வானவில் தீவு :10 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்

இதுவரை…
தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்தனர். கடலின் ஓரிடத்தில் இருந்த பெரிய கதவை இறகை வைத்துத் திறக்கும் முயற்சி தோல்வியடைந்தது. அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பினர்.
இனி…
பாலா: ஹேய்! அந்த இறகு ராம் கையில இருந்தப்போ தானே கலர்கலரா ஒளி வந்துச்சு. அப்போ அவன வச்சு திறக்க முயற்சி பண்ணலாமே?
இங்கு தான் பிரச்னை ஆரம்பித்தது. ராமுவும் மகேஷும் கிட்டதட்ட ஒரே அளவு கனம், ஒருவர் மேல் ஒருவர் ஏறி நின்று கொள்ளலாம். ஆனால் பாலாவோ பயங்கர ஒல்லி. அவனை எல்லோரும் தூக்கலாமே தவிர, அவனால் யாரையும் தூக்க முடியாது.
இப்போது ராமிற்கு கதவின் மேலே உள்ள சாவியின் துளை தெரிய வேண்டுமெனில், இருவர் உயரத்திற்கு தூக்கினால்தான் முடியும். மீண்டும் குழப்பம் அதிகரித்தது.
மகேஷ்: டேய், நான் வேணா உன்ன அப்படியே லைட்டா தூக்கி போடறேன், நீ சாவி துளைக்கு பக்கத்துல இருக்க கைப்பிடிய புடிச்சுக்கிறியா?
ராம்: ஏன்டா நீ வேற. என் கால உடைக்கப் பாக்குறியா?
கப்பலுக்குள் அதிகம் பொருள் சேர்க்க வேண்டாமென்று பெட்டி போல் உயரமாக இருந்த எதையும் எடுத்து வைக்கவில்லை. ஏறி நிற்கவும் எதுவுமில்லை.
ராம் கையில் இறகை வாங்கி சுழற்றிப் பார்த்தான். ஒன்றும் நிகழவில்லை.
அம்மு: ஹேய்… ஹேய்! எல்லாரும் பாருங்க. இப்ப குளிர் குறையுதில்ல?
லூனா: அட ஆமா!
பாலா: டேய் ராம், உன் கையில இறகு இருந்தா தான்டா குளிர் குறையுது.
ராம்: அப்போ இத கையிலயே வச்சிருந்து, யோசிக்க நேரம் எடுத்துக்கலாம்டா.
எல்லோரும் திரும்பவும் மகிழ்ச்சியான மனநிலைக்கு வந்தனர். ஆனால் சாவித்துளையைப் பார்ப்பதற்கு இன்னும் ஐடியா கிடைக்கவில்லை.
அப்போது தான் அந்த சூப்பர் ஐடியா கிடைத்தது பாலாவிற்கு.
“ஐடியா கண்டுபிடிச்சேனே
பிடிச்சேனே…
சூப்பரான ஐடியா ஒண்ணு
நான் கண்டுபிடிச்சேனே”
என்று பாடத் தொடங்கினான்.
என்ன ஐடியா என்று தெரியாமலே வழக்கம்போல எல்லோரும் கோரஸ் பாட ஆரம்பித்தனர்.
“ஐடியா கண்டுபிடிச்சானே
பிடிச்சானே…
சூப்பரான ஐடியா ஒண்ணு
பாலா கண்டுபிடிச்சானே!
ஓஓஓஓஓ ஓஓஓஓஓ”
லூனா: என்ன ஐடியா அது?
பாலா: கிப்பர்னால தண்ணி இல்லாம இருக்க முடியும்ல. அது ஏறலாம்ல.
லூனா: அடப்பாவி. இதுக்கு தான் பாட்டு பாடுனியா? ராம் தானடா இறகைப் பயன்படுத்தனும்
பாலா: அட ஆமால்ல.. கொஞ்சம் அவசரபட்டுட்டுட்டேன்.
கரண்டு மண்டையன்: ம்ம்ம், கொஞ்சம் இல்ல.. ரொம்ப…
பாலா: இப்ப என்ன பண்றது?
மகேஷ்: யோசிப்போம் டா. ராம், நீ இறக கீழ வச்சிடாத.
