இணைய இதழ்தொடர்கள்

அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 4

தொடர் | வாசகசாலை

திமிங்கலத்தின் வாயில் நாற்பது வினாடிகள்

டோல்கீனின் சமகாலத்தவராக இருந்தவர் சி. எஸ். லூயிஸ் (C. S. Lewis). இருவரும் ஆக்ஸ்வோர்ட் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள். டோல்கீனுக்கு பேசும் திறன் சற்றே குறைவு. ஆனால் லூயிஸ் மிகச் சிறந்த பேச்சாளர். இருவரின் விரிவுரைகளையும் நினைவு கூறும் மாணவர்கள், டோல்கீனுடைய உரைகள் சுவாரசியமானதாகவும் ஆனால் உன்னித்து கவனித்தால் மட்டும் புரியும் என்கிறார்கள். மேலும் டோல்கீன் பாடம் கவனிக்கும் மாணவர்களையும் தனக்கு சமமாக பாவிப்பார் என்பதையும் லூயிஸ் ஒரு சிரிப்பால் தன்னை உயர்ந்தவர் என்னும் காட்டிக் கொள்ளும் பண்புடையவர் என்பதையும் சொல்கிறார்கள். இருபெரும் ஆளுமைகளும் ஒருவருக்கொருவரின் படைப்புகளின் மீதான விமர்சனங்களை தயக்கமில்லாமல் வைத்துக்கொண்டும் பின்னர் வேறொரு புரிதல் ஏற்பட்டப்பின் பாராட்டிக்கொண்டார்கள். டோல்கீன் லூயிஸின் Chronicles of Narniaவை கடுமையாக சாடி பின்னர் ஏற்றுக்கொண்டார்.

சென்ற மாதம் டோல்கீனை கதையாக இல்லாமல் கட்டுரையாக எழுத ஆரம்பித்த காரணத்தை சொல்லாமல் விட்டுவிட்டேன். அதனால் தான் இந்தக் கட்டுரையில் டோல்கீன் குறித்து சொல்லாமல் விட்ட செய்திகளிலிருந்து ஆரம்பித்தேன். டோல்கீன் ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுதி உலகப் புகழடைந்தவர். அவருடைய கடிதங்கள் தொகுக்கப்பட்டு புத்தகங்களாக வந்திருக்கின்றன. அவரைப் பற்றிய புத்தகங்கள் பல இருக்கின்றன. ஆனால் நம் நாட்டில் நிலை தலைகீழாக இருக்கிறது. டோல்கீனைவிட சுவாரசியமான வாழ்க்கை கொண்டவர்கள் நம் எழுத்தாளர்கள். அவர்கள் பற்றி ஆயிரம் கதைகள் எழுதப்பட வேண்டும். ஜெயமோகன் ‘அறம்’ கதையில் எழுதியது போல ஒவ்வொரு எழுத்தாளர்கள் பற்றியும் எழுதப்பட வேண்டும். லா.ச.ராவின் குடும்பத்தவர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதால் லா.ச.ராவின் வாழ்வு எனக்கு மிக நெருக்கமாகத் தெரியும். அவை கதைகளாக எழுதப்பட்டால் டோல்கீனின் வாழ்வை மிஞ்சிவிடும். இன்னொரு சம்பவம் சொல்கிறேன்: திருவல்லிக்கேணியில் பல வருடங்களுக்கு முன் ஓர் இலக்கியக் கூட்டம் நடைபெற்றது. சி.சு.செல்லப்பா உரையாற்றிக் கொண்டிருக்கிறார். டோல்கீனை போலவே செல்லப்பாவும் முணுமுணுத்து பேசும் இயல்புடையவர். அன்று அவர் பேசியது சரியாக யாருக்கும் புரியவில்லை. கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் கொஞ்சம் சத்தமாக பேசச்சொல்லிக் கேட்டுக்கொள்கிறார். ஆனால் யாரும் அந்த இளைஞன் சொல்லியதை கவனித்ததாக தெரியவில்லை. தொடர்ந்து செல்லப்பா பேசுவது புரியாமலே கூட்டம் தொடர்கிறது. கோபமடைந்த இளைஞன் செல்லப்பாவை பேசவிடாமல் சத்தமாக பேசச்சொல்லி மேஜையில் சப்தமெழுப்பிக் கொண்டிருக்கிறான். செல்லப்பாவுக்கும் மற்றவர்களுக்கும் அது இடையூறாக இருந்ததால் வலுக்கட்டாயமாக இளைஞன் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். பிற்காலத்தில் அந்த இளைஞனும் பெரும் எழுத்தாளனாகிறான். அவர் பெயர் சாரு நிவேதிதா.

