இணைய இதழ்இணைய இதழ் 84கட்டுரைகள்

தேரி – செம்புல நிலத்து எழுத்து – தாமரைபாரதி

கட்டுரை | வாசகசாலை

தேரி -செம்மண் மேடு அல்லது செம்மண் மணல் குன்றுகள், மணல் திட்டை எனப் பொருள் கொள்ளலாம். உண்மையில் தேரி என்பது கடல் நீரின் வேகம், சுழற்சி, நீர்மட்டத்தின் ஏற்றம் அல்லது இறக்கம் ஆகியவற்றின் காரணமாக கடற்கரையில் அல்லது கடலோரப் பகுதியில் இயற்கை அரணாக அமையும் மணல்மேடு / மணல் திட்டை எனலாம். (Coastal Sand Dunes). இவற்றின் பயன் சூறாவளி / சுனாமி போன்ற பேரிடர்களின் போது தேரிகள் கடலோரப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளை காக்கின்றன என்று க்ரியாவின் தற்காலத் தமிழகராதி கூறுகிறது. 

ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள வறண்ட நில பிரதேசங்கள் அடங்கிய பகுதிகளில் நிறைய தேரிகள் காணப்படுகின்றன.  சங்ககாலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் பாலை திணை போன்ற நிலப்பகுதி இந்த தேரி. இந்த நிலம் செம்மண்ணாலானது.செந்நிறத்தது. ஆகவே செம்புலம் எனலாம். செம்புலம் என்றால் பாலை நிலம் என்றும் பெயர். செம்புலப்பயநீரார் குறுந்தொகையின் நாற்பதாவது பாடலில் ‘செம்புலப் பெயல்நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ என அழகாகப் பாடியுள்ளார். அப்பாடல் குறிஞ்சித்திணை பற்றியது. தேரியில் காடும் உள்ளது. சிறு மலை போன்ற மணல்குன்றும் உள்ளது.

எனவே குறிஞ்சியும் முல்லையும் முறைமையாற் திரிந்த பாலை என்றே தேரியைக் கருதுகிறேன். நிலம் என்னும் முதற்பொருளால் மட்டுமல்ல தேரியின் உரிப்பொருளும் பாலைத்தினைக்குரியதுதான். பிரிதலும் பிரிதல் நிமித்தமும். தேரியில் பிரிந்தே வாழ்கிறார்கள் செல்லக்குட்டியும், தங்கராணியும், செவ்வந்தியும் சந்தோச ராஜும். எனவே தேரியைப் பாலைத்திணைக்குரிய நாவல் என்பேன் 

*****.

இந்நிலப்பகுதியில் முக்கியத் தொழிலாக பனை சார் தொழில் இருக்கிறது. தேரிக்காட்டுப் பனை தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுத்தாளர் R S ஜேக்கப் என்பவர் எழுதிய, ‘பனையன்னன்’ என்கிற நாவலின் மூலம் அறியலாம். அமல்ராஜ் எழுதிய ‘தேரிக்காடு’ ,டாக்டர் வெ. கோபாலகிருஷ்னன் எழுதிய ‘தேரிக்காட்டு இலக்கியங்கள்’ என்னும் கட்டுரை நூல் வாயிலாகத் தேரிக்காட்டு பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கையை தாமரை செந்தூர்பாண்டி, நெல்லை கவிநேசன் ஆகியோரும் எழுதியுள்ளதை அறிய முடிகிறது. மேலும், முகிலை இராசபாண்டியனின் ‘தேரிமணல்’ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காட்டுப் பகுதியைக் களமாகக் கொண்டது. இது சாதி சமய பூசலால் விளைந்த கலவரம் பற்றிய ஒரு புதினம். இந்த வகையிலான இலக்கிய செயல்பாட்டின் தொடர்ச்சியில் 

ஒரு கண்ணியாக இந்த ‘தேரி’ நாவலைப் பார்க்கிறேன்.

*****

மேற்குலக நாடுகளில் குறிப்பாக கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளில் முதலாம் நூற்றாண்டில் உருவான உரைநடையில் சொல்லப்பட்ட பலவேறு கதைகளைத் தொடர்ந்து பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான கச்சிதமான அதே சமயம் விரிவானதும் ஆழமானதுமான உரைநடையின் வடிவம் தான் நாவல். 

