
சாலையில் நிறுத்திய காரிலிருந்து முப்பதைக் கடந்த ஒரு வெள்ளைகாரனும் அவனுடன் ஒரு இந்தியனும் எங்களை நோக்கி வந்தார்கள். பயிற்சியை நிறுத்தி விட்டு நாங்களும் பேசத் தயாரானோம். கடைசியாக நான் பேட்டிங் செய்தமையால் என் கையில் பேற் இருந்தது. புன்முறுவலுடன் அவன் எங்கள் அருகில் வந்தான் “யு கைய்ஸ் பிளேயிங் கிரிக்கெட்..ஐ யாம் ஆர்தர் பிறம் இங்கிலண்ட்..ஜயாம் ஏ பிரபசனல் கிரிக்கெட்டர்..பிளேயிங் பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் பார் அவர் கவுண்டி” என்னிடம் கைக்குலுக்கினான். அவனுடன் வந்த கேரளாவைச் சார்ந்தவர் எங்களுக்கு மொழிபெயர்த்தார். கிரிக்கெட் மொழிக்கு எங்களுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவையில்லை, ஆர்தர் பேசியது எங்களுக்குப் புரிந்தது. திருவனந்தபுரத்திலிருந்து திற்பரப்பு அருவிக்குச் செல்லும் வழியில் ஆர்தரின் பார்வை ரப்பர் தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடும் எங்கள் மீது பட்டிருந்தது.
எங்கள் கையிலிருந்த பந்து அவனைப் பரிசோதித்துப் பார்க்க உறுத்தியது. பந்தைப் பார்க்கத் தருவீர்களா எனக் கேட்டான். ஆனந்த் கையிலிருந்த பந்தை ஆர்தரை நோக்கி வீசினான். பந்தின் எடையை மனதில் தூக்கிப் பார்த்த அவன் தனது நண்பனை நோக்கி “அமேசிங் ..இற் இஸ் அமேசிங்..ஓட் ஸ்டப்ஸ் இன் இற்?” பந்தைக் காட்டவே, கேரளாகாரன் பந்தை வாங்கி நன்கு பார்த்தப்படி துணியிலான பந்து ஆனால் எடைக்கான காரணம் தெரியவில்லை என்றான்.
“ஓ..எஸ் எஸ்” என்ற ஆர்தர் என்னைப் பார்த்து “கூ மேட் திஸ் பால்?” எனக் கேட்டான்.
எனக்கருகில் நின்ற எங்களணியைச் சார்ந்த ஜோஸ் அண்ணாவைச் சுட்டிக்காட்டினேன். ஆர்தர் ஓடிச் சென்று கட்டியணைத்தபடி “அமேசிங்..அமேசிங்” என்றவாறு தோள்களைச் செல்லமாக உலுக்கினான்.
கேரளாக்காரன் என்னிடம் பந்தினுள் என்ன இருக்கிறது என்பதை மலையாளத்தில் கேட்டறிந்தான். “ஆர்தர் இட்ஸ் மேட் வித் ரப்பர் மில்க் வித் வேஸ்ட் கிளாத்” ஆர்தர் புருவங்களை உயர்த்தியபடி கேரளாகாரனின் பேச்சைக் கேட்டான் “ஓ ஓ..ரப்பர் மில்க் பால் !!??” என என்னைப் பார்த்துக் கேட்ட ஆர்தரிடம் “எஸ் எஸ் ரப்பர் பால் பால்” என்றதும் கெவின் சிரித்தான் “மில்க் ஆல்சோ மீன்ஸ் பால்” என மில்க்குக்கான தமிழாக்கத்தை ஆர்தரிடன் சிரித்தபடியே சொன்னான் கெவின்.
“கேன் ஐ பேற் ?”
நான் பேற்றைக் கொடுத்தேன். சில பந்துகளை நாங்கள் ஆர்வமுடன் அவனுக்கு வீச அவன் லாவகமாகத் தடுத்தாடினான். கொக்கபுறா லெதர் பந்தை விட நேர்த்தியாகவும், மட்டையில் படும்போது கொக்கபுறா லெதர் பந்துக்குரிய ஓசை வருவதாகக் கூறியவாறே விளையாடினான். கொக்கபுறா பந்துகள் சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தப்படுபவையாகும். ஆர்தரின் கால் அசைவுகளும், பந்தைக் கூர்மையாகப் பார்த்து விளையாடும் போக்கும் அவனை நன்கு தேர்ந்த வீரனைப் போல் காட்டின.
“ஒரு பந்தை ஓங்கி அடிக்கவா?” எங்களிடம் அனுமதி கேட்டான். பந்தை வலுவாக அடிக்க அவன் கைகள் அரித்தன. மகிழ்ச்சியுடன் தலையசைத்தோம். காலினருகே விழுந்த பந்தினை ஓங்கி அடித்தான், பந்து நாங்கள் கனவிலும் நினைக்காத தூரத்தில் போய் விழுந்தது. ஆர்தர் எங்களது ரப்பர் பால் பாலை வெகுவாகச் சிலாகித்துப் பாரட்டினான். இங்கிலாந்தில் தனது பயிற்சியாளரிடம் காட்டுவதற்கு ஒரு ரப்பர் பால்பாலைப் பணிவுடன் கேட்டான்.
பந்தை பெற்றுக் கொண்ட அவன் எங்களனைவரிடமும் கைக்குலுக்கி “ஐ லவ் இண்டியா..இற்ஸ் கிரிக்கெட் கிரேஸ் கண்ட்றி” என்று விடைபெற்றான்.
உண்மைதான் நாங்கள் கிரிக்கெட் வெறியர்கள். நிமிட ஓய்வுநேரங்களிலும் இரவு தூக்கத்திலும் கிரிக்கெட் கனவுகளே ஆக்கிரமிக்கும் காலமது. நண்பர்கள் வட்டம் உறவினர்கள் இவ்வாறாக அனைத்திலும் கிரிக்கெட்டுடன் தொடர்புடையவர்களுடன் மட்டுமே பழகினோம். உணவு உண்ணும்போது இடதுகையில் பந்தைத் திருகினால்தான் என் குடலே உணவை வரவேற்கும். மேல்புறத்தின் அருகாமையில் உள்ள கிரிக்கெட் விளையாடும் தளங்களில் எல்லாம் எனது பெயர் பிரபலம் அது வற்றிப்போன குளமானாலும், ரப்பர் தோட்டமானாலும், ஆள் நடமாட்டமில்லாச் சாலையானாலும், கெவினின் வீட்டு மாடியானாலும் சரிதான்.
எங்களது கிரிக்கெட்டுக்குப் பிரதான வில்லன்கள் எங்கள் பெற்றோர்கள். பந்து வாங்குவதற்குப் பணம் திரட்டுவது பெரும் பிரச்சனையாக இருந்தது. ரப்பர் பந்து மற்றும் டென்னிஸ் பந்துகள் எளிதாக உடைவதாலும், அதனை வாங்குவதற்குக் கையில் காசு இல்லாததாலும் பெரும்பாலும் உடைந்த பந்திலே விளையாடுவோம்.
டென்னிஸ்பந்து மற்றும் ரப்பர்பந்துகளில் விளையாடுவது அவமானம் அது கோழைகள் அல்லது பலவீனமானவர்கள் தேர்வு என ஒரு கருத்துருவாக்கம் பரவியது. அதற்கு முக்கியக் காரணம் தொலைக்காட்சிகளில் இந்திய அணி விளையாடுவதையும், அதேபோன்று ஆடவேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் துளிர்த்தெழுந்ததும்தான். இந்திய அணி மற்றும் மாநில மாவட்ட வீரர்கள் விளையாடுவது திடமான லெதர் பந்தில். அந்த வரிசையில் லெதர் பந்தில் ஆட எங்களையும் நிர்பந்தித்தது காலச்சுழல்.
