சிறுகதைகள்

தோல் தரித்த… – லெஸ்லி நெக்கா அரிமா [தமிழில் – அனுராதா ஆனந்த்]

சிறுகதைகள் | வாசகசாலை

உடையணியாதப் பெண், தன் யோனி முடியை மறையும் சூரியன் போலத் திருத்தமாகக் கத்தரித்திருந்தாள். அவள் ஒப்பனைப் பொருட்களையும், க்ரீம்களையும் அடுக்கி, அவற்றின் மேன்மைகளை விளக்குவதை இளக்காரமான புன்னகையுடன் பார்த்துகொண்டிருந்தனர் உடையணிந்தப் பெண்கள்.

“நீங்களே பார்க்கலாம் மிருதுவான மென்மையான சருமம்” என்று கண்களைச் சிமிட்டியவாறே, தன் உடையின்மையையும் பகடி செய்ய முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள். இஜெமை ஊக்குவிக்கும் முகமாகப் புன்னகையுடன் தலையாட்டிக்கொண்டும், அவள் பெட்டிக்குள்ளிருந்து எடுக்கும் ஒவ்வொன்றையும் தன் கையில் எடுத்து பார்த்தபடி இருந்தாள் சிதின்மா. அவள்தான் இஜெமை அழைத்திருக்கிறப்படியால், வந்திருக்கும் பெண்கள் எதையும் வாங்காவிடிலும், அவளுக்கு இதில் ஓர் ஒப்பனைச் சாதனம் இலவசமாகக் கிடைக்கும்.

`சருமம் ஒரு பெண்ணுக்கு எவ்வளவு முக்கியமான அங்கம்? அதை ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும்’ என்ற வரியுடன், தன் விற்பனை உறையை நிறைவு செய்தாள் இஜெம். உடையணிந்த பெண்கள் சத்தம் வராமல் மேல்தட்டு சிரிப்பை சிரித்து, அழகியலுடன் பாங்காக வடிவமைக்கப்பட்டிருந்த தங்கள் மனைவித் துணிகளை நீவி சரிசெய்துகொண்டனர். அவர்கள் இடையில், ஒரு வாரால் மட்டுமே இறுக்கப்பட்ட நீளமாக,நெசவின் நளினம் தெரியும் வண்ணம் வசீகரமாக உடுத்தியிருந்தனர். அவர்கள் இஜெம் மீது பரிதாபத்துடன் கூடிய பார்வையை வீசி மகிழ்ந்தனர்.

“உன் வயதில் நான் ஆடையில்லாமல் இல்லை. நிர்வாணம் என்பது சிறுவயது பெண்களுக்கு மட்டும்தான் என்று உனக்குப் புரியவில்லையா? என் நண்பன் ஒருவன் தன் உடைமையாக்க ஒரு பெண் தேடிக்கொண்டிருகிறான். உன்னை அவனிடம் அறிமுகப்படுத்தவா? அவன் பெரிதாக எதிர்ப்பார்பு எதுவும் இல்லாதவன்.”

இந்தப் பேச்சுகள் தந்த அயர்ச்சியினாலும், வரும் கண்ணீரை மறைக்க பெரிதுமாகக் கண்களை உருட்டினாள். ஒவ்வொரு முறையும் இப்படித்தான் பேச்சு கேட்க வேண்டியிருக்குமா? உதவிக்காக சிதின்மாவைப் பார்த்தாள்.

இருப்பதிலேயே விலையுயர்ந்த போத்தலை கையில் உயர்த்திப் பிடித்தபடி, “எனக்கு மற்றவர்களைப் பற்றி தெரியாது. ஆனால், நான் இங்கு இதை வாங்கத்தான் வந்திருக்கிறேன். உடுத்திய, உடுத்தாதப் பெண்கள் பற்றிய விவாதங்களில் ஈடுபட அல்ல” என்றாள் சிதின்மா.

இஜெம் அந்த விற்பனையை முடிப்பது போன்ற பாவனை செய்தாள். மற்ற பெண்கள் தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள, அவரவர் தெரிவுகளை வாங்கினர். ஆனால், இஜெமிடம் நேரடியாகப் பேசுவதை தவிர்த்தனர். அவளை ஓசு ஜாதியைச் சேர்ந்தவளைப் போல நடத்தத் தொடங்கினர். ஒப்பனைப் பொருட்களைப் பற்றிய சந்தேகங்களை சிதின்மாவிடமோ, இவளைப் பார்க்காமல் தவிர்த்து காற்றிடமோ கேட்டனர். இஜெம் பதிலளிப்பதை கேட்டுக்கொண்டனர். ஆனால், அவள் இருப்பை நிராகரித்தனர். இஜெம் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருப்பாள். ஆனால், சிதன்மாவின் கணவன் வீட்டுக்குத் திரும்பும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. இந்தக் கூடுகையை அவன் வருவதற்குள் முடித்துவிட வேண்டும் என்பது மட்டுமே சிதின்மாவின் வேண்டுகோள். அவர்களின் நட்புக்கு இடையேகூட இப்படி ஓர் எழுதப்படாத ஒப்பந்தம் இருந்தது. “நீ உடைமையாக்கப்படாமல் இருக்கிறாய் என்று என் கணவன் முன் விளம்பரப்படுத்தாதே.” சிதின்மா அதை ஒரு பாராட்டுப் போல விளையாட்டாகச் சொல்வாள். “உனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை அதனால், உன் உடம்பு கட்டுக்குலையாமல் இருக்கிறது.” – ஆனால், அவர்களுக்கு இடையில் ஒரு பெயரிடப்படாத சங்கடம் வளர்ந்துகொண்டே வந்தது.

வந்திருந்த பெண்களில் இஜெம்மை முதன்முதலில் நிராகரித்தவள், அவர்களின் தலைவியாக இஜெம் எண்ணியவள், இருவரும் கடிகாரத்தைப் பார்ப்பதைக் கண்டு தந்திரமாகச் சிரித்தாள். ஒவ்வொரு பொருளையும் உபயோகிக்கும் முறையைத் தனக்கு மறுபடி விளக்க இஜெம்மை பணித்தாள். இஜெமும் தனக்கு முடிந்த மட்டும் விரைவாகவும், அதேசமயம் வாடிக்கையாளருக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையுடனும் விளக்கினாள். சிதின்மா, அவள் அஞ்சியது நடக்கவிருக்கும் விதியை நொந்தவள் போல அமைதியானாள். சிதின்மாவின் கணவனும் வந்துவிட்டான்.

சான்ஸ், அவள் கணவன், கணவர்களில் நல்லவன் என்றே சொல்லலாம். அவன் சில வங்கிக் கிளைகளின் மேலாளராகப் பணிபுரிபவன். ஒரு பெரிய வீட்டில் வசதியாக வாழ்வதற்கும், ஒரு ஓசுப் பெண்ணை பணிப்பெண்ணாக அமர்த்தி, சிதின்மாவின் வீட்டு வேலையை எளிதாக்குவதற்கும் போதுமான அளவு பணம் சம்பாதிக்க உதவும் வேலை. உடையணியாதப் பெண்ணுடனான தன் மனைவியின் நட்பை அனுமதிப்பதாலும், வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணிடம் ஒழுக்கமாக நடந்துகொள்பவனாக இருப்பதாலும், அவனை முற்போக்கானவன் என்றுகூடச் சொல்லலாம். தன்னை சம்பிரதாயமாக வரவேற்க வேண்டும் என்பதை மட்டும் வலியுறுத்துவான்.

சிதின்மா எழுந்து வணங்கி அவனை வரவேற்றாள். பின், ஓர் எளிய முத்தத்துக்காகக் கால் விரல்களில் தன்னையே உயர்த்தி நின்றாள். அவளுடைய கீழ்முதுகில் மனைவித் துணிக்கு மேல், தன் கை விரல்களை முட்டியாக மடக்கிய, அரை மனது முத்தம்.

அவன் இன்னும் ஓர் ஆண்தானே. மற்ற பெண்களுக்கு முகமன் கூற திரும்பியதும், இஜெமின் மேல் அவனுடைய பார்வை நிலைகுத்தி நின்றது. அவளுடைய ப்ரௌன் வண்ணத் தகடுகள் போன்ற முலைகள், கால்களுக்கிடையில் வடிவமாகக் கத்திரிக்கப்பட்ட முடி மற்றும் அவள் அமர்ந்த நிலையில் மறைக்கப்படாமல் தெரிந்த எல்லாப் பாகங்களின் மேலும் ஒரு சுற்று சுற்றிவந்தன அவன் கண்கள். யாரும் எதுவும் சொல்லவில்லை என்றாலும், கல்யாணமான ஆண் ஒருவனின் வீட்டில் உரிமைக்கொள்ளப்படாத பெண் இருப்பதான முறையற்ற தன்மையும், சமூக குற்றமென இதுபற்றி சுவையாகப் புறம்பேசுவதற்கான சாத்தியகூறுகளையும் எண்ணி குறுக்கிடாமல் அமைதி காத்தனர். சிதின்மா பெரும் சங்கடத்திற்கானது வெளிப்படையாகத் தெரிந்ததால், அந்தக் கூட்டத்தின் அறிவிக்கப்படாத தலைவி, அவர்கள் அனைவரையும் கிளப்பிக்கொண்டு போகும் நோக்கில் எழுந்தாள். மற்ற பெண்களும் எழுந்தனர். சான்ஸிடம் வணங்கி, சிதின்மாவின் கையைப் பரிதாபம் சிறிதும், தேறுதல் சிறிதுமாகப் பற்றியும் விடைபெற்றனர். உறுதியாக, “எப்படி அவளை முறைத்துப் பார்த்தான் ” என்ற கதை சுற்றி சுற்றிப் பேசப்படும். சிதின்மாவால் சிறிது காலத்திற்கேனும் அதிலிருந்து தப்பமுடியாது. இஜெமை கவனியாது கடந்துசென்றனர். அவள் சமூக அடுக்கில் தங்களைவிட மிகவும் கீழானவள் என்று உணர்த்திச் சென்றனர்.

