
வாழ்க்க திரும்பத் திரும்ப பொறட்டிப் போட்டு பொடணியில அடிச்சாலும், அசராம எழுந்து நின்னு தூசியத் தட்டி விட்டுக்கிட்டே, அசால்ட்டா அடுத்து என்னடே வச்சிருக்கன்னு கேக்கறவ தான் லீலி புஷ்பம். பெரிய பெரிய காந்திக்கும் பாரதிக்கும் தான் வாழ்க்கை வரலாறு இருக்கனுமா? அவங்க எல்லாத்தையும் பாத்து சிரிப்பாணியா சிரிச்சி மனசுக்குள்ள தவுலத்தா திரிஞ்சி கடசீல நெனச்சே பாக்க முடியாத கோலமெல்லாம் கண்டு தீஞ்சு போன அவ வாழ்க்கயும் கூட வரலாறு தான.
அவ பொறந்தது வட தமிழ்நாட்டுல ஒரு சின்ன மலைப்பகுதி. அங்கல்லாம் பெருசா எந்த பரபரப்பும் இருக்காது. அதனால் சின்ன புள்ளையில இருந்தே யார் கத சொன்னாலும் வாயி பாக்கறது தான் இவளுக்கு புடிச்ச வேல. அவளச் சுத்தி எப்பவும் ரெண்டு விதமான கதைங்க இருந்துச்சு. மொத வகை ரெம்ப பக்தியா ஆச்சி அத்தைங்க சொல்ற வைவிள் கதைங்க. “லீலி புஷ்பத்தப் போல கூட்டத்துல வாயி பாக்க போன ஒரு சின்ன புள்ள கையில இருந்த அந்த அஞ்சு அப்பத்தையும் ரண்டு மீனையும் ஏசய்யன் ஏமாத்திப் புடுங்கி அம்பதாயிரம் பேத்துக்கு குடுத்தது. ‘லே கடலே இப்பம் வழிய வுட்றயா இல்லியா?’ன்னு மோச தீக்கதரிசி அழுக்குத் துணிய எடுத்து விசிறி அடிக்கவும், அந்த மேத்துண்டு வீச்சம் தாங்காம செங்கடல் மூக்கப் பொத்திகிட்டு ரெண்டு பக்கமும் ஓடிப்போயிட்டது” போல நம்பவே முடியாத நீதிக் கதைங்க. அடுத்தது ஜானகி புஸ்ஸு, ஏரியில் மாடு மேய்க்கற சராய் கெழவன், குட்டையன் ராமசாமி குப்பாயா அல்லாரும் சொல்ற மலைநாட்டுக் கதைங்க.
நல்ல பாம்பு பொண்ணு கட்றது, மின்னலாவ அவங்கண்ணன் இடிராசா தொரத்தறது, ஒரு பொண்ணுக்கு ஏழு நாயிங்க அண்ணணுங்களா இருந்து வளத்தது, அப்பாரத்திக்கா பேயிங்க, ராக்காசிங்க, காக்கா மூக்கரு, மரத்துல இருக்கற தெய்வங்க, பாறையில ஏரியில வாழற கன்னிமாருங்க கதைங்க. மலை நாட்டு பாரதக்கதை, அதுல பீம ராசனும் அர்ஜுனனும் ஜவ்வாது மலை பீம மடுவுக்கு வருவானுங்க. அந்த அருவிக்காட்டுல பாஞ்சாலி வேட்டைக்குப் போயி அவனுங்களுக்கு மானடிச்சி சுட்டுத் தருவா. இந்தக் கதைங்க எல்லாமே கொச்சையான பாஷையில கெட்டப்பேச்சு பாலியல் வர்ணனைங்களோட கேக்கறதுக்கு நல்லா இருக்கும். இதெல்லாம் கலந்தது தான் இவ மனசு.
