
அந்த ஆண்டு ஜூலை மாதம், முதல் வாரத்தில் ஒரு படமும் மூன்றாவது வாரத்தில் இன்னொரு படமும் அடுத்தடுத்து தமிழில் வெளியாகின. இரண்டிற்கும் இசை இளையராஜா , இரண்டுமே பெரு வெற்றிப்படங்கள் என்பதைத் தாண்டி, தமிழ்த் திரையில் முதன்முறை ஒரு புதிய களம் அமைக்கப்பட்டது. அது, பள்ளி மாணவர்களின் முதல் ஈர்ப்பு அல்லது காதல் அதுவும் பள்ளிச் சீருடையிலேயே சொல்லப்பட்டது. அதற்கு முன்னர், கல்லூரி வகுப்பறைக்குள் இருந்து வந்த காதலை முதன்முறை பள்ளி வகுப்பறைக்கு கொண்டு சென்ற படங்களாக இந்த இரண்டு படங்களைச் சொல்லலாம். இறுதிக்காட்சியில் ஓடிப் போகும் மாணவர்களைத் திருத்தி ஊருக்கு திரும்பியனுப்பியது முதல் படம். அவர்களை கடற்கரையில் ஓடச் சொல்லி, அந்த சட்டகத்தை உறைய வைத்து முடித்து [ அல்லது தொடங்கி ] வைத்தது இரண்டாவது படம். முதல் படம் (சந்தான) பாரதி – (பி)வாசு இயக்கத்தில் வெளிவந்த “பன்னீர் புஷ்பங்கள்” இரண்டாவது படம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த “அலைகள் ஓய்வதில்லை”. [ பள்ளிச் சீருடைக் காதலல்லாததால் 1979 இல் வெளிவந்த மற்றொரு பதின் பருவ படமான அழியாத கோலங்களையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம் ]. இந்த 38 ஆண்டுகளில் தென்னிந்தியாவில் சலிக்க சலிக்க வெளிவந்த காதல் படங்கள் சில ஆயிரங்கள் அதில் பள்ளி மாணவர்களின் வாழ்வு, காதல் என அவை ஓயவேயில்லை.
அதே போல், மலையாளத்திலும் டெய்ஸி [ கமல் சிறப்புத் தோற்றத்தில் வந்த படம் ] காலம் தொடங்கி ஆரண்யகம், நோட்புக் , ஓம் ஷாந்தி ஓஷானா என வளர் இளம்பருவ படங்கள் வரை பல படங்கள் வந்துள்ளன. இவ்வளவு அலைகளுக்குப் பின்னரும் மலையாளத்தில் ஒரு புதிய அலை இயக்குனரால் புத்தம் புது பள்ளிப் பருவக் கதை மீண்டும் படுசுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கிறது. அது அறிமுக இயக்குனர் : கிரீஷ் ஏ.டி யின் பக்கத்தில் வெளிவந்துள்ள “தண்ணீர்மத்தன் தினங்கள்”
கதை
ஒரு சின்ன டவுனில், பள்ளியில் உயர்நிலையில் படிக்கும் ஜேய்சன் மாத்யூ வின் வாழ்வில் 3 பெரும் பிரச்னைகள் . எப்போதும் வம்பிழுக்கும் சீனியர் மாணவன் பேசில், தன் வகுப்பில் அவனைக் கவர்ந்த மாணவி கீர்த்தி மற்றும் மூன்றாம் மாபெரும் பிரச்னை புதிதாக வந்து எல்லாரையும் கவர்ந்தாலும் இவனுக்கு மட்டும் படுஎரிச்சலை ஏற்படுத்தும் ஆசிரியர் ரவி பத்மநாபன். இதெல்லாம் என்ன ஆனது என்னும் சின்னஞ் சிறு கதையை சிரிக்க சிரிக்க எந்த விகல்பமுமில்லாமல், பெரிய கருத்து எதுவும் சொல்லி சித்ரவதை செய்யாமல் சொல்லியிருக்கிறார்கள்
பார்வை
விதவிதமான கனவுகள், மீசை அரும்ப பால்யம் வெளியேறும் தருணம், முதல் ஈர்ப்பு, நண்பர்கள், குழுக்கள். அவர் சண்டைகள், சுற்றுலா, சீருடைகள், பெற்றோரை பள்ளிக்கு வரச் சொல்லி பயமுறுத்துதல், மதிப்பெண் குறைவாக எடுத்தல் என பல வண்ண நிகழ்வுகள் கலந்த வானவில் பொழுதுகளை இந்தப் படம் மிகச் சரியாக பதிவு செய்திருக்கிறது. மலையாளத்தில் இது பள்ளிப்பருவகால படங்களின் சீசன் போல. ஒரு ஆதார் லவ், ஜூன், பதினெட்டாம் படி இப்படி