சிதின்மா தன் கணவனின் நாளைப் பற்றி கேட்டு, அவன் கவனத்தைத் திருப்ப முயன்றாள். ஆனால் சான்ஸ், இஜெமிடமிருந்து கண்களை எடுக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தான். இஜெம் அந்த இடத்தைவிட்டு விரைந்து நகர்ந்து, வெளியில் செல்லும் ஆயத்தங்களில் இருந்தாள். ஆனால், ஒவ்வொரு நொடியும் அவளுடைய மார்புகளின் துள்ளலும், தொடைகளின் உராய்வும் அவளைச் சங்கடப்படுத்தியது. அவள் கிளம்பிய கதவருகே சென்ற பின்தான் சான்ஸ் அவளிடம் பேசினான். பதில் வணக்கமாக ஒருமுறை குனிந்தாள். சிதின்மா அவளுடன் கதவு வரை வந்து, “நாம் சந்திப்பதை இப்போதைக்கு நிறுத்திக்கொள்ளலாம்” என்றாள் ஓர் இறுதியான குரலில். இனிமேல் இவ்வுறவு நீடிக்காது என்பதை உணர்த்துவதுப் போல.

“ஏன்?”

“ஏன் என்று உனக்குத் தெரியும்.”

“நீ தெளிவாகச் சொல்லவேண்டும் சிதின்மா.”

“சரி, இந்த நட்பு நன்றாகத்தான் இருந்தது, நாம் இருவரும் மூடாதப் பெண்களாக இருந்த வரை. ஆனால், மூடியப் பெண்களால் மூடாதப் பெண்களுடன் நட்பாயிருக்க இயலாது. இது அபத்தம் என்றுதான் நானும் முதலில் நம்பினேன். ஆனால், இதுதான் உண்மை என்று இப்போது புரிகிறது. என்னை மன்னித்துவிடு.”

“நீ 13 வருடங்களாக மூடியப் பெண்ணாகத்தான் இருக்கிறாய். இதுவரை உனக்கு எந்தப் பிரச்னையும் இருந்ததில்லையே.”

“நீயும் விரைவில் மூடியப் பெண்ணாக ஆகிவிடுவாய் என்று நம்பினேன். நீ அதற்கு எவ்வளவு பக்கத்தில் வந்தாய். அந்த ஒருவனுடன் நீ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது சரியில்லை.”

“இந்த ஒருமுறைதானே எனை பார்த்தார் உன் கணவர். அதுவும் விபத்துதானே.”

“ஒருமுறையே போதும். உனை மூடிக்கொள்ளும் வழியைப் பார். ஒருவரின் உடைமையாகிவிடு. கல்யாணச் சந்தையிலிருந்து வெளியே வா. அதுவரை, நாம் சந்திக்க முடியாது. என்னை மன்னித்துவிடு.”

இஜெம் பதில் சொல்வதற்குக் காத்திராமல், சிதின்மா வீட்டுக்குள்ளே சென்றுவிட்டாள். இஜெமால் என்ன பதில் பேசிவிடமுடியும்? ‘யாருடைய உடைமையாக ஆவதிலும் எனக்கு விருப்பமில்லை…’ என்றா ? சிதின்மா அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென நினைப்பாள்.

தன் மார்புகளைச் சரியாக மறைக்கும் வகையில் தன் பையை வைத்துக்கொண்டு பேருந்து நிறுத்தத்துக்கு நடக்கலானாள். வழக்கமாக சிதன்மா அவளை கொண்டுவிடுவாள். இன்றைக்கு அது சாத்தியமில்லை.
பேருந்து பயணத்திலிருந்தும் ஆண்களின் வெறித்த பார்வைகளிலிருந்தும் தப்பமுடியாது. ஒரு சிறிய துவாலையை விரித்து இருக்கையில் அமர்ந்தாள். தன் மாதவிடாய் கோப்பை ஒழுகினால் என்னாகும் என்ற பேரச்சம் அவளை பற்றிக்கொண்டது.

நிறுத்தத்தில் இளைஞர் கூட்டம் ஒன்று அவர்களின் பேச்சை நிறுத்தி, அவளை ஆராயத் தொடங்கியது.
“அவளுக்கு என்ன வயதிருக்கும்? நீ சொல்லு.”

“வயதானவள்டா.”

“தெரியலடா. அந்தப் பையைக் கீழே வைக்கட்டும். அவளுடைய மார்புகளைப் பார்த்தால்தான் ஊகிக்க முடியும்.”

அவர்கள் காத்திருந்தார்கள். இஜெம் அவர்களைப் பொருட்படுத்தாமல் தன் பையாலும், அழகுச் சாதன நிறுவனத்தின் பெயர் பொரித்த மற்றுமொரு பையாலும் தன்னை முடிந்தளவு மறைத்துக்கொண்டாள்.
“திமிரைப் பார்த்தியா? அதானால்தான் யாரும் இவளை உடைமையாக்கவில்லை. இவளைக் கல்யாணம் பண்ண எவனுக்கு பிடிக்கும்?”

பேருந்து வரும் வரை இதே ரீதியில் போனது அவர்களின் பேச்சு. மரியாதை என்கிற பெயரில் பேருந்தில் இவளை முதலில் ஏற வழிவிட்டு ஒதுங்கி நின்று, அவளை முழுமையாகப் பார்க்கும் ஆசையைப் பூர்த்திசெய்து கொண்டனர். மூடாதப் பெண்கள் இருக்கிறார்களா என அறிய பேருந்தின் உள்ளே தன் பார்வையைச் சுழலவிட்டாள். துணைக்கு ஆள் சேர்க்கும் விதமாய் ஒருத்தியைப் பார்த்ததும் சற்று நிம்மதியானாள். சிறிது நேரத்திலேயே அந்த நிம்மதி ஆவியாய் போனது. அவள் அழகாக இருந்தாள் என்பதே வருத்தம் தர போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், அவள் மிக இளமையாகவும், மாசற்ற தோல் கொண்டவளாகவும் இருந்தாள். அந்த இளைஞர்களுக்கு இஜெமின் இருப்பே மறந்துபோனது. அந்தப் பெண்ணை சூழ்ந்துகொண்டனர், அவள் இடுப்பு வளைவை பற்றி, கைகளின் திரட்சி பற்றி, சத்தமாகச் சிலாகித்தனர்.

அந்த இளம்பெண் அவள் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தின் பக்கங்களை திருப்பியவாறே, இவர்களின் கவனிப்பை மிக இயல்பாக எதிர்கொண்டாள்.

இஜெமுக்கு ஒரே சமயத்தில் நிம்மதியாகவும், அவமானமாகவும் இருந்தது. தன் இளமை காலத்தில் இடுப்பு பெருத்து போவதற்கு முன் எப்படி இருந்தோமென எண்ணிப் பார்த்துகொண்டாள். அவள் எப்போதுமே தன் நிர்வாணத்தைப் பெருமையாகவோ, தைரியமாகவோ அணிந்தவளில்லை. ஆனால், தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறோம் என்ற கர்வம் சிறிது உண்டு.

பேருந்து முக்கால் நிரம்பிய நிலையில் ஒரு ஓசு பெண் ஏறினாள். இஜெம் திடுக்கிட்டு பின் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டாள். அது சட்டப்படி குற்றமில்லைதான் என்றாலும், அவ்வாறு செய்வது இப்பகுதியில் அரிதானது. ஓசுக்களுக்கு அவர்களுக்கே உண்டான பிரத்தியேக வாகனங்கள் உண்டு. இவளைப் போல மற்ற பயணிகளும் அந்த ஓசுப் பெண்ணைத் தவிர்த்தனர். சங்கடமாக, எரிச்சலாக உணர்ந்தனர். அவள் நடத்துனரிடம் காசு எண்ணி கொடுக்கும்போது, அவன்கூட நேராகத் தெருவைப் பார்த்துகொண்டுதான் அதை வாங்கினான். அவள் பேருந்தின் நடுவில் நடந்து வரும்போதும், பொதுவாக மரியாதையுடன் சிறிது உள்நகர்ந்து இடம் தருவார்களே, அதைப் போல யாரும் நகரவில்லை. அடுத்த முறையாவது அதன் எழுதப்படாத விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பாள் என்ற எதிர்பார்ப்பில் இந்தச் சமுதாயம் அவளுக்கு ஒரு சின்ன எச்சரிக்கை தருகிறது என்று இஜெம் நினைத்தாள். நிறைய இடமிருந்தும் ஓசுப் பெண் நின்றுகொண்டு பயணித்தாள்.

சிறுது தூரப் பயணத்தில் இஜெமின் மனம் அந்தப் பெண்ணிற்காக இளகியது. தானும் அவளைப் போல யார் கண்ணுக்கும் தெரியாத, புறக்கணிக்கப்பட்ட பெண் ஆகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. பிறப்பின் அருளால் மட்டுமேதான் ஓசுவாகவில்லை. கடைசியாக அம்மாவிடம் பேசியபோது அவள் சொன்னது நினைவில் வந்தது. “உனக்கு வழிகள் இருக்கின்றன இஜெம். நீதான் அறிவாக அவற்றை தெரிவு செய்யவேண்டும்.”

அவள் அதைச் செய்யவில்லை. தனக்குப் பாதுகாப்பு தந்து உடைமையாக்க நினைத்தவனை நிராகரித்து விட்டிருந்தாள். அவன் நீட்டிய மனைவித் துணி ஏன் தன்னை அமிழ்த்தும் பாரமாக இவளுக்குத் தோன்றியது என்பதன் காரணம் இன்றும் தெளிவாக அவளுக்குப் புலப்படவில்லை.

தன் நிறுத்தத்தில் பையை நெஞ்சுக்கு நேராக அணைத்தபடி இறங்கினாள். யாரும் அவளைக் கவனிக்கவில்லை. இதுதான் நகர வாழ்க்கையில் அவளுக்கு பிடித்தவைகளுள் ஒன்று. எல்லாரும் அவரவர் வேலையில் மட்டும் கவனமாயிருப்பார்கள். வீட்டை நோக்கி தன் நடையை எட்டிப் போட்டாள். தன் அடுக்ககத்தின் பர்கண்டி நிற கூரை தெரிந்ததும், மேலும் வேகமாக நடந்தாள்.

மின்தூக்கியில் வயதான ஆண் தன் ஓரக்கண்ணால் இவளை அளந்து கொண்டிருந்தான். அவன் கழுத்தை திருப்பினால்தான் பார்க்க முடியும் என்ற அளவுக்கு பின் நகர்ந்து சுவரோடு ஒட்டி நின்றாள். ஆண் கல்யாணம் ஆனவனா இல்லையா என்று அறிய எந்த வழியும் இல்லை. மனைவி உடையவர்கள் அவளைப் அப்படிப் பார்ப்பது அவளுக்குப் பிடிக்காத ஒன்று.

