
படம் – TRANCE
இயக்குநர் – அன்வர் ரஷீத்
அன்வர் ரஷீத் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ட்ரான்ஸ் (Trance). TRANCE என்றால் தன்னிலை மறந்த நிலை என்று பொருள். அதாவது சுயநினைவற்ற நிலை.
முழுநேரக் குடிகாரர்களும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களும், புற உலகை மறந்து மயக்க நிலையில் மிதக்கும் கற்பனை உலகில் சஞ்சரிப்பார்கள். அத்தகைய போதை வஸ்துக்களில் ஒன்றான, தோழர் மார்க்ஸால் ‘அபின்’ என்றழைக்கப்பட்ட மதத்தைப் பற்றிதான் இந்தப் படம் பேசுகிறது.
தன்னம்பிக்கைப் பேச்சுகளையும், ஆலோசனைகளையும் வழங்கிவரும் விஜீ பிரசாத் கன்னியாகுமரியில் வசிக்கிறான். மிகுந்த நம்பிக்கையுடன் பேசினாலும் அவனுடைய வாழ்க்கை துயர்மிக்கது. சிறுவயது முதலே துன்பங்களையும், துயரங்களையும் மட்டுமே கண்டு வளர்ந்தவன். எனினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தினமும் கண்ணாடி முன்நின்று “Today my life will be eventful, fruitful, wonderful, beautiful and successful” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வான்.
சிறுவயதிலேயே தாய் தற்கொலை செய்துகொள்கிறாள். வளர்ந்து பெரியவனான பிறகு, கடும் மனப்பிரச்சினை காரணமாக சகோதரனும் தற்கொலை செய்துகொள்கிறான். வாழ்வின் கசப்பான அந்த நினைவுகளை மறக்க சொந்த ஊரைவிட்டு மும்பைக்குச் செல்கிறான்.
ஊர் விட்டு ஊர் சென்றால் நினைவுகள் மாறிவிடுமா? துன்பங்கள் துரத்தாதா? மும்பை சென்ற பிறகும் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தூக்கம் வராமல் தவிக்கிறான். அந்த சூழலை எதிர்கொள்ள வேறு வழியின்றி உளவியல் மருந்துகளை உட்கொள்கிறான்.
அதன் பிறகு, ஊரில் அறிமுகமான ஒரு பெண் மூலம் வேலைக்கான வாய்ப்பு கிடைக்கிறது. வேலை தரும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தன்னுடைய காணொளியை அனுப்பி வைக்கிறான். மறுநாள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறான்.
“உன்னுடைய பேச்சைக் கேட்டோம். நீ எங்களுக்குப் பயன்படுவாய். என்ன சம்பளம் எதிர்பார்க்கிறாய்?” என்று கேட்கிறார்கள்.
“அது ஒன்றும் பிரச்சினை இல்லை.. பேசிக்கொள்ளலாம்…” என்று தயங்குகிறான் விஜீ.
“ஒரு லட்சம்? பத்து லட்சம்? அல்லது இருபத்தி ஐந்து லட்சம்? அல்லது ஒரு கோடி? எவ்வளவு கிடைத்தாலும்
பணம் நமக்கு பத்தாது….”என்று அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்கள்.
“உன்னை நாங்கள் தேர்வு செய்தது மேடையில் மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுப்பதற்காக அல்ல. நாங்கள் ஒரு புதிய தொழிலைத் துவங்குகிறோம். மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு போதையைக் கொடுக்கப்போகிறோம். மதம்..!
ஆம்… மதம்தான் அந்த போதை….
உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?”
“இல்லை.”
“ஆனால் இந்த உலகத்தில் பெரும்பாண்மை மக்களுக்கு இருக்கு. அது எங்கிருந்து கிடைத்தாலும் அதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கை தான் நமக்கு பிசினஸ்.”
