
எலிகள் பெருகிக்கொண்டே இருக்கும் நிலவறைகளில்
தானியங்களின் உடைகள்
குருதி நாற்றத்துடன் எரியூட்டப்படுகின்றன
அருகேயிருந்த சுவர்களில்
உடைந்த பனிக்குடங்களின் நீரெடுத்து
விதவிதமாக வரையப்படுகின்றன
மண்டியிட்டழும் தானியங்களின் உடல்கள்.
குறுகிய துளைகளில்
வெளியிலிருந்து கண்ணாடி வைத்து
பிரதிபலிக்கும் வெளி எலிகளால்
பற்றியெரிகின்றன
வயல்வெளிகளும்
சுற்றியுள்ள காடுகளும்.
ஆயிரமாயிரம் கண்ணாடிகள்
தானியங்களின் மெய்பிம்பம் தேடி
நள்ளிரவில் கட்டை விரல்களால்
வயல்களை உழுகின்றன.
தெரியாமல் நுழைந்துவிட்ட
தானியமாகாத பச்சை நெல்லின் தோலை
உரித்துத் தின்ற எலிகளின் பற்களிடத்தில்
என்னை விட்டு விடுங்கள் எனக்
கெஞ்சி அலைகின்றன
பால் உடலின் குருதித் துண்டுகள்.
சாட்டை வாலைக் கொண்டிருந்த எலிகள்
உடையற்ற தானியங்களைத் தின்னாமல்
அவற்றின் மீது மீண்டும் மீண்டும்
சிறுநீர் கழித்துக் கொண்டே இருந்தன.
அழுகிய தானியங்கள்
புத்தாடைகளில் இறந்து வெளியேறிய போது
வெளி எலிகள்
தானியங்கள் விரும்பி அழுகியதாக
கண்ணாடிகளிடம் சொன்ன போது
அதன் கட்டை விரல்கள் சோர்வுற்று
வேறு வயல்களுக்குச் சென்றன.