
14-8-2016!
தோல்வியில் இருந்து மீண்டு தொழிலில் முதல் லாபத்தைப் பார்த்த நாள்!
இரண்டு வருடங்களுக்கு முன் இதே நாளில் இருந்த மன நிலையையும், இன்றைக்கு இருக்கும் மன நிலையையும் ஒப்பிட்டு, மகிழ்ச்சியின் உச்சத்தில் அலைபாய்ந்த மனதை அடக்க சிரமப்பட்டேன்!
கண் மூடி அமர்ந்து நான் நினைக்கும் நபருடன் மானசீகமாகப் பேசும் வரமும் சாபமும் வாய்க்கப் பெற்றவன் நான்!.
வெற்றியை ருசித்த இதே மனநிலையில் இந்த வெற்றியை எப்படியாவது நா. மு விடம் பகிர வேண்டும் போலிருக்க “என்ன செய்யலாம்?” என யோசித்த போது தான் திடுமென அத்தை வந்தாள்!
எத்தனை வருடங்களுக்குப் பின் இப்படி வருகிறாள் ? ..யோசித்த படியே, “என்ன அத்தை திடீர்னு வந்திருக்க ?”
“ஏன் வந்தனு கேக்கியாலே ரமேசு?”
ஐயோ இல்லை!. “என்ன திடீர்னு தான் கேக்கேன்?”.
“அப்போ ..என்னைப் போனு சொல்லுதியா?”
“அப்படியில்லை அத்தை!”… “நான் வேற ஒருத்தரை நினைச்சேன்”. “ஆனா.. நீ வந்துட்ட!”
“அப்படி யாரைல நினைச்சுக் கிடந்த?”
“நா. முத்துக்குமார்!”
“இப்பம் நான் வந்திருக்கேன்ல. என்கிட்ட பேசு!”.
“……………………………………………………”
“தொழில்ல சாதிச்சுட்ட போல ?” அதான் வந்தேன்..
மனசு மீண்டும் நா. மு. வை நாட ; யாரைப் பிடித்து அவர் ஃபோன் நம்பரை வாங்கலாம் என்றே யோசனை!
என் கவனம் அவள்பாலில்லை என்றுணர்ந்து , ஏமாற்றம், ஆற்றாமை, கோபம் என கலவையான உணர்வுகளை முகத்தில் காட்டியபடி போவது வத்சலா அத்தை!
அப்பாவின் அக்கா…என்னை வளர்த்தவள்…கொள்ளைப் பிரியக்காரி!
அவள் போன பின் தான் கவனித்தேன் . பிஸ்கட் நிற அட்டையிட்ட அவளின் நோட்டை விட்டுப் போய் இருந்தாள்!
ஆர்ப்பரித்த மன நிலையில் எப்படியாவது நா. மு.வுடன் பேச வேண்டும் என நினைத்த பொழுது வந்தமர்ந்த அத்தைக்கு, சுங்கடிச் சேலையும், சுருள் கேசமும், நெற்றி நிறைந்த திருநீறும், இந்த நோட்டும் தான் அடையாளம்!
16 வயதில் திருமணமாகி, 19 தில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சமயம் கணவனை விபத்தில் இழந்ததும் உயிரை விட்டுவிட வேண்டுமென்றிருந்தவளை இழுத்துப் பிடித்தது கருவிலிருந்து 9 மாத சிசு!
“அவன் போயிட்டா என்ன?” .”வரப்போற உசுருக்காக வாழுட்டி” … என மனசைத் தேற்றச் சுற்றம் சொன்ன வார்த்தைகளின் வழுவால் வாழ நினைத்தவள், குழந்தையும் பிறந்தவுடன் இறக்க, நிலை குலைந்து போனாள்!
