இணைய இதழ்இணைய இதழ் 75சிறுகதைகள்

துறைமுகம் – கமலதேவி

சிறுகதை | வாசகசாலை

பாரிமுனையில் இறங்கி ட்ராம்வேயின் இந்தப்புறமே நடந்தேன். சத்தமில்லாது பூனை போல ட்ராம்வண்டி நகர்ந்து சென்றதுகாலையிலையே ஜானகியிடம் கோபத்தைக் காட்டியதை நினைத்தால் சஞ்சலமாக இருக்கிறது. பெர்னாலியின் எண்கள் காணாமற் போனதற்கு ஜானகி என்ன பண்ணுவாள்? ஆனால் அவள்தான் வாங்கிக் கட்டிக்கொள்கிறாள். வேறு யாரிடமும் குரல் உயர்த்தாத நான் அவளிடம் மட்டும் கத்தித் தொலைக்கிறேன்மதராஸ் வழக்கம் போல காலை நேர அவசரத்தில் இருப்பதைப் பார்த்தபடி ஒதுங்கி நடந்தேன். இன்னும் இந்த அவசரம் எனக்கு கைவரவில்லை. வீட்டில் சீக்கிரமே கிளம்பிவிடுவேன். மேலும் துறைமுகக் கழகத்திற்கு மணலில் நடக்க வேண்டும். சென்ற ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் பி.எஃப் படிக்கும்போது தினமும் ட்ராமில் சென்று வருவேன். கல்லூரியில் சேர்ந்த மூன்றாம்  நாளே ட்ராம் காற்று என் குல்லாயைப் பறித்து சாலையில் வீசியது

சமஸ்கிருத வகுப்பில் பேராசியர் கிருஷ்ண சாஸ்த்ரி முறைத்து எழுப்பினார்.

மிஸ்ட்டர் சீனிவாச ராமானுஜன்இது ஃபெல்லோ ஆஃப் ஆர்ட்ஸ் படிப்பாக்கும். இது ஒன்னும் பள்ளிக்கூடமில்லகுடுமி வச்சுட்டு வரதுக்கு…”

மன்னிக்கவும் சார்,”

எந்த எக்ஸ்க்யூஸும் இல்லை. ஏன் குல்லாய் போட்டுட்டு வரல..பின்னாடி போய் நில்லுங்க,”என்று துரத்திவிட்டார். பி.எஃப் படிப்பில்  மேற்படிப்பிற்கான உதவித்தொகை பெறும் அளவிற்கு ஆங்கிலத்தில் மதிப்பெண்கள் பெறமுடியவில்லை. கல்வி உதவித்தொகையில்லாமல் பி. கணக்கு படிக்க வைக்க வீட்டில் வகையில்லை. வேலையில் சேர்ந்து ஒரு மாதமாகிறது. தினமும் அலுவலகத்திற்கு நடக்கும் இந்த நேரத்தில் மனம் எதையாவது சிந்திக்கத் தொடங்குவது வழக்கமாகிவிட்டது. அதைத் தடுத்தால் தலைபாரமாகி விடுகிறது.

கணக்கில் மட்டும் முதல் மதிப்பெண் வாங்கினால் போதுமா? என்று அனைவரிடமும் பேச்சுக் கேட்டு படிப்பை விட்டாயிற்றுஇன்றிருக்கும் துறைமுகக் கழக வேலை கிடைப்பதற்குள் வேலையின் மகத்துவம் புரிந்துவிட்டது. மாதம் முப்பது ரூபாய் சம்பளத்துடன் சேர்த்துபி. கணித மாணவர்களுக்கு தினமும் ட்யூசன் எடுத்து வாழ்க்கைப் பாட்டை சமாளிக்க முடிகிறது

