இணைய இதழ் 95சிறுகதைகள்

போர் – ரக்‌ஷன்கிருத்திக்

போர் | வாசகசாலை

என் ஊர் மக்கள் நிலமற்ற எழைகளாய் பரதேசம் சென்றதற்குக் காரணம் நான்தான் என்கிறபோது ஒருவேளை அன்று நான் ஆயுதத்தைக் கையில எடுத்திருக்கக் கூடாதோ என்று நினைக்கிறேன். நான் ஆயுதத்தை எடுத்தது, என் ஊர் மக்களுக்காகதான் என்றாலும் கூட அதை அவர்கள் எனது தனிப்பட்ட பிரச்சனைக்காகத்தான் என்று நினைத்துவிட்டார்கள். நான் யாருக்கு எதிராக ஆயுதம் ஏந்தினேனோ அவர்களுடைய அடாவடித்தனங்களை இவர்களும்தானே அனுபவித்திருக்கிறார்கள்? நான் ஆயுதத்தைத் தூக்கியதற்கான புள்ளி வேண்டுமானால் எனது வீட்டிலிருந்து ஆரம்பித்திருக்கலாம், ஆனால், எனது நோக்கம் என்னவோ எல்லோருக்குமானதுதானே? இவர்களின் அடாவடித்தனங்களை தட்டி கேட்க, ஊரில் ஒருத்தருக்குக்கூடவா, தைரியம் இல்லாது போனது? இதற்கெல்லாம் ஒரு விடிவுக்காலமே கிடையாதா என்று அவர்கள் புலம்பிய நாட்களும் உண்டுதானே? அநீதியை எதிர்க்கத் துணிவில்லாதவன் சுயமரியாதையை எதிர்பார்த்து வாழ்வதில் என்ன நியாயம் இருக்கிறது? ஆயுதம் ஏந்தி போராடினால் இரு பக்கமும் இழப்பு ஏற்படத்தான் செய்யும். ஏன், அகிம்சை வழியில் போராடினாலும்கூட போராட்டக்காரர்களுக்கு இழப்பு உண்டு என்பது நமது சுதந்திரப் போராட்டக் காலத்திலயே நாம் அனுபவித்தவைதானே? நமது தலைமுறையாவது சுதந்திரமாக வாழவேண்டுமென்றால் நாம் போராடித்தானே ஆக வேண்டும்? நாம் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தாதவரை எப்படி பிரச்சனையில இருந்து வெளிவர முடியும்? அதற்கான தீர்வு வேண்டி அன்று நடந்தது இன்னும்கூட என் நினைவுகளில் பசும்மரத்தில் அடிக்கப்பட்ட ஆணியைப்போல பதிந்து கிடக்கிறது.

அன்றைய நாளுக்கு முந்தைய நாள் என் அண்ணன் செல்லக்கண்ணு ஒத்தவேம்புல இருந்து மூன்றடி உயரம், மூன்றடி நீளம், ஒன்றரை அடி அகலம் கொண்ட ஒரு மூங்கில் கூடை நிரம்பக் கருப்பட்டியை எடுத்துக்கொண்டு வியாபாரத்திற்காக தெற்கு வம்பளம் வழியே சுண்டவிளைக்கு சென்று கொண்டிருந்தான். அப்பொழுது, அந்த சாலையை ஒட்டி அமைந்திருந்த ஆத்தியடி சாமிக் கோவிலில் இருந்த இலந்தை மரத்தின் நிழலில் அமர்ந்து வீரபாண்டி மகன் மந்திரம் உட்பட சிலர் சீட்டு ஆடிக்கொண்டிருந்தனர். மந்திரத்திற்கு ஆட்டம் கைகூடாது போகவே, அவன் எழுந்துசென்று கோவில் வாசலில் வந்து நின்றுகொண்டு சாலையில் செல்வோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்நேரம் அவ்வழியில் என் அண்ணனான செல்லக்கண்ணு செல்வதைப் பார்த்துவிட்டு, “ஏலேய்… நா…ன், என்ன யாவாரம்ல?” என்றான்.

“கருப்பட்டி யாவாரம் பா… … …ன்.” என்றான் செல்லக்கண்ணு.


“ஏலேய், நாக்கு நம நமங்குதுல. வாயில ஒதுக்கிக்க செத்தோல கருப்பட்டித்துண்டு குடுத்துட்டுப்போல.” என்றான் மந்திரம்.


