இணைய இதழ்இணைய இதழ் 75சிறுகதைகள்

தூய்மையெனப்படுவது – கோ.புண்ணியவான்

சிறுகதை | வாசகசாலை

ல்யாணிக்கு  கதவைச் சாத்தியதும்தான் புதிய காற்று நுழைந்ததுபோல இருந்தது . நிம்மதி பெருமூச்சு விடுவதற்காக அவளுக்கென பிரத்தியேகமாக  நுழைந்த காற்று அது. விருந்தினர் அறைக்குள் புதிய வெளிச்சம் பிரவாகித்திருந்தது. சன்னலுக்கு வெளியே கதிரொலி பாய்ந்து பச்சை வெளி பளீச்சென்று ஜொலித்தது. 

இதெல்லாம் அவன் வீட்டைவிட்டு வெளியேறி வேலைக்குப் போன  பிறகு உண்டான ‘பிரம்ம முகூர்த்தம்’ அதன்  பரவசம் உடல் முழுதும் வியாபிக்கும். ஆனால் இந்த  வசந்தகாலம் அந்திவரைதான் நீடிக்கும். அதன் பிறகு மீண்டும் வதைபடலம் துவங்கிவிடும். மீண்டும் வீட்டுக்குள் இருள் விழுந்து. சிலுவையில் வைத்து ஆணி அறையப்பட்ட மாதிரியான இம்சைதான். 

வாசலுக்கு எதிர்ப்புறத்தில் சுவரோடு ஒட்டியுள்ள மீன் தொட்டிப்பக்கம் வந்தாள். நீர் அழுக்கேறி துகள்கள் மிதந்து மேலேறி ஒரு அழுக்குப் படலத்தை  நிறுவி இருந்தது.  மீன்தொட்டியின் ஒற்றை வானவில் வண்ண  மீன் மட்டும் கண்ணாடிச் சுவரை முட்டி முட்டி பின்வாங்கி பின்னர் மேலும் முட்டியது. தொட்டிச் சிறையிலிருந்து வெளியேறிவிடும் அதன் பிரயத்தனத்திலிருந்து சலித்து விடுவதாய் இல்லை போலும். கடந்த சில நாட்களாக கண்ணாடிச் சுவரை நீந்தி வந்து மோதும் அதன் தொடர் செயல்களில் கிஞ்சிற்றும் பின்னடைவு இல்லை. வழக்கமாக தூய்மையான நீரில் நீந்திய மீனுக்கு இந்த பாசியும், அழுக்கேறிய  நீரின் ஒவ்வாமையை உண்டாக்க்கியதோ என்னவோ! தூய நீரிலாவது நீந்தட்டுமே என எண்ணினாள். நீரை மாற்றித் தூய்மையாக்கும் வேலையைப் பின்னர் செய்யலாம் என தள்ளிப்போட்டாள்.  சுற்றிச் சுற்றி வரும் அந்த இறக்கை போன்ற உருவ அமைப்பு கொண்ட மீன் அவளுக்கு ஆறுதல் சொல்வதுபோல இருந்தது. ‘இறக்கை’ இருந்து என்ன செய்ய, அது பறப்பதற்கானதல்ல என்று நினைக்கும்போது மனம் துணுக்குற்றது.

அதனை ஒட்டி நீள்வடிவில் நின்றுகொண்டிருக்கும் ஆளுயர கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். இடது கன்னத்தில் மூன்று விரல் அடையாளம்  பிடிக் கொழுக்கட்டைபோல  பதிவாகியிருந்தது. தடவிப் பார்த்தாள் தழும்பு பூரான்போல மேலெழுந்து அழகிய முகத்தில் சற்றே விகாரத்தை ஏற்றியிருந்தது. அப்போது மீண்டும் விழிகளில் நீர்ப்படலம் ததும்பியது!