இதனால இவ ஏசப்பனையும் வேண்டுவா, ஏழு கன்னிமாருக்கு பாதிரி மரத்தடியில படையல் போட்டாலும் போவா, நாகாத்தாளுக்கு பாம்பு புத்துகிட்ட பச்சை போட்டாலும் பயபக்தியா நிப்பா. எந்த சூழலுக்கும் தக்க தன்னை மாத்திகிட்டு ஜாலியா இருக்கறது அவ அப்பங்கொணம். அதே தான் இவளும். செலதெல்லாம் சொன்னா நம்ப முடியாது தான். ஆனாக்க ஆறேழு வயசுலயே கதை புஸ்தகம், பாட புஸ்தகம் எல்லாத்தையும் சரளமா இவ படிக்க ஆரம்பிச்சுட்டா. பரந்த உலக அறிவோட இலக்கிய வாசிப்பும் அசாதாரணமான மன வலுவும் கொண்ட பெரிய அரசாங்கப் பொறுப்பில் இருந்த சொரணத்துக்கும் பிரின்சுக்கும் பொறந்த மவ அப்பிடித்தான இருப்பா?. வீட்டுல எப்பவும் அவ அப்பா பாரதி மாறி தலப்பா கட்டிக்கிட்டு ஜாஞ்சகஸ் பொகையோட
“கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கறந்தகாதல்”
“உறங்குகின்ற கும்பகண்ண உந்தன் மாய வாழ்வெலாம் கறங்கு போன்ற வில் பிடித்த காலதூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய இனி கிடந்துறங்குவாய்”
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி”
“Woods are lovely dark and deep
Miles to go before I sleep
I wandered lonely as a cloud”
இப்படில்லாம் கவிதைங்க பாடறதக் கேட்டே வளந்த மக பின்ன எப்பிடி இருப்பா? அவ தன் வயசுப் புள்ளைங்கள விட இயல்பாவே படிப்புல மொழியறிவுல அசாத்தியமா முன்னாடி இருந்தா. ஒலகத்துல பெரும்பாலான புள்ளைங்க வெறுக்கற வகுப்பறைகளும் பாடங்களும் இவளுக்கு ரொம்ப ஈர்ப்பா இருந்துச்சு. அளவுக்கு அதிகமான இந்த புத்திசாலித்தனமே நாலு குத்து வாயிலேயே தரப்போதுன்னு பாவம் அந்தப் புள்ளைக்கு அப்பத் தெரியல. தெனாலிராமன் கதை வாசிக்க வேண்டிய வயசுலயே குமுதம், விகடன் குங்குமம், சாவி, இதயம் பேசுகிறதுன்னு இருந்தா. ரெண்டாப்பு பாடத்துல கரடி வந்ததும் ஒருத்தன் பொணம் போல கெடந்த கதை பாடத்துல வந்தப்ப, பயபுள்ள குமுதத்தில் சாண்டில்யனின் விஜயமஹா தேவி வாசிச்சிட்டிருந்தா. ஒம்பது வயசுல ஜெயகாந்தனின் ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ நாவலை வாசிச்சிட்டா. ஹாம்லட், ரோமியோ ஜுலியட், டால்ஸ்டாயின் சிறுகதைகள், அதிகாலையின் அமைதியில், வெண்ணிற இரவுகள் அப்டின்னு கொய்யா மரத்து மேல, வாகை மரக் கெளையில, தைல மரக் கூப்புல, சந்தனமர வேருல, ஆமைக் கெணத்து கல்லுலன்னு எங்கியாவது உக்காந்து வாசிச்சிக்கிட்டே இருப்பா.
அவ அப்பா வளர்த்துவிட்ட சினிமா ரசனையும் அவளைப் புடிச்சிகிச்சு. கம்பன், பாரதி, வேர்ட்ஸ்வொர்த் ஷெல்லி, நேரு, ஜெயகாந்தன், கி ராஜநாராயணன், கண்ணதாசன், எம்எஸ்வி, பாலச்சந்தர், கேஎஸ்ஜி, சிவாஜி கணேசன் எல்லாம் நம்ம அப்பாவுக்கு சொந்தக்காரங்கன்னே ரொம்ப நாள் நெனச்சிட்டிருந்தா. இத்தனை இருந்தாலும் படிப்புல சூரியா இருந்தா.
