நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க் : 3 – வசந்தகாலமும் வறண்ட மனங்களும் – சுமாசினி முத்துசாமி
தொடர்கள் | வாசகசாலை

இயற்கை மனிதனை தினம் தினம் சோதிப்பதற்குக் கோடையைத் தேர்வு செய்ததாய் நான் சென்னையில் இருக்கும் போது நினைத்துக் கொள்வேன். அதை விடப் பெருஞ்சோதனை கடுங்குளிர் என்பதை உணர குளிர்காலம் ஆரம்பித்த முதல் வாரமே போதுமானதாக இருந்தது. குளிர் காலம், நரம்புகளையும் உலர்த்தி எலும்பையும் உறைய வைத்துவிடும். ஒவ்வொரு குளிர் காலமும் சொந்த மண்ணை விட்டு இங்கு வந்ததை உணர்த்துவதற்கான சாபமாய் எனக்குத் தோன்றும். இந்தக் குளிரின் தன்மையை, கால மாற்ற நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தழுவ முயன்று கொண்டே இருக்கிறேன். தகவமைப்பு அம்சம் (Adapting feature) மரபணுக்களால் நிர்ணயிக்கப்படுகிறதென்று ஒரு குறிப்பு வாசித்தேன். இடப்பெயர்வுக்குப் பிறகு இயற்கை சூழலில் ஏற்படும் மாற்றங்களை, சூழ்நிலைகளைத் தாங்கிக்கொள்ள தழுவல் (adaptation) தேவை என்பது அறிவியல். புத்தி சொல்வதை எப்பொழுதும் மனம் ஒத்துக்கொள்வதில்லையே!
அலஷ்கன் மரத் தவளை (Alaskan wood frog) என்று ஒரு தவளை இனம். இத்தவளை குளிர் காலத்தில் அப்படியே உறைந்து போய்விடும். உறைந்து போயும் உயிர் வாழும் அளவிற்கு அதன் உடலியல் கூறுகளில் மாற்றங்கள் உள்ளன. பின்னர் வசந்த காலம் வந்த பின் தன் உறைந்து போன உடற்கூற்றை உருக்கி பழைய ஒழுங்குக்குத் திரும்பிவிடும். குளிர் காலத்தில் புல், பூச்சி, பல மரங்கள் எல்லாம் தன் உயிரைத் தொலைத்துவிட்டதாய் பார்க்கும் நமக்குத் தோன்றும். ஆனால் வசந்தகாலம் ஆரம்பித்தவுடன் மொத்த மனித இனத்திற்கும் நம்பிக்கையின் அமிர்தமாய், தரை எங்கும் சின்ன சின்னப் புற்களும் அதன் நடுவே மிகச் சின்னதாய் மஞ்சள் ஊதா வெள்ளை பூக்களும் விரிந்து விடும். அவற்றைப் பார்க்கும் பொழுது மனதில் ஒரு துள்ளல் வரும் பாருங்கள்… அந்தத் துள்ளலுக்காக (மட்டும்!) மீண்டும் குளிர் காலம் என்னும் சாபத்தை ஏற்றுக் கொள்ள மனம் தயாராகும். அந்த சின்ன புல்லையும் அதிலுள்ள அந்த சின்னப் பூவையும் காணும் பொழுது உலகத்தின் இறைத்தன்மையின் மொத்த கருணையும் தெரியும். இந்த புல் தரையில் உட்கார்ந்து அந்த சின்னப் பூக்களிடம் கதை பேசாமல் எங்கே இந்த மக்கள் இத்தனை அவசரமாய் ஓடுகிறார்கள் என்பது இன்னும் என் அறியாமையாய் இருப்பதில் பெருமகிழ்ச்சி எனக்கு!