இன்று வேலைக்குக் கிளம்பும் முன்னரே அவனின் டை முடிச்சு கொஞ்சம் விலகி சற்றுக் கோணலாகி நின்றதை சரிசெய்ய முயன்று தோல்வியுற்ற பின்னர் அதனைக் கழற்றிக் கடாசினான். அது கருநாகம்போல தரையில் சுருண்டு வீழ்ந்தது, நாயே பேயே என்று திட்டி கன்னத்தில் அறைந்துவிட்டுத்தான் வெளியேறினான். டையைக் கழற்றும்போது கழுத்து முடிச்சின் நேர்த்தி கலையாத வண்ணம் கவனமாக நீக்கியிருக்க வேண்டும் அவன். அவசரமாக இழுத்து கழற்றி வீசியதால் அந்த முடிச்சின் கட்டமைப்பு  கலைந்துவிட்டது. டையிடம் கூடவா தன் தீராச் சினத்தைக் காட்ட வேண்டும்? அவனுக்கு இன்றுவரை டைகட்டும் கலை கைகூடவேயில்லை. அக்கறையின்மை! அவ்வளவுதான்! அதனால்தான் டை எந்நேரத்திலும் முடிச்சு கலையாது இருக்கவேண்டும் அவனுக்கு. அதனை அப்படியே மாலையைப்போல அணிந்துகொள்ளவேண்டும் அவனுக்கு! அவனின் வேலை இடத்தில் கொடுக்கப்படும் மன அழுத்தம், அல்லது வாழ்வில் யாரோ ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்ட நினைவுகள் அவன் மனதைக் குடைந்துவாறே இருக்கிறதோ என்று தோணுகிறது அவளுக்கு. இப்படியான கோர நினைவுகளை எதிர்கொள்ள அல்லது புறம்தள்ள அவனுக்கு ஒரு வடிகால்  வேண்டும். அதற்குத்தான் கட்டிய மனைவி இருக்கிறாளே! 

மீண்டும் அம்மாவை அழைத்துப் பேசவேண்டும்போல இருந்தது. கைப்பேசியில் எண்களை அழுத்தி “அம்மா…” என்றாள்.

“ஆரம்பிச்சிட்டியாடி…. ஒரு பக்கம் பொழுது விடியறதுக்கு முன்ன?” என்று மறுமுனைக் குரல் எரிச்சலை உண்டாக்கியது கல்யாணிக்கு.  மனக் காயங்களுக்கு களிம்பு தடவ அம்மாவை அழைத்துப் பேசினாள் மனம் சற்று அமைதி கொள்ளும் என்று நினைத்தாள். ஆனால் அம்மா இப்போதெல்லாம் அப்படியில்லை. அழைப்பை எடுத்தவுடனே அவளின்   கடுப்பான சொற்கள்தான் அடிநெஞ்சைத் தைத்துத் தொலைக்கிறது. “ நான்தான் சொன்ன இல்ல? வாயத் தொறந்து பேசுடி பிரச்னையெல்லாத்துக்கும் தீர்வு, மனம்விட்டு பேசுறதுனாலதான் வரும்னு. வாயத்தொறந்தா முத்தெல்லாம் உதுந்திடும்ல ஒனக்கு. எல்லாத்தியும் மனசுக்குள்ளாறியே பொதச்சி வச்சி குப்ப மேடாக்கிடுவ! அப்பறம் வம்பு தும்புன்னு வந்தா எங்கிட்ட வருவ! என்னிக்கித்தான் வாயத்தொறந்து பேசப் போற நீ?

“எனக்கு இவரோட வாழப் புடிக்கல. நீ வந்து இருந்து பாத்தாதான் தெரியும்!”