அவ அப்பாவும் அம்மாவும் ஹெட்மாஸ்டர்சா இருந்த ஸ்கூலிலயே படிச்சா. அங்க ஏகப்பட்ட லோக்கல் பஞ்சாயத்துங்க ஓடும். நெறய வாத்தியானுங்க இவ படிக்கறத பாராட்டுற மாதிரித் தெரிஞ்சாலும் அதுல ஒரு கிண்டல் இருக்கறத இவ உணர்ந்துகிட்டா. அத்தனை பேரிலும் இவகிட்ட ஏதோ ஒரு திறமை இருக்குன்னு நெனச்சது பெஞ்சமின் வாத்தியாரும், தெய்வசிகாமணி சாரும் மட்டுந்தான். ஏழாவதுல பெஞ்சமின் சாரின் வகுப்புகள் இவளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துச்சி. அப்ப அவர் ரிடையர்ட் ஆகற வயசு. பழைய காலத்து ஆளு. இவளுக்குத் தெரியாத என் எஸ் கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர் நடிச்ச படங்களின் காட்சிகளை கிளாஸ்லயே அருமையா நடிச்சு பாடிக் காட்டுவார். சுருள் முடியோட பென்சில் மீச வைச்சு என்எஸ்கே போலவே பகுத்தறிவு சமத்துவம் பத்தியெல்லாம் “கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்த்தது தமிழ்நாடு” அப்டின்னு கிந்தனார் கதைய அவர் பாடி ஆடறப்ப தான் லீலி புஷ்பத்துக்கு இவனுங்க சமூக நீதி லெச்சணமெல்லாம் புரியுது. “நாம எல்லாம் யூதப் பரம்பரை. அதான் இவ்ளோ ஒயரமா, பருமனா இருக்கோம்னு” இவ ஆச்சி சொல்லும். அதையெல்லாம் உண்மையின்னே நம்பியிருந்த இவ, “அடேய்களா, என்னென்னெ சொல்லி என்னை வளத்திருக்கீங்க”ன்னு சிரிக்கறா. இவ போயி எப்படி இவ்ளோ மார்க் எடுக்கலாம்? அப்டின்றதே நெறய வாத்தியானுங்களுக்கு எரிச்சல்னு தெரிஞ்சிக்கறா. எப்பவுமே மத்தவங்க கிட்ட இருக்கறதப் பாத்து பொறாமப் படறதோ, நமக்கு அது வேணும்னு அடம் புடிக்கறதோ இவளுக்குப் பழக்கமேயில்ல.இருக்கறதுல சந்தோஷமா வாழறத தான் அம்மா சொல்லித் தந்திருக்கா.அதனாலயே தன் புத்தியால வாழ்க்கையில மேல வந்துடுவோம்னு மனசார நம்புனா. இவளோட மொழிநடைய உணர்ந்து முதல் கவிதையை, நாடகத்தை எல்லாம் வகுப்புல எழுத வச்சது பெஞ்சமின் சார் தான். இந்த புள்ளைக்குள்ள படிப்பத்தாண்டி வேற ஏதோ ஒண்ணு இருக்குன்னு சொல்லித்தந்த அவரை எப்பவும் நெனச்சிக்கறா.
திருக்குறள் சங்க இலக்கியங்கள், ஓ ஹென்றி, சாண எரிவாயுக் கலன் ஆக்சிஜன் நைட்ரஜன் உருவாக்கும் ஆய்வுகள், காந்தங்கள், வேதியியல் சமன்பாடுகள், எலக்ட்ரான் – நியூட்ரான், பானிபட் யுத்தங்கள், அடிமை வம்சம், லோடி வம்சம், மொகலாயர் எல்லாத்தையும் இவ மகிழ்ச்சியா பெருமையாத்தான் படிச்சா.
கரெக்டா சொல்லனும்னா ஹைஸ்கூல் வரைக்கும் கணக்குத் தவிர வேற எந்தப் பாடத்துக்கும் அவளுக்கு வாத்தியானுங்களே தேவைப்பட்டதில்ல. சும்மா வாசிச்சாலே புரியும்.
