இணைய இதழ்இணைய இதழ் 85சிறுகதைகள்

தலைப்பாகை – கவிதைக்காரன் இளங்கோ

சிறுகதை | வாசகசாலை

ரிக்கரை பஸ் நிறுத்தத்தில் எனக்கான பஸ்ஸூக்காக காத்து நின்றிருந்தேன். அநேகம் அதுதான் கடைசி பஸ்ஸாக இருக்க வேண்டும். இன்னொரு பயணியும் என்னைப் போலவே காத்திருந்தார். எனக்கும் முன்னதாக வந்திருப்பவர். 

நூறடி சாலையின் இந்தப்பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கம் பார்க்கும்போது நடைபாதையை ஒட்டி எழுப்பப்பட்டிருந்த குட்டை மதில் சுவரைத் தாண்டி பரந்து விரிந்திருந்த ஏரியின் நீர்த் தளும்பல் தெரிந்தது. சொல்லப்போனால் இது ஒரு நவீனமான மதகு. நீர்நிலைக்கு மேலாக சிறிதாக மேடேறி இறங்கியிருக்கும் பாலம். பாலம் என்கிற உணர்வே எழாத வண்ணம் இச்சாலை அமைந்திருக்கிறது. அதன் இறக்கத்தில் உள்ள சிக்னல், சாலையைக் கடக்கின்ற பாதசாரிகளுக்கும் இருபது நொடிகளை ஈந்து கருணையோடு அனுமதிக்கின்றது. குட்டைச்சுவரின் நடைபாதையையொட்டி ஓர் இறுதி யாத்திரை வாகனம் நிற்கிறது. அதற்கு அடுத்ததாக ஒரு ஜே.ஸி.பி நிற்கிறது. பன்னிரண்டாயிரம் கிலோ எடையுள்ள ஓர் ஆதி மிருகம் போல ஏரியை முறைத்துப் பார்த்தபடி இயந்திர களைப்பற்று உழைப்புத் திமிரோடு நின்றுகொண்டிருக்கிறது. அதன் உடலெங்கும் திட்டுத்திட்டாக சகதிப் பூச்சு காய்ந்திருந்தது.

ஏரிக்குள்ளே தொலைவில் நீரின் விளிம்பிலிருந்து மேலெழும்பித் தொடங்குகிற இரவு வானின் மேகங்கள் மந்தத்தன்மையோடு தோற்றமளித்து இவ்விரவை உணர்ந்திட உதவவில்லை. அதன் கரைநெடுக வெளிச்சப் புள்ளிகளோடு குடியிருப்புகள் தம்மை அடையாளப்படுத்திக்கொள்கிற பிம்பங்களாக நீரலையில் நெளிந்தபடியிருந்தன. அதைமீறி அக்காட்சியை இருபக்கமும் விரைந்துகொண்டிருக்கும் வாகனங்களும் அவற்றின் முகப்பொளிகளின் பாய்ச்சல்களும் எனது பார்வையைக் குறுக்கிட்டுக் கொண்டிருப்பதை நான் பொருட்படுத்தவில்லை. பரிச்சயமான காட்சியின் புதிய கோணத்தைத்தான் இப்போது அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறேன்.

நான் நின்றுகொண்டிருக்கும் பஸ் நிறுத்தத்திற்கு பின்பக்கம் அடர்ந்திருக்கும் இருட்டுக்குள் குப்பை கூளங்கள் மிதக்கும் நீர் ஒரு குட்டையாகத் தேங்கிக் கிடக்கிறது. ஏரியின் நீர் முகப்பு பாலத்தின் கீழ்வழியாக இந்தப்பக்கத்தில் வரமுடியாமல் நின்று விட்டிருக்கலாம். அல்லது முடித்துவைக்கப்பட்டிருக்கலாம். என்னுடைய பஸ் நிறுத்தத்தையொட்டி அதற்கடுத்து, மாநகராட்சியின் இரண்டு கனமான இரும்பு குப்பைத்தொட்டிகள் பிரம்மாண்டமாக வீற்றிருக்கின்றன. அவை ஐந்தடி உயரமிருந்தன. உருளும் சக்கரங்களும் பொருத்தப்பட்டிருந்தது. அதற்கு அப்பால் உள்ள வளைவையொட்டி மின்சார டிரான்ஸ்ஃபார்ம், பிறகு லேசான பாதைச் சரிவொன்று ஒரு தெருவுக்குள் இட்டுப் போகிறது. அங்கிருக்கும் குடியிருப்புகள் கரைகளில்தான் அமைந்திருக்கின்றன என்பது புரிகிறது. சற்று நேரத்திற்கு முன் ஒருவன் தள்ளாடிய நிலையில் பஸ் நிறுத்தத்திற்கு பின்பக்கம் வாகாய் அமைந்திருந்த இருட்டுக்குள் நுழைந்து கரையின் விளிம்பில் நின்றபடி சிறுநீர் கழித்துவிட்டுப் போனான்.

சமீபத்திய மழைக்குப் பிறகு இந்நகரம் தன்னியல்பிற்கு திரும்பிவிட்டதாக பாவனைக் காட்டிக்கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. எனது அபார்ட்மெண்ட்டின் தாழ்வான பார்க்கிங் பகுதியில் முழுமையாக மூழ்கிவிட்டிருந்த என்னுடைய பைக்கை, ஒட்டுமொத்த நீரும் வடிந்த பிறகு மேடேற்றிவிட்டு செண்டர் ஸ்டாண்ட் போடும்போதும் கழிவு சக்கைகளோடு அது தேமேவென்று நின்றதைப் பார்க்கும்போதும் பரிதாபம் மேலிட்டது. வெறும் பைக்தானே என்று எப்படி நினைக்க முடியும்? அது என்னுடைய சகா. இந்நகரம் முழுவதும் என்னைச் சுமந்து திரியும் நண்பன். வேலைகள் நிமித்தம் என்னுடைய நேர மேலாண்மையை சிலர் மெச்சிட உதவிய சக பயணி. ரெகுலரான பாதைகளின் பழைய மற்றும் புதிய குண்டு குழிகளை என்னோடு சேர்ந்து தனக்காகவும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள சபிக்கப்பட்ட இயந்திர அடிமை. என்னைப் போன்று ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்கு செலுத்தும் சராசரி குடியுரிமை அடிமையல்ல அவன். அதில் எனக்கு ஆசுவாசம் உண்டு.