ராம்: ம்ம்ம் சரிடா
ராம் பொழுது போகாமல் இறகை வைத்து பாவனைகள் செய்து பார்த்துக் கொண்டிருந்தான்.
வட்டமாய், மேலும் கீழுமாய், x வடிவத்தில் என பல மாதிரி.. அழகழகான வண்ணங்களை அது கொடுத்துக் கொண்டே இருந்தது. அப்படியே யோசனைகளில் மூழ்கிப் போனான்.
பாலா, மகேஷ், லூனா, கரண்ட் மண்டையன் நால்வரும் ஏதேதோ விவாதித்துக் கொண்டிருந்தனர். அம்மு மீன் வழக்கம் போல் சின்னச் சின்னதாக விளையாடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
திடீரென ராம் கொஞ்சமாய் மேலே பறந்ததைப் போல் இருந்தது.
அம்மு மீன்: அச்சோ ராம் பறக்கறான். பறக்கறான்
பாலா: என்ன சொல்ற?
ஆளாளுக்கு கத்தியதில், ராமின் கவனம் கலைந்தது.
ராம்: என்னடா ஆச்சு?
பாலா: நீ பறந்தியாமே? அம்மு மீன் சொல்லுச்சு.
ராம்: நான் எங்கடா பறந்தேன்? சும்மா தான் உட்கார்ந்துட்டு இருந்தேன்.
அம்மு மீன்: இல்ல ராம். நிஜமாவே நீ பறந்த.
ராம்: கப்பல் ஆடும் போது லைட்டா அசைஞ்சேன். அத வச்சு உளறாத அம்மு.
லூனா: கப்பல் ஆடவே இல்லயே ராம்.
ராம்: என்ன சொல்றீங்க? அப்போ நான் நிஜமாவே பறந்தேனா?
அம்மு மீன்: ஆமா ராம். நிஜமா தான். நான் பார்த்தேன். நீ அந்த இறக மேல கீழ ஆட்டிட்டு இருந்த.
ராம் உடனே இறகை மேலே கீழே ஆட்டிப் பார்த்தான். வண்ணங்கள் வந்ததே தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை.
என்னதான் செய்து கொண்டிருந்தோம் என யோசித்து யோசித்துப் பார்த்தான்.
ராம்: அட ஆமா, இப்ப மேலே ஈசியா போனா எப்படி இருக்கும்னு தான் அப்போ யோசிச்சுட்டு இருந்தேன்.
சொல்லும்போதே அவன் குரலில் சந்தோஷம் தெறித்தது.
உடனே உட்கார்ந்து கொண்டு, அதே யோசனையை ஓட விட்டான். ஒன்றுமே நடக்கவில்லை.
ராம்: அட என்னடா இது? ஒன்னுமே நடக்க மாட்டேங்குது. இறகுல ஒரு சக்தியும் இல்ல.
அம்மு மீன்: கவலைப்படாத ராம். முன்ன நீ ஆழ்ந்த சிந்தனையில இருந்த. நாங்க எவ்ளோ சத்தம் போட்ட அப்புறம் தான் உனக்கு தெரிஞ்சது. அதே கவனத்தோட உட்காரு.
ராம் அப்படியே அமர்ந்து, இறகை மேலே கீழே அசைத்துக் கொண்டே ஒரே விஷயத்தை நினைக்க ஆரம்பித்தான். நிஜமாகவே கொஞ்சம் பறந்தான். அதற்கு மேல் போக முடியவில்லை. எல்லோரும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
சரி இது தான் வழி.
பாலா கீழே நிற்க, ராம் அவன் மேல் ஏறி நின்று, அதே மாதிரி இறகை அசைத்துக் கொண்டே ஒரே விஷயத்தில் கவனமாயிருந்தான். மெல்லப் பறக்கத் துவங்கினான். அதிக உயரம் பறக்க முடியாததால், கொஞ்சம் எக்கி சாவித் துவாரத்தில் இறகை நுழைத்தான்.
அப்போது வேகமாக ராம் தூக்கி எறியப்பட்டான். அதே விசையில் பாலாவும் கொஞ்சம் போய் விழுந்தான். எல்லோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
அப்படி என்னதான் நடந்தது?
தொடரும்…