
ஐல் ஆஃப் மேன். இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையே உள்ள குட்டி தீவு. தாம்சன் முதலில் என்னை ஐல் ஆஃப் மேனுக்கு அழைத்த போது கொஞ்சம் பயமாக இருந்தது. பேச ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே இவன் என்ன அவனது வீட்டிற்கு டீ பார்ட்டிக்கு அழைக்கிறான். அதுவும் வீடு பக்கத்திலா இருக்கிறது. அவனோடு பேஸ்புக்கில் பேசியபோதெல்லாம் அவன் இங்கிலாந்தில்தான் எங்கோ இருக்கிறான் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
அன்று க்ரோனாநாட்ஸை படித்துவிட்டு என்ன அருமையான கதை தெரியுமா? என ஒரு காமிக்ஸ் குரூப்பில் பதிவிட்டேன். அன்றைக்குதான் தாம்ஸனின் அறிமுகம் கிடைத்தது. ஆனால் அவன் க்ரோனாநாட்ஸை பேசிய பேச்சுக்கு இனிமேல் அவன்கூட பேச கூடாது என்று நினைத்திருந்தேன். அன்று இரவு அவனாக வந்து பேச்சு கொடுத்தவன் டைம் ட்ராவல் பற்றி நிறைய பேசி கொண்டிருந்தான். பிறகு இசை, திரைப்படங்கள், புத்தகங்கள் என்று பேச்சு எங்கெங்கோ சென்றபோது காலை 5 மணியாகிவிட்டது. நான் வேலைக்குப் போக வேண்டுமென்று கிளம்பினேன். அவன் நடுராத்திரி ஆகிவிட்டதாக தூங்க சென்றுவிட்டான். என்னைவிட 5.30 மணி நேரம் பின்னால் இருக்கிறான். ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் ஆராய்ச்சி மாணவன் என்றாலும் காமிக்ஸ் மேல் அலாதி பிரியம் அவனுக்கு. ஆனால் அவன் படிக்கும் காமிக்ஸ் எதுவும் அறிவியல் சார்ந்து இருக்காது. பெரும்பாலும் மனிதனின் சிந்தனைகள் குறித்தே பேசுவான். தற்போதைய லீஜியன் காமிக்ஸில் ப்ராய்டின் தத்துவங்கள் என அவன் பேச நான் ஆர்வமாய் கேட்டு மட்டும் கொண்டிருப்பேன்.
அன்றைக்கு கோசினி பற்றி பேசிக் கொண்டிருந்தபோது “எனது வீட்டிற்கு வருகிறாயா?” என்று கேட்டான். விளையாட்டாகக் கேட்கிறான் என்றுதான் நினைத்தேன். ஆனால் எனக்கு டீ பார்ட்டி தர விரும்புவதாய் சொன்னான். எனக்கு முக்கியமான ஒன்றைக் காட்டப்போவதாகவும் சொன்னான். என்னுடைய ஐரோப்பிய பயண ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டேன். டாக்ளஸ் விமான நிலையத்தில் இறங்கினால் தாம்சன் எனக்காகக் காத்திருந்தான். அவனை வெள்ளையன் என்று சொன்னால் நம்புவது கடினம்தான். கருப்பு நிற கேசத்தோடு, சாம்பல் நிறத்தில் இருந்தான். பேஸ்புக் போட்டோவில் பார்த்ததை விட கொஞ்சம் வெளிர் சாம்பல் நிறம்.
நீண்ட நாட்கள் பழகியவனைப் போல் எனது தோள் மேல் கையைப் போட்டுக்கொண்டு பேசிக்கொண்டே வந்தான்.
“உனக்கு தெரியுமா? நான் இந்தியாவிற்கு வர ஆசைப்பட்டதுண்டு”
எனக்கு அது வியப்பாக தோன்றவில்லை. அந்த சமயம் அவன் மேதமையை உடைக்க ஆசைப்பட்டேன்.