அவனுடைய ராஜபாட்டை உரிமங்களுக்காக முறையாக எஃப்.ஸி செய்து காலங்கருதி அவனைப் புதுப்பித்தும் வைத்திருக்கிறேன். பின்னிரவுகளில் அலுவல் முடிந்து வீடுதிரும்பும் வேளைகளில் மாநகரக் காவலர்கள் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி மற்றும் ஆர்.ஸி புத்தகக் காகித நகல்களை சோதனையிடும்போது புருவம் அவனைப் பார்த்து உயர்த்த தவறியதில்லை. அவனை நான் பேணி பாதுகாக்கும் பவிசு அவ்விதமானது. சாலைகளின் கோளாறுகளால் அதிகம் நொந்துகொண்டு கொஞ்சமாக முனகினாலும்கூட அவனை அக்கறையோடு மெக்கானிக்கிடம் கொண்டு போய் நிறுத்திவிடுவேன். அவனுக்கான டாக்டர் மெக்கானிக்தான்.

இப்போதும் தொடர்மழையில் மூழ்கிய பிறகு வெயிலில் நன்கு காய்ந்து முடிந்த நிலையோடு மெக்கானிக்கிடம்தான் தஞ்சம் அடைந்திருக்கிறான்.

“மொத்த ஏரியாவும் தண்ணியில முழுகி போயிட்டதால.. நிறைய வண்டிங்க சேர்ந்திருக்கு ஸார்..”

“ஒரு அவசரமும் கிடையாது சிவா.. பொறுமையா டைம் எடுத்து நம்ம ஆளைக் கடைசியா பாருங்க.. மறக்காம இண்டிகேட்டர் பஸ்ஸரை மட்டும் மாத்திடுங்க.. அதில்லாம நமக்கு ஆவாது.. நீங்க எப்போ ஓகேன்னு சொல்றீங்களோ அப்போ எடுத்துக்கறேன்..”

இதெல்லாம் பிரிவுத் துயரில் வருமா என்று தெரியவில்லை. ஆனால், பைக் இல்லாமல் நகரை வலம் வரும்போது கூடுதலாக பலவற்றையும் வேடிக்கைப் பார்க்க முடிகிறது. பல தருணங்கள் கண் பார்வையிலிருந்து தப்புவதில்லை. ஒருவரைச் சந்திக்கப் போகும்போதும், சந்திப்பு முடிந்து திரும்பும்போதும் மனம் யோசிக்கும் விதம் சற்றே நிதானப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஒப்பீடுகள் தம் கரைகளை அகலப்படுத்திக்கொண்டு உதவுகின்றன. அப்படியொரு சந்திப்புக்குப் பிறகான இந்தப் பொழுதில் இக்கரையில் இப்படியாக நின்றுகொண்டிருக்கிறேன்.

“வாங்க ஸார்.. எப்டி இருக்கீங்க.?”

“ரொம்ப வருஷமா அப்டியேதான் இருக்கேன்”

“புரியுது ஸார்.. எப்டியாவது உங்க பணத்தை புரட்டிரலாம்னு ட்ரை பண்ணிட்டிருக்கேன்.. இந்த மழை வந்து எல்லாத்தையும் கெடுத்து வுட்ருச்சி..”

சுற்றிலும் பார்த்தேன். பல வருடங்களாக பார்த்துப் பழகிய கடைதான். ஒரு மாற்றமும் இல்லை. முதன்முதலாக அங்கே போகத்தொடங்கிய காலந்தொட்டே அவ்வறையில் பொருத்தப்பட்டுள்ள ஏர்கண்டிஷனர் இயந்திரம் மட்டும் மனித மனத்தின் கோப அளவுகளை, மூண்டெழுகிற வெப்ப மாற்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்துக்கொண்டே இருக்கிறது. அது இடையறாமல் பிளந்து மூடும் குளிர் நிறைந்த வாய்க்கோடுகளிலிருந்து சிறு உறுமலையும் வெளிப்படுத்துவதில்லை. என்னைப் போலவே.

அவருக்கு அந்தக் கடை, ஜஸ்ட் ஒரு முகவரிக்கான சாக்கு. அரசாங்க பதிவுக் கணக்கில் வியாபார பரிவர்த்தனைக்கான பாவ்லா. மற்றபடி இரும்பு அலமாரிகளில் அடுத்தடுத்து வரிசைகளாக சின்னஞ்சிறிய அட்டைப்பெட்டிகளில் ரகவாரியாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஹோல்சேல் காலணிகளுக்கான மனிதக்கால்கள் வேறெந்தெந்த நகரங்களின் பாதைகளில் வீதிவீதியாகத் தேய்ந்து அலைந்து கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை. வேறெதோ இரண்டாம் நம்பர் வியாபாரம்தான் அந்த ஆளின் மூலதனமாக இருக்க வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளின் அடுக்கு வரிசைகளில் அவருடைய நிலையின் எண் எதுவென்று புரிந்துகொள்ளும் அரசியல் மூளை எனக்குப் போதுமானதாக இல்லை. இந்த யோசனைகள் எனக்கு அனாவசியமானவை. கொடுத்து வைத்திருந்த என்னுடைய பெருந்தொகை சிங்கிள் பேமெண்ட்டாக திருப்பிக் கிடைத்துவிட்டாலே போதுமானது. எங்கள் இருவருக்குமிடையில் உள்ள பணப் பரிவர்த்தனை முடிந்துவிடும்.

இதெல்லாம் போக, இதற்கு முன்னர் பலமுறை அவரின் வருகைக்காக வெளிக்கூடத்தில் காத்திருந்த சமயங்களில் இத்தனை வருட அவதானிப்பில் அந்தக் கடையில் ஒரேயொரு பழக்கம் மட்டும் புதிதாக உதித்திருக்கிறது.

டீ வந்தது. பணியாள் வைத்துவிட்டு போனான்.

“எடுத்துக்கோங்க ஸார்.. எதில வந்திங்க?”

எடுத்துக்கொண்டேன். மசாலா டீயின் இதமானது, மேஜைக்கு எதிர்ப்பக்கத்திலிருந்து அடுத்தடுத்து வரவிருக்கிற க்ளீஷேவான சமாளிப்பு காரணங்கள், நம்பிக்கை வார்த்தைகள் போன்றவற்றை உள்வாங்கிக்கொள்ள உதவியாக இருக்கும். டீயின் மணம் நாசியைத் தாண்டி புத்திக்குள் புகுந்துகொண்டு மெதுவாகப் பரவியது.