அந்த வகையில் முதல் நாவல் என ஸ்பானிய மொழியில் செர்வாண்டீஸால் எழுதப்பட்ட Don Quixote (AD 1605)-ஐ குறிப்பிடலாம். Novella என்ற இத்தாலிய மொழி சொல் தான் ஆங்கிலத்தில் நாவல் என வந்தது. தமிழில் கதை சொல்லுதலில் புது இனமாக இருந்ததால் புதினம் ஆயிற்று.

இந்தியாவின் முதல் நாவல் ‘துர்க்கேச நந்தினி’ 1855-ல் வங்கமொழியில் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதியது. அவருடைய புகழ்பெற்ற இன்னொரு நாவல் ‘ஆனந்த மடம்’.தமிழில் உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தமிழின் முதல் நாவல். தற்போது வள்ளலார் எழுதிய ‘ஜீவகாருண்யம்’ என்பதையும் முதல் நாவலாக பேசிக் கொண்டிருக்கிறோம். சங்கர் ராம் என்பவரால் 1940-ல் எழுதப்பட்ட ‘மண் ஆசை’ கிராமிய பின்னணியில் எழுதப்பட்ட நாவல் ஆகும். அதேபோல முதல் மானிடவியல் நாவலாக ராஜம் கிருஷ்ணனுடைய ‘குறிஞ்சித்தேன்’ என்கிற நாவலைச் சொல்லலாம். அதே போல முதல் தலித் நாவலாக டி.செல்வராஜ் எழுதிய ‘மலரும் சருகும்’ என்பதைச் சொல்லலாம். 

ஏன் இந்த வகையான நாவல்களைப் பற்றி இங்கே சொல்கிறேன் என்றால் தேரி என்கிற இந்த நாவல் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் புழங்குகிற மக்களின் வாழ்க்கையை, அவர்களின் மகிழ்ச்சியை, துயரங்களை, அவர்களின் அன்றாட செயல்களில் உள்ள பகடியை, உறவுமுறையில் காணப்படும் அக மற்றும் புறச் சிக்கல்களை சொலவடைகளை, வாழ்முறை சடங்குகளை, அவர்களின் வாழ்வின் மேம்பாடு குறித்த சிறு சிறு எதிர்பார்ப்புகளை, எல்லாவற்றுக்கும் மேலாக அன்பு காட்டுதலை, அன்பைப் பெறுவதற்கு ஏங்குதலை செயல்படுபடுத்தக்கூடிய அவர்களது நடத்தைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது. அந்த வகையில் தேரி நாவலானது ஒரு தலித்திய நாவலாக, பெண்ணியத்தை பேசும் நாவலாக, வட்டார நாவலாக, மானுடவியல் நாவலாக, இன வரைவியல் நாவலாக,கிராமிய நாவலாக விரிகிறது.

மேற்கத்திய விமர்சகரான ஸ்டாட்டர் என்பவர், “நாவல் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தினுடைய செயல்களின் வெளிப்பாடு மட்டுமல்ல அது ஒரு காலகட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடும் கூட” என்று கூறியிருக்கிறார். இக்கூற்றானது தேரி க்கு முற்றிலும் பொருந்தும். மனிதன் கூடி வாழும் இயல்புடையவனாக உள்ளதால் சமூகம் உருவாவதற்கு தனிக் காரணியாகவும் கூட்டுக்காரணிகளாகவும் விளங்குகிறான். அவ்வாறு சமூகத்தை உருவாக்குகிற அவன் அந்த சமூகத்தை சமூகச் செயலாக்கம் (Socialisation ) என்னும் அற்புதமான செயல்முறையால் கட்டமைக்கும் அதே நேரத்தில் ஒடுக்குமுறை, பிரிவினை, வெறுப்பு ஆகிய எதிர்மறை கூட்டு நனவு மனத்தால் வர்க்கத்தாலும் சாதியாலும் பால் பேதத்தினாலும் வேறுபட்டு சமூக செயலாக்கத்தைச் சுக்கு நூறாக உடைக்கும் சமூகச் சிதைவாக்க செயல்பாட்டையும் அவனே உருவாக்கக்கூடிய தனி மற்றும் கூட்டுக் காரணிகளாக உருவெடுக்கிறான்.

