
ஒடுக்கமான அந்த சின்ன அறைக்குள்ளே பாய், தலையணை, கையொடிந்த சிறிய பீரோ, செங்கல் மற்றும் காலண்டர் அட்டைகள் மேல் வைக்கப்பட்ட அரசு தொலைக்காட்சி, சிறிதும் பெரிதுமாய் நிரம்பிய பைகள் என நான்கு ஓரங்களும் நிறைந்திருந்தன. நடுவே மடித்த சேலைகளில் உறங்கியபடி கைக்குழந்தை. டேபிள் பேன் சுழற்சி மட்டுமே விலக்கிக் கொண்டிருந்தது அங்கு நிலவும் அமைதியை. ‘போன வாரத்தவிட காயங்கள் நல்லாவே ஆறிருக்கு’ என்றார் டாக்டர் சிவராமன். ‘ஆனா இப்போ பாக்க இன்னும் கஷ்டமா இருக்கு சார்’, குழந்தையின் கால்களை பார்த்தபடியே கூறினாள் அனிதா.
உள்பக்கம் இருந்த சிறிய அடுக்களையிலிருந்து இரண்டு டம்ளர் காபியுடன் வந்தாள் வள்ளி. ‘இந்தாங்க சார், இந்தாம்மா, ராத்திரி பூரா தூக்கமே இல்ல அதான் முழிக்கவே லேட், இல்லேன்னா அவரு இந்நேரம் சாப்பிட்டு வேலைக்கே போயிருப்பாரு, உங்களுக்கும் இட்லி ரெடி பண்ணிருப்பேன்’. ‘பரவால்லக்கா, சார் தான் டாக்டர் சிவராமன், போனவாரம் பாண்டிச்சேரி ஹாஸ்பிட்டல்லயே பார்த்தாரு, எனக்கு மெடிக்கல் என்ட்ரன்ஸ்க்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணி மெடிக்கல் சீட் கெடைக்க வச்சதுக்கு இவரு தான் காரணம்’ என்றாள் அனிதா. ‘முகம் ஞாபகம் இருக்கு’ என்று மெல்லிய புன்னகையுடன் கைகள் தானாய் கூப்பி இறங்கியது வள்ளிக்கு.
‘அதுக்கப்பறம் மறுபடியும் அதே மாதிரி ஏதும் நடக்கலேல’ என்றார் சிவராமன். ‘இல்ல சார், மருந்தோ புண்ணியமோ மறுபடியும் நடக்கல, நடந்தா தாங்கிக்கிற நெலமையும் இல்ல’ என்றபடி குழந்தையை வெறித்திருந்தாள் வள்ளி.
‘கவலப்படாதீங்கக்கா ஆண்டவன் புண்ணியத்துல இனி ஏதும் நடக்காது’, ஆசுவாசபடுத்தினாள் அனிதா. ‘புண்ணியம் இருந்தா ஏன்மா இப்டி இல்லாத அதிசயமா எங்களுக்கு மட்டும் நடக்கணும். அதுவும் ஒருதடவ இல்ல, மூத்தவனுக்கே மூணு தடவ. அவன் இப்போவே பாதி வெந்துபோய் தான் இருக்கான். என்ன ஆகுமோனு பயத்துல தான் ரெண்டாவது ஒன்னு பெத்துக்கலாம்னே முடிவு பண்ணினோம். ஆனா இப்போ இவனுக்கும் இப்டி ஆகி வாழ்க்க முழுக்க பயத்தோடயும் பாரத்தோடயும் வாழணும்னு எழுதீருக்கு போல. பாண்டிச்சேரி வரைய பெரிய ஹாஸ்பிடலுக்கும் போயாச்சு, எல்லாரும் பொருட்காட்சி மாதிரி பாத்திட்டும், கேட்டுட்டும் தான் போறாங்க ஆனா இந்த நோய்க்கு மருந்தில்ல, குணப்படுத்த முடியாதுனு தான் சொல்றாங்க’.
வள்ளி கொட்டித்தீர்த்ததும் சிவராமன் தொடர்ந்தார், ‘இத ஒரு நோய்னு இப்போதைக்கு உறுதியா சொல்ல முடியாது, ஒரு நிகழ்வுனு சொல்லலாம் அவ்ளோதான் ஆனா இன்னிக்கு இருக்க மருத்துவத்துல இதுக்கான காரணம், தடுக்கிறதுக்கான வழி, சிகிச்சைனு எதுவுமே தெளிவானதா இல்ல.’
‘ஆனா இது நோய்னு தான் பெரிய பேர்லாம் சொன்னாங்களே சார்’ என்றாள் வள்ளி.
‘ஸ்பான்டனியஸ் ஹியூமன் கம்பஸ்ஷன் (spontaneous human combustion)’ என்று தானும் மருத்துவம் கற்கத் தொடங்கிய ஆர்வ மிகுதியில் குறுக்கிட்டாள் அனிதா.
‘ஆமா அது அந்த நிகழ்வுக்கான பேரு தான். அதைப்பத்தின ஆராய்ச்சிகளும் புரிதலும் நமக்கு இன்னும் முழுமை ஆகல. வெளியில இருந்து எந்த ஒரு காரணியும் இல்லாம உடம்புல தானா தீ பத்திக்கிட்டா அது ஸ்பான்டனியஸ் ஹியூமன் கம்பஸ்ஷன் (spontaneous human combustion). உலகத்தில பல இடங்கள்ல இந்த மாதிரி சம்பவங்கள் நடந்திருக்கு ஆனா எண்ணிக்கைல ரொம்பவே குறைவு. கடந்த முன்னூறு வருஷத்துல ஒரு 200 பேருக்கு நடந்ததா குறிப்புகள் இருக்கு. இத்தனை கோடி மக்கள்ல வெறும் 200 பதிவுகள் ரொம்ப ரொம்ப கம்மி அதான் இது இன்னும் ஒரு புரியாத புதிராவே இருக்கு’.