“பஸ்ஸூ புடிச்சு.. மெட்ரோ ட்ரெயின் மாறி.. ஹைகோர்ட்லருந்து நடந்து வந்தேன் ஸார்..”

“இன்னுமா பைக் ரெடியாகல..?”

நான் பதில் சொல்லாமல் டீயை உறிஞ்சினேன். அவருக்குப் பின்பக்கச் சுவரில், ஃபிரேம் செய்யப்பட்ட மக்கா மற்றும் மெதினாவின் புகைப்படங்கள் இருந்தன. அதைப் பார்த்துக்கொண்டே டீயை ருசித்து அனுபவித்தேன். ஓஷோ சொல்லுவாரே.. டீ குடிக்கும்போது டீயை மட்டும் குடி. அதுதான் தியானம். முஹம்மது நபிகளும் அதுபோல ஒன்றைச் சொல்லியிருப்பாரோ என்கிற எண்ணம் ஓஷோவின் பரிந்துரையை மீறிக்கொண்டு குறுக்கிட்டது.

என் அமைதியை அவர் அனுமதித்தார். ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்.

மூன்றாம் தளத்தில் கட்டிட ஓரத்தில் அமைந்திருக்கும் அவருடைய விஸ்தாரமான அந்தக் கடைக்கு அகலமான இரண்டு ஜன்னல்கள் உண்டு. சூரிய ஒளியைக் கட்டுப்படுத்தும் க்ரே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டவை. ஒன்று அந்த பிரத்யேக அலுவலக அறைக்குள்ளேயே உள்ளது. மற்றது வெளியே காத்திருப்பு கூடத்தில் உள்ளது. ஜன்னலின் கண்ணாடிக் கதவுகள் சாலையின் தூசுகளைக் கட்டுப்படுத்தி, மாலை வேளைகளில் சூரிய ஒளியை மட்டும் கடைக்குள் நிறம் மாற்றி வடிகட்டி அனுப்பி வைக்கிறது. ஜன்னல்களை அடுத்து வெளிப்பக்கம் ஒன்றரையடி தாழ்வில் இணையாக நீளமான சற்றே அகன்ற சிமெண்ட் ஸ்லாப் உள்ளது. அதன் நெடுக புறாக்களுக்கான தானிய இரைகளை தினமும் கொட்டி வைக்கும்படி வேலையாளைப் பணித்திருக்கிறார். சிமெண்ட் ஸ்லாபின் கடைசியில் அகலமான ஒரு நீர்ப் பாத்திரமும் உள்ளது.

ஜன்னல்வழியே கீழே நோக்கும்போது பரபரப்பான பிராட்வே சாலையை எப்போதும் பார்க்க முடியும். அடுத்து விரியும் சவுகார்பேட்டை பகுதிக்கான தொடக்க முகப்பும்தான் அதன் முனை. அப்பிரதானச் சாலையின் எதிர்ச்சாரியில் கிளைவிட்டுப் பிரிகின்ற எண்ணற்ற உள்வழிச் சாலைகளின் தொலைவில் குடியிருப்பு கட்டடங்களின் மத்தியில் பிதுக்கிக்கொண்டு தலையை உயர்த்தி வீற்றிருக்கும் ஒரு மசூதியின் கோபுரம் தெரியும். அதிலிருந்து புறப்பட்டுவருகிற புறாக்கூட்டம் மொத்தமும் எதிர்ப்பக்க கட்டிடத்தின் சூரியத் தடுப்புகளில், கடைசி மாடியின் சுவர் விளிம்புகளில், ஏஸியின் அவுட்டோர் பெட்டிகளில் என சகட்டுமேனிக்கு குவிந்தபடி பொறுமையாகக் காத்திருக்கும். சாலையில் பயணிப்போர் யாரும் அவற்றைப் பொருட்படுத்தி அண்ணாந்து பார்ப்பதில்லை.

கடையின் பணியாள் சிமெண்ட் ஸ்லாபில் இருபது கிலோ தானியங்களை இட்டுப் பரப்பிவிடுவான். ஜன்னல் கதவுகளைத் திறந்துவைத்துக்கொண்டு எக்கியபடி குனிந்து நிற்கும் அவனுடைய தோற்றத்தில் தென்படுகிற முதுகின் அசைவுகளும் வியர்வையில் தெப்பலாக நனைந்து நெளியும் சட்டை மடிப்புகளும் ஒவ்வொருமுறையும் என்னை திகைப்பின் மனோநிலைக்குள் அமிழ்த்தும். அந்த உணர்வுத் தாக்கம் மட்டும் எப்போதும் மாறியதே கிடையாது. ஓர் உழைப்பின் ஈரம் கண்முன்னே வெளியேறும் அந்த நிமிடங்கள் எனக்கு என்னவாக இருக்கிறது? உழைப்பின் நீட்சியை மனித உடல்மொழி வெளிப்படுத்தும் பாங்கில் என்னுடைய தனிப்பட்ட வாழ்வின் வரையறையை நான் மட்டுமே தீர்மானிக்க முடியாமல் திணறுகிறேனோ? எனக்கான மனிதநேரம் அந்தக் கடைக்குள்ளேயே நெடுங்காலமாக பிசுபிசுத்துக்கொண்டிருப்பது போலவே இருக்கிறது. அதனை கடையின் பணியாள் நினைவுபடுத்துகிறான். காத்திருப்பிற்கான பொறுமையை அப்புறாக்கள் நினைவுபடுத்துகின்றனவா?

