இணைய இதழ்இணைய இதழ் 75மொழிபெயர்ப்பு கவிதைகள்மொழிபெயர்ப்புகள்

சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் (தமிழில்: க.மோகனரங்கன்)

நான் ஒரு தவறு செய்தேன்

அலமாரியின் மேல்பகுதியை
ஆராய்ந்துகொண்டிருந்தவன் 
ஒரு ஜோடி நீல நிற
உள்ளாடைகளை வெளியே எடுத்து  அவளிடம் காட்டி,
இவை உன்னுடையதா?” என்று வினவினேன்.
அவள் பார்த்துவிட்டு, “இல்லை, அவை ஒரு நாய்க்குச் சொந்தமானவை.” என்றவள் அதன் பிறகு போய்விட்டாள்,
அப்போதிலிருந்து
அவளை நான் பார்க்கவில்லை. அவள் தன் இருப்பிடத்திலும் இல்லை.
அங்கு சென்று பார்த்துக் கொண்டே இருந்தேன்.
கதவில் குறிப்பு எழுதி மாட்டி வைத்துவிட்டு வந்தேன்;
நான் திரும்பிச் சென்று பார்க்கும்போதும்
அக்குறிப்புகள் அப்படியே இருந்தன.
என் கார் கண்ணாடியில் இருந்து
மால்டிஸ் சிலுவையை கத்தரித்து எடுத்து 
காலணியை முடிச்சிடும் கயிற்றால்  அதை
அவளது கதவுக் கைப்பிடியில் கட்டிவைத்தவன்
ஒரு கவிதைப் புத்தகத்தையும் அங்கே விட்டு வந்தேன்.
அடுத்த நாள் இரவு
நான் திரும்பிப் போகும்போது
அவை எல்லாம் வைத்தது வைத்தபடியே இருந்தன.
அவள் ஓட்டும்
பலவீனமான பேட்டரியும்
உடைந்த கீல்களில் இருந்து தொங்கும் கதவுகளுடன் கூடிய
இரத்த ஒயின் நிற பேட்டில்ஷிப் காரினைத் தேடியவாறு,
நான் தெருக்களைச் சுற்றி வருகிறேன்;
அழுகைக்கு ஒரு அங்குலம் தொலைவில் எனது காரை செலுத்துகிறேன்.
என் உணர்ச்சி தழுதழுப்பையும்
சாத்தியமான காதலையும்
எண்ணி வெட்கினேன் .
ஒரு குழம்பிப்போன வயோதிகன் தன் அதிர்ஷ்டமெல்லாம்
எங்கே சென்றுவிட்டது
என்று யோசித்தவாறு
மழையில் தன் காரை செலுத்துகிறான்.

****

மாபெரும் தப்பித்தல்

கேளுங்கள்,
நீங்கள் எப்போதாவது
வாளியொன்றிலிருக்கும்
நண்டுக் குவியலைப் பார்த்திருக்கிறீர்களா?
அவன் என்னிடம் வினவினான்.
இல்லை
அவனுக்கு பதில் சொன்னேன்.
சரி, என்ன நடக்கிறது என்றால் அவ்வப்போது  ஒரு நண்டு மற்றவற்றின் மேல் ஏறி
வாளியின் உச்சியை நோக்கி நகரத் தொடங்கும்,
பிறகு, அது தப்பிக்கப் போகும் தருணத்தில்
மற்றொரு நண்டு அதைப் பிடித்து கீழே  இழுத்துவிடுகிறது . மெய்யாகவா? நான் கேட்டேன். நிஜமாகதான், அவர் கூறினார்.
இந்த விஷயம் அப்படித்தான்,
இங்கே ஒருவர் வெளியேறுவதை
மற்றவர்கள் யாரும் விரும்புவதில்லை.
தபால் துறையிலும்
இதுதான் நடக்கிறது!
நீ சொல்வதை நம்புகிறேன், என்றேன்.
உடனே மேற்பார்வையாளர்
எழுந்து வந்து சொன்னார். தோழர்களே நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
இந்த வேலையில் பேசுவதற்கு அனுமதி இல்லை.
பதினொன்றரை ஆண்டுகள் அங்கே பணிபுரிந்தேன்.
நான் என் ஸ்டூலில் இருந்து எழுந்து
மேற்பார்வையாளருக்கு நேர்
மேலாக ஏறினேன். அடுத்து  உச்சியை  அடைந்ததும்
அங்கிருந்து  என்னை வெளியே இழுத்தேன்.
அது மிகவும் எளிதாக இருந்தது அது நம்பமுடியாததாக இருந்தது. ஆனால் மற்றவர்கள் யாரும் என்னைப் பின்தொடரவில்லை.
அதன் பிறகு, எனக்கு நண்டு கால்கள் முளைத்தபோதெல்லாம்
அந்த இடத்தைப் பற்றி யோசித்தேன்.
ஒருவேளை 5 அல்லது 6 முறை
நான் அந்த இடத்தைப் பற்றி யோசித்திருக்கக் கூடும் 
நானொரு கடல் நண்டாக மாறுவதற்கு முன்பு.