‘அப்போ வெளிநாடுகளிலாச்சும் இதப் பத்தின ஆராய்ச்சி நடந்திருக்கா டாக்டர்?’ அனிதா மேலும் அறிய முயன்றாள். ‘நிறைய தீவிரமான ஆராய்ச்சிகள் வெளிநாட்ல தான் நடந்திருக்கு. நம்ம நாட்ல சமீபமா பரவலா தெரிஞ்சது இவங்களோட ரெண்டு குழந்தைகள்தான். வெளிநாடுகள்ல இது பெரும்பாலும் பெரியவங்க வயசானவங்களுக்குதான் நடந்திருக்கு. சுரேஷ்க்கும் ராகுல்க்கும் இவ்ளோ சின்ன வயசுலயே நடந்திருக்கிறது ரொம்பவே விநோதம், கூடவே தொடர்ந்து அண்ணன் தம்பிக்கு நடந்திருக்கிறதால ஜெனிடிக்கலா இது இருக்கலாமோங்கிற கேள்வி இங்க மட்டும் தான் வந்திருக்கு’. வீட்டுக்கே ஒரு டாக்டர் வந்து விளக்குவதால் கவனமாய் கேட்டபடி இருந்தாள் வள்ளி.
‘ராகுல்க்கு ஒரு வயசு ஆகிடுச்சாம்மா?’.
‘இல்ல டாக்டர் ஒன்பது மாசம். கிட்டத்தட்ட இதே மாதிரி ஒன்பது மாசத்துல தான் சுரேஷுக்கு உடம்புல தீ புடிச்சது, பஞ்சாயத்து ஆஸ்பத்திரி, டவுன்ல கவர்மெண்ட் ஆஸ்பத்திரி, பாண்டிச்சேரி ஆஸ்பத்திரினு அலைஞ்சோம்.’
‘உங்களுக்குத் தெரிஞ்சு உங்க பரம்பரைல யாருக்காச்சும் இப்டி நடந்திருக்காமா.?’ வள்ளி சற்று யோசித்தவாறே ‘இல்ல டாக்டர் இப்டி நான் கேள்விப்பட்டதே இல்ல. கேள்வியேபடாத கொடுமைகளக் கூட நேரடியா பாத்து அனுபவிச்சு சாகுற சாபம் போல எங்களுக்கு’.
‘அப்போ…’ டாக்டர் தொடங்கியபோது, ‘அவனுக்கு மூணு தடவ ஆச்சுன்னு சொன்னீங்கள்ள, எப்போ கடைசியா நடந்தது?’ அனிதா குறுக்கிட்டாள். ‘ஒன்னேகால் வயசு இருக்கும், ஒன்பது மாசத்துல முதல் தடவ அப்பறம் ஒரு வயசுல அப்பறம் ஒன்னேகால். சுடலமாடன் புண்ணியத்துல அதுக்கப்பறம் நடக்கல’.
உடனடியாக டாக்டர், ‘அந்த கடைசி தடவைக்கு முன்னாடி என்ன டிரீட்மென்ட் எடுத்தீங்க, எந்த ஹாஸ்பிட்டல் போனீங்க?’
‘அப்போ போனது திருநெல்வேலி ஆஸ்பத்திரி. எங்களுக்கு சொந்த ஊரு திருநெல்வேலி பக்கம் தான். குலதெய்வம் கும்பிட்டு வரலாம்னு அங்க போன இடத்துல இப்டி ஆகிடுச்சு. உடனே பாளையம்கோட்டை ஹைகிரௌண்ட் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடினோம். தீ காயத்துக்கு மருந்து போட்டாங்களே தவிர, வேற ஒன்னும் பண்ணல’.
‘வேற எங்க போனீங்க?’ டாக்டர், அனிதா இருவரும் ஒன்றாக கேட்டனர். ‘ம்.. ஊர்ல வச்சு நடந்ததால எல்லாருக்கும் தெரிஞ்சு, இப்டியே தீ காயத்தோட குழந்தையை காட்ட வேணாம்னு சாமிக்கு மட்டும் பூச போட்டு கும்பிட்டுட்டு வந்துட்டோம். எப்டியோ கடைசியா சுடலமாடனுக்கு பூச போட்டு கும்பிட்டு வராம நின்னதால அவனே தீத்துவச்சான்னுதான் நானும் அவரும் நம்புறோம்’.
டாக்டர், அனிதா இருவர் முகத்திலும் சற்று ஏமாற்றம் தெரிந்தது. ஏதோ மறந்தது நினைவுக்கு வந்தது போல், ‘உங்க வீட்டுக்காரர் பரம்பரைல இந்த மாதிரி எதுவும் நடந்திருக்கா?’ என்று கேட்டார் டாக்டர். சற்று யோசித்து ‘அப்டி எதுவும் தெரில டாக்டர். ஒரு நிமிஷம் இருங்க பேசிட்டு இருந்ததில மறந்திட்டேன், அவரு பின்னாடி தான் இருக்கார் அவரையே கூப்பிடுறேன்’.
வீட்டின் வெளியே பின்புறமாய் சென்றாள் வள்ளி.
‘இந்த மாதிரி இன்சிடெண்ட்ஸ் பெரும்பாலும் தீ புடிச்சவங்க எரிஞ்சு சாம்பல் ஆகுற நிலைல தான் முடிஞ்சிருக்கு. சுரேஷ்க்கு ரெண்டு மூணு தடவ நடந்து, இப்போ சில வருஷங்களா நடக்கலைனா இந்த புதிரான விஷயத்தோட இன்னொரு சிக்கலான முடிச்சு தான் அது. அது எப்படி வராம நின்னுச்சுனு உறுதியான ஒரு தகவல் தெரிஞ்சுக்கிட்டாலே விடை தெரியாம இருக்கிற இந்த விநோதத்துக்கு ஒரு பெரிய திறப்பா இருக்கும். அத வச்சு ஆராய்ச்சிகள் தொடங்கி, ஒரு தடுப்பு வழி இல்ல மருந்து கண்டுபுடிக்கலாம்’, அனிதாவிடம் விளக்கிக்கொண்டிருந்தார் டாக்டர் சிவராமன்.