 “நானும் அம்பது வருசமா ஒரு ஆம்பலையோடு வாழ்றவதான். சகிப்பு இல்லன்னா இப்படித்தான் இருக்கும். ஒனக்கு மீண்டும் மீண்டும் சொல்லணுமா? முப்பது வரைக்கும் ஒரு வரனும் கூடி வரல ஒனக்கு. அதுக்கு மேல போனா புள்ள பாக்கியம் கெடைக்காது பொம்பலைங்களுக்கு! அவன் இவன் கால கைய புடிச்சு கலயாணத்த பண்ணி வச்சா, தெனசரி புகார் சொல்றதே பொலப்பா போச்சி . எத்தன வரனைப் பார்த்திருப்போம். ஒன்னாவது கூடிவராதான்னு பேரசைப்பட்டிருப்போம்? எல்லாமே கைகூடாதபோது எவ்ளோ மனக்கஷ்டம் அடைஞ்சிருப்போம்? ரகசியமா எவ்ளோ அழுதிருப்போம்? எத்தன கோயில் கொலத்த ஏறி எறங்கியிருப்போம்? எத்தன சாமியத் தேடி அலைஞ்சிருப்போம்?  நாங்க அலைமோதுறத பாத்த சாமியே கண் தொறந்த, கருணை காட்டி, வெளக்க ஏத்தி வச்சா…நீ….?”

தன் வயிற்றில் பிறந்த மகளைப் புரிந்து கொள்ளாத அம்மாவிடம் அழுது பார்த்தும், ஒரு இம்மிகூட அசையவில்லை. மீண்டும் அவள் தன் வாழ்க்கைப் பாடத்தைத்தான் செய்யுளை செய்யுளை மனனம் செய்துவைத்தது போலத் திரும்பத் திரும்ப ஒப்பிவித்துக்கொண்டே இருக்கிறாள். 

ஒரு வாரத்துக்கு முன்னால் நடந்தது இது. மணவாழ்வு நீடிக்கவேண்டும் மென்ற சொச்ச நம்பிக்கையைச் சுக்குநூறாக தெறிக்க வைத்திருந்தது, காலையில் வேலைக்குக் கிளம்பும்போது குளியலறையில் அவன் உபயோகிக்கும் சேம்பு தீர்ந்ததற்காக கல்யாணிக்குக் கொடுத்த தண்டனை இம்சைகளிலேயே உச்சமானது. குளியலறையிலிருந்து நனைந்த உடலோடு துண்டை அரையும்குறையுமாகச் சுற்றிக்கொண்டு வெளியே வந்தவன் அவளைப் பிடித்து இழுத்துக் குளியலறைக்குள் தள்ளினான். கதவை அறைந்து சாத்தி வெளித் தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு “இங்கனையே கெடந்து சாவு, சேம்பு முடிஞ்சதகூடவா எடுத்து வைக்க முடியாது, சதா தின்னிட்டு தூங்கிட்டு இருந்தா குடும்பம் எப்படி நடக்கும்?” என்று கத்திவிட்டு வேலைக்கு கிளம்பிவிட்டிருந்தான். கல்யாணி காலையில் படுக்கையை விட்டு எழுந்ததிலிருந்து இன்னும் ஒரு சொட்டு காப்பிகூட வாயில் வைக்கவில்லை. உள்ளே இருந்து கதவைத் தட்டிப் பார்த்தாள். கெஞ்சிப் பார்த்தாள். மன்னிப்புக் கேட்டு அழுதும் பார்த்தாள். கதவு அசையும் சமிக்ஞைகூட இல்லை.  அவன் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்ட நிசப்தத்தின் சூன்யம் மட்டுமே எஞ்சியது! ஏதாவது வாளி வைத்து ஏறி வெளியே வரும் அளவுக்குக் கூட இடைவெளியற்றுக் கட்டப்பட்ட குளியறை அது. உடல் குபுகுபுவென வியர்த்துக்கொண்டே இருந்தது, பசி குடலைக் காவு கேட்டது, பதட்டம் உச்சந்ததலையை பதம் பார்த்தது. கண்ணீர் வியர்வையை மிஞ்சியது. காற்றுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கும் சன்னமான வசதி மட்டுமே அவளை மதியம் இரண்டு மணி வரைக் காப்பாற்றியது. ஒரு வேளை அவன் இரவு எங்காவது தங்கி மறுநாள் வந்திருந்தால் அவளின் கதை முடிந்திருக்கும். நல்ல வேளையாக வெள்ளிக்கிழமையாதலால் அரைநாளில் வந்துவிட்டிருந்தான். ஏதோ அவனுக்குள் அபூர்வமாய் தோணிய கடுகளவு கரிசனம் கதவைத் திறக்க வைத்திருந்தது. கதவைத் திறந்தவன் தன் குற்றச்செயலை உணர்ந்து வருந்திய ஒரு கருணையான பார்வைகூட அவன் விழிகள் பிரதிபலிக்கவில்லை! அவள் காத்திருந்து, களைத்து உதிர்ந்து விழுந்த நிலையில் தள்ளாடி வெளியானதைக்கூட அவன் கண்ணெடுத்துப் பார்க்கவில்லை!  மேசையில் பகல் உணவு இல்லாமை, கல்யாணி வாசற் கதவைத் திறக்காமல் இருந்தமை,  வீடு அலங்கோலமாய் இருந்தமை அவனுக்கு பிரக்ஞையைத் தட்டியிருக்க வேண்டும். ஓடிப்போய்க் கதவைத் திறந்திருக்கிறான். தன்மேல் ஏதும் போலிசில்  புகாரளிக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டிருந்தால் என்னாகியிருக்கும் என்ற முன்னச்சம் அவனை உஷார்படுத்தியிருக்க வேண்டும். கண்டிப்பாக மனைவியை வன்மத்துக்குள்ளாக்கி விட்டோமே என்ற குற்றமனப்பான்மைக்காக அல்ல!