”ஒருவேளை நீ ஆசைப்படலாம். நாள்தோறும் அங்கு உள்ள கோவில்களை சுற்றிப்பார்க்க ஏராளமான வெளிநாட்டினர் வருவதைப் பார்த்திருக்கிறேன்”
”ஆனால் நான் கோவிலை சுற்றிப்பார்க்க நினைக்கவில்லை. பெரும்பாலும் ஐரோப்பியர்கள் இந்தியாவை மாந்திரீக அடையாளத்தோடுதான் புரிந்திருக்கிறார்கள். இண்டியானா ஜோன்ஸில் பார்த்திருப்பாயே? ஆனால் நான் அப்படியில்லை”
நாங்கள் பேசிக்கொண்டே அவனது கார் அருகில் வந்திருந்தோம். காரில் ஏறியதும் ஹாங்க் ஸ்னோவின் பாடல் ஓடியது. எனக்கு அவனிடம் மூக்கு உடைபட்டது மறந்து ஆர்வத்தில் பாடலை மெதுவாக வாய்க்குள் முணுமுணுத்தேன்.
”ஹே.. உனக்கு ஹாங்க் ஸ்னோ பிடிக்குமா?” என்றான்.
“நிறைய கேட்டதில்லை. I’ve been everywhere man மட்டும் அதிகம் பிடிக்கும்”
“எனக்கும் அந்தப் பாடல் பிடிக்கும். நான் பள்ளி வயதில் இங்கிலாந்து நகரங்களை மனதில் வைத்துக் கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டேன். அப்போது எனது அப்பாதான் இந்தப் பாடலைப் போட்டு எனக்கு பயிற்சி கொடுத்தார்”
அவன் சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது.
”ஹே தாம்சன்.. இதில் இங்கிலாந்து நகரங்களின் பெயரே வராதே! எல்லாம் அமெரிக்க நகரங்களின் பெயரல்லவா வரும்?”
”ஹாங்க் ஸ்னோ பாடியது அமெரிக்க நகரங்களைதான். ஆனால் இது தொடங்கியது ஆஸ்திரேலியாவில்.. தொடர்ந்து நியூஸிலாந்து, அயர்லாந்து, யூகே.. நிறைய வந்துவிட்டது.”
அவன் பேசியதை கேட்டப்படியே பச்சை வண்ணத் தாளின் நடுவே போடப்பட்ட கருப்பு கோட்டைப் போல நீண்டு செல்லும் சாலையை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவனது வீடு நியூடவுனில் இருந்தது. அது ஒரு சிறிய கிராமம்தான். பயணித்த களைப்பில் அவன் படுக்கையறையைக் காட்டியதுமே சாய்ந்து விட்டேன். விழித்த போது இருட்டியிருந்தது. ஜன்னல் வழியே எட்டிபார்த்த போது ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன.
”நீ எழுந்துவிட்டாயா?” என்று கேட்டபடியே கையில் இரண்டு காபி கோப்பைகளுடன் உள்ளே வந்தான் தாம்சன்.
ஒன்றை வாங்கி பருகினேன். அது காபி இல்லை டீ. ஆனால் நன்றாக இருந்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தேன்.
“என் மேல் தவறில்லை. டீ பார்ட்டி என்றுதானே சொன்னேன்” என்று சொல்லி சிரித்தான். ஐரோப்பியர்கள் டீயில் பால் சேர்க்கமாட்டார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் இவன் வித்தியாசமாக இருந்தான்.
”உன்னைப் பார்க்கும்போது எனக்கு ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது” என்றேன்.
“இங்கிலீஷ் க்ளாசிக்ஸா?”
“இல்லை தமிழ். நா.பிச்சமூர்த்தி எழுதியது!”
“என்ன எழுதினார்?”
“ஒருவனுக்கு வீடு வாசலே கிடையாது. 365 நண்பர்கள் மட்டும்தான். வாரம் தோறும் ஒவ்வொரு நண்பர் வீடாக செல்வான். இந்த நண்பரிடம் பணம் வாங்கி அந்த நண்பர் வீட்டுக்கு பரிசுகள் வாங்கி போவான்.. தொடர்ந்து இதையே செய்து கொண்டிருப்பான்..”