“என்ன வேலை என்று எனக்கு இன்னும் பிடிபடவில்லையே…”
“அடிப்படையில் ஒரு மோட்டிவேஷன் ஸ்பீக்கர் செய்கிற அதே வேலைதான். ஆனால் அதோடு நாம் மதத்தை கலக்கப்போகிறோம். நீதான் கடவுளின் தூதன், உன்னுடைய பேச்சால் முடவர்கள் நடப்பார்கள், குருடர்கள் பார்ப்பார்கள்.”
“எனக்கு யோசிக்க கொஞ்சம் நேரம் வேண்டும்…”
“உனக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது. ஒன்று நீ இங்கு வரவும் இல்லை எங்களை சந்திக்கவும் இல்லை, அப்படியே திரும்பிப் போகலாம். இரண்டாவதில் ஒரு நிபந்தனை மட்டுமே உண்டு. திரும்பி போக முடியாது.”
“நான் திரும்பிப் போகவில்லை…” என்று கூறி விஜீ பிரசாத் பாஸ்டர் ஜோஸ்வா கால்டனாக மாறுகிறான்.
அவன் அந்த வாய்ப்பை மறுக்காததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அனைத்தையும் இழந்து, வேலையும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் அவனுடைய நிலை. குழந்தைப் பருவம் முதல் கசப்பை மட்டுமே கண்ட, அவனுடைய துயர் மிகுந்த வாழ்வின் போக்கை மாற்ற இது ஒரு அற்புதமான வாய்ப்பு.
மற்றொன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் அரங்கில் பேச வேண்டும் என்கிற அவனுடைய நீண்டநாள் ஆசை.
போவதென்றால் போய்விடலாம் என்கிற வாய்ப்பு ஒரு புறம். விருப்பம் இல்லாவிட்டாலும் அந்த வேலையை ஏற்றே தீர வேண்டும் என்கிற நிர்பந்தம் மறுபுறம். இந்தக் காரணங்களால் விஜீ அதற்குள் இறங்குகிறான்.
விஜீ தனது பேச்சுத் திறமையுடன் மதத்தை கலந்து, மக்களை மயக்க நிலைக்குத் தள்ளுகிறான். பிரபலமான பாதிரியாராக மாறுகிறான். உலகம் முழுவதும் பறக்கிறான்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, தாயின் இறப்பு, சகோதரனின் இறப்பு, துன்பம் மிகுந்த குழந்தைப் பருவம் எனக் கசப்பு மிகுந்த தனது கடந்த காலத்தின் அனைத்தையும் மறக்க, கடவுள் நம்பிக்கையற்ற அவனுக்கும் மதம் என்கிற அபின் தேவைப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவனும் அந்த போதைக்குள் மூழ்குகிறான்.
இதற்கிடையில் விஜீக்கும் அவனை இயக்கும் முதலாளிகளுக்கும் இடையில் ஒரு முரண்பாடு வருகிறது.
அப்போது முதலாளிகளில் ஒருவனான ஐசக் தாமஸ் கூறுவான்,
“இந்த உலகில் இரண்டு வகையான மனிதர்கள் தான் இருக்கிறார்கள். ஒன்று ஆள்பவர்கள். மற்றொன்று ஆளப்படும் அடிமைகள். இதில் நீ எந்த வகை? அடிமைகள் தங்கள் எஜமானர்களிடம் மரியாதையைக் கடைபிடிக்க வேண்டும், அத்துடன் பயத்தையும்…“
“நான் எவனுக்கும் பயப்படமாட்டேன்” என்பான் விஜீ.
அதன் பிறகு ஏற்படும் கைகலப்பில், விஜீ தலையில் தாக்கப்பட்டு சுயநினைவற்ற நிலைக்குச் செல்கிறான்.