அந்த ஆறு மணிநேரக் குளியறை சிறை அவளை மனப்பிரம்மை பிடிக்க வைத்திருந்தது. குளியலறை விளக்கை அணைத்துவிட்டதால் இருள் பிசைந்து பிசைந்து திரண்டு கொண்டே இருந்தது. ஒடுங்கிய நான்கு சுவருக்குள் கிடந்த அந்த நெடிய தனிமை அனுபவம் நினைத்துப் பார்த்தாலே வெலவெலக்கிறது. வியர்வை பட்டென துளிர்ந்து உடல் முழுவதையும் நனைக்க ஆரம்பித்தது. குறுகிய அறை ஒரு கரிய மலைப்பாம்பைப் போல அவளை விழுங்க ஆரம்பித்தது. உடற் சோர்வும் மன அழுத்தமும், குமைந்து குமைந்து பொங்கி எழுந்த கோபமும்கூட வார்த்தையாக வெடித்து வெளியாறவில்லை. அவ்வாறு வார்த்தைகளைப் பேசியிருந்தால் அவளை மீண்டும் உள்ளேயே தள்ளி பூட்டிவிட்டு தெரியாத மாதிரி இருந்துவிடுவான். ஒருவகையில் அவன் ஒரு சேடிஸ்ட்டாக இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டாள் எனவே அவளின் பிரக்ஞைக்கு எட்டியதெல்லாம் அவனை விட்டு விலகி விடுவது மட்டுமே அவளுக்கான விடுதலை! அம்மாவிடம் இந்த சம்பவத்தையும் சொன்னாள்.

அவள் அம்மா பதிலிறுத்தியது அச்சிறை தண்டனையைவிட மோசமாக இருந்தது. சும்மா பயமுறுத்த பூட்டிட்டு மறந்திட்டிருக்கான் புள்ள. இல்லாட்டி ஓடியாந்து தொறந்திருப்பானா?” என்றாள். ஒரு ராத்திரியில சரியாயிடும் பாரு. நாமதான் புரிஞ்சி போவணும். நான் ரத்தம் வரமாறிகூட அடி வாங்கியிருக்கேன்! அதையெல்லாம் சகிச்சிக்கிட்டு வாழலியா?”