சைக்கிள் மிதிப்பதைக் குறைத்தபடி, “பா … … …ன், கோவிச்சிக்காதீய. பாரம் செத்தக்கூடுதலா இருக்குது, கூடை வாய வேற நல்லா சிக்குன்னு கட்டி வச்சிப்புட்டேன், சுருக்க அவுத்து எடுக்க முடியாது. ஒரு அர மணிக்கூறு பொறுத்துக்கிட்டியன்னா, சுண்டவிளைக்குப் போயிட்டு சுருக்கத் திரும்பிடுவேன். அப்ப, துண்டுக்கருப்பட்டி என்ன, முழுக் கருப்பட்டியே தந்துட்டுப்போறேன்.” என்றவாறு மிதியில் சற்று வேகம் கூட்டினான் செல்லக்கண்ணு.


அவனைப் பின்தொடர்ந்து சென்றவாறு, “ஒரு துண்டுக்கருப்பட்டிக்காவ, நீ மயிருவிளைக்குப் போயிட்டு வர்ற வரைக்கும் நான் இங்க தேவுடு காத்துட்டு இருக்கணுமால. வீரபாண்டித் தே … ன் மவன் உனக்கு அம்புட்டு இளக்காரமா போயிட்டானால செறிக்கியுள்ள!” என்று திட்டிக்கொண்டே செல்லக்கண்ணு சென்று கொண்டிருந்த சைக்கிளை அதன் பக்கவாட்டில் எட்டி உதைத்தான் மந்திரம்.


திடீரென்று உதைத்ததினால் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டுக் கீழிறங்கி பள்ளத்தை நோக்கி விரைந்தோடியது. பள்ளத்தில் கிடந்த ஒரு சிறிய கல் மீது சக்கரம் ஏறிக் கீழே சாய்ந்தது, சைக்கிளோடு சேர்ந்து செல்லக்கண்ணுவும் விழுந்து கிடந்தான். கருப்பட்டி அனைத்தும் முங்கில் கூடையைப் பிய்த்துக்கொண்டு சிதறியோடியது.


கோவிலில் சீட்டு ஆடியவாறு நடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த மந்திரத்தின் கூட்டாளிகள் கைகொட்டி, ஆரவாரம் செய்து சிரித்தனர். பேச்சுக்குக்கூட அனுதாபம் கொண்டு யாரும் தூக்கிவிட வரவில்லை.

செல்லக்கண்ணு விழுந்து கிடப்பதை பேரானந்தத்தோடு ரசித்துப் பார்த்துவிட்டு, அனுதாபம் கொண்டு தூக்கி விடுவதுபோல நெருங்கிய மந்திரம், செல்லக்கண்ணுவின் அருகில் வந்து நின்றுகொண்டு, “ஏலே… நா…ன், என்னல மனுஷன் நீ. சைக்கிளக் கொண்டு இப்படி பொசுக்குனு கவுத்து போட்டுட்டயல? பார வண்டிய இம்புட்டுக் கை செத்து போயா ஓட்டுவ?” என்று நக்கல் செய்தவன், “ஆனாலும், நீ அதிஷ்டக்காரன்தாம்ல. இம்புட்டுப் பெரிய பள்ளத்துல வந்து விழுந்தும் பெருசா ஒண்ணும் அடி கிடி படல, ஏதோ அங்கங்க சின்ன சிராப்புதான். சரி… சரி, விழுந்த இடத்துலயே கெடையாக் கெடக்காம, எழுந்து சட்டுப்புட்டுன்னு கருப்பட்டிய அள்ளுற வழியப் பாருல. கூட்டம் கூடினதுன்னா, ஆளுக்கொன்னா தூக்கிட்டுப் போயிடுவானுங்க. பெறவு பொரங்கைய நக்கிட்டுதான் நீ வூட்டுக்குப் போவனும்.” என்றவன் பெரிய உபகாரம் செய்வதுப்போல சற்றுத் தூரத்தில் கிடந்த இரண்டு கருப்பட்டியைத் தூக்கி வந்து செல்லக்கண்ணுவின் முகத்தில் வீசுவதுப்போல அவனது அருகில் போட்டுவிட்டு ஒரு முழுக்கருப்பட்டியை எடுத்துக்கொண்டு ஆத்தியடிச்சாமி கோயிலை நோக்கி நடந்தான்.


