்சே கொன்னே போட்ருவேன்… புரியுதா?’’
சிகரெட்டை ஹேஷ்ட்ரேயில் நசுக்கி அணைக்கும் போது சத்யவேணியின் வார்த்தைகள் மொத்தமாய் ஓடிவந்து தன்னையும் அவ்வாறே நசுக்குவதுபோல் இருந்தது அர்ச்சனாவுக்கு.
“இல்ல மேம்… நீங்க யூஸ் பண்ணிக்க சொல்றத மட்டும்தான் அசைன்மெண்டுக்கு யூஸ் பண்ணிப்பேன்… வேற எதுவும் வெளிய போகாது. ப்ராமிஸ்’’
சத்யவேணி அர்ச்சனா சொல்வதைக் கேட்டுக் கொண்டாள்.
“ஏ மஞ்சு… மிக்ஸ் பண்ணுடி’’ என்றதும் நைட்டிப் பெண் நான்கைந்து ஐஸ் கியூப்களைப் போட்டு கொஞ்சம் லெமன் டிரிங்கையும், விஸ்கியையும் அளவெடுத்தாற்போல சட்டென கலக்கிறாள். நல்ல கைப்பக்குவம் கொண்டவள் போல, விஸ்கிக்குத் தோதுவான சைட்டிஷ்ஷாகக் குடல்கறியைப் பிரட்டி வைத்திருந்தாள்.
“கொஞ்சம் டேஸ்ட் பண்றியா?’’
“ அய்யோ இல்ல மேடம். வேணாம்… பழக்கமில்ல’’
ஒரு பெரிய சிரிப்பு .காலேஜ் படிக்கிற பொண்ணு பழக்கமில்லையாமா? வொய்ன் அடிக்கிறியா?’’ என்றாள் அடுத்து.
“எதுவும் பழகலை மேம்’’
“சரிவிடு …. என்ன கேக்கணுமோ கேளு. ‘’ முதல் ரவுண்டின் முதல் சிப்பைப் பருகினாள் சத்யவேணி.
தென்னிந்தியத் திரையுலகையே கட்டிப்போட்டிருந்த ஒரு கவர்ச்சி நடிகையிடம் கேட்பதற்கா கேள்விகள் இல்லை. நிறைய கேட்கலாம். ஆனால் மொத்த பதில்களையும் வாங்கிவிடக் கூடிய ஒரே கேள்வியும் இருக்கிறது. அதை மட்டும் கேட்டால் போதும் என்பதே அர்ச்சனாவின் திட்டம்.
“அது… அது மேம்…ஒரே கேள்விதான். நீங்க என்ன சொல்லணுமோ சொல்லுங்க. நான் நோட் பண்ணிக்கிறேன்’’ நோட் பேடைத் திறந்து கொண்டே கேட்கிறாள்.
“நீங்க சினிமாவுக்கு வந்ததும் இப்ப காணாமல் போனதும் பத்தி சொல்லுங்க’’
“ஆமா.. நீ ஏன் நான் சரக்கடிக்குற நேரமா பாத்து வந்த?’’ பிறகு தன் கேள்விக்கு தானே பதில் சொல்லிக்கொண்டாள்… “ஆமால்ல நான் எப்ப அடிப்பேன்னு உனக்கு எப்டி தெரியும்?’’ சத்யவேணியின் இடையும் தொடையும் பாடலாசிரியர்கள் வர்ணித்த அளவுக்கு இப்போதில்லை என்பதை மட்டும் அடிக்கடி கண்களால் ஒப்பீடு செய்து கொண்டாள் அர்ச்சனா.
விஸ்கியை ஒரே கல்ப்பாக அடித்துவிட்டு கண்ணாடிக் குவளையை படார் என்று வைத்ததும் எழுந்த `டல்ங்ங்’ என்ற ஓசையைக் கேட்டதும் `அய்யோ’ என்று கடுக்கென உச்சரித்தாள் அர்ச்சனா.
“பயப்படாத… பயப்படாத… இப்டிதான் எங்கப்பணும் ஆத்தாளும் கொஞ்சங்கூட கூச்சநாச்சமில்லாம பெத்த புள்ளைங்களை வச்சிட்டே சரக்கடிப்பாங்க. நான் சினிமாவுக்கு வந்த கதைன்னு ஒன்னு ஏற்கெனவே பேப்பர் டிவில எல்லாம் வந்திருக்குமே… அதெல்லாம் பொய். கதையடிச்சு விட சொன்னானுங்க. விட்டிருந்தேன்.