லெதர்பந்தில் விளையாட எங்களைப் போன்ற கிராமத்து இளைஞர்கள் தவம் இருப்போம். இருபத்தைந்து ரூபாய்க்கு லெதர்பந்தை வாங்குவது தற்போதைய ஐபிஎல் அணியை வாங்குவதுக்கு ஒத்த சவாலாய் இருந்தது எங்களுக்கு. எங்கள் வீடுகளில் தருகின்ற அல்லது எடுக்கின்ற ஒன்று இரண்டு ரூபாய்களைச் சேகரித்து முத்துசாமி கடையில் வாங்கும் தருணம் சொல்லிமாளா மகிழ்ச்சியைத் தரும். அந்த பந்தை வாங்கி அதன் மேல்பகுதி வழவழப்பை வருடும்போது உலகமே கையில் தவழும் பிரமை வரும்.
“மக்கா லே தால..தொட்டுப் பாக்கட்டு” ஒவ்வொருவரும் ஆசையோடு வாங்கி வருடிப் பார்ப்போம். இன்னும் சிறிது நேரத்தில் தரையிலும் பேற்றிலும் சுவரிலும் அடிவாங்கி சிதைப்படப்போதும் லெதர்பந்தை “லேலே..கீழ இடாத” என அக்கறையுடன் கைகளில் வைத்துக் கொஞ்சுவோம் விளையாட்டு துவங்கும் முன்னர். யார் அதிக நேரம் பந்தைக் கையில் வைத்திருப்பது என்பதில் எங்களுக்குள் போட்டியே நடக்கும். கேப்டன் என்ற சலுகையைப் பயன்படுத்தி நானே அதிக நேரம் கையில் வைத்து வருடி மகிழ்வேன். “டேவிட்..லே ஒரிக்கா இடுல பால” நச்சரிப்புகள் மைதானத்தில் என்னை நோக்கி வரும் “சைனிங் போவும்…பெறவு சுவிங் ஆவாது” எனக் கபில்தேவ் கணக்காக நான் சொல்வதைக் கேட்டுச் சுருங்கிப்போவார்கள்.
எங்கள் அணியில் பெரும்பாலானோருக்குப் பந்து வாங்க தங்கள் பங்கு இரண்டு ரூபாயைத் தர வசதி இல்லை. காசு தர இயலாமல் போட்டிக்கு வராமலே இருந்து விடுவார்கள். இதனால் பல போட்டிகளில் எங்களால் சோபிக்கமுடியவில்லை. விளைவு பந்துக்கான பெரும்பகுதி செலவை நானே எடுத்துக் கொள்ள முடிவுசெய்தேன். தேவையின்போது கண்டுபிடிப்புகள் உருவாகின்றன என்பது சும்மாவா !!.
கெவின் காலையில் எனது வீட்டிற்கு வந்தான். “டேவிட் இருக்கானா?” என அவன் அழைக்கும் சத்தம் வீட்டினுள் எனக்குக் கேட்டது. “டேவிட்டே கெவின் ஒன்ன விழிச்சிய்யான்” அம்மா அறைக்குள் வந்தார்கள். தலைகுப்புற படுத்திருந்த நான் நடாகத்தனமான சலிப்புடன் “பேடெடுக்க வந்திருப்பான்..கட்டிலுக்கடில கெடக்க பேட எடுத்துக் கொடுங்கம்மா” அம்மாவின் முகத்தைப் பார்க்காமலே சொன்னேன்.
“காலத்தே எங்கின மட்ட அடிச்ச போறியல?” என்றவாறே எனது கட்டிலுக்கடியிருந்த நன்றாகக் கட்டப்பட்ட ஒரு ஜோடி பேட்-யை எடுத்துச் சென்று கொடுத்தார்கள். அம்மா எடுத்துச்சென்றது கிரிக்கெட் பேட் மட்டுமல்ல அதனுள் முந்தினநாள் நான் மறைத்து வைத்த இரு ரப்பர் ஷீட்டுகளையும் சேர்த்து.
பிறகு எங்கள் அணிக்கான பந்தய பந்துகளுக்கான பெரும்பாலான பங்குத் தொகையை எங்கள்வீட்டு ரப்பர் ஷீட்டுகளே கொடையளித்தன. குமரிமாவட்டத்தின் மேற்குப் பகுதியைத் தங்கத் தொட்டிலில் ஆட்டிய ரப்பர்மரம், அவ்வாறாக எங்கள் அணியையும் வளப்படுத்தியது. போட்டிக்கு முந்தைய நாளில் பயிற்சி பெற போதிய பந்துகள் இல்லாமல் சிரமப்பட்டோம். ரப்பர் பந்து மற்றம் டென்னிஸ் பந்துகளில் பயிற்சி செய்து லெதர் பந்தில் போட்டிகளில் விளையாடும்போது பந்தை எதிர்கொள்வது மிகவும் கடினமாயிருந்தது. போதிய பயிற்சி இல்லாமல் எங்களை எளிதாக வீழ்த்தினார்கள் எதிரணியினர். பழசாகிப் பிய்ந்துப் போன லெதர் பந்துகளை மைதானங்களில் இருந்து பொறுக்கிவந்து பயிற்சி பெற்றோம். போட்டி பந்திற்கான பணம் கொடுக்க இயலாமல் டுர்ணமண்ட் குழுவினரிடம் கெஞ்சிய நிகழ்வுகளும், சில நேரங்களில் கிரிக்கெட் மட்டையை அடகு வைத்துப் பின்னர் மீட்டெடுத்ததும், எடுக்கமுடியாமலும் போன சம்பவங்களும் நடந்ததுண்டு.
அன்று எங்கள் அணியின் மூத்தவரான ஜோஸ் அண்ணாவைப் பார்க்கச் சென்றேன். அவரின் நண்பர்கள் அன்று ரிலீஸ் ஆன பாட்ஷா திரைப்படத்தின் அருமைப் பெருமைகளைச் சிலாகித்தபடி இருந்தனர். “ஜோஸா..பிறாஞ்சிக்க கண்டத்தில எதோ கண்டுபிடிப்பு நடத்துதான்..காலத்த படத்துக்கு வாராம குத்திஇருக்கியான், நாங்க படம் பாத்தோண்டு வந்த பிறவும் அங்ஙினதேன் இருகாய்ன்”.
பிறாஞ்சியின் ரப்பர் தோட்டத்தைத் தூரத்திலிருந்து பார்த்த எனக்கு ஜோஸ் அண்ணா தெள்ளத்தெளிவாகத் தெரிந்தான். தரையிலமர்ந்தபடி எதையோ செய்வதைக் கண்டேன். ரப்பர்பாலில் பந்து செய்கிறார் என்பதை என்னால் கணிக்க முடிந்தது. ஆனால், பலமுறை ரப்பர்பாலில் பந்து செய்தும் எதிர்பார்த்த பலனளிக்கவில்லை, லெதர் பந்துக்குரிய தரத்தைத் தரவில்லை, ஏதாவது ஒரு குறைபாடு வெளிப்படும், ஆகவே நாங்கள் அந்த முயற்சியைக் கைவிட்டிருந்தோம்.