இப்படியான ஒரு குளிர் காலம் முடிந்து வசந்தகால துவக்கத்தில் ஒரு வாரக்கடைசி நாளில்தான் நான் அந்தத் தோழியைப் பார்த்தேன். நவ நாகரீக மங்கை. எட்டு வருடங்கள் பூனேவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு கணவனுக்கு இங்கு வேலை மாற்றம் வந்ததன் நிமித்தம் இங்கு குடியேறி மூன்று வருடங்கள் கழிந்து விட்டன. எப்பொழுதும் போல் குழந்தைகள், சமையல், எந்தக் கடையில் எந்தத் தள்ளுபடித் திட்டம்* என்பது போன்ற கேள்விகளாய் இல்லாமல் இருவருக்கும் தத்துவம், வரலாறு முதல் தற்போதைய அரசியல் வரை பேச எவ்வளவோ இருந்தது. எவரின் மீதும் குற்றம் சுமத்தாத எந்த குற்றவுணர்ச்சியையும் தூண்டாத நல்ல ஒரு உரையாடல் என்று அந்த உரையாடலின் நிறைவில் அந்தத் தோழி கூறினார். ஆமாம் என்று என் மனதும் குதூகலித்தது.
*(டன்கின்க் டோனட்ஸ் (Dunkin’ Donuts) அமெரிக்காவின் விருப்பமான டோனட்ஸ் மற்றும் காபி விற்கும் கடை. அதன் டேக் லைன் (tagline) “அமெரிக்கா ரன்ஸ் ஆன் டன்கின்க்ஸ் (America Runs on Dunkin’)”- எனக்கென்னமோ அமெரிக்காவின் வியாபார நுணுக்கங்களைக் காணும் பொழுது ,”அமெரிக்கா ரன்ஸ் ஆன் டிஸ்கோவ்ண்ட்ஸ் (America Runs on Discounts!)” என்பது இந்த நாட்டின் பொதுவான டேக் லைன் என்று தோன்றும். கொத்தமல்லியில் ஆரம்பித்து பெரிய டிசைனர் பிராண்டுகள் வரை ஒவ்வொரு கடையும் விதவிதமாக, ஒவ்வொரு விடுமுறை வாரயிறுதி காலங்களிலும் அத்தனை தள்ளுபடி விளம்பரங்களை வெளியிடுவார்கள். நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி எல்லாம் இங்க வந்து இன்னும் இந்த விஷயத்தில் கத்துக்க நிறைய இருக்கிறது. போன மாதம் இவ்ளோ விலை அதிகம் கொடுத்து வாங்கிவிட்டேனே என்று நொந்துபோனது போல் போன வாரம் தள்ளுபடியே இல்லாமல் இதை விட ரெண்டு டாலர் குறைவாகத்தானே வந்தது என்று விழித்ததும் உண்டு!!)
வசந்தகால சூரிய வெப்பம் கொடுத்த இதத்தோடு, நட்பின் வாஞ்சையும் மனதோடு இயல்பாய் சேர்ந்துவிட்டது. ஆனால் ஏதேதோ பேசினாலும், மையிட்டு இல்லை காஜலிட்டு, மஸ்க்காரா போட்டு, இமைகளில் கலர் சாயமும் பூசியிருந்த அந்தக் கண்களில் ஏதோ ஒரு வெறுமை மட்டுமே தெரிந்தது. இங்கு கல்யாணம் ஆகிவிட்டதா? குழந்தை உள்ளதா? என்ன படித்து இருக்கிறீர்கள்? போன்ற கேள்விகள் எல்லாம் ‘பர்சனல்’ கேள்விகள். ஆனால் நம் அங்காளி பங்காளிகள் பலர் இந்த கேள்விகளைக் கேட்டு “நீ இத தெரிஞ்சி என்ன ப்ளூட்டோவிற்கு ராக்கெட் விட போறியா?” போன்ற பல நாகரிகமான பதில்களை ரிபீட் வாங்குவதைப் பார்க்கலாம். ஆனால் இது போன்ற எந்த கேள்வியும் இல்லாமல் இருவருக்கும் பதில்கள் தெரிந்தது போலவே இருந்தது.