“ போதையேறிப் போச்சு’’ படத்தோட டைரக்டர் நரசிம்மன், அவரோட படத்துக்கு நல்லா பெரிய சைஸ் கண்ணு இருக்குற பொண்ணா தேடிட்டு இருந்தார். அப்போதான் எங்க ஸ்கூல்ல நான் நடிச்ச நாடகத்தைப் பார்த்துட்டு வீட்ல வந்து பேசி என்னை அழைச்சிட்டுப் போய், அவர் படத்துல பெரிய வாய்ப்பெல்லாம் கொடுத்து என்னை ஆளாக்குனார். என்னோட குரு அவர்தான்.
வாவ்… நல்ல மனுஷன்னு நினைச்சு உச் கொட்டிட்டியா… லூசு லூசு… அந்த எச்சக்கலை நாயி கம்மனாட்டி பாடு தான் என்னை இந்தப் பொழப்புக்கு ஆளாக்குச்சு . பொறம்போக்கு நாயி’’
“அப்ப நியூஸ்ல வந்ததெல்லாம் உண்மையில்லையா… இப்படிதான் ஏதாச்சும் கமெர்சியஷலா கதையை தயாரிப்பாங்களோ’’ அர்ச்சனா அதுவரை நோட் செய்ததையெல்லாம் கோடிட்டு அழிக்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தாள். மறுபடியும் சத்யவேணி கதையைத் தொடர்ந்தாள்.
நானும் என் தம்பியும் அப்ப படிச்சிட்டு இருந்தோம்… நான் நல்லா படிக்குற பொண்ணெல்லாம் இல்ல. ஏதோ கொஞ்சம் பாஸாவுற அளவுக்குப் படிப்பேன். ஒருநாள் நான் ஸ்கூல்ல இருந்து வந்தப்ப எங்கப்பன் கம்மனாட்டி என்னைப் பாத்தும் பாக்காத மாதிரியே வீட்டவிட்டு வெளிய போயிட்டான். எங்க ஆத்தா அப்ப ஃபுல் மட்டையா இருக்கா. தண்ணி தெளிச்சு எழுப்பலாம்னு உள்ள போனா… புதுசா ஒரு நாயி தண்ணி சொம்போட ரூமுக்குள்ள வருது. யார்ரா நீன்னு கேட்க முடியல. வெறும் லுங்கியோட ஒருத்தன் வீட்ல இருக்கான்னா … வந்து ரொம்ப நேரமாயிருக்கணும். சனியனுங்க ரெண்டுக்கும் விருந்தாளி ஒரு கேடானு நினைச்சிட்டு நான் வெளிய வந்து உட்கார்ந்துட்டு இருந்தேன்.’’
மூச்சுவிட்டுத் தொடரவில்லை. ஒரே கல்ப்பாக தன் கதையைத் தொடர்கிறாள் சத்யவேணி.
“நான் ஒரு படத்தோட காஸ்டியூம் டிசைனர்னு அவனே வந்து என்கிட்ட சொன்னான். இப்ப இந்த நாயை யாரு கேட்டது? சரி இருங்கன்னு சொன்னேன். அம்மா உனக்கொரு டிரெஸ்ஸை ரெடி பண்ணி கொண்டுவர சொன்னாங்க , கொண்டு வந்திருக்கேன் போட்டு பாருன்னான். சரி, நானும் புதித்துணி போட்டு நாளாச்சேன்னு குடுங்கன்னு வாங்கிட்டு ரூமுக்குப் போனேன். ஜிப்பை பின்னாடி வச்சி தச்சிருக்கான். கஷ்டப்பட்டு எக்கி எக்கி போட்டுக்கிட்டு அம்மா இருக்குற ரூம்ல இருந்த பீரோ கண்ணாடியில போய் எப்டி இருக்குன்னு பாத்துட்டு இருந்தேன். எங்க ஆத்தாகாரி மட்டையானவ ஆனவதான். எந்திரிக்குற மாதிரி தெரியல. அந்த கவுன் நெஜமாவே பாக்க அவ்ளோ நல்லா இருந்துச்சு. முன்னாடி பின்னாடின்னு சுத்தி சுத்திப் பாக்குறேன். எனக்கே தச்சு வச்சா மாதிரி அளவா அழகா இருந்துச்சு. அப்பதான் காதுல கம்மல் ஒன்னு கழண்டு கீழ விழுந்துச்சு. குனிஞ்சு எடுக்கப் போறேன்… ஜிப்பு கழண்டு போச்சு’’
சத்யவேணி சரியான கதைசொல்லிதான் போல. அவள் சொல்லச் சொல்ல அடுத்து அடுத்து என்பது போல் ‘உம்’ கொட்டிக் கேட்டுக்கொண்டிருந்தாள் அர்ச்சனா. “சீனியர் சொன்ன மாதிரி இவ ரொம்ப மோசம்லாம் இல்லியே நல்லாதானே பேசிட்டு இருக்கா…” மைண்ட் வாய்ஸ் பேசுவதை மறைத்துக் கொண்டு சத்யவேணி அடுத்து தொடரப் போவதைக் கேட்கத் தயாரானாள். குடல்கறியை எடுத்து மென்று முழுங்கிவிட்டு மீண்டும் பேசுகிறாள். கவிச்சி சாப்பிட்டுக் கொண்டே பேசுவதால் பேசுவதெல்லாம் கவிச்சி வாடை அடிக்குமா என்ன?