*****

3) வழக்கம்

என் அப்பா
எப்போதும் சொல்வார்,
நேரத்தோடு படுக்கைக்குச் செல்வதும்
சீக்கிரம் எழுவதும்
ஒருவனை செல்வந்தனாகவும் ஆரோக்கியமானவனாகவும்  அறிவுள்ளவனாகவும் ஆக்கும்

இரவு 8 மணிக்கு
எங்கள் வீட்டில் விளக்கு அணைந்துவிடும்
நாங்கள் விடியற்காலையில் 
காபி,வறுத்த பன்றி இறைச்சி, முட்டைத் துருவல் வாசனைக்கு
எழுந்திருந்தோம்.

இந்த வழக்கத்தை
தம் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்துவந்த
என் தந்தை  இளம் வயதில்,
மனம் உடைந்தது
இறந்தார். தவிரவும்
அவர் அப்படியொன்றும்
புத்திசாலி இல்லை என்றே எண்ணுகிறேன்.

ஆராய்ந்து பார்த்துவிட்டுஅவருடைய ஆலோசனையை நான் நிராகரித்தேன்.
தாமதமாகப் படுக்கைக்குச் செல்வதும் 
பிந்தி எழுவதும்
என்னுடைய பழக்கமாக ஆயிற்று.

இப்போது,
நான் உலகை வென்றவனாக
இருக்கிறேன் என்று சொல்லவில்லை.
ஆனால்
எண்ணற்ற காலை நேர போக்குவரத்து நெரிசல்களை
என்னால் தவிர்க்க முடிந்தது, விழுந்து வாரியிருக்கூடிய
பொதுவான சில பள்ளங்களை
விலகிக் கடந்து சென்றேன்.
மேலும் விநோதமும்,
அற்புதமும் நிரம்பிய மனிதர்கள் சிலரை சந்திக்கவும் முடிந்தது.
அவர்களில் நானும்  ஒருவன்
என் தந்தை ஒருபோதும் அறிந்திராத ஒருவன்.

****

கலவரங்கள்

இந்நகரம் எரிவதை 
என் வாழ்நாளில்
இரண்டு முறை கண்டிருக்கிறேன்.
அதையடுத்து
இந்த அமைப்பின் தவறுகளை
குறைகூறியவாறு,
ஏழைகளை முன்னிட்டு
அவர்களுக்கான புதிய திட்டங்களோடு வந்த
அரசியல்வாதிகள்தான்
சிறப்பாகக்  குறிப்பிடவேண்டியவர்கள்.
சென்ற முறை எதுவும்
சரி செய்யப்படவில்லை.
இம்முறையும் எதுவும்
நிவர்த்தி செய்யப்படாது.
ஏழைகள்
ஏழையாகவே இருப்பார்கள்.
வேலையற்றவர்கள் வேலையில்லாமலும் அதனால்.
வீடற்றவர்கள்
வீடில்லாமலும் இருப்பார்கள்.  அரசியல்வாதிகளோ,
கொழுத்துப்போய்
இப்புவியில்
நன்றாக வாழ்வார்கள்.