‘ஆனா அவுங்க காயத்துக்கான மருந்து மட்டும் தான் போட்டாங்கனு சொல்றாங்களே டாக்டர்’.
‘ஆமா அது என்ன மருந்து, என்ன கலவைனு தெரியணும். அதுவே கூட இத தடுத்திருக்கலாம். எடுத்துக்குற மெடிசின்ல அரை மில்லிகிராம் அளவு இருக்கிற கெமிக்கல் கூட உடம்புல சில மாற்றங்கள் உண்டு பண்ண முடியும். அப்டி இருக்கும் போது சாப்பிடறது, குடிக்கிறது, உடம்புல பூசிக்கிறதுனு உடம்புக்குள்ள போற எந்த விஷயமும் ஒரு பாதிப்பையும், மாற்றத்தையும் குடுக்கும். ஒரு முழுமையான தீர்வு இது எல்லாத்தையும்….’
டாக்டர், அனிதா பேசிக்கொண்டிருந்த போதே வள்ளி வீட்டுக்குள் நுழைந்தாள். பின்னால் வள்ளியின் கணவர் சண்முகம் கையில் சுரேஷுடன் நுழைந்தார். ‘வணக்கம் டாக்டர், வாம்மா அனிதா’ என்றபடி இரண்டு கைப்பைகளை ஒதுக்கி அமர்ந்து கொண்டார். வள்ளி அடுக்களை வாசலில் நின்று கொண்டாள். டாக்டரின் கண்கள் சுரேஷின் ஒரு பக்கத்தில் முடிஇல்லாத தலை, தோள், கைகளின் தீக்காயத் தழும்புகளை வெறித்தபடி இருந்தன. ஒரு சிறிய அமைதி.
‘இப்போ நல்லாருக்கான் டாக்டர் ரெண்டு வருஷமா இவனுக்கு எந்த பிரச்சினையும் இல்ல. பிளாஸ்டிக் சர்ஜரி மட்டும் பண்ணனும். காசு சேத்துக்கிட்டே இருக்கோம். இடைல இவரு தம்பி, அதென்ன அவனுக்கு மட்டும் எனக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி வேணும்னு வந்து நிக்குறான். பாகுபாடில்லாம ரெண்டு பேருக்கும் பண்ணிடுவேன், அந்த தைரியம் இருக்கு. ஆனா இவன மூணு தடவ பொசுக்குன மாதிரி இல்லாம, அவனுக்கு இந்த ஒரே தடவையோட சரியாகிட்டா நிம்மதி. சுடலமாடன் இருக்கான் அவன் பாத்துக்குவான்’ என்று பேசியபடியே ‘காபி குடுத்தியா’ என்று வள்ளியை பார்த்து கேட்டார் சண்முகம்.
‘ஐயோ குடிக்காமலே வச்சிருக்காங்க ஆறிருக்கும். இருங்க அவருக்கும் காபி போட்டுட்டு, உங்களுக்கு சூடு பண்ணிட்டு வர்றேன்’ என்று டாக்டர் மற்றும் அனிதாவிற்கு வைத்த காபி டம்ளரை எடுத்துக்கொண்டாள். ‘உங்க கிட்டதான் எதோ கேக்கணும்னு சொன்னாங்க, பேசிட்ருங்க வர்றேன்’ என்று அடுக்களைக்குள் சென்றாள்.
‘இல்ல உங்க பரம்பரைல யாருக்காச்சும் இந்த மாதிரி நடந்திருக்கா? அவுங்க வழில இல்லனு சொன்னாங்க’ என்று கேட்டார் டாக்டர். ‘நாங்க ரெண்டு பேருமே ஒருவகைல சொந்தம் தான் டாக்டர், ஆனாலும் எங்க பூர்வீகத்தில இந்த மாதிரி யாருக்கும் நான் கேள்விப்படல’.
‘ஓ.. சொந்தமா! உங்க நேரடி வழில இல்லைனாலும் ரெண்டு பேரோட தூரத்து சொந்தங்கள்ல இந்த மாதிரி ஏதும் நெருப்பு, சூடு சம்பந்தமா ஏதும் நோய், அறிகுறிகள் இருந்திருக்கா?’. ‘அப்டி ஏதும் இல்லையே…’ என்று எதிரில் தூங்கிக்கொண்டிருக்கும் ராகுல் கால் தழும்புகளை பார்த்தபடி யோசித்துக்கொண்டிருந்தார் சண்முகம். புருவங்கள் லேசாக சுருங்கி மீண்டு வந்தன. எங்க வழில ஒரு தாத்தா இருக்கார், முழுக்கை ஜிப்பா போட்டுருப்பார், அவரு கைல நான் தழும்ப பாத்திருக்கேன். கிட்டத்தட்ட இதோ சுரேஷ் ராகுல் மேல இருக்கிற மாதிரியான தீ காய தழும்புதான்’.
டாக்டர், அனிதா, சண்முகம் மூவருக்கும் காபி டம்ளர் கொடுத்து, ‘இங்க வாடா சுரேஷ்’ என சண்முகத்திடம் இருந்து கையில் தூக்கிக்கொண்டாள் வள்ளி. ‘நீங்க குடிங்க’.
‘வள்ளி உனக்கு ஆவுடையானூர் தாத்தா ஞாபகம் இருக்கா?’,
‘யாரு?’ வள்ளி யோசித்தாள்.
‘சுருட்டாங்கண்ணு தாத்தா, போன வருஷ குலசாமி திருவிழால சாமி பூசைக்கு வராம மரத்தடில உட்கார்ந்து சுருட்டு புடிச்சிட்டிருக்கார்னு பேசிட்ருந்தோமே’.