பழைய கைலி ஒன்றை நார்நாராகக் கிழித்து அதனைப் பாலில் நனைத்தபடி உருளை வடிவில் சுற்றிக் கொண்டிருந்தார் “அண்ணா..படம் பாக்க போவாம என்ன நடக்குது..இந்த தடவ எங்கிலும் நடக்குமா”
என்னைத் தலைநிமிர்த்து பார்த்தான் ‘”ஓ..நீயா வந்தது…இது புது மெத்தேடு ..எடுபடுமிண்ணு தோனுது பாக்கிலாம்”
“காலத்தே தொடங்கினதுண்ணு சொல்லிச்சினும்..அத்தறக்கு என்னத்த மெனக்கேடு இருக்கு இதில?”
“இதுக்க மின்ன நம்ம சுற்றின பந்தெல்லாம் ஒரே டிரிப்ல பாலுமுக்கி சுற்றினது.. இது அப்பிடில்ல ..ஒவ்வொரு சுற்றுக்கும் பத்து நிமிசம் வெயில்ல வச்சு ஒணக்கி எடுக்குதன்..பாக்கிலாம் எப்பிடி வருதுண்ணு”
ரப்பர் மரத்திலிருந்து வடியும் பாலுடன் இலகுவாக்கபட்ட ஆசிட்டைக் கலந்தால் விரைவில் பால் கெட்டியாகும். நாங்கள் பல முறை ஆசிட்க் கலந்தப் பாலை பயன்படுத்திப் பந்து செய்து தோல்வியைச் சந்தித்திருக்கிறோம்.
ஜோஸ் அண்ணா கூறியதையும், அந்த பந்து அவனின் கையில் இருக்கும் விதத்தையும் கண்ட எனக்குப் புது நம்பிக்கை பிறந்தது. இம்முறை அது உருவாகும் முறையே புதுமையாக இருந்தது. நானும் ஜோஸ் அண்ணாவும் இணைந்து இதற்கு முன் தயாரித்த ரப்பர்பாலினாலான துணிபந்துகள் சில ஓவர்கள் ஆடினாலே உருக்குலைந்து இலகுவானதாகி விடும்.
ஒரு சுற்று ரப்பர்பாலில் நனைத்த துணியைச் சற்று நேரம் வெயில் காயவைத்தான். பார்ப்பதற்கு லெதர்பந்தைப் போன்று காட்சிதந்தது. “காலத்த ஒம்பது மணிக்குத் தொடங்கினது..மணி மூணு ஆச்சு..இதுக்க ஒரு கரகாணாம இவ்விடத்திலந்து எளிச்ச மாட்டய்ன்” ஜோஸ் அண்ணாவின் முகத்தில் ஒரு ஒளிவட்டம் மின்னியது அதில் நானும் இணைந்தேன்.
“அண்ணா அடிபொளி..இது கலக்கும்’
தன்னம்பிக்கையில் திழைத்திருந்த அவன் “படமா பந்தா.. காலத்த டாஸ் இட்டுப் பாத்தன்..பந்துக்கு தல விழுந்துது……பின்ன படம் எப்டி இருக்காம் ? கோபுவயும் பயலுவளயையும் கண்டியா ?”
“அவியதேன் சொல்லிச்சினும் படங்கொள்ளாமாம்..நக்மா அடிபொளியாம்”
ரஜினி ரசிகனாக முதல்நாள் படத்தைத் தவறவிட்ட சோகம் அவன் முகத்தில் துளியும் இல்லை. பந்தைத் தயாரிப்பதிலே குறியாக இருந்தான்.
“சனியாச்ச அண்டோடு கூட மேட்ச் இருக்கா?”
“நாள இல்ல..அடுத்தசனி மேட்ச் உண்டு”
“எல்லாரும் ரெண்டு ரூவா தந்தா நானுந்தருவன்….பிறவு களி தொடங்கினபிறவு கெடந்து ஏலிச்சருது ..அவன்தா நீ தாண்ணு”
“அண்ணா நீ மேச்சுக்கு வா பைசா இல்லங்கிலும்” சிறந்த துவக்க ஆட்டக்காரனை இழக்க நான் விரும்பவில்லை.
“இந்த பந்து எழிச்சுவெங்கி ..வெள்ளியாச்ச இதில பிறாக்டீஸ் செய்யிலாம்”
வெள்ளிகிழமைக்கு இன்னும் ஆறு நாட்கள் இருந்தன. வெகுவிரைவில் புதுபந்தைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற பேராவல் பிறந்தது. “அண்ணா நாள இத வச்சு கழிச்ச பற்றாதா?”
“நம்ம செஞ்ச தெற்று இதுதான்..குறஞ்சது ஐஞ்சு நாள் வெயில்ல வச்சு எடுக்கபோறேன் இந்ததடவ”
ஐந்து நாள் காத்திருக்க முடியவில்லை. தினமும் ஜோஸ்அண்ணா வீட்டிற்குச் சென்று வெயிலில் காயும் பந்தை எடுத்துச் சோதித்துப் பார்ப்பேன். இம்முறை மிரட்டலாக பந்து உருமாறிக் கொண்டிருந்தது. எனது முகத்தில் பூத்த நம்பிக்கை மலர்ச்சி அவனையும் அகமகிழச் செய்தது. யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகவே ரப்பர்பால் துணிபந்தைப் பொத்திப் பொத்தி வைத்திருந்தோம்.
வெள்ளிக்கிழமை காலையில் ஜோஸ் அண்ணா வீட்டிற்குச் சென்றேன். அவனும் பேற்றை வைத்துக்கொண்டு தயாராக இருந்தான் சோதித்துப் பார்க்க. பந்தையும் பேற்றையும் எடுத்துக்கொண்டு அவனின் வீடருகே உள்ள வற்றிய தாமரைக் குளத்திற்குச் சென்றோம். முதலில் நான் பந்து வீச பந்தைக் கையில் வாங்கினேன். உண்மையிலேயே லெதர் பந்துக்குரிய எடையுடன் அசத்தலாக இருந்தது, பேற்றில் படும்போது வரும் சத்தமும் அச்சுஅசலாக லெதர்பந்துக்குரிய சத்தம். தரையில் பட்டு உயரமாக எகிறுகிறதா அல்லது எகிறாமல் போகிறாதா இவைகளே எங்கள் முன்னாலிருந்த பெரும் சவால்.
முதல் பந்தை ஜோஸ்அண்ணா தடுத்தார் . பந்து பேற்றில் பட்டப்போது எழுந்த ஒலி மற்றும் அது சென்ற விதம் எங்களைக் கொண்டாடத் தூண்டியது. இருவரும் துள்ளிக் குதித்து ஆர்ப்பரித்தோம். மின்சாரத்தைக் கண்டுபிடித்த டெஸ்லோ கூட எங்களளவுக்கு ஆர்பரித்திருக்கமாட்டார்.
‘ஒரிக்க நீ அடிச்சு பாரு’ பேற்றை என்னிடம் தந்து பந்து வீச சென்றான். வேகமாக வந்தபந்தை முன்கால் வைத்து பேற்றால் தடுத்தேன். “ஐயோ அண்ணா..செமயாய்ட்டு இருக்கு..நூறு சதவீதம் ஸ்டிச் பாலுதேன் ..இனி இதுமதி பிராக்டீஸ்க்கு..இண்ணு வையுட்டு தொடங்கிலாம்” இருவரும் பூரிப்பின் உச்சத்துக்குச் சென்றோம்.
சயங்காலம் பயிற்சிக்கு அரசு பள்ளி மைதானத்துக்கு அணியினர் அனைவரையும் வரச் சொன்னேன். எங்களிடம் ஒரு ஜோடி காலில் மாட்டும் பேடு மட்டும் இருந்தது. அதுவும் பரிதாப கோலத்தில் காணப்பட்டது. மூன்று ஜோடி கையுறைகள் இருந்தன. கெவின், ஸ்டாலின் உட்பட எங்கள் அணியினர் தயாராக இருந்தனர் மைதானத்தில். அவர்களை நோக்கி நான் பந்தைத் தூக்கி எறிந்தேன் . ஸ்டாலின் பிடித்தான், புதுவித உற்சாகத்துடன் அவன் பந்தைப் பார்க்க உடனிருந்தவர்களும் ஆர்வமடைந்தார்கள். ஸ்டாலின் பந்தைப் பவுலிங் செய்யும் பாணியில் இரு விரல்களுக்கும் பெருவிரலுக்கும் இடையே வைத்துப் பிடித்துப் பார்த்தான் .
