நாடோடித்தடம்

SASIKALA
என் கணவர் கடவுள் மறுப்பாளர் மட்டுமல்ல த்தீவிர நாத்திகவாதியும் கூட. ஆனால் அவரின் தந்தை ஆன்மீகவாதியாக இருந்தவர். சிறிது காலம் காவி கட்டிக் கொண்டு காசியில் சந்நியாசி போல் வாழ்ந்தவர் அவரின் தந்தை. நீங்கள் எப்படி நாத்திகவாதி ஆனீர்கள் ? என்று இவரிடம் அவ்வப்போது வினவுவதுண்டு. பெரியாரை வாசித்த பிறகே இம்மாற்றம் என்பார்.
தினமும் காலையில் குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி பூஜை செய்வது பாரதியின் வழக்கம். நான் செய்து கொண்டிருந்ததை பார்த்து விட்டு அவனும் அவ்வாறே பூஜை செய்ய ஆரம்பித்தான். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓர் நாள்.
“அம்மா இனிமேல் நான் சாமி கும்பிட மாட்டேன்” என்றான்.
“ஏன் பாரதி?” என்றேன்.” எனக்கு கடவுள் நம்பிக்கை போயிடுச்சும்மா”. அன்றுதான் அவர் “பெரியார் இன்றும் என்றும்” புத்தகம் வீட்டுக்கு வாங்கி வந்திருந்தார்.
புத்தகம் வீட்டுக்குள் நுழைந்ததற்கே இந்த எஃபக்ட்டா என்று நினைத்துக் கொண்டேன் 🙂
இப்போது..
“நாடோடித் தடம்” புத்தகத்தில் இருந்து….
“கடவுள் நம்பிக்கையும் கொண்டிருக்கவில்லை” என்றால், நான் நாத்திகன் இல்லை. நாத்திகம் என்பது ஒரு தத்துவ நிலைபாடு. மேலும் நாத்திகர்கள் தத்தம் காரியங்களுக்கு, கடவுளோ விதியோ அல்ல, தாந்தாம் பொறுப்பு என்கிற கொள்கையர் ஆகையால், பொதுவாக துணிச்சலும் ஓரளவு ஒழுக்கமும் உள்ளவர்களாக இருப்பார்கள். நான் அவ்வளவு துணிச்சல் உள்ளவனும் இல்லை; என் ஒழுக்கம் பற்றிச் சொன்னால் உலகமே சிரிக்கும். ஓர் ஒத்தூதாக் கொள்கையன் (non-confirmist) நான். விதியிலும் ஊழாமல் தன்னையும் வியவாமல், சாரச்சார்ந்து அலைபவன்.”
இந்த புத்தகத்தை ஒரே அமர்வில் வாசித்து முடித்து விட முடியும் என்றாலும், நாம் அவ்வாறு வாசிக்க மாட்டோம். காரணம் ராஜசுந்தரராஜன் சாரின் தமிழ். உள்ளங்கையில் இருக்கும் தேனை ஒரே மூச்சாக வாயில் இட்டுக் கொள்ள மாட்டோம், அல்லவா. அதன் சுவையை நுணி நாக்கால் நக்கி நக்கிதான் சுவைப்போம். அதுபோல்தான் இந்தப் புத்தகமும்.. உள்ளங்கை தேன். அதை ரசித்து ரசித்து நிதானமாகத்தான் வாசிக்க முடியும்.
பெண்களை இவ்வளவு தூரம் ஒரு மனிதரால் ரசிக்க முடியுமா என்பதே ஆச்சர்யம். பெண்களை, வாழ்க்கையை.. பயணமாக கொண்டாடும் ஒருவரால் மட்டுமே இது போன்ற படைப்பையும் கொடுக்க முடியும். பெண்கள், காமம் என வரும் போதெல்லாம் இவரது தமிழ் உச்சத்தை தொடுகிறது.. காமக்கலியாட்டத்தின் உச்சத்தில் சில விநாடிகள் தொலைந்து போவோமே அதுபோல் !! கோவிலின் கருவறையில் வீற்றிருக்கும் மூலவரைப் பார்க்கும்போது எவ்வித சிந்தனையும் இல்லாமல் மூலவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்போமே அதுபோல் !!