அவள் வீட்டுக்குள் வந்ததும், நீளமான பெருமூச்சொன்றை எடுத்தாள். இப்படி ஒன்றை வெளியில் எடுக்கவே முடியாது. அத்தனை தீர்ப்பெழுதும் கண்கள் அவள் மேல் மொய்த்துக்கொண்டிருக்கும். பின்பு, சிதின்மாவின் நட்பு உடைந்ததைப் பற்றி வாய்விட்டு அழத் தொடங்கினாள்.

சிறு வயதில், தந்தைத் துணி அணிந்த பருவத்தில் நெருக்கமான தோழிகளாயிருந்தனர். அந்தப் பள்ளிக்கு இருவருமே புதிதாய் சேர்ந்தவர்கள். இருவரின் தந்தை துணியிலும் கிட்டதட்ட ஒரே வகையான வேலைப்பாடு. தந்தை துணிகள் அந்த வயதில் எவ்வளவு பாதுகாப்பளித்தன? பதினைந்து வயதில் அம்மா அவளுடைய தலையைக் கோதி, துணியைத் துறக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சொல்ல, எப்படி அழுதாள்?
பெரும் பணம் படைத்தவர்களால் மட்டுமே, மனைவி துணி கிடைக்கும் வரை தங்கள் பெண்களை மூடிவைக்க முடியும். இஜெமின் அப்பா அவ்வளவு பணம் படைத்தவனில்லை. அவன் வளர்ந்த கிராமத்தில் பத்து வயதைத் தாண்டிய சிறுமிகள் தந்தை துணியைத் துறந்துவிடுவர். இஜெமின் வயதே அதிகம் என்ற எண்ணம் கொண்டவன். உடல் ஊனமுற்ற பெண்களுக்கு மட்டும் சமூகத் துணி வழங்கப்படும். அதுவும் மற்றவர்களின் கொடையாக. ஆனால், இஜெம் வயதுப் பெண், துணி அணிந்திருந்தால் நகரசபை அதற்கான வரியை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்லும். அவனால், அச்செலவை ஏற்கமுடியாது. அதைச் செலுத்த முடியாதவர்களின் பெண்களைப் பொதுவில் துகிலுரியும் தண்டனை வழங்கப்படும். அவனால் அந்தக் குடும்ப அவமானத்தை ஏற்கமுடியாது. அவன் சொல்படியே எல்லாம் நடக்கவேண்டும் என்ற எண்ணம்கொண்டவன்.

இஜெம் தந்தைத் துணியை இழந்த நாள்தான், அவள் அப்பா அவளுடன் பேசுவதை நிறுத்திய நாள். வளர்ந்த ஆண் ஒரு நிர்வாணப் பெண்ணுடன் பேசுவது சங்கடத்தை உண்டு பண்ணக்கூடியது, அது தந்தையாகவே இருந்தாலும். இஜெமிற்கு வீட்டைவிட்டு எங்குமே செல்ல பிடிக்கவில்லை . பள்ளி, சந்தை , மக்கள் தன்னைப் பார்க்கும் எங்குமே செல்ல விரும்பவில்லை. சிதின்மா தானும், தந்தைத் துணியைத் துறப்பதாகத் தன் குடும்பத்திடம் கூறினாள். பணக்காரரான அவளுடைய தந்தையால் இன்னும் நிறைய காலம் தன் மகளை மூடவைக்க முடியும் என்றாலும், இரு தோழிகளும் இந்த உலகத்தை சேர்ந்து எதிர்கொள்ள திட்டமிட்டனர்.

சிதின்மாவின் பெற்றோர் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். மகளின் மனதை மாற்ற முயற்சித்தனர். சிதின்மா பிடிவாதமாக இருந்ததால், பணமிருந்தும் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் போல, இந்த நிகழ்வை திரித்து சொல்லிக்கொண்டனர். ஆனால், அவர்களுடைய சுற்றத்தாரின் கேலிக்கு ஆளானார்கள். நண்பர்களை இழந்தனர். சிதின்மா இஜெமிடம் இதுபற்றி ஒருமுறை கூறியிருக்கிறாள், தன் பெற்றோர் தன்னை இந்நாள் வரை மன்னிக்கவில்லை என்று.

இஜெம் தன் தோழிக்கும் தனக்கும் ஒரே நேரம் கல்யாணம் நடக்கும் என்று நம்பியிருந்தாள். ஆனால், இருபது வயதில் சிதின்மாவுக்கு மனைவித் துணி கிடைத்தது. இஜெம்தான் பக்கத் தோழியாக இருந்தாள். பின் ஒரு மகன், இரு மகள்களுக்குப் பிறகு அவள் வாழ்நாள் முழுவதும் மூடியிருக்கும் தகுதி பெற்றவளானாள். இந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் இடையில் இஜெம், மூடப்படாமல், உடைமையாக்கப்படாமல், மிதந்துகொண்டிருந்தாள். இப்போது அதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்றாகிவிட்டது.

ஒரு கோப்பை வைனை ஒரு மூச்சில் குடித்தாள். பின் இன்னொன்று. வந்திருந்த கடிதங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தாள். இறுதியில், சில நாட்களாகப் பிரிக்காமல் தவிர்த்த கடிதத்தைப் பிரித்தாள். அது அவள் வீட்டின் லீஸ் ஒப்பந்தம் புதுப்பிப்பதற்கான நோட்டீஸ். அதில் வாடகையும் உயர்ந்துள்ளது தெரிந்தது. இன்றைக்கு அவள் ஈட்டிய தொகை இருமாத வாடகைக்குச் சரியாக இருக்கும் என்று கணக்கு போட்டிருந்தாள். ஆனால், இந்த ஏற்றம் எல்லாவற்றையும் கலைத்துவிட்டது. மேலும் சிதின்மாவும் தன்னை கைவிட்டதனால், இனிமேல் மேல்வர்க்க பெண்களிடம் தன்னால் விற்பனை செய்யமுடியாது என்று உணர்ந்தாள். வேறு ஏதேனும் ஒரு வழியில் பொருளீட்ட முடியாவிட்டால், இந்நகரைவிட்டு சிறு ஊருக்கு சொல்லவேண்டியது அவசியமாகும்.
இந்த வீட்டை வாடகைக்கு எடுத்த நேரம், ஒரு கட்டடக்கலை நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தாள். அவளுடைய நிர்வாணம் சில தலைகளை திருப்பினாலும், அவளைப் போல சில பெண்கள் இருந்தனர். மேலும், இஜெம் தன் வேலையில் சிறந்தவளாக இருந்ததால், அலுவலகத்தில் முன்னேறினாள். ஆனால், பத்து வருடத்துக்குள் முப்பது வயதைக் கடந்தவளாக, மேலாண்மையின் மேல் அடுக்குகளில் அவள் மட்டுமே அப்போது மூடாதப் பெண் .

மூன்று மாதங்களுக்கு முன் அவள் ஒரு வாடிக்கையாளருக்காக ஒரு விளக்கப்படத்தை அறிமுகம் செய்துகொண்டிருந்தாள். அந்த அறையில் இவள் மட்டுமே பெண். அவன் இவள் விளக்கத்தை கவனியாது, இப்படி ஒரு கூடுகையில் உடைமையாக்கப்படாதப் பெண்ணின் இருப்பு சமுதாயத்துக்குக் கேடானது என்கிற தொனியில் பேசத் தொடங்கினான். இஜெமிற்கு இந்த மாதிரியான விமர்சனங்கள் பழக்கமானதே. அதைப் புறம்தள்ளி தன் வேலையில் முனைப்பாக இருக்க முயன்றாள். அவன், இவள் அறிமுகத்தை தவிர்த்தான். இவளிடம் பேசுவதையும் தவிர்த்தான். அவளுடன் பணிபுரியும் ஆண்கள் யாரும் அவளுக்காகப் பேசவில்லை. தங்கள் குறிப்பேடுகளில் தலையைக் கவிழ்த்துகொண்டனர். இவள் அறையைவிட்டு வெளியேறினாள்.

இஜெம் இதுவரை மனிதவளத் துறைக்குச் சென்றதேயில்லை. எதுவாயினும் தானே எதிர்கொள்வாள். இல்லை, புறம்தள்ளி மேலே செல்வாள். மனிதவள மேலாளர் ஐம்பதுகளில் உள்ள மூடியப் பெண். இவள் சொல்வதை அயர்ச்சியுடன் கேட்டாள். பின்பு இவள் மார்புகளை பார்த்தபடி, “உடைமையாக்கப்படாதப் பெண் ஒருத்தி அறையில் இருக்க, ஆண்களால் எப்படி விளக்கப் படங்களில் கவனம்கொள்ள முடியும்? நீ மூடியிருந்தால் இதுபோல நடக்க வாய்ப்பில்லை. நீ மூடியப் பெண்ணாகும் வரை எங்களால் உன்னை வாடிக்கையாளர் முன் அனுப்ப இயலாது” என்றாள்.

இஜெம் அலுவலகத்தைவிட்டு வெளியேறினாள். பின் அங்கு மறுபடி செல்லவில்லை. வீட்டிலேயே தன்னை பூட்டிக்கொண்டாள். சிதின்மா இடுப்பில் தன் இளைய மகளும், ஒரு கையில் வோட்கா பாட்டிலும், மற்றொரு கையில் அழகுச் சாதனப் பொருட்களை வீட்டிலிருந்தபடியே விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரத்துடனும், வீட்டின் கதவை தட்டும் வரை.

இப்போது அதுவும் கெட்டது. அவளது சேமிப்பு சில நாட்களில் கரைந்துவிடும். டிவியை ஓடவிட்டாள். உடைமையாகாத ஒரு பெண் செய்திகள் வாசித்துக்கொண்டிருந்த சேனலில் நிறுத்தினாள். ஒனிட்ஷாவில் ஒரு தீப்பிடித்த கட்டடம் பற்றிய செய்தி. பின்னணியில் செய்தியாக ஓடிக்கொண்டிருக்க, காய்கறிகளை வெட்டினாள். உடைமையாகாதப் பெண்கள் என்று திரும்பத் திரும்ப கேட்டதால் சத்தத்தை அதிகரித்தாள். சற்றே வயதான ஒருவனும் சேர்ந்து செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தான்.

“அந்தக் கட்டடம் உடைமையாகாதப் பெண்களுக்குச் சட்டத்துக்குப் புறம்பாக அடைக்கலம் தரும் இடம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துணி நெய்யும் தங்கள் கடமையில் இருந்து தப்புவதற்காக, அங்கே விதிமீறி தங்கியுள்ளனர். எனவே, தீயணைப்பு வேலைகளைப் பாதியிலேயே நிறுத்தும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அது அந்தப் பெண்களை விதிகட்கு உட்பட்டு நேர்வழியில் செல்ல உந்துதலாக இருக்கும் என்று அரசு அதிகாரி தெரிவித்தார். மூன்று உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அங்க அடையாளங்கள் இதுவரை சரிபார்க்கப்படவில்லை.”