“இது கலக்கும்” ஸ்டாலினின் வார்த்தைகளால் பந்து அனைவர் கைக்கும் கைமாறியது. உலகக்கோப்பைக் கையில் வந்தது போல நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
“ஜோஸ் படத்துக்குப் போவாம ஒரு நாளு முழுக்கக் கெடந்து முக்கினதுக்குப் பலன் கிட்டிச்சு… இனி இல்ல இருக்கு களி..வாங்கல இனி..வலிய லெதர்பாலு.. இத வச்சு தானே உம்மாக்கி காட்டினிய ..ஒங்களுக்க கொட்டயள பஞ்சாக்கி தாரம்” கெவின் போர் முழக்கமே செய்தான். அனைவரது ஆதங்கங்களும் ஒருசேர ஆர்ப்பரிப்பானது. பந்தின் தோற்றமே அனைவரையும் நம்பிக்கை கொள்ளச் செய்தது.
சிலநிமிடங்களிலேயே எங்களது ஆரவார முகங்களில் நெருப்புக் கனல் விழுந்தது. மைதானத்தில் இறங்கி பந்தை அடித்துச் சோதிக்கையில் ஆல்ரவுண்டரும் துணை கேப்டனுமான ஆனந்த் அடித்த பந்து நேராகச் சாந்தியின் வீட்டினுள் சென்றது. மைதானத்தை ஒட்டிய ரப்பர் தோட்டத்தில் சாந்தியின் சிறுவீடு இருந்தது. சாந்தியின் அடுப்பில் கரியாகிப் போன எங்களின் பந்துகளின் எண்ணிக்கை ஏராளம். சாந்தியைக் கோபப்படுத்தித் தங்களது காமகொப்பளங்களுக்கு இலவச மருந்து பெறுவதைப் பெரும்பாலனோர் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
மைதானத்தில் எங்களது கிரிக்கெட்டின் பிரதான வில்லன்கள் சாந்தி, அவளின் இரு சிறு குழந்தைகள் மற்றும் எங்களைத் துரத்த அவள் வளர்த்தும் பத்து நாய்கள். அவளின் வீடருகே பந்து சென்றால் அதனை லாவகமாக எடுத்து வர கெவினால் மட்டும் முடியும். “சாந்தி எஸ்பர்ட்” எனப் பெயர் கூட அவனுக்கு உண்டு. அவளது ஏழ்மையைப் பயன்படுத்தி அவளின் உடலைத் திருடி உண்ணும் தோல்வியாதி ஆண்களுக்கு எங்கள் கிரிக்கெட் பிரதான வில்லனாயிருந்தது.
“அக்கா அக்கா ஒரிக்க..இனி இஞ்ச அடிச்சமாட்டம்” எனக் கெவின் வழக்கமாகக் கெஞ்சுவான். சில சமயங்களில் சாந்தி நல்ல மூடில் இருந்தால் பந்து கிடைக்கும், இல்லையேல் அடுப்புக்குள் செல்லும். சாபத்தின் செந்நெருப்பில் தினம் வேகும் அவளின் உடலை, அடுப்பில் வெந்து கருகிய கரிக்கட்டையாகவே அவள் கருதினாள். கிரிக்கெட்டுக்குத் துளியும் சம்பந்தமில்லா எங்கள் ஊரைச் சார்ந்த தோல்வியாதிகாரர்கள் பந்தை வேண்டுமென்றே சாந்தியின் வீட்டில் எறிந்து அவளைக் கோபப்படுத்தி சேலையைத் தூக்கவைத்து தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொள்வார்கள்.
இவ்வாறாகப் பலகாரணிகளால் சாந்திக்கும் எங்களுக்குமான யுத்தம் உச்சத்தில் இருந்தது. எங்களது பெரும் மகிழ்ச்சியைச் சிதைத்தது ஆனந்தின் ஆப் சைட் ஷாட். “லே ஒனக்கு கிறுக்கா..அவளுக்க சாமானத்த பாத்து கரட்டா அடிச்ச..ஆப்சைடு அடிச்சருதுண்ணு படிச்சுபடிச்சு சொன்னனா !!” ஜோஸ் அண்ணா கத்தினான். சாந்திக்குப் பயந்தே ஆப் சைடில் அடித்து ஆடுவதைத் தவிர்த்தோம், எங்களணியின் பலவீனங்களில் முக்கியமானதாகப் பின்நாட்களில் அது மாறியது. அனைவரும் ஆளாளுக்கு ஆனந்தைப் பதம்பார்த்தோம். எல்லோர் கண்களும் கெவினின் மீது விழுந்தன.
“மக்கா லே..எப்பிடியெங்கிலும் எடுல” கெவினிடம் நான் கெஞ்சினேன்.
அனைவரும் அவளின் வீட்டிலிருந்து பத்து மீட்டர் தொலைவில் அவள் மற்றும் அவளின் பத்து நாய்களுக்குப் பயந்து நின்றுகொண்டிருந்தோம். பந்து வீட்டினுள் கிடப்பதை எங்களால் காணமுடிந்தது முன்பக்கக் கதவு திறந்திருந்ததால். நாய்களும் வீடும் அமைதியாகக் கிடந்தன. கெவின் எப்படி பந்தை எடுப்பது என யோசித்தபடி நின்றான். “கெவினே.. பந்து அந்நா கெடக்கு..பய்ய போயி எடுத்தோண்டோடிவா” ஆனந்த்தின் முந்திரிகொட்டைத்தனமான அறிவுரை கெவினை வெறுப்பேற்றியது.
“பின்ன நீ போல.. அடிச்சகுண்ண அறிஞ்சோபோல எடுக்கோக்கும் அறியணும்..அவிளுக்க வாயில கெடக்க தானோடெல்லாம் நான் கேக்கணும் ..நீ கண்றாக் விடாம நில்லு எனக்கறியிலாம்”
“அவளுக்க சீன கிட்டநிந்நு காணோக்கு தானே !!” ஆனந்தின் பதிலடி கெவினை மேலும் எரிச்சலடைய வைத்தது.
“என்னகொண்டு அவிளுக்க தள்ளக்குவிளியும் பிள்ளக்குவிளியும் கேக்க வைய்யாம்..அடிச்சவனே போய்ய் எடுக்கட்டும்” முகத்தைத் திருப்பியபடி நின்ற கெவினை அனைவரும் கடிந்தே வலியுறுத்தினோம். கெவின் பந்தை எடுப்பதற்க்காகப் பதுங்கிப் பதுங்கிச் சென்றான். சாந்தியின் ஒரு குழந்தை “அம்மா பந்து இந்நா கெடக்கு” என்றவாறே பந்தை எடுத்துக் கொண்டு வீட்டினுள் ஓடியது. கெவினைக் கண்ட நாய்கள் நான்கு புறமும் சுற்றி வளைத்தன. கெவினைக் காப்பாற்ற நாங்கள் நாய்களைக் கல்லால் எறியத் துவங்கினோம்.
“தள்ளயோழிகளா எனக்க பிள்ளய எறிஞ்சு கொல்லாதியல” சாமியாடியபடி சாந்தி வந்தாள். நாய்கள் சூழ நின்ற கெவின் இக்கட்டிலும் தன் திறமையை நிரூபிக்க “அக்கா பால் தா” கெஞ்சினான்.