புத்தகத்தில் இருந்து..
“மாடியில் ஓர் அறைக்குள் என்னை இட்டுக்கொண்டு போய் அவள் தன் பொட்டலம் பிரிக்க, நானும் என் வழக்கப்படி பனியன் தங்க (அது ஏனென்றால், உடற்சூடு காத்து உறுநேரம் நீட்டிக்க) அம்மணம் கவிழ்ந்தேன். அக்கணம், என் பனியனுக்குள் இருந்து நழுவிக் குதித்தது துளசி மாலை.
– இது என்ன ?
– சபரி மலைக்குப் போட்டிருக்கேன்.
அம்மட்டில், அவள் என்னைப் புரட்டித் தள்ளிவிட்டுத் துணிகளை வாரிக்கொண்டு ஓடியே போய் விட்டாள். உடுத்திக் கொண்டு நானும் கீழிறங்கி வந்தால், அங்கே ஓர் ஓரமாய் அவள் பணிவு தோற்ற, எரிச்சல் பிதிருமோர் எதிர்முகம் காட்டுவாள் அக்கா.
– நான் தேவடியாக்குடி நடத்தி ஒழுங்காப் பொழைக்குதேன்னு மோசம் பண்ண வந்திட்டியா நீ ? கட்டுப்பாடு இல்லைனா என்னத்துக்கு மாலை போடுதே ? ஒழுங்கா மருவாதையா வீட்டுக்குப் போன ஒடனே அதெக் கழட்டிப் போட்டுடு, என்ன ?
– சரி.
– கோமதி, நீ உள்ளெ போ ! ஸ்டெல்லா, நீ இந்த ஆளோட போம்மா !
நான் ஸ்டெல்லாவோடும் போனேன்; சபரி மலைக்கும் போனேன்.”
இதை வாசிக்கும்போது யாருக்குமே சிறு அதிர்வு ஏற்படவே செய்யும். ஆனால் அதையும் மீறிய அவரது தமிழ் நம்மை போதையுறச் செய்கிறது.
சபரி மலைக்காக இருக்கும் நோன்பு பற்றி இவ்வாறு கூறுகிறார்..
“நோன்பு காப்பதென்பது வழிநடைப் பயணத்துக்கு உடம்பை வலுவேற்றுவான் உள்ள ஒரு பயிற்சிதானே அல்லாமல் வேறில்லை”
எந்த புத்தகத்திலும் முன்னுரை வாசிக்கும் பழக்கமில்லை. ராஜ சுந்தரராஜன் சாரின் தமிழ் தரும் போதையை தவற விடக்கூடாது என்று முன்னுரையும் வாசித்தேன்.
முன்னுரையில்..
‘என் காதலி இன்னொருவனுக்கு மனைவியாகிப் போனாள்’ என்பதைக் காட்டிலும் ‘என் மனைவி இன்னொருவனுக்கு காதலியாகிப் போனாள்’ என்பதில் மிகும் துயரம் எங்கிருந்து வருகிறது ? இதை அறிந்து தேற என் கழிசல்களைத் திறந்து தேடியதில், அங்கிருந்தே சாதி, சமயம், இனம், இந்தியம் எனப் பாசக் கயிறு வீசும் அத்தனையும் வருகிறதைக் கண்டேன். இன்று, முன்னளவுக்கு துக்கமில்லாதவன் நான்.”
இந்தப் புத்தகத்தை பற்றி முன்பு நான் இட்டிருந்த பதிவொன்றில் ராஜசுந்தரராஜன் சாரின் மொழி “ராஜ போதை” என குறிப்பிட்டிருந்தார் ஜ்யோவ்ராம் சுந்தர்.
புத்தகத்தில் இருந்து..