“ ஜிப்பு கழண்ட மாதிரி இருக்கேன்னு எக்கி எக்கி போடப் பாக்குறேன். பொறம்போக்கு நாயி அதுவந்து போட்டுவிட்டுருச்சு. சரி அதோட விட்ருக்கலாம்ல. பின்னாடி இருந்து முன்னாடி வரைக்கும் கட்டிபுடிச்சி… கருமம் புடிச்ச நாயி…. அந்த நாய்தான் நரசிம்மன் ….’’
சொல்லி முடிக்கும்போது சத்யவேணி கையில் இருந்த கண்ணாடி டம்ளர் சில்லுசில்லாக உடைந்திருந்தது. பயத்தில் மூத்திரம் வருவதுபோல் இருந்தது அர்ச்சனாவுக்கு. சட்டென எழுந்து நின்றுகொண்டாள்.
“ஒக்காரு…ஒக்காரு… அவ்ளோ ஆத்திரம் வருது அந்த பரதேசி நாய்மேல. காஸ்டியூம் டிசைனர் கம்மனாட்டி பயலோட எங்கப்பனுக்கும் ஆத்தாளுக்கும் தோஸ்து. அவன்கிட்ட வாங்கித் தின்னுருப்பாங்க போல. அதான் பொண்ணை நடிக்க அனுப்புங்கன்னு அந்த பரதேசிப் பய கேட்டதும் இதுகளும் சரக்குக்குக் காசு தேறும்னு அனுப்பிவிட்டுருச்சுங்க. மொதல்ல சினிமாவுல நடிச்சா போஸ்டர்லாம் ஒட்டுவாங்கன்னு ஆசையாதான் போனேன். நாயி… நாயி….’’
மறுபடியும் வேறொரு கண்ணாடிக் கோப்பையில் மஞ்சு ஊற்றிக் கொடுக்கவும் அதையும் விர்ர்ரென கண்கள் மூடி குடித்துக் கொண்டாள்.
அப்பறம் அந்த நாயி… காஸ்டியூம் அளவெடுக்குறன்னு சொல்லி ஒடம்பெல்லாம் அளவெடுத்துச்சு. இன்ச் பை இன்ச்… டேப் வச்செல்லாம் அளக்கல. அது கைய வச்சு… த்தூ… பன்னாட’’
அர்ச்சனா தலைகுனிந்து கொள்வதை கவனிக்கிறாள்.