“கொம்மய்ட்ட போய்ய் பாலு கேழுவல” எனத் துவங்கி கெட்ட வார்த்தையினால் கெவினைத் தாலாட்டினாள். “இல்ல அக்கா… பந்து பந்து” கெவின் தடுமாறினான். “அம்மா பந்து எரியல” என்ற குழந்தையின் குரல் எங்கள் இதயங்களை எரித்துக் கரிக்கியது.
“அக்கா அக்கா அது விலகூடின பந்து எரிக்கருது” அனைவரும் கெஞ்சினோம். அவேசமாக வீட்டினுள் சென்ற அவள் அடுப்பில் எரியாத பந்தை சூடு பொறுக்காமல் கையை உதறியபடி எடுத்து வந்தாள். முந்தைய ரப்பர் மற்றும் டென்னிஸ் பந்துகள் போல் இதனை நினைத்த அவள் ஏமாந்தாள். கையில் இருப்பது வேறு ஏதோ ஒன்று எனப் பொறிதட்டிய அவள் கையில் வெட்டுகத்தியையும் எடுத்து வந்தாள். துணித்துவைக்க பயன்படுத்தும் பாறாங்கல்லில் பந்தை வைத்து வெட்டத் துவங்கினாள். சாதாரண ரப்பர்பால் துணிப்பந்துகள் அடுப்பிலே கருகியிருக்கும் எளிதாக அல்லது அவள் வெட்டிய வெட்டுக்குத் தாறுமாறாகக் கிழிந்திருக்கும். சாந்தியின் கைக்களைத்ததே தவிர பந்து ஒரு கீறலையும் வாங்கவில்லை. ஜோஸ் அண்ணாவும் நானும் அந்த துயரத்திலும் அகமகிழ்ந்து நின்றோம். அவ்வாறாக, சாந்தி ராக்கெட் தளத்தில் எங்கள் பந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு வெற்றிப் பெற்றது.
முந்தைய நாள் இரவு சாந்தியின் வீட்டுக்கு வந்த போதை தலைக்கேறிய தோல்வியாதி கும்பல் அவளைத் தரக்குறைவாகப் பேசியதோடு மட்டுமின்றி, கும்பலாக அவளைப் பக்கத்திலுள்ள மரவள்ளிகிழங்கு தோப்புக்குத் தூக்கிச்சென்றிருக்கிறார்கள். “பத்தினியின் கூச்சலுக்குப் படவருமாம், பெழச்சவா பிணமானாலும் பட்டியும் வரதாம்” பழமொழியைப் பொய்யாக்கும் விதத்தில் அவள் எழுப்பிய கூச்சலுக்கு அவள் வளர்த்திய நாய்கள் வந்தன. அவளின் கோபத்துக்கான காரணத்தை அறிந்த நாங்கள், எங்கள் ரப்பர் பால்பாலின் தரத்தைத் பரிசோதித்து நிரூபித்த அவளை மன்னித்தாலும், பொக்கிஷமான பந்து தொலைந்தது மிகுந்த வருத்தத்தை தந்தது.
கொதிக்கும் மனநிலையில் ஆவேசமாக அனைவரும் சேர்ந்து இருபது ரப்பர் பால்பாலைத் தயாரித்துப் பத்திரப்படுத்தினோம். சாந்தியின் அடுப்பு எத்தனை பந்தைக் கரித்தாலும் கவலையில்லை ரப்பர் மரம் பாலைச் சுரக்கும் வரை.
அன்று ஆனந்த் கையில் நோட்டீசுடன் குதித்தபடி வந்தான். “மார்த்தாண்டத்தில.அடுத்தவாரம் டூர்ணமண்ட் நடக்கு..நம்ம டீம் பேர் கொடுத்தேன் நான்” விளையாட்டு அட்டவணைத் தாளை வாங்கிப் பார்த்தேன். சிறோ கிரிக்கெட் கிளப் மேல்புறம் வெஸ் மார்த்தாண்டம் கிளப் முதல் போட்டி ஐநூறு ரூபாய் நுழைவு கட்டணம் என வகுக்கப் பட்டிருந்தது.
“நம்ம சீப்ளி டீமிண்ணு அவினிணுவளுக்க கூட பஸ்று இட்டிரிக்கினும்…ஐஞூறு ரூவா எங்கோடிட்டு எடுக்க” நுழைவு கட்டணமான ஐநூறு ரூபாயும், போதிய கிரிக்கெட் உபகரணங்களும் இல்லாமையும் என்னை யோசிக்க வைத்தது. ஆனந்த் மட்டும் மிகவும் உறுதியுடன் காணப்பட்டான் “பேரு கொடுத்தாச்சு..இனி மாற்ற பற்றாது ..இங்ஙினோடி கெடந்து கழிச்சா மட்டும் மதியா ?” ஆனந்திற்கு வெளிஊர்களுக்கும் சென்று கோப்பைகள் வெல்லவேண்டும் என்பது கனவு.
“பாலுக்கு ஐம்பது ரூவா எடுக்கோக்கே வக்கு இல்ல ..இருக்கதே ஒரு ஜோடி பேடு ..அங்ஙின போய்ய் எறிகொண்டு நாறண்டாம்..அடுத்து, அவினுவ ஸ்டிச் பால்ல நல்லா பிராக்டீஸ்ல இருப்பினும்” கெவின் மார்த்தாண்டம் கிளப்பைக் குறித்து நன்கு அறிந்தமையால் பின்வாங்கினான்.
“வெள்ளகாரன் ஆர்தரே சொல்லியாச்சு யு கைஸ் பவுல் ரியலி பாஸ்டுண்ணு..பின்ன எதுக்குப் பேடிச்சணும் ?” ஆர்தரின் நினைவலைகளிலிருந்து மீளவில்லை ஆனந்த். சில தினங்களுக்கு முன்பு ஆர்தரைச் சந்திக்கவில்லையெனில் எங்களின் மனஉறுதி கேள்விக்குறியாக இருந்திருக்கும். ஆர்தர் எங்களுக்கு அளித்த உத்வேகம் எங்களுக்குள் புதுரத்தத்தைப் பாய்ச்சியிருந்தது. குறிப்பாக எங்களின் பந்து வீச்சை ஆர்தர் மெச்சியது, எங்களுக்குள் மறைந்திருந்த தங்கத்தைத் தேடி எடுத்துப் புடமிடச் செய்தது.
போட்டிகளை நடத்தும் அணி என்ற வகையில் நாக்அவுட் போட்டியாகையாலும் முதல் சுற்றில் எளிதாக வெல்ல சிறிய அணியாகிய எங்களுடன் முதல் ஆட்டத்தை மார்த்தாண்டம் கிளப் திணித்தது. அணியில் ஒருவருக்கும் ஆடச் செல்ல மனமுமில்லை திடமும் இல்லை, தாழ்வு மனப்பாண்மையில் காணப்பட்டனர். நானும் ஆனந்தும் செல்வது என முடிவெடுத்தோம். புதிய வரவான ரப்பர்பால் பால் பயிற்சி மட்டுமே எங்களுக்கான மூலதனமாயிருந்தது.
தலைக்கு ஐம்பது ரூபாய் என முடிவானது. எனது அச்சமென்னவென்றால் பணமில்லை என யாராவது வராமல் போக்குக் காட்டிவிடக் கூடாது என்பதாயிருந்தது. ஆகவே ஒரு உறுதிமொழியைப் போனஸாகக் கொடுத்தேன், பணம் இல்லாதவர்கள் பிறகு தந்தால் போதுமென. ரப்பர்பால்பாலில் கடுமையாகக் பயிற்சிகளை மேற்கொண்டோம்.
