
பனிக்கால
ஏறு வெயிலை போல
மனமெங்கும் நறுமணம்
பூசிக்கொள்கிறது
உன் நினைவுகளின்
சிறு அலைபாயுதல்
சிறு ஆறுதல்
இருந்தும்,
எத்தனையோ பதற்றங்கள் நிரம்பியிருக்கிறது
உன் நினைவுகள்
ஒரு சில நேரங்களில் அவை
திடீரென இருளை உண்டாக்குகின்றன
அல்லது அந்த இருளில்
என்னை அமர்த்திவிடுகின்றன
கொலைகளை நிகழ்த்துவது போல
வெகு இயல்பாக நிகழ்த்துகிறது
உன் நினைவுகள்
வருவதும் போவதும் தெரிவதே இல்லை
ஆனால் அவை
இந்த உலகத்திடமிருந்து
என்னை ஒதுக்க
கவலைபடுவதே இல்லை
கொண்டிருக்கும் பிடிவாதங்களை
உடைத்து அழக்கூடியவனாக மாற்றியது
என்ன தீர்மானமோ
எத்தனை யுகங்களின் குரலோ
எத்தனை காலத்தின் கண்ணீரோ
எத்தனை காதலின் சாபமோ
பின் தொடரும் உன் நினைவுகளை
எப்படி எதிர்கொள்வது
அது ஒரு விதையாக இருந்தால்
மண்ணில் மூடிவிடலாம்
முளைவதற்குள்
தற்காப்பு வித்தையை கண்டுபிடித்துவிடலாம்
அது ஒரு நீர்வீழ்ச்சியாக இருந்தால்
அதன் ஆழங்களில் ஒளிந்து கொண்டு
பெரும் சத்தங்களிருந்து தப்பிவிடலாம்
அது ஒரு கோப்பை மதுவாக இருந்தால்
மண்டியிட்டு கேட்ட நஞ்சோடு
குடித்து குமட்டி விடலாம்
ஆனால் அவை
இரவின் கொடிய நாவோடு அசைந்துகொண்டிருக்கிறது
காற்றோடு அசைத்தோடும்
நாவல் பழங்களை போல
உன் நினைவுகளை நிதானித்து ரசிக்கிறேன்
எரியும் ஒரு தெரு விளக்கின் கீழ்
இல்லாத உன் நிழல்
என் நிழலோடு தழுவியிருப்பதை போல
நினைவூட்டிக்கொள்கிறேன்
பரிதாபத்திற்குரிய பறவைபோல
தனியாய் திரியும்போது
உன் அன்பின் விரோதத்தை நினைக்கிறேன்
முழுமையாக ஒத்துக்கொள்கிறேன்
ஒரு பெரு நெருப்பை விழுங்கியபடியே
சமாதானமில்லாமல்
புன்னகைத்து வாழ்கிறேன்
உன் வினோதம் கண்டு வியந்துகொண்டே