கட்டுரைகள்
Trending

‘THE PLATFORM’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – முரளி ஜம்புலிங்கம் 

இவ்வுலகம் எல்லோருக்குமானது. வயது முதிர்ந்த மனிதனில் இருந்து இப்போது பிறந்த குழந்தை வரை எல்லோருக்குமான தேவை, இங்கு தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் தங்களை உயர்வானவர்களாகக் கருதிக் கொள்கிறவர்கள் அவர்களை மேலான நிலையில் வைத்துக்கொள்ள, தேவைக்கு அதிகமாக பதுக்கத் தொடங்குகிறார்கள். தங்களை அதே நிலையில் தக்க வைத்துக்கொள்ள  அவர்களுக்கான ஒரே ஆயுதம் அதிகாரம்.

அதிகாரத்தின் முதல் வேலை வன்முறை அல்ல, அடுக்குகளை உருவாக்குவது. தங்களுக்கு  கீழே படிநிலைகளை உருவாக்கிவிட்டால் போதுமானது. மீத வேலையை அடுத்த நிலையில் இருக்கிறவர்கள், தங்களுக்கு கீழ் இருப்பவர்களை வைத்து அவர்களுக்குச் செய்து கொடுத்துவிடுவார்கள். சமூகத்தின் இந்தப் படிநிலைகளை Hole என அழைக்கப்படும் தொடர் அடுக்குக் கட்டிடத்தின் வழியே சொல்கிற கதைதான் “தி பிளாட்பார்ம்“. 

குறைந்தபட்சம் இருநூறு மாடிகள் கொண்ட அடுக்குகளை கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒவ்வொரு அடுக்கும்  200 சதுரடி அளவு கொண்டது. நடுவில் உணவு மேடை மேலிருந்து கீழ் செல்லும் அளவுக்கு ஒரு துளை. ஒவ்வொரு அறையிலும் இருவர் மட்டுமே இருக்கமுடியும். உள்ளே வரவோ, வெளியே செல்லவோ அனுமதி கிடையாது. கொஞ்சம் மெனக்கெட்டால் மேலிருந்து கீழ் செல்லும் உணவு மேடையில் உட்கார்ந்து கீழே செல்லலாம். ஆனால் கீழிருந்து மேலே செல்ல முடியாதுஒரு நாளைக்கு ஒரு முறை மேலிருந்து கீழாக உணவு மேடை வருகிறது. மேலிருக்கும் மனிதர்களால் சாப்பிடப்பட்டு மீதம் இருக்கும் உணவு அது. குறிப்பிட்ட நேரம் மட்டும் அந்த மேடை அங்கே இருக்கும். அதன்பின் கீழே சென்றுவிடும். இதற்குள் நமக்கான உணவை நாம் உட்கொண்டுவிடவேண்டும். எடுத்து வைக்கவோ சேமிக்கவோ அனுமதியில்லையாராலும் தொடர்பு கொள்ளவியலாத, யாரையும் தொடர்பு கொள்ள முடியாத ஒரு அடுக்குமாடிச் சிறை.

இந்த வினோத சிறைக்கு வருகிறான் கோரேங் (Goreng). இருநூறு அடுக்குகளுக்கு மேல் இருக்கும் இச்சிறையில் எல்லோருக்கும் சரிசமமாக அவர்கள் விருப்பத்திற்கேற்ப சமைக்கப்பட்டு வரும் உணவை முதல் நூறு அடுக்குகளில் இருக்கும் மனிதர்களே உண்டு விடுகிறார்கள். இந்நிலையில் கீழ் அடுக்குகளில் இருக்கும் மனிதர்கள் பசியால் சாகவேண்டும் அல்லது பலமான ஒருவன் பலம் குறைந்த ஒருவனை உண்டு தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இக்குரூர நிலையைக் கண்டு சகித்துக்கொள்ளவியலாத  கோரேங் இதை மாற்ற முயற்சிக்கிறான். இதை அவனால் மாற்ற முடிந்ததா அல்லது அவனும் அவர்களில் ஒருவனாகத் தன் உயிரை நீட்டித்துக் கொள்கிறானா என்பதுதான் மீதிக்கதை