“அம்மா என்னமா இது, இவ்ளோ சாதாரணமா எடுத்துக்கிற? நான் ஆறுமணி நேரம் புழுக்கத்துல, பசியில, தாகத்துல, தனிமையில உள்ள இருந்தனே, அது புரியல? கல்யாணம் ஆவதற்கு முன்னால் நான் என்னால்லாம் கற்பனை பண்ணியிருப்பேன் எல்லாமே மழை வெள்ளத்துல அரிச்சிட்டு போன மாரி ஆயிடுச்சேன்னு சொல்றேன். நீ இவ்ளோ பொறுப்பில்லாம பதில் சொல்ற!

“கல்யாணி, வாழ்கைங்கிறது புள்ளிபோட்ட  கோளம்போல நேர்த்தியா அமைஞ்சிடாது, அங்கங்க கோணல் இருக்கத்தான் செய்யும். நீ அவனோட வாழப்பாரு. இங்க வந்து இருந்திட்டு வாழாவெட்டின்னு பேருவாங்கி எங்க மனத்த வாங்கிடாத? ஒனக்கு மூல நச்சத்திரம் கழுத்து தாலி விழுறது போன ஜென்மப் பாக்கியம்னு ஜோஸ்யர் சொன்னத மறந்துட்டியா? அது இல்லாம நாகதோஷம் வேற! எல்லாத்துக்கும் பரிகாரம் செய்ய எவ்ளோ அலஞ்சோம்! மறந்திட்டியா? பெண் மூலம் நிர்மூலம்னு . ஆண் மூலம் அரசாளும்ன்னு பெரியங்க சொன்னத கேள்விப்பட்டதில்லையா நீ.?” என்று போனை அடைத்துவிட்டாள். எதுகை மோனைக்காகச் சொன்ன சொல்லாடல் இன்றைய வாழ்க்கைக்கானப் படிப்பினையாக நிலைகொண்டது எவ்வளவு பெரிய அபத்தம்! பெற்ற தாயின் இந்தக் கரிசனமற்ற சொற்கள் கல்யாணிக்கு எல்லாக் கதவுகளையும் கருணையே இல்லாமல் சாத்திவிட்டதுபோல இருந்தது. 

“அண்ணா” என்ற அழுத குரலோடு அழைத்தாள். ”இவரோட என்னால் ஒரு நிமிசம்கூட இருக்க முடியாதுண்ணா, என்ன வந்து கூட்டிடுப்போ!” என்று நடந்ததை விலாவாரியாகச் சொன்னாள்.

அண்ணா சொன்னான்.” அம்மா எங்கிட்ட சொலிட்டாங்க. அவங்க குடும்ப விவகாரத்துல தலையிடாதன்னு. அடிபிடியில போய் முடிஞ்சிடும். மாப்பிள்ளை மேல கை பட்டாலே ஜென்மப் பகையாயிடும். இது ஆயிரங்காலத்துப் பயிர், இப்போ ஒன்ன கூட்டிட்டு வநதிடுவேன். ஆனா ரொம்ப நாளைக்கு பகை நெருப்பு எரியாது. ஒரு நாளைக்கு அது சாம்பலாப்போய் ஆறிப்போய்டும். நீயோ அவனோ நாங்க மீண்டும் சேந்து வாழப்போறம்னு மனசு மாறிட மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? ஒலகத்துல அப்படி எங்கியுமே நடக்கலேன்னு சொல்லு பாப்பம்? கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும். போகப் போக சரியாயிடும் பொறும முக்கியம். நீ மனம் விட்டுப் பேசணும், அப்பதான் அவருக்கு ஒன்ன புரியும், சின்ன வயசுலேர்ந்தே எல்லாத்தியும் மனசுலியே போட்டு பொதசிட்டு இருந்தவ, புழுக்கம்தான் உண்டாகும்,” என்று உரையாடல் நீண்டுபோக விருப்பமற்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டான் அந்த அம்மா பிள்ளை!