இஜெம், நகரம் சார்ந்த இடங்களிலேயே வசிக்க விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம். சிறு நகரங்கள் உடைமையாகாதப் பெண்களை அனுமதிக்காது. ஓசு இனத்தைச் சேர்ந்தவர்களை தவிர பிற மூடாதப் பெண்களை அவர்களின் சமூகத்து சட்டங்கள் தண்டனை பெறக்கூடிய குற்றமாகப் பார்க்கின்றன. ஓசு பெண்களுக்கு ஒரு மாதிரியான சுதந்திரம் இருப்பதாக அவளுக்கு தோன்றியது. வீட்டு வேலைகள் செய்யும் ஓசு பெண்கள், மற்றும் மிக கடினமான சுரங்க வேலைகள், மற்றும் இவள் முன்பு வடிவமைத்த கட்டடங்களில் வேலை செய்த ஓசு ஆண்கள் மீதும் ஒரு சிறு பொறாமை இருந்தது. ஆனால், அதுவும் அவர்களை ஒரு பொருட்டாக, மனிதராக மதிக்காததனால் கிடைத்த சுதந்திரம் என்று உணரும்போது இல்லாமல்போனது. உடைமையாகாதப் பெண்கள் வாழ, இதுவரை ஒரே இடம்தான் இருந்தது. தங்களைவிடப் பாக்கியசாலிகளான பெண்களுக்குத் துணி நெய்யும் பிரம்மாண்ட தொழிற்சாலைகள் மட்டுமே.

அந்தச் சிறு நகரத்தின் மேயர், பத்திரிகையாளர்களின் சந்திப்பில், “இது கௌரவமான மக்கள் வாழும் கௌரவமான ஊர். உடைமையாகாமலும், நிர்வாணமாகவும் சுற்றித்திரிய நினைப்பவர்கள் வேறு இடங்களைத் தேடிச் செல்லலாம். இந்தக் கட்டடம் தீயில் நாசமானது பற்றியும், இதில் இறந்தவர்கள் பற்றியும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துகொள்கிறேன். ஆனால், இது குடும்பங்கள் வாழும் இடம். இங்கு உலகிலேயே மிகச்சிறந்த துணி நெய்யும் ஆலை, ஊர் எல்லையில் உள்ளது. இவர்கள் அங்கு சென்றிருக்கலாம்.”
பின்பு திரையில் செய்தி வாசிப்பவனைக் காட்டினார்கள். அவன் இந்தக் கலாச்சார சீர்கேட்டை தாங்கிக்கொள்ள முடியாதவனைப் போலவும், அதேநேரத்தில் உயிர் இழப்பால் வருந்துபவன் போலவும் தலையை ஆட்டிக்கொண்டிருந்தான்.

இஜெம் அவளுள் எழுந்த பீதியுடன் போராடிக்கொண்டிருந்தாள். அவள் கூடிய விரைவில் இந்த நெசவாளரகள் கூட்டத்தில் சேரவேண்டி இருக்குமோ என்று அஞ்சினாள். அவளுக்கு ஒரு வேலை தேவை. அதுவும் மிக அவசரமாக.

நிர்வாணமாக என்னென்ன வேலைகள் செய்யமுடியும். நுழைவு நிலை வேலைகளுக்கான வயதை அவள் கடந்துவிட்டாள்.மேலும், அங்கே இருபது வயதினர்களால் சூழப்பட்டிருப்பாள். அவர்கள் வேகமாக உடைமையாகிவிடுவர். அவள் தன் நிர்வாணம் ஒரு பிரச்னையாக இல்லாத வேலைகளைத் தேடினாள். நர்சிங் வேலையில் இருந்தபோது நோயாளியைப் பார்க்க வந்த ஒருவர், ஆட்சேபிக்கும் வரை ஐந்து வாரங்கள் தாக்குபிடித்தாள். ஒரு காஃபி ஷாப்பில் இரண்டரை மணி நேரம், அதற்குள் அவளுடன் வேலை பார்த்த ஒருவனை கண்டு, பின்பக்கம் ஒளிந்துகொண்டாள்.

அடுத்த நாள் வேலையைவிட்டு விலகினாள். எங்கே சென்றாலும் கட்டக்கலை அலுவலக வேலை எவ்வளவு பாதுகாப்பாக அவளை உணரவைத்தது என்று புரிந்தது. வேலை நிமித்தம் நகரத்தைவிட்டு தள்ளிச் செல்லச் செல்ல மக்கள் அவளை வெறித்து பார்ப்பது அதிகமானது. ஓசு பெண்ணின் அடையாளம் இல்லை என்று தெரிந்தவுடன், ஏன் மூடப்படவில்லை என்று வெளிப்படையாகவே கேட்டார்கள். அவ்வப்போது தலையில் முடி மழித்த, ஒரு காதுக்கு மேல் நெற்றியில் காயப்படுத்தப்பட்ட வடுவுடன்,வீட்டு வேலை நிமித்தம் வெளியில் வரும் ஓசு பெண்களைப் பார்ப்பாள். மற்ற பெண்கள் அவர்களை கம்பங்கள் போலவும், தபால்பெட்டிகள் போலவும் தவிர்த்தனர். ஆனால், இஜெம் அவர்களைப் பார்த்தாள்.

பீதியும் பதற்றமுமாக வேலை தேடல் தொடர்ந்தது. ஒவ்வொரு சின்ன புறக்கணிப்பும் அவமானமாகி, கத்தியின் முனை போலானது. தந்தைத் துணியால் மூடப்பட்ட சிறு பெண்கள்கூட, ஒரு நாள் அந்தப் பாதுகாப்பு பறிக்கப்படும் என்று அறியாமல், அல்லது அதுபற்றி கவலைக்கொள்ளாமல் அவளைப் பார்த்து ஏளனப் புன்னகை பூத்தனர்.

ஒரு விடுதியில் மசாஜ் செய்யும் வேலையில் சேர்ந்தாள் இஜெம். எல்லோருமே உடைகளைக் களையவேண்டிய இடத்தில் வேலை பார்ப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. இந்தச் செயற்கை சமத்துவம் அவளுடைய புண்களை ஆற்றுவதாயிருந்தது. வேலையின் இரண்டாவது வாரத்தில், இஜெம் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் விலையுயர்ந்த மனைவித் துணிகளை அணிந்த ஒரு பெண் வந்தாள். விடுதியில் இருப்பதில் விலையுயர்ந்த சேவைகளை கோரினாள்.

“உங்கள் கணவரின் வங்கி எண்ணை தெரிந்துகொள்ளலாமா?”

“என்னுடைய வங்கி எண்” என்று அழுத்திச் சொல்லி, தன் அட்டையை முகப்பில் நகர்த்தினாள். வரவேற்பில் நின்ற பெண், அந்த அட்டையைப் புரியாமல் பார்த்தாள். வந்திருந்த பெண்ணையும், மேலாளரை அழைக்க உள்ளே சென்றாள்.

இஜெம் வயதை ஒத்த மேலாளரின் ஆணவ நடையும், பார்வையும் இந்த வாடிக்கையாளரைப் பார்த்ததும் குழைவும், அதீத மரியாதையுமாக மாறியது. வந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டாள். “மன்னியுங்கள், இந்தப் பெண் புதிதாய் சேர்ந்தவள். இன்னும் தந்தைத் துணி உடுத்தும் சிறியவள். அவளை மன்னித்துவிடுங்கள்.”
வந்த பெண் அமைதியாக இருந்தாள். “இன்று எங்களுடைய சேவை எல்லாவற்றுக்கும் கணிசமான தள்ளுபடி தருகிறோம். மரியா உங்களுக்காக ஆயத்தமாக இருக்கிறாள்.”

“அவள் வேண்டாம்” என்றாள் தீர்மானமாக. “`இவளை இன்று செய்ய சொல்லுங்கள்” என்று பக்கத்தில் பொருட்களை அடுக்குவது போல பாவனை செய்துகொண்டிருந்த இஜெமை நோக்கி கை நீட்டினாள்.

மசாஜ் அறையில் அந்தப் பெண்ணின் துணிகளைக் களைய உதவிக்கொண்டிருந்த இஜெமிற்கு, அந்தத் துணியினை தன் கன்னத்தில் இளைத்து, அதன் மென்மையை உணரவேண்டும் போல இருந்தது. அதை அதற்குரிய இடத்தில் மாட்டிவைத்தாள். மேலாளர் அவளை சைகையால் அழைத்தாள். கையைப் பிடித்து அறையின் மறுபுறத்துக்கு இழுத்துச்சென்று கடுமையான, ஆனால் தாழ்ந்த குரலில், “இவங்க யார்னு தெரியுமா? ஒடினாகா. இங்கேயிருந்து முழுத் திருப்தி, மகிழ்ச்சியில்லாம இவங்க போனால், நீயும் வேலையைவிட்டுப் போகவேண்டியதாக இருக்கும். புரிகிறதா?”

இஜெம் தலையாட்டினாள், மசாஜ் அறைக்கு சிறிது பதற்றத்துடன் திரும்பினாள். ஒடினாகா மிகச் சிறிய எண்ணிக்கையிலான சுதந்திர பெண்களுள் ஒருத்தி. எந்தவித எதிர்ப்புமில்லாமல் மரபுகளை மீறுபவள். அவள் உடைமையாகவில்லை. ஆனாலும் துணி தரித்தவள். அதுவும் சாதாரணமாக அந்த ஊர் பெண்கள் உடுத்தும் தந்தைத் துணியோ, மனைவித் துணியோ போல அல்லாமல், மிக உயர்ந்த ரகத்தில், கண்ணை கவரும் வண்ணங்களில், வடிவங்களில் அணிபவள். உலகம் முழுதும் பரவிய நூற்பு ஆலைகளுக்குச் சொந்தக்காரி. அங்கு யாரும் செய்யத் துணியாத அவள் செய்கைக்குக் கடும் விமர்சனங்கள் உண்டு. ஆனால், அவளுடைய பணம் அதை வெறும் விமர்சனமாக மட்டுமே தேங்கிவிட உதவியது.