நான் தினமும் சாப்பாட்டுப் பொட்டலத்துடன் ட்ராம் ஏறித் திரும்பி, தூங்கி எழுந்து, சம்பளம் வாங்கி வாழ்க்கையைக் கழிக்க விதியிருந்தால் என்னால் இந்த வேலைக்கே மகிழ்ச்சியாக இருக்கமுடியும். ஆனால் ஒன்றை இழந்த உணர்வும், ஏக்கமும் சதா சர்வ நேரமும் மனதைத் தொந்தரவு செய்கிறது. ஜானகியை முதன்முதலாக கும்பகோணத்தில் விட்டுவிட்டு மதராஸீக்கு வந்த அன்று இருந்ததைப் போன்று எப்போதும் என்னைப் பிரிந்தே நான் அலுவலம் வருகிறேன். ஜானகியை ஊஞ்சல் வைபவத்தில் பார்த்ததில் இருந்து அவள் மீது உள்ள ஒரு ஒட்டுதல் போன்ற ஒன்று. விரல் விட்டு எண்களை எண்ணத்தொடங்கியது முதல் எண்கள் மீதுள்ள ஒட்டுதல் அது. என்னை என்னுடனே வைத்துக்கொள்ள தினமும்  போராடுகிறேன். அது ஒரு சமயம் நாக்கிற்கு அடியில் ஊறும் இனிப்பாகவும், மறுசமயம் கண்ணில் விழுந்த தூசியாகவும் பதறச் செய்கிறது. என்னை தனியாளாக ஆக்குவதும் அதுதான். அலுவலகத்தில் யாருடனும் ஒட்டவிடாமல் செய்கிறது. மற்றவர்களைப் போல நிம்மதியாய் இருக்க விட மாட்டேன் என்கிறது.

 பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் சிங்காரவேலுவை சந்தக்கவில்லை என்றால் என் புத்தி இன்னும் என்னை வதைத்து நெருப்பில் போடும். ‘இங்கு உன்னைப் புரியவைக்க முடியாது ராமானுஜன். கணக்கு நோட்டுகளை எடுத்துக்கொண்டு படிபடியாய் ஏறி இறங்காதே. ஒரு வேலை தேடிக்கொள். இந்த கணக்குகளை முழுமையாக முடித்து கேம்ப்ரிஜ் பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைகணித இதழ்களுக்கு கட்டுரைகள் எழுது’ என்று சொல்லி அனுப்பினார். ஒரு சின்ன வெளிச்சம் புலப்பட்டுவிட்டது. அதனால்தான் இந்த வேலையை மனம் உவந்து செய்ய முடிகிறது. தினமும் கேம்ப்ரிட்ஜை நினைத்துக்கொண்டால்தான் இப்படி கண்ட கண்ட சிந்தனைகளுடனாவது வேலைக்கு வரமுடிகிறது.

இலையில் நைய்வைத்திய இனிப்பை  மட்டும் வைத்ததைப் போல நாமகிரித்தாயார் கணக்கை மட்டும் இவனுக்கு  எழுதிவிட்டாள். இந்த லோகத்துல உள்ள பசிகளுக்கு இது மட்டும் போருமா?என்று அம்மா அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பாள். கல்லூரிப் படிப்பு அமையவில்லை என்றாலும் வீட்டிலும், வேலையிடத்திலுமாக கிடைத்த நேரத்தில் சொந்தமாக கணக்குகளை எழுதிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ட்யூசன் பையன்களிடம் நூலகப் புத்தகங்களை இரவல் வாங்கி புதுப்புது கணக்குகளுக்கு என் வழிமுறையில் தீர்வு கண்டு வைக்கிறேன். நேற்று எழுதிய முக்கியமான இரண்டு தாள்களைக்  காணவில்லை. அவற்றை கணிதசங்க இதழுக்கு அனுப்பலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

கடற்கரை மணலில் கிழக்காக துறைமுகம் நோக்கி நடந்தேன். பறக்கும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டன். காலை வெயிலில் கண்கள் கூச கண்ணெதிரே வங்கக்கடல் தழும்புகிறது. பறவைக் கூட்டங்கள்  போல படகுகள் விரிகோணத்தில் அசைகின்றன. மதராசிலிருந்து லண்டன்  கிளம்பும் பெரிய பயணக் கப்பல் ஒன்றின் அறிவிப்பு ஒலி இடைவிடாது பிளிறுகிறது.

இந்த ஊரில் எங்கும் சத்தம். இந்நேரம் கும்பகோணம் சந்துவீடுகளின் குளிர்ந்த திண்ணைகளில் தலைசாய்க்க முகூர்த்தம்  பார்த்துக் கொண்டிருப்பார்கள். முற்பகல் தூக்கத்தின் சுகம் கண்டவர்கள். வெற்றிலை வாயுடன் ஊரை வம்பிழுத்துக் கொண்டிருப்பார்கள்அங்கு எங்களுடைய சிறு வீட்டின் உள்திண்ணையில் அமர்ந்து தெருவைப் பார்த்தபடி கணக்கு எழுதிக்கொண்டிருப்பதில்  எனக்கு சுகம்