கணவன் மனைவி உறவை இப்படிக் குறுகலாகப் புரிந்து கொண்ட பழக்கம் இன்று நேற்று நடப்பதல்ல. தொன்றுதொட்டு சொல்லப்படும் ஒரு சாக்கு, எல்லா  தாம்பத்ய உறவும் இரு தரப்புக்கும் திருப்தியையா தந்துவிடுகிறது. இதோ இவன் இருக்கிறானே,  தனக்கான தேனை மட்டும் எடுத்துக்கொள்ள அவசரப்படுபவன். அந்த அவசரத்தில் தேன் கூட்டை கலைத்துவிட்டு எழுந்துவிடுவான். தேனீக்கள் அவளை அல்லவா கொட்டிக்கொட்டி அவஸ்தையைத் தொடக்கிவிடுகிறது. பொறுமையாகக் கையாளாலாமே என்று  பெண் சொன்னால் என்ன ஆகும்? “ஒனக்கு இதுல முன்னனுபவம் இருக்கோ?” என்று பட்ட புண்ணின் மேல் அமிலத்தைக் கொட்டிவிடுவான். இந்த அவலத்தை யாரிடம் சொல்வது. அதற்கும் ‘விட்டுக்கொடுத்து போ; என்றல்லாவா சற்றும் கருணையற்ற வார்த்தைகளை புத்திமதியாக சொல்லிவிடுவார்கள்! அரைகுறையாய்  முடிந்த போகத்தால் உடல் படும் துன்பத்தை ஒரு பெண் எப்படி வெளியே சொல்வது? 

அப்பாவிடமும் முறையிட்டுப் பார்த்தாள்,  அம்மா ஒப்புவித்த அதே பல்லவியை பாடினார். “ஒரு புள்ள பொறந்தா சரியாயிடும்” என்றார். அவர்கள் இங்கே  நடப்பதை கண்கொண்டு பார்க்காததால்தான் இந்த சம்பிரதாய போதனைக்கெல்லாம் காரணமாகிவிடுகிறது. பிள்ளை வாழவேண்டும் என்பதில் மட்டும் எண்ணம் கொண்ட இவர்கள், இவள் எப்படி வாழ்கிறாள் என்று கொஞ்சம் அக்கறையோடு ஆராய்ந்திருக்கலாம்.     

அதற்குப் பின்னர் வீட்டில் யாரோ இதுபற்றிப் பேச்செடுக்க, குளியலறைச் சிறைவாசம் தொடர்பாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. பெற்றோரும் அண்ணனும் வந்திறங்கினார்கள். அப்போது அவன் வீட்டில்தான் இருந்தான். கைலியை இழுத்துக் கட்டிக்கொண்டு குடுகுடுவென  வாசல் வரை ஓடிப்போய் வரவேற்றான். “ ரொம்ப தூரம் களைச்சி போய் வந்திருக்காங்க குடிக்க ஏதாவது கொண்டு வா…..கல்யாணி!” என்றான். அவன் குரலில் பாவனையில் நம்பமுடியாத அளவுக்கு அன்பு வழிந்தோடியது அப்போது. 

“நான் கதவச் சாத்தனது உண்மைதான். ச்சும்மா வெளையாட்டுக்கு செஞ்சேன் செத்த நேரத்துல தொறந்துவிட்டிர்லாமுன்னுதான் இருந்தேன். ஆனால் அதுக்குள்ளாற மேனேஜர்கிட்டேர்ந்து ஒரு அவசர அழைப்பு வந்துச்சி. பேச்சு சுவாரஸ்யத்துல மறந்துட்டேன். ஒடனே கெளம்ப வேண்டியதாப் போய்டுச்சு. கல்யாணி பாத்ரூம்ல இருக்கிறது சத்தியமா மறந்துட்டேன். விளையாட்டுக்கு செஞ்சது வெனையில முடிஞ்சி போச்சு எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க என்று கையெடுத்துக் கும்பிட்டு, அப்பாவின் கையைப் பற்றி கெஞ்சினான். அந்த கணத்திலேயே கோபம் இளகி கறைந்து ஒழுகிவிட்டது அனைவருக்கும். “ இருங்க  நல்ல உணவுக்கடை ஒன்னு இருக்கு, சாப்பிட்டுப் போகலாம்” என்று அழைத்துச் சென்று அங்கேயும் நாடகம் ஆடினான். முன்னூறு ரிங்கிட்டுக்கு பில்லைக் கட்டினான்.