“பாவம் நீ… சின்னப் பொண்ணுல்ல. ரொம்ப சொல்லல.புரிஞ்சிக்க நீயே… அப்பறம் அந்த பரதேசி நாய்க்கு டைரக்ஷன் பக்கம் இண்ட்ரெஸ்ட் வந்துச்சு. அதுவரைக்கும் அது சொல்லி ரெண்டு மூணு படங்கள்ல சைட் ரோல்ல நடிச்சிட்டு இருந்தேன். ஜாக்பாட் அடிச்ச மாதிரி நான்தான் படத்தோட ஹீரோயின்னு சொன்னதும் எங்கப்பன் ஆத்தாளுக்கு தலகால் புரியல. அவன் மேல கைய வச்சிட்டான்னு சொன்னதுக்கே அட்ஜஸ்ட் பண்ணிக்க சொன்ன ஜென்மங்க, ஹீரோயின் வாய்ப்புன்னா சும்மா விடுங்களா? தொரத்திவிட்டாங்க. பிடிச்சும் பிடிக்காமயும் போனேன். மொத படமே ஹிட்டு. கவர்ச்சிக்கன்னின்னு கட்டுக்கட்டா பணத்தக் கொட்டுனானுங்க. படிச்சு பாஸ் பண்ணி வேலைக்கு போயிருந்தா கூட இவ்ளோ சம்பாதிச்சிருக்க முடியுமானு தெரியலை. மொத்தமா சம்பாதிச்சுட்டு ஊரைவிட்டு ஓடிபோயிரலாம்னு ப்ளான் போட்டு வச்சிருந்தேன். பதினாறு வயசுல இருந்து 25 வயசு வரைக்கும் மார்க்கெட்ட கையில வச்சிருந்தேன். அதுவரைக்கும் சம்பாதிச்சத எல்லாம் அப்பன்,ஆத்தா, கூட பொறந்ததுன்னு அதுகளுக்கே செலவு பண்ணேன். சரக்கு ,தம்மு, செக்ஸுக்குன்னு என்னென்னமோ கத்துக்கிட்டாச்சு. அந்த போதை இல்லாம தூங்க முடியல’’
இந்தமுறை எதுவும் உடையவில்லை. “ஏ லூசு… ஐஸ் கியூப் போட்டு மிக்ஸ் பண்ணுடி’’ நைட்டிப் பெண் மஞ்சுவின் மீது பாய்ந்தாள். இவ்வளவு நேரம் குடித்த குடியால் பனியன் கொஞ்சம் நனைந்திருந்தது.
`மேல சொல்லுங்க’ என்பதாக ஒரு பூனைக்குட்டியைப் போல் அப்பாவிப் பெண்ணாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.
“ ஆங்… எதுல விட்டேன்?’’
“25 வயசுல’’
“ஆங்… 26 வது வயசுல ஒரு ஆக்ஸிடண்ட். கால்ல போன் ப்ராக்சர். எழுந்து நடக்க முடியல. ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியல. அதுவரைக்கும் ஒத்துக்கிட்ட படங்களெல்லாம் கேன்சல் ஆச்சு. படுத்தப்படுக்கையில ஒரு வருஷம் கிடந்தேன். ஸ்லிம் குயின்னு பேரெடுத்தவ பெருத்த கோழியானேன். பாத்துட்டு போனவன் எவனும் அடுத்தடுத்த படத்துக்கு புக் பண்ணலை. சோத்துக்கே வழியில்லாத நிலைமை. ஒரு வருஷத்துல நடக்க ஆரம்பிச்சேன். ஆனா எவனும் மதிக்கல. காண்டம் வெளம்பரத்தோட ப்ராண்டு அம்பாஸிடரா இருந்தேன். அதுவும் கைவிட்டுப் போச்சு. கையில இருந்த காசெல்லாம் ஒரு வருஷத்துல மருந்துக்கும் சரக்குக்குமே சரியா போச்சு.’’
“அப்ப கூட உங்க அப்பா அம்மா உங்களுக்கு ஹெல்ப் பண்ணலையா மேம்?’’
“அப்பா, அம்மா, தம்பி… அந்த சனியனுங்க மூனுமே ஆக்சிடண்ட்ல செத்துப் போயிருச்சுங்க. தோ… இந்த மஞ்சுதான் படுக்கையில இருந்தப்ப பீ மூத்திரம் எடுத்துப் போட்டு பாத்துக்கிட்டா’’
மஞ்சுவை ஏறிட்டுப் பார்த்தாள் அர்ச்சனா. அவள் எதுவும் பேசவில்லை. அவள் இதுவரையிலும் கூடதான் எதுவும் பேசவில்லையே.
“இவ எனக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் . ஒருதரம் நான் மேட்டர் பண்ணிட்டு இருந்தப்ப கதவு தட்டாம ரூமுக்குள்ள வந்துட்டா. சனியன் பாத்ததுதான் பாத்துச்சே… அதை போய் அவ புருசன்கிட்ட ஜாடையில சொல்லியிருக்கா. இந்த வேலைதான் பாக்குறியானு அவனா ஒன்னு புரிஞ்சிக்கிட்டு செவுலு பேந்து போறா மாதிரி அடிச்சி அனுப்பிட்டான். புருஷனைவிட்டு ஓடிவந்துட்டா. வாய் பேச முடியாது அவளால’’
தன்னைப் பற்றி சத்யவேணி சொல்வதைக் கேட்டுக் கொண்டே ஹேஷ்ட்ரேயை சுத்தம் செய்ய அதை உள்ளே எடுத்துக்கொண்டு போனாள்.