மத்த புள்ளைங்க எக்சாம் எழுதறத பெரிய தண்டனையா நெனச்சப்ப, இவ அத்தனை குதூகலமா பரீட்சைங்கள எழுதுனா. இவளோட விடைத்தாள்களை வகுப்புல மாடல் ஆன்சர் ஷீட்டாக காட்டுனாங்க. அதெல்லாம் தனக்கு வைக்கப்படும் ஆப்புகள்னு தெரிஞ்சிருந்தா பாவம் அவ அவ்ளோ சந்தோஷப்பட்டிருக்க மாட்டா இத்தனை பாடங்களையும் நாவல் படிக்கற மாதிரி நெனச்சித்தான் வாசிச்சிருக்கான்னு அவளுக்கு அப்பத் தெரியல. அவளோட ஆர்வம் வாசிப்பும் எழுத்துந்தான்னு கண்டுபுடிச்சு வழிநடத்த வாத்தியார்களுக்கோ, சிலபஸ்க்கோ தெரியல. அது இப்போதைய இந்தியக் கல்வி முறையிலேயே இல்ல.
ஒன்பதாம் வகுப்பிலிருந்தே அவ வாழ்க்கையில எம்பிபிஎஸ்னு ஒரு பீட புடிச்ச நாலெழுத்து வந்துடுச்சு.
நீ படிச்சு ஒரு டாக்டராகனும்னு அந்த ஊருல கெடந்த சொறி நாயிலிருந்து தச்சனுக்குப் பொறந்து கடவுளான ஏசப்பா கோயில் பிச்சைக்காரன் வரைக்கும் எல்லாரும் சொல்லிட்டாங்க.
பத்தாங்கிளாஸ் பாடங்கள் கழுத்த புடிச்சப்பவும், கெடச்ச கேப்புல வாசிப்பா. சுஜாதா அப்ப குமுதம் பொறுப்பாசிரியரா ஹைக்கூ, கம்ப்யூட்டர், சிற்றிலக்கியம்னு தன் அசால்ட்டான மொழி நடையில ஒவ்வொன்னையும் அறிமுகப்படுத்திக்கிட்டிருந்தாரு. ‘வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் வசப்படவில்லையடி’ அப்டினு வைரமுத்து சினிமாவில் கவிமொழியை உயர்த்தி பிடிச்சிக்கிட்டிருந்தாரு. அவளுக்கு அது தான் தனக்கான வழின்னு வரையறுத்துக்கத் தெரியல. கணக்கில் செண்ட்டம் எடுத்தும் மெடிசன்தான் படிக்கணும்னு ப்யூர் சயின்ஸ் குரூப்புல அவள சேத்தாங்க. அதையும் சின்சியராத்தான் படிச்சா. ஆனா, அப்பவே அவ மனசு அதுல எல்லாம் முழுசா பொருந்தல. ஏதோ ஒரு தேடல் மனசுக்குள்ள முணு முணுத்துகிட்டே இருந்துச்சு. அதை கவனிக்க முடியாத அளவுக்கு பாடங்கள் எல்லாத்தையும் மறைச்சிடுச்சி.
நெல்லை ஒரைசா சடைவான்னும், செம்பருத்திப்பூவை ஹைபிஸ்கசுன்னும், மயில் பச்சையை காப்பர் சல்பேட் கலருன்னும் சொல்லிக்கிட்டிருப்பா. ஆனா, இதெல்லாம் அவளுக்குச் சொற்களின் மேலிருந்த ஈர்ப்பு அப்டின்னு இருவது வருஷம் கழிச்சி தான் தெரிஞ்சது.