****

வயதான தெற்றுப்பல் பெண்மணிக்கு ஒரு கவிதை

புதிர் அட்டைகளை வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும்
ஒரு பெண்மணியை
எனக்குத் தெரியும்!
சீனப் புதிர்கள்
அட்டைத் தொகுதிகள்
இணைப்புக் கம்பிகள்
கடைசியாக ஏதோவொரு வரிசையில்
பொருந்தும் துண்டுகள்.
அவள் கணித முறைப்படி காரியமாற்றுகிறாள் 
தனது புதிர்கள் அனைத்தையும் தீர்க்கிறாள்
கடலுக்கு அருகில் வாழ்கிறவள் எறும்புகளுக்கு சர்க்கரை வைப்பதால்  
இறுதியில் ஒரு சிறந்தஉலகில் தான்
இருக்கலாம் என நம்புகிறாள். அவளுடைய தலைமுடி வெண்மையானது
அவள் அதை அரிதாக சீவிமுடிக்கிறாள்
அவளுடைய பற்கள் துருத்திக்கொண்டிருக்கின்றன
பெண்கள் பலரும்
தமக்கிருக்கவேண்டும் என்று விரும்பக்கூடிய  அவ் உடலை
மூடியிருக்குமாறு,
அவள் தளர்வான
வடிவமற்ற ஆடைகளை
உறை போல உடுத்தியிருப்பாள்.
தாவரங்களுக்கு உணவளிக்க,
முட்டை ஓடுகளை தண்ணீரில் ஊறவைப்பது(அதனால் அவை கால்சியம் பெறும்)போன்ற விசித்திரமான பழக்கங்களால்
அவள் பல வருடங்களுக்கு
என்னை எரிச்சலூட்டியிருக்கிறாள்.
ஆயினும் இறுதியாக
அவளுடைய வாழ்வைப் பற்றி
எண்ணும்போதும்
மற்றவர்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு நோக்கும்போதும்
அது ஆச்சரியமளிப்பதாகவும்
அசலானதாகவும்
அழகான ஒன்றாகவும் தோன்றுகிறது.
எனக்குத் தெரிந்த
எவர் ஒருவரைக் காட்டிலும்
மிகக் குறைவான பேர்களையே
அவள் வருந்தச் செய்திருப்பாள்
( வருத்தம் என்றால் நான் நேரடியாக வருத்தத்தையையே குறிப்பிடுகிறேன்)
அவள் சில மோசமான பருவங்களைக் கடந்து வந்திருக்கிறாள்.
அக்காலங்களில் நான் அவளுக்கு
அதிகப்படியாக உதவியிருந்திருக்கிறேன்.
அவள் என்னுடைய ஒரே மகனின் தாயார்
ஒருசமயத்தில் நாங்களிருவரும்
அருமையான காதலர்களாக இருந்தோம்.
அவள் கடந்து வருகையில்
நான் கூறிதைப் போல
எனக்குத் தெரிந்த எவரையும் விட
அவள் குறைவான மனிதர்களையே
நோகச் செய்திருக்கிறாள்.
நல்லது
அவ்விதமாகப் பார்க்கையில்
அவள் சிறப்பானதொரு உலகைத்தான் உருவாக்கியிருந்தாள்
அவள் வென்றுவிட்டாள்.

பிரான்சிஸ்,
இக்கவிதை உனக்காக.

*****

இழப்பு

நரகம் நிரம்பி வழிகிறது
என்று சொல்கிறார்கள்
எனினும்
நீங்கள் நரகத்தில் இருக்கும்போது,
நீங்கள் எப்போதும் தனியாக இருப்பது போல் தெரிகிறது.
மேலும் நீங்கள் நரகத்தில் இருக்கும்போது யாரிடமும்
சொல்ல முடியாது
அல்லது அவர்கள் உங்களை பைத்தியம் என்று நினைப்பார்கள்
பைத்தியமாக இருப்பது என்பது
நரகத்தில் இருப்பது
தவிர புத்திசாலித்தனமாக இருப்பதும் நரகமாகும்.

இருப்பினும்,
நரகத்திலிருந்து தப்பிப்பவர்கள்
அதைப் பற்றி பேசுவதே இல்லை
அதன் பிறகு எதுவொன்றும் அவர்களை அதிகம்
தொந்தரவு செய்வதில்லை.
அதாவது, உணவைத் தவறவிடுவது
சிறைக்குச் செல்வது,
உங்கள் கார் உடைந்துபோவது,
போன்ற விஷயங்கள்,
அல்லது மரணம் பற்றிய எண்ணமும் கூட.

