
உயிர்த்திசை
காற்றிலே
சுவடு சேர்க்காக்
கானுறைப்
பட்சியொன்று
நேற்றது தொலைத்த
கூட்டின் நெடுங்கதை
எழுதிச்செல்ல
கூற்றுவன் கொடுத்த
தீயைக் குளிர்வித்த
மழையின் சாரல்
ஊற்றிய நீரின் ஈரம்
உலர்ந்திடவோர்
இறகு உதிர்ந்து
சாற்றிடும் துயரம் கேட்டு
சயனித்த முகில் விலக்கி
தேற்றிட நிலவுருகி
தெளிந்த நீரலையில்
சேர்ந்து
ஆற்றின் போக்கிடம்
அறியாப் போதும்
அவ் இறகுதன்
உயிர்த்திசை
சேர்க்கக்கூடும்
—
இனிவரப்போவதில்லை
புதர் மண்டிய
காகித மரமொன்றில்
சொற்கள் தேடி
வந்தமர்கிறது
கற்பனைக் குருவி.
வரிசைப்படுத்தப் படாத
வாக்கியக்கிளைகளில்
வண்ணமிழைத்த பூக்கள்
வழியே பாலமமைக்கிறது
மாலை நிலவு.
முத்தமிட்ட காற்றோடு
முறுவலித்துச் சிரித்து
கண்ணயர்ந்த குருவி
ஈரக் கிளையொன்றில்
மழைக்கால நினைவொன்றை
அலகால் கொத்துகிறது.
கால்களை மடக்கி
நீட்டி முன்னும் பின்னும்
அசைகிறது.
இரை தேடும் நோக்கம்
அதற்கில்லை..
எதையோ சாதித்த
திருப்தியில் சிறகுகள்
சிறகுளை கூட்டி
விரித்து சடசடத்துப்
பறந்து போகையில்
பழுத்து உதிர்ந்து
விழுந்திருந்த
அச்சொற்கள் பேசிக்கொண்டன
இனி அப்பறவை
திரும்பி வரப்
போவதில்லையென…………!