என் வானிலே… ஒரே அர்ச்சனா… [ஜானி திரைப்படம் குறித்த சிறப்புக் கட்டுரை]– சோ.விஜயகுமார்

எனக்கு யதார்த்தமான கதைக்களமும்,போலிப்பூச்சில்லாத காட்சியமைப்பும் எப்போதும் பிடித்தவை.
இவற்றை எப்போதும் சிறப்பாகச் செய்யும் இயக்குநர் மகேந்திரன், தமிழில் என்னைப் பெரிதும் வசீகரித்தவர்.
அவரது முத்திரைகளாய் முள்ளும் மலரும்,உதிரிப்பூக்கள் போன்ற படங்களைச் சொன்னாலும் எனக்கு எப்போதும் விருப்பமான படம் ஜானிதான்.
ரஜினிகாந்த் -ஜானி,வித்யாசாகர் என இரு வேடத்தில் நடித்த படம்.
தமிழ் சினிமாவில் நாயகியை அவளின் அங்க தோற்றத்துக்காய்,அழகுக்காய் காதலிக்கும் நாயகர்களும், கலாட்டா, திமிர், மெத்தனம் என இருக்கும் நாயகர்களை காதலிக்கும் காதலிகளும் உலவிக்கொண்டிருந்த காலம் அது.
ஆனால் ஜானியில் காட்டப்பட்ட உலகமே வேறு. காதலின் ஓரளவு பரிணாமத்தை, ஆழத்தைக் காட்டிய படம் ஜானி.
ஜானி , வித்யாசாகர்
இருவருக்குமான பொதுப்புள்ளியாய் காதல்…
ஒருவன் காதலில் ஏமாற்றம் அடையக்கூடாதென ஓடுகிறான்…
ஒருவன் காதலே ஏமாற்றம் என ஓடுகிறான்…
இருவரின் உலகத்தை இப்படி சுருக்கிச் சொல்லலாம்.
ஒருபுறம் -ஜானி
வாழ்க்கையின் சூழலால் திருடனானவன்.
இசையில் நாட்டமுடைய ஜானி,
நாயகியின்(அர்ச்சனா) குரலைக் காதலிக்கிறான். அவன் அந்தக் குரலில் தன் அன்னையிடம் காணும் அதே தேற்றுதலை உணர்கிறான். அவள் இசையைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது தன் உயிரே போனாலும் சுகமே என்பவனிடமிருந்து நீங்கள் காதலின் பித்து நிலையை உணர முடியும்.
நாயகியும் தன் குரலை ஒருவன் காதலிப்பதைக் கண்டு, அவனிடம் மெல்ல மெல்ல தன் மனதை இழக்கிறாள். தன் குரல் மட்டுமே போதும் என்பவனுக்காக அவன் திருடன் எனத் தெரிந்த பின்பும் அவள் தன்னை விடுத்து அனைத்தையும் இழக்கிறாள்.
தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட காதல் காட்சிகளில் கவித்துவமான காட்சிகளுக்கு, இந்தப் படம் ஒரு முன்னோடி.
தன் பிறந்த நாள் அன்று எப்போதும் தன் அன்னையிடம் ஒரு ரூபாய் வாங்கும் ஜானி,அந்த வருடம் அர்ச்சனாவிடம் ஒரு ரூபாய் கேட்டு அவளை தன் மனதில் எந்த நிலையில் வைத்துள்ளான் என்பதை சொல்லாமல் சொல்கிறான்.
இந்த வாய்ப்பை ஒவ்வொரு வருடமும் எனக்குத் தருவீர்களா எனக் கேட்கும் தருணத்திலேயே அர்ச்சனாவின் காதலும் வெளிப்படும்.
அங்கு தொடங்கி 1:30 நிமிடம் காட்டபடுகிற காட்சிகள் மட்டுமே பல காதல் கவிதைகளுக்கு தகும். அந்த காட்சியின் பின்னணி இசையில் இளையராஜா செய்த மாயாஜாலம் என்பது விவரிக்க முடியாத ஒன்று.
மற்றொரு காட்சி…அர்ச்சனா ஜானியிடம்
தன் காதலை சொல்லும் காட்சி. அர்ச்சனா காதலை சொல்வதும், தன் நிலையால் அதை ஏற்க முடியாமல் ஜானி தவிப்பதும், பின்னர் அர்ச்சனா கோபம் கொள்வதும், அவளை சமாதானம் செய்து காதலை ஏற்பதும் பார்க்கும் யாருக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்தும்.
