கட்டுரைகள்
Trending

தி கிரேட் இந்தியன் கிச்சன்; ’நிறைந்து வழியும் குப்பைக்கூடைகளும் இந்தியத் திருமணங்களும்’ – மோனிகா மாறன்

கட்டுரை | வாசகசாலை

சமூக வலைதளங்களில் வெளியாகும் pre wedding போட்டோ ஷூட் புகைப்படங்களைப் பார்க்கும்பொழுது, இவர்களையெல்லாம் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்துப் பார்க்க வேண்டுமென்று  நான் எண்ணுவதுண்டு.

அதைப் போன்றே 90ஸ் கிட்ஸின் திருமணம் பற்றிய மீம்ஸ்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்தியத் திருமணங்கள் எத்தனை ஓவர் ரேட்டட் என நினைப்பதுண்டு. இத்தனை புரிதலற்ற  எதிர்பார்ப்புகளுடன் நடக்கும் திருமணங்களில் இவர்கள்  அன்றாட வாழ்வியல் என்ற எதார்த்தத்தை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பது என் பெரிய கேள்வி.

இப்படிப்பட்ட என் நினைவுகளை ஒரு திரைப்படமாகப் பார்த்தபொழுது உண்மையில் ஒரு கணம் கலங்கி விட்டேன். ’தி  கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற இந்த மலையாளத் திரைப்படத்திற்கு ’தி கிரேட் இந்தியன் மேரேஜ்’ என்று தலைப்பிட்டு இருக்கலாம். அத்தனை அற்புதமான படைப்பு.

திரைப்படங்களில், இலக்கியங்களில், டிவி தொடர்களில், ஊடகங்களில் தொடர்ந்து ரொமாண்டிசைஸ் செய்யப்படும் இந்தியத் திருமணங்களும் தாய்மை உணர்வும், சமையலும், குடும்ப அமைப்புகளும் எத்தனை அபத்தமானவை என்று மிகச் சரியாக ஒரு பெண்ணின் கோணத்தில் இருந்து காட்டப்பட்டிருக்கிறது.

ஒரு நாட்டிய மாணவியாக இருக்கும் கதாநாயகியைப் பெண்பார்க்க வரும் காட்சிகளுடன் இத்திரைப்படம் தொடங்குகிறது. திருமணமான மறு தினம் தன் மாமியிடம், “சாம்பாரும் சம்பந்தியும் வைப்பீங்களா? எங்க வீட்ல ஏதாவது ஒன்றுதான்” என்று கேட்கும் காட்சியுடன் தொடங்குகிறது அவளது சமையல் வாழ்வு.  காலையில் தேநீர் தயாரித்து கோப்பைகளில் ஆண்களுக்கு வழங்கி,  காலை உணவு செய்து, பரிமாறி, சாப்பிட்டு, ஆண்கள் அனைவரும் போடும் எச்சிலை எடுத்துவிட்டு பாத்திரங்களைக் கழுவிவிட்டு மறுபடியும் சமையல். பிறகு வீட்டை சுத்தம் செய்து, துணி துவைத்து, உணவு பரிமாறி, மீண்டும் எச்சில் அழுக்கு, மாலையில் தேநீர், விளக்கேற்றி மீண்டும் சப்பாத்தி,  சோறு என்று சமையலறைக்கும் படுக்கை அறைக்கும் அவள் அலைவதும் அவளறியாமலேயே அத்தனை வேலைகளையும் அவள் இயல்பு வாழ்க்கையாக ஆக்குவதும் மிக மிக உண்மையாய் காண்பிக்கப்படுகிறது.

காய்கறித் தொலிகளும் எச்சில் உணவுகளும் நிரம்பி வழியும் குப்பை கூடைகள், உணவுத் துணுக்குகள் அடைத்துக்கொண்டு தண்ணீர் தேங்கிய சமையலறை சிங்க், அழுக்கான கேஸ் ஸ்டவ்,   நறுக்கப்படும் காய்கறிகள், சுடப்படும் தோசைகள், கழுவப்படும் பருப்புகள்,  காய்கறிகள்,  மாமிசங்கள், மீன்கள், தாளிக்கப்படும் குழம்புகள், புட்டு, இடியாப்பம், ஊறுகாய், கடலக்கறி என ஒவ்வொரு வேளை உணவுகளும் என்று படம் முழுக்க நிரம்பியிருக்கும் இந்திய உணவு வகைகளையும்  சமையலறையையும்  பார்த்தால் இந்திய நடுத்தரவர்க்கத் திருமணங்களில் பெண்களின் நிலை என்ன என்று நன்கு புரியும்.