ஒருமுறை கட்டி தழுவி, எல்லாம் சரியாகிவிடும் என்று உள்ளத்தின் அடி ஆழத்தோடு ஒரே வார்த்தை மட்டுமே சொல்ல எனக்குத் தோன்றியது. ஆனால் முதல் சந்திப்பின் தயக்கம் ஹாய் , பை (hai ,bye ) என்று நிற்க வைத்துவிட்டது. சிறந்தது என்ற ஒன்றில் கலந்துவிடத் துடித்து லட்சம், கோடி மக்கள் இங்கே வந்து சிலாகிக்கின்றனர். அதில் கோடி உணர்வுப் போராட்டங்கள் விரவியும் உள்ளது. அன்பையும் காதலையும் உணர்த்த மொழி தடையாயில்லை. ஆனால் மனப் போராட்டங்களைப் பேசத் தாய்மொழி தேவை. அதற்காகவே தாய்மொழி உறவுகளைத் தேடி, பின்னர் அவர்களோடு ஒரு மேம்போக்கான உரையாடலில் வேலை, ஸ்டாக்ஸ், வெள்ளை மாளிகை, கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் , டெஸ்லா (Tesla) கார் பற்றி மட்டும் பேசி தளர்ந்து போன அனுபவங்கள் ஒவ்வொரு புலம்பெயர் மனதிற்குள்ளும் உண்டு.
இப்படியாகத்தான் எங்கள் நட்பும் ஆரம்பித்தது. பின்னர் பல சந்திப்புகளுக்குப் பின் அத்தம்பதியரின் இயல்பு புரிந்தது. வளங்களின் பிரமிப்பைக் கண்டு ஓடிக்கொண்டே இருக்கும் கணவன், வசந்த காலத்தின் சிறு மஞ்சள் பூவின் காதுக்குள் இருக்கும் செய்தியைக் கேட்டு கணவனிடமோ, தோழியிடமோ யாரோ ஒரு ஒத்த உணர்விடமோ கூற துடிக்கும் மனைவி. ஒரு நாள் குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பும் போது வீங்கிச் சிவந்த கண்கள் எங்களிருவருக்குள் இருந்த அந்நியத்தன்மையை உடைத்தது. நல்ல கணவன்தான். குடித்து அடிப்பவர் எல்லாம் இல்லை, நாற்பதைத் தொட்டுக் கொண்டிருக்கும் கணவர். இருந்தும் இந்த 90’ஸ் கிட்ஸ் கணவர்கள் போல் பெயர் சொல்லி அழைக்கலாம், ஒரு நாள் சமைக்கக் கஷ்டம் என்றால் வெளியே உணவு வாங்கச் சொல்லலாம், மேலோட்டமாக ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், அவரின் உலகத்தில் அவர் மட்டுமே உள்ளார். அதன் நடுவே மனைவி என்பவரும் இருக்கிறார். காலை எட்டு மணிக்கு வேலைக்குச் சென்றால் மாலை 6 மணிக்கு திரும்பி வருவார். பின்னர் உடற்பயிற்சி கூடம் அல்லது டென்னிஸ் மைதானம், அவரின் சினிமாக்கள், அவரின் ரசனைகள். மனைவிக்கோ சமையல், பள்ளி, ஒன்றின் பின் ஒன்றென வித விதமான கூடுதல் வகுப்புகள்* விட்டுக் கூப்பிட என்று காலை முதல் இரவு வரை நேர அட்டவணை உள்ளது.