முன்னால் சென்றவன் மணலை தூத்தி தூத்தி நடக்கிறான். கண்களின் மேல் கையை வைத்து  மறைத்துக்கொண்டு நடந்தேன். துறைமுகத்தின் வடகிழக்கு நுழைவு வாசலில் ஆட்களின் சந்தடிகள் அதிகமாக இருந்தனஉள்ளே நுழைந்ததும் தலைக்கு மேல் ஏதோ இருப்பது போன்ற ப்ரமையை இங்கு தவிர்க்க முடியாது. அனைத்தும் உயரஉயரமாய், எடைமிக்கதாய், அளவில் பெரியதாக மிரட்டுகிறதுக்ரேன்களின் நிழல்களைப் பார்த்தால் சற்று பதற்றமாகிறது. அங்கு தடுக்கப்பட்டுள்ள இடம்தான் அலுவலகம். துறைமுக கழக அலுவலகத்தை வேறெங்கோ கட்டுவதற்கு ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது.

வழக்கம்போல கண்ணுப்பிள்ளை பின்புறம் அச்சில்லாத தாள்களை சேகரித்து என் பயன்பாட்டிற்காக மேசை மீது வைத்திருந்தார். அந்தத் தாள்களையும், உணவுப் பொட்டலப்பையையும்  மேசைக்கு அடியில் வைத்தேன். காணாமற்போன கணிதத்தாள்களை கோப்புகளிலும், எனக்குப் பின்னால் இருந்த மர அலமாரிகளிலும்  தேடினேன். பக்கத்து மேசைகளில் சகபாடிகள் வேலையைத்  தொடங்க ஆயத்தமானார்கள்நானும் மேசைக்கு வந்திருந்த குறிப்புகளை பதியத் தொடங்கினேன். பதிந்த  கோப்புகளை மேலாளர்  மேசைக்கு அனுப்பிவிட்டு, குப்பைத்தொட்டியை நான்காவது முறையாக எடுத்துப் பார்த்தேன். அந்தத் தாள்களைக் காணவில்லை

 அடிவயிற்றில் முள் குத்துவதைப் போன்ற வலி. வந்ததில் இருந்து கழிவறைக்குச் செல்லவில்லை. ‘அடிக்கொரு தரம் ஜலம் குடிங்கன்னாஇல்லேன்னா இன்னொருக்கா உன் ஆம்படையானோட வயத்தை கிழிக்கனும் பாத்துக்கோ ன்னு கும்போணம் டாக்டர் சொன்னார்என்று ஜானகி தண்ணீர் சொம்புடன் நிற்பது நினைவிற்கு வந்தது. ‘ஏண்டா அம்பி... நீ ஒன்னுக்கு போறத மறந்துட்டு கணக்கு எழுதுவியோஇருவது வயசுக்குள்ள பிரச்சனையை இழுத்து வச்சிருக்கியே...’என்று குப்புசாமி டாக்டர் திட்டிக்கொண்டே இருப்பார். ஜன்னல் கட்டையில் இருந்த மண்பானை ஜலத்தை அள்ளி தொண்டையில் விட்டுக்கொண்டேன்.

உப்புக்காற்று அலுவலக  அறைக்குள் நுழைந்து உடலைத் தொட்டுக்கொண்டு சென்றது. காற்றுக்கு அழுத்தமோ, கனமோ இருந்துகொண்டே இருப்பதை இங்குதான் உணரமுடிகிறது. உப்புநீரும், காற்றும், மணலுமான பாலை. மேசைக்கு அடியில் இருந்த என்னுடைய தனிக்குறிப்பேட்டை எடுத்தேன்துறைமுகத்தில் சரக்குக் கப்பல்களின் சந்தடிகள் காதுகளை துளைத்தன. எழுந்து வெளியே வந்தேன். நாமகிரி தாயார் எனக்கு எதற்கு  இந்த அருளைக் கொடுத்தாள்? வானத்தில் பறவை பறக்கிறது என்று பார்த்தால், எத்தனை பறவை என்றே மனம் பார்க்கிறது என்று யாரிடம் சொல்லிப் புரியவைக்க முடியும்?