அவன் நிமிர்ந்து ஜன்னல்களின் கீழ்ப்பக்கக் கதவுகளை மூடுவான். அதுதான் புறாக்களுக்கான சமிக்ஞையாக இருக்க வேண்டும். அடுத்த சில நொடிகளில் நூறுக்கும் அதிகமான புறாக்கள் படையெடுத்து வந்து தானியங்களைக் கொத்தத் தொடங்கும். இரையெடுக்கும் சத்தமும் அவற்றின் அனற்றலும் இறக்கைகளின் படபடப்பும் அருகிலிருந்து பார்க்கும்போது அதுவரையில் அனுபவித்திராத படபடப்பை நெஞ்சில் உணரச் செய்யும். இறந்துபோன அப்பா, அம்மா, தங்கை என மூவரின் முகங்களும் தலைக்குள் மோதி மோதி விலகும். சுடுகாடும் நெருப்பிட்டு விலகிய பின்னும் ஜூவாலையின் அனல்பட்டு நெஞ்சமெல்லாம் பற்றியெரிகிற பதைபதைப்பும் கசகசவென வியர்வையைப் பெருக்கும். ஜன்னலுக்கு உட்பக்கத்திலிருந்து கொஞ்சம் அசைந்தாலும் புறாக்கள் மொத்தமாக இரையெடுக்குமிடத்திலிருந்து எம்பிப் பறந்து வானத்தில் ஒரு வட்டமடித்துவிட்டு மீண்டும் வந்து அமரும். ‘ஸார்.. அசையாம நின்னு பாருங்க ஸார்.. டிஸ்டர்ப் ஆகும்’ என்று ஒருமுறை பணியாள் சொல்லியிருந்தான்.

அதுதான் அக்கடையில் கடந்த பதினொரு மாதங்களாக புதிதாகத் தொற்றிக்கொண்டிருக்கும் பழக்கம். ஐந்து ஆண்டுகளாக அப்புறாக்களின் மூதாதைகள் அப்பகுதியின் வெவ்வேறு இடங்களில் இரை எடுத்து உயிர்வாழ்ந்து பெருகி வளர்ந்த சந்ததிகள்தாம் அப்பறவைக்கூட்டம்.

அவரின் கண்களுக்கு முந்தைய புறாக்களின் பசிப்பொழுதுகள் வந்ததில்லையோ? எதனால் அப்போது கவனத்தில் வராமல் போயிருக்கும்? இப்போது என்ன திடீர் அவதானிப்பும் அக்கறையும்? அருள், கொடை, ஈவு, இரக்கம், பாவம், புண்ணியம் போன்ற கணக்குகளின் வரிசையில் அதை யாராவது பரிந்துரை செய்திருப்பார்கள். பேரிடர் காலங்களில் நிராதரவற்றவர்களுக்குத் தேவைப்படுகிற பொருட்களைச் சேகரித்து ஆட்களை அமர்த்தி விநியோகம் செய்திருக்கிறார். அம்மனநிலையின் காரியங்களுக்கு தூண்டுகோலாக இயக்குகிற காரணங்கள் எப்பேற்பட்டவை என்று யார்தான் சொல்லிட முடியும்? உழைப்பும் பிழைப்பும் ஈட்டுத் தருகின்ற பொருளாதார சேமிப்பில் எத்தனை சதவீதம் ஈகைக்கானது? எத்தனை சதவீதம் வியாபாரத் தந்திரத்தில் பணயம் வைத்து சவாரி விடுவதற்கானது? கார்ப்பரேட் சம்பந்தப்பட்ட தொழில் முதலீடுகளில் முக்கியமானது பிறரின் நம்பிக்கையை கையகப்படுத்துவதும் அதனைப் பிற வழிகளில் பணயம் வைப்பதும்தான் எனும்போது.. உழைப்பிற்கான கூலியையோ பிரதிபலனையோ நிர்ணயம் செய்பவர் கடவுளுக்கு ஒப்பானவர் ஆகிவிடுகிறார்.

இரை. அதுதான் உயிர்வாழ்தலின் ஆதாரம் அல்லவா? பெரும்பான்மையான கூட்டம் எப்போதுமே தானியத்தைத் தூவுகின்ற கைகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டு காத்திருக்கும்படி நேர்வது எதனால்?

டீயை முழுமையாக குடித்துமுடித்துவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தேன். காத்திருந்தவரைப் போல ஒன்றைச் சொன்னார்.

“இப்போதைக்கு ஒரு பத்தாயிரம் போட்டு வுடுறேன் ஸார்.. பைக் ரிப்பேருக்கு ஹெல்ப்பா இருக்கும்..”

சூரிய ஒளி அவர்மீது படிந்து வயலட் கலரில் ஒளிர்ந்தார். சரியென்று தலையை ஆட்டினேன். எழுந்து கை குலுக்கினேன்.

“அஞ்சு ரம்ஜானுக்கும் உங்க கடைக்கு வந்து நோம்பு கஞ்சி குடிச்சிட்டு போயிருக்கேன்.. உங்க பிரதர் ரெண்டுமுறை ஹஜ் பயணம் போயிட்டு வந்திட்டாருல.. ஸார்.. அடுத்த ரம்ஜான் வரைக்கும் இழுத்துடாதீங்க.. ப்ளீஸ்..”

“இன்ஷா அல்லா.. வருஷம் பொறக்கும்போது நம்ம எல்லாருக்கும் ப்ரைட்டா இருக்கும் ஸார்.. தைரியமா போயிட்டு வாங்க.. அடுத்த வாட்டி ஸ்வீட்டோடதான் மீட் பண்றோம்.. வேற ஒன்னும் யோசிக்காதீங்க..”

மீண்டும் லிஃப்டில் இறங்கி பிராட்வே சாலையில் நடந்து உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையத்திற்குள் புகும் முன் ஒரு காஃபி குடித்து சாலைக்கு கீழே பதுங்கியிருக்கும் ரயில் நிலைய மேடையில் காத்திருந்து மெட்ரோ பாம்பு வந்ததும் அதிலேறி பயணித்து கிண்டி மெட்ரோவில் இறங்கி.. மீண்டும் ரேஸ் கோர்ஸ் சாலை வழியே நடந்து.. நடந்த நடை போதுமென்றான பின் இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்திக்கொண்டேன்.

எரிவாயு வங்கியின் அடுத்துள்ள நிலப்பகுதியில் பெரும் பள்ளத்தோடு புதைந்தே போய்விட்ட மனித வாழ்வின் அபத்தத்தை நினைத்துப் பார்க்கும்போது தொடர்ந்து இவ்வாழ்க்கையை பையில் இட்டபடி தெருத்தெருவாக திரிந்துகொண்டிருப்பதில் என்ன அர்த்தம் உள்ளது? அல்லது தினம் தூங்கி விடியலில் எழுவதற்கு நடுவில் உள்ள காலத்தின் உத்தரவாதத்திற்குரிய நம்பிக்கை எது?