”ஆனால் இப்போது நீதானே என் வீட்டிற்கு வந்திருக்கிறாய்” மீண்டும் சிரித்தான். “ஆனால் அது ஒரு அற்புதமான விஷயம் யாரால் அப்படி இருக்க முடியும்? ஜென் கதைகளில் வருவது போல..”
”நீ ஜென் படித்திருக்கிறாயா?”
“சில கதைகள் மட்டும்.. நிலவைப் பரிசளிக்க இயலாத துறவியின் கதைபோல சில.. சரி வா உனக்குக் காட்ட ஒன்று வைத்திருக்கிறேன்”
”வீட்டில் யாரும் இல்லையா?”
“இப்போதைக்கு நான் மட்டும்தான்”
ஒரு கூடத்திற்குள் அழைத்து சென்றான். அவனது ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் சார்ந்து ஏதவாது கருவிகள் இருக்கும் என்று நினைத்தேன். அங்கு இருந்தவை வெறும் புத்தகங்கள்தான். அங்கிருந்த சிறிய மேசையில் எனக்கான டீ பார்ட்டி நடந்தது, நான் கையில் கொண்டு வந்த அந்த கோப்பை டீயுடன்!
”நீ காலப்பயணத்தை நம்புகிறாயா? உண்மையான காலப்பயணம் எப்படி இருக்கும் என நினைக்கிறாய்?” எனக் கேட்டான்.
”நான் காலப்பயணம் பற்றி ஹாலிவுட் படங்களில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அதில் உனது கருத்துகள் வேறு என்பதை நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம்!” என்றபடி டீ கோப்பையை மேசையில் வைத்து விட்டு நாற்கலியில் அமர்ந்து கொண்டேன்.
”ஆமாம். ஆனால் ஏன் காலப்பயணம் செய்பவர்கள் சுயநலத்துக்காகவே செய்வதாக படங்களில் இருக்கின்றன. ஏன் அவர்களது வாழ்க்கைக்குள்ளேயே பயணித்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே பார்த்து விட்டதையோ, இனிமேல் பார்க்க போவதையோ முன் கூட்டியே பார்ப்பதில் என்ன இருக்கிறது?”
“அப்படியா.. சரி தாம்சன்.. நீ காலப்பயணம் செய்து எங்கு செல்வதாய் உத்தேசமாம்! நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்த தருணத்திற்கா..?”
“அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பது என் கருத்து”
“என் கருத்தும்தான்.. ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன்! இல்லையென்றால் டெஸ்லாவைப் பார்க்க..!”
“இல்லை.. ஒரு டீ பார்ட்டிக்கு செல்ல இருக்கிறேன்! ஹாக்கின்ஸின் டீ பார்ட்டி! என்னால் போகவும் முடியும். உனக்குத் தெரியுமா?” சொன்னபடியே ஒரு கதவை நோக்கி கையைக் காட்டினான்.
”இத்தனை நாளும் ஹாலிவுட் படங்களில் வருவது போல அல்ல காலப்பயணம் என்றாயே?” கோவமாக நான்.
”இப்போதும் அதேதான் சொல்கிறேன். ஹாலிவுட் படங்களில் வருவது போல அல்ல.. காலப்பயணம்.. ஆனால் முழுவதுமாக அல்ல!”
“நீ மெய்யாகவே கால எந்திரத்தை தயார் செய்துள்ளாயா?”
”அதைப்பற்றி நான் விளக்கினாலும் உனக்கு புரியாது. நீ தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் என்னால் அதிகபட்சம் ஒருமுறை காலப்பயணம் செய்ய முடியும் என்பதுதான்”
“ஆனால் ஏன் ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ்”
“உடலால் அல்லாமல் மூளையால் வாழ்ந்த அவர் காலப்பயணம் சாத்தியம் என்பதை நம்பினார் என்பதற்காக மட்டுமல்ல. ஒருவேளை அது ஒருமுறை சாத்தியமானாலும் கூட அதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான். அவரிடம் ஒன்றே ஒன்றை மட்டும் நான் கேட்க வேண்டும்”
நான் அவன்மீது இருந்த அவநம்பிக்கைகளை விட்டு மிகவும் நம்பிக்கையோடே கேட்டேன் ”இது சாத்தியம் என்று நீ நம்புகிறாயா?”