தலையில் பலமாக அடிபட்டதாலும், பல ஆண்டுகளாக அவர்கள் கொடுத்து வந்த மருந்துகளை உட்கொண்டதன் பக்க விளைவுகளாலும் விஜீயின் மூளை ஒரு குழப்ப நிலையை அடைகிறது. “அவன் ஒரு நேரத்தில் கடவுளாக இருப்பான், மற்றொரு நேரத்தில் சாத்தானாக இருப்பான், மற்றொரு நாள் இந்திய பிரதமர் என்று கூறுவான், இது ஒரு பைத்தியக்கார நிலை” என்கிறார் மருத்துவர்.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. படத்தில் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை விமர்சனத்திற்குள்ளாக்கியே தீர வேண்டும் என்கிற அளவுக்கு முக்கியத்துவமுடையவை அல்ல, எனவே படம் எடுத்துக்கொண்ட மையமான விசயத்தை விவாதிப்பதுதான் சரியானது. அந்த வகையில் ‘TRANCE’ பாராட்டத்தக்க சிறந்த முயற்சியாகும்.
மதம் என்றால் அதில் அனைத்து மதங்களும் அடங்கும். மதத்திற்குள் நல்ல மதம் கெட்ட மதம் என்று எதுவும் இல்லை. மதத்திற்கு மார்க்ஸ் கூறிய விளக்கம் அனைத்து மதங்களுக்கும் பொருந்தும். கிறித்தவ திருச்சபைகளைப் போலதான் இந்து கார்ப்பரேட் சாமியார்களும். பல்லாயிரம் கோடிகள் புரளும் தொழிலாக அவற்றை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். திருச்சபைகளைப் போல அவையும் கிழித்தெறியப்பட வேண்டும்.
இந்த உலகில் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கப்படாத, ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களையும், ஒரு உயிராக மதித்து ஆறுதலும் ஆசுவாசமும் அளிப்பதால்தான் மதங்கள் அவர்களின் உயிராக இருக்கிறது.
அவர்களுக்கும் ஒரு இதயமுண்டு, அந்த இதயத்திற்கும் சில ஆசைகள் உண்டு. விருப்பங்கள் உண்டு, தேவைகள் உண்டு என்பதை இந்த உலகம் அங்கீகரிப்பதில்லை. இதயமற்ற இந்த உலகில் அந்த இதயங்களின் விருப்பங்கள் மறுக்கப்படுகிறது. மறுக்கப்படும் அவர்களின் தேவைகளையும், விருப்பங்களையும் முறையிடுவதற்கும் பெறுவதற்கும் இதயமற்ற இந்த உலகில் அவர்களுக்காகத் துடிக்கும் இதயமாக மதம் இருக்கிறது.
தமக்கு நேரும் துன்பங்களையும், இழைக்கப்படும் அநீதிகளையும், கண்ணீர்விட்டுக் கொட்டித்தீர்ப்பதற்கும், “அனைத்தையும் உன்னிடம் கொட்டிவிட்டேன்…” என்று ஏக்கப் பெருமூச்சு விடுவதற்குமான இடமாக மதம் இருக்கிறது.
இதைத்தான் மார்க்ஸ், “ஆன்மாவற்றவர்களின் ஆன்மா”, “இதயமற்ற உலகின் இதயம்”, “ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப்பெருமூச்சு” என்று மதத்தைப் பற்றி கூறினார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வலிகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் மதம் தற்காலிக ஆறுதலைத் தந்தாலும், இறுதியில் மதம் மக்களுக்கு அபின் தான் என்பதை மார்க்ஸ் தீர்க்கமாக கூறினார்.
அந்த ஒடுக்கப்பட்ட மக்களை வாழ்நாள் முழுவதும் மயக்கநிலைக்குள் ஆழ்த்தி வைத்திருக்கும் மதத்தின் மூலதனச்சந்தை எப்படி இயங்குகிறது என்பதை TRANCE வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் பேசியிருக்கிறது.
மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட போதிலும் கூட, மருத்துவமனைக்குச் செல்லாமல் கடவுளிடம் மண்டியிட்டு பிரார்த்திக்கும் ஏராளமான உழைக்கும் மக்கள் குறிப்பிட்ட சில மதங்களில் இன்றும் இருக்கிறார்கள். அதிலும் வர்க்கம் இருக்கிறது. உழைக்கும் மக்கள் மட்டும்தான் அப்படி இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள்தான் கடவுளை முழுமையாக நம்புகிறார்கள். தாங்கள் நம்புவதற்கு விசுவாசமாகவும் இருக்கிறார்கள். “கடவுளைத் தாண்டி எந்த டாக்டராலும் தங்களைக் காப்பாற்ற முடியாது. கடவுள் தான் எல்லாவற்றுக்கும் மேலான டாக்டர். எனவே அவர் காப்பாற்றுவார்…” என்று நம்புகிறார்கள்.
