
கைம்மாறு
சேந்தியில் கிடந்த
பரம்பரை சொளகுகளில் கூட
புடைத்து பார்த்தும்
எந்த பயனுமில்லை.
ஒவ்வொரு முறையும்
மென்று தின்னுகையில்
பொட்டல்கள் தட்டுப்படத்தான்
செய்கின்றன.
எடுத்துப்போட்டு
சாப்பிடத் தொடங்கினாலும்
உட்கார்ந்தாலும் ஓடினாலும்
சாணித் தாள்களில் பரவும்
பேனா மையாக
கால்களைப் பிடித்து
பற்றிப் பரவி ஏறுகின்றன
‘என்னதான் வேண்டுமென’
அதட்டுகையில்
வீசும் அடுத்த ரொட்டிக்காக
நாக்கைத் தொங்கப்போட்டு காத்துக்கிடக்கும்
நாயின் விழிகளில்
ஏக்கமாக பார்த்தன
முக்கிப் பார்த்தும்
சூடு பிடித்த
இரண்டு மூன்று
மூத்திரத் துளிகளைத்தான்
பொட்டல்களுக்கு
தர முடிந்தது.
உயிர் நிறம்
வேட்டி கட்டிய கனத்த இருமல்
எப்போதும் வீட்டில்
அதிர்ந்தபடியே கிடக்கும்.
மருந்தாக முள்ளுமுருங்கை
மரத்தின் வட்டயிலைகள்
தினமும் பறிக்கப்படும்.
இருமலும் அடங்கியது
இருமல் நட்டு வளர்த்த
மரமும் பாதியாக
வெட்டப்பட்டது
பண்டிகை நாளில் அரைத்த
மருதாணி மீதியை
மரத்துண்டுகளுக்கும்
வைத்துவிட்டேன்.
பற்றாக்குறையால்
மாட்டுச்சாணியை உருட்டி
தண்டின் தலையில்
வைத்தேன்
காலையில் விரல்களை விட
தண்டில் தளிர்த்த பச்சை
அதிகமாக சிவந்திருந்தது
இருமலுக்கும்
நிறமுண்டு.