இன்னொரு சம்பவத்தை எழுத்தாளர் பா.ராகவன் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். தி.நகரில் இருக்கும் பார்க்கில் ஒரு குறிப்பிட்ட இருக்கையில் அமர்ந்து தன் கதைகளை அசோகமித்ரன் எழுதுவாராம். யாராவது அந்த இருக்கையில் அன்று அமர்ந்திருந்தால் எழுதாமல் வீட்டுக்குப் போய்விடுவாராம். அன்று குறிப்பிட்ட அந்த இருக்கையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் போது மழைத் தூற ஆரம்பித்திருக்கிறது. கதை எழுதிய காகித்தில் விழுந்து சில இடங்கள் அழிந்துபோயின. அதைப் படித்துப் பார்த்து அப்படியே பிரசுரித்திருக்கிறார். கதையின் போக்கை மழைத் துளிகள் விழுந்து முற்றுமாக மாற்றியிருக்கின்றன. மழை அக்கதையை திருத்தியதாக அசோகமித்ரனும் பிரசுரித்திருக்கிறார். இம்மாதிரியான குழந்தை மனப்பான்மையையே நான் கதையாக எழுத ஆசைப்படுகிறேன்.

***********************************************************************************

பாஸ்டன் புறநகரில் உள்ள ப்ரைன்ட்ரீயில் இப்போது வசித்து வருகிறேன். வந்த இரண்டாம் வாரத்தில் பெரிய துப்பாக்கிச் சூடு. இரண்டு போலீஸ்காரர்கள் சுடப்பட்டதாக செய்தி வந்தது. காதலர்களுக்குள் வாக்குவாதம் முற்றி காதலன் துப்பாக்கியால் காதலியை மிரட்டியிருக்கிறான். பயந்து போன காதலி அவசர உதவியெண்ணுக்குத் தொடர்பு கொண்டிருக்கிறாள். போலீஸ் அடுத்த சில நிமிடங்களில் வீட்டை உடைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை காப்பாற்றியிருக்கிறார்கள். பயந்து போன காதலன் தப்பித்து அருகிலிருந்த வனப்பகுதியில் சென்று மறைந்துக்கொண்டான். கையில் ஆயுதத்துடன் ஒருவன் தப்பிச் சென்றால் பெரும் ஆபத்துதான். எனவே போலீஸ் காட்டில் அவனை தேடியிருக்கிறார்கள் கிடைக்கவில்லை. எனவே மோப்ப நாய்கள் அழைத்து தேடியிருக்கிறார்கள். அதில் கிட் என்னும் பெயருடைய ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் அவனை கண்டுபிடித்துவிட்டது. பதற்றத்தில் பதுங்கியிருந்தவன் நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டான். எனவே போலீஸ் பதிலுக்கு தாக்க பெரும் பரபரப்படைந்துவிட்டது. இதில் இரண்டு போலீஸ்காரர்கள் சுடப்பட்டு காயங்களுடன் உயிர்த்தப்பிவிட்டார்கள். கிட் (போலீஸ் நாய்) இறந்துவிட்டது. அந்தக் காதலனும் துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

கே-9 பணியில் இருக்கும் நாய்களும் போலீஸ் அதிகாரிகளாக மதிக்கப்படுவதால் கிட் உரிய போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கிட் இறந்ததைவிட அதன் உரிமையாளரின் சோகத்தைதான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