நட்பும் சுற்றமும் அவளைத் தேற்றத் திராணியற்று தவித்த சமயம், யாருமறியாமல் மாட்டுத் தொழுவத்தில் தூக்கிடப் போனவளைத் தடுத்து நிறுத்தியது சுவரிலிருந்து கீழ் விழுந்து உடைந்த ஒரு கண்ணனின் படமும், எங்கிருந்தோ கிளம்பி அவள் காதில் விழுந்த ‘மயக்கமா கலக்கமா’ பாடலும் தானாம்! அந்த நொடியில் வாழ்வதற்கான நம்பிக்கையைக் கொடுத்த பாடல் அது என்பாள்!
“கோட்டிக்கார மனுச மனசைக் கட்டிப் போடுத மாதிரி எல்லாச் சூழலுக்கும் சேர்த்துக் கொட்டிக் கொடுத்துட்டுல்லா போயிருக்காரு மனுசன்!” எனக் கவியரசரைச் சிலாகிப்பாள்.
வாழ்ந்த வரையில் அத்தைக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்தது!
டைரி என்றால் டைரியில் அல்ல. இதோ அவள் விட்டுப் போயிருக்கும் நோட் தான் அது! கோடில்லாத 300 பக்க அன்ரூல்டு நோட்டு அவளின் அன்றாட நிகழ்வுகளை எழுதுவதற்கல்ல. இதன் பெரும்பான்மையான பக்கங்களில் கவியரசரின் வரிகள் வழிந்தோடும்!
ஒரு முறை, ”எதுக்கு அத்தை இந்த நோட்டு?” எனக் கேட்டதும், “மனசில ஒட்டிக்கற மாதிரி ஏதேனும் ஒரு பாட்டாச்சும் வந்தா, அந்த வரிய எழுதலாம்னு பாக்கேன் . எங்க ?” : “காதலையும் காமத்தையும் எழுதறது மாத்திரமாவே கவிஞன் வேலை?”. “வாழனும்னு நம்பிக்கை கொடுக்க வேணாமா?”. “அவரைத் தவிர வேற எவன் அப்படி பாட்டு எழுதுவான் ?” என வாதிடுவாள்.
ஒரு கால கட்டம் வரையிலும் கவியரசரைத் தாண்டி வேறு எந்த பாடலாசிரியரின் பாடல்களும் அந்த நோட்டில் இடம் பிடிக்கவில்லை : ஒருவரைத் தவிர!
சாதாரணமாக நம் எல்லோருக்கும் நோட்டின் முதல் பக்கத்தில் பெயர் எழுதுவது தானே வழக்கம்? அவளது நோட்டிலோ பெயர் இருக்காது. மாறாக..
“கடவுள்னா கண்ணன்“
“கவிஞன்னா கண்ணதாசன்“ என்றே எழுதப்பட்டிருக்கும்!
வீட்டின் பூஜை அறையில் , “மாமா”, “கண்ணன்” மற்றும் “கவியரசரின்” ஃபோட்டோக்கள் மாத்திரம் தொங்கும்!
அத்தைக்கும் எனக்கும் ஒரு பழக்கம் இருந்தது. ஒவ்வொரு சனியன்றும் ஒன்றாக அமர்ந்து டேப்பில் பாடல்கள் கேட்போம். சொல்லப் போனால் கவிதை, கவிஞர்கள், திரைப்பாடல்கள் என எல்லாவற்றிலும் நல்ல சொற்தூவலுக்கான என் இன்றைய தேடலின் காரணம் அவளே!
அரசு ஊழியராக இருந்த போதே மாமா மரித்ததால் வந்த பென்ஷன் பணமும், சொந்த வீடும், குத்தகைக்கு விடப்பட்டிருந்த தோப்பு வருமானமும் அவளின் வாழ்க்கைக்கான வசதியைக் கொடுத்திருந்தன!
ஆடியோ வீடியோ கேசட்டுகள் கடை வைத்திருந்த தங்கராசு சித்தப்பா புதிதாக ரிலீஸாகும் பட ஆடியோ கேசட்டுகளின் ஒரிஜினலைக் கொண்டு வந்து கொடுப்பார். ஒலிக்கும் பாட்டின் வரிகள் ஏதேனும் பிடித்தால் பாட்டை நிறுத்தி, ரீவைண்ட் செய்து 2-3 முறை அதே பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்பாள். பாடலின் வரிகளில் தான் முழு கவனமும் இருக்கும். இசையமைத்தவர் , பாடியவர் என யாரையும் எதையும் சட்டை செய்ய மாட்டாள்!