“மேம்… நான் கொஞ்சம் தண்ணி குடிச்சிக்கிறேன்’’
“அய்ய… குடி…குடி…சரக்குதான் வேணாம்னுட்டே… தண்ணிதானே குடி குடி’’
சத்யவேணிக்கு போதை ஏறிக்கொண்டிருந்தது. அவள் எதையாவது தூக்கிப் போட்டு உடைப்பதற்குள் போய்விட வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
“மேல சொல்றேன் கேளு’’ இம்முறை அவளாகவே ஆரம்பித்தாள். அப்புறம் ரெண்டு மூணு பேப்பர்ல பேட்டி கேட்டிருந்தானுங்க. குண்டுக் கோழியா பேட்டி கொடுக்க ஆரம்பிச்சதும் எவனும் சீண்டக்கூட இல்ல. அப்ப முடிவு பண்ணேன். எவனுக்கும் பேட்டி தரக்கூடாதுன்னு. அப்டியே இருவது வருஷம் ஓடிருச்சு.
அர்ச்சனா எதுவும் பேசவில்லை. பார்த்துக் கொண்டே இருந்தாள்.
“ இருவது வருஷமா சோத்துக்கு என்ன பண்றேன்னு கேக்குறீயா? மேட்டருதான். பழைய கஸ்ட்டமருங்க இருக்கானுங்க. சும்மா சொல்லக்கூடாது. மாசத்துக்கு ஒருத்தனாச்சும் படி அளந்துடுவான். இந்த ஒடம்ப வச்சிட்டு நான் என்ன பண்ண முடியும்.. எளசுங்களையா வளைச்சுப் போட முடியும். வத்தலோ தொத்தலோ அதுகளால என்கிட்ட முடிஞ்சத தேத்திட்டுப் போயிரும்ங்க. சரக்குக்கும் சோத்துக்கும் வருமானம் வந்தா போதாதா?’’
விஸ்கி பாட்டிலுக்குப் பக்கத்தில் ஹேஷ் ட்ரேயை கொண்டு வந்து வைத்தாள் மஞ்சு. மறுபடியும் சிகரெட்டைப் பற்ற வைத்தாள் சத்யவேணி.நாற்பத்தாறு வயது நடிகை தான் வாழ்ந்த வாழ்க்கையைப் புகையாய்ச் சுழற்றிக் கொண்டிருக்கிறாள்.
“ஏன் ஒழைச்சு பொழைச்சா என்ன கேடுன்னு நீ கேட்கலைனாலும் சொல்றேன்.. தமிழ் சினிமாவுல வர மாதிரி பூ கட்டியோ, காய்கறி வித்தோ நேர்மையா பொழைக்கலாம்னு ஊர்பக்கம் போனேன். பழகாத தொழிலை பண்ண முடியலை.. வெயில்ல உடம்பு அரிக்குது. சொகுசுக்குப் பழகிட்டு நடுரோட்ல நின்னா என்ன பண்றது செத்துரலாம்னு தோணுச்சு. அங்கயும் இந்த மூஞ்சிய கண்டுபிடிச்சி ரெண்டு பயலுங்க அவங்க தேவையை முடிச்சிட்டு கட்டுக்கட்டா பணம் கொடுத்தானுங்க. வாழ்ந்தாவணுமே. திருடி பொழச்சாதானே தப்பு. கிடைச்ச வரைக்கும் வாழ்க்கை ஓடட்டும். எதுக்கு சாகணும்னு இதையே பழகிக்கிட்டேன். இப்ப என்ன ஒழுக்கசீலை சத்யவேணின்னு பேர் எடுக்குறதால நாலு காசு கிடைக்கப் போகுதா? நான் யார் குடியையும் கெடுக்கல. வரவன் வரட்டும். போறவன் போவட்டும். ’’
வழக்கமாக கேள்விப்பட்ட நடிகைகளின் க்ளீஷே கதைதான். இதை கேட்பதில் ஒரு ஸ்வாரசியமும் இல்லை. புளித்துப் போன இந்தக் கதையை கேட்கவா இவ்வளவு தூரம் வந்தோம்? மைண்ட்வாய்ஸ் சொல்வதை எப்படி கேட்டுவிட முடியும்?