***********************************************

மேசசூசட்ஸ் பகுதியின் பெரிய சுற்றுலாதலம் கேப் காட். கோடையில் பாஸ்டன் மக்கள் இங்கு குடிபெயர்ந்துவிடுவார்கள். ஒருமுறை நண்பர்களுடன் சென்றிருக்கிறேன். சொர்க்கத்திலிருந்து ஒருபகுதி பூமியில் தவறிவிழுந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கும்! நண்பர்களோடு சென்றிருந்த போது குளிர் முற்றுமாக விலகியிருக்கவில்லை. இரவு முழுவதும் குடி. ஆனால் அதிகாலை எப்படியோ எழுந்து கடற்கரைக்குச் சென்றுவிட்டேன். வெள்ளை மணல் நிறைந்த கரையில் யாருமேயில்லை. இரண்டு கிலோமீட்டர் கரையில் நடந்திருப்பேன் கடலிலிருந்து கடற்பறவை ஒன்று பார்ப்பதற்கு அன்னப்பறவை போன்றிருந்தது சோம்பலாக நீந்தி கரையை அடைந்தது.

கடல் மீதானா ஆர்வம் கொஞ்சமும் குறையவில்லை. சென்ற வருடம் முழு ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விளக்கிக் கொள்ளப்பட்டபோது வியட்நாமியர்களுடன் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றிருந்தேன். எங்கள் சிறுபடகைச் சுற்றி வெறும் தண்ணீர்! நல்ல ஆழாமான இடத்தில் நிறுத்தி மீன் பிடிக்க ஆரம்பித்தோம். கடலுக்குள் செல்வதற்கு முன்பாகவே எனக்கு ஏதேனும் மீன் பிடிப்பதில் முன்னனுபவம் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். கிராமத்தில் வாய்க்காலில் மீன் பிடித்து பழக்கமிருக்கிறது என்று மட்டும் சொன்னேன். தூண்டிலை கையாள்வதில் எனக்கு சிரமம் இருக்கும் என்று நினைத்துக் கேட்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் படகு நிறுத்தப்பட்டு சில மணி நேரங்களில் அலைகளில் படகு அசைந்து அசைந்து மயக்கம் வர ஆரம்பித்துவிட்டது. படகில் ஒரு ஓரமாக சாய்ந்து தூங்கிவிட்டேன். வாந்தி எடுக்காமல் இருந்ததற்காக மட்டும் பாராட்டினார்கள்.

லாப்ஸ்டர்கள் எனப்படும் சிங்கி இறால்களை பொறிவைத்துப் பிடிக்க வேண்டும். இந்தக் கூண்டுகளை சேகரிக்க கடலில் குதித்திருக்கிறார் கேப் காடைச் சேர்ந்த மைக்கல் என்பவர், அந்தச் சமயம் மீன்களைப் பிடிக்க வாயைத் திறந்து வைத்திருந்த திமிங்கலத்தின் வாயில் சென்றுவிட்டார். திமிங்கலம் வாயை மூடவும் மைக்கல் வாயில் செல்லவும் சரியாக இருந்திருக்கிறது. நாற்பது வினாடிகளுக்குள்ளாக தவறுதலாக எதையோ விழுங்கியதை உணர்ந்த திமிங்கலம் மைக்கலை வெளியில் உமிழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறது. சிறுசிறு காயங்களுடன் மைக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் செய்தியை தோழி ஒருத்தியிடம் சொல்லிக் கொண்டிருந்த போது, சிறு துள்ளலுடன் நானாக இருந்திருந்தால் திமிங்கலுத்துடன் ஆழ்கடலுக்குச் சென்றுருப்பேன் என்றாள். உலகில் பைத்தியக்காரத் தனமாக நான் மட்டும் யோசிப்பதில்லை என்று ஆறுதலாக இருந்தது.

(தொடரும்…)

முந்தையது | அடுத்தது

valan.newton2021@aol.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button