அவன் பாசாங்குக்காரன் என்பதை யாருமே நம்பாதது அவர்கள் முகத்தில் நெகிழ்ச்சியில் தெரிந்தது.  ‘உண்மை’ கேலிக்குள்ளானது போன்று இருந்தது.  இந்தச் சம்பவத்தை தன்னைத்தவிர மற்றெல்லாருமே ஒருமனதாய் விளையாட்டாய் எடுத்துக்கொண்ட அத்தருணத்தில்  அவள் குரல்  சக்தியற்று ஆமைபோலத் தலையை பின்னிழுத்து உள்ளொடுங்கிக்கொண்டது. .

கடையில் சாப்பிட்டு முடித்து வெளியே வந்ததும் அம்மா சொன்னாள். “ நீங்க சொன்னதத்தான் நானும் கல்யாணிகிட்ட  சொன்னேன்” என்றாள். கல்யாணி அப்போதும் ஒன்றும் பேசவில்லை. பேசினால் பின் விளைவு விபரீதமாக முடியும் என்று அவள் உணர்ந்ததே. 

இனியும் இவனோடு எப்படி தாக்குப்பிடிப்பது என்று தெரியவில்லை! 

மீனைப் பிடித்து சின்ன கண்ணாடிப் புட்டியில் விட்டு விட்டு மீன் தொட்டியைச் சுத்தம் செய்து புதிய நீரைக்கொண்டு நிரப்பினாள். காற்று நுழையும் குழாயை இணைத்தாள். காற்றுக் கொப்புளங்கள் மீன் வெள்ளி நிறத்திலான குமிழிகளை அடியிலிருந்து மேலேறிக்கொண்டிருந்தன. தீனியைப் தூவினாள். மீன் இப்போது தீனியைத் தீண்டித் தீண்டி விளையாடுவது போலப்பட்டது..தொட்டியின் தூய்மையை அது விரும்புகிறதோ என்பதைப் பிரதிபலிக்கும் உல்லாசமான நீச்சல் அது.

அன்று இரவும் அவன் மதுவுக்குள் சங்கமமாகி கனத்த போதையோடு கல்யாணியை நெருங்கி நடுவிரலைப் பற்றி கணுக்கை பக்கம் வளைத்து உடைக்க முயன்றான். விரல் வில்போல வளைந்து உக்கிரமாக வலித்தது.விரலின் பிடியை விடாமல் மீண்டும் வளைத்தான். விரலின் ஒரு பகுதி எலும்பு இணைப்புகள் விலகி விலகித் தொட்டது.  மீண்டும் தளர்த்தி மீண்டும் வளைத்தான் விரல் எலும்பு முறியும் வலியில் துடித்தாள். அவள் அந்தப் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் முயற்சி பலனளிக்கவில்லை.” ஒங் குடும்பத்தயே கூட்டி என் மானத்த வாங்குவ! என்று மேலும் மேலும் இம்சை செய்தான். அவனிடமிருந்த தப்பிக்க அன்று அவள் பட்ட பாடு…அப்பப்பா…சற்று நேரத்தில் விரல் ரத்தச் சிவப்பாகி, வீங்க ஆரம்பித்திருந்தது. கையை உதறி வலியை போக்கும் முயற்சிகள் தோற்றன. இரண்டு நாட்களாகியும் விரல் இயல்பான நிலக்குத் திரும்பவில்லை. விண் விண் என்ற வலி எச்சமாய்த் தேங்கிக் கிடந்தது.