“ஏன் அப்படிலாம் பேசுனீங்க?” என ஜானி கேட்கும் போது,
“நான் அப்படித்தான் பேசுவேன்.” என்று கண்ணீரை அர்ச்சனா துடைக்க, அங்கு தொடங்கும் பின்னணி இசை என்பது காதல் உலகின் தேசிய கீதம்.
மறுபுறம்-வித்யாசாகர்
அடிப்படையில் முடி திருத்தும் கலைஞனானவன், தன்னிடம் வேலைக்கு வரும் பெண்ணையே காதலிக்கிறான். அவள் சம்மதிப்பது போல் சம்மதித்து இவனுக்கு துரோகம் செய்யவே குரோதத்தில் கொலை செய்து விடுகிறான்.
தன் போலவே இருக்கும் ஜானியால் ஏற்கனவே தொல்லையுற்ற வித்யாசாகர், கொலைப்பழியை ஜானி மீது போட்டு அர்ச்சனாவின் வீட்டில் ஜானியாக நடிக்கிறான்.
அவனை ஜானி என்றே நம்பும் அர்ச்சனாவின் தூய அன்பைத் தாங்க இயலாது வித்யாசாகர் தான் யார் என்கிற உண்மையை சொல்கிறான்.
ஜானியைக் கண்டுபிடிக்க உதவி செய்து இறுதியில் தன் கொலையை ஏற்று சிறைக்குச் செல்கிறான்.
“அன்பின் கண்களுக்கு முன்னே
வேறென்ன செய்து விட முடியும்
மண்டியிடுவதை தவிர்த்து!”
படத்தின் மாபெரும் பங்கு இசைஞானி இளையராஜாவிற்கு.
‘என் வானிலே’, ‘ஒரு இனிய மனது’, ‘சென்னோரீட்டா’, ‘ஆசைய காத்துல’, ‘காற்றில் எந்தன் கீதம்’ என ஐந்தும் முத்திரைப் பாடல்கள்.
படத்தில் அர்ச்சனாவின் குரலென்பது ஜென்சியின் குரலே…வெகு சொற்பமாய் பாடிய ஜென்சியின் திரைப்பயணத்தில் ஜானி ஒரு முக்கிய மைல்கல்.
பின்னனியில் ஜானி-அர்ச்சனாவிற்கு தனி இசை, காட்டில் வாழும் பெண் ஜானியுடன் வரும் காட்சிகளுக்கு தனி இசை, வித்யாசாகருக்கு தனி பின்னணி இசை என அதகளப்படுத்தியிருப்பார் இசைஞானி.
அதிலும் குறிப்பாக ஜானியும்,வித்யாசாகரும் ஓடும் ஒரு காட்சியில் கிட்டத்தட்ட 2:30 நிமிடம் பின்னணி இசை மட்டுமே விறுவிறுப்பை கடத்திச் செல்லும். ஓட்டம் முடியும்போது நம்மையும் மூச்சிரைக்க வைத்திருப்பதில் இருக்கிறது அவர் இசையின் வெற்றி.
இசைஞானியின் தொகுப்பில் ஜானிதான் எனக்கு ஆல் டைம் பேவரைட்.
ரஜினி,ஸ்ரீதேவி இருவரின் நடிப்பும் அழகாய் அபாரமாய் அமைந்த படம் இது. ஸ்ரீதேவியின் திரைப்பயணத்தில் அர்ச்சனா ஒரு குறிப்பிடத் தகுந்த குறிஞ்சிப்பூ!
துணை பாத்திரங்களாய் வரும் சுருளிராஜனின் உடல்மொழி, பழங்குடிப் பெண்ணாய் வரும் சுபாசினியின் ஒருதலைக் காதல், அர்ச்சனாவின் வீட்டு உதவியாளர் என சின்னச் சின்ன பாத்திரங்களும் வெகு நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
மகேந்திரனின் ஆளுமைத்திறனையும், திரைமொழியையும் பார்த்து வியந்த படங்களில் ஜானி முக்கியமான ஒன்று.
போலித்தனமான மௌனங்கள் இல்லாத திரைமொழி மகேந்திரனுடையது.
மகேந்திரனை நன்கு புரியும்போது நீங்கள் மௌனத்தின் அர்த்தத்தை ஓரளவு உணரத் தொடங்கியிருப்பீர்கள்.
ஜானியை சுருக்கமாக இப்படிக் கூறலாம்.
“தூய காதல் என்ன செய்யும்?
அது எல்லாம் செய்யும்.”
இப்படியும் கூறலாம்.
“ஒரு படம் என்ன செய்யும்?
ஒரு படம் எல்லாம் செய்யும்.”
இன்றோடு ஜானி திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகின்றன.