வழக்கம் போல சனிக்கிழமையன்று சித்தப்பா ஒரு படத்தின் கேசட்டைக் கொடுத்து விட்டுப் போக, அதை அன்றிரவு கேட்டோம்.
“அசதியாக இருக்கு” என்றபடி படுத்திருந்தவள் அந்தப் பாடல் தொடங்கிய சில நிமிடங்களில் எழுந்தமர்ந்தாள். பெரும்பாலும் எதுவுமே சொல்லாமல் பாடல்களைக் கேட்டபடியே ஒரு கட்டத்தில் உறங்கி விடுபவள், எழுந்தமர்ந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது!
“ரமேசு! இன்னொரு மட்டம் இந்தப் பாட்டைப் போடு” என்றதும் ரீவைண்ட் செய்தேன்!
“ மீண்டும் அதே பாடல்.. மீண்டும் ரீவைண்ட் .. மீண்டும் அதே “ எனத் தொடர்ச்சியாக 4 முறை அவள் கேட்டது தான் : டும் டும் டும் படத்தில் வந்த “சுற்றும் பூமி சுற்றும் “பாடல்.
“அஞ்சறைப் பெட்டியறைகள் போல நெஞ்சுக்குள் அறைகள் வச்சிருக்கேன்”
“ஆசைகள் அதுல ஒளிச்சிருக்கேன் அலை அலையாய்”….
எனக் கேட்டதும் பாட்டை நிறுத்தி.. “இதை எழுதினது யாராம்?” என்றவளிடம், லைட்டைப் போட்டு கேசட்டின் கவருக்குள் இருந்த பேப்பரைப் பிரித்துப் பார்த்து : “நா. முத்துக்குமார்னு போட்டிருக்கு அத்தை” என்றதும், “அடுப்படியில் உட்காந்து எழுதின மாதிரி இருக்கவும், நான் பொம்பளயாளாயிருக்கும்னு நினைச்சேன் “ என்ற படி மறுபடியும் அதே பாட்டை ஓட்டச் சொன்னாள்.
அன்றிரவு முழுக்க சுற்றும் பூமி பாடலே சுற்றிச் சுழன்றது!
மறுநாள் நான் கண் விழித்த போது கூடத்துத் தூணில் சாய்ந்தபடி, எழுத்து மேசை மேல் அவளின் நோட்டை வைத்து டேப்பில் அதே பாடல் ஓட ஓட அதன் வரிகளை எழுதியபடி இருந்தாள். எனக்கு நினைவு தெரிந்து முதல் முதலாக அந்த நோட்டிற்குள் போன கண்ணதாசனல்லாத வேறொரு கவிஞரின் பாடல் வரிகள் அவைதான்!
அந்த வருடம் நானும் பத்தாவதென்பதால். படி படி என வீட்டில் அம்மையும் அப்பாவும் இடி இடி யென இடிக்கத் தொடங்க, நாளடைவில் அத்தையுடன் செலவிடும் நேரம் குறையத் தொடங்கியது.
சனி தோறும் போனது மாதத்துக்கு ஒருமுறை என்றானது”. “முன்பு போலத் தோன்றிய நேரங்களில் அவளைப் போய் பார்ப்பது நின்று விட்டிருந்தது.
“பத்து வயசு வரை உன்னை நான் தாம்லே வளர்த்தேன் ?” .. “பக்கத்துத் தெருவில தான இருக்கேன்”.. ‘இப்ப என்னைப் பாக்க வர முடியாமப் போயிட்டு உனக்கு ?’ என ஃபோனில் குறைப்பட்டுக் கொண்டதால் , “அத்தை இருக்கச் சொன்னா இருந்துட்டு நாளைக்கு உதயத்தோட வந்து சேரு .. சரியா?” எனச் சொல்லி அன்று அம்மை என்னை அங்கனுப்ப நான் போனது ஒரு பௌர்ணமியன்று!