கண் இமைக்கும் நேரத்தில் சக மனிதனின் பிழைப்பைக் கெடுத்தது மட்டும் இல்லாமல், நடந்த செயலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல குற்ற உணர்வற்று சென்று கொண்டிருந்த மந்திரத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த செல்லக்கண்ணு, அவன் மீது இருந்த பார்வையை விலக்கி கீழே கிடந்தவாறு சைக்கிளையும் கருப்பட்டியையும் சுற்றிப் பார்த்தான், ஆற்றாமையால் கோபம் அவனைப் பிடுங்கி தின்றது.


கருப்பட்டியும் கையுமாக கோவில் வளாகத்துக்குள் நுழைந்த மந்திரத்தைப் பார்த்து, “மாமா எனக்கொரு துண்டுக்கருப்பட்டி குடும்மய்யா.” “அத்தானே, எனக்கொரு துண்டு குடும்வோய்.” என்று ஆளாளுக்கு அவர்களுக்கு உரிய உறவு முறையைச் சொல்லி ‘பிச்சை எடுத்தானாம் பெருமாளு; அதப் புடுங்கி தின்னானாம் அனுமாரு.’ என்ற சொல்லாடலுக்குப் பொருத்தமாக பங்கு கேட்டுக்கொண்டு நின்றனர்.


மந்திரம் அவனது கையில இருந்த கருப்பட்டியை ஒரு கல்லில் ஓங்கி அடித்து சிறு சிறு துண்டுகளாக உடைத்து. அங்கேயிருந்த எல்லோருக்கும் ஆளுக்கொன்றாகக் கொடுத்துவிட்டு அவனும் அவர்களோடு சேர்ந்து ஒரு துண்டுக்கருப்பட்டியை சுவைத்துக் கொண்டிருந்தான்.


கருப்பட்டியைச் சுவைத்த படி, “தாயோளி, ஒரு துண்டுக்கருப்பட்டி கேட்டதுக்கு என்னென்ன சாக்குப்போக்கு சொன்னான். இப்ப, மொத்தமும் புட்டுக்கிட்டுப் போயிடுச்சா?” என்று சிரித்துவிட்டு, “மாப்ள, நீரு பண்ணுனதுதாம்வே சரி. இவனுங்களைளெல்லாம் அப்போதைக்கப்ப தட்டி வைச்சிடணும். இல்லாட்டி நம்ம சாதிமேல இருக்கிற பயம் விட்டுப் போகும்.” என்று ஒருவன் மந்திரத்தின் செயலை மெச்சிக் கொண்டிருந்தபோது மனதிற்குள் எதையே முடிவு செய்தவனைப் போல எழுந்து எதையும் எடுக்காமல் அப்படியே விட்டு விட்டு, வீட்டை நோக்கி நடந்து சென்றான் செல்லக்கண்ணு.


அவனைப் பார்த்துவிட்டு “ஏலே மந்திரம், நாடான் போற வேகத்தப் பார்த்தா, பஞ்சாயத்துப் பண்ண ஆளக் கூட்டிட்டு வருவான்போல இருக்குதுலே.” என்றான் ஒருவன்.


“வரட்டும்ல. அதுக்காவ, என்னை பயந்துபோயி கெடக்க சொல்றயால?”

“…..”

“எம்மேல ஆவலாதி சொல்றதுக்கு, நான் என்ன வேணுமுன்னா, அவனப் புடிச்சி கீழே தள்ளிவுட்டேன்? அரதிலி, கை செத்தால சைக்கிள ஓட்டிட்டுப் போயி பள்ளத்துல கொண்டு கவுத்துப்போட்டுட்டு கெடந்ததுக்கு நானா பலியாடு?” என்றான்.


“ஏம்ல கெடந்து பதறுதீய. எந்த கூதீயுள்ள வந்து நம்மள கேட்குதுன்னு, அதையும்தான் பாத்துடுவோம்ல.” என்று மந்திரத்தின் சாதி, ஜனங்கள், கூட்டாளிகள் என்று அவனுக்கு முட்டுக்கொடுத்துப் பேசினார்கள்.