இந்நாவலில் கொலை மற்றும் கொலையை மறைத்தல் போன்றவை சர்வசாதாரணமாக வருகின்றன. அதே வேளையில் அணில் பிள்ளைக்கு அபயமளிக்கும் செயல்பாடுகளும் ஒருசேர நிகழ்கின்றன. எனவே தீமை X நன்மை வெளிப்பாடு, அறம் X அறமின்மை மற்றும் அவற்றின் களியாட்டமாக இந்தாவல் விரிகிறது. இந்நாவலில் குடும்ப அமைப்புகள் தேய்வுற்று சிதைவுறுகின்றன. சில சமயங்களில் நம்பிக்கை எனும் வேர்பிடித்து மறுமலர்ச்சி அடைகின்றன. அதிகாரம் என்னும் அர்த்தமற்ற செயல்பாடு செவ்வந்தி, அவரது தந்தை தங்கவேலு போன்றோரால் குடும்ப அமைப்பிலும், தொம்பை அண்ணாச்சி, முத்துசாமி, புவியரசு போன்றோரால் சமூக அமைப்பிலும் செயல்படுகிறது. அதே சமயத்தில் ஆச்சி,செல்லக்குட்டி , பேச்சி, செல்லக்குட்டி, பாதாள முனி, அசரியா போன்ற கதைமாந்தர்களின் குரல்கள் அதிகாரத்துக்கு எதிரானதாகவும் அமைந்திருப்பதால் இதை ஒரு சமூக நாவலென்றும் கருதலாம். 

கதை நிகழ்வுகள் (Plot-Sequence of events)

தேரியில் மேற் சொன்ன எல்லாமும் இருக்கின்றன.அவை அனைத்தும் 34 அத்தியாங்களில் நிகழ்வுகளாக பின் முன் நிகழ்வுகளாக எண்ணற்ற கதாபாத்திரங்களின் வழியே சொல்லப்படுகிறது.நாவலில் விஷயம் என்னவென்றால் ,இந்தியாவில் உள்ள பட்டியல் இனத்தவர் என்னும் பட்டியலில் உள்ள 78 சாதிகளில் உள்ள வண்ணான் சாதிக்கும் மற்ற சாதிகளுக்கும் இடையிலான உறவு 70 ,80 களில் இருந்து தற்போதுவரை என்னவாக இருக்கிறது என்பதே. இரண்டு காதல் கதைகள் இருக்கின்றன. நட்பு, குடும்ப உறவுகள் , பிணக்குகள், முதலாளி -தொழிலாளி உறவுகள், பிணக்குகள் இருக்கின்றன.

எளிய மனிதர்கள் கிரிக்கெட்டைத் தொலைக்காட்சியில் அடுத்த வீட்டின் சன்னல் வழியே பார்ப்பது போன்ற நிகழ்வுகள், விசிறி ஓணான், ஆந்தை, கன்னுக்குட்டி, கிளிகள், அணில் பிள்ளை,,காகம் , ஆடு, கௌதாரி, மயில், முயல் மற்றும் கழுதை போன்ற விலங்குகள் இருக்கின்றன. இதில் கழுதை மட்டும் சாதியின் குறியீடு. இவை மட்டுமன்றி எண்ணற்ற கதைமாந்தர்கள் வழியே கதாசிரியர் எல்லோருடைய அகவோட்டத்தையும் நிகழ்வுகளால் தொடர்ந்து சொல்கிறார். இந்நிகழ்வுகள் இரண்டு தண்டவாளங்கள் சடாரென்று தோன்றி அது ஆரம்பம் ஒரு குறிப்பிட்ட தூரம் மற்றும் காலம் வரை தனித்தனியாகவும், ஒரு குறிப்பிட்ட சூழலுக்குப் பிறகு ஒன்றிணைந்து நாவலின் நடுப்பகுதி ஒரே தண்டவாளமாக மாறி தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடிகிறது. (முடிவுப் பகுதி )

உத்திசொல்முறை (Style of Narration)

முழுக்க முழுக்க படர்க்கை நிலையிலிருந்து (Third Person) மூன்றாவது நபர் உரையாடல் மூலமாக கதையை நகர்த்தும் பொதுவான உத்திதான். ஆனால், Change of Chronology எனப்படும் காலவரிசையை மாற்றியமைத்து flash back மற்றும் flash forward முறையிலான narrative Style ல் எழுதி இருக்கிறார். கதாசிரியர் நாவலுக்கு வெளியே நின்று அனைத்து கதாபாத்திரங்களின் மன ஓட்டத்தையும் உரையாடல்கள் வழியும் சில நேரங்களில் மௌனக்குறியீடுகளின் வழியாகவும் கதைசொல்கிறார். 34 அத்தியாயங்கள் என்பன 34 தவணைகளாக எப்போதுதான் முடியும் எப்படித்தான் முடியும் என்கிற suspense ஐத் திடுக்கிடலை முன் வைக்கின்றன. 