ஒரு திருமணம் என்பது ஆணுக்கு ஒரு புது இணையுடன்  வாழ்வது. அதில் அவனது பழைய வாழ்வியல் முறைமைகள் பெரும்பாலும் மாறுவதில்லை. அவனை கவனிக்க வேண்டி யாராவது இருப்பார்கள். ஆனால் பெண்ணுக்கு முற்றிலும் புதிய பொறுப்பு. சமைக்க வேண்டும், துவைக்க வேண்டும், கழுவ வேண்டும், எச்சில் எடுக்க வேண்டும், குப்பை அள்ள வேண்டும், என்றெல்லாம் இருப்பதுதான் நிதர்சனம். யதார்த்தம். ஆனால் குடும்பம், உறவுகள், பெண்தான் குடும்பத்திற்கு அடிப்படை என்றெல்லாம் ரொமாண்டிஸைஸ்  செய்து அதனைப் புனிதமாக்கி இருக்கிறார்கள்.

காலங்காலமாக தொடரும் அத்தனை  புனிதங்களையும் உடைத்திருக்கிறது இந்தத் திரைப்படம். எந்தத் திரைப்படத்திலாவது சமையலறைத் தொட்டியின் அடியில்  ஒழுகும் அழுக்கு நீரையும் உணவுக்கழிவுகள் நிரம்பி வழியும் குப்பைக் கூடைகளையும் காட்டி இருப்பார்களா? இவற்றை இத்தனை நிஜமாக காண்பிப்பது மலையாள சினிமாவில் மட்டுமே சாத்தியம்.

பிறர் சாப்பிட்டுப் போட்டிருக்கும் எச்சில் தட்டுகளையும் கடித்துப் போட்டிருக்கும் எலும்புகளையும் சவைத்துப் போட்டிருக்கும் முருங்கைக் காய்களையும் டைனிங் டேபிள் எங்கும் ஒழுகி இருக்கும் சட்னிகளையும் உணவுத் துணுக்குகளையும் சுத்தம்  செய்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அது எத்தனை மன உளைச்சலைத் தரும் என்று.

ஒரு மிகப்பெரிய விருந்திற்குப் பின்னால் சமையலறையில் நிரம்பி வழியும் அழுக்குப் பாத்திரங்களையும் பிசுபிசுவென்ற தரையையும் பார்த்திருக்கிறீர்களா? அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே  இத்திரைப்படம் சொல்லவரும் உண்மை புரியும். நிறைய பேர் இத்திரைப்படத்தை ஆண்கள் பார்க்க வேண்டிய படம் என்கிறார்கள். ஆனால் நான் சொல்வேன், ஆண்கள் மட்டுமல்ல. கட்டாயம் அனைத்து இந்தியப் பெண்களும் பார்க்க வேண்டிய படம்தான் இது. ஏனென்றால் சமையலையும்  வீட்டினை சுத்தமாக பராமரித்தலும் ஏதோ பெண்களுக்கான இலக்கணம் என்றும் அது தங்களின் புனித கிரீடத்தில் மணிமகுடம் என்று புளகாங்கிதம் அடைவதும் பெரும்பாலும் பெண்களே.

இத்திரைப்படத்தில் ஆரம்பக் காட்சிகளில் மிக அழகான புதுமணப் பெண்ணாக குங்குமம் தீட்டி மங்களகரமாக புதிய ஆடைகளுடன் வரும் பெண் கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கடைந்த உடைகளும் கலைந்த தலையும் பொட்டு வைக்காத முகமுமாக மாறும் காட்சிகள் அற்புதமானவை. இந்தியத் திருமணங்கள் பெண்களை அப்படித்தான் மாற்றுகின்றன. இவற்றை இல்லை என்று நாம் எத்தனைதான் மறுத்தாலும் அதுதான் நிஜம் .

பெரும்பான்மையான இந்தியத் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் இலக்கியங்களும் அம்மாக்களை தியாகச் சுடர்களாகவும் அவர்கள் சமையலை உலகத்திலேயே சிறந்த சமையல் எனறும் காண்பிக்கின்றன.