“திருடனுக்கு நிலவை பரிசளிக்க நினைத்த துறவிக்கு அது சாத்தியமா? அவருக்கு அது சாத்தியப்பட்டிருந்தால்…?”
மொத்த அறையும் அமைதியாக இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. நான் பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவு தாண்டி கேள்விப்படாததொரு தீவில் ஒருவனோடு டீ குடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன். அவன் இந்த டீ விருந்தில் இருந்து வேறு ஒரு டீ விருந்துக்கு செல்லப்போவதாக சொல்கிறான். அதுவும் 2009ல் ஹாங்கிங்க்ஸ் நடத்தி முடித்த ஒரு டீ விருந்திற்கு.. ஹாங்கிங்க்ஸும் இவனை போல மறை கழன்றவறாக இருப்பாரோ! எல்லாம் மாயை போலத் தோன்றியது.
”நீ நம்ப வேண்டாம். குறைந்த பட்சம் என் நோக்கம் புரிந்தாலாவது மகிழ்ச்சி. இதுவொரு அருமையான டீ விருந்து” பேசியபடியே சுட்டிக்காட்டிய கதவை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
”உண்மையாகவே இது ஒரு அருமையான டீ விருந்துதான். உனக்காக நான் இங்கே காத்திருக்கட்டுமா”
“இல்லை அது தேவையற்றது. என்னை அந்த பிச்சமூர்த்தி கதை நாயகனை போலவே நினைத்துக்கொள்” மீண்டும் சிரித்தான்.
எனக்கு அவன் மேல் மெல்லியதாக ஒரு நம்பிக்கை எழுந்தது.
”ஒருவேளை நீ உண்மையாகவே ஹாக்கிங்ஸை சந்தித்தால் எனது சார்பாக அவருக்கு ஒரு முத்தம் கொடுத்துவிடு!”
அவன் உள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டான்.
அதற்கு பிறகு தாம்சனை நான் பார்க்கவே இல்லை. இந்தியா திரும்பினேன். வேலைகளில் கவனம் செலுத்தினேன். தாம்சன் நினைவு வரும்போதெல்லாம் மொபைலை எடுத்து அவனது முகப்புத்தகத்தை ஆராய்வேன். அதில் எந்த புதிய பதிவும் இருக்காது. முன்னர் அவன் என்னோடு பேசும்போதெல்லாம் எனது நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் அவன் பின்னால் இருப்பதை நினைத்து கொள்வேன். இப்போது அவன் 11 ஆண்டுகள் தாண்டி எனக்கு பின்னால் இருக்கிறான். அதை நினைக்கும்போது எனக்கு வியப்பாகவும், சில சமயங்களில் முட்டாள் தனமாகவும் இருந்தது. பல ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் இங்கிலாந்து செல்லும் சூழலில் அவனை நினைத்து பார்க்கிறேன். ஒருவேளை அந்த கதவுக்கு பின்னால் எதுவுமே இல்லையா? என்னை முட்டாளாக்கிவிட்டானா? கரை புரண்ட சிந்தனைகளோடு கண்களை மூடினேன்.
லிவர்பூலின் மக்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்களாக இருக்கிறார்கள். எவ்வளவு வேகமாக சென்று கொண்டிருந்தாலும் முகத்தில் ஒரு கடுகடுப்பை காண முடியவில்லை. சென்னையில் பார்க் ஸ்டேஷனிலிருந்து செண்ட்ரலுக்கு வேகவேகமாய் ஓடும் மக்களின் நினைவு வந்தது.