இதே காலத்தில் சில படங்கள் வெளியாகின. ஆனாலும் தண்ணீர்மத்தன் தினங்கள் தனித்து வெற்றியடைய பெரிய காரணிகளாக அமைந்தது இந்தப் படத்தின் கதாநாயக அம்சங்கள் இல்லாமல் சாதாரண கதைமாந்தர்களின் நிஜத்தன்மை, அவர்களின் தனித்துவமான நடிப்பு, பார்ப்பவர்கள் பொருந்திப் பார்க்கும் நிகழ்வுகள், வயதுக்கு மீறிய காட்சிகள் இல்லாதது எல்லாவற்றையும் விட மொத்தக் கதையையும் மென்னகைச்சுவையோடு இலகுவாக சொன்னது என கருதத் தோன்றுகிறது. நடிப்பில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள் ஜேய்சனாக வரும் பதினாறு வயதான மேத்யூ தாமஸ் [ கும்பளங்கி நைட்ஸில் கடைசி தம்பியாக நடித்தவர் ], கீர்த்தியாக வரும் அனஸ்வரா ராஜன் மற்றும் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வினீத் ஸ்ரீனிவாசன் அகியோரைக் குறிப்பிட வேண்டும். சாதாரண சம்பவங்கள் நிறைந்திருந்தாலும் சஸ்பென்ஸ், திருப்புமுனை என திரையனுபவங்களும் சேர்ந்தே பின்னப்பட்டிருப்பது கூடுதல் சுவாரசியம். முக்கிய நடிகர்கள் மட்டுமல்லாமல் கூட வரும் நண்பர்களும், ஆசிரியர்களும் தலைமையாசிரியர், பெற்றோர் என அனைவருமே நிறைவான பங்களிப்பு செய்திருக்கிறார்கள். உடல் ரீதியான கவர்ச்சியைத் தவிர்த்திருப்பதால் குடும்பத்திரனரோடு வரும் பார்வையாளர்களையும் படம் எந்த இடத்திலும் நெளிய வைக்காதது சிறப்பு.

படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான், இதற்கு முன்னர் “சப்பா குரிஷு” , “சார்லி” போன்ற படங்களிலும் தமிழில் இன்னும் வெளிவராத “எனை நோக்கிப் பாயும் தோட்டா”, “துருவ நடச்சத்திரம்” படங்களிலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தில் வினோத் இலப்பள்ளியுடன் சேர்ந்து சில காட்சிகள் இவர் கைவண்ணத்தில் வந்துள்ளன. புதிய அலை இயக்குனர்கள் வெளி வருவதற்கு புதிய அலை தயாரிப்பாளர்களும் ஒரு காரணம். இசையமைப்பாளர் ஜஸ்டின் வர்கீசின் எளிய பின்னணி இசையும் , பாடல்களில் அதிக ஈர்ப்புள்ள பாடலாக “ஜாதிக்காய் தோட்டம்”மும் அழகாக அமைந்துள்ளது.
தினோய் பாலோசுடன் இணைந்து கதை எழுதியிருக்கும் இயக்குனர் கிரிஷிற்கு இது முதல் படம். இதற்கு முன்னர் மின் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து சிறிது காலம் கேரளா மின் கழகத்தில் ஒப்பந்தப் பணியிலிருந்து கொண்டே மூன்று குறும்படங்களையும் கிரிஷ் எடுத்திருக்கிறார். திரைக்கதையில் எங்கும் உடல் கவர்ச்சி இல்லாமல் இருப்பது, சின்ன ஊரில் நடக்கும் சம்பவங்கள் , யாருக்கும் ஒப்பனை இல்லாமல் இருப்பது , பெரிய தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லாத எளிய ஒளிப்பதிவு, உறுத்தாத இசை என்பதை தீர்மானம் செய்த பின்னரே, படப்பிடிப்பு தொடங்கியதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் கிரிஷ்.
ஒரு பழைய ட்ரங்கு பெட்டியைத் திறப்பது போல், பால்ய கிணற்றில் பாதாளக் கொலுசால் அலசி, தொலைந்த பொருட்களை மீட்டெடுப்பது போல், சின்ன சந்தோஷத் தருணங்களைப் பதிவு செய்திருக்கும் இந்தப் படம் கேரளாவின் பெருவெற்றிப் பெற்றதில் ஆச்சரியமேதுமில்லை.