வியாபாரத்திற்குச் சென்ற செல்லக்கண்ணு கை, கால்களில் லேசான சிராய்ப்புடன் தலைகலைந்து, உடை கசங்கி, அலங்கோலமாக வீட்டுக்குள் நுழைந்ததைப் பார்த்த துரைக்கண்ணுவும் அவனது மனைவி இராசக்கனியும் பதறிக்கொண்டு ஓடி வந்து, “என்னாச்சி… ய்யா. ஏன் இப்படி இருக்க?” என்றவள் அவனை நெருங்கி வந்து தொட்டுப் பார்த்துவிட்டு, “என்னது, கை, காலெல்லாம் சிராய்ச்சி இருக்குது. கீழே விழுந்துட்டியாய்யா? எங்கன விழுந்த? சைக்கிளு எங்க கெடக்குது?” என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுப் பதறினர்.

பதில் எதுவும் சொல்லாது மௌனித்து இருந்தான் செல்லக்கண்ணு. அதைப்பார்த்து, “நீ பேசாம இருக்கிறதப் பார்த்தா, என் ஈரக்கொலையே நடுங்குது. யாருகிட்டயும் சண்ட எதுவும் போட்டியா…ய்யா? எதுன்னாலும் அம்மாகிட்ட சொல்லுய்யா.” என்று பதறினாள் இராசக்கனி.

“ஏய், தொண தொணங்காம சும்மா இருடி, புள்ள சொல்லுவான்.” என்று மனைவியைக் கடிந்து கொண்டார் துரைக்கண்ணு.


“ஆமா, புள்ளய என்ன ஏதுன்னு சாரிக்க துப்பில்ல, எம்மேலதான உங்க கோவத்தக் காட்டுவீய.” என்றதும் துரைக்கண்ணு சென்று தண்ணீர் மொண்டு வந்து செல்லக்கண்ணுவை குடிக்கச் சொல்லிக் கொடுத்தார்.

தண்ணீரை வாங்கிக் குடித்த செல்லக்கண்ணுவுக்கு லேசாக வெம்மை தணிந்தது போல இருக்க, நடந்த விஷயத்தைக் குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டு தனது இயலாமையை நினைத்து உடைந்து அழுதான்.

அதைக்கேட்ட துரைக்கண்ணு, இராசக்கனியால செல்லக்கண்ணு உடலில் ஏற்பட்ட சிறு சிராய்ப்புகளுக்கு மருந்திட முடிந்ததே தவிர அநியாயம் இழைத்தவர்களிடம் சென்று நியாயம் கேட்டு மகனின் மன வலிக்கு மருந்திட முடியவில்லை. ஊரே விஷயம் தெரிந்து ஓடி வந்து அனுதாபம் தெரிவித்தார்களே தவிர செல்லக்கண்ணுவுக்காகப் பரிந்துகொண்டு பேசுவதற்கு யாரும் முன் வரவில்லை. செல்லக்கண்ணுவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்ற ஒவ்வொருவரின் முகத்திலும் இதற்குக் காரணமானவனுக்கு தண்டனை கிடைத்து விடாதா! வெகு சீக்கிரமே அவனுக்கு ஒரு அநியாய சாவு வந்திடாதா! என்ற ஏக்கம் இருந்ததை என்னால உணர முடிந்தது.


என் குடும்பம் நடந்ததை நினைத்து அன்றைய நாள் முழுவதும் அழுது கொண்டிருந்தது. இரவு வெகுநேர விழிப்புக்குப் பின்னர் எங்களையும் அறியாதுதான் கண் அயர்ந்திருந்தோம். மறுநாள் பொழுது ஊருக்கே தன்னைப்போல புலர்ந்தது, எங்கள் குடும்பத்தைத்தவிர. கோழி கூவிய நேரம் முதல் பெண்கள் சாணம் தெளித்து வாசல் பெருக்குவது, கோலம் போடுவது என்று அன்றைய நாளை இனிதாகவே துவங்கினார்கள். பனையேற்றத்துக்கு செல்வோர்கள் பாளையரிவாளும் முறுக்குத் தடியுமாகவும், உழவுக்குச் செல்வோர் எருதும் கலப்பையுமாகவும், வேளாண்மைக் கூலிகளாகச் செல்வோர்கள் மண்வெட்டியோடும் பெண்கள் களைவாரியும் கதிர் அரிவாளோடும், கமலை இரைக்க செல்வோர்கள் வாலும் எருதுமாக கிளம்பிச் சென்று கொண்டிருந்தனர். (வால் அல்லது வால்தாட்டு: மாட்டுத் தோலால் செய்யப்பட்டது. கமலை பாசனத்தில் கிணற்றில் இருந்து நீர் இறைப்பதற்கு பயன்படுத்தப்படுவது. கிணற்றில் இருந்து கூனையில் நீரை மொண்டு வெளியே கொண்டு வரும்போது வெளியேறி விடாது தடுத்து, பாதுகாப்பாக வாய்க்காலில் நீரை வெளியேற்றும் ஒரு சாதனம்.)