நான் வாசித்த வரையில் இத்தகைய நடுத்தர வர்க்கப் பெண்களின் அன்றாடப் பணிகளை இலக்கியத்தில் ஜெயகாந்தன் எழுதி இருக்கிறார். ”புளி கரைச்சு கரைச்சு  என் வாழ்க்கையே கரைஞ்சு போச்சு, பாத்திரம் தேச்சி தேச்சி என் வாழ்க்கையே தேஞ்சிருச்சி” என்பது அவரது புகழ்பெற்ற ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலில் வரும் ஒரு வரி. அதேபோன்று  ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் பாத்திரம் கழுவுவது பற்றிய மிக நுணுக்கமான நிறைய பதிவுகளை எழுதி இருக்கிறார்கள். பாலகுமாரனும் நிறைய இடங்களில் பாத்திரம் கழுவுவதையும் அடுக்களை சுத்தம் செய்வதையும் எழுதியிருப்பார். ஆனால் அவையும் அவற்றையெல்லாம் புனிதப்படுத்தப்பட்டவையே. மற்றபடி பெரும்பாலும் உணவுகளையும் அவற்றின் ருசியைப் பற்றியும் மட்டுமே எழுதியிருப்பார்கள். தமிழ் சினிமாவில் பெரும்பாலும் சமையலறைகள் காட்டப்படுவதே இல்லை.

.       சமீபகால கொரோனா  லாக்டவுனுக்குப்  பிறகு யூடியூப் சேனல்களில் பெண்கள் சமையலையும் வீடு சுத்தம் செய்வதையும் மிகப்பெரிய பேறாக காண்பிக்கிறார்கள். தொலைக்காட்சித் தொடர்களின் அபத்தங்கள் சொல்ல இயலாதவை.  எம்.பி.ஏ  படித்த பெண்ணை குக்கரில் சோறு வைக்கத் தெரியாது, துணிக்கு கிளிப் போட தெரியாது என்றெல்லாம் மட்டம் தட்டுவார்கள். ஒரு  ஐ.பி.எஸ் ஆக உருவாக வேண்டிய பெண்ணை டீ தயாரிப்புதான் அவளுடைய மிகப்பெரிய தகுதியாக காண்பிக்கிறார்கள். இவற்றையெல்லாம் சாதாரண காட்சிகளாக நாம் கடந்து சென்று விட்டாலும் மறைமுகமாக இவை நம் மனதில் பெண்களுக்கு சமையலறை மட்டுமே என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக அமைகின்றன. இவற்றிலிருந்து மாறுபட்டு மிக யதார்த்தமாக இந்திய சமையலறைகளில் அவற்றில் பெண்களின் நிலைமையும் காட்டியதற்காக படக்குழுவினருக்கும் இயக்குனருக்கும் மிகப்பெரிய பாராட்டு.

படத்தின் இறுதியில் சமையலறை கழிவுக்குழாயின் அழுக்கு நீரை எடுத்து ஆண்களின் முகத்தில் வீசிவிட்டு அவள் வெளியேறுகிறாள். இந்தியச் சூழலில் முதன்முதலில் கையில் புத்தகத்தை எடுத்து பள்ளிக்குச் சென்ற பெண்ணும், முதன்முறையாக மருத்துவப் பணிக்குச் சென்றவளும், தோளில் பையை மாட்டிக்கொண்டு வீதியில் இறங்கி வேலைக்குச் சென்றவளும், முதன்முறையாக கணிணித்திறை முன்பு அமர்ந்தவளும் அப்படித்தான் சென்றிருப்பார்கள். முதல் காலடிகள் என்பவை கடினமானவையே. இதோ இக்கட்டுரையினை டைப் செய்ய அமரும் முன் உணவு எச்சில் அடைத்து அழுக்கு நீர் தேங்கியிருந்த சமையலறை சிங்கினை சுத்தம் செய்துவிட்டு மீதமான அழுகல்களை குப்பைக்கூடையிலிருந்து அகற்றிவிட்டுதான் வந்தேன். அதுதான் முகத்திலறையும் உண்மை.

மிக அற்புதமான இத்திரைப்பத்தின் இயக்குநர் ஜியோ பேபி, நடிகர்கள் சூரஜ், நிமிஷா ஆகிய அனைவருக்கும் இந்தியப் பெண்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button