![](https://vasagasalai.com/wp-content/uploads/2024/10/cover-photo.png)
பரசுவும் ராமமூர்த்தியும் நரையான் போல இருப்பார்கள். திருநெல்வேலி பாஷையில் நரையான் என்றால் ஒல்லி, நருங்கிப் போனது என்று பொருள். நாரையில் சிறியதையும் நரையான் என்று அழைப்பார்கள். பஸ்ஸுக்குள் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் புகுந்து புறப்பட்டு டிக்கெட் போட்டு விடுவார்கள். வேகமாகவும் டிக்கெட் போட்டு விடுவார்கள். இரண்டு பேரில் யாரென்றாலும் எங்களுக்கு டிக்கெட் கிடையாது. நாங்கள் ஃபுட் போர்டில் நின்றாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்தால் மட்டும் சற்றுச் சிரமம். அப்போது கடைசி டிக்கெட்டைக் கிழித்துக் கையில் தந்து விடுவான் இல்லையென்றால் டிக்கெட் ஒன்றைக் கிழித்துக் கீழே போட்டு விடுவான்.
கடைசி டிக்கெட் என்பதில் ஒரு சௌகரியம். அதை அப்படியே வாங்கி செக்கிங் இறங்கியதும் வேறு யாருக்காவது கொடுத்து விடுவான். இதில் பரசு பெரிய கில்லாடி. ஒவ்வொரு வரிசையிலும் கடைசி டிக்கெட் யாரிடம் போகிறதென்று கவனித்துக் கொள்வான். அவர் இறங்கும் போது அந்த டிக்கெட்டை வாங்கி விடுவான். “யோவ் அண்ணாச்சி, டிக்கெட் எடுத்தீங்களா, நீங்க வாங்கின ஞாவகமே இல்லையே, கொடுங்க பார்ப்போம்” என்று நைச்சியமாகப் பேசி வாங்கி விடுவான். அதை இன்வாய்ஸில் எழுத மாட்டான்.
இதனால் எல்லாம் பெரிதாகச் சம்பாதித்துக் கோட்டை கட்டி விட முடியாது. அதிகம் போனால் இரண்டு டீ காசு தேறும். அதனால் எல்லா பஸ்களிலும் இதைக் கண்டும் காணாமலும் விட்டு விடுவார்கள். அது போக இரண்டு பேருமே கம்பெனியின் செல்லப் பிள்ளைகள். அவர்கள் ஓடுகிற அன்று கலெக்ஷன் செமையாக இருக்கும். பஸ்ஸின் கெப்பாசிட்டிக்கு ரெண்டு மடங்கு ஆள் ஏற்றி விடுவார்கள். அதிலும் சனி ஞாயிறு என்றால் சினிமா விடுகிற நேரத்திற்கு நல்ல படம் ஓடுகிற தியேட்டர் முன்னால் படம் விடுகிற நேரத்திற்குப் போய் பஸ்ஸை நிறுத்தி தேய்த்துக் கொண்டே இருப்பார்கள். இன்றைக்கு எப்போது படம் போட்டார்கள், ஹவுஸ்புல் ஆச்சா, கூட்டம் எப்படி, படம் எப்போது விடும் என்ற விவரத்தைச் சொல்ல நாங்கள் இருக்கிறோமே. நல்ல படம் என்றால் ஞாயிற்றுக்கிழமையில் கூட்டம் அள்ளும். டிக்கெட்டுகள் சீக்கிரமே முடிந்து படமும் சீக்கிரம் போட்டு விடுவார்கள். அன்று அதற்கேற்றாற் போல ட்ரிப்புகளை சீக்கிரம் அடிக்க வேண்டும். அதனால் மற்ற பஸ் கம்பெனிக்காரர்களுடன் மல்லுக்கு நிற்க வேண்டும்.