ஒவ்வொரு தவணை முடிகையிலும் ஒரு Cliffhanger ஐ வைத்துக் கதையாடலை நிகழ்த்துகிறார். Metaphor எனப்படும் உருவகங்கள் சில சொலவடைகள் மூலமாக சில சூழ்நிலைகளை விளக்கும்போது பகடியாகவும் , சில ஆழ்ந்த துன்பத்தைத் தருவதாகவும் உள்ளன. (கூடப் படுத்திட்டா கழுதை கன்னுக்குட்டி ஆயுடுமா?) இது வாசகரை நாவலில் உள்ளிறுத்தித் தொடர பயன்படுகிறது.முழுக்க முழுக்க வட்டாரச் சொல்வழக்கில் எளிய உரையாடல்களில் நாவல் நகர்கிறது. சில வார்த்தைகளுக்கு அகராதியைத் தேடத்தான் வேண்டும். Story within Story என்கிற கதைக்குள் கதை என்கிற சொல் முறை அல்லது உத்தி நிறைய இடங்களில் உள்ளது. மேலும் அ-நேர்க்கோட்டு (Non Liner )எழுத்து முறையும் உள்ளது.

உரையிடையிட்ட செய்யுள்கள் போல கதைமாந்தர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாட்டுப்புறப் பாடல்களைப் போன்ற கவிதைகளும் உள்ள எழுத்து முறை. கிரா,சோ.தர்மன், பூமணி போன்ற யதார்த்தவாதக் கதைசொல்லிகளின் மாய யதார்த்தவாதத்தை முழுமையாக உள்வாங்கிய கதைசொல்லல் முறை இல்லை எனினும் அதற்குச் சற்று நெருக்கமான கதை சொல்லல் முறையைக் கையாள்கிறார்.

*********

நாவல் உருவாக்கும் சமூகக் கருத்து.

1. சாதிய வெறுப்பும் விருப்பும் என்பது மரபு வழியாக பாரம்பர்யத்தின் வழியே இரத்த உறவின் வழியே தொடரும்.

2. எந்த சாதியில் எந்த வர்க்கத்தில் எந்த பாலினமாக இருப்பினும் பாவம் செய்பவன் அதன் பலனை அனுபவித்தே தீரவேண்டும் 

3. கேட்பாரற்ற ,காணாமல் ஆக்கப்படுகிற விளிம்பு நிலை மக்களின் துயரம் யாரையும் சும்மா விடாது.

4. எவ்வளவு இழந்தாலும் எந்த பிரச்சினைகள் வந்தாலும் நெருக்கடிகளைத் தாண்டி முன்னேற அன்பின் பிடிமானம் ஒன்று உந்து விசையாக எப்போதும் இருக்கிறது.

இவை எதுவும் பிரச்சாரமாக ஆலோசனையாக சுயமுன்னேற்றப் பிரசங்கமாக இல்லை

*********

கதைமாந்தர்களின் பைந்தமிழ்ப்பெயர்சூட்டலுக்கு என் வந்தனங்கள். வெட்சி, சித்திரப்பூ, செந்தூர்கனி, போன்றவற்றைத் திரும்பத்திரும்ப உச்சரிக்கலாம். Protoganist செல்லக்குட்டியை நாம் வாழ்நாளில் சிலமுறையேனும் உச்சரித்திருக்கலாம். நான் என் மகனை அனுதினமும் செல்லக்குட்டி என்றுதான் அழைக்கிறேன். செவ்வந்தியின் கைகளில் பொட்டம்மை திணிக்கும் வைக்கோல் பொம்மை நல்லதொரு பண்பாட்டு அசைவு.Book making ,Book Mark சிறப்பு