ஐந்தாறு தினங்களுக்குப் பின்னர், அவன் வேலை செய்யும் நிறுவனத்தில் ஏதோ விருந்து நடப்பதாகச் சொல்லி வலிய அவளை அழைத்துச் சென்றான். பீரோவுக்குள்  பயன்படாத பழைய சேலையைப் போல அவள் சதா நான்கு சுவருக்குள் அடைந்து கிடந்ததால்,  சற்றே ஆறுதல் தரும் அந்தப புறச்சூழலைச் சுவாசிக்க மனம் ஒப்பியது. அவன் அழைப்பு நிறுவனத்தில் வேலை செய்யும் அலுவலர்களின் கணவன் மனைவிகள்  கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயத்தை கோடிட்டுக்காட்டியது. அவள் உடன் சென்றாள்.

பயணச் சாலையில் சமிக்ஞை விளக்கு சிகப்புக்கு மாறும் கணநேரத்தில்  வாகனங்கள் சீறிக் கடந்துகொண்டிருந்தன. அதே கதியில் இவனும் விரைந்தான். அப்போதுதான் சிவப்பு சமிக்ஞைக்காகப் பொறுமையோடு  நின்றிருந்த ஒரு மோட்டர் சைக்கிலை, பிரேக் பிடித்தும் பலனில்லாமல் மோதித் தள்ளிவிட்டிருந்தான். நான்கைந்தடி தூரம் தள்ளிக் கீழே விழுந்தவன், பட்டென்று எழுந்து இவனை நோக்கி விரைந்து வந்தான்.  அவனுடைய பைக் பின்புறம் நசுங்கி விளக்கெல்லாம் தெறித்து கண்ணாடித் துகல்ளாக மண்ணில் சிதறியிருந்தன. அவன் கால் முட்டி கை முட்டியில் ரத்தச் சிராய்ப்புகள் இருந்தன. அடிபட்ட இடத்தைத் தட்டி துடைத்துக்கொண்டே, தன் ஊர்தியைப் பார்த்து, விழிகள் சிவக்க இவனை நோக்கி விரைந்தான். அவன் மேலெல்லாம் மண் துகல்கள். பேண்டில் கிழிசல்கள். இவன் கதவைத் திறந்து மன்னிப்புக் கேட்கும் தோரணையில் இரண்டு அடி எடுத்து வைத்தபோது அவன் சரம் மாறியாக முகத்தில் குத்த ஆரம்பித்தான். இவன் தடுமாறி காரில சாய்ந்தான். சமிக்ஞை விளக்கருகே காத்திருந்தவர்கள் இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய யாரும் சமரசம் செய்ய வரவில்லை. சற்று நேரத்தில் இவன் முகம் வீங்கிச் கனிந்துவிட்டன.. உதட்டிலிருந்து ரத்தம் ஒழுகியது. காயத்தைவிட அவமானமே ரணமேற்றியிருந்தது.   யார் முகத்தையும் ஏறீட்டு நோக்கச் சக்தியற்று காருக்குள் நுழைந்தான்..

காருக்குள் இருந்து இதனைப் பார்த்துக்கொண்டிருந்த கல்யாணிக்கு அடி நெஞ்சிலிருந்து  பொங்கிக் கிளம்பிய ஆனந்தம் முகத்தில் முற்றுகையிட்டு ஒரு சிறு புன்னகையாக மலர்ந்து நின்றது.

அவன் காரில் வந்தமர்ந்தபோது அவள் முகத்தைப் பார்க்கும் சக்தியை இழந்திருந்தான். மீண்டும் திரும்ப வீட்டுக்கே பயணப்பட்டது கார். சூன்யம் நிறைந்த சலனமற்ற பயணம் அது!. 

வீட்டு வாசலைத் திறந்து விசையை தட்டியவுடன் பளிச்சென்று வீடு முழுதும் வெளிச்சம் வியாபித்தது. தொட்டி மீன்தான் முதலில் கண்ணில் பட்டது. இப்போது அது கண்ணாடிச் சுவரை மோதாமல் சாவகாசமாய் நீந்திக்கொண்டிருந்தது..

**********

ko.punniavan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button