அத்தனை ஆர்வமா படிச்ச பிள்ளை அடுத்த கட்டத்துக்கு போக பண்ண எல்லா முயற்சிகளும் கலைஞ்சிடுச்சி. எழுதுன எந்த மருத்துவக்கல்லூரி நுழைவுத்தேர்விலும் எடம் கெடைக்கல.பெய்டு சீட் வாங்கற அளவுக்கு வீட்லயும் வசதிகள் இல்ல. அப்பத்தான் எம்பிபிஎஸ் இல்லன்னா என்ன வேற மெடிக்கல் கோர்ஸ் படியேன் அப்டிங்குற சிம்பிளான தீர்வு அவளுக்குச் சொல்லப்படுது. என்னன்னே தெரியாம வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரியில மருத்துவ உதவியாளர் டிப்ளமோ படிப்புல சேர்ந்தா. அங்க போய் ஜாயின் பண்ண மொத நாள் கூட லீலி புஷ்பமும் அவ அப்பாவும் அங்கிருந்த பழைய சர்ச் கோபுரம், மணிக்கூண்டு, வேலூர் சென்ட்ரல் சர்ச்சில் மாட்டியிருக்கற வெங்கல காண்டாமணி கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து ஐரோப்பிய மிஷனரிங்க ஆட்டயப் போட்டதுன்னுதான் கத பேசிக்கிட்டிருக்காங்க. மத்தபடி அவ படிப்பு, வேலை பத்தியெல்லாம் எந்த ஐடியாவும் இல்லை. மொத மொத வார்டுக்குப் போயி அங்கிருந்த வேலைகளைப் பாக்குறப்ப தான் எத்தனை ஒசறத்துல இருந்து பள்ளத்துல தான் தள்ளப்பட்ருக்கோம்னு அவளுக்குத் தெரியுது. பதினேழு வயசு வரையில அவளுக்குத் துணி அலசவோ, சாப்ட்ட தட்டை எடுத்து கழுவப் போடவோ, பெருக்கவோ தெரியாது. அவ வீடு எப்பவும் நாலு வேலையாட்கள் நெறெஞ்ச எடம். ஸ்கூல் பேக் கொஞ்சம் வெயிட்டா இருந்தா அதத்தூக்க ஆளனுப்புவா அம்மா. இங்க எவன் எவனுக்கோ பெட் மாத்தறதையும், வீல் சேர் தள்ளுறதையும், டாக்டருங்களுக்கு பொறத்தால பேசின் தூக்கிட்டுப் போறதையும் பாத்தா அவ அப்பா அம்மா தாங்கவே மாட்டாங்க.
பக்கம் பக்கமா எழுதற லீலி புஷ்பத்துக்கு இங்க டிக் பண்ற வேல மட்டுந்தான்.எப்பேர்பட்ட கொடூரமான முறையில் தான் ஏமாத்தப்பட்டிருக்கோம்னு உணர்ந்து மனங்கசந்து அழறா. இதுநா வரையில தான் நெனச்சிட்டிருந்த எல்லாமே வீணாப் போயிடுச்சின்றத அவளால ஏத்துக்க முடியல. வாழக்கையோட யதார்த்தம் புரியாம மருண்டு நிக்கறா. யார் மேல கோவப்படறதுன்னு கூடத் தெரியல.சின்ன புள்ளையில இருந்தே பக்தியா கும்பிட்ட சாமிங்களப் பாத்து நாக்க புடுங்கிக்கிற அளவுக்கு கேக்கறா. “யோவ், உன்னையே அடிச்சி சிலுவையில் தொங்க உட்டானுங்க. நீ என்னை காப்பாத்தப் போறியா? அப்படியே காலத்துக்கும் தொங்கு. அடேய் சுப்ரமணி உம் புத்திக்குத்தான் ஒட்டுத்துணிக்கூட இல்லாத உருவிக்கினு உன்னக் கோவணத்தோட உங்கப்பனும் ஆத்தாளும் வெரட்டிட்டாங்களா? அடியே பச்சியம்மா, என்னாடி ஒய்யாரமா வேப்பமரத்துல ஒக்காந்துனுக்கீற. ஓங்கி உட்டன்னா தவட பேந்துடும்னு” – இவ விட்ட சாபணைகளையும் வைத புளுபுளுத்த வசைகளையும் தாங்காம தோழர் ஏசு, உடன்பிறப்பு முருகன், ரத்தத்தின் ரத்தம் பச்சையம்மன் எல்லாரும் ஒண்ணாப் போயி தண்ணியில்லாத பாலாத்து மண்ணுக்குள்ள பொதஞ்சிட்டதா மத்த தெய்வங்க பயந்து பேசிக்கிட்டாங்க.
