ஒற்றை நிலா
வானத்து நிலாவைக் கையில் பிடித்து வந்து
தொட்டித் தண்ணீரில் நீந்தவிட்ட
வயதிலேயே நின்றிருக்கலாம்
இந்தக் காலச்சக்கரம்
‘நிலவும் வராது
வானும் இறங்காது
நீயும் வரமாட்டாய்
நாமும் சேர மாட்டோம்’
என்ற அறிவியல் பூர்வமான உண்மையை
அறிவித்துவிட்டு
இயங்காமல் நிற்கிறது
இந்தப் பாறை போன்ற காலச்சக்கரம்
‘அம்மா நிலவைக் கையில் பிடித்துவிட்டேன்’ என
மகிழ்ச்சியில் குதிக்கும்போது
மகள் கண்களுக்கு மட்டுமாய்
சுழல ஆரம்பித்தது
அதே காலச்சக்கரம்!
*****
மாயக்குளம்
அழகழகான எண்ணங்களை
வண்ணங்களாய் மாற்றும்
மாயக் குளமொன்றில்
நீந்தும் அன்னப்பறவை நான்
தானியங்களை உலர்த்தியெடுக்க
மைதானம் வேண்டுமென
அவரும் இவரும்
அவரவர் இஷ்ட தெய்வத்தை
வேண்டிக்கொள்ளாமல் இருந்தால்
அதுவே போதும்!
*****
வலிக்கும் நிமிடங்கள்
தனித்துக் கரையொதுங்கும்
ஒற்றைக் காலணிக்குத்தான் தெரியும்
அந்த நிமிடத்துப் பிரிவின் வலியும்
அடுத்த நிமிடத்து நிராகரிப்பின்
அதீத வலியும்.
******
ஏங்கும் மனம்
ஒவ்வொரு பாடகரின் குரல்
மண்ணுக்குள் புதையும்போதும்
பாடலின்றி வாழ ஏங்குகிறது மனது
குரல்களின் மௌன ராகம்
உச்ச சுருதியில் தாக்கி
படபடப்பில்
தாறுமாறாய் வீணை வாசிக்கின்றன விரல்கள்
சுருதி பிசகிய நாதஸ்வரமாய் ரத்தக் குழாய்கள்
எந்தத் தாளத்திலும் சேராமல்
லப் டப்பென்கிறது இதயம்!
இடைவிடாத இசைக் கச்சேரியாய்க்
கண்ணீர் அருவி கொட்டுகிறது.
ஒரு குரல் இருக்கும்போது
மேலதாளத்தோடு கொண்டாடப்படுவதற்கும்
அதில்லாதபோது இசைக்கும் மேளதாளத்திற்கும்
சங்கதிகள் முற்றிலும் முரணாகின்றன!
ஆகையால்தான் பாடலின்றி வாழ ஏங்குகிறது
இந்தப் பாடத் தெரியாத மனது!