‘ஓ ஆமா அவருக்கா தீ காயம்னு சொல்றீங்க?’
‘ஆமா கைவிரல்ல இருந்து தழும்பு இருக்கும் ஞாபகம் இருக்கா?’,
‘இல்லைங்க எனக்கு அவ்ளோ ஞாபகம் இல்ல’.
‘இருக்கும்டி’.
‘அவரு ஒருத்தருக்கு தழும்பு இருக்கிற ஞாபகம் அவ்ளோதான் சார். அதுவும் விபத்தா, இல்ல என்ன காரணம்னு தெரியல’.
‘ஓ! அவுங்க போன் நம்பர் இருக்கா.? ஒருதடவ விசாரிச்சுப் பாருங்களேன்’. ‘அவருக்கு தொண்ணூறு வயசு இருக்கும் சார், அவரு பையன் நம்பர் பழைய டைரில இருக்கும். நீங்க சொல்றதும் சரிதான், நான் தேடி எடுத்து விசாரிச்சு பாத்திட்டு உங்களுக்கு சொல்றேன். அனிதா இங்க அடிக்கடி வந்து பாத்திட்டு தான் இருக்கா, அவள்ட்ட சொன்னா உங்களுக்கு வந்து சேர்ந்துரும்னு நெனைக்கேன்’.
தலையசைத்து புன்னகைத்தார் டாக்டர். ‘நான் சொல்லிட்றேன் அண்ணா, காலேஜ் போறப்போ டாக்டர பாப்பேன்’ என்றாள் அனிதா.
‘நல்லதுமா’, கும்பிட்டார் சண்முகம்.
‘சரி அப்போ நாங்க கெளம்புறோம், பையன் நல்லாத் தூங்கறான் தூங்கட்டும். இனி எல்லாம் நல்லா இருக்கும், நம்புவோம்’. வணங்கி கிளம்பினார்கள். வாசல் நெருங்கியதும் தயக்கத்துடன், ‘அம்மா டாக்டரா இன்னொரு விஷயம் தெரியணும், கேக்கிறனேன்னு சங்கடப்படாதீங்க பையன் மேல நெருப்பு பத்திக்கும் போது பக்கத்துல யாரும் இல்ல நெருப்பு பிடிக்கிறதுக்கான எதுவும் இல்லனு ஹாஸ்பிடல் டாக்டர்டயே சொல்லிருந்தீங்க, அத கேட்டேன். நெருப்போட பையன முதல பாத்தது நீங்க தான?’,
‘ஆமா சார் நான் மட்டும் தான் அடுக்களைல இருந்தேன். இங்கயேதான் அவன் அழுகை சத்தம் கேட்டதும் சாக்கு போட்டு அணைச்சு ஆஸ்பத்திரிக்கு எடுத்திட்டு போனேன்’.
‘ஓகே பையன் மேல நெருப்பு என்ன கலர்ல எரிஞ்சதுனு ஞாபகம் இருக்கா?’,
‘நல்லா ஞாபகம் இருக்கு சார், இவனுக்கும் சரி அவனுக்கும் சரி நீல கலர்ல தான் இருந்தது. அது இன்னும் அப்டியே மனசில நின்னுட்டு போகாம தான் பயமா இருக்கு’.
‘சரிம்மா. பயப்படாதீங்க சரி ஆகிடும். நாங்க கெளம்பறோம்’. விடைபெற்றுக்கொண்டார் டாக்டர்.
வள்ளி தனியாக அனிதாவிடம், ‘ரொம்ப நன்றி அனிதா. ஊரவிட்டு கோச்சுகிட்டு வந்து பலவருஷம் ஆச்சு. இங்க தனியா இருந்து பொழைக்கிறோம். சூனியம் புடிச்ச குடும்பம், கொல்லிப்பிசாசு குடும்பம், ஊரவிட்டு போங்கனு பக்கத்துல இருக்கிறவங்களே விரட்டப் பாக்குறாங்க. இங்க பஸ் ஸ்டாப் பக்கம் உன்னப் பாத்திருக்கேனே தவிர யாருனு தெரியாது, நீ போன வாரத்துல இருந்து வந்து விசாரிச்சிட்டு போறது ஆறுதலா இருக்கு. இன்னிக்கு ஒரு டாக்டரயே கூட்டிட்டு வந்து விசாரிச்சு, பேசிட்டு போறது ரொம்ப நிம்மதியா இருக்கு. நல்லாருப்பம்மா’. ‘இதெல்லாம் ஒண்ணுமில்லக்கா, உங்களுக்கும் யாருக்கும் இனி இது மாதிரி நடக்க கூடாது. அதுக்கு எங்களால முடிஞ்சத செய்ய நினைக்கிறோம் அவ்ளோதான். தைரியமா இருங்க நாளைக்கு வரேன்’ என்று சிரித்து கிளம்பினாள் அனிதா.
அனிதா டாக்டரின் காரில் ஏறிக் கொண்டாள். சில நொடி மௌனத்திற்குப்பின், ‘ஏன் டாக்டர் நெருப்போட கலர் கேட்டீங்க?’ என்றாள்.
‘ஒரு காரணமாத்தான், நீ எத்தன கலர்ல நெருப்பு பாத்திருக்க?’ என்றார் டாக்டர்.
‘ஹ்ம்ம் எல்லோ, ப்ளூ, ரெட் இந்த மூணு சொல்லலாம்’.