அவ ஜாதகத்தைப் பாத்த ஆரணி சோசியக்காரன், “நீ சந்திரன். தேஞ்சி தேஞ்சி தான் வளருவன்னு” சொன்னான்.அதே போல இவளுக்கு கோவம்கூட கொஞ்ச நேரந்தான். அப்பறம் தானாவே, “சரி சரி உடு. எனக்கும் உன்னிய விட்டா திட்றத்துக்கு யார் இருக்கான்னு” இயேசய்யங்கிட்டயே போவா.அந்தாளும் வெக்கமே இல்லாத இவ கிட்ட பேசும். மனசொடஞ்சி போயி உக்காந்துக்கறது, இப்பவெல்லாம் புள்ளிங்க ஆ ஊன்னா மாடியில இருந்து குதிக்கறது, கவுத்துல தொங்கறதுன்னு பண்ணுதுங்களே அப்டியாபட்ட வழக்கமெல்லாம் இவளுக்கு எப்பவுமே இல்ல. அடுத்து இன்னான்னு ஒரு கை பாத்துடுவா.சின்ன பிள்ளையில இருந்தே அவ மனசுக்குள்ள ஏதாச்சும் இலக்கை வச்சிருப்பா.அது அவ மூடைப் பொறுத்து அப்பப்ப மாறும்.
ஒலிவ மரத்தையும் வாற்கோதுமையும் பாக்கணும், எம்ஜிஆர் வீட்டுல சாப்புடணும் தேம்ஸ் நதியில எறங்கனும், ரஜினி கிட்ட பேசணும், கி.ரா காலடியில் உக்காந்து கத கேக்கணும், ஜேகே சபைக்கு போகணும், இமய மலையில் ஏறனும்னு எதையாவது மனசுல வச்சிருப்பா.இப்பவும் அப்படியே அடுத்து என்னா பண்றதுன்னு யோசிக்கறா. ஆனா, வெளியேற முடியாத மாயச்சகடத்துக்குள்ள வந்து வுழுந்தாச்சின்றது புரியல.கொழம்பிப் போறா.
வாழ்க்கையில இந்தக் கட்டத்துல அவளக் காப்பாத்துனது தமிழ் இலக்கியம் மட்டுந்தான். ஜானகிராமனின் வரப்புப் பூக்களும், ஜெயகாந்தனின் ஓங்கூர் சாமியாரும், அசோகமித்திரனின் புலிக்கலைஞனும், கி.ராவின் கோபல்ல கிராமமும், லாசாரவின் அபிதாவும், ப.சிங்காரமும், வண்ணநிலவனும் தான் தனக்கான பாதைன்னு உணர்ந்துக்கறா. இணையமோ, இலக்கிய நட்புகளை உருவாக்கும் வாய்ப்புகளோ அவளுக்கு அப்ப இல்ல.