“இன்னிக்கி இங்கேயே இருந்துடேன்…. எவ்ளோ நாளாச்சு நீயும் நானும் சேர்ந்து பாட்டுக் கேட்டு?” எனச் சொல்ல அங்கேயேத் தங்கினேன்.
சாப்பிட்டு முடித்ததும்… தங்கராசு சித்தப்பா கொடுத்து விட்டுப் போன புது கேசட்டைக் கொடுத்துப் போடச் சொன்னாள்.
நிறைந்த பௌர்ணமி… தன் மொத்த ஒளியையும் கொட்டியதைப் போலிருந்த முற்றத்தில் நானும் அத்தையும் மாத்திரம் இருந்தோம்!
“முன்பனியா.. முதல் மழையா”.. என்ற எஸ்.பி.பி. யின் குரலில் அமிழ்ந்திருந்த என்னை அடுத்ததாக ஒலித்த “ஓராயிரம் யானைக் கொன்றால் பரணி!” ஏதோ செய்தது. உடம்பு சிலிர்க்க நிமிர்ந்து அத்தையைப் பார்த்தேன். அடுத்ததாக.. “தாய் வயிற்றில் தலை கீழாக .. உன் வழியோ இல்லை நேராக” என்ற வரிகள் விழுந்த நொடியில் அத்தை உறைந்து விட்டிருந்தாள்!
உன்னிக் கிருஷ்ணனின் குரல் அடுத்தடுத்த வரிகளைத் தொட்ட சமயம், “ரமேசு… திரும்பப் போடு”… எனச் சொல்ல, ரீவைண்ட் பண்ணி மீண்டும் அதே பாடலைப் போட்டேன். பாடல் ஒலிக்க ஒலிக்க ,அடுத்தடுத்த வரிகள் அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டிருந்ததை உணர முடிந்தது!
நிஜத்தைச் சொன்னால் சட்டென அந்த சூழலே அமானுஷ்யமாகி விட்டிருந்தது. எத்தனை முறை கேட்டோம், எப்போது உறங்கினோம் எனத் தெரியாது. மறுநாள் நான் எழுந்த போது அத்தையைக் காணவில்லை. உதயத்திலேயே எழுந்து கோயிலுக்குப் போகும் வழக்கம் உடையவள் என்பதால் நான் எழுந்து வாசலை நோக்கி நடந்தேன்.
உட்பக்கமாகத் தாழிடப் பட்டிருந்த கதவும் , சாணம் மெழுகாத வாசலும் குழப்ப, கொல்லைப் பக்கமாகப் போனால் , வாயில் நுரை தள்ளி கீழே கிடந்தவள் அடங்கியிருந்தாள்!
அந்த அதிர்ச்சியில் இருந்து என்னை மீட்க அப்பாவும் அம்மையும் பட்ட பாடுகள் தான் எத்தனை?. ஊரை விட்டே கடத்தப் பட்டேன்.
அன்று தொடங்கி பல நாட்கள் அத்தையுடனிருந்த அந்த பௌர்ணமி இரவும், அன்று நாங்கள் பேசியதும், அந்தப் பாடலும், அவ்வப் போது கனவுகளில் வந்து போகும். ஆனால் அக்கனவுகளில் அத்தையின் முழு உருவம் இருக்காது!
மேற்படிப்பு, வேலை, காதல், அப்பாவின் மரணம், காதல் தோல்வி, வியாபாரத் தோல்வி, என பல காரணங்களால் பித்துப் பிடித்த நேரங்களில் , “சரி ஆகிடும் டே” என்று அவள் சொல்வது எனக்கு மாத்திரம் கேட்கும்.