என்னால் முடிந்த அளவு ரப்பர்ஷீட்டைக் கெவின் மூலமாகக் கடத்தி இருநூறு ரூபாய் வைத்திருந்தேன். ஆட்டம் காலையில் பத்து மணிக்கு இருபத்தைந்து ஓவரில் நடக்கும் என்பதால் நாங்கள் ஒவ்வொருவராக மார்த்தாண்டம் நேசமணி கல்லூரி மைதானத்துக்குக் காலை ஒன்பது மணிக்கே வந்தடைந்தோம். ரப்பர் தோட்டங்களிலும், குளங்களிலும், வீட்டின் பின்புறங்களிலும் விளையாடி பழகிய எங்களுக்கு நேசமணி கல்லூரி மைதானம் ஈடன்கார்டன் போன்று காட்சியளித்தது.
பணத்தைத் திரட்டியபோது ஆனந்தின் ஐம்பதைத் தவிர்த்து அனைவரும் வெறுங்கையைக் காட்டியபடி நின்றார்கள். திட்டினால் விளையாடாமல் சென்றுவிடுவார்களோ என்ற பயத்தில் நான் அமைதியாக நின்றேன். ஆனந்த் அனைவரையும் திட்டியபடி என் கையிலிருந்த பணத்துடன் போட்டி நடத்துபவர்களைச் சந்தித்துக் கெஞ்சினான், துணைக்கெஞ்சலுக்குக் கெவினும் உடன் சென்றான். முண்ணூறு ரூபாய்க்கு எங்களது கிரிக்கெட் பேற்றை அடமானம் வைத்துவிட்டுச் செல்ல வேண்டும் ஆட்டம் முடிந்த பிறகு என முடிவானது ஆனந்தின் கெஞ்சலால்.
ஒரே ஒரு பேற் தான் எங்களிடம் இருந்தது அதை நாங்கள் பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்தோம். போட்டி முடிந்தபிறகு அதையும் கொடுக்க வேண்டுமே என்ற கவலை என்னை உட்பட அனைவரையும் வாட்டியது. மார்த்தாண்டம் வீரர்களில் பெரும்பாலானோர் பெரும் பணக்காரர்கள், டாக்டர்கள் மற்றும் இன்ஜினியர்களின் மகன்கள். காலில் விலையுயர்ந்த ஷு மற்றும் விளையாட்டுக்குரிய வெள்ளைநிற ஆடைகளில் மைதானத்தில் ஆளுக்கொரு பந்து பேற்றுடன் பயிற்சியில் ஈடுபட்டார்கள். எங்களிடம் பயிற்சி செய்ய பழைய லெதர் ஸ்டிச் பந்து இல்லாமையாலும், எங்களின் ரப்பர் பால்பாலினை வெளியே காட்டினால் இவர்கள் சிரித்து விடுவார்களோ என்ற தாழ்வு மனப்பாண்மையிலும் அமைதியாக மைதானத்தில் மார்த்தாண்டம் வீரர்கள் பயிற்சி செய்வதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.
கெவின் உட்பட எங்களணியினர் சிலர் லெதர் பந்துகளைத் தொட்டுப்பார்க்கும் ஆவலில் மார்த்தாண்டம் அணியினரின் பயிற்சியில் வேண்டா விருந்தாளி போல் நுழைந்து பந்தைப் பொறுக்கிப் போடுவதும் இடையிடையே ஓரிரு பந்துகளை அவர்களுக்கு வீசிக்கொடுத்தும் பூரித்தனர். பொறுமையிழந்த ஆனந்த் ஒரு ரப்பர் பால்பாலை எடுத்துக்கொண்டு மைதானத்தில் இறங்கினான், அணியிலேயே வயது குறைந்த திலகனை அழைத்துக்கொண்டு பயிற்சி மேற்கொள்ள. ஆனந்த் அடித்த பந்து மார்த்தாண்டம் அணியினர் இருக்கும் பகுதிக்குக் சென்றது. அவர்கள் பந்தை எடுத்துப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார்கள், ரப்பர் பால்பால் அனைவர் கைகளுக்கும் கேலிபொருளாகக் கைமாறியது. போட்டியை நடத்துபவர்களில் ஒருவரும் கல்லாரி பேராசிரியருமான கண்ணன், ஆனந்தை அழைத்தார்.
“என்னடே பால் இது ? இத வச்சா விளையாடுதிய ? லெதர் பால் பாத்திருக்கியளா ?”
“அண்ணா ..நாங்க லெதர்பால்ல வெளையாடிருக்கோம் ..இது சும்மா பிராக்டீஸ்கு”
“கெல்மற் இல்ல …ஷூ இல்ல…கிழிஞ்சபேடு ..அடிபட்டு கெடந்தா நாங்க பொறுப்பில்ல..சொல்லியாச்சு”
“கொழப்பமில்லண்ணா ..நாங்க கழிப்பம்” ஆனந்த் மறுபடியும் கெஞ்ச வேண்டியிருந்தது.
எங்களணியில் சிலபேர் பேண்ட் சட்டையில் விளையாடி பழக்கமில்லை, மார்த்தாண்டத்தில் பேண்ட் சட்டையுடன் ஆடவேண்டும், ஆகவே சிலர் பேண்ட் சட்டையைப் பிளாஸ்டிக் பைகளில் வைத்துக் கைலி அணிந்து வந்திருந்தார்கள். மைதானத்தில் அவர்கள் கைலியை மாற்றி பேண்ட் சட்டை அணிந்ததை மார்த்தாண்டம் அணியினர் கேலிசெய்தனர். எங்களுடன் விளையாடுவதைப் பெரும் அவமானமாகவும், எங்களை அற்பமாகக் கேலியும் கிண்டலும் செய்தவண்ணம் இருந்தார்கள். அவர்களில் சிலர் ஏன் இந்த மாதிரி கீழ்தரமான அணியை அழைத்து நமது தரத்தைக் கீழிறக்குகிறீர்கள் எனக் கோபமாகவே எங்கள் காதுகேட்கும்படியாகப் பேசினார்கள்.
நான் நடப்பவற்றை அமைதியாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஒன்று மட்டும் நிச்சயம், இவர்கள் எளிதில் எங்களிடம் வெற்றிப்பெறப் போவதில்லை என என்னை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தேன். எங்களின் பந்துவீச்சில் இவர்கள் நிலைகுலைவார்கள், விலையுயர்ந்த காலணிகளாலோ தலைகவசங்களினாலோ இவர்கள் பின்னால் இருக்கும் குச்சிகள் பறப்பதைத் தடுக்கமுடியாது. ஆர்தரே சான்றழித்து விட்டான் “யு கைய்ஸ் பவுல்ஸ் ரியலி டப் டெலிவரீஸ்”.
போட்டி ஆரம்பித்தது. டாஸில் வென்ற மார்த்தாண்டம் அணி பந்துவீச தீர்மானித்தது. சீக்கிரமாக விளையாட்டை முடிக்கவேண்டும் அதற்கு எங்களைச் சொற்ப ரன்களுக்குச் சுருட்டி, சில ஓவர்களில் அந்த ரன்களை எட்டவேண்டும் என்பதே அவர்களின் திட்டம். அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது, அந்த அணியின் ஒரு வீரனின் அக்காவின் திருமணம் மறுநாள் நடக்கவிருந்தது, அதனால் திருமண முன்வேலைகளைச் செய்வதற்கு செல்ல, விரைவாக எங்களைப் பார்சல் செய்து அணுப்பவேண்டும் என்ற முடிவோடிருந்தார்கள்.