“சீட்டுக் கோரினான் வாயிற்காவலன். மூன்று ரூபாய் நுழைவுக் கட்டணமாம். சீட்டு வாங்க வேண்டுமாம். ‘வாயிலோயே ! வாயிலோயே ! அறம் பொருள் இன்பம் முறைப்பட வகுத்துக் குறள் செய்தான் கோட்டத்து வாயிலோயே ! உரூபாய் மூன்றுமன் உண்டெனிற் பசித்தீ எரி வாய் வயிற்றோடு இவண் படுவேன் கொல் ?’ என்று புலம்பத்தான் எண்ணினேன், ஆனால் ‘பயனில சொல்லாமை நன்று’ என்றான் ஐயன் புலமையும் ஓர்ந்து, முன்வைத்த காலை முனகாமல் பின்வலித்தேன். அன்று சூள் உரைத்துக் கொண்டேன், ‘இலவசமாக வாய்த்தால் அன்றி இக் கோட்டத்துக்குள் நுழையேன்’ என்று.
ஆண்டு 2007 தொடக்கத்தில், கவிஞர் தேவதேவனுக்கு அவர் கவிதைகளுக்காக முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்கள் பரிசு வழங்குகிற அரசு நிகழ்ச்சி வள்ளுவர் கூட்டத்தில் நடக்கப் போகிறது என்று என் செவிக்கு உணவு வந்து சேர்ந்தது. இலவசமாக நுழைவதற்கு ஒரு வாய்ப்பு ! எண்ணியது எண்ணியாங்கு எய்தக் காத்திருந்தேன். ஆனால் அவ் விழாவை அவர்கள் கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றிவிட்டார்கள். ஊழிற் பெருவலி யாவுள ?”
ஆம், ராஜசுந்தரராஜன் சாரின் தமிழ் “ராஜ போதை”தான். வாங்கிப் பருகுங்கள்.
யாம் பெற்ற இன்பம் மொமண்ட் 🙂
- ARUNA RAJ
எனக்கிருக்கும் தமிழறிவுக்கு அவருடைய தமிழை புரிந்து கொள்ளுதல் மிகவும் சிரமம் என்று தெரிந்தே ஆரம்பித்த புத்தகம் தான் நாடோடித்தடம்.
தமிழ் அன்னை மொழியாகவே இருந்தாலும் எந்த திக்கத்து தமிழும் அல்லாத, வேற்று மொழி கலப்பும் இல்லாமல் இத்தனை செறிவான தமிழை நான் எங்கும் வாசித்தவள் இல்லை( பாருங்க அவர மாதிரியே?) .
குஜராத் , மும்பை, கொல்கத்தா,தில்லி, வதோதரா, கேரளா, குவைத், பாரதீப், ஜலந்தர், தூத்துக்குடி, சென்னை , காக்கிநாடா (பாவாடை நாடா இந்த எல்லா ஊர்களிலும் ? )… இவர் அலைந்து திரிந்த அத்தனை ஊர்களிலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லை. தூத்துக்குடியில் இருப்பதாக
வாசித்துக்கொண்டிருக்கும் போதே குவைத்துக்கு பறந்து நடுவில் வதோதராவில் தரை இறங்கி கிருஷ்ணாபுரத்துக்கு பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருப்போம். எந்த ஊரில் இவர் இருக்கிறார் என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும் எல்லா கட்டுரைகளிலும். அதைப் போலவே வயதும். கல்யாணம் ஆகிவிட்டதாக நினைத்த இடங்களில் ஆகாமலும் and vice versa. குழப்பித் தெளிவித்து இழுத்து செல்கிறார் ஊர் ஊராக.
வாலிப வயதில் கிட்டதட்ட ஒரு காசனோவா வாழ்க்கை. அவருடைய அனுபவங்களை வாசிக்க வாசிக்க அவரது இளவயது தோற்றத்தை கற்பனை செய்து பார்த்து தோற்றேன். ஒரு ஃபோட்டோ அனுப்புங்க சார் என்று கேட்டுவிடலாம் என்று கூட தோன்றியது. ஏனெனில் அவரை இதுவரை ஒரே முறை தான் சந்தித்துள்ளேன். என்ன காரணமோ தெரியவில்லை என்னால் இந்த சம்பவங்களோடு அவரைப் பொருத்திப்பார்க்கவே முடியவில்லை. எழுத்து வேறு எழுத்தாளர் வேறு என்ற தத்து பித்து இங்கே செல்லுபடியாகாது. ஏனெனில் இது அந்த எழுத்தாளனின் வாழ்க்கை குறிப்பு. (கிட்டதட்ட )சுய சரிதை. அதனால் எனக்கு ஃபோட்டோ கண்டிப்பாக வேண்டும்.