அவ ஒரு பொம்னாட்டியா இருந்தது கூட அதுக்கு காரணம். ஆனாலும் உலக இலக்கியங்கள், நல்ல சினிமாக்கள்னு தானாகவே தேடித்தேடி தெரிஞ்சுகிட்டா. பின்னாடி காலங்களில் ஜெமோ, சாரு ,மாமல்லன், பாலகுமாரன் இன்னும் நெறய படைப்பாளிங்க, வாழ்க்கையின் ஓரிடத்துல இலக்கியம், சினிமா மட்டுந்தான்னு துணிச்சலா முடிவெடுத்த நிகழ்வுங்க எல்லாம் தெரிஞ்சப்ப , தனக்கு அப்படியெல்லாம் சொல்லித்தரக் கூட யாரும் இருந்ததில்லையேன்னு நெனைச்சிகிட்டா. என்ன எழுதுறோம்னு தெரியாமலேயே நிறைய திரைக்கதைகள், திரைப்பாடல்கள் கவிதைகள் எல்லாம் எழுதி வச்சிருந்தா. அப்ப மட்டும் சரியான வழி கெடச்சிருந்தா அவ வாழ்க்கை மாறியிருக்கும். அப்பிடியெல்லாம் நடந்துட்டா அது லீலி புஷ்பத்தோட விதி இல்லையே. எதுவுமே நடக்கல. வாசிப்பு, லைப்ரரி ஆராய்ச்சிகள், தீசிஸ் பட்டங்கள், பெரிய பொறுப்புள்ள வேலை, அழகான பூ மரங்களின் கீழ் நடக்குறது, ரசனையான நண்பர்கள், கவிதைகள் இப்பிடியெல்லாம் வாழ்க்க இருக்கும்னு கனவுகண்ட கல்லூரிக்காலம், கே பேசின், ட்ராலி தள்றது, டெம்ப்ரேச்சர் செக்கிங், பெட் பேன் அப்டினு சிறுமைக்குள்ள அவள அடக்கிப் போடுது. எப்பவும் உற்சாகமா சிரிச்சிட்டே இருக்கும் லீலி புஷ்பம் மனசுக்குள்ள நொறுங்கிப் போறா. தன் நிலைய நெனச்சுக் குமுறுறா. வெறியில உக்கிரமாகுறா. அவளுக்குள்ள இருந்த காளி வெளியில வருது. இந்த சமூகம் வகுத்து வச்சிருக்கற எல்லாத்தையும் மீறணும்னு முடிவெடுத்தா. அதுநாள் வரையில முன்னோருங்க, பெரிய மனுசனுங்க பேச்சுக்கள கேட்டு அப்டியே செஞ்சவ, அதுக்கப்புறம் எவன் எது சொன்னாலும் கேட்டதில்ல. தனக்குப் புடிக்காத மெடிக்கல் பீல்டுல இருந்து வெளியேறுனா. அறிவுகெட்டவ, மெண்ட்டல், யதார்த்தம் புரியாதவன்னு என்னென்னமோ பேரெடுத்தா. ஒரு கட்டத்துல இனியும் தான் பார்க்க வேண்டிய அவமானங்கள் எதுவுமில்லைன்ற நிலைக்கு அவ வந்துட்டா. வாழ்க்கை எனும் நதியின் கொடூரச் சுழலில் முட்டி, மோதி மூழ்கி , திணறி அவ கரையேறுவதற்குள்ளாக காலங்கள் கடந்தே போயிடுச்சி. அவள் செஞ்ச ஒரே தப்பு நல்லா படிச்சது மட்டுந்தான்.அது தான் ஊழ்வினை.
அப்பறம் அவ இயல்புப்படியே எப்படியோ அடிச்சி புடிச்சிப் போராடி ஒரு கீழ்நிலை அரசுப் பணிக்குள்ள வந்துட்டா.
வழக்கமா எல்லாரும் தெரியாததைக்கூட தெரிஞ்சமாறி சொல்வாங்க.இவளுக்கு மட்டும் தன்னோட படிப்பு, அறிவு எல்லாத்தையும் மறைக்க வேண்டிய நெலம. அதுக்கெல்லாம் அசந்து போறவளா லீலி புஷ்பம?