நினைத்த இடத்தில் கிடைக்கும் பஸ் நிறுத்த இருக்கைகளில் எல்லாம் ஓர் அரைமணி நேரமாவது உட்கார்ந்தபடி சாலையை, மனித அசைவுகளை அவர்களின் பேச்சை வேடிக்கை பார்க்க பார்க்க கிடைக்கும் தரிசனம்தான் என்ன? வீட்டிற்கு அரக்கப்பறக்க ஓடுகிற அவசரம் இல்லாத மனப்போக்கு அத்தனைக் கீழ்மைத்தருணங்களிலும் பொதுநிராகரிப்புகளிலும் பொய்வாக்குறுதிகளிலும் தேங்கிவிடாமல் ஓரளவு பாதுகாக்கிறது. இவ்வுலகை, இந்நகரை ஜஸ்ட் வேடிக்கைப் பார்த்தல் என்பது பரவசமல்ல. எந்தவொரு தத்துவ விசாரமும் அல்ல. அதுவொரு ஆசுவாசம். சுயத்தை நீர்த்துப் போகச் செய்கிற ஓர் உத்தி. எந்த அவலத்தையும் சுத்திகரிப்பு செய்து பழுது நீக்கி மன இயந்திரத்தை எதுவொன்றும் இயங்கச் செய்யப்போவதில்லை. ஆனாலும் அதுவொரு ஆசுவாசம். அதுவொரு தியானம்.

எனவே, இன்றைய தினம் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்றபடி தரிசிக்கக் கிடைத்திருக்க வேண்டிய சூரிய அஸ்தமனத்தை தவறவிட்டதற்காக மனம் வருந்துவதாக இல்லை. நேற்றும் அது வாய்க்கவில்லை. ஆனால், நாளை அதற்கான சந்தர்ப்பம் உண்டு.

இதோ இப்போது முன்பனி படர்ந்திருக்கும் ஏரியில் ஓர் ஆகாயத்தாமரைகூட இல்லை. ஆகாயத்தாமரைகள் ஏரியைப் பற்றிக்கொண்டு அதிவேகமாக வளர்ந்து பரவுவதன் பிடிவாதம் இதுநாள்வரை புரிந்ததில்லை. அவை ஏரியின் நீர்நிலையை புறவுலகின் பார்வையிலிருந்து மறைத்துக்கொண்டு ரகசியமாக தம் அடிவயிற்றில் கர்ப்பம் போல சுமந்து பாதுகாக்கின்றன. அல்லது பெருந்தாகங்கொண்டு நீரைப் பருகியபடியே பெருகி வளர்கின்றன. அவற்றில் பொட்டு பொட்டாக முளைத்திருக்கும் சிறிய வயலட் நிறப் பூக்கள் கண்களுக்கு உடனடியாகப் புலப்படுவதில்லை. உற்று நோக்குவதற்கு நம்மிடம் போதுமான நேரப்பொழுதும் இல்லை. ஆகாயத்தாமரைக்கு நீரை ஆவியாக்கும் தன்மை உண்டு என்கிறது தாவரவியல். பொழிந்து தீர்த்த புயல் மழைக் கூட்டணிக்கும் ஆகாயத்தாமரைக்கும் விசேஷ பங்கு உண்டா என்பதும் தெரியவில்லை.

ஆனால், மழைக்கும் முன்னதாகவே அவற்றை மொத்தமாக ஜே.ஸி.பி கொண்டு அள்ளித் தூர்வாரி தூக்கி ரொம்ப நாட்களாக நடைபாதையில் போட்டு வைத்திருந்தார்கள். முரட்டுத்தனமான நாணலைப் போன்ற அவற்றின் கால்தண்டுகளின் உறுதியைப் பார்க்கும்போது மலைப்பாக இருந்தது. ஆகாயத்தாமரைகளின் குவியல் அந்த இறுதியாத்திரை வாகனத்திற்கும் முன்பாக இரண்டு பெரிய யானைகளின் கரிய நிழல் போல இரவுகளில் பொறுமையிழக்காமல் பலநாட்களாக நின்றுகொண்டிருந்தன. மழைக்குப் பிறகும் நேற்றுவரையிலும்கூட அந்த இரண்டு யானைகளும் குப்பைகூளமாக உருமாற்றமடைந்து சாக்கடையாக நாறிக்கொண்டிருந்தன. நொசநொசவென நொதிந்து மட்கிய பச்சை வாடையின் வீச்சத்தையும் இணைத்தபடி புதிய ததுர்நாற்றத்தைக் காற்றில் பரவவிட்டிருந்தன.

இச்சமயம் கரிய நிழலுருவ யானைகளைக் காணோம். அதனால்தான் ஏரி, இந்தப்பக்கத்திலிருந்து பார்வைக்கு முழுமையாகக் காணக்கிடைக்கிறது.

பஸ் நிறுத்தத்திற்கு இடதுபக்கத்தில் உணவுக் கடைகள் தொடங்குகின்றன. ஆனால், வரிசையில் முதன்மையாக சற்றே உள்வாங்கியபடி ஒரு கடை உள்ளது. தகரத்தில் அடித்து உருவாக்கப்பட்டிருக்கும் கடை. பழைய வீண்பொருட்களை வகை பிரித்து கொள்முதல் செய்துகொள்ளும் காயலான் கடை. அதன் வாசலில் நிறைய காலி பிளாஸ்டிக் பாட்டில்களை பைகளில் இட்டு இறுக்கிக் கட்டிக்கொண்டிருந்த மனிதர் தலைப்பாகையொன்றை அணிந்திருக்கிறார்.

அவரை நேற்றே கவனித்திருந்தேன். நேற்று தலைப்பாகை இல்லை. ஜீன்ஸ் பேண்ட். கருப்பு நிறம் வெளுத்துப் போயிருந்த அரைக்கை சட்டை. வலது கை மணிக்கட்டிற்கு மேலே ஏற்றிவிடப்பட்ட ஒரு பித்தளை காப்பு. ராஜஸ்தான் பாணி செருப்பு அணிந்து உடல்தோற்றத்தில் ஒரு மிடுக்கு இருந்தது. அறுபது வயது மதிக்கத்தக்க அவருடைய முகத்தில் பாதி நரைத்தும் நரைக்காமலும் படர்ந்திருந்த தாடி மீசையில் ஒரு வசீகரமும் இருந்தது. மீசையின் முனை, நரைப்பிசிர்களோடு லேசாக முறுக்கிவிடப்பட்டிருந்தது. தனி ஆளாக சேகரித்து வந்திருந்ததை வகை பிரித்து வேலையில் மும்முரமாக இருந்தார். கடைசி பஸ் வந்ததும் ஏறிப் போய்விட்டேன்.