இவ்வளவு பகிரங்கமாக ஒருவர் தன்னைப் பற்றி எழுத முடியுமா என்று ஒவ்வொரு கட்டுரையின்போதும் பல நூறு முறை யோசிக்க வைக்கிறார். மனதுக்குள் புழுங்கி செத்தாலும் நம்மை சுற்றியிருப்பவர்களிடம் மானம் மரியாதையோடு வாழ வேண்டும் என்பதையே வாழ்நாள் குறிக்கோளாக கொண்டு உழன்றுக் கொண்டிருக்கும் இந்த போலி சமூகத்தில் தன்னைப் பற்றி எந்த ஒளிவு மறைவுமில்லாமல் எப்படி இந்த மனிதரால் எல்லாவற்றையும் கொட்ட முடிந்தது??
காணும் பெண்கள் அனைவரையும் புணர்ந்து கொண்டே மனைவி மீது தீரா காதலும் கொள்ளுதல் சாத்தியமா என்ற கேள்வி ஆண்களுக்கு எழ வாய்ப்பில்லை. பெண்களுக்கு இந்த கேள்வி தோன்றாமல் இருப்பதும் சாத்தியமில்லை. நாமாக வரித்துக்கொண்ட சமூக கட்டுப்பாடுகள்(ஒன் ஃபார் ஒன் – tit for tat என்று அர்த்தப்படுகிறதா??) பற்றி நமது ஹார்மோன்களும் தெரிந்து வைத்திருக்குமா என்ன? தெரிந்து வைத்திருக்காது என்று தான் கல்யாணம் , சமூகம், பிள்ளைகள், மனக்கட்டுபாடு,ஆன்மீகம் , யோகா , சன்யாசம் என்று மேலும் பல வழிமுறைகளை வகுத்து கொண்டோம்? இயற்கையை மீறிய , அதை கட்டுக்குள் வைக்க முயலுகிற எந்த கட்டுப்பாடும் எவ்வளவு தூரம் நிலைத்து நிற்கும் என்று நமக்குள் கேள்வி வருகிறது. Wouldn’t the pent up emotions find the path of least resistance?
செல்லும் ஊர்களிலெல்லாம் இயேசு நாதர், ஐயப்ப சாமி, கோயிற்சிலைகள் , சிற்பங்கள், கொதிகலன் வெப்பநிலை , ஜோதிடம் ,ஜாதகம், பணியிடை மாற்றங்கள், ரயில் பயணங்கள், ….. இப்படி சம்பந்தமில்லாமல் க்ராஃப் ஒரு தாறுமாரான ஈசிஜி போல இருந்தாலும் எல்லாவற்றையும் இணைக்கும் அடிநாதம் போல ஊடுருவி நிற்கிறது அவரது பரந்த , ஆழமான அறிவாற்றலும் பெண்கள் பால் அவர் கொண்ட மையலும் அன்பும்.
நடுநடுவே வரும் பாக்கள் எனக்கு புரியவில்லை என்று சொல்வது அபத்தம். உரைநடையிலேயே ஏகப்பட்ட புரியாத வார்த்தைகளை அடிகோட்டிட்டு வரும் போது யாப்புகள் எனக்கு புரிந்துவிட்டால் நான் முகநூலில் என் புகைப்படம் வெளியிடுவதையே நிறுத்திக்கொள்வேன்.
பதிமூன்று அத்தியாங்கள் முடித்த போது , ஒரு சலிப்பு தட்டியது. என்ன இந்த மனிதர் எந்த ஊருக்குப் போனாலும் பெண்ணை தேடுகிறாரே என. ஆனால் அதையும் நீர்க்கச் செய்து நம்மை உள்ளிழுத்து கொள்கிறது அவரது மொழியும், நடையும்- in the literal sense-அதாவது அவர் அலைந்து திரியும் நடைப் பயணங்கள்.