“அவ்ளோதான் கதை. எழுதிகிட்டயா. ரெண்டு வருசம் இருக்கும். ஒரு காலேஜ் பையன் பேசியே ஆகணும்னு, உன்ன மாதிரிதான் வீட்டுக்கு வந்தான். அவன் தொடைய புடிச்சு கடிச்சு வச்சிட்டேன்’’
அர்ச்சனாவுக்கு தொண்டை விக்கியது. ‘’மமே…மே… மேம்’’
“ வந்தமா நாலு கேள்வி கேட்டமான்னு போயிட்டே இருந்தா கூட, படிக்கிற புள்ளையாச்சேனு விட்டிருப்பேன். வந்ததும் வராததுமா ஒரு சின்ன ஆசைன்னு பக்கத்துல வந்து நின்னுட்டான்’’
அடுத்து என்ன நடந்திருக்குமென்று காதுகொடுத்து கேட்கவே பயமாக இருக்கிறது அர்ச்சனாவுக்கு.
“சனியன் தொடைக்குப் பக்கதுல வந்து தொட்டுப் பார்த்துட்டு படார்னு முத்தம் கொடுத்துருச்சு. பளிச்சுன்னு ஒன்னு கொடுத்தேன். வாய் ஓவரா பேசுனான். தொடையைப் புடிச்சு கடிச்சு வச்சிட்டேன்’’ அசுர சத்தம் தெறித்தது சிரிப்பில்.
“அடப்பாவி சீனியர்… ப்ளேட்டை மாத்திப் போட்டுட்டானே’’ மனதுக்குள் திட்டிக்கொண்டே நோட் பேடை மூடி வைத்தாள் அர்ச்சனா.
“மேம்… தேங்யூ சோ மச். ஒரு செல்பி எடுத்துக்கலாமா?’’
செல்போனை ஆன் செய்ய எடுத்ததும், தானும் சோபாவைவிட்டு எழுந்து கொள்கிறாள் சத்யவேணி. அர்ச்சனாவிடமிருந்து தானே போனை வாங்கி அவளுடன் இணைந்து ஒரு செல்பி எடுத்துக் கொடுக்கிறாள்.
“மேம் நான் கிளம்பவா?’’
“கிளம்பு… கிளம்பு… ஏய் பொண்ணு… இவ்ளோ நேரம் நான் சொன்ன கதையெல்லாம் உண்மைனு நினைச்சிட்டியா… இதுவும் டூப்புதான். மொத மொதலா நரசிம்மன் எனக்கு கொடுத்த சினிமா சான்ஸ் இண்டர்வியூ மாதிரிதான் இப்ப நான் சொன்ன எல்லா கதையுமே பொய்…’’ கெக்கபெக்கவென சிரித்துத் தீர்த்தாள் சத்யவேணி.
அர்ச்சனாவுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. ஹேண்ட்பேக்கில் நோட் பேடையும் பேனாவையும் எடுத்துப் போடும் போது கையிலிருந்த பேனா சத்யவேணியின் முன்பிருந்த டீப்பாயின் அடியில் போய் உருண்டுவிழுந்தது. மஞ்சு டீப்பாயை சற்றுத் தள்ளி இழுக்கவும் சத்யவேணி பேனாவை எடுக்க சட்டென குனிகிறாள். லோ நெக் பனியனுக்குள் விழுந்த ஹாலின் எதிர்புற லைட்டின் வெளிச்சம் சத்யவேணியின் க்ளீவேஜ்ஜை பளிச்செனக் காட்டிக் கொடுத்தது. நான்கைந்து பற்கள் கடித்த சிவந்த தழும்பொன்று அவளுடைய வெளிறிய க்ளீவேஜ்ஜின் மீது டாட்டூ குத்தியதுபோல் தெரிந்தது. அந்த பச்சைக்காயத்தைப் பார்த்தால் அது அநேகமாக நேற்றிரவுதான் நடந்திருக்கக் கூடும். வலியை எப்படி பொறுத்துக் கொண்டிருக்கிறாள் எனத் தெரியவில்லை.
டீப்பாயின் மீது இன்னும் மூடி திறக்காத விஸ்கி பாட்டில் ஒன்று இருந்தது.
அவள் இனி எந்த உண்மையைச் சொல்லி இனி என்ன ஆகப்போகிறது? கடைசியாகப் பேசிய அவள் க்ளீவேஜ்ஜை மட்டும் மனதில் படமெடுத்துக் கொண்டு கிளம்பினாள் அர்ச்சனா.