சனி ஞாயிறுகளில் அநேகமாக நாங்கள் படம் பார்க்கப் போக மாட்டோம். ஆனால், தியேட்டரில்தான் நிற்போம். யாரின் புறாவோ சிட்டுக்குருவியோ படம் பார்க்கப் போனால் மட்டும் பின்னாலேயே போவோம். அவனவன் டாவடிக்கிற பெண் சினிமாவுக்கு வந்து தலையைப் பார்த்தால் உள்ளுக்குள்ளே ஒரு மின்சாரம் பாய்ந்து விடும். அப்படியே கவனிக்கவில்லை என்றாலும், “ஏல, உங்க ஆளு வந்திருக்காடா, போ.. போய் டிக்கெட் எடுக்க வழி பாரு“ என்று சேக்காளிகள் எச்சரிக்கை செய்து விடுவார்கள். சமயத்தில் காசு இருக்காது. அப்போதெல்லாம் ஒருத்தனை அனுப்ப மற்றவர்கள் ஆளுக்குக் கொஞ்சம் காசு தருவார்கள். எங்களுக்கு எப்படியும் டிக்கெட் கிடைத்து விடும். தியேட்டரெல்லாம் பழக்கம். இல்லையென்றால் கூட்டத்தில் அடிபிடி போட்டு டிக்கெட் எடுக்கவும் ஆள் இருப்பார்கள். பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களும் பழக்கம்தான். ஆனால், என்ன ஒன்று; அவர்கள் அழுது கொண்டே தருவார்கள். “இன்னைக்கித்தான் ரெண்டு காசு பாக்கலாம்ன்னு நெனைச்சேன், நீ எவ பின்னாலேயே போகிறதுக்கு டிக்கெட் கேக்கறியே நியாயமாடே,” என்று புலம்பிக் கொண்டே தருவார்கள்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு, படம் போட்ட இரண்டாவது ஞாயிறு அன்று ஆறு மணி காட்சிக்கு அவ்வளவு கூட்டம் வந்தது. குரூப்பில் உள்ள மூன்று பேரின் ஆட்கள் வந்து விட்டார்கள். கையில் காசு வேறு இல்லை. நல்ல வேளையாக பரசு பஸ் தியேட்டர் வாசலில் நின்று புறப்பட்டது. ஓடியே போய், பக்கவாட்டில் நின்று ஒரு சிங்கிள் விசிலடித்தேன். என் விசில் சத்தம் அவனுக்குப் பழக்கமானது. அவ்வளவு ஷார்ப்பாக இருக்காது. கொஞ்ச பிசிறடிக்கும். பட்டென்று அவனும் விசிலடித்து பஸ்ஸை நிறுத்தி விட்டான். பஸ்ஸுக்குள் கூட்டம் நெறித்துக் கொண்டிருக்கிறது. அவன் நிற்கும் இடமே தெரியவில்லை. “என்னலே வேணும்..” என்று சத்தம் மட்டும் வருகிறது. “கீழே இறங்கி வாடா,” என்று கத்தினேன். நெருக்கடிக்குள் புகுந்து புறப்பட்டு வந்து இறங்கினான். “பத்து ரூபா குடுறா” என்றேன். பத்து ரூபாயெல்லாம் அப்போது பெரிய தொகை.