பிட்ச் அவர்களுக்கு நன்கு பழக்கப்பட்டமையாலும் அவர்களணியில் மாவட்ட அணியில் விளையாடும் வீரர்கள் இருந்தமையாலும் அவர்கள் நினைத்தமாதிரியே பதினான்கு ஓவரில் நாங்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஐம்பத்திமூன்று ரன்களை எடுத்தோம். அதிகபட்சமாக நானும் எங்களணியின் மிடில்ஆர்டர் பேட்ஸ்மேன் அணியும் தலா பதினொன்று ரன்கள் எடுத்தோம். எங்களிடமிருந்த ஒரு ஜோடி பேடை முன்காலான இடது காலைப் பாதுகாக்கும் நோக்கில் சிக்கனமாகவும், அதே நேரத்தில் ஆபத்தானமுறையில் வலதுகாலுக்குப் பாதுகாப்பின்றி ஆடினோம். இடதுகாலில் மட்டும் ஒற்றைப் பேடுடன் களமிறங்கிய எங்கள் பாதங்களைக் காயப்படுத்தும் நோக்கிலே அவர்கள் பந்துகள் வந்தன குரூர எண்ணத்துடன். ஸ்போர்ட்ஸ் ஷூவோ மற்றும் பேடோ அணியாத கால்களுக்குத் தெரியும் எப்படிக் காயமடையாமல் தப்பிப்பது என, எங்களில் ஒருவரும் காயமின்றி பேட்டிங் செய்து வெளியேறினோம்.
நாங்கள் முதலில் பேட்டிங் செய்தபோது எங்கள் பேடு கிளவுஸ்களைப் பார்த்து அவர்களின் கேலிக் கிண்டல்களால் மைதானத்தை காமெடிக் களமாக்கி நன்கு பொழுதுபோக்கினார்கள். பேடு அணியா வலது காலை நோக்கி பந்துவீச திருமணப் பெண்ணின் தம்பி எல்லாரிடமும் சைகை காட்டினான். முக்கிய பந்துவீச்சாளரான அவன் வீசிய பந்துக்கள் அனைத்தும் பேடணியாத எங்கள் வலது கால்களை நோக்கியே வந்தன. சாந்திக்கும் அவள் வளர்த்தும் நாய்களுக்கும் பயந்தே லெக் சைடில் விளையாடி கில்லிகளான எங்களணினருக்கு அவனால் நல்லபயனும் கிடைத்தது.
“மக்கா ..ஐம்பத்திமூண வச்சு என்ன செய்யோக்கு.. நாறோக்கு மின்ன நான்ன் ஸலம் காலியாக்க போறேம்” முதல் விரக்தி குரல் எங்களணியின் பபியின் வாயிலிருந்து வந்தது.
“அவினுவளுக்கு நாக்கு வழிச்சோக்கு ஆச்சில்ல இந்த ரன்ணு” கெவினும் அபசகுனமாக நின்றான்.
மறுபுறம், அவர்களது பெவிலியனில் ஓங்கி ஒலித்த அற்பபேச்சுக்களும் சிரிப்பலையும் மேலும் சோர்படையச் செய்தன எங்கள் அணியினரை. எங்களுக்கு அப்போது பெரிதும் தேவையாயிருந்தது சிறுநம்பிக்கை மட்டுமே. கேப்டன் டாக் என்பது பெரிய அணிகளில் முக்கியமான ஒன்று, அந்நாட்களில் அதனைக் குறித்த அரிச்சுவடே எங்களுக்குத் தெரியாது.
அனைவரையும் அழைத்தேன் “நம்ம அடிச்சது ஐம்பத்திமூணு இல்ல இருபதாயிருந்தாலும் கொளப்பம் இல்ல..இவினுவளுக்கு நம்ம கிலி காட்டனும்..மேப்பறத்திலேந்து வந்தினும் காலமாடம்மாருண்ணு அவினுவ ஓர்மிக்கணும்… நம்மட்ட ஐஞ்சு பாஸ்ட் பவுலேர்ஸ் உண்டு..நம்ம ஸ்டைலு அவினுவளுக்கு தெரியாது.. ஜம்பத்திமூண ஐஞ்சு ஓவர்ல ஆடிச்செடுத்தாலும் கொளப்பம் இல்ல..ஆனா நம்ம வந்து கலக்கியோண்டு போனம்ண்ணு அவினுவ வாயலே சொல்லணும்.. ஐம்பது ரூவாக்க ஸ்டிச் பாலு கைல வர போவுது.. உயிர கொடுத்து ஏறிவம் , அடிச்ச பற்றுமெங்கி அடிச்சட்டு” எங்கள் வேகபந்து வீச்சாளர்கள் மேல் எனக்கு அதீத நம்பிக்கை இருந்தது.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான திருமணப் பெண்ணின் தம்பி சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதற்காக ஓப்பனிங் ஆட அவர்கள் கேப்டனிடம் அணுமதி கேட்டு வந்தான். ஓப்பனிங் பேட்ஸ்மேன்களே விரைவில் ஆட்டத்தை முடித்து விடுவார்கள் என்று அடுத்த நிலை வீரர்கள் பேடு அணியாமல் இருந்தார்கள். ஒருபடி மேலே போய் வட்டமாக அமர்ந்து சீட்டாட ஆரம்பித்தார்கள். அவர்களது செயல்கள் எங்கள் தாழ்வு மனப்பாண்மை மற்றும் நம்பிக்கையின்மையைக் கொடுரமாகப் போர் போலத் தாக்கத் துவங்கியன.
வழக்கமாக முதல் ஓவரை வீசும் ஸ்டாலினை அழைத்தேன். இன் சுவிங்கில் வேகமாகப் பந்தை வீசும் ஸ்டாலின் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தாத ஆட்டமே இல்லை. முதல்முறையாகக் கிராமத்தை விட்டு நகரத்தில் வந்திருக்கிறோம் ஸ்டாலின் இங்கேயும் தன் தனித்திறமையைக் காட்டுவானா என்கிற ஐயம் எனக்கிருந்தது.
முதல் பந்தை ஓங்கி அடித்தான் திருமணப் பெண்ணின் தம்பி, அவனது காலில் பட்ட பந்தால் ஒரு ரன் ஓடினார்கள். அவர்களது பெவிலியனில் ஒருவரும் விளையாட்டைப் பார்க்கவில்லை, சீட்டில் கழுதையாட்டத்தை ஆடி ஒருவருக்கொருவர் பகடியடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டாவது பந்தில் கிளின்போல்ட், யாராவது செல்லுங்கள் என்ற மனநிலையில் அவர்கள் பெவிலியன் காணப்பட்டது. கழுதையாட்டம் தொடர்ந்தது. அடுத்த ஆட்டகாரன் சோம்பேறித்தனமாகப் பேடைக் கட்டிக்கொண்டிருந்தான்.
ஸ்டாலினின் இரு பந்துகளும் உள்ளே அழகாக சுவிங் ஆகிச் சென்றன. புதிய பேட்ஸ்மேன் குமரிமாவட்ட அணியின் முக்கியமான ஆட்டக்காரர். மூன்று பந்துகளை எதிர்கொண்ட அவனால் பந்தைத் தடுக்கக்கூட முடியாமல் தடுமாறினான். ஐந்தாவது பந்தில் அவனுக்கும் தன் பின்னால் நாட்டப்பட்டிருந்த குச்சிகள் பறக்கும் காட்சியைப் பார்க்கும் யோகம் கிடைத்தது. கழுதையாட்டக்காரர்கள் முதல்முறையாக மைதானத்தைப் பார்த்தார்கள். கழுதையாடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் பேடைகளைக் கட்டிக்கொண்டு வந்தான் அந்த ஓவரின் கடைசி பந்தைச் சந்திக்க. ஸ்டாலினின் இன்சுவிங் பவுன்சர் அவன் கழுத்தைத் தாக்கவே கீழே விழுந்தான்.