இன்றும், அதே மனிதரை நான் எதிர்பார்த்து வந்திருக்கவில்லை. ஆனால், இன்றவர் தன் தலையில் அணிந்திருந்த பெரிய தலைப்பாகை கூடுதலாக ஈர்த்தது. அத்தலைப்பாகையும் ராஜஸ்தான் பானியில் திருகிய துணி உருளையைக்கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அத்தனைக் கச்சிதமோ நறுவிசோ அதில் இல்லை. ஆனால், அந்தத் தலைக்குப் பொருத்தமாக சிக்கென உட்கார்ந்திருந்தது. அவர் குனிந்து நிமிரும்போதெல்லாம் அது நழுவவில்லை, விழவில்லை. இன்றைய தினம் விதவிதமான பெரிய பிளாஸ்டிக் பைகள் ஏராளமாய் தரையில் கிடந்தன. ஓர் ஒழுங்கில் அவற்றை ரக வாரியாக மடித்து மடித்து அங்குமிங்குமாக கிடத்தியும் வைத்திருந்தார். நான்கு பயணப்பைகள் நீள நீளமாக ஓர் ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் பலவற்றையும் திணித்துக்கொண்டிருந்தார். இன்னொருவன் பஸ் நிறுத்தத்தின் ஸ்டீல் இருக்கையில் உட்கார்ந்திருந்தான். அவனொரு நிழலைப் போல வீற்றிருந்தான். அவரோடு பேச்சுக்கொடுத்தான். ஒருவரையொருவர் ஏற்கனவே தெரிந்திருக்கிறது. அவனுடைய தமிழ் திணறியது. அவன் பிற மாநிலத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால், தலைப்பாகை அவனுக்கு சொல்லிக்கொண்டிருந்த பதில்களில் தமிழ் மொழி சரளமாக இருந்தது.

தலைப்பாகையின் பேச்சு என்னருகே நின்றிருந்த மற்றொரு பயணியை நோக்கித் திரும்பியிருந்தது. அவர் ஏற்கனவே தலைப்பாகைக்கு காது கொடுத்துக் கேட்டிருந்தார் போல. தலைப்பாகையின் பேச்சில் அரசியல் இருந்தது.

“நான் பி.காம் முடிச்சிருக்கேன் ஸார்.. ஆல்ஸோ எ டிப்ளமோ ஹோல்டர்.. கவர்மெண்ட் வேலையில இருந்திருக்கேன். ஜனாதிபதிக்கு அஞ்சு லெட்டர் போட்டிருப்பேன்.. ஒரு பதிலு கிடையாதே? ஒரு மினிஸ்டருக்கான பேஸிக் நமக்குத் தெரியாதுங்கறது அவங்க நினைப்பு.. பட் ஐ நோ.. பதில் சொல்லாம இழுத்தடிக்கிறது ஒரு டெக்னிக்.. சர்தான் போடா வேணாம்னு வேலைய அப்பயே எழுதி குடுத்துட்டேன்.. ஜனாதிபன்னா அது அப்துல் கலாம்தான்.. எல்லாம் அவரோடு போச்சு.. ம்க்கும்..”

நான் இப்போது பேச்சைக் கவனிக்கும் விதமாகத் தலைப்பாகையைத் திரும்பிப் பார்த்தேன். அவர்கள் இருவரும் பேச்சியின் முந்தைய தொடர்ச்சியில் சீரியஸாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு அதன் ஆதியும் அந்தமும் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் எழவில்லை. விடுபட்டவை உள்ளே தாமே நிரம்பிக்கொண்டுதான் இருந்தன. என் யோசனைகளில் இருந்து இப்போதுதான் வெளியேறி இருக்கிறேன் எனும்போது எனக்கான கடைசி பஸ்ஸை பற்றிய எதார்த்தத்திற்கு வரும்போதே.. 

“சோஷியல் சர்வீஸ் பண்ணிருக்கேன் ஸார்.. எத்தனை ஊரு? எத்தனை பேரு..? இப்போ.. பண்ணுறதும் அதேதான்.. பெரிய வித்தியாசம் கிடையாது.. இன்னா.. மனுஷன் வேணாம்னு தூக்கிப் போடுற மிச்சத்துக்கும் பண மதிப்புல ஒரு ஸ்மால் குவாண்டிட்டி அர்த்தம் இருக்குது..”

தலைப்பாகையை கவனிக்கத் தொடங்கியிருந்ததால் அவர் எங்கள் இருவரை நோக்கியும் பொதுவாகவே பேச்சைத் தொடர்ந்தார்.

“ராத்திரி பூரா சுத்துனா.. அதுவொரு உழைப்பு.. நாய்த் தொந்தரவு தாண்டி வேற தொந்தரவு கிடையாது.. ஒருவாட்டி ஒரு கல்யாண ரிசப்ஷன் மண்டபம்.. அதும் பக்கத்து சந்துலருந்த குப்பைத்தொட்டி.. நடுராத்திரியில கேஸ் & கேஸா ஃபுல்லா காலி பீர் பாட்டில்ஸ்.. எப்டியிருக்கும் பாருங்க.. கிண்டியிலருந்து நேக்கா கட்டியெடுத்து தலையில வச்சே சுமந்துகினு இங்க வந்து சேர்ந்தேன்.. வண்டி சேஃப்டி கிடையாது.. கொஞ்சம் ஸ்லிப் ஆனாலும் போச்சு.. மொத்த உழைப்பும் அவுட்டு.. சில்லு சில்லா சிதறிடும் ஸார்..”

“ஆனா, அது ரொம்ப கஷ்டமாச்சே..”

“கிண்டியில எவனும் பாட்டிலு எடுக்கறதுல்ல.. இவன் ஒண்டிதான் எடுத்துக்கறான்.. அதான் நடந்தே வந்துட்டேன்..”

சொல்லிவிட்டு பிளாஸ்டிக் கவர்களை மடிக்கத் தொடங்கினார்.

“ஸார், பஸ்ஸூ வருமா?”

சகப் பயணி என்னைக் கேட்டார். அவருக்கு எப்படியும் ஐம்பது வயது மதிக்கத்தக்க தோற்றம் இருந்தது. என்னைப் போலவே ஒரு மிஸ்டர் பொதுஜனம்.