ஜங்ஷனுக்கு பஸ் டிக்கெட்டே பதினாலு பைசாதான். பத்து ரூபாய்க்கு எழுபது டிக்கெட் விக்கணும். “ராத்திரி கணக்கு ஒப்படைக்கிறதுக்குள்ள குடுத்திருவியா?” என்றான். அதெல்லாம் அவன் பிரச்னையில்லா. படம் போகிறதுதானே எங்க பிரச்னை. “சரி சரி குடு” என்றேன். சில்லறையாகப் பொறுக்கி பத்து ரூபா தந்தான். அதற்குள் பஸ்ஸில் ஏகத்துக்கும் சத்தம் . “யோவ், பஸ்ஸை நடு வழியில் நிறுத்திட்டு படம் பார்க்கப் போய்ட்டாரா கண்டக்டர்,” என்று கூப்பாடு. அதையெல்லாம் கேட்க நான் அங்கே நின்றால்தானே. பரசு, “எப்படா படம் விடும்?” என்றான். “கரெக்டா ஒன்பதரைக்கு வந்திரு” என்று மட்டும் கத்தி விட்டு தியேட்டருக்குள் ஓடினேன்
தியேட்டருக்கு வந்தால், “ஏ.சி பாக்ஸ் டிக்கெட்டுதான் இருக்கு. அதுவும் பிளாக்கில் டிக்கெட் விற்கும் குலாமிடம்தான் இருக்கு. முப்பது ரூபா சொல்லுதான்” என்றார்கள். டிக்கெட் மூணு ரூபாய் இருபது பைசாதான். நான் டிக்கெட் கவுண்டர் பக்கம் பார்த்தேன். கூட்டம் நெருக்கிக் கொண்டிருந்தது. பெல் வேறு அடித்தார்கள். படம் சீக்கிரம் போட்டு விடுவார்கள். யார் எங்கே பிரட்டினார்கள் தெரியாது. இருபத்தி ஐந்து ரூபாய்க்கு மூன்று டிக்கெட்டையும் வாங்கினான் ஒருத்தன். ஐந்து ரூபாய் குலாமிடமும் கடன். மூன்று பெண்களும் ஏ.சி டிக்கெட் எடுக்கவில்லை. அவங்க பின்னாலயோ பக்கத்திலோ உக்காரணும்ன்னா அவங்க எடுத்திருக்கிற டிக்கெட்டே எங்களுக்கும் வேணும். அது என்ன டிக்கெட் பாருடா என்று பார்த்தால் மூன்றும் மூன்று விதமான டிக்கெட். ஒருத்தி ரூ1.66, இன்னொன்னு ரூ2.06, மூணாவது ரூ2.46. ஆறு மணி ஷோவுக்கான ஹை கிளாஸ் டிக்கெட்டுகளை ஐந்து மணியிலிருந்தே கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி வாங்கியிருக்கிறார்கள் போல.
மூணு தனி பைத்தியக்காரங்களைப் பிடிச்சு மூணு பேரையும் ஏ.சி டிக்கெட்டில் மாறி உக்காரச் சொல்லறதுக்குள்ள மொத்த தியேட்டரும் எங்களை வேடிக்கை பார்த்தது. எங்களிடம், “உக்காருங்கடா மறைக்காதீங்கடா” என்று கத்தியது. “நியூஸ் ரீல்தானே ஓடுது” என்று பதிலுக்குக் கத்தினோம். பொண்ணுங்கதான் திரும்பிக் கூட பாக்கலை. தலையைக் கவிழ்ந்து கொண்டாள். இண்டர்வெல்லில் காரிடாரில் நின்று தம் அடித்துக் கொண்டிருந்த போது சாலையில் பரசு பஸ் போனது. அய்யய்யோ பத்து ரூபாய் பொறட்டணுமே… படம் முடியவும் பஸ்சை தேய்ச்சுக்கிட்டே வாசலில் நிற்பானே… அநேகமா அதுதான் கடைசி ட்ரிப்… “உண்ணாமத் திங்காம முப்பது ரூபாய் கடனாளி ஆகி நிக்கிறோமே.. இந்த சிட்டுக்குருவிங்க திரும்பிக் கூடப் பார்க்கலை.. “பரசுக்கு. அவன் கணக்கு முடிக்கிறதுக்குள்ள பத்து ரூபா குடுக்கணுமே என்னடா செய்யறது?” என்றேன். “என்னமும் செய், நாங்களும்தான் கடன் பட்டிருக்கோம்,” என்றார்கள்.