ஒடினாகா, மசாஜ் மேசையில் கால்களை தொங்விட்டுக்கொண்டு உட்கார்ந்தாள். இஜெம் தன் கைகளில் எண்ணையைச் சூடு படுத்தவும், ஒடினாகா குப்புறப் படுத்தாள். அவளுடைய கணுக்கால்களில் தொடங்கி மேல் உள்ள தசைகளில் கைகளை வழுக்கிக் கொண்டுபோய் அழுத்தமாக நீவிவிட்டாள். மேலோட்டமாக, மெதுவாகப் பேச்சு கொடுத்தாள். ஏனென்றால், ஒடினாகா பேச விரும்புவாளா, அமைதியாக இருக்க விரும்புவாளா என்று ஊகிக்க முடியவில்லை. இஜெம் அவ்வளவெல்லாம் யோசித்திருக்க வேண்டியதில்லை என்பது போல, ஒடினாகா மிக ஆர்வமாக, விரிவாகப் பேசினாள். இஜெமிடமும் கேள்விகள் கேட்டு பேச்சை வளர்த்தாள். இஜெம் எந்த வேலைகளைக் கடந்து எப்படி இங்கே வந்தாள் என்பது வரை எல்லாவற்றையும் கேட்டு தெரிந்துகொண்டாள்.

“நீ இப்படி மூடாமல் இருப்பது நியாயம் இல்லை என்று நினைகிறாயா?”

இஜெம் இப்படிப்பட்ட சட்டவிரோத கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல், அமைதியாக தன் வேலையைத் தொடர்ந்தாள்.

“நீயும் நானும் ஒன்றே போன்றவர்கள் தெரியுமா?” என்றாள் ஒடினாகா.

தொடர்ந்த உடல் பயிற்சியால், சரியான அளவில் இருக்கமான தசைகளோடு இருக்கும் ஒடினாகாவின் உடலைப் பார்த்தாள். ஒரு நாளும் பணத்தைப் பற்றிய கவலை இல்லாத அவளது வாழ்வை பற்றி யோசித்தாள்.

“நீங்கள் மிக அன்பாகப் பேசுகிறீர்கள். நாம் இருவருக்கும் ஒரே வயதிருக்கும். மற்றபடி எந்த ஒற்றுமையும் இல்லை.”

“இல்லை, உண்மையாகத்தான் சொல்கிறேன். நாம் இருவரும் ஆண்கள் கோலோச்சும் இந்த உலகத்தில், அவர்களின் உடைமையாகாமல் முன்னேற துடிக்கும் பெண்கள்.”

“ஆனால், நீங்கள் முழு சுதந்திரத்துடன் உங்கள் விருப்பத்துக்கு மூடியிருக்கிறீர்கள்’ என்று சொல்ல நினைத்தாள்.

“என்னை மூடிக்கொள்வது சட்டவிரோதமாக…”

“சட்டமும் கிடையாது விரோதமும் கிடையாது. உன்னிடம் பணம் இருந்தால், உன்னால் சட்டத்தை தாண்ட, அதற்கு மேலாக வாழமுடியும். சரி, உனக்கு மூடிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இல்லையா என்ன?”

ஒடினாகா இவளது மீட்பரானாள். இஜெமின் பழைய வீட்டிலிருந்து, நகரத்தின் மேல்தட்டு மக்கள் வசிக்கும் தன்னுடைய அடுக்ககம் இருக்கும் கட்டடத்தில் இரண்டு படுக்கை அறைகளும், பெரிய சமையலறையும் உள்ள வீட்டுக்கு மாற உதவினாள். அந்த வீடு, ஒன்று புதிதாக இருக்க வேண்டும். இல்லை, அதில் முன்பு வசித்தவர்களின் வாசமோ ஆளுமையோ இல்லாத அளவுக்கு மிகவும் ஆழமாகச் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும். அப்படி பளிச்சென்றிருந்தது. இந்தக் கட்டடத்தைப் பராமரிக்கும் ஓசு பெண்களைத் தொடர்புகொள்ள இன்டர்காம் வசதி இருந்தது. சுத்தப்படுத்த வேண்டும் என்றாலும், வேறு சமையலுக்கு தேவையானப் பொருட்கள் வேண்டும் என்றாலும், ஓசுப் பெண்ணிடம் தெரிவித்தால், அது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியை அடைந்துவிடும். இஜெம் ஒடினாகாவிடம் தன் பணிசெய்யும் இடம் தொலைவில் இருப்பதை குறிப்பிட்டபோது, அவள் வேலை செய்யவேண்டியதில்லை என்றாள் ஒடினாகா. இஜெமிற்கு இந்த வேலையை விடுவது எளிதானதாக இருந்தது. அந்த அடுக்ககத்தில் உள்ள மற்ற பெண்களின் அறிமுகம் கிடைத்தது.

உடையிலும், செய்கைகளிலும் ஒடினாகாவின் சிறிய அளவு அச்சு போல இருந்தாள் டிலைலா. ஆனால், நம்பிக்கை மற்றும் தைரியத்தில் மட்டும் சரிபாதிதான் இருந்தது அவளிடம். டோரீன் நாற்பதை நெருங்குபவள். இஜெமிற்கு மிக நல்ல தோழியானாள். ஒரு லாபத்துடன் நடக்கும் புத்தகக் கடைக்கு சொந்தக்காரி. தனக்கு என்ன வேண்டும் என்ற தெளிவும், தன்னையே நேசிக்கக் கூடியவளின் தோற்றத்துடன் இருந்தாள் டோரீன். தன் துணி என்ற தேர்வை தவிர்த்து மூடாமலேயே இருந்தாள்.

“அவர்கள் எவ்வளவு வேண்டுமானலும் முறைத்து பார்த்துகொள்ளட்டும்” என்பாள். சில கோப்பைகள் வைன் உள்ளே சென்பின், “இந்த உடம்பு ஒரு கலைப் படைப்பு” என்றபடி, தன் மார்புகளை இரு கைகளாலும் தூக்கிக் காண்பிப்பாள். இஜெமும் மற்ற பெண்களும் அடக்கமுடியாது சிரிப்பார்கள்.

மற்ற பெண்கள் – மோராயோ, முகாசோ, மர்யம் – மரியாதையாக இருந்தார்கள். ஆனால், தள்ளியே இருந்தனர். திமிர் பிடித்தவர்கள் என்று சொல்லமுடியாத அளவுக்கு மட்டுமே தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அவர்களின் இணக்கமற்ற தன்மையால், ‘ ம்…ம் …ம் ‘ என்று மட்டுமே பதில் சொல்வதால், அவர்களை ‘மூன்று ம் கள்’ என்று இஜெமும் டோரீனும் அழைத்தனர்.

சில நாட்கள் மட்டுமே ஒடினாகாவின், ஏறக்குறைய -இரவு மது கூடுகையில் கலந்துகொண்டனர். ஆனால், சில வாரங்களிலேயே ஒடினாகா, டிலைலா, டோரீன், இஜெம் என்று நால்வர் நட்பும் கெட்டியானது.

இந்தக் குழுவில் இஜெமின் நிர்வாணம் பற்றிய இளக்காரமான பேச்சில்லை.போலி அக்கறையுடன் அவளுடைய வயதை, அழகை பொருட்படுத்தாது பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும் ஓர் ஆணுக்கு அறிமுகப்படுத்தும் பேச்சும் இல்லை.

ஒடினாகா அவளுடைய பரந்து விரிந்த வணிகத்தைப் பற்றி பேசினாள். டோரீன் தன் சிறிய கடையைப் பற்றி பேசினாள். ஒருவருக்கொருவர் பின்பற்றவே முடியாத அறிவுரைகள் கூறி கேலி செய்து விளையாடினர். இஜெம்மால் இந்தப் பேச்சில் பெரிதாகக் கலந்துகொள்ள முடியவில்லை. அவள் கட்டடக்கலை வேலையைப் பற்றி கொஞ்சமாகச் சொன்னாள். முதன்முறையாகத் தான் மூடாமல் இருப்பது தவிர, வேறொன்றிற்காக வெட்கப்பட்டாள்.

எல்லோருக்குமாகச் சேர்த்து ஒடினாகாவே பேசினாள். யார் பேசினாலும் குறிக்கே தடுத்து, எல்லா உரையாடல்களையும் தானே ஆதிக்கம் செலுத்தினாள். ஒடினாகாவின் வாழ்க்கை சுவாரஸ்யம் மிக்கதாக இருந்தது. பிறந்ததிலிருந்து செல்வத்திலேயே திளைத்தவள். இந்த நெசவாலை தன் தந்தையின் வழிவந்த சொத்தாகப் பெற்றவள்.பெண் சொத்துரிமை பெறுவது மிகுந்த எதிர்ப்பை சம்பாதித்தது என்றாலும், பணம் படைத்த பெருவணிகக் குடும்பம், தலைமைப் பொறுப்பில் ஒரு பெண்ணை அமர்த்த நினைத்தால், மிக எளிதாக அதே பணத்தைக்கொண்டு அதற்கான அனுமதியை, அவர்களால் வாங்கிவிட முடியும். அந்தப் பெண் தன் துணியைக்கொண்டு மூடியவளாக இருக்கவும், தன்னைப் போல உடைமையாகாதப் பெண்களைச் சேர்த்துக்கொண்டு அவர்களிடம் அக்கறை காட்டுபவளாக இருந்தால், அதற்குத் தடை விதிக்கும் அளவு அதிகாரமும் யாரிடமும் இருந்துவிடாது போகும்.

“மூடியிருக்கும் துணியைக் களைவது, ஒரு பெண் தன் விருப்பத்துக்காக மட்டுமே செய்ய அனுமதிக்கின்ற உலகம் ஒன்றை உருவாக்க எனக்கு ஆசை” என்று ஒடினாகா அடிக்கடி சொல்வாள்.

அங்கு இஜெம் சென்ற முதல் நாளில், ஒடினாகா ஒரு துணியைப் பரிசாக கொண்டுவந்தாள். எப்போது வேண்டுமானாலும் இதை அணிந்துக்கொள்ளலாம் என்றாள். இஜெம் அந்தத் துணியைப் பல மணி நேரம் வெறித்தாள். யாரும் இல்லாத தன் வீட்டுக்குக்குள்கூட அதை அணியும் தைரியம் வரவில்லை. ஒடினாகாவின் மது கூடுகைகளில் டோரீன் இஜெம் பக்கத்தில் உட்கார்ந்து, “நமக்கு முதல் எதிரி, வெட்கப்பட்டு மூடிக்கொள்ளும் இவர்கள்தான்” என்று தொடங்கி, மூடிய அனைவரையும் வம்புக்கு இழுத்து சிரிப்பார்கள்.
“நீ உன் கடைக்கு இப்படி மூடாமல்தான் போகிறாயா?” என்று இஜெம் ஒரு நாள் டோரீனிடம் கேட்டாள். “நீ உன்னை மூடிக்கொள்ளலாமே, ஒடினாகாவின் பாதுகாப்பில் உள்ள பெண் என்று தெரிந்தால் யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டார்கள்தானே?” இஜெம் பயமில்லாமல் வெளியில் தன் துணி உடுத்திப்போக தனக்கே தைரியம் கொடுத்துகொள்ளும் எண்ணத்தில் கேட்டாள்.