ஒரு சமயம் கவனமே இல்லை என்று அம்மா புலம்புகிறாள். மறு சமயம் சரஸ்வதி கடாட்சம் மிக்கவன் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறாள். இந்த வேலையில் இருந்தாக வேண்டியிருக்கிறது. படகில் இருந்து ஒரு பெட்டியை கொக்கி மாட்டி நான்கு புறமும் அசையாமல் ஒரு க்ரைன் தும்பிக்கையைப் போல தூக்கிக்கொண்டிருந்தது. அதிலிருந்து கண்களை எடுக்க  முடியவில்லை. கப்பல்துறையில் கடல் அசையாமல் இருக்கிறது. இது போன வருஷம் கட்டிமுடித்த  புதிய துறை என்று சொன்னார்கள். புயல் மாற்றிப்போட்டு கடலாகிப்போன பழைய துறை சற்று அப்பால் அலையடித்துக் கிடக்கிறது. கடலுக்குள் கப்பல்துறைகள் கட்டுவதும், புயல் அதை அழிப்பதுமாக வேலைகள் ஆண்டு முழுவதும் நடக்குமாம். துறைமுக கழகத்தின் தலைவர்  ஃப்ரான்சிஸ் ஸ்பிரிங் அறுபது வயது பொறியாளர். நீண்ட காலத்திட்டங்களை வகுக்கிறார். தனக்குப் பிடித்த கல்வியைப் படிக்கவும் அதிலேயே ஊறிக்கிடக்கவும் இவர் போன்ற அமைப்பு வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தூரம் வரை விரிந்து கிடந்த கடலைப்  பார்த்தபடி காற்றுக்காக வாயைத் திறந்தேன் . உப்புக்காற்றின் சுவை நாக்கில் படர்ந்தது.

ராமானுஜன்..”

பக்கத்து மேசை சப்தரிஷியின்  குரல் கேட்கிறது.

வாடா அம்பிதொசுக்குன்னா அங்கபோய் தனியா நிக்கற..கணக்கு வழக்கு வந்தாச்சு,”

மேசைக்கு வந்த வேலையை முடிப்பதற்குள் உச்சிப் பொழுதாகிவிட்டது. அவரவர் சாப்பாட்டுப் பொட்டலங்களை கடை விரிக்கிறார்கள். காலையிலிருந்து இந்த பொழுதிற்காகத்தான் மனம் தவித்துக் கிடந்தது. நான் சம்மணமிட்டு தரையில் அமர்ந்து கணக்கு நோட்டை விரித்து வைத்தேன்நாமகிரித் தாயாரை மனதில் நினைத்துக்கொண்டு  காணாமற்போன கணிதத்தாள்களில் எழுதியதை நினைவுபடுத்தி எழுதிவிட்டு அதைப் பார்த்துகொண்டே தயிர்சாதத்தை   சாப்பிடத் தொடங்கினன். இரண்டுமணிக்கான கடிகார பெண்டுலத்தின் ஒலி கேட்டதும் சட்டென்று நிமிர்ந்தேன். இலையில் எதுவும் மிச்சமில்லை. வெறும் விரல்கள் இலையை தொட்டுக்கொண்டிருந்தன. பின்னால் யாரோ நிற்கிறார்கள். சட்டென்று எழுந்தேன். மேலாளர் நாராயண அய்யரும், துறைமுகத் தலைவர் ஸ்பிரிங்கும் நின்று கொண்டிருந்தார்கள். மெலிந்து சிவந்த மனிதர். வலது கை அவரின் கருப்புநிற கோட்டின் பித்தனை நெருடிக்கொண்டிருக்கிறது.

மிஸ்டர் சீனிவாச ராமானுஜம்,” என்று ஃப்ரான்சிஸ் ஸ்பிரிங் தன்னுடைய கறாரான குரலால் அழைத்தார்

யெஸ் சார்,” 

புதிதாக வேலைக்குச் சேர்ந்த குமாஸ்தாவா?”

தலையாட்டினேன். தலையாட்டியடி தரையில் இருந்த கணக்கு நோட்டைப் பார்த்தார். அதன் தாள்கள் காற்றில் படபடத்து திரும்பின.

ராமானுஜம் கை அலம்பிட்டு சுருக்க வா,”என்று நாராயணஅய்யர் என்பக்கமாகக் குனிந்து மெல்லிய குரலில் சொன்னார். ஓடிச்சென்று திரும்பி வரும்போது அந்தக் கணக்கு நோட்டு மிஸ்டர் ஸ்ப்ரிங் கைகளில் இருந்தது. அவர் அதே இடத்தில் நின்று தாள்களை திருப்பிக்கொண்டிருந்தார்.

நான் சென்று அவர் முன்பு நின்றவுடன், “உமக்கு இங்கு என்ன வேலை?” என்று கேட்டவாறு என் கண்களைப் பார்த்தார்.

