
தேநீர் எறும்புகள்
பிரிவின் தணலில் விரக்தி பொங்க
ஏக்கம் கொதித்துக் கொண்டிருக்கிறது
ஒரு கோப்பைத் தேநீரில்
இருவர் இதழும் பதிந்ததெல்லாம்
ஓர் அழகிய மழைக்காலம்
இனிக்க இனிக்க தேநீர் பருகியதெல்லாம்
பசுமையான தேயிலையாய் மணக்க
கடிந்து வடிகட்டிய துவர்ப்புச் சுவை
ஆவி பறந்து கொண்டிருக்கிறது
சர்க்கரை நோய்மையில்
நா வறண்டு கிடப்பதெல்லாம்
ஒரு கொடிய வெயில் காலம்
மழைக் காலத்தின் கதகதப்பும்
வெயில் காலத்தின் குளுமையும்
எங்கோவொரு மேஜையின்
கனவுக் கோப்பையில் ஆடை படர்ந்திருக்கிறது.
****
மின்மினிக் குழந்தைகள்
பகலில் இறந்தும்
இரவில் பறந்தும் திரியும் மின்மினிகளுக்கு
காரிருளே தாய் போன்றவள்
வயிற்றுத் தழும்புடைய அவளுக்கு
ஒவ்வொரு பகலும்
பிரசவ வலியில் அல்லாடுவதே
வாடிக்கையாகிவிட்டது!
****
முடிவுறும் முட்டாள்தனங்கள்
கட்டியணைத்து உறங்குவதற்கு
பொம்மை வாங்குகிறாயென நினைத்து
அதற்குள் புகுந்துகொண்டேன்
துப்பாக்கி பழகத்தானெனில்
அதன் குண்டுகளுக்கு இரையாக மாட்டேன்
என் முட்டாள்தனத்தை எல்லாம்
மூட்டைகட்டி சரக்கு ரயிலில் அனுப்பிவிட்டு
பொடிநடையாக நடந்தாவது
என் அறிவின் உச்சியைத் தொட்டுவிட
முடிவு செய்துவிட்டேன்
இனிமேல் நீ
எத்தனை கூப்பாடு போட்டாலும்
என் காது கேட்கவே கேட்காது போ!
****
கருணைத் தூரிகைகள்
முன் யோசனை ஏதுமின்றி
ஓவியம் வரைந்த சிறுமி
ஓவியத்தை முடித்த கையோடு
உருண்டு புரண்டு அழுகிறாள்
எப்படி அந்த மாமா கீழே வருவார்?
ஓர் ஏணியை வரையென்று
அம்மா நீ கூட சொல்லவில்லையேயென…
அவளின் புருவமாய் மலையுச்சியில் அந்த மாமா
விழும் அருவியாய்
அவளது கண்ணீர்
அம்மாவின் முந்தானைக்குத் தெரியும்
அருவியையே எப்படி நிறுத்துவதென்று
தூரிகையின் தூரிகைக்கும்
அம்மாவின் முந்தானைக்குமிடையே
பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது
ஏணிக்கு எத்தனை படிகள் வைக்கலாமென!
*********