தான் பார்த்துகொண்டிருந்த பில்களை தள்ளவைத்துவிட்டு இஜெமிடம் தன் முழு கவனத்துடன், “இங்கே பார், நாம் இந்தப் பிரச்னையோடுதான் வாழ்ந்தாக வேண்டும். நான் பத்து வயதில் என் துணியை இழந்தேன். அவ்வளவு சிறு வயதில் பாதுகாப்பில்லாது இருப்பது எப்படி இருக்கும் என்று தெரியுமா? கிட்டதட்ட பத்து ஆண்டுகள் ஒளிந்திருந்த பிறகே, என் தைரியத்தை, சுயமரியாதையைக் கண்டுகொண்டேன். என்னுடைய இயல்பில் மூடாமல் நான் இருப்பதற்காக யாரும் என்னை அவமானப்படுத்த முடியாது. வாழும் வரை உடைமையாகாமலும், மூடாமலும்தான் வாழ்வேன். யாரும் எதுவும் சொல்லத் துணியமாட்டார்கள். ஒடினாகா தனக்கு இசைந்த வகையில் தன் எதிர்ப்பை தெரிவிக்கிறாள். நான் எனக்கு தெரிந்த வகையில். சட்டம் என்னை நிர்வாணமாக இருக்க பணிக்கிறது. நான் நிர்வாணமாக இருக்கிறேன். அதற்காக என்னை அவமானபடுத்த வேறு செய்வார்களா இவர்கள்?”

சில வாரங்கள் இங்கு சுதந்திரமாக இருந்தது. ஒடினாகாவின் பேச்சு எல்லாம் இஜெமிற்கு தன்னை உணர அவகாசம் கொடுத்தது. ஒரு நாள் இரவு கூடுகையில், ஒடினாகா தந்த துணியைத் தனக்குத் தெரிந்த வகையில் உடுத்தியிருந்தாள். டோரீன் முதல் ஆளாக, “உன் வழியில் நீ புரட்சி செய்” என்று வாழ்த்தினாள். ஆனாலும், அவளின் சிரிப்பில் சிறிது சோகம் இருந்தது.

ஒடினாகா உற்சாக மிகுதியால், “மேலும் ஒருத்தி! நாம் கண்டிப்பாக இதைக் கொண்டாட வேண்டும்” என்றாள். அதற்கான ஏற்பாடுகளில் விறுவிறுப்பாக இறங்கினாள். இன்டர்காம் மூலம் தன்னுடைய ஓசு பெண்ணிடம் உத்தரவுகள் பிறப்பிக்க தொடங்கினாள். இஜெம் இதுவரை இங்குள்ள ஓசு பெண்ணைகளைப் பார்த்ததில்லை. ஆனால், ஒடினாகாவின் வீட்டுக்கோ, டோரீனின் வீட்டுக்கோ சென்று திரும்புகையில், வீடு சுத்தமாக துடைக்கப்பட்டு, படுக்கை ஒழுங்காக்கப்பட்டு, கழிவறை கண்ணாடிகளில் உள்ள சிதறல்கள் சுத்தம் செய்யப்பட்டு துப்புரவாக இருப்பதை கண்டிருக்கிறாள்.

ஒரு மணி நேரத்துக்குள், இஜெமும் அங்கு வசிக்கும் மற்ற பெண்களாலும், சில ஆண்களாலும் ஒடினாகாவின் வீடு நிறைந்தது. டோரீனைத் தவிர மற்ற பெண்கள் எல்லாரும் உடுத்தியிருந்தனர். டோரீன் ஒரு ராணியைப் போல தன் இருக்கையில் அமர்ந்து, வைன் அருந்தியபடியும், போலி நாணத்துடன் புன்னகைத்தபடியும் தன் பிரஜைகளுக்கு உரையாற்றிக்கொண்டிருந்தாள்.

இஜெம் அவர்களுடன் சேர்ந்திருக்க நினைத்தாலும், இப்போது துணி உடுத்தியிருந்தாலும், இவ்வளவு காலம் நிர்வாணமாயிருந்த அந்த வெட்கமும், தயக்கமும் அகலாமல், அவளை இழுத்து பிடித்தது. ஒடினாகா எவ்வளவு முயன்றும் இஜெம்மை இயல்பாக்க முடியவில்லை. ஒரிரண்டு வருந்தி வரவழைத்த பதில்களைத் தவிர, அவளால் யாருடனும் பேச முடியவில்லை. அறையின் ஒரு மூலையில் குழுக்களிலிருந்து தள்ளி ஒரு பார்வையாளராக ஒதுங்கி நின்றாள்.

ஒடினாகாவிடம் சற்றுமுன் மிகையாக வணக்கங்கள் சொன்னவன், தன்னை பார்த்துகொண்டிருப்பதை உணர்ந்தாள்.

“நீங்கள்தான் இங்கு புது வரவா?” என்றான்.

“அப்படித்தான் நினைக்கிறேன்.”

“நீங்கள் பார்க்க ஓரளவுக்கு நன்றாகதான் இருக்கிறீர்கள். பின் ஏன் உடைமையாக்கப்படவில்லை?”
இஜெம் பதற்றமடைந்தாள். ” ஓரளவுக்கு என்றால்..?” சந்தேகத்துடன் கேட்டாள்.
அதற்குப் பதில் சொல்லாமல் கடந்தான்.

“உங்களுக்கு தெரியுமா? ஒடினாகா சிறு பெண்ணாய் இருந்தபோதிருந்தே நான் அவளை உடைமையாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அப்படி நடந்திருந்தால் அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக இருந்திருக்கும். உலகின் மிகப்பெரிய நூற்பாலைக்கு சொந்தக்காரியும், உலகின் மிகப்பெரிய பருத்தி விளைவிப்பவனும். எப்படி இருக்கும் நீங்களே சொல்லுங்கள்.”

இஜெம் தோள்களைக் குலுக்கினாள். அவளுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

“அதை விட்டுவிட்டு இப்போது குப்பைகளை பொறுக்கிக்கொண்டிருக்கிறாள்.”

நாகரிகமற்ற இந்தப் பேச்சால் அதிர்ச்சி அடைந்து, முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள். ஆனால்,
அவன் அதற்கும் சிரித்துவிட்டு வேறு யாரையோ கூப்பிட்டபடி நகர்ந்தான்.

திடீரென்று அவளுக்கு அந்த அறையில் உள்ள எல்லாச் சிரிப்பும் தன்னை இகழ்வதாகவே இருந்தது. எல்லாப் புன்னகையும் இவளின் இயலாமையின் காரணமாகவென்று தோன்றியது. சிதின்மாவின் கையைப் பிடித்துக்கொண்டால் மட்டுமே தலை உயர்த்தி நடக்க இயலும் என்ற தன்னுடைய சிறு வயது பயம் திரும்ப வந்தது. தன் வீட்டுக்கு போகவேண்டி சட்டென்று வெளியே வந்தாள்.

டிலைலாவை வெளியில் பார்த்தாள். நல்ல வேலைப்பாடுகள் கூடிய அவளுடைய குடும்ப சொத்தான ஒரு மரப்பெட்டியை தூக்கிக்கொண்டிருந்தாள். இஜெம் இதை ஒடினாகாவின் கூடுகைகளில் பார்த்திருக்கிறாள். இந்தப் பெட்டியைப் போல மிகச் சில பொருட்களே ஒடினாகாவின் பொறாமையைப் பெற்றவை. தன்னிடம் அதுபோல ஒரு பெட்டகம் இல்லையே என்று வருந்துவாள் ஒடினாகா. அது எந்தக் காலத்தியது, எந்த மக்களுக்குண்டானது என்பதுகூட மர்மமாகவே இருந்து. மறுபடி மறுபடி அதைத் தருவித்து ரசித்து பார்ப்பாள் ஒடினாகா. ஒடினாகா எவ்வளவு முயன்றும், அதை ஒரு வல்லுநரிடம் கொடுத்து மதிப்பை அறிய, டிலைலா சம்மதிக்கவில்லை.

இஜெமிற்கு, டிலைலாவை அவ்வளவாகப் பிடிக்காது. ஒடினாகாவின் சிறிய அளவு பிரதியாக இருந்தாலும் போலியானவள். தன் மேல்தட்டு பிறப்பின் பிரக்ஞையோடே மற்றவர்களை சிறிது இளக்காரத்தோடுதான் எதையும் பேசுவாள். இஜெமின் சங்கடம் வெளிப்படையாகத் தெரிந்ததனால், “எதுவும் பிரச்னையா?” என்று கேட்டாள்.

இஜெம் இல்லை என்று தலையை ஆட்டினாலும், இருப்பதாகவே பட்டது. டிலைலாவால் உள்ளே நடக்கும் கொண்டாட்டங்களைத் தவறவிட்டுவிட்டு இவளிடம் விசாரிக்கவா என்ற தயக்கத்துடன் நின்றிருந்தாள். டிலைலாவின் அசைவுகள், தோள்களின் கோணம், தலையின் ஒருபக்க சாய்வு, கை முட்டியை மடக்கியிருந்த தன்மை எல்லாம் சேர்ந்து இஜெமிற்கு பேருந்தில் பார்த்த ஓசு பெண்ணை நினைவுபடுத்தியது. இது அவளது முகத்தில் பிரதிபலித்திருக்க வேண்டும். சட்டென்று டிலைலா ஒருவித பதற்றத்துடன் தன் கைகளை உயர்த்தி, தலையில் வலது நெற்றியில் முடியை சரிசெய்துகொண்டாள். அந்த இடத்தில்தான் வழக்கமாக ஓசு மக்களை அடையாளம் காணும் வண்ணம், கத்தியால் கீறிய ஒரு சிறு வடு, அரசு செவிலியர்களால் ஏற்படுத்தப்படும். குழந்தை ஆறு மாதமாக இருப்பதிலிருந்து தொடங்கி, ஒவ்வொரு வருடமும் பதினெட்டு வயது வரை இது
தொடரும். இஜெமிற்கு ஓசுவைப் பற்றி இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது.