படத்தில் வரும் தாமஸ் அத்தகைய ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கப் பின்னணியை கொண்டவன். அவனுடைய உடல்நிலை முடியாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், தேவாலயத்தில் விற்கப்படும் புனித நீரையும், எண்ணையையும் வாங்கித் தடவி விட்டு கடவுளிடம் பிரார்த்தித்துக்கொண்டிருப்பான்.
வர்க்கத்திலும் வாழ்நிலையிலும் விஜீயும் தாமசும் நேர் எதிர்நிலையில் இருந்தாலும், விஜீயும் தாமஸைப் போன்று மதம் என்கிற போதையால் பின்னப்பட்ட வலைக்குள் சிக்கிக்கொண்டவன்தான். அவனுடைய வாழ்க்கையும் பின்னணியும்தான் அதற்குக் காரணம்.
குழந்தைப் பருவத்தில் கிடைக்க வேண்டிய எதுவும் விஜீக்கும் அவனுடைய சகோதரனுக்கும் கிடைத்ததில்லை. குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சி கிடைக்கவில்லை என்றால் வேறு என்ன கிடைத்திருக்கும்? வலிகளும், துன்பமும், துயரமும்தான் கிடைத்திருக்கும் !
ஒரு மனிதனின் ஆளுமையைத் தீர்மானிப்பதில் அந்த மனிதனுக்கு குழந்தைப்பருவத்தில் அமைந்த சூழலுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. சிறுவயதிலேயே மன அழுத்தத்திற்கும், சிதைவிற்கும் உள்ளாகும் குழந்தைகள் பெரியவர்களான பிறகு எப்படிப்பட்ட மனிதர்களாக மாறுவார்கள்? தவறான வழிகளில் செல்வார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள். அல்லது விஜீயின் சகோதரனைப் போல தற்கொலை செய்துகொள்வார்கள். அல்லது விஜீ பிரசாத்தைப் போல ஏதாவது ஒரு விஷச்சுழலில் சிக்கிக்கொள்வார்கள்.
மத போதை என்கிற இந்த வலையில் ஒரு புறம் விஜீ போன்றவர்கள். மறுபுறம் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள். இந்த இருவருக்கும் இடையில், உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டுவதோடு, உணர்ச்சிகளையும் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகள் இருக்கிறார்கள். அதை மிக அழகான திரைமொழியில் சொல்லியிருக்கிறது ‘TRANCE’.
தாமசின் குழந்தை இறந்த பிறகு தாமஸின் வீட்டிற்குச்செல்லும் விஜீ, “தாமஸ்”.. என்பதற்கு மேல் எந்த வார்த்தையையும் உச்சரிக்க முடியாமல் உடைந்து அழுவான். விஜீ ஒரு கருவி என்பதைப் பபுரிந்துகொண்டதால்தானோ என்னவோ தாமசும் கையறுநிலையில் கல்லாக அமர்ந்திருப்பான்.
உழைக்கும் மக்களின் உணர்ச்சிகளைக் கொள்ளையடிக்கும் இந்த போதை வஸ்துவைப் புரிந்துகொண்டால், ஒடுக்கப்பட்ட மக்கள் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதையும், எந்த ஆயுதத்தை ஏந்துவார்கள் என்பதையும், அவர்களின் போதையை தெளிய வைத்து புரியவைக்க வேண்டியது யாருடைய கடமை என்பதையும், இந்த மத போதையால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக இறுதிக்காட்சியில் தாமஸ் ஏந்தி நிற்கும் ஆயுதத்தின் மூலம் உணர்த்திவிடுகிறார் இயக்குநர் அன்வர் ரஷீத்.