*(டென்னிஸ் கால்பந்து நீச்சல் போன்ற ஏதாவது ஒரு விளையாட்டு, சிங்கப்பூர் மேத்ஸ் / ரஷ்யன் மேத்ஸ் போன்ற கணித வகுப்புகள், தனி ஆங்கிலம் பயிற்சி, தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற சொந்த மொழி, இசை சம்பந்தப்பட்டு வாய்பாட்டு கிட்டார் டிரம்ஸ் பியானோ போன்ற ஏதோ ஒன்று, சிலர் நாட்டியம், சிலர் ஓவியம், கராத்தே டேக் வாண்டோ போன்ற தற்காப்புக் கலைகள், இதுபோக சதுரங்கம், பத்து வயதிலேயே பைதான் கோடிங் (python coding) வகுப்புகள் – வெகு சிலர் இதோடு ஸ்பெல் பீ (Spell Bee) போன்ற போட்டி பயிற்சி வகுப்புகளுக்கும் படையெடுப்பர். இங்கு வளரும் குழந்தைகள் பலர் சூப்பர் டூப்பர் ஹீரோக்களாக வளர்க்கப்பட எத்தனிக்கப்படுகிறார்கள். பத்து வயதில் ஒரு பீத்தோவன் இருந்தார் என்பதற்காய் பல பத்து வயது குழந்தைகள் பாவ மூட்டை சுமக்கிறார்கள். நடுநிலைப்பள்ளி வரை பள்ளி வீட்டுப் பாட சுமை குறைவு என்பது ஒரு ஆறுதல் இக்குழந்தைகளுக்கு).
கணவன் மற்றும் குழந்தைகளின் அட்டவணைக்குள் பொருந்திப்போகவே மனைவி என்னும் மனுஷிகள். இது எல்லா இடங்களிலும் இருப்பதுதானே என்று உங்களுக்குத் தோன்றலாம். சுற்றிலும் வேறு மொழி, வேறு நிலம், வெவ்வேறு கருத்துக்கள், இயந்திரத்தனமாகச் சிரித்து ‘ஹொவ் ஆர் யூ’ என்று கடந்து விட மட்டுமே பழக்கப்படுத்திக் கொள்ள நிர்பந்திக்கும் சமூகம். யோசித்துப் பாருங்கள், காலை முதல் இரவு வரை இந்த தோழிகளுக்குப் பேசச் சிரிக்க யார் இருக்கிறார்கள். அனுபவங்களின் தொகுப்பை அளவளாவி, சின்னச் சின்ன உரையாடல்களினால் நிமிடங்களை நிரப்பிக் கொண்டே ஒரு ராஜ வாழ்க்கையைச் சிறு கொட்டிலில் வாழ்ந்து விட முடியும். ஆனால் 3 அடுக்குகளும் 15 அறைகளும் கொண்ட வீட்டில் உள்ளத்தின் ஒருமையோடு உரையாட ஒரு உயிர் இல்லாது மன அழுத்ததோடு புழங்கும் வலி நிறைந்த நிஜங்கள், உயிர் அடுக்குகளை அரித்து விடக் கூடியது.
இயல்பிலேயே கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வோடு உள்ள தோழிக்கோ, பேசவோ, உணர்வோடு ஒத்த மாதிரி உரையாட ஒருவரும் இல்லாமல் மூன்று வருடங்களில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இரவு பகல் என்று எது நடந்தாலும், நடக்காமல் போனாலும், சொன்னாலும் சொல்லாதினாலும் அழுகை மட்டும் அவரின் இயல்பாய் ஆகிவிட்டது. இன்னும் சில மாதங்களில், மற்றொரு தோழி வீட்டில் எந்த சின்ன பிரச்சனைக்கும் எல்லாவற்றையும் உடைக்க ஆரம்பித்தது தெரிந்தது. மற்றும் ஒருவர் குடியின் கோரத்தில் மாட்டிக்கொண்டார் இன்னும் அப்படித்தான் இருக்கிறார். இந்த மன அழுத்தம் சங்கிலித் தொடர் போல் இவர்களின் ஹாய் , ஹலோ என்று பேசும் இயல்பையும் கெடுக்கின்றது. கொஞ்சம் மிச்சம் இருந்த சமூக பழக்கமும் இந்த ஹாய், ஹலோ இல்லாவிட்டால் அதோடு கழிந்து விடும். மன அழுத்தத்தின் ஆழம் இவர்களை ஏதோ முறையில் தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் அளவுக்கு அதிகமாகிவிடுவதையும் கொஞ்சம் மனக்கண் கொண்டு கண்டால் தெளிவாகக் காணலாம்.