எழுத்தாளர்இடாலோ கால்வினோவின் “கருப்பு ஆடுஎன்ற சிறுகதை உண்டு. ஒரு நாட்டில் அனைவரும் திருடர்களாக இருப்பார்கள்இரவுகளில் தங்கள் வீட்டில் இருந்து கிளம்பி தங்களைப் போல் திருடுவதற்கு வெளியே சென்றிருக்கும் வேறொரு வீட்டில் திருடுவதுதான் அவர்களின் ஒரே வேலை. தங்கள் வீட்டிற்கு திரும்ப வந்து பார்க்கும்போது தங்களின் வீட்டிலும் திருடப்பட்டிருக்கும் என்று தெரிந்தே அவர்கள் தங்கள் பணியைத் தொடர்கிறார்கள். அரசாங்கம் குடிமக்களிடம் திருடும். மக்களும் அரசாங்கத்திடம் திருடுவார்கள். இவ்வாறு வாழ்க்கை மிக சுமுகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அந்நாட்டில் யாரும் பணக்காரரும் இல்லை, ஏழையும் இல்லை. இந்நிலையில் அந்நாட்டிற்கு ஒரு நேர்மையான மனிதன் வருகிறான். அவன் யார் வீட்டிற்கும் திருடச் செல்லாமல் வீட்டிலேயே அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான். நேர்மையான மனிதனின் வீட்டிற்குத் திருட வந்தவன் எதுவும் கிடைக்காமல் வெறும் கையுடன் திரும்புகிறான். கொஞ்ச நாளில் நேர்மையான மனிதன் வீட்டிற்குத் திருட வந்தவன் வீட்டில் எதுவும் இல்லாமல் போகிறது. திருடனின் வீட்டில் திருட வந்தவர்கள் அங்கு எதுவும் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்புகிறார்கள். இந்த சமநிலை குலைந்ததால் கொஞ்ச நாளில் அந்நாட்டில் ஏழைகளும் பணக்காரர்களும் உருவாகிறார்கள். பணக்காரர்கள் தங்களின் நிலையை தக்க வைத்துக்கொள்ள தங்களுக்குள் கூட்டு வைத்துக்கொண்டு அரசையும், நீதிமன்றத்தையும், காவல்துறையையும் தங்கள் கூட்டாளிகளாக ஆக்கிக்கொள்கிறார்கள். அந்நாட்டிலுள்ள மக்கள் கொள்ளையடிப்பது பற்றியோ கொள்ளை போவது பற்றியோ பேசிக்கொள்வதேயில்லை. ஆனால் மக்கள் அனைவரும் திருடர்களாகத்தான் இருந்தார்கள் என்று கதை முடியும். பிளாட்பார்ம் திரைப்படத்தை பார்க்கும்போது எனக்கு இந்தக் கதைதான் ஞாபகத்தில் வந்தது. தமிழில் இக்கதையை எழுத்தாளர் பாலகுமாரன் விஜயராமன் மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய “கடவுளின் பறவைகள்என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி, தன்னுடைய மகனைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை எல்லோரும் தங்களின் உடல் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள நினைக்கும்போதுகோரேங் மட்டுமே அவளை ஒரு மனுஷியாகப்  பார்த்து உதவ முற்படுகிறான்.  வேறொரு சந்தர்ப்பத்தில் இவ்வளவு நாள் தன் நெருங்கிய அறை நண்பனாக இருந்த ஒருவன், தன்னுடைய பசியின் காரணமாக “கோரேங்கின் சதையை அறுத்து உட்கொள்ள முயற்சிக்கும்போது, அந்தப் பெண் அவனைக் கொன்று கோரேங்கை காப்பாற்றுகிறாள். ஆனால் எதற்காக இவ்வளவு நாள்  கோரேங் போராடினானோ அதை மீறி அவனே இறந்த நண்பனின் உடலை உண்ண வேண்டிய நிலை ஏற்படுகிறது. வலியினால் துடித்துக் கொண்டிருக்கும் கோரேங்கினால் மனிதக் கறியை மெல்ல முடியாமல் தவிக்கும்போது, அந்தப் பெண்னே தன் வாயில் மென்று இலகுவான உணவை அவனுக்கு ஊட்டிவிடுவாள்

ஒரு அறிவியில் புனைவில் சமூகத்தின் அவலங்களை படம் பிடித்துக்  காட்டிய இயக்குருக்கு வாழ்த்துகள். ஒளி அமைப்பு, கேமரா மற்றும் இசை படத்தில் பெரிய பலம். 18+ வயதினர் மட்டுமே பார்க்கவேண்டிய படம்

இச்சிறைக்கு வருகிறவர்கள் தங்களுடன் ஏதாவது ஒரு பொருளைக் கொண்டுவரலாம்கோரேங் தன்னுடன் ஒரு புத்தகத்தை எடுத்து வருகிறான். ஏற்கனவே அங்கு இருக்கும் அறைவாசியோ தான் கூர்தீட்டப்பட்ட கத்தியை கொண்டுவந்ததாகக் கூறுகிறான். உண்மைதான் ஒரு புத்தகத்தை எதிர்கொள்ள நீங்களும்  புத்தகத்தை ஏந்தவேண்டும் அல்லது ஆயுதத்தை ஏந்தவேண்டும். நீங்கள் எவ்வளவு பலமான ஆயுதத்தை ஏந்தினாலும் உங்களால் ஒரு புத்தகத்தை எதிர்கொள்ள முடியாது

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. நல்ல விமர்சனம்.. கருப்பு ஆடு கதை உதாரணம் அருமை…. தனிப்பட்ட‌முறையில் படத்தில் நண்பனாக வரும் கருப்பினசகோதரர் பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. இருந்தாலும் 200+ (spoiler தவிர்க்க) மொத்த அறைகளுக்கு போதுமான உணவு அதில் இல்லை என்ற கேள்வி எழுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button