குறிப்புகளைப் பதியவைப்பது,”

இன்றைய வேலை என்னாயிற்று?”

முடித்து டேபிளுக்கு அனுப்பிவிட்டேன்,”

அவர் கண்களை மட்டும் திருப்பி நாராயணய்யரைப் பார்த்தார். அவர் பவ்வியமாகத் தலையசைத்தார்.

இது என்ன நோட்புக்?”

சொந்தமாக கணக்குகளை எழுதிப் பழகும் நோட்டுகள்,”

அலுவலகத்தில் தனிப்பட்ட வேலைகளை செய்யக்கூடாது என்று உமக்குத் தெரியாதா?”

மன்னிக்கவும் சார்,”

இங்கு ரூல்ஸ்தான் முக்கியம் மிஸ்டர்,” என்று சொல்லிவிட்டு நடந்தார்.

உனக்கு சிபாரிசு செய்து வேலை வாங்கிக் கொடுத்ததற்கு நல்ல வேலை செய்தாய்உன்னுடன் சேர்த்து என் வேலையையும் பறிக்கப்போகிறார் பார்,” என்றபடி நாராயணஅய்யர் வேகமாகச் சென்றார்.

அன்று சாயுங்காலம் கடற்கரையில் கணக்கு ட்யூஷனில் மனம் செல்லவில்லை. நாளைக்கு கணக்குப் பார்த்து சம்பள பாக்கியைக் கொடுப்பார்கள் என்று நாராயணய்யர் சொன்னார். இந்த வேலையும் போய்விட்டால் இந்தப் பட்டணத்தில் ஜானகியையும் அம்மாவையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? வேறு வேலை ஏற்பாடு செய்வதற்கு எவ்வளவு நாளாகும்? அதுவரை வயிற்றுப்பாட்டிற்கு என்ன செய்வது? என்று மனதில் கண்டகண்ட சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. நான் எழுதிக் கொடுத்த கணக்குகளை பையன்கள் நோட்டுகளில் எழுதி எடுத்துக் கொண்டிருந்தார்கள். இருட்டத் தொடங்கியது. சற்று தொலைவில் உயர்நீதி மன்றத்தின் குவிமாடத்தில், கலங்கரை விளக்கத்தில் இருந்து இரு பட்டைகளாக  வெளிச்சம் சுழன்று கொண்டிருந்தது. இரட்டை ஔிப்பட்டைகள் மிக நீண்ட வாளைப் போல இருளை வெட்டியடி சுழன்றன. பையன்கள் விடைபெற்றுச் சென்றுவிட்டார்கள். மணலில் கால்கள் புதைய நடந்தேன். நடக்க நடக்க இருபட்டை வெளிச்சம் அருகில் வந்து என் வயிற்றை, கழுத்தை, தலையை  தடவிச் சென்றது. மணலில் இருந்து சாலையில் ஏறி நடந்தேன். வண்டி பார்த்துக் கொண்டிருக்காமல் ஜார்ஜ்டவுன் சாலைகளில் வேகமாக நடைபோட்டேன். முதலித்தெரு தூங்கி வழிந்தது. இன்று அதிக நேரமாகிவிட்டது. அம்மாவும் ஜானகியும் விழித்திருப்பார்கள். வீட்டின் மாடத்து பிறை விளக்கு மினுக் மினுக்கென்று எரிந்தது. செருப்பை ஓரமாக விட்டுவிட்டு முதல் அடியை தரையில் வைத்ததும், வாசலில் சாயுங்காலம் நீர் தெளித்த ஈரத்தின் தண்மையால் பாதங்கள் சிலிர்த்தன. ஜானகி தட்டுத்தடுமாறி இழுத்திருந்த நட்சத்திரக் கோலத்தின், முக்கோண வடிவம் பிசகிக்கொண்டு அவளைப் போலவே நின்றது.

அங்கணத்தில் நின்று கைகளில் நீரள்ளும் போதே,ஏன்டா இத்தன நாழி…”என்று கேட்டபடி அம்மா  தாழ்வாரத்தில் நடந்து சென்று தேங்காய் எண்ணைய் விளக்கைத் தூண்டினாள். ஜானகி சமையல் உள்ளில் பலகை எடுத்துப்போடும் சத்தம் கேட்டது.