*********

கவனத்தில் கொண்டிருக்கலாம் எனக்கருதியவை 

சாதி பற்றிய வெளிப்படைத்தன்மை (openness ) நாவலில் இல்லை. மேலும் சாதீய துன்புறுத்தல்கள் வலுவாகப் பதிவுசெய்யப்படவில்லை கழுதை மேய்த்தல், துணி வெளுக்கப் போடுதல் குறித்த நுட்பமான விபரங்கள் இருந்திருப்பின் இன்னும் சிறப்புடையதாக வந்திருக்கும். நிறைய இடங்களில் அடுத்து வரக்கூடிய அத்தியாயங்களில் என்ன நடக்கும் என்பதை வாசகரால் யூகிக்க முடிகிறது. சில இடங்களில் நிறைய விவரனைகள் வாசிப்பின் வேகத்தைக் குறைக்கும் சாத்தியங்களை உண்டு பண்ணுகிறது. ஒரு பெண்ணின் பத்து மாத கர்ப்ப காலத்தை ஒரு சமூகம் அறியாததும் கர்ப்பத்தின் காரணகர்த்தாவை அறிய முடியாததும் கேள்விக்குரியவை. ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பர். ஆனால், மந்திரவாதி, குறி சொல்பவரின் இரகசிய வாழ்க்கை அம்பலப்படாமல் வெகுகாலம் நீடித்திருப்பதும் கேள்விக்குரியது. சாதாரணமாக கொலைகள் நிகழ்கின்றன.. கொலை மறைக்கப்படுகிறது. ஆனால், காவல், விசாரணை பற்றிய தகவல் ஏதும் நாவலில் இல்லை.

இந்த நேரத்தில் ஆப்கானிய கதாசிரியர் காலீத் ஹுசேனின் மேற்கோளை சொல்லலாம் “Writing is the act of weaving a series of lies to arrive at a greater truth,” மேலும் ஆல்பர் காம்யூவையும் நினைவு கொள்ளலாம் “Fiction is the lie through which we tell the truth” 

கால ஒழுங்கு அல்லது கால வரிசையை தேர்ந்த வாசகன் அறிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படலாம்.(சத்துணவில் முட்டை – 1989, காதலிக்க நேரமில்லை திரைப்படம் – 1964, இங்கிலாந்து கிரிக்கெட் மேட்ச்-1992, ரூபவாஹினி அப்துல் ஹமீது போன்றவை முன் பின்னாகச் சொல்லப்படுதல் )

வாசிப்பின் போதே காட்சிப்படுத்தலை வாசக மனத்தின் முன் வைக்கும் அப்பட்டமான சினிமாத்தனமான அத்தியாயங்கள். மற்றும் அத்தியாயங்களுக்கான தலைப்புகள். இது திரைக்கதைக்கு வேண்டுமானால் உசிதமாக இருக்கலாம்; நாவல் என்னும் அழகியல் இலக்கியச் செழுமைக்கு வெளிப்படையான காட்சிப்படுத்துதல் வாசிப்பனுபவத்தைக் குறைக்கும் எனக் கருதுவதால் தேவையில்லை. வட்டார வழக்குச்சொற்களின் அதிக புழக்கம் பிற பகுதிகளைச் சாரந்த வாசகரைச் சலிப்படையச் செய்யலாம். தொல்லியல் சான்றுகளை, இந்திய தொல்லியல் வரைபடத்தைப் பின் முன் அட்டைகளில் வைத்த மெனக்கெடலைப் போல வழக்குச் சொற்களுக்கான பொருளை உணர்த்தும் அடிக்குறிப்பை வழங்கி இருக்கலாம். ஓர் கிறித்துவர் என ஓர் இடத்தில் வருகிறது.

******

இறுதியாக இப்பூமி என்னும் கிரகத்தில் வாழ்கிற எல்லா ஜீவராசிகளும் இப்பூமிக்குப் பிழைக்க வந்த வந்தேறிகள்தான். மனிதர்கள் மட்டும்தான் மற்ற மனிதர்களை “வந்தேறி “ எனப் பலரை ஒடுக்கி அடக்கி ஆள ஆசைப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை வந்தேறிகளின் வலியைச்சொல்லும் வைரபாண்டியனுக்கு என் வந்தனங்கள். மற்றபடி தேரி நாவல் ராஜேஷ் வைரபாண்டியனின் முதல் நாவல் என்பதால் இதோடு முடித்துக் கொள்கிறேன்.

*********

thamaraibharadhi@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button