புத்திசாதுர்யம் மிக்க, தைரியம் நிறைந்த, அடர்த்தியான முடிகொண்ட ஒரு ஓசுப் பெண்ணால், பல தலைமுறைகளாகத் தன் குடும்பத்தில் உள்ள ஒரு வேலைபாடு நிறைந்த பெட்டியைத் தூக்கிக்கொண்டு, யாரும் அறியாமல் இரவில் கிளம்பி வெகுதூரம் சென்றடைந்துவிட முடியும் என்று டிலைலாவைப் பார்த்து நினைத்தாள். அந்த ஓசுப் பெண்ணால் தான் இதுவரை சென்றேயிராத தூரம் பயணித்து தன்னை யாரென்று அடையாளம் காணமுடியாத வேறு ஊருக்கேகூட சென்றுவிட முடியும். அவளின் நுணுக்கமான அறிவின் மூலம் இதுவரை தன்னை ஏவிய மக்களுடன், எந்த வித்தியாசமும் வெளியில் தெரியாமல் கலந்துவிட முடியும்.
டிலைலாவின் பதற்றம் மாறி, இப்போது ஒரு செயற்கையான புன்னகை உதட்டில் ஒட்டிக்கொண்டு, “நீ நன்றாக ஓய்வெடு” என்று இஜெமின் தோளில் தட்டிவிட்டு அறையினுள் மறைந்துவிட்டாள்.

மறுநாள் காலை நேரம் கழிந்து. ஒடினாகாவின் வீட்டிலிருந்து செல்பவர்களின் சத்தத்தால்தான் இஜெம் கண் விழித்தாள். எட்டு மணிவரை பொறுத்திருந்து, பின் ஒடினாகாவைக் காணச் சென்றாள். ஒடினாகாவின் வீட்டுக் கதவு தோழிகளுக்காக எப்போதுமே திறந்திருக்கும். அவள் தன் கண்களால் பார்க்கவில்லை என்றால், இதை நம்பியிருக்க மாட்டாள். முன்றைய இரவு கேளிக்கைகளின் சுவடு துளிகூட இல்லாமல் வீடு அவ்வளவு சுத்தமாக சுத்தம் செய்யப்பட்டிருந்தது. மூன்று மணி நேரத்துக்குள் ஒருவரோ அல்லது பல பேரோ, ஐம்பது பேரோ விட்டுச்சென்ற குப்பையும், இரண்டு சிந்திய மதுகோப்பைகளும், குள்ளமான ஒருவன் மேசையில்
ஏறிநின்று ஒரு உரையாற்ற முயன்றதும் அவளுக்கு நினைவிருந்தது.

சுத்தம் செய்து உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருத்தியான ஒடினாகாவின் ரசனைக்கேற்ப நவீனமாக ஒழுங்குப்படித்தி இருந்தது. ஆனால், அவளும் தன்னைப்போல இடிந்த சிதைவுகளை சேகரிப்பவள் என்றானே ஒருவன். எதற்காக ஒடினாகாவைப் பார்க்க வந்திருக்கிறாள் என்று தெரியவில்லை. கண்டிப்பாக நேற்று வந்திருந்த விருந்தினர்களில் ஒருவன், தன்னை அவமானப்படுத்திவிட்டான் என்று சிறுபிள்ளைத்தனமாக சொல்லமுடியாது. ஆனால், அவள் காயப்பட்டுதானிருந்தாள். தேற்றுதல் தேவைப்பட்டது.

ஒடினாகா இன்னும் தன் படுக்கையில், இடுப்பு வரை போர்வையால் மூடி படுத்திருந்தாள்.

“நேற்று மகிழ்ந்திருந்தாயா இஜெம்? நீ அஜுவுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவன் உடனே கிளம்பிவிட்டான் தெரியுமா?” என்றாள் தன் புருவங்களை ஏற்றியபடி.
இப்போது இஜெமால் அவனைக் குற்றம் சாட்ட முடியாது. “அது சுவாரஸ்யமான உரையாடல்” என்றே சொல்ல முடிந்தது.

“சுவாரஸ்யமா? அவன் சிக்கலானவன். எனக்குத் தெரியும். அவன் சொல்வதை நீ மனதில் வைத்துக்கொள்ளாதே” என்றாள் இன்டர்காமை அழுத்தியபடி.

காலை உணவைப் பற்றி தெரிவித்துவிட்டு, முந்திய இரவை அசைபோட தொடங்கினாள்.
பத்து நிமிடங்கள் போனதும் மறுபடி இன்டர்காமை அழுத்தி, “என் காலை உணவு என்னானது?” என்றாள் அதிகாரத்துடன்.

இஜெமின் முகத்தை பார்த்துவிட்டு கண்களை சுழற்றி, “நீயும் ஏதாவது சொல்லாதே இப்போது.”
இஜெம் அந்த ஓசு பெண்களுக்காகப் பேச நினைத்தாள். ஆனால், அது வசீகரமில்லாத புரட்சிப் பேச்சாக இருந்ததாலும், மேலும் தனக்காகவே பேசுவது போல இருந்ததாலும் மௌனமானாள்.

“நீயும் டொரீனைப் போலவே இருக்கிறாய். நான் பெருங்கூட்டத்தை வேலைக்கு வைத்திருக்கிறேன். அவர்களுக்கென்று ஒரு பணி இருக்கிறது . அதை அவர்கள் சரியாக செய்யவேண்டியது அவசியம் இல்லையா?” என்று டிவியை முடுக்கினாள். ஒரு விளம்பரப் படம் ஓடிக்கொண்டிருந்தது. துணிகளுக்கானப் பொருட்காட்சி பற்றியது. குழந்தைகள் நெசவின் நுணுக்கங்களைப் பார்த்து அறிய ஓர் ஏற்பாடு. இஜெமிற்கு சிறுவயதில் காண்பிக்கபட்ட, ஒரு விளக்கப் படம் நினைவுக்கு வந்தது.

அதில் உடைமையாக்கப்படாதப் பெண்கள் வாழும் அவலநிலையும், அளவுச் சாப்பாடும், பாதுகாப்பு என்ற பெயரில் விடுதி காப்பாளர்களால் அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறையும் நினைவிலிருந்தது. இந்த மாதிரியான ஒரு இடத்துக்குப் போகும் நிலைமை வரக்கூடாது என்ற அச்சத்தை விதைப்பதற்காகவே காட்டப்பட்டது. அந்த நோக்கம் சரியாக நிறைவேறி இருந்தது.

நிகழ்ச்சி தொடங்கியதும் ஒடினாகா சத்தத்தை அதிகப்படுத்தினாள். இவள் கிளம்ப வேண்டிய நேரம் என்று மிகத் துல்லியமாகத் தெரிந்தது.

முதன்முறை துணி உடுத்தி வெளியில் செல்லும் இடம், டோரீனின் புத்தகக் கடையாகத்தான் இருக்க வேண்டும் என்று இஜெம் முன்பே முடிவு செய்திருந்தாள். உள்ளே கனன்றுக்கொண்டிருக்கும் காயத்தை மட்டுப்படுத்த, என்ன சொல்லவேண்டும் என்று டோரீனுக்கு மட்டும்தான் தெரியும். டிலைலாவைப் பற்றின அவளது சத்தேகங்களைத் தீர்க்கும் வார்த்தைகள்கூட டோரீனிடம் இருக்கக்கூடும். நிறையமுறை தன் புத்தகக் கடைக்கு இஜெமை அழைத்திருக்கிறாள், “என்றென்றைக்கும் உள்ளேயே அடைந்து கிடக்க முடியாது. நான் என்ன உருவாக்கியிருக்கிறேன் என்று வந்து பார். உடைமையாக்கப்படாதப் பெண் சுயமாக என்ன செய்யமுடியும் என்று பார்.”

ஒடினாகாவின் பாதுகாப்பில் அவளது வீட்டில் தன் துணி அணிந்திருப்பது வேறு. கண்ணாடி முன் வெகுநேரம் நின்றிருந்தாள். தன் மிருதுவான வயிற்றையும், தான் எப்போதுமே பெருமைக்கொள்ளும் தன் உறுதியான கால்களையும், தன் தொங்கிய மார்புகளையும் பார்த்தாள். துணியை எடுத்து தன் உடம்பின் முன்வைத்துப் பார்த்தாள். மேலும் நன்றாகத்தான் இருந்தது. மிக எளிமையான முறையில், அவள் பார்த்த மேல்தட்டு பெண்களின் கட்டு போல, இடைவாருடன் அதை உடுத்திக்கொண்டாள்.

அவளின் வாழ்வில் முதன்முறையாக யாரும் அவளை முறைத்து பார்க்கவில்லை. நடைபாதையில் ஓர் ஆணை முகத்துக்கு நேராகப் பார்க்கும் தைரியம் வந்தபோது, அவன் அவ்வளவு மரியாதையாகத் தலையைத் தாழ்த்திக்கொண்டான். அதிர்ச்சியில் தடுக்கி விழப்போனாள். எல்லோரும் – ஆண்கள், பெண்கள்- அவளை வேறு மாதிரி எதிர்கொண்டார்கள். பெரும்பாலும் மிகவும் சாதாரணமாக அவளை கடந்து சென்றனர். அவளை கண்ணுக்கு நேராகப் பார்க்க நேர்ந்தபோது, நட்பாகவும் மரியாதையாகவும் எதிர்கொண்டனர்.

பாதுகாப்பின்மையால் வளைந்திருந்த அவளது தோள்களும் முதுகும், அவைகளுக்கு இயல்பாயிருக்க அனுமதி அளிக்கப்பட்டது போல தானாகவே நேரானது. நடையில் ஒரு துள்ளல் ஒட்டிக்கொண்டது. அவளுடன் சேர்ந்து அவளது உடம்பின் ஒவ்வொரு பாகமும், துணியின் பாதுகாப்புக்குள்ளே துள்ளியது. துணியால் மூடப்பட்டு, இதுவரை அறிந்திராத விடுபடலை உணர்ந்தாள்.

ஒரு பழக்கப்பட்ட முகத்தைப் பார்த்ததும், யோசிக்காமலே சிரித்து கையசைத்துவிட்டாள். பின்புதான் தன் நட்பை துறந்த சிதின்மாவின் முகம் என்று உணர்ந்தாள். சிறு தயக்கத்துடன் சிதின்மாவும் கையசைத்தாள். பின் இவளை நோக்கி சிரித்த முகத்துடன் வந்தாள்.