‘யெஸ் பொதுவா இந்த மூணு சொல்லலாம் ஆனா நெருப்போடா நிறத்துல இன்னும் நிறைய பிரிவுகள் இருக்கு. வேதி பொருட்களோட தன்மை, காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அளவு இதெல்லாம் பொறுத்து வேறுபடும். நம்ம வீட்ல உபயோகிக்கிற சமையல் காஸ், ப்ரோபேன் அது ஆக்ஸிஜனோட முழுசா கலந்து எரியும் போது, நீல நிறத்துல எரியும். அதுமாதிரி தான் இயற்கையா உருவாகுற மீத்தேன் அதுவும் நீல நிறத்துல எரியும். இந்த spontaneous human combustion க்கு உடல்ல உருவாகிற மீத்தேன் கூட காரணமா இருக்கலாம்னு ஒரு தியரி இருக்கு. பதினெட்டாம் நூற்றாண்டுல இருந்து இதை பற்றிய பதிவுகள் இருக்கு. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுங்கள்ல நடந்த நிறைய நிகழ்வுகள் கொடுமையான மரணங்கள் தான். முன்னவே சொன்ன மாதிரி பெரும்பாலும் வயசானவங்க, பெண்கள் தான் இந்த மாதிரி தானா தீப்பற்றி எரிஞ்சு இறந்ததா சொல்றாங்க. ஆச்சர்யம் என்னனா வயிறு, மார்புப் பகுதிகள் முழுவதுமா எரிஞ்சு வெறும் சாம்பல் மட்டும் மிஞ்சியிருக்கிறப்போ முழங்காலுக்கு கீழான கால் பகுதிகள், கைப்பகுதிகள் எதுவும் ஆகாம மிஞ்சியிருந்திருக்கு. நிறைய நிகழ்வுகள்ல எரிந்த உடலைச் சுற்றி இருந்த துணி, போர்வை, நாற்காலி, கட்டில் இதுக்கெல்லாம் பெருசா எந்த சேதாரமும் இல்லாம இருந்திருக்கு’.
கவனமாக கேட்டுக்கொண்டிருந்த அனிதா, ‘சில நேரம் தீக்குச்சியின் தலை பகுதி மட்டும் எரிஞ்சு அணைஞ்சிடுதே அது மாதிரியா டாக்டர்?’ என்றாள்.
‘யெஸ், கிட்டத்தட்ட அப்படித்தான். எரிபொருள் தீர்ந்து முடிஞ்சதும் அப்படியே அடங்கிடற நெருப்பு. ஆரம்பங்கள்ல இது அதிகமான மதுப்பழக்கம் காரணமா நடந்திருக்கலாம்னு யூகிச்சாங்க, பின்னாளில் அசிட்டோன் வேதி பொருளால் இருக்கலாம், அதீத கொழுப்புச்சத்து எரிபொருளா இயங்கியிருக்கலாம், மீத்தேன் போன்ற வாயுக்கள் காரணமா இருக்கலாம்னு பல யூகங்கள் வந்தாச்சு. ஒரு முறை ஐரோப்பாவில் தீவிர வயிற்றுவலினு அறுவைசிகிச்சை தொடங்கினப்போ, வயிற்றை பிரித்த அதே நொடில பட்டுனு ஏதோ வாயு வெடிப்பு ஏற்பட்டு நீல நெருப்பு பற்றியிருக்கு. டாக்டர்கள் இருந்ததால உடனே நெருப்பை அணைச்சு, சிதறல்கள் ஒழுங்கு பண்ணி அறுவைசிகிச்சை முடித்து அவர் நலமா வாழ்ந்ததா குறிப்புகள் இருக்கு. ஆனாலும் இந்த நிகழ்வுல டாக்டர்கள் பயன்படுத்திய எலக்ட்ரானிக் பொருளோட தீப்பொறி மூலமா தான் நெருப்பு பற்றியதா டாக்டர்கள் சொல்லி இருக்காங்க, ஸோ அது ஸ்பான்டனியஸ் ஹியூமன் கம்பஸ்ஷன்னு சொல்ல முடியாது ஏன்னா நெருப்பு ஒரு வெளிக்காரணி மூலமா தான் தொடங்கியிருக்கு’.
‘அப்போ இந்த மாதிரியான எல்லா நிகழ்வுகளுமே ஏதோ ஒரு தெரியாத வெளிக்காரணி மூலமா தோன்றியிருக்கலாமே டாக்டர்’.
‘இருக்கலாம், முக்கியமான எல்லா நிகழ்வுகளிலும் பக்கத்தில நெருப்புக்கான காரணிகள் இருந்திருக்கானு சோதிச்சிருக்காங்க. நிறைய இடங்கள்ல இருந்திருக்கு, சில இடங்கள்ல இல்ல ஆனா காரணி என்னவா இருந்தாலும் இந்த மாதிரி தீவிரமான நெருப்புக்கான எரிபொருள் நம்ம உடம்புல இல்லாம பாத்துகிறதுக்கான பாதையைத் தான் நம்ம மருத்துவம் எடுக்கணும். அதுக்கு 300 வருஷத்துக்கு மேலா நம்ம மருத்துவத்தில பதில் இல்ல’.
காலேஜ் வாசலில் அனிதா இறங்கிக்கொண்டாள். ‘இந்த மாதிரி என்னனே தெரியாம புரியாம தவிக்கிற பெத்தவங்களோட ரெண்டு குழந்தைய காப்பாத்தினா போதும், அதிலேயே டாக்டர் ஆக நினைச்ச என்னோட விருப்பம் நிறைவேறிடும் சார். இந்த நிலைமை தெரிஞ்சா நீங்க கண்டிப்பா வருவீங்கனு தெரிஞ்சு தான் கூப்டேன், நன்றி டாக்டர்’, ஜன்னல் வழியாகவே விடைபெற்று கொண்டிருந்தாள். ‘இட்ஸ் ஓகே மா, ஆனா இந்த ரெண்டு குழந்தைய காப்பாத்தினா போதும்னு இருந்திடாத, இன்னும் எத்தனையோ ஆயிரம் பேர உன்னால காப்பாத்த முடியும்னு எனக்கு தெரியும். யாருக்கோ நடக்குற கஷ்டங்களையும் தனக்கா நெனைக்கிற உன்னமாதிரியானவங்க கைக்குத்தான் மருத்துவம் சேரனும். அந்த நம்பிக்கைல தான் பிளஸ்2 ல இருந்தே உன்ன மாதிரி பத்து பேரையாவது அடையாளம் கண்டுபுடிச்சு டாக்டர் ஆக்கிட என்னால முடிஞ்ச விஷயங்கள செய்றேன். ஸோ நாட் ஜஸ்ட் ட்டூ’.