“முதல் நாள் முதல் ஷோவுக்குக் கூட முப்பது ரூபா குடுத்துப் படம் பாக்கலை, ராஜ மரியாதையோட முதலாளி, காசே வாங்காம ரெண்டு ரூபா ஆறு பைசா டிக்கெட் குடுத்து அனுப்பிச்சாரு. இன்னைக்கி முப்பது ரூவா டிக்கெட்டா…போங்கடா.” எனக்கு மனசு ஆறவே இல்லை. படம் ரிலீஸான அன்று அப்படிக் கூட்டம். புதுப்படப்பெட்டி வழக்கமா ரயிலில்தான் வரும். அன்று படப்பெட்டியை மதுரை வரை விமானத்தில் வரவழைத்து, காரை மாற்றி மாற்றி ரகசியமாகக் கொண்டு வந்து கொண்டிருப்பதாகத் தகவல் கசிந்திருந்தது. படம் ரிலீஸ் ஆவதில் பயங்கர பிரச்னை இருப்பதாக பரபரப்பான பேச்சு அடிபட்டது. படம் ரிலீஸ் ஆனால் நான் சேலையைக் கட்டிக்கொள்கிறேன் என்று மதுரைப் பிரமுகர் சவால் விட்டிருந்தார். கூட்டமான கூட்டம். அப்படி ஒரு கூட்டத்தை வாழ்நாளில் பார்த்ததே இல்லை. முதலாளி என் அப்பாவின் சினேகிதர். அவருக்கே படத்தை ரிலீஸ் பண்ண மிரட்டல் வந்திருப்பதாக வதந்திகள் உலவிக் கொண்டிருந்தன. முதல் நாளே போய் டிக்கெட்டுக்குச் சொல்லியிருந்தேன். “நாலு ஷோவுக்கு பெர்மிஷன் கேட்ருக்கோம். காலையில் வாரும். படம் எப்படியும் வந்திரும் ஆனா, உறுதியில்லை. அதனால ரிசர்வேஷன் கொடுக்க முடியலை.. உமக்கு இல்லாத டிக்கெட்டா?” என்றார். ஆனால், படம் ரிலீஸாகும் அன்று அவரே எதிர்பார்க்காத அப்படி ஒரு திருவிழாக் கூட்டம்.
டிக்கட்டுகள் இருக்கும் ஆபீஸ் அறைக்கும் முதலாளியின் அறைக்கும் நடுவே அப்படியொரு ஜனத்திரள். அவர் அறையைத் திறக்கவே முடியவில்லை. உள்ளே போனால்தான் டிக்கெட் கேட்க முடியும். கதவையே திறக்க முடியாதபடி கூட்டம். ஒருவழியாய் படப்பெட்டி வந்து சேர்ந்தது. அதை ஆப்பரேட்டர் அறைக்குக் கொண்டு போவதற்கு ரசிகர்கள், அரிவாள் கம்புகளோடு பெரிய பதுகாப்பு வளையத்தையே உருவாக்கியிருந்தார்கள். பெட்டி வந்த செய்தி கேட்டதும் முதலாளி வெளியே வந்தார். என்னைப் பார்த்ததும், “ஆபீஸிலிருந்து டிக்கெட்டே வரமுடியாது போல இருக்கே,” என்றார். “எனக்கு தரை டிக்கெட் கூடப் போதும் அண்ணாச்சி,” என்றேன்.
பக்கத்தில் இருந்த அவரது சேக்காளி ஒருவர், “எப்படி தம்பி டிக்கெட் தருவாக, அங்கே கூட்டத்தைப் பாரும்,” என்றார். அவரை எனக்கு ஏற்கெனவே பிடிக்காது. “நீங்க சும்மா இருங்க அண்ணாச்சி, முதலாளிகிட்ட கேக்கேன் அவுக குடுத்தா படம் பார்ப்பேன்…நீங்க என்ன நடுவில…” என்று என்னையறியாமல் சத்தமிட்டேன். முதலாளி என்னை சமாதானப்படுத்தி, “ நீரு உள்ளே வாரும்,” என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றார். பின்னாலிருந்த நண்பர்கள் எல்லாம், “ஏல எனக்கொரு டிக்கெட் எனக்கொரு டிக்கெட்” என்று சத்தம் கொடுத்தார்கள். நான் எதையும் காதில் வாங்கவில்லை.
ஒரு வழியாய் டிக்கெட் வந்தது. “இந்தாரும் வே” என்று ஒரு டிக்கெட்டை என்னிடம் நீட்டினார். நான், “அண்ணாச்சி ரூபா,” என்றேன். “முதல்ல, பேசாம படம் பாத்துட்டு வாரும்..” என்று அனுப்பி விட்டார். அவருக்கு சமாளிக்க வேண்டிய வேறு ஆட்கள் நிறைய இருந்தார்கள். நானும் அதிகமாய் ஏதும் டிக்கெட்டும் கேட்கவில்லை. அவ்வளவு மரியாதையாய்ப் படம் பார்க்கப் போனது அன்று. இன்றைக்கு ‘பொட்டப் பிள்ளைங்க படம் பார்க்கப் போறாங்க டிக்கெட் தாங்க’ என்றா கேட்க முடியும்? கேட்டாலும் “நீருதான் படம் பார்த்தாச்சே?” என்று சொன்னால் என்ன செய்ய? இடையில் ஒரு தரம் ஒரு அண்ணன் கேட்டதாக டிக்கெட் வாங்கியிருந்தேன்.