ஸ்போர்ஸ்மேன்ஷிப் கிலோ எவ்வளவு? என்பதைப் போல் நாங்கள் அவனைத் தூக்கி நிறுத்தாமல் நின்று ரசித்தோம். மறுமுனை பேட்ஸ்மேனான மணப்பெண்ணின் தம்பி ஓடிச் சென்று அவனைத் தூக்கி நிறுத்தினான், அத்தோடு நின்றுவிடாமல் கையசைத்து ஹெல்மற் கொண்டுவரச் சொன்னான் அவனுக்காக. சீட்டாட்டத்தை நிறுத்திய அவர்கள் சற்றே நிமிர்ந்து பார்க்கத் துவங்கினார்கள். “அதுக்குள்ள பிச் மாறிச்சா ..இப்பிடி பவுண்சு ஆவுது” அவர்களது பெவிலியனில் அபாய குரல்கள் ஒலித்தன.
“மக்கா..அவினுவ பேடிச்சாச்சு..இனி களி நம்மகிட்ட வந்தாச்சு..ஒரிக்காலும் எறியாத்த எறிய எறி” இரண்டாவது ஓவரை வீச போஸை அழைத்து காதில் ஓதினேன். அவன் என்னைவிட மிகவும் வன்மத்தில் காணப்பட்டான். நான் கூறியவைகள் அவன் காதில் ஏறவில்லை. ஏதோ திட்டத்தில் போஸ் பொருமி கொண்டு நிற்பது அவன் பந்தைச் சந்திப்பவர்களுக்கு நல்ல செய்தியைத் தராது. எங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களைச் சிறிதேனும் துடைக்கமுடியுமென்றால் அது போஸ்ஸின் மிரட்டலான ராக்கெட் பந்துகளால் மட்டுமே முடியும் என நாங்கள் நம்பினோம்.
முதல் பந்திலேயே போஸ் எங்களுக்கு இனிப்பைக் கொடுத்தான். இனி தோற்றால் கூட உதிரும் ஒரு மயிருக்குச் சமம் என நாங்கள் கொண்டாடினோம். அது விக்கெட் இல்லை. ஹெல்மெற்றைப் பெற்று ஆடிய மணப்பெண்ணின் தம்பியின் பாதத்தின் பெருவிரலைப் பாதுகாக்க அவனணிந்திருந்த விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் ஷூ தவறியது. போஸ்ஸின் குறிதவறாத குடலுருவி யார்க்கர் அவனது பெருவிரலைத் தாக்கவே வலியால் துடித்தான். சீட்டாட்டத்தை நிறுத்திய கழுதைகள் எழும்பி நின்றார்கள். அஜியின் காலணியைக் கழற்றிப்பார்த்தான் மறுமுனை பேட்ஸ்மேன்.
“அஜி ரெத்தம் வருது”
காலணியைக் கழற்றி அம்பயரிடம் கொடுத்த அஜி ஆக்ரோசமாக நின்றான். “ரன்னர் வேணுமாடே?” என வந்த குரல்களை மறுத்து ரத்த காயத்துடன் விளையாடத் தயாரானான் அஜி. “மக்கா போஸே நாள கல்யாணத்துக்கு எதிர்மால இடவேண்டிய பையனாக்கும் ..பாவம் விடு” அவனின் காயத்தின்மீது கெவின் சூடுபோட்டான். முறைத்தபடி அஜி அடுத்தபந்தைச் சந்திக்க வடியும் ரத்தத்துடன் பேற்றைத் தரையிலடித்தபடி வேட்டைநாய் ரூபத்தில் நின்றான். போஸ்ஸிற்கோ எங்களுக்கோ அஜியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்வதில் துளியும் விருப்பம் இல்லை. அடுத்தபந்தை நன்றாகத் தரையில் அடித்து அஜியின் தலையை நோக்கி செலுத்தினான். நிலைகுலைந்திருந்த அஜி தலைதப்பியது உணராது பதட்டத்தில் நின்றான். தரையில்கிடந்த சீட்டுகளை ஒருவன் சேர்த்து பைக்குள் வைக்க, மற்றவர்கள் அஜியின் அவலத்தைக் காண சகிக்காமல் நின்றனர்.
“ராஜேஷ் நீ பேட் அப் பண்ணு..அஜி இப்ப வருவான்” மார்த்தாண்டம் கேப்டன் தீர்க்கதரிசனமாக அவர்களின் தலைசிறந்த ஆட்டகாரனான ராஜேஷைத் தயாராக இருக்கக் கூறினான். மூன்றாவது பந்து அஜியின் அடிவயிற்றைத் தாக்கியது. வலியை வெளிக்காட்டாமல் இஞ்சி தின்ற குரங்காக நின்றான். அஜி புரிந்து வருந்தத் துவங்கினான் எங்களைத் தவறாக எடை போட்டதற்காக. அஜி எனும் துயரத்தை அதிகநேரம் சகிக்க எங்களுக்கும் மனமில்லை. போஸ் வீசிய ஐந்தாவது பந்தில் ஸ்டம்புகள் பறக்க அஜியும் பறந்தான்.
மார்த்தாண்டத்தின் பெவிலியன் பரபரப்பானது. போட்டியைப் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலனோர் எங்களை ஊக்குவித்தார்கள். எப்போதுமே விளையாட்டுப் போட்டிகளில் வலிமையற்றவனும் கவர்ச்சியில்லாதவனும் கூட்டத்தை எளிதில் தன்வசப்படுத்துவான். இந்தியா ஜிம்பாபுவே போட்டியின்போது ஒரு குறிப்பிட்ட அளவு இந்திய ரசிகர்கள் ஜிம்பாபுவே ரசிகர்களாகவே மாறுவார்கள், அவர்கள் அவமானப்படக்கூடாது, மானமாகத் தோற்கவேண்டும், ஏன் இந்தியா சிலநேரங்களில் ஜிம்பாபுவேயிடம் தோற்றால் கூட ரசிப்பார்கள்.
ஸ்டாலின், போஸ் மற்றும் அஜீத் மூவருமாக எட்டு ஓவர்களில் மார்த்தாண்டம் அணியினரை முப்பது ரன்களுக்குப் பொதிமூட்டைக் கட்டினார்கள். “இவினுவ யாரு..காட்டாமாருவளா இரிக்கினும்” மார்த்தாண்டம் அணியினர் தோல்விக்கு மேல் காயங்கள் பெற்றுப் புலம்பினார்கள்.
அவமானத்தில் துடித்த அவர்கள், நாங்கள் கொடுக்க வேண்டிய முண்ணூறு ரூபாய்க்காக எங்களது பேற்றையும் துணைகேப்டன் ஆனந்தையும் சிறைபிடித்து வைத்தார்கள். இவர்களிடம் கெஞ்சுவதை ஆனந்த்ம் நாங்களும் விரும்பவில்லை. கிளம்ப தயாரான எங்களை அழைத்தான் மார்த்தாண்டம் அணியின் முக்கிய நபர்.
“பேலன்ஸ் நாளைக்குக் கொண்டுவந்து தரணும்.. இவன நீங்க கொண்டு போங்க ..உங்கள்ட்ட இருக்க துணிபந்தில ரெண்டு தந்திற்று போங்க”
“அதுக்க பேரு ரப்பர் பால்பால்…”என்றான் கெவின்.
***
ஆஹா.. சிறப்பான சிறுகதை❤️?