‘கண்டிப்பா டாக்டர்’, புன்னகைத்தாள்.
‘சரி அவுங்கட்ட இருந்து வேற இன்ஃபர்மேஷன் கெடச்சா கால் பண்ணு’.
‘ஓகே டாக்டர்’.
**
சண்முகம் காரின் பின்னிருக்கையைப் பார்த்து பாதி திரும்பியபடி, ‘பக்கத்துல வந்துட்டோம் டாக்டர், இதே ரோட்ல நேரா இருபது கிலோமீட்டர் போனா ஆவுடையானூர் இங்க கொஞ்ச தூரத்துல இடதுபக்கம் பத்து கிலோ மீட்டர் போனா எங்க சுடலமாடன் கோவில். நேத்தே பூசாரிட்ட பூசைக்கு சொல்லிட்டேன், வந்திருப்பார். சாமிய கும்பிட்டுட்டு அப்டியே ஆவுடையானூர் போய்டலாம்’.
‘ஓகே சண்முகம் கண்டிப்பா. நான் திருநெல்வேலி, நாகர்கோவில்லாம் வந்திருக்கேன் ஆனா தெற்குப்பக்கம் உள்ள கிராமங்கள், குலதெய்வம் கோவில்கள்லாம் பார்த்ததில்லை, பார்க்கணும். நீ வந்திருக்கியா அனிதா?’.
‘இல்ல டாக்டர், நான் மதுரை தாண்டி இப்போ தான் முதல்தடவையா வர்றேன்’.
‘அப்போ உங்க ரெண்டு பேருக்குமே எங்க ஊரு புடிக்கும்’ என்றான் சண்முகம்.
அனிதா கார் ஜன்னல் கண்ணாடியை இறக்கி, அந்த வறண்ட நிலப்பரப்பைப் பார்த்துக்கொண்டே வந்தாள். சுற்றிலும் மேடு பள்ளங்கள் நிறைந்த வறண்ட முட்காடுகள், வெயிலொடு விளையாடியபடி இருந்த புழுதிக்காற்று, எங்கோ தலைதூக்கித் தெரியும் தூரத்துப் பனைமரங்கள், இவை அனைத்தும் பல்வேறு கேள்விகளாலும், புதிர்களாலும் வறண்டு தெளிவில்லாது புழுதி படிந்த தன் உள்மனதின் வெளிபிம்பமாய் அவள் உணர்ந்தாள். திடீரென சற்று தூரத்தில் கொத்தாக பச்சைக் கிளைபரப்பிய மரம் தெரிந்தது, கிளையிலும் உச்சியிலும் ஆங்காங்கே மஞ்சள் பூக்கள். கார் அதை நோக்கி நகர்ந்து கொண்டே சென்று அருகில் வந்து நின்றது. அனிதா காரில் இருந்து இறங்கி சற்று தொலைவில் இருந்து கவனித்த மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஓங்கி வளர்ந்து முதிர்ந்த பெரிய இரட்டை மரங்கள் அவை, நிலமெங்கும் மஞ்சள் பூ உதிர்த்திருந்தது, அந்த இடம் முழுதும் புகை சூழ்ந்து பரவி, மென்மையான இனிய மணம் கமழ்ந்தது. டாக்டர் சிவராமன் காரில் இருந்து இறங்கி மூச்சை இழுத்தபடி, ‘ஹ்ம்ம் இந்த மண்ணுக்கும் ஒரு தனி வாசம் இருக்கு’ என்றார். ‘ஆமா டாக்டர், பூசாரி வந்து பூசையும் போட்ருக்கார் அதான்…’ என்று சண்முகம் முடிப்பதற்குள், மரத்தடியில் சிறிய சிமெண்ட் பூசிய தளத்தின் பக்கம் இருந்து, ‘என்னலே சம்முகம் எப்டி இருக்க?’ என்று குரல் கேட்டது. ‘எல்லாம் நல்லாருக்கோம் சாமி, நீங்க சௌக்கியந்தானா?’ என்று பூசாரியை கேட்டபடி சண்முகம் மரத்தடியை நோக்கி நடந்தான்.
சில நிமிட பேச்சு, அறிமுகங்களுக்குப்பின் சுடலைமாடனுக்கு பூசை நடந்தது. கையில் அரிவாள் ஏந்தியபடி இருந்த இரண்டடி உயர சுடலைமாடன் சிலைக்கு புதிய மாலை போட்டு, தேங்காய் உடைத்துப் படைத்தார் பூசாரி. பழங்கள், எலுமிச்சை, வெற்றிலை, இவற்றோடு ஒரு மது பாட்டிலும் படைக்கப்பட்டிருந்தது. தீபாராதனை, தூபம் போட்டு பூசை முடித்து கும்பிட்டு, தேங்காய், பழம், எலுமிச்சை பிழிந்து தெளித்த பிடிமண் மற்றும் இதர பூசித்த பொருட்கள் வாங்கிக்கொண்டான் சண்முகம். அனைவரும் வணங்கி விடைபெற்றனர். ‘இங்க வந்ததுக்கப்பறம் தான் சுரேஷ நெருப்பு அண்டலனு வள்ளி சொல்லிட்டே இருப்பா, நானும் அதேயே நம்புறேன். என்ன இருந்தாலும் அடுப்பு, நெருப்புனு அதோட எப்பவும் நெருங்கி பழகுறது பொம்பளைங்க தான சார் அவுங்க சொன்ன சரியாதான் இருக்கும்’ என்று டாக்டரிடம் பேசியபடி சண்முகம் காரில் ஏறிக்கொண்டான். கார் ஆவுடையானூர் நோக்கி கிளம்பியது.