“நீங்க எங்க போவணும்?”

“திருவான்மியூர்.. எம். செவன் ஜி எஸ் வண்டினு நினைக்கிறேன்”

“அரைமணிக்குள்ள வந்துருவான் ஸார்.. எப்படியும் வந்துதானே ஆவணும்?”

நம்பிக்கையின்றி இடதுபக்கமாக பார்த்துக்கொண்டார்.

“நடந்தே விஜயநகர் போயிட்டா கூட.. போயிறலாமோ..”

அவருக்குள் ஒரு புலம்பல் தொடங்கியிருந்தது. அதுவரையில் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்த கரிய நிழல் உருவம் இருக்கையிலிருந்து எழுந்து அருகில் வந்தது.

“நீங்.. இப்டிக்கா போங்கொ ஸார்.. குருநானக் சைட்ல நெறைய வண்டிங்கொ வரும்.. லேட்டாச்சின்னா ஜாஸ்தி வராது..”

அவர் முடிவெடுத்துவிட்டார். தலையை ஆட்டிக்கொண்டார். விறுவிறுவென குருநானக் கல்லூரி இருக்கும் பிரதானச் சாலையை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தார். அவன் என்னைப் பார்த்தான்.

“நீங்கொ..?”

“நான் வெயிட் பண்ணுவேன்”

குப்பை அள்ளும் லாரியொன்று ராட்சசத்தனமாக வந்து நின்றது. அதில் தொற்றிக்கொண்டு வந்திருந்த சீருடை இளைஞர்கள் இருவர் குதித்து இறங்கினார்கள். குப்பைத்தொட்டியை நகற்றி இழுத்துப் பொருத்தினார்கள். அகன்ற வாய்க்குள் கவிழ்த்துக்கொண்டு குப்பைகளை சக்கையாக உள்வாங்கிவைத்துக்கொண்டு காலி தொட்டியை பொத்தென்று சாலையில் போட்டது. அதை அவர்கள் பரபரவென இழுத்து அதனிடத்தில் தள்ளிவிட்டு ஏறிக்கொண்டார்கள். லாரி நகர்ந்து விலகி சாலையில் வேகமெடுத்தது. குப்பென்று அடித்த துர்நாற்றம் நாசியின் அடியில் சுழன்று கரைந்தது. அப்போது வீசிய காற்றில் எதிர்ப்பக்கத்திலிருந்து சாக்கடை வீச்சம் பாய்ந்து வந்து முகத்தில் மோதி மறைந்தது.

எதிர்ப்பக்கம் ஒரு பஸ் நிறுத்தம் உண்டு. அதன் உட்புறத்தில் மக்களுக்கான அரசு செயல்திட்டத்திற்கான ஒரு சிந்தடிக் போஸ்டர் நீளவாக்கில் அகலமாக ஒட்டப்பட்டிருந்தது. பஸ் நிறுத்தத்தை ஒட்டியுள்ள வளைவு ஏரிக்கரை குடியிருப்புகளுக்கு இட்டுச்செல்லும் சாலை. பஸ் நிறுத்தத்தின் வளைவில் இயற்கை நுண் உரங்களை உற்பத்தி செய்வதாக ஒரு போர்டு மாட்டிய சிறிய மாநகராட்சி கட்டடம் உள்ளது. அதனையடுத்து ஒரு கட்டணக் கழிப்பிடமும் உண்டு. கழிப்பறையை ஒட்டி தெருவோரமாக ஒரு வண்டிக்கடையில் மதிய வேளைகளில் சுடச் சுட சிக்கன் பிரியாணி பெரிய டபராவிலிருந்து வியாபாரம் ஆகும். வயதான தம்பதியரின் அந்தத் தொழிலுக்கு நிறைய கஸ்டமர்கள் உண்டு. ஆட்டோக்காரர்கள், வேறு சில தினக்கூலிகள், ஸ்விகி சொமொட்டோ வண்டியோட்டிகள், கழுத்தில் டேக் அணிந்தவர்கள், பார்சல் மட்டும் வாங்கிப் போகிறவர்கள் என விதவிதவிதமான வயிறுகள் தத்தம் பசியைப் போக்கிக்கொள்ள அலைமோதுவதைப் பார்த்திருக்கிறேன்.

அந்த வண்டிக்கடைக்குப் பின்பக்கமுள்ள கோட்டைச்சுவருக்கும் அப்பால் பரந்துவிரிந்திருக்கும் ஏரி நீரில் காற்று வீசும்போதெல்லாம் இன்னும் இன்னும் என்றபடி அலையலையாக ஆகாயத்தாமரைகள் துடித்துக் கொண்டிருக்கும்.

“ஸார்.. உங்களை மாதிரி ஒரு ஜென்டில்மேன் காருல வந்து இந்த அட்டைப்பெட்டியைத் தூக்கிப் போட்டுட்டு போனாரு.. இதுல என்ன ரேட்டு இருக்குன்னு பாத்து சொல்லுங்க ஸார்..”

தலைப்பாகைக்கு கண் பார்வை மங்கியிருக்கலாம். சிறிய எழுத்துக்கள் இடக்கு செய்கிறது போல. நான் பையைத் திறந்து என்னுடிய கண்ணாடியை அணிந்துகொண்டேன். முழ உயரத்துக்கு இருந்த அட்டைப்பெட்டியை வாங்கி சுழற்றிச் சுழற்றி அதன் நான்கு பக்கங்களிலும் உற்றுப் பார்த்து விலையைத் தேடினேன். அதற்கான அறிகுறியே இல்லை. வலிமையான ஒரு டார்ச் லைட் அது. முக்காலி ஸ்டாண்டில் ஸ்க்ரூவேற்றி பயன்படுத்துவதற்கான மோல்ட் அதில் இருந்தது. ஸ்டாண்டும் இருந்தது. அதை தலைப்பாகை தன் கையில் தனியே வைத்திருந்தார். அதனுடைய பயன்பாட்டை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அட்டைப்பெட்டியில் தனியே அச்சடித்து ஒட்டப்பட்டிருந்த ஒரு லேபில் மட்டும் இருந்தது.

