
படம் – UGLY
இயக்குநர் – அனுராக் காஷ்யப்
ஒரு படத்திற்கு இதைவிட பொருத்தமாக ஒரு பெயர் வைக்க முடியுமா என்று தெரியவில்லை…ஒரு சமூகம் எந்த அளவுக்கு சீழ் பிடித்துள்ளது என்பதனை ஒரு கதையின் மூலம்… இல்லை, இல்லை… ஒரு சம்பவத்தின் மூலம் நம் செவிட்டில் அறைந்தது போல் நம் கண்முன் கொண்டுவந்திருக்கிறார் அனுராக் காஷ்யப் என்கின்ற சினிமா அரக்கன்…
விவாகரத்தான தம்பதிகளின் ஒரே மகள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் தந்தையோடு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போகிறாள்.மகளைத் தொலைத்த தந்தை நண்பனோடு உதவி கேட்டு காவல் நிலையம் செல்கிறான். ஆனால் அங்குதான் அவனுக்கு தனது கடந்தகாலம் மூலமாக புதிய பிரச்சினைகள் ஆரம்பிக்கிறது…..கல்லூரிக் காதல் கைகூடிய போதிலும் அவனது லட்சியமும்,வருமானமும் கைகூடாத காரணத்தினால் மனைவி பிரிந்து செல்கிறாள்…யாருடன்??? எந்தக் கல்லூரியில் இவளுக்காக ஒருவனைப் போட்டு புரட்டி எடுத்தானோ அவனுடன்….வேட்டைக்காக வட்டமடிக்கும் கழுகு போல் இவர்களை வட்டமடித்து கொண்டே இருந்தவன் ஒரு சிறு ஊடலில் அவளைக் கொத்திக்கொண்டு போய்விடுகிறான்….கடைசி வரை கழுகு வட்டமடிப்பதை நிறுத்தவே இல்லை….நிற்க….
காணாமல் போன பெண்ணை தேடும் சமயத்தில்கூட ஒவ்வொருவரின் மனதில் தேங்கிய அழுக்குகள் குமட்டிக்கொண்டு வெளியே வந்து விழுகின்றன…எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என தாய்,மாமன்,தாயின் தோழி,தந்தையின் நண்பன் என குழந்தையை தேடுவதைவிட பணத்தைத் தேடுவதிலேயே குறியாக இருக்கின்றனர்…குழந்தையின் இரு தந்தைகள் தேடினாலும் அவர்கள் உள்ளே இருக்கும் மிருகம் அவ்வப்போது எட்டிப் பார்த்து குழுந்தையை தேடுவதை விடுத்து கடந்தகாலத்தைத் தேடி ஒன்றை ஒன்று கடித்துக் குதறிக்கொள்கிறது….குழந்தை கடத்தல் என்றவுடனேயே கடத்தல் மாஃபியா,பிச்சைக்கார கும்பல்,ரெட் லைட் ஏரியா,தீவிரவாதிகள் தொடர்பு என நாம் எதிர்பார்த்து கொண்டிருக்கும் போதே நீங்கள் எல்லாம் முதல்ல யோக்கியமாடா?? உங்களுக்கு எல்லாத்தையும்விட உங்க ஈகோவும்,பணமும்தானே முக்கியம் என கடைசி காட்சியில் நம் மனசாட்சியை உலுக்கி எடுக்கிறார் இயக்குநர்….பணம் என்றால் பிணம் மட்டுமல்ல எவரும்,எந்நேரத்திலும் வாயை பிளப்பார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறது இப்படம்.