அவர்களிடம்
காரியங்கள் எப்படி
நடக்கின்றன?”
எனக் கேட்கையில்,
எப்போதும் அவர்கள்
நல்லது, நன்றாக இருக்கிறது…”
என்றே பதிலளிப்பார்கள்.

ஒருமுறை
நீங்கள் நரகத்திற்குச் சென்று திரும்பிவருவீர்களாயின்,
அது போதும்
அதுவே மனிதனால் அறியமுடிந்த ஆகப்பெரிய நிறைவு.

நீங்கள் நரகத்திற்குச் சென்று மீண்டு வந்தபிறகு,
தரை கிரீச்சிடுகையில்
நீங்கள் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டாம்
சூரியன் எப்போதும் நள்ளிரவில் உதிக்கும்
எலிகளின் கண்கள் போலவோ
அல்லது காலி இடத்தில் கைவிடப்பட்ட டயர் மாதிரியோ இருக்கும் பொருட்கள்
உங்களை சிரிக்க வைக்க முடியும்
நீங்கள் நரகத்திற்குச் சென்று திரும்பியவுடன்.

****

கேள்வி  பதில்

அவர்
கோடைகால இரவு
ஒன்றில் 
அறையில் நிர்வாணமாக
அமர்ந்தபடி குடித்துக்கொண்டிருந்தார், கத்தியின் கூர்முனை
அவரது விரல் நகங்களின் கீழ்
நெளிந்துகொண்டிருந்தது.
புன்னகையோடு, யோசித்துக்கொண்டிருந்தார்
அவருக்கு  வந்த
அனைத்து கடிதங்களும்
அவரிடம் சொல்கின்றன;
எல்லாமும்  மெய்யாகவே நம்பிக்கையற்று தோன்றியபோது
அவர் வாழ்ந்த வாழ்க்கையும் அதைப் பற்றி அவர் எழுதிய விதமும்அவர்களை மேலும்
தொடர்ந்து செல்ல உக்கமளித்தன.

கத்தியை மேஜையில் வைத்து, அவர் அதை விரலால் சுண்டினார்
ஒளிரும் வட்டத்தில்
ஒளியின் கீழ்
அது சுழன்றது

எந்தப் பிசாசு
என்னைக் காப்பாற்றப் போகிறது? அவர் எண்ணினார்.
கத்தி சுழல்வதை நிறுத்தியது போல பதில் வந்தது:
உங்களை நீங்களேதான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

புன்னகை மாறாமல்,
a: அவர் ஒரு  சிகரெட் பற்ற வைத்தார்
b: அவர்  மற்றொரு மடக்கு பானம்
ஊற்றிக்கொண்டார்
c: கத்தியை இன்னொரு முறை சுழலவிட்டார்.

******

சார்லஸ் புக்கோவ்ஸ்கி

சார்லஸ் புக்கோவ்ஸ்கி (1920-1994)

ஜெர்மானியத் தாய்க்கும் ராணுவ வீரரான அமெரிக்கத் தந்தைக்கும் பிறந்த புக்கோவ்ஸ்கி தனது மூன்றாவது வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். பற்பல சிறு தற்காலிக வேலைகளைச் செய்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தவரின் முதன்மையான விருப்பம் எழுத்தாளராக ஆகவேண்டும் என்பதே. தொடக்கத்தில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தவர் பிறகு கவிதைகளில் ஈடுபாடு கொண்டார். இருபதாம் நூற்றாண்டு அமெரிக்கக் கவிதையின் செல்வாக்கு மிகுந்த குரல்களில் ஒன்று என மதிப்பிடப் பெறும் புக்கோவ்ஸ்கி ஆயிரக்கணக்கான கவிதைகளும்
நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளும் ஆறு நாவல்களும் எழுதியுள்ளார். அமெரிக்காவின் கீழ் மத்தியதர மற்றும் உதிரி மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளை கச்சாப்பொருளாகக் கொண்ட இவரது படைப்புகள்,அழுக்கு
யதார்த்தம்என்ற அடைமொழியால் குறிக்கப்பெறுகின்றன.

*******

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button