ஏண்டிம்மாஉருட்டல் சத்தம் கேக்காம வேலை பழகனும்ன்னு எத்தனையாட்டம் நோக்கு சொல்றதுன்னேன்,” என்று சொல்லிவிட்டு என்பக்கமாகத் திரும்பினாள். அலுவலகத்தில் நடந்ததை அம்மாவிடம் ஒப்பித்தேன். அவள் தலையை ஆட்டிக்கொண்டு நாளைக்கு நடக்கறதைப் பார்ப்போம் என்று பெருமூச்சு விட்டபடி அங்கணத்தை அடுத்த உள் தாழ்வாரத்திலேயே தலைக்கு கையை வைத்து படுத்துக் கொண்டாள். விளக்கு ஔியில் அவளின் நாமமிட்ட நெற்றி நன்றாக அழுந்த சுருங்கியிருப்பது தெரிந்தது. முகம் சுண்டிப்போயிருந்தாள்.

சற்றைக்கெல்லாம் நானும் அங்கணத்தாழ்வாரத்திலயே படுத்தேன். மனம் முழுவதும் அலைந்து கொண்டிருந்த கணக்குகளுக்குள் ஸ்ப்ரிங்கின் குரல் புகுந்து எண்களைக் கலைத்தது. கண்களை மூடிக்கொண்டால் வரும் கணக்குகள் வரிசை பிரிந்து சென்று முட்டிக்கொண்டன. பெரிய பானைகள் நிறைய கம்பும், அரிசியும், கேழ்வரகும் நிறைந்திருந்தன. ஜானகி மலர்ந்த முகத்துடன் படியில் அளந்து கழனி கலைந்து கொண்டிருக்கிறாள். அம்மா கூட  அவளிடம் சிரித்தபடி ஏதோ சொல்கிறாள். நான் நடுமுற்றத்தில் அமர்ந்து சாய்வுப் பலகையில் கணக்கு எழுதுகிறேன்கணக்குகள் விரிந்து செல்லும்போது எங்கிருந்தோ கடல்காற்று வீச தாள்கள் பறக்கின்றன. அய்யோ என்று எழுந்து அமர்ந்து  பிடிக்கிறேன். கைகளுக்குள் ஒன்றும் சிக்கவில்லை.

என்ன சின்னாஉறக்கம் வரலையா,’ அம்மாவின் குரல் கேட்டு படுத்துக்கொண்டேன்உள்ளுக்குள் ஜானகி தரையில் படுத்து உறங்குகிறாள். சிறு பெண். ஐந்து கஜம் புடவையில் பொம்மை மாதிரி இருக்கிறாள்பின் கழுத்து குறுமுடிகள் தேங்காய் எண்ணெய்யில் படிந்து ஒட்டியிருக்க, இறுக்கமாகப் பின்னிய பின்னலை முன்னால் போட்டிருக்கிறாள். கபடு அறியாத நல்ல உறக்கம். இந்த உறக்கத்தின் பொறுப்பாளி நான்தானே? எழுந்து தலையை பிடித்துக்கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்தேன். தலைவலி விண் விண் என்று நெற்றிப்பொட்டிலிருந்து தெறிக்கத் தாடங்கியது. நாமகிரி தாயாரின்  நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினேன்.

ஓம் நாமோ நாமகிரியை நமஹ்

ஓம் நமோ நாமகிரியை நமஹ்

மனதிற்குள் மறுபடி மறுபடி அவள் நாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தேன். அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட்டது. உள்ளுக்குள் சென்று வேட்டியை சுருட்டியபடி குத்துகாலிட்டு சுவரில் சாய்ந்து அமர்ந்தேன். அரவம் கேட்டு ஜானகி விழித்துக்கொண்டாள்.

ஒடம்புக்கு முடியலையான்னா,”

ஒன்னுமில்லை..நீ தூங்கு,”

நேத்து வந்ததுலேந்து அம்மாவும் பிள்ளையுமா என்னமோ பேசிக்கறேள்..என்னிட்ட சொல்லப்படாதா,”

நேற்றிலிருந்து யாரிடமாவது பேசனால் தேவலை என்று இருந்தது. அதற்காகத்தான் இங்கு வந்து உட்கார்ந்தேன். இப்போது எதுவோ தடுக்கிறது.

உனக்கெதுக்கு அந்த வம்பெல்லாம்சின்னப்பிள்ளை,”

நா ஒன்னும் குழந்தையில்லை…”

புன்னகைத்தைபடி அவளைப் பார்த்து  சம்மணமிட்டு அமர்ந்தேன்

நேத்து காலையிலட்ராம் வண்டியில விஸ்வநாதனை பார்த்தேன்,”

கும்போணத்துகாரரா?”