நல்லவேளையாக என் தோழிக்கு அவள் ஒத்துக்கொள்ளும் அளவுக்கு நல்ல கணவன். இன்னும் பலருக்கு, அமெரிக்கா மட்டுமே உச்சம், ‘இந்த உன்மத்த அமெரிக்க நிலையை நீ அடைவதற்கு நான்தான் காரணம்’ என்று கணவனே செய்யும் ஏளனம், சர்வ அதிகாரம், சொந்தங்களின் ஆக்டோபஸ் கரங்கள் கண்டம் தாண்டியும் கழுத்தை நெறிக்கும் சூழல் என்று சிக்கல்களின் முடிச்சின் எண்ணிக்கையும் விசையும் மிக அதிகம். இதைப்போல் ஒரு சூழ்நிலையில், இதற்கு மேல் முடியாது என்று மிகுந்த ஆக்கிரோஷம் கொண்டு பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு ஒரு தோழி ஏர்போர்ட் சென்று விட்டார். அடுத்து எப்படி டிக்கெட் எடுக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் அங்கிருந்து போனில் அழைத்து அழுக ஆரம்பித்து விட்டார். அவருக்கு அன்று டிக்கெட் எடுக்கும் வழிமுறை சொல்லும் ஒருவர் அல்ல, தன் மனக்குமுறல்களைக் கொட்ட தன் கணவன் முன்னால் மீண்டும் தன்னைக் கூட்டிச் சென்று தன் சார்பில் வாதங்களை முன் வைக்க ஒருவர்தான் தேவைப்பட்டார்.
விசாவின் சில முடிச்சுக்கள் தளர்ந்து, வேலைக்குச் செல்லும் உத்தரவு வந்து, பின் தனியாக வேலைக்கு சென்று, அங்கு மற்றுமோர் உலகத்தில் தன்னைத் தொலைக்க ஆரம்பித்த பின்தான் இவர்களில் பலர் மீண்டு வருவதைக் காணலாம். பெரும்பான்மையாகப் பலர் ஹச்1பி விசாவில் இங்கே வருகின்றனர். இவ்விசாவில் வருபவர்களின் துணை (கணவனோ, மனைவியோ) உடனே வேலை செய்ய முடியாது. ஒரு சில வருடங்கள் காத்திருந்து இன்னுமொரு ஒப்புதல் (i140) பெற்று, பின்னர் மீண்டும் ஒரு ஒப்புதல் (EAD) பெற்ற பின் தான் வேலையில் சேர முடியும். வேறு சில வழிமுறைகள் இருந்தாலும் இது பெரும்பான்மையானோர் கைக்கொள்ளும் வழி. அத்துணை ஒப்புதல்களும் பெறுவதற்கு ஆகும் காலம் ஊர்ந்து ஊர்ந்தே கடக்கும்!