எங்கள் வீடு மட்டும் ஒரு இழவு விழுந்த வீட்டைப்போல முந்தைய நாள் இரவு போட்ட படுக்கையைவிட்டு எழுந்திராது, விட்டத்தைப் பார்த்தவாறே யோசனையில் ஆழ்ந்து கிடந்தது.


என் பெற்றோருக்கு நாங்க ரெண்டு ஆணும் ஒரு பெண்ணும். மூத்தது பெண் மாரிக்கனி. அவளை பக்கத்து ஊரான துவரவிளையிலதான் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தோம். செல்லக்கண்ணுவுக்கு நடந்த அநியாயத்தைக் கேள்விப்பட்டதும் ஆறுதல் சொல்ல வந்திருந்தாள், அன்று அவள் மட்டுமே எழுந்துக் காப்பி போட்டுக்கொண்டிருந்தாள்.


நேரம் காலை ஆறு மணி இருக்கும் கதிரவன் வானில் மேல்நோக்கி ஏறிக் கொண்டிருந்தான். மந்திரம் கமலை இரைத்துவிட்டு வாலை தோளில் சுமந்து கொண்டு தெருவில் வந்து கொண்டிருந்தான், கையில் ஒரு தார்க்குச்சியும் இருந்தது. எருதுகள் அவனில் இருந்து பத்து அடி முன்னே சென்று கொண்டிருந்தது. எங்களுடைய வீடு ஓட்டு வீடாக இருந்தாலும் வீட்டின் முன்னே திண்ணை இருந்தது. திண்ணையில் அமருவோர் மீது வெயில் படாதிருக்க பனை ஓலையைக்கொண்டு தாழ்வாரம் வேய்ந்திருந்தோம். நான் மட்டுமே திண்ணையில் அமர்ந்து தெருவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

வடக்கு வம்பளத்திற்கு வடக்கேதான் மந்திரத்தினுடைய தோட்டம் இருந்தது. மந்திரம் தினமும் கமலை பாசனத்தில் நீர் இரைத்துவிட்டு வடக்கு வம்பளம் வழியாகத்தான் தெற்கு வம்பளத்திற்கும் அவனது தோட்டத்திற்கும் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தான். அவன் தினமும் சென்று வரும் அதே தெருவில்தான் எங்களுடைய வீடும் இருந்தது. மந்திரம் அன்று அதே தெருவில் வந்துகொண்டிருந்தான். எனது வீட்டைக் கடந்துச் செல்லவிருந்த தருணத்தில் நான் தாழ்வாரத்தின் எறப்பில் செருகி வைத்திருந்த பாளை அரிவாளை உருவி எடுத்துக்கொண்டு மந்திரத்தின் குறுக்கே இடமிருந்து வலம் மின்னல்போல பாய்ந்து அவனது வயிற்றில் ஒரு கீறல் போட்டேன்.

தனக்கு முன்னே ஒளி போல பாய்ந்தவனை, “ஏய்…” என்றவாறு பலமாகக் குரல் எழுப்பி எச்சரித்துவிட்டு வயிற்றைப் பார்த்தப்போது அவனது குடல் மொத்தமாகப் பூமியில் சரிந்து விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத மந்திரம் நிலைகுலைந்து போனான். குடலை ஏந்திப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்தப்போது எதிரே நாகத்தைப்போல சீறியபடி நின்றுக்கொண்டிருந்தேன்.

என்னைப்பார்த்ததும் இன்று தன்னை உயிரோடு விடமாட்டான் என்பதைப் புரிந்து கொண்டவன், “ஏலேய், வேண்டாம்ல. கையில மாட்டின.. கொன்னுப்புடுவேன்ல.” என்று எச்சரித்தான்.

“…..”


அடுத்த கணமே, “உன்னக் கெஞ்சிக் கேட்கறேன், என்னை விட்டுருல. உன்னையோ உன் குடும்பத்தையோ எதுவும் பண்ண மாட்டேன்ல. இது அந்த ஆத்தியடிச்சாமி மேல சத்தியம்ல. தெரியாம உன் அண்ணன அப்படிப் பண்ணிட்டேன்ல. என்னை மன்னிச்சிடுல.” என்று கெஞ்சினான்.