 “ஆமா.. ப்ரசிடென்சியில பி. கணக்கு முடிக்கப்போறான்,”

உங்க சோட்டுகாரால்லாம் படிக்கிறாளேன்னு மனசுக்கு கஸ்ட்டமா இருக்கா,”

சின்னப்பெண் என்றாலும்  புரிந்துகொள்கிறது. பெண்பிள்ளைகளுக்கு நுணுக்கம் ஜாஸ்தின்னு அம்மா சொல்வது சரிதான்.

 “மதராஸில் நான் வேலை தேடி அலைஞ்சப்ப இவன்தான் காலேஜ் பையன்களுக்கு ட்யூசன் எடுக்க ஏற்பாடு பண்ணிக்குடுத்தான்,”

ம்…”

அவனைப்  பாக்கவும் வேலை தேடி அலைஞ்ச நெனப்பு வந்துடுத்து,”

அதை சொன்னதுக்கா அம்மா முகத்தைத் தூக்கி வச்சிருக்கா,”

அம்மாவை விட்டுட்டு நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்..”

தலையாட்டியபடி எழுந்து அமர்ந்தாள். மடிசாரை இழுத்துப்பிடித்து சொருகியபடி என்னைப் பார்த்தாள்.

வேலை தேடறப்ப மெட்ரிகுலேசன் சர்ட்டிபிஃகேட்டும், கணக்கு எழுதற நோட்டையும் எடுத்துண்டு போவேன். வேலைக்கு சிபாரிசா கணக்கு நோட்டை காட்றதுக்கு ரொம்ப கூச்சமாக இருக்கும் ஜானகி,” என்றபடி தலைகுனிந்து கொண்டேன்.

இதிலே என்ன இருக்குன்னா..நீங்க படிப்பாளி..அதைக் காட்றதுனால என்ன?”

 “அது அப்படி இல்ல ஜானகி..அந்த நோட்டுகளை வயிற்றுப்பாட்டு வேலைக்காக ஒருத்தர் முன்னாடி நீட்றப்ப, நம்ம நாமகிரித்தாயாரை அங்க நிக்க வைக்கறாப்ல இருக்கும்,”

ஐானகி நெஞ்சில் கைவைத்தபடி அருகில் வந்து அமர்ந்தாள். என்னால் தலையை நிமிர்த்த முடியவில்லை.

திருக்கோவிலூரு சப் கலெக்டர்லருந்து, மதராஸ் திவான் பகதூர் வரைக்கும் எத்தனை பெரியவாக்கிட்ட இந்த நோட்டுக்களை நீட்டினேன்? பாராட்டுவாசின்ன வேலைக்கு உன்னை அனுப்பறது பாவம்ன்னு சொல்வா. அடுத்ததா யாருட்டயாச்சும் நகத்திவிட்ருவா..”

அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். அருகில் சொம்பிலிருந்த ஜலத்தை எடுத்துக் கொடுத்தாள். குளிர்த்த தண்ணீர் தொண்டையில் இதமாக இறங்கியது

பச்சையப்பன் காலேஜ் வாத்தியார் சிங்காரவேலு முதலியாரை பார்க்க ஒருநாள் போனேன். இந்த நோட்டுல உள்ள கணக்கை இன்னும் ஆய்வு பண்ணி எழுதி நேரடியா லண்டன் கேம்பரிட்ஸ் பல்கலைகழகத்திற்கு அனுப்பிடுன்னாரு,”

அனுப்பிட்டேளா,” 

அசடுசின்னப்பொண்ணுன்னு சொன்னா மட்டும் கோபம் வந்துடறதுஇதென்ன கும்பகோணத்து மாங்கா தேங்கா வியாபாரமா..இன்னும் கணக்கெழுதனும். நேத்தைக்கு மறதியா முக்கியமான ரெண்டு தாளை எங்கியோ விட்டுடேன் ஜானகி…”

அச்சோ..”