தொழிலில் தோற்று தற்கொலைக்கு முயன்று அம்முயற்சியிலும் தோல்வியுற்று ஆஸ்பத்திரியில் இருந்த நாள் கனவில் வந்த அத்தை சொன்னாள்….
“ஏலெய்! சாகப் பாக்குத … சவத்து மூதி!”
“நீயும் தான அத்தை தற்கொலை முயற்சி பண்ணியிருக்க ? பெருசா என்கிட்ட பேசுத?”
“நான் வாழ்க்கைல எல்லாத்தையும் இழந்துட்டு கோட்டிப் பிடிச்ச மாதிரி சாவப் போனேன்”; “உன்னைப் போல காதலிச்சவ விட்டுட்டுப் போனதுக்கு ஒரு தடவ, தொழில்ல தோத்ததுக்கு இன்னொரு தடவைனு தடுக்கி விழுந்தா சாவாலாமானு யோசிச்சதில்லை!”
“வாழனும்ங்கற நினைப்பு வேணும்!… அதை எது கொடுக்குதோ அதைப் பிடிச்சுக்கிட்டு மேல வர வழியைப் பாப்பியா?” எனச் சொல்லி அத்தை கிளம்பிய சமயம், “எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்”… என்ற வரிகள் தவழ்ந்து வந்து காதில் விழ, அதன் பின் வாழ்வின் துவண்ட தருணங்களில் எல்லாம் “ஏலெய்! சும்மாருக்கியா?” எனக் கேட்க அத்தை வரவில்லை! … அன்று முதல் இன்று வரை நா. மு .வின் வரிகள் தான் துணை!
என் பொறுமையைச் சோதித்த, மனோதிடத்தை அசைத்துப் பார்த்த, ஏண்டா வாழ்கிறோம் எனத் தோன்றி நொறுங்கிப் போய் அமர்ந்த தருணங்களில் எல்லாம் உரமிட்டு ஊக்கம் கொடுத்தது அவரின் வரிகள் மட்டுமே!
அச்சம்பவத்துக்குப் பின் நானும் அத்தையைப் போல் டயரி எழுதத் தொடங்கினேன்.
கடல் தாண்டும் பறவைக் கெல்லாம்..
இளைப்பாற மரங்கள் இல்லை…
கலங்காமலே கண்டம் தாண்டுமே….
முற்றுப் புள்ளி அருகில் நீயும் …..
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்……
முடிவென்பது.. ஆரம்பமே!
என என் டயரிகளும் நிரம்பின!
எப்படியாவது முத்துக்குமாரைப் பார்த்துப் பேசி, அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கு எப்படி உரமாயின எனச் சொல்ல நினைக்காத நாளில்லை!
திடீரென அரவம் கேட்கப் பார்த்தேன்.
மெல்லிய தேகம், மழிக்காத மூன்று நாள் தாடி, வாழ்வின் அத்தனை சோகங்களையும் விழுங்கியது போன்ற கண்களுடன் வந்தமர்ந்த அவ்வுருவத்தைக் கண்டதும் அதிர்ந்தேன்!
சாமியாகிப் போன அத்தையுடன் பேச முடிவதை தர்க்கம் செய்யாமல் ஏற்கும் மனது என் முன்னமர்ந்திருக்கும் ஆசாமியான முத்துக்குமாரின் இருப்பைக் கேள்வி கேட்கிறதே?… பல குழப்பங்கள், கேள்விகள்!
அவரோ அத்தை விட்டுப் போன நோட்டின் முதல் பக்கத்தைப் பார்த்துச் சிரித்து விட்டு அதை என் புறமாகத் திருப்பிக் காட்ட, அதிர்ச்சியுடன் நடப்பதை நம்ப முடியாமல் பார்த்தேன்!
அத்தையின் கையெழுத்தில்…
“கடவுள்னா கண்ணன்“
“கவிஞன்னா கண்ணதாசன் மட்டுமல்ல முத்துக்குமாரும்” என்றெழுதியிருந்தது!
*******************************
(ஓவியம்:இணையம்)