அவனின் மரண ஓலத்தை நான் சிறிதும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அடுத்த வெட்டை அவனது வாயிலயே வெட்டிவிட்டு, “இந்த வாயிதானல கருப்பட்டி கேட்டது.” என்றேன். தொடர்ந்து, அவனது வலது காலை ஒரே வெட்டில் துண்டித்துவிட்டு, “இந்தக் கால் தானல சைக்கிள சவுட்டினது?” என்றேன். அதன்பிறகும் எனது கோபம் சிறிதும் அடங்கவில்லை, அவனது உடல் தசைகளை கசாப்பு கடைக்காரன் ஆட்டுக்கறியை நறுக்குவதுபோல துண்டு துண்டாக வெட்டி நாலாப்புறமும் வீசியெறிந்தேன். காக்கைகள் கா… காவென கரைந்து கொண்டு அதன் கூட்டத்தையும் அழைத்து, வீசி எறியப்பட்ட சதைத் துண்டுகளை ஆகாயத்தில் வைத்தே காலில் பற்றிக்கொண்டு சென்றது.

மந்திரத்தின் மரண ஓலம் வடக்கு வம்பளம் முழுக்க ஒலித்தது. மந்திரம் வடக்கு வம்பளத்தில் கொலையானது தெற்கு வம்பளத்துக்காரர்களுக்கு தெரிந்தால் அவர்கள் வந்து தங்களையும் தங்களது குழந்தைகளையும் ஏதாவது செய்துவிடப் போகிறார்கள் என்ற பயத்தில் வடக்கு வம்பளத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் பயத்தில் ஊரைக் காலி செய்ய முடிவெடுத்தனர். அவர்கள் நினைத்ததுபோல தெற்கு வம்பளத்துக்கும் தகவல் பரவியது. தெற்கு வம்பளமே வடக்கு வம்பளம் நோக்கி படை திரண்டு வந்து கொண்டிருந்தது. அது தெரிந்ததும் வடக்கு வம்பளத்து மக்கள் அவசர அவரமாக நகை, பணம் மற்றும் ஒன்றிரண்டு மாற்றுத் துணிகளை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். தெற்கு வம்பளத்தில் இருந்து வந்தவர்களில் யாரும் உடல் துண்டாக்கப்பட்டு கிடந்த மந்திரத்தைக் கண்டு கொள்ளவில்லை அவனது மனைவியைத் தவிர. அவர்கள் வந்ததே வடக்கு வம்பளத்தில் கலவரம் பண்ணி மக்களின் உடமைகளைச் சூறையாடுவதற்காகத்தான் என்பது போலவே இருந்தது அவர்களது நடவடிக்கைகள். அதற்கேற்றார்போல வடக்கு வம்பளத்துக்காரர்களும் பயந்து ஊரைவிட்டு ஓடிப்போக, நினைத்து வந்த காரியம் சுலபமாக நடந்துவிட்ட சந்தோசத்தில் வீடுகளுக்குள் புகுந்து கையில் கிடைத்ததையெல்லாம் அபகரிக்க ஆரம்பித்தனர். மந்திரத்தின் மிச்ச உடலைப் பார்த்து அழுது கொண்டிருந்த அவனது மனைவியும் ஊரார் அனைவரும் வடக்கு வம்பளத்தை சூறையாடுவதைப் பார்த்துவிட்டு அவளும் கடகடவென ஓடிச்சென்று அவளது பங்குக்கு இரண்டு பித்தளை அண்டாவையும் நான்கு வெண்கல கும்பாவையும் தூக்கிக்கொண்டு வந்து தனது பன்னிரெண்டு வயது மகனிடம் கொடுத்து வீட்டில் கொண்டு வைத்து வரச் சொல்லிட்டு கணவனின் அருகில் வந்து அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவ்வப்பொழுது சிறிது அழுகைக்கு ஊடாக ஓடி, ஓடிச்சென்று சில பொருள்களையும் கைப்பற்றினாள்.


