
மயிரின் வேர்க்காலைப் போல
ஒரு மெல்லிய அச்சம்
ஒரு பருக்கை உட்சென்றால் தீர்ந்துவிடுதலைப் போல
ஒரு மெல்லிய பசி
செவிலி விரல் நுனியில் கூர்மை கொண்டு
தொட்டும் தொடாமல் எடுப்பதைப் போல
ஒரு மெல்லிய வலி
நோயுற்ற பெண்ணின் எஞ்சிய வனப்பு தரும்
மெல்லிய தாபம்
நாவால் வருடினால் தீருமென்பதுபோல
ஒரு மெல்லிய தாகம்
மழலை மகள் பொதுவெளியில் ஒருமையில்
விளிக்கும்போது மின்னி மறையும்
மெல்லிய கோபம்
சாலையில் வாகனத்தை உறுமிக் கடப்பவன் மேலெழும்
மெல்லிய பகை
போதுமானதாயிருக்கிறது மார்கழிக் கருக்கல்களில்
தொட்டு உரசப் பற்றியெறியும்
தீக்குச்சித் தலையென நான் வாழ.