சிறார் இலக்கியம்தொடர்கள்

வானவில் தீவு : 9 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்

சிறார் இலக்கியம் | வாசகசாலை

இதுவரை…

தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்யத் தொடங்கினர். கடலுக்குள் ஓரிடத்தில் இருந்த பெரிய கதவைத் திறப்பதற்கான வழி தெரியாமல் குழம்பித் தவித்தனர்.

இனி…

கதவைத் திறக்க யோசிக்க விடாமல் கடலின் குளிர் அவர்களை வாட்டியது. படகிலேயே ஒரு இரும்புச்சட்டியை வைத்து, அதில் கொஞ்சமாகத் தீ மூட்டி சுற்றி அமர்ந்து கொண்டனர். உடன் வந்த மீன்களும் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு அமர்ந்தன.

பாலா: டேய் ராம்… ஒருத்தர் மேல ஒருத்தர் ஏறி நின்னு அந்தக் கதவு மேல இருக்கிற சாவி ஓட்டை வழியா பாக்க முயற்சி பண்ணலாமா? அத பாத்தா ஏதாவது ஐடியா கிடைக்கும்ல.

ராம் & மகேஷ்: சூப்பர் ஐடியா டா!

மீன்கள் எல்லாம் சேர்ந்து படகை இறுக்கமாய் பிடித்துக்கொண்டன. மகேஷ் கொஞ்சம் ஸ்ட்ராங்கான ஆளாக இருந்ததால் அவன் கீழே நின்று கொண்டான்.

அவன் மேல் ராம், ராம் மேல் பாலா என்ற வரிசையில் ஒருவர் மேல ஒருவர் ஏறிக் கொண்டனர்.

பாலா ஓட்டையை உற்றுப் பார்த்தான். சரியாகப் பார்க்க முடியாதபடி கீழே இருவரும் தடுமாறிக் கொண்டிருந்தனர்.

பாலா: டேய் சரியா நில்லுங்கடா ஒரு நிமிஷம், எதையுமே பாக்க முடியல.

மகேஷ்: ரெண்டு பேரும் சேர்ந்து ரொம்ப வெய்ட்டா இருக்கீங்கடா. என்னால முடியல.

ராமும் கொஞ்சம் புஷ்டியான பையன் தான். பாலா தான் மூவரில் பயங்கர ஒல்லியாக இருப்பான். அவன் வீட்டில் அவனுடைய செல்லப்பெயரே ‘பல்லிக்குட்டி’ தான்.

கனம் தாங்க முடியாமல் மகேஷ் சாய, மூவரும் சாய்ந்தனர். பாலா சமயோஜிதமாக சாவித் துளைக்குப் பக்கத்தில் இருந்த கைப்பிடியைப் பிடித்துத் தொங்கினான்.

சரியாகக் கதவோடு கொஞ்சம் பொருத்திக்கொண்டு, சாவித் துவாரத்தின் வழியே உற்றுப் பார்த்தான். சாவித் துவாரம் மாதிரியே அது இல்லை. பார்த்துக் கொண்டு இருந்த போது சட்டென்று அவனுக்கு ஒன்று தோன்றியது.

பாலா: ஹைய்யா… நான் கண்டுபிடிச்சுட்டேன், நான் கண்டுபிடிச்சுட்டேன்!

ராம், மகேஷ், மீன்கள் எல்லோரும் சில நொடிகள் ஷாக் ஆகி, மகிழ்ச்சியில் திளைத்தனர்.

அவனைக் கீழே இறக்கிவிட மறந்து எல்லோரும் பாடி ஆடத் தொடங்கினர்.

“வெகு தூரம் தாண்டி வந்தோமே
நாங்கள் வந்தோமே,
கடலினில் கரைகள் கடந்து நுழைந்தோமே
இங்கு நுழைந்தோமே

ஓஹோ ஓ ஓ ஓ ஓ…

ஒரு குரல் கேட்டதே,
எங்களுக்குக் கேட்டதே..
அதிசய இறகு முளைத்து
பயங்கரமாய்ப் பறந்ததே…

ஓஹோ ஓ ஓ ஓ ஓ…

ஏதோ ஒன்று எங்களை இழுக்க..
கப்பலும் வந்து வாசலில் நிற்க…
அதிர்ந்து போனோமே
நாங்கள் அதிர்ந்து போனோமே…

ஓஹோ ஓ ஓ ஓ ஓ…

மாயக் குரல் எங்களுக்கு
டாஸ்க் ஒன்று கொடுக்க,
குளிரில் நடுங்கி
வழி கண்டோமே..
இப்போது வழி கண்டோமே.

ஓஹோ ஓ ஓ ஓ ஓ…”

கடைசி வரி பாடும் போது தான் ராம் நிமிர்ந்து பார்த்தான். பாலா இன்னமும் மேலே தான் தொங்கிக் கொண்டிருந்தான்.

ராம்: என்னடா கண்டுபிடிச்ச நீ?

மகேஷ், மீன்கள் எல்லோரும் அவனயே பார்த்தனர்.

லூனா: அட ஆமால்ல. அது தெரியாமலேவா பாடி ஆடிட்டு இருக்கோம்.

பாலா: மொதல்ல என்னைய இறக்கி விடுங்கடா. கை வலிக்குது.

மகேஷ் மேல் பாலா ஏறி பழயபடி நிற்க, ராம் பத்திரமாகக் கப்பலுக்கு வந்தான்.

பாலா: அது இறகு போற மாதிரி ஓட்டையா தான்டா இருக்கு. நாம சீக்கிரம் அந்த இறகு வச்சு திறக்க முயற்சி பண்ணுவோம்.

மகேஷ்: சூப்பர்டா. உடனே எடுத்துத் திறப்போம்.

இறகை எடுத்துக்கொண்டு, மூவரும் ஒருவர் மேல் ஒருவர் நிற்க, பாலா மெதுவாக இறகை உள்ளே நுழைத்தான்.

மீன்கள் எல்லோரும் நடந்ததை வாயைத் திறந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தன.

ராம், மகேஷ் இருவரும் கூட கொஞ்சமாகக் கண்ணை இடுக்கி, மேலே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.

5 நிமிடங்கள் ஆகியும் ஒன்றும் நடக்கவில்லை.

ராம்: என்னாச்சு பாலா?

பாலா: திறக்கலடா.

ராம்: இறக வேற வேற மாதிரி திருப்பிப் பாருடா.

பாலா: எல்லா மாதிரியும் முயற்சி பண்ணிட்டேன்டா. திறக்கல.

எல்லோருக்கும் மனம் சோர்வடைந்தது. கீழே இறங்கி வட்டமாய் அமர்ந்தனர்.

அம்மு: சரி, அதெல்லாம் இருக்கட்டும். இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி, சில நிமிடங்கள் மட்டும் குளிர் குறைஞ்சிருந்ததே, அது எப்படி?

யாருமே அதைப்பற்றி பெரிதாய் கவனிக்கவில்லை. ஆனால் இப்போது யோசித்ததால் அம்மு மீன் சொன்னது சரியென்றே தோன்றியது.

லூனா: அட ஆமால்ல. ஆனா அது எதனால வந்த மாற்றம்னு தெரியலயே.

இப்போது எல்லாம் பெருங்குழப்பமாக இருந்தது.

சாவி என்று நினைத்த இறகு சாவி இல்லை, ஆனால் திடீரென குளிர் குறைந்திருக்கிறது. என்ன தான் நடக்கிறது? எதுவுமே புரியவில்லையே? எல்லோருக்கும் மண்டை குழம்பியது.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button