இதற்கு மேல் நடந்தவற்றை இவளிடம் சொல்ல மனம் வரவில்லை. தரையில் தவழ்ந்த சடையின் சிவப்பு குஞ்சம் என் கைகளில் பட்டதும் அதை எடுத்துப்பார்த்தபடி,

இன்னும் அம்மாக்கிட்டதான் சடை பின்னிக்கிறியா,”

ஆமான்னா..இவ்வளவு நீளமான முடியை பின்னல் போட முடியலை,”

நீ சொந்தமா சடை பின்னிப் பழகறதுக்குள்ள நான் கேம்ப்ரிட்ஜ்க்கு கணக்கு பாடத்தை அனுப்பறேனா இல்லையான்னு பாரு,”என்றபடி அவள் தலையில் தட்டிவிட்டு எழுந்தேன். இவள் புன்னகை மாறாமல் இருக்கவாவது இந்த வேலை கைவிட்டு போகாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தபடி  துறைமுகத்திற்கு கிளம்பினேன்.

 வாசலில் ஜானகி மருளும் விழிகளுடன் முடக்கு திரும்பும் வரை பார்த்துக்கொண்டிருந்தாள். இவளுக்கு  மதராஸில்  அனைத்துமே திடுக்கிட வைப்பவை. நான் எழுதும்  கணக்குத்தாள்களை எடுத்து பார்த்துக்கொண்டிருப்பாள். ஒன்று விடாமல் பத்திரமாக எடுத்து வைப்பாள். அந்த கணக்குத்தாள்கள் அலுவலகத்தில்தான் எங்காவது தொலைந்திருக்கும். பெர்னோலியின் எண்களை எழுதிப்பார்த்த தாள்கள் அவை.

 கடற்கரை காற்று ஆளைத்தள்ளும் வேகத்துடன் வீசியது. மனதிற்குள் எரிச்சல் மண்டிக் கூடுகிறது. நேற்று அதிகாலையில் விட்ட கணக்கை இன்றும் முடிக்காமல் இருப்பதால் மனம் வேறு பாடாய் படுத்தித் தொலைக்கிறது. சற்று நேரம் நின்று கடலை  பார்த்துக்கொண்டிருந்தேன். படகுகள் கரை ஒதுங்க எந்த நேரமும் வேலைகள் நடந்துகொண்டே இருந்தன. மேற்குப் பக்கம் கப்பல்கள் அணைவதற்கான கப்பல்துறைகள் கட்டுகிறார்கள். அதற்காக ஸ்பிரிங் வகுத்த திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் தொடங்கியிருந்தன. கிழக்குப் பக்கம் புயலால் சரிந்த ஒரு துறையை மேம்படுத்தும் வேலைகளும், மண்படிவை அகற்றும் வேலைகளுமாக ஆட்கள் வேலை செய்வதை நீண்டநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்

சட்டென்று திரும்பிப் பார்த்தேன். சூரிய வெளிச்சத்தால் கலங்கரை விளக்கத்தின்  இரட்டைக் கதிர் ஔி அணைந்திருந்தது. தனக்குக் கீழ் அனைத்து ஔிகளையும் பொருட்டில்லாமல் மாற்றக்கூடிய சூரியன் கண்களுக்கு மேல் ஔிர்கிறதுமனம் சூரியகாயத்ரியை உச்சரித்தது. வியர்வை வழிய வடகிழக்கு நுழைவாயிலில் நுழைந்து அலுவலகத்திற்குள் நடந்தேன். நாராயணய்யர் என்னை நோக்கி வேகமான நடையில் வந்தார். நெஞ்சு பட படவென்று அடித்துக்கொண்டது. முதுகின் ஈரத்தில் சட்டை ஒட்டிக்கொண்டது.

அம்பிஇனிமே நீ கணக்கு மட்டுமே  போட்டுண்டிருக்கலாண்டா,” என்று சிரித்தபடி சொன்னார். நான் கைகளை இறுக்கிப் பிடித்தபடி நாமகிரி தாயாரை மனதில் நினைத்துக்கொண்டேன். சில்லிட்ட கைகளை கட்டிக்கொண்டேன்

கையை எடுடா கழிசடை.. நீ ஜீனியஸ்டா அம்பி..” என்று தோளில் தட்டினார். பெரிய கப்பல் ஒன்று பிளிறும் ஒலி கேட்கத்தொடங்கியது.

*******

kamaladevivanitha@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. கமலதேவியின் துறைமுகம் கதை கணிதமேதை ராமானுஜத்தின் மொத்த வரலாற்றைப் படித்த நிறைவு உண்டானது. அவன் எண்ணம் முழுதும் எண்கள் விளையாடியிருக்கிந்றன என்பதை கமலதேவி சிமிழுக்குள் அடைத்துக் காட்டுவதுபோல தன் சிறுகதைக்குள் காட்டியிருக்கிறார். வாசிப்பின்பம் தந்த கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button