**
‘உள்ள வெக்க தான், வெளித்திண்ணைல உட்காந்துகிடலாம்லா காத்தோட்டமா இருக்கும்’ என்றார் சுருட்டாங்கண்ணு தாத்தா. பெயர் வேலுக்கண்ணு தான் அதிகமாக சுருட்டு பிடிப்பதால் சுருட்டாங்கண்ணு தாத்தா என்றே ஊருக்குள் அறியப்படுபவர். கரிய நிறம், நரைத்த மீசை, வயோதிகத்தால் ஒடுங்கிய உடம்பு ஆனாலும் நடையில், பேச்சில் திடம் இருந்தது. ஒரு பக்கத் தோள், கை, முதுகு, வயிறு பகுதியின் தோல் அனைத்தும் பிசைந்து ஒழுங்கற்று பரப்பிய மைதா மாவைப்போல் விரிந்திருந்தது. அனைவரும் உள்ளே வந்த மறுநிமிடத்தில் முழுக்கை ஜிப்பாவை மாட்டிக்கொண்டார். சண்முகம், அனிதா, டாக்டர் சிவராமன் மூவரும் காபி குடித்த டம்ளரை வைத்துவிட்டு வெளித்திண்ணைக்கு நடந்தனர்.
பழைய மர மேஜையைத் திறந்து ‘ஏடேய் சுருட்டு எங்கடே காங்கல’ என்றார்.
‘ஆச்சி இப்போ தான் பொடிச்சாங்க தாத்தா’ என்று கத்தியபடி, திண்ணையில் சுருட்டு சுருட்டிக் கொண்டிருந்தான் பேரன். திண்ணைக்கு வந்து சுருட்டி கட்டி இருந்த இரண்டு சுருட்டை மட்டும் எடுத்து ஜிப்பாவில் போட்டுகொண்டு, ‘சரி மிச்சத்த சுருட்டி மேசைல போட்ரு’ என்று கூறிவிட்டு கருங்கல் திண்ணையில் அமர்ந்து கொண்டார். வாசலின் எதிர் திண்ணையில் சண்முகம், டாக்டர், அனிதா மூவரும் அமர்ந்திருந்தனர்.
சண்முகம் தாத்தாவைப் பார்த்து, ‘அதான் தாத்தா போன்லயே சொன்னேன்ல பயலுக ரெண்டு பேருக்குமே ஒரே மாதிரி நடந்ததால இது பரம்பர வழியா வர்ற மரபு நோயா இருக்குமோனு சந்தேகப்பட்றாங்க. இவுங்க நமக்கு வேண்டிய டாக்டர் அதான் உங்களோட காயங்களையும் நேர்ல பாத்திட்டு, விசாரிக்கனும்னு சொன்னாங்க’.
‘ஓ! எனக்கும் கைக்கொழந்தையா இருக்கும் போது, தானா தான் நெருப்பு பத்திக்கிட்டதா எங்கம்மா சொல்லுவா. வரும்போது வெத்து உடம்பா தான இருந்தேன் காயத்தை பாத்திருப்பீங்கல்லா?’ என்றார் டாக்டரை பார்த்து.
‘ஆமா அய்யா நேரடி தீக்காயம் தான், எந்த வேறுபாடும் இல்ல. ஆனா உங்களுக்கு ஒரே தடவ மட்டும் தான் அப்டி நடந்ததா?’
‘ஆமா, ஒரே தடவ நடந்ததாதான் எங்கம்மா சொல்லிருக்கா. அம்மாவும், அத்தையும் அந்த ஒரு நாள் நெருப்ப அணைச்சு, என்னை சுருட்டி தூக்கிட்டு ஓடினத தான் அடிக்கடி சொல்லிருக்காங்க அதத்தவிர எனக்கு வேற ஏதும் ஞாபகமில்ல.’ என்றார் தாத்தா.
‘ஓ! அப்போ என்ன வைத்தியம் பண்ணாங்கனு யாரும் சொல்லிருக்காங்களா?’, டாக்டர் கேட்டார்.
‘இந்த கிராமத்துல இன்னிக்கு நல்ல டாக்டர பாக்கணும்னாலும் டவுனுக்கு தான போவனும், ஏதோ அதிசயமா இப்போத்தான் எங்க திண்ணைலயே பாக்குறேன். அப்போலாம் ஊரு வைத்தியர் போடற பத்தும், சாரும், வேரும், மூலிகையும் தான் மருந்து. அதவிட்டா சாமி தான்’ என்று சிரித்தார் தாத்தா. ஜிப்பாவில் இருந்து சுருட்டை எடுத்துக்கொண்டார், ‘தப்பா நெனச்சுக்காதீங்க டாக்டர் சார், எனக்கு இந்த சுருட்டு இல்லைனா எதுவும் ஓடாது’. சுருட்டைப் பற்றவைத்து, அதன் மென்மணத்தை இழுத்துக்கொண்டார். ‘ஆனா எங்க ஆச்சி சொல்லுவா, அந்த சுடலைமாடன் தான் உன்ன காப்பாத்துனான், என்னிக்கும் அவன் கோவிலுக்கு போய் கும்பிடறத விட்டுடக்கூடாதுனு. அவ சொன்னதுக்காக இன்னும் போய்ட்டு தான் இருக்கேன்’.
கேட்டுக்கொண்டே இருந்த டாக்டர், சற்று கூர்ந்து எதையோ கவனித்து யோசித்து, ‘அந்த கோவில்ல இருந்த அதே வாசம் இங்கயும் இருக்கு. இந்த ஊருக்கே அந்த வாசம் இருக்குமோ’ என்றார் சண்முகத்தை நோக்கி புன்னகைத்த படி.
ஹா ஹா என்று சிரித்து சுருட்டை இழுத்து ஊதியபடி, ‘திருக்கனத்தி வாசம்’ என்றார் தாத்தா.