இன்னுமொரு வசந்த கால நேரத்தில் அலுவலகத்தில் ஒருவர் (வெள்ளை அமெரிக்கர்) என்னிடம் ஒரு மீட்டிங் வேண்டும் என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். சில காரணிகளால் ஒரு வேலையில் உதறப்பட்டு, சில மாதங்கள் வேலை கிடைக்காமல் எங்கள் நிறுவனத்தில் இரண்டு அடுக்குகள் கீழிறங்கி, வாங்கின சம்பளத்தில் அறுபது சதவீதம் மட்டும் கிடைக்கும் நிலையில் வேலையில் சேர்ந்து இருந்தார். வேலையில் நல்ல சமர்த்து. உணவு இடைவேளையே எடுக்காமல் மிக மிக அதிகமாக அவர் வேலை பார்ப்பதாகவும், எவ்வளவு கூறினாலும் சிரித்துவிட்டுக் கடந்து விடுகிறார் என்றும் அவரின் நேரடி மேலாளர் என்னிடம் அவரைப் பற்றிக் கூறி இருக்கிறார். நிறைய டாட்டூ , தாடி, உடற்பயிற்சி செய்து முறுக்கிய உடல்வாகு என்று கொஞ்சம் பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இருப்பார். அவர் பேசக் கேட்டு இருந்ததிற்கான காரணம் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வழி முறையை அறிந்து கொள்ள. மீட்டிங்கிற்கு வந்தவுடன் பணியில் சேர்ந்ததற்கு மிகவும் மெலிந்து காண்பது போல் எனக்குத் தோன்றியது. பேச ஆரம்பித்து ஒரு ஐந்து நிமிடங்களுக்குள் அவர் கண்கள் குளமாக ஆரமிப்பித்துவிட்டது. அவர் அதை மறைப்பதற்கு அத்துணை முயற்சி செய்தார். மூன்று சிறு பிள்ளைகள் என்றும், அவர்களுக்குப் பகல் நேரப் பராமரிப்பு (day-care) செய்வதற்குக் கொடுக்கும் பணமே அவர் சம்பளத்தை விட அதிகமாக வருகிறது என்றும், இதனால் தன்னை விட அதிகம் சம்பளம் வாங்கும் மனைவி தன்னை வேலையை விட்டுவிட்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள சொல்வதாகவும் கூறினார். இந்த விஷயத்தில் மிகுந்த மன அழுத்தம் கொள்வதினால், உணவு அருந்தவே முடிவதில்லை என்றும் கூறினார். போற போக்கில், “உங்களுக்குப் புரியாது சுமா, இந்திய மனைவிகள் பொறுமையானவர்கள். ஆனால் இங்கே கணவன்கள் தான் பொறுமையானவர்கள்” என்று பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு பொன் கருத்தை வேறு கூறினார்.
நவ நாகரீக உடை, அதற்கு ஒத்துப் போகும் அணிகலன்கள், அடுக்கப்பட்ட காலணிகள், பெரிய கார், கூலிங் கிளாஸ் என்று வெளியிலிருந்து முகநூல், இன்ஸ்டாகிராம் படங்களின் மூலம் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு இருக்கும் சிலரின் உள்ளங்கள், இங்கே சுக்கு நூறாக உடைந்து அலங்கோலமாகவே இருக்கின்றது. காலை முதல் இரவு வரை காலில் சக்கரம் கட்டிக் கொண்டு வாழ்ந்த பல பல பெண்களும், சில ஆண்களும் தன் வாழ்க்கைத் துணைக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்துவிட்டது, சில ஆண்டுகள் அங்கு இருந்தால் தனக்கும் வேலைக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துவிடும், பின்னர் வாழ்வு சுகித்துவிடும் என்று இருவரும் இணைந்தே வாழ்க்கை கணக்குப் போட்டு தங்கள் வேர்களை இடம் மாற்றுகிறார்கள். அதில் பணக் கணக்கு லாபத்திலும், மனக் கணக்கு மிகப்பெரிய நஷ்டத்திலும் முடிந்துவிட்ட பல இணைகளை இங்கு பார்க்கலாம். சிலர், ஏதோ ஒரு துளியில் இந்த மூன்று, நான்கு, ஐந்து வருடத் துயரிலிருந்து குறைவான சேதாரத்தோடு தப்பி பாசாங்கு காட்டும் அளவிற்கு மாறி விடுகின்றனர். சிலர், காலத்தின் கண்ணாடி கூண்டோடு கோரமாகச் சிதறி விடுகின்றனர். மனிதனின் மரபணுக்களில்தான் மாற்றங்களை ஏற்றும் கொள்ளும் திறன் குறைவு போல. அலஷ்கன் மரத் தவளை எவ்வளவு அதிர்ஷ்டசாலி!
You have brought out the various thoughts that go on in an immigrants mind…i could totally relate to some of them…keep writing …