இண்டர்வெல்லுக்கு அப்புறம் படம் பார்க்கவே பிடிக்கவில்லை. எழுந்து செல்லலாம் என்றால் முன்னால் உட்கார்ந்திருக்கும் புறா லேசாகத் திரும்பியது. இதுக்குத்தானே கடன் பட்டு வந்திருக்கிறோம்; இன்னொரு தரம் திரும்புவாள் என்று உட்கார்ந்து விட்டேன். படம் முடியும் போது திரும்பி ஒரு தரம் சிரித்தாள். அவளுக்குத் தெரிந்திருக்கும். இந்த லூசு ஏற்கெனவே படம் பார்த்திருப்பான். நமக்காகத்தான் இன்றைக்கு வந்திருப்பான் என்று. லேசாகத் திரும்பியதற்கே ஆகா ஜென்மம் சாபல்யமடைந்தது என்று மனசு கூத்தாடியது. பரசு திட்டினால் திட்டட்டும். நட்பே போனாலும் பரவாயில்லை. நாளைக்கு பழைய பேப்பர் புஸ்தகம் எதையாவது விற்று காசைக் கொடுத்துக் கொள்ளலாம். இன்றைக்கு அவனே கேட்காமலே கூட இருக்கலாம்.
அப்படித்தான் ஆனது. படம் முடியவும் பரசு பஸ்ஸைத் தேய்த்துக் கொண்டு வாசலில் நின்றான். அடுத்த பஸ்ஸில் ராம மூர்த்தி. ஆபத்பாந்தவா என்று அவனிடம் போய், “பத்து ரூபா குடுடா. நாளைக்குத் தாரேன்” என்றேன். அவனுக்கு என் புறாவைப் பற்றித் தெரியும். “என்னடா மாப்பிளை, தங்கச்சி வந்திருந்தாளா?“ என்றான் “ஆமா” என்றேன். யார் தங்கச்சி யார் மாப்பிளை. அதுக திரும்பக்கூட இல்லைன்னாலும் இங்கே நட்புக்குள்ள பெரிய உறவு வட்டம் உருவாகும். அது ஒரு காலம். மறு பேச்சு பேசாமல் பத்து ரூபாய் கொடுத்தான். உனக்கு கலெக்ஷன்ல உதைக்காதே என்றேன்.. “இன்னைக்கி நல்ல கலெக்ஷன், பேட்டா பன்னிரெண்டு ரூவா வரை வரும். அந்த பரசு நாய்க்கும் வருமே, அவன் காசு கேக்க மாட்டான். வச்சுக்க, கேட்டா குடு,” என்றான்.
பரசு பஸ்ஸில்தான் கலர் கலரான கூட்டம். “ஏல, ஏறிக்கடா. இன்னும் பூர்ணகலா படம் விட்டிருக்க மாட்டாங்க ஜங்ஷன்ல வேற டிக்கெட் பிக் அப் பண்ணனும் .வா ஏறு,” என்றான். ஃபுட் போர்டில் தாவி ஏறினோம். பரசு காசைக் கேட்கவில்லை.. வண்டியை விட்டு இறங்கியதும் கடன் இருக்கேன்னு கவலைப்படாம, அஞ்சு பேரும் ராத்திரி சந்தோஷமாக சிட்டுக்குருவிகளைப் பற்றிப் பேசிக் கொண்டே சுல்தானியாவில் ரொட்டி சால்னா சாப்பிட்டோம். ரொம்பக் கௌரவமாக நான் பதினைந்து ரூபாய் பில்லை செட்டில் பண்ணினேன் பதினொரு மணி ராத்திரிக்கு இனிமே டவுன் பஸ் கிடையாது. கால்நடையாக நடந்து வீட்டுக்கு வந்தோம். சென்ட்ரல் தியேட்டரைக் கடக்கையில் ஹவுஸ் ஃபுல் போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. மறுபடி கடனைத் திருப்பிக் கொடுக்கணுமே என்று தோன்றியது.
kalapria@gmail.com