‘அதென்ன?’ டாக்டர் கேட்டார்.
‘திருக்கனத்தி எங்க சுடலைக்கு போடுற தூபம்’, என்றான் சண்முகம்.
‘மித்த பூசைகள்ல போடுற சாம்பிராணி தூபம் இங்க கிடையாது. எங்க வழி சுடலைக்கு மட்டுமே தான் இந்த முறை உண்டு. திருக்கனத்தி பூவ காயவச்சு பொடியாக்கி அத சாம்பிராணி மாதிரி தூபம் போடுவாங்க. அதோட வாசமே தனி. அது புடிச்சு போய் தான் சுருட்டுல அத சேத்து இழுக்க ஆரம்பிச்சேன்’ என்று சிரித்தார் தாத்தா.
டாக்டரும், அனிதாவும் வியப்பான குழப்பங்களோடு பார்வை பகிர்ந்துகொண்டனர்.
மேலும் சற்று நேரம் உரையாடியபின், ‘சரி சீக்கிரம் சின்னவனையும் கோவிலுக்கு கூட்டிட்டு வாடே எல்லாம் சரியாப்போகும்’ என்றார் தாத்தா.
‘ஆமா தாத்தா, அவனுக்கு காயம் ஆறட்டும் அடுத்த மாசம் கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன், கைக்கொழந்தையா இருந்ததால இவ்ளோ நாள் வரமுடில. பாப்போம், நானும் இந்த நேரத்துல கோவிலுக்கு வந்திட்டு போனா நிம்மதியா இருக்கும்னு தான், இவுங்க உங்கள பாக்கணும்னு கேட்டதும் கூட்டிட்டு வந்தேன். பூசாரிட்ட சுடலைக்கு பூச போட்ட சாமான் எல்லாம் வாங்கிட்டு தான் போறேன், சுடலை தான் எல்லாம் சரியாக்கித்தரனும்.’ என்று கூறி விடைபெற்றுக் கொண்டான் சண்முகம்.
திரும்பிச் செல்லும் வழியில், திருக்கனத்தி பற்றி மேலும் சண்முகத்திடம் விசாரித்துக் கொண்டே சென்றனர் டாக்டரும், அனிதாவும். திருக்கனத்தி மரத்தில் பூக்கும் மஞ்சள் வண்ண பூ, அதைக் காயவைத்துப் பொடித்து சுடலைக்கு தூபத்தில் பயன்படுத்துவதும், இந்த சுடலையன்றி வேறெங்கும் அதன் பயன்பாடு இல்லை என்பதைத் தாண்டி வேறு தகவல்கள் சண்முகத்திற்கு தெரியவில்லை.
**
ஒரு வாரம் கழித்து டாக்டரும், அனிதாவும் மீண்டும் சந்தித்தனர். ‘என்ன டாக்டர், இன்னிக்கு காலைலயே காலேஜ் பக்கம் வந்திருக்கீங்க?’.
‘ஆமா அனிதா, ஒரு வாரமா அந்த திருக்கனத்திதான் மறுபடியும் நெருப்பு வராம தடுத்திருக்குமோனு பேசிட்டே இருந்தோம்ல?’.
‘ஆமா டாக்டர், ஆனா அதைத்தான் உறுதியா சொல்லமுடிலயே’.
‘யெஸ், ஆனா இப்போ சொல்ல முடியும்’.
‘எப்டி டாக்டர்?’ அனிதா வியந்தாள்
லேப்டாப்பை திறந்து, இதோ இது தான் அந்த திருக்கனத்தி பூ என்று அதன் படத்தை காட்டினார். அகன்ற ஒற்றை மஞ்சள் இதழ், கீழ் நோக்கி குவிந்து கூரிய முனை கொண்டதாய் இருந்தது, இதழ் காம்புடன் குவிந்து இணையும் மைய்யத்தில் மிகச்சிறிய நீள் வட்டமான நீல நிறம்.
‘இத பார்த்தா உனக்கு என்ன தோணுது’ என்றார் டாக்டர்.
‘ஒரு சின்ன மஞ்சள் பூ. வேறேதும் தோணலையே’.
‘அந்த படத்தை தலைகீழாக சுழற்றினார். இதழ் மேல் நோக்கி குவிந்து இருந்தது. இப்போ இது ஒரு தீபச்சுடர் மாதிரி இல்ல?’ என்றார்.
கண்கள் விரித்து ‘ஆமா டாக்டர்’ என்றாள்.
‘ஒரு வாரமா எனக்கு தெரிஞ்சவங்க மூலமா நிறைய சித்தா டாக்டர்ஸ்ட இத பத்தி விசாரிச்சேன் யாருக்கும் தெரில. நேத்து ஒரு குற்றாலம் மூலிகை வைத்தியர்ட்ட பேசினப்போ, திருக்கனத்தி பத்தி அவருக்கு தெரிஞ்சிருந்தது. பலநூறு வருஷம் முன்னால தென்மாவட்டங்கள்ல சித்த வைத்திய முறைகள்ல இருந்திருக்கு திருக்கனத்தி. உஷ்ணத்திற்கு எதிரான உபயோகங்கள்ல இத பயன்படுதிருக்காங்கனு சொன்னார்’.
‘பல நூறு வருஷம் முன்னாடியா?’ என்றாள் மேலும் வியப்புடன்.
‘ஆமா, நம்ம அறிவியலுக்கும், மருத்துவத்துக்கும் இன்னிக்கும் பதில் தெரியாத இந்த கேள்விக்கு நம்ம மரபுல பல நூறு வருஷம் முன்னாடியே பதில் இருந்திருக்கு. இன்னிக்கு பேச்சுவழக்குல இருக்கிற பெயர் தான் திருக்கனத்தி. சித்தர் குறிப்புக்கள்ல இருக்கிற அதோட உண்மையான பெயர்,’
“திருக்கனலகற்றி”.
Ezthu payanam thodaratum…