“மேட் இன் சைனான்னு போட்டிருக்கு.. ரேட்டைக் காணோம்”

“பல்ப் ஃபியூஸ் போயிருக்கு.. அவ்ளோதான். அதை மாத்திட்டு அட்டைப் பெட்டியோட கொண்டு போயி மவுண்ட் ரோடு ரிச்சி ஸ்ட்ரீட்ல கொடுத்தா ஐந்நூறு ரூபா தேத்திடும்.. நல்ல ரேட் இருக்கும்ல ஸார்..?”

“பார்த்தா அப்படித்தான் தெரியுது”

தலைப்பாகை அதை ஒரு பையில் தனியே வைத்துக்கொண்டார். அப்போது மோட்டார் பொருத்திய மூன்று சக்கர சைக்கிள் வண்டி வந்தது. இரண்டு பேர் இருந்தார்கள். ஒருத்தன் ஓட்டுநர். வண்டியின் மேல்பக்க பலகையில் வியாபாரம் ஆகாத பழங்கள் இருந்தன. அடிப்பக்கத்திலிருந்து லேசாக அழுகின, கெட்டுப் போன, மறுநாள் வியாபாரத்துக்கு தாங்காது என்றாகிப்போன பழங்களில் சிலவற்றை பொறுக்கியெடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுக்கொண்டிருந்தான் இன்னொருத்தன். இரண்டொரு நிமிடங்களில் கிளம்பிவிட்டார்கள்.

நிழல் உருவம் தலைப்பாகையிடம் சொல்லிற்று.

“யோவ்.. பழம் போட்டான் பாரு.. எடுத்துக்கலாம் வா..”

“உனக்கு வேணும்னா.. எடுத்துக்கோ… நைநைன்னாதே.. போ..”

“உன்ட்ட சொன்னன் பாரு..”

அவன் போய் இருக்கையில் உட்கார்ந்துகொண்டான். தலைப்பாகை, பெரும்பாலும் பிளாஸ்டிக் கவர்களை மடித்து முடித்து எந்தெந்த பைகளுக்குள் அடுக்கி வைக்க வேண்டுமோ அவற்றுக்குள் பத்திரப்படுத்தியிருந்தார். இன்னும் சில இருந்தன.

“அடுத்த லாரி வர்றதுகுள்ள போயி எடுத்துக்கோ.. எனக்கும் ரெண்டு எடுத்தாந்து வையி.. மூஞ்ச பாரு..”

“குவாட்டரு..?”

“இருக்குடா..”

“நைட்டு ரவுண்டு போவியா..?”

“அப்புறம் சொல்றேன்.. நீ போயி துன்னுட்டு வா..”

அவன் மெதுவாக எழுந்து குப்பைத் தொட்டியை அண்டி நின்று உள்ளே எக்கிப் பார்த்தான். அவனுடைய முதுகின் அசைவு மும்முரமாக இருந்தது. புறாக்களின் ஞாபகம் வந்தது. திரும்பிப் பார்த்தேன். தலைப்பாகை இருக்கையில் உட்கார்ந்திருந்தார். சாலையைப் பார்த்தேன். கால் கிலோமீட்டர் தொலைவில் எனக்கான பஸ் வருவது தெரிந்தது. அவரிடம் சொல்லவேண்டும் என்று தோன்றியது.

“என் பஸ் வந்திருச்சுங்க..”

அவருக்கு நான் சொன்னது காதில் விழவில்லை. தரையில் கிடக்கும் பிளாஸ்டிக் கவர்களைப் பார்த்தபடியே வாய்விட்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அதுவொரு சுயபுலம்பல் என்பது புரிந்துவிட்டது. பார்வை சில நொடி நிலத்தின்மீது நிலைத்திருந்தது. சில நொடிகளில் அங்குமிங்கும் அலைந்தது. வாய் மட்டும் பேசுவதை நிறுத்தவில்லை. சத்தமாக இல்லை. ஆனால், சரளமாக இருந்தது. அதுவும் தமிழ்தானா என்பது வாகனச் சத்தங்களில் புரியவில்லை. மேற்கொண்டு தெரிந்து என்ன ஆகப் போகிறது?

ஃபோன் அடித்தது. பையிலிருந்து எடுத்துப் பார்த்தேன். மெக்கானிக் சிவா காலிங்.

“நாளைக்கு ஈவ்னிங் டெலிவரி எடுத்துக்கலாம் ஸார்.. பக்கா”

“இன்னொரு கன மழை இருக்குன்னு சொல்லிருக்காங்க.. திருப்பியும் மூழ்கிட வேணாம்.. நீங்களே வச்சிருங்க.. ஒரு வேலை விஷயமா வெளியூருக்குப் போயிடுவேன்.. வந்து வாங்கிக்கறேன்..”

“ஓகே.. ஸார்”

அணைத்துவிட்டு பார்த்தேன். நண்பனிடமிருந்து இரண்டு மணி நேரங்களுக்கு முன்னதாகவே ஒரு மெசேஜ் வந்திருந்தது.

‘போன விஷயம் என்னாச்சு? வொய் நோ ரிப்ளை?’

எங்கே ஆரம்பித்து எதையெல்லாம் ஒரு பதில் மெசேஜில் சொல்லிவிடமுடியும்?

பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தேன். பஸ் சிக்னலில் நின்றுகொண்டிருந்தது. விடுபட்டதும் இந்த நிறுத்தம் நோக்கி வந்துவிடும். நான் நன்றாக முன்னகர்ந்து சாலையில் நின்றபடி என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாக, பிறரிடமிருந்து வேறுபடுத்திக் கொள்ளும் விதமாக டிரைவருக்கு சமிக்ஞை செய்தாக வேண்டும். இந்த நிறுத்தத்தில் பஸ்ஸிலிருந்து இறங்குவதற்கு வேறு பயணிகள் இல்லையென்றால் பஸ் நிற்காமலே போய்விடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

எதிர்ப்பக்கமிருந்த ஏரியை ஒருமுறை உற்றுப் பார்த்தேன். சிரித்துக்கொண்டேன். மீண்டும் ஆகாயத்தாமரைகள் முளைத்துவிடும்.

நண்பனுக்கு பதிலை டைப் பண்ணினேன்.

‘இன்ஷா அல்லாஹ்.. அடுத்த ரம்ஜானுக்கு முன்பாக பணம் வந்துவிடும்.. என்று நம்புகிறேன்..’

சிக்னலிலிருந்து விடுபட்ட பஸ் என்னை நோக்கி முன்னேறி வந்தது.

******

elangomib@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button