“நீ என்னைக்குன்னாலும் கெவர்மண்ட் வேலைக்குப் போவ”ன்னு வேலூர் கோட்டை பிளாட்பாரத்துல உக்காந்து சொன்ன கிளி சோசியனை அசிங்கசிங்கமா திட்டிக்கிட்டே நான்காம் நிலை எடுபிடியா, அரசாங்க வேலைக்குப் போறா. அங்குதான் வாழ்வின் நிஜம் அப்டிங்குற பூதம் இவளுக்கு காட்சி தருது. இவளுக்கிருந்த நுண்ணறிவில் ஒரு பங்கு கூட இல்லாத தற்குறிகளின் கீழே வேலை செய்யறா. எந்த வரைமுறைகளை மீறி வரணும்னு நெனச்சாளோ, அதையே வாழ்க்கை இலட்சியமா வாழற ஒரு கூட்டத்துல, அதுங்களுக்கெல்லாம் ஏவல் செய்யற எடத்துல வந்து, வாழ்வாதாரத்துக்காக மாட்டிக்கிட்டா. “முயற்ச்சி, கர்ப்பனை, நருமனம்” அப்டின்னுலாம் செந்தமிழில் எழுதும் அதிகாரிகளுக்கு குணிந்து வணக்கம் வைக்கிறா. தான் எழுதற தமிழ் மேல இவனுங்களுக்குப் பெரும மயிறு வேற. பத்து வயசுல ஷேக்ஸ்பியரை வாசிச்சவள Intelligence ஸ்பெல்லிங் எழுதத்தெரியுமான்னு ஒருத்தி கேக்குறா. ‘தெரியாது மேம்’னு பவ்யமா இவ பதில் சொல்றா.
இப்பவெல்லாம் என்ன நடந்தாலும் மௌனமா இருந்துகிட்டு மனசுக்குள்ள சிரிச்சிக்கத் தெரியுது..அவளும் எவ்ளோ நாள் தான் மூக்க ஒடைச்சுக்கறது? இந்த பக்குவம் வர அவ கொடுத்த விலை என்னன்னு அவ மனசுக்குத் தெரியும்.
அரசுத்துறையில இருக்குறவங்களுக்கு எப்பவும் தன் பொண்டாட்டி புள்ள குசு பெருமை பேசறது தான் வேலை. “என் சன் மெடிசன் ட்ரை பண்றான். உனக்கு நீட் எக்சாம்னா என்னன்னு தெரியுமா?”ன்னு ஒருத்தன் கேக்கறான். இந்தக் கேடர்ல வேல பாக்குற இவளுக்குப் போயி இதெல்லாம் எங்க தெரியப்போகுதுன்னு தெனாவட்டா நெனச்சித் தான் அவன் கேட்டது. “போடாங்கோத்தா…தாயோளி..கண்டரோளித் தே….. லவுடே கபால் டேஷ்”னு மனசார வஞ்சிகிட்டே, இல்லைன்னு தலையசைக்க கத்துக்கிட்டா. அது அவனை மட்டும் கேட்ட கேள்வியா என்ன? இப்பவும் எல்லாத்தையும் கடந்து, தன்னைத் தலைகீழாத் தள்ளுன வாழ்க்கையைப் பாத்து எக்கலிட்டு சிரிக்கறா. உயர்ந்த சிகரங்களை அடையும் கனவுகளை மனம் முழுக்கச் சுமந்து, மலைகளில் காடு கரைகளில் துள்ளித் திரிந்து, நேசம் மிக்க பெற்றோரால் உச்சி முகர்ந்து அரவணைக்கப்பட்டு மகாராணியாய் வளர்ந்த அறிவார்ந்த உற்சாகமான ஒருசிறு மகள் அவள் நினைவுகளில் எப்பவாவது வரத்தான் செய்றா.
காலம் தான் எத்தனை கருணையற்றது. இன்று அவள் கனவுகள் இல்லை; எத்தனை துயரிலும் தூண் போலத் தாங்கிய அவள் பெற்றோர் இல்லை. “சாரோனின் ரோஜாவைப்போல மலர்ந்து, பள்ளத்தாக்கின் லீலி புஷ்பத்தைப் போல செழிப்பாய்” என்று விவிலிய வார்த்தைகளால் மனதார வாழ்த்திய பெஞ்சமின் சார் இல்லை. ஆனாலும் அவள் அதே உற்சாகத்துடன் அடுத்தது என்னன்னு எல்லாரையும் வெறுப்பேத்திக்கிட்டு குதுகலத்துடன் நகர்கிறாள். அது தான் லீலி புஷ்பம்.
*****