வடக்கு வம்பளத்துக்காரர்கள் எல்லோரும் ஊரைவிட்டு வெளியேறுவதற்கு முன் நாங்கள் குடும்பத்தோடு வெளியேறி வக்கில் மூலமாக நாங்குநேரி நீதிமன்றம் சென்று சரணடைந்தோம். போலீஸ் வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணைக்கு வடக்கு வம்பளம் மக்களைத் தேடியபோது எல்லா வீடுகளிலும் சுவரும் கூரையும் மட்டுமே மீதமிருந்தது. இதையே ஆதாரமாக்கி ஊரைச் சூறையாட வந்தபோது தற்காப்புக்காகதான் கொலை நடந்தது என்று வாதம் நிகழ்த்தினார் எங்களது வக்கீல். மூன்று மாதத்தில் வழக்கு நிறைவு பெற்று குறைந்தபட்ச தண்டனையுடன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.


நாங்கள் தைரியமாக குடும்பத்தோடு வடக்கு வம்பளத்திற்குத் திரும்பி வந்ததோம். வடக்கு வம்பளமே எங்களது சாதிசனம் இன்றி வெறிச்சோடிப் போய் கிடந்தது. சில வீடுகளில் தெற்கு வம்பளத்தைச் சேர்ந்தவர்கள் குடியேறியிருந்தனர். எங்கள் கையிருப்பு பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் வழக்கு நடத்திய செலவினத்துக்காக நாங்கள் இழந்திருந்தோம். ஆதலால், நாங்கள் பொருள் அளவில் சக்தியற்று இருந்தோம். ஆனாலும், மனதளவில் நம்பிக்கை இருந்தது எல்லாவற்றையும் மீட்கிறமோ இல்லையோ யாரிடமும் யாசகம் கேட்டு நிற்காமல் எங்களது வாழ்க்கையை நகர்த்திவிட முடியுமென்று. வேகமாக எங்களது வழக்கமான தொழில்களைக் கவனிக்கத் துவங்கினோம். முதலில் எங்களைப் பார்த்துக் கொலைகாரக் குடும்பம் என்று பயந்தவர்கள் சிறிது காலத்திலேயே உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டனர்.

தெற்கு வம்பளத்துக்காரர்களை விட வடக்கு வம்பளத்துக்காரர்கள் நிலபுலன்கள் அதிகம் உள்ளவர்கள். ஊரில் ஆள் இல்லாது போகவே அவர்களின் நிலபுலன்களை (மனை, மனை நிலம், வேளாண் நிலம் உட்பட) அனைத்தையும் தெற்கு வம்பளத்துக்காரர்கள் அபகரித்துக் கொண்டனர்.


சம்பவம் நடைபெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது நிலபுலன்களை மீட்க இதுவரை யாரும் ஊர் திரும்பவில்லை. தற்போது எங்களின் அண்டை வீட்டுக்காரர்களாக இருப்பவர்கள் யாரைப்பார்த்து இவர்களிடம் எந்த வம்பு தும்பும் வைத்து கொள்ளக்கூடாது என்று சிங்கம், புலி போன்ற காட்டு மிருகங்கள் அளவுக்கு தினம் தினம் அஞ்சிக் கொண்டிருந்தோமோ அந்த தெற்கு வம்பளத்துக்காரர்கள்தான்.


தற்போது அவர்கள் எங்கள் வாரிசுகளோடு நட்புறவு கொண்டுதான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் அடிப்படை குணங்களைக் குறைத்துக்கொண்டு வடக்கு வம்பளத்துகாரர்கள் விட்டுச்சென்ற நிலங்களில் வேளாண்மை செய்து வருகிறார்கள். ‘ஏய் நா…ன்.’ என அழைத்தவர்கள் தற்போது ‘என்ன நா…ர, வாங்க நா…ர.’ என்று ‘ர்’ சேர்த்து அழைக்கிறார்கள். எனக்கான சுயமரியாதையை நான்தான் உருவாக்கணும், எனக்கான சுதந்திரத்தை நான்தான் எடுத்துக்கணும், எனது ஜனநாயகத்துக்கான குரலை நான்தான் பேசணும். இங்க யாரும் எதையும் அவர்களாகத் தரமாட்டார்கள்தான். ஆனாலும், நான் எனது போராட்ட வழியை மாற்றிருக்க வேண்டும் என்று இப்போது நினைக்கிறேன். நடந்ததை காலத்திற்குள் சென்று மாற்ற முடியாதுதான் இருந்தாலும், எனது மக்கள் இந்த மண்ணில் வந்து வாழும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன்.

rakshankiruthik@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button