எனக்கு மிகவும் பிடித்த கட்டுரையாக நான் நினைப்பது மீளாப் போக்குகள்(தலைப்பை பாருங்க!) என்ற 19வது கட்டுரை. கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் ஆரம்பிக்கும் அந்த கட்டுரையை நான் அன்று தான் குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கும் செட்டியார் பார்க்குக்கும் சென்று விட்டு வந்து வாசித்தேன் என்றால் நம்ப முடிகிறதா? What a rare coincidence! ஆமாம் நா. தடம் என்னோடு கிருஷ்ணகிரிக்கு வந்ததை போல , திண்டுக்கல்லுக்கும் கொடைக்கானலுக்கும் கூடவே வந்தது. அடுத்த ஊருக்கு செல்வதற்கு முன் முடித்துவிட வேண்டும் என்று எனக்கு நானே கிருஷ்ணகிரியில் சொன்னதைப் போலவே கொடைக்கானலிலும் சொல்லிக்கொண்டேன்.
கட்டுரைகளுக்கு ஏன் இன்டெக்ஸ் இல்லை என தெரியவில்லை (#வாசகசாலை ….Cost control? ). மொத்தம் 21 கட்டுரைகள். ஒவ்வொன்றும் குறைந்தது பத்து பக்கங்களாவது வரும். ஒரு நாளைக்கு ஒரு கட்டுரை படிக்க முடிந்தால் என்னளவில் அது பெரிய விஷயம். கட்டுரையின் எந்த தலைப்பும் என் மனதில் நிற்கவில்லை என்று சொன்னால் அது பச்சப்பொய். தலைப்புகள் முக்கால்வாசி புரியவே இல்லை என்பது தான் உண்மை. அதே போல அட்டைப்படம் . என்ற கண்ணை கழட்டிவைத்துவிட்டு கலையோட கண்ணை கடன் வாங்கி பார்த்தும், ஏனோ என்னை ஈர்க்கவில்லை. புத்தகத்தின் உள்ளடக்கத்தை சரிய செய்கிறது அட்டைப் படம்.
புரியாத வார்த்தைகளை தனியாக எடுத்தெழுதி வந்த நான், ஒரு கட்டத்தில்(எந்த கட்டம்?) அதையும் நிறுத்திவிட்டேன். தலைக்கு மேல் வெள்ளம் போனதால் நூலாசிரியர் சொன்னதைப் போல மீனாகி விட்டேன். புத்தகத்தின் கடைசியில் கொஞ்சமே கொஞ்சம் அடிக்குறிப்புகள் தந்துள்ளார் ஆசிரியர். நியாயமாக சொன்னால் ஒரு தனி கோனார் உரை போடுமளவு எனக்கு தெரியாத/ கேள்வியே பட்டிராத வார்த்தைகள் எல்லா கட்டுரைகளிலும் மண்டிக்கிடக்கின்றன்.
காமம், காதல், புவியியல், இயற்பியல், வேதியியல், தியாலஜி, சரித்திரம்,ஜோதிடவியல்,அரசியல்… இவையனத்தும், இதற்கு மேலும் கலந்து செய்த கலவையுடன் ஒரு தனி மனிதனின் மற்ற உணர்வுகளையும்(ஆசை, கோபம் , இயலாமை, கையறுநிலை …இன்னபிற) சேர்த்த ஒரு நாவூறும் காக்டெய்ல் நாடோடித்தடம். தமிழில் தவற விடக்கூடாத புத்தகம். சமகாலத்தில் இவரைப் போன்ற தமிழறிஞர்களை அறிந்து வைத்திருப்பதே பெருமைக்குரிய விஷயமாக நினைக்கிறேன்.
மகனின் பார்வை: என்னம்மா இங்க்லீஷ் புக் படிக்கும் போது தான் தெரியாத வர்ட்ஸ் எல்லாம் பேனா வச்சு அன்டர்லைன் பண்ணிட்டு டிக்ஷ்னரி பார்ப்பீங்க , இது தமிழ் புக் தானம்மா இதுலயும் மீனிங் தெரியலையா? அப்புறம் எப்படி கருப்பி எழுதுனீங்க?
பயணக்கதைகளும்,சுயசரிதை யும் என்றும் படிப்பதற்கு அலுக்காது. அதுவும் ஆசிரியரின் அற்புதமான தமிழ் நம்மைக் கட்டிப்போட்டுவிடும்.நம் தமிழ் மொழியின் இனிமையை இவர் எழுத்துக்களில் கண்கூடாக காணலாம்