காஃபி குடிக்கத் தோன்றியது. உள்ளே சென்று அமர்ந்தேன். அழகான பெண்மணி ஒருத்தி அருகில் வந்து கேட்டாள்.
“உங்களுக்குப் பருக ஏதாவது தரட்டுமா?”
எனக்கு காபி பருகத் தோன்றியதே தவிர எந்த காஃபி பருகலாம் என நான் யோசிக்கவே இல்லை. எனது குழப்பத்தைப் புரிந்து கொண்டு அவளே கேட்டாள்.
“நீங்கள் நுவாசெத் முயற்சிக்கிறீர்களா?”
சரி என்பது போல தலையை ஆட்டினேன். கோப்பையை மேசையின் மேல் வைத்தாள். எனக்குத் தெரிந்த பிரெஞ்சில் “க்ராசியாஸ்” என்றேன்.
அவள் மெல்ல சிரித்துக்கொண்டே “வூ பார்லெ எஸ்பாக்னோல்” என்று சொல்லிச் சென்றாள். காபியை எடுத்துப் பருகினேன். ஒரு வினாடி எனக்கு காலமே மொத்தமாக நின்றுவிட்டது போலப்பட்டது. இது காபியல்ல டீ. அன்றைக்கு தாம்சன் கொடுத்த அதே டீயின் சுவை. I was toting my pack along the dusty Winnemucca….. இது I’ve been everywhere man.. கஃபேயிலிருந்து ஒலிக்கத் தொடங்கியது.
எதிரே அது.. அது தாம்சன்தான்.. அதே கருப்பு முடி.. வெளிர் சாம்பல் நிறத்தோல்.. ஆனால்.. அவன் ஒரு 35 வயது ஆளாக இருந்தான். எனக்கு இதயமே நின்று விடும் போல இருந்தது. என் அருகே வந்தான்
“இந்த பாடலை நீ மறந்திருக்க மாட்டாய் என்று நம்புகிறேன்”
“இல்லை.. கண்டிப்பாக இல்லை.. நீ தாம்சன்தானா?”
”உனக்கு இப்படி ஒரு கேடுகெட்ட டீயை யார் போட்டு தருவார் என எதிர்பார்க்கிறாய்” என்றபடியே வழக்கம்போல மெல்ல சிரித்தான்.
“ஓ மை காட்.. நீ.. நீ வந்துவிட்டாய். ஆனால் நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை?”
“நான் வரவே இல்லை.. நீதான் வந்திருக்கிறாய்! என்னைப் பார்த்தால் தெரியவில்லையா? நான் வளர்ந்திருக்கிறேன்.. உன்னைவிட 8 வருடங்கள் பெரியவனாய்..”
“ஆமாம் நீ என்னை விட பெரியவன்” அவன் பேசுவதை கவனிக்க முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் அருகில் அமர்ந்தான்.
“டீ பார்ட்டியில் கலந்து கொண்டாயா?”
”ம்ம்.. நான் மட்டும்தான்.. அதை அவர் வெளியே சொல்லவில்லை”
“நீ அவரிடம் என்ன கேட்டாய்?”
”அதை நான் வெளியே சொல்வதில்லை”
“என்னிடம் கூட சொல்லமாட்டாயா?”
அவன் பேசாமல் மௌனமாய் இருந்தான்.. நான் கோவமாக இருப்பது போல எழுந்தேன். ஆனால் அவனைக் கண்ட அதிர்ச்சியிலிருந்தே நான்
மீளவில்லை.
”அவருக்கு நீ கொடுக்க சொன்னதை கொடுத்தேன்”
நான் அவனை நெருங்கி கேட்டேன் “அவர் என்ன சொன்னார்?”
”எனக்கு முத்தத்திற்கு பதிலாக அந்த நிலாவை கொடுத்திருக்கலாமே என்றார்” மீண்டும் மெல்ல சிரித்தான். பிறகு எதிர்பாராத விதமாக என்னை கட்டித்தழுவி முத்தமிட தொடங்கினான். அவன் உதடுகளில் வித்தியாசமான டீ மணம் வீசியது.