“நீ மூடியிருக்கிறாய்! உடைமையாக்கப்பட்டுவிட்டாய்! திரும்பு, நான் பார்க்க. எவ்வளவு அழகான மனைவித் துணி. என்னை ஏன் உடைமை விழாவுக்கு அழைக்கவில்லை?”
அவளுடைய வார்த்தைகள் நட்பாக இருந்தாலும், தொனி வலிந்து திணிக்கப்பட்டதாக இருந்தது. இவர்களின் முந்தைய உரையாடல் நினைவைவிட்டு நீங்கவில்லை என்று உணர்த்தும் வண்ணம் இருந்தது.

“உனக்கு அழைப்பு அனுப்புமாறு எந்த விழாவும் நடக்கவில்லை.”
சிதின்மாவின் சிரிப்பு மறைந்தது. “நான் உன்னிடம் மிக மோசமாக நடந்துகொண்டேன் . அதற்காகப் பொய் சொல்லாதே. என்னை மன்னித்துவிடு.”

“உண்மையிலேயே எதுவும் நடக்கவில்லை” என்றாள் இஜெம். சிதின்மாவின் அருகில் நகர்ந்து, “இது தன் துணி. நானே என்னை மூடிக்கொண்டேன்.”

சிதின்மாவுக்கு இது புரிய சிறிது நேரம் பிடித்தது. கோபத்தில் விரைப்பானாள். எஞ்சியிருந்த நட்பான நேசத்தைத் திரும்பெறுவது போல போலிச் சிரிப்பும் உடல்மொழியும் செயற்கை மரியாதையுடன், “உன் கணவருடன் நீ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாய் என்று நம்புகிறேன்.”

“சிதின்மா, எனக்கு எந்தக் கணவனும் இல்லை. நானே என்னை மூடிக்கொண்டுள்ளேன்.”
சிதின்மாவின் முகம் கோபத்தில் கொடூரமானது. இஜெம் மிரண்டு பின் நகர்ந்து, வழியில் போகிறவன் மீது மோதிவிட்டாள். அவன் வருத்தம் தெரிவித்து கடந்துபோனான்.

“ஓ.. அப்படியா? தன் துணியா? நல்ல குடும்பத்திலிருந்து வந்தவளா இப்படி செய்கிறாய்? என்னால் நம்பமுடியவில்லை.” – இஜெம்மைப் போல சிதின்மா தன் குரலை தாழ்த்தவில்லை. சுற்றி இருந்தவர்கள் திடுக்கிட்டுப் பார்த்தனர். இஜெம் அவளைச் சாந்தப்படுத்த முயன்றாள்.

“ஓ… இப்போது உனக்கு வெட்கமாக இருக்கிறதா? நீ செய்தது பெருமைப்படும் வேலை இல்லைதானே?”
இஜெம் அந்த இடத்தைவிட்டு நகரும் எண்ணத்தில் திரும்பினாள். ஆனால், சிதின்மா அவளுடைய துணியைப் பிடித்து இழுத்து திருப்பினாள்.

“மூடியிருக்கிறோம் என்று நீதான் நினைத்துககொண்டிருக்கிறாய். ஆனால், நீ இன்னும் நிர்வாணமாய்தான் இருக்கிறாய். எவ்வளவு விலை உயர்வான தன் துணியாலும் அதை மாற்றமுடியாது.”

இது காயப்படுத்துவதற்கென்றே சொல்லப்பட்ட மிகக் கடுமையான விஷ வார்த்தைகள். இஜெம் தன் துணியை அவள் கைகளினின்று விடுவிக்க முயன்று இழுத்தாள். ஆனால், சிதின்மா விடவில்லை.
“நீ ஏதாவதொன்றை இழக்காமல் உன்னை மூடிக்கொள்ள முடியாது. அது நியாயமும் இல்லை. நான் உனக்கு எவ்வளவு செய்திருக்கிறேன். அதற்கு பிறகும் இது நியாயமில்லை” என்றாள், அழுகையாலும் கோபத்தாலும் உடைந்த குரலில்.

Lesly Nneka

சிதின்மா இப்போது வெளிப்படையாக அழத் தொடங்கினாள். இஜெம் அவளுடைய பிடியினின்று தன்னை விடுவித்து கண்ணீரோடு நகர்ந்தாள்.

ஒடினாகாவின் பகட்டான வீட்டில், இப்படி விதிகளை மதியாதிருப்பது சாதாரணமானதாக, சுலபமானதாக இருந்தது. இரவுதோறும் கண்ணாடிகளின் கிணுகிணுக்கும் ஒலியில் எல்லாமே லேசானதாக இருந்தது. இஜெம் இந்தத் துணி அணிவதற்கு சில பெண்கள் எதையெல்லாம் விட்டுத் தந்திருக்கிறார்கள்? இந்தத் துணியை நெய்தவள் தன் விருப்பத்துடன்தான் அதைச் செய்தாளா? வடு தரித்த ஓசுப் பெண்ணா? உடைமையாக்கப்படும் வயதைக் கடந்து நாட்டுக்குப் பாரமாக உணரவைக்கப்பட்ட பெண்ணா? இந்தத் துணி முட்களால் நெய்யப்பட்டது போல அவளை உறுத்தியது.

ஒடினாகாவின் கட்டத்தின் பாதுகாப்புக்கு இஜெம் விரைந்தாள். தீவிர பதற்றத்தால் தன் வீட்டின் கதவுகளைத் தடுமாற்றத்துடன் திறந்தாள். உள்ளே இளைத்தபடி சுவரில் சாய்ந்து, பின் அப்படியே வழுக்கி தரையில் மண்டியிட்டாள். யாரோ இருப்பது போல உணர்ந்து திரும்பினாள். ஒரு ஓசுப் பெண் அறையின் மூலையில் நின்றிருந்தாள். அவள் தோல், சுவரின் நிறம் ஒத்த அடர்த்தியற்ற ப்ரௌனில் இருந்தது. நெற்றியில் கீறிய வடு, மறுபடி மறுபடி பொருக்கு தட்டி, கட்டியைப் போல பெருத்து அருவருப்பாக இருந்தது. கிட்டதட்ட இஜெமின் வயதிருக்கும். அவளுடைய கையில் துடைக்க ஒரு துணியும், அதற்குப் பயன்படுத்தும் கரைசலும் இருந்தது. நிர்வாணமாக நின்றாள்.

அவளுடைய கூன் விழுந்த முதுகிலிருந்தும், கண்களின் எச்சரிக்கையிலிருந்தும் அவளுக்குப் பிடிக்காத நிர்வாணம் என்று தெளிவாகத் தெரிந்தது. இதே பார்வையை இஜெம் சுமந்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? இதே தீரா அவமானத்தில் தன்னை மூழ்கடித்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும்?

அவள் தந்தைத் துணியை இழந்த அன்று, அப்பாவிடம் அழுது கெஞ்சினாள். அவர் அதை உருவியபோது போராடிச் சண்டையிட்டாள். அவர் அவளுடைய கைகளில் எஞ்சியிருந்த கிழந்த துண்டைக்கூட விட்டுவைக்காமல், அவளுடைய விரல்களைப் பிரித்து பிடுங்கினார். தன் கைகளாலும் கால்களாலும் தன்னை மூடியபடி தனக்குள்ளேயே சுருண்டு குறுகிப்போனாள். அதன்பிறகான ஒவ்வொரு நாளும் இந்தப் பீதியுடன்தான் போராடிக்கொண்டிருக்கிறாள். வெடித்து வெளிவர முடியாத தன் வயிற்றின் அடி ஆழத்துக்கு அதை முழுங்கியிருந்தாள்.

ஒசு பெண் இவளுக்கு முகமண் கூறிவிட்டு, சுவரில் இருந்த இடைப்பலகை கதவு வழி மறைந்தாள். சத்தமில்லாமல் கதவு மூடிக்கொண்டது. இஜெம் அந்தச் சுவரின் அருகில் சென்றபோது, அங்கு வழி இருப்பதற்கான அடையாளமே இல்லை. தன் வலிமை எல்லாம் பிரயோகித்து, விரல்களை மடக்கி, தன் நகங்கள் உடைய, அந்தக் கதவை திறக்க முயன்றாள். இஜெமால் தன் பக்கத்தின் வழியைக் கண்டுபிடிக்க இயலவில்லை. ஒரு வரவேற்புக்கு ஏங்கி அதை ஓங்கி தட்டியபடி, கதவைத் திறக்கும்படி சத்தமாக அழைக்கத் தொடங்கினாள்.

ஆசிரியர் குறிப்பு :

லெஸ்லி நெக்கா அரிமா சிறுகதை உலகில் ‘வெகு காலம்  நிலைத்திருக்கப் போகும் புதுக் குரல்’ என்று பாராட்டப்பட்ட  நைஜிரிய எழுத்தாளர் . 1983 -ல் லண்டனில் பிறந்த அரிமா தன் குழந்தைப் பருவத்தை நைஜிரியாவிலும் லண்டனிலும், தன் பதின் பருவங்களை அமெரிக்காவிலும்  கழித்தவர்.  2015 -ல் Light என்கிற சிறுகதைக்காக காமன் வெல்த் பரிசை வென்றார். கடந்த வருடம் (2019) இதே பரிசை மேலே  மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்தக் கதைக்காக வென்றுள்ளார்.

35 வயதுக்குள் உள்ள சிறந்த 5 எழுத்தாளர்களுள் ஒருவராக national book foundation ஆல் அடையாளம் காட்டப்பட்டவர். இவருடைய முதல் தொகுப்பு ‘ What it means when a man falls from the sky ‘ பல பரிசுகளை வென்று பரவலாகப் பேசப்பட்டது.  பல படிநிலைகளும் நுட்பமும்  நிறைந்த  பெண் நட்புகளைப் பற்றியும், புலம் பெயர்ந்த பெண் படும் கூடுதல் பாடுகளைப்பற்றியும் , அம்மாவிற்கும் மகளுக்குமான சிக்கலான உறவுகள் பற்றியும், கடினமான சூழல்களைத் தங்கள் மனத்தின்மையால் கடக்கும் பெண்களுமே பெரும்பாலும் இவருடைய கதைகளின் பேசுபொருட்களாகின்றனர். இப்போது லாஸ் வேகாஸ், அமெரிக்காவில் வசித்து வருகிறார். 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button