கட்டுரைகள்
Trending

ஒரு பறவையின் இரு சிறகுகள் [அம்மா வந்தாள் மற்றும் மோகமுள் நாவல்கள் வாசிப்பனுபவம்]- கமலதேவி

கதையை கதையாய் மட்டும் வாசிக்க விடாமல் செய்வது எது? கதைக்காக கண்ணீர் விடவோ, புன்னகைக்கவோ, எரிச்சலடையவோ வைப்பது எது? 

கதைகள் கொஞ்சமேனும் மனித வாழ்விலிருந்து எழுகிறது என்பதால்.

மனிதர்கள் தங்களின் சாயல்களைக் கண்டுகொள்வதால்.

சொல்பவரின், எழுதுபவரின் மனதோடு இணைந்து செல்ல முடிவதால்.

இதிகாசங்கள் நூற்றாண்டுகள் கடந்தும் புதிய வாசகர்களுக்கு நல்ல வாசிப்பனுபவத்தை அளிப்பது எதனால்?

அது சொல்லும் வாழ்க்கை சிக்கல்கள்,உறவுச் சிக்கல்கள்,அரசியல் சார்ந்த கேள்விகள், தத்துவ சிக்கல்கள் போன்றவை அந்தந்த தளங்களில் இன்னும் இருந்து கொண்டே இருப்பதால்.

ஆக மொத்தத்தில் வாழ்க்கை போல ஒன்றைக் கதையோடு வாழ்ந்து, தெரிந்து, உணர்ந்து கொள்வதால்தான் குழந்தைக் கதைகள் முதல் இதிகாசங்கள் வரை மனிதருடன் இணைந்து இருக்கின்றன. தான் உணர்ந்தை மற்றவர்களுடன் உரையாட நினைத்ததுதான் கலைகளின் ஆதாரமாக இருக்கக்கூடும்.

எழுத்தும் அவ்வகையான காலம் கடந்த உரையாடல்தானே..

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் எழுத்தை மனதிற்கு நெருக்கமானதாக ஆக்குவது எது?

அவர் எழுத்தின் ஆதாரமான

 மனிதனுக்கு இயற்கையுடனான உணர்வுப்பூர்வமான பந்தம்.

மனிதருக்கு கலைகள், இசையுடனான உணர்வுப்பூர்வமான பந்தம்.

மனிதருக்கும் சகமனிதருக்குமான உணர்வுப்பூர்வமான பந்தம்.

மனிதருக்கும் தெய்வத்திற்குமான உணர்வுப்பூர்வமான பந்தம்.

ஆணுக்கும் பெண்ணிற்குமான உணர்வுப்பூர்வமான பந்தம்.

இதற்கு கணவன் – மனைவி, காதலன்காதலி என்ற ஒற்றை பார்வையுடன் மட்டுமல்லாது அம்மா – மகன், பதின்பையன் – வீதியில் கீரை விற்கும் பெண், மனித ஆண் – தேவி என்ற தெய்வீக உருவகப்பெண் மற்றும் சகவயதுத் தோழி என்ற பல தளங்களில் நின்று மனித மனத்தின் உணர்வுகளை உண்மையாகப் பேசுகிறதால் அவரது எழுத்து மனதிற்கு நெருக்கமானதாக இருக்கிறது.

இந்த உணர்வைக் கொண்டு வருவதில் அவரின் மொழிக்கு தீவிரப் பங்குண்டு.

இந்த நெருக்கங்களை தன் எழுத்தில் கொண்டு வந்து அதை வாசகர்களின் மனதிற்குக் கடத்திய அவரது குறிப்பிடத்தக்க இரண்டு ஆக்கங்கள்அம்மா வந்தாள்’ மற்றும்மோகமுள்’.

அம்மா வந்தாள்

அம்மா வந்தாளின் அலங்காரத்தம்மாளின் கம்பீரமும் ஆளுமையும் இருபதுகளின் துவக்கத்தில் வாசிக்கும் கல்லூரி பெண்ணிற்கு மிகவும் ஈர்ப்புடையது. அவள் எந்த இடத்திலும் தாழக்கூடாது என்றே மனம் நினைக்கும். சமூகம் விதித்த விதிகளை மீறியதற்காக மன்னிப்பு, அதுவும்ஆமாம் செஞ்சுட்டேன், மன்னிச்சிருங்கோ… அதுக்கு என்ன சொல்லிருக்கோ அந்த நிவர்த்தியை செஞ்சுடறேன்” என்று நிமிர்ந்து சொல்வதைத்தான் ஏற்கும்.

”அம்மா வந்தாள் வாசித்த பின் அதிர்ச்சியா இருந்துச்சா?” என்று எங்கள் தமிழ் விரிவுரையாளரும், சீனியரும் கேட்ட பொழுது,இல்லையே” என்றேன். அவர்கள் இருவரும் சிறுநகரவாசிகள்.முந்தைய தலைமுறையின் மண்ணை, வாழ்வை, பொருளியலை அறியாதவர்கள். குழந்தையிலிருந்து ஊருக்குள்ளேயே உழல்பவர்களுக்கே( விடுமுறைக்கு ஊருக்கு வந்துபோகிறவர்கள் அல்ல)தன் மண்ணை, மனிதரை, வாழ்வைத் தெரிந்துகொள்ள முடியும்.

இலவசக் கல்வி கற்று எண்பதுகளில் அரசு வேலைக்குச் சென்று திருமணம், பிள்ளைகள் என்று செட்டிலான வாழ்க்கைக்குள் நுழைந்த கீழ் மத்தியத் தர தலைமுறையின் பிள்ளைகள் நாங்கள் மூவரும். பெரும்பாலும் இந்தத் தலைமுறை தந்தையர்கள் இரு தாரங்கள், சீட்டாட்டம், குடிப் பழக்கங்கள் என இன்ன பிற பழக்கங்களை மிகத் தீவிரமாக எதிர்ப்பவர்கள். இந்தத் தீவிர மனப்பான்மையின் அடிப்படை என்ன?

தாத்தாக்களின் தலைமுறை வாழ்க்கை முற்றிலும் வேறு. என் பத்து வயது வரை இரண்டு மனைவியுடன் வாழும் சில தாத்தாக்களையும், இரண்டு தாத்தாக்களுடன் வாழும் ஒரு சில பாட்டிகளுடனும் இருந்திருக்கிறேன். என் இருபதாவது வயதில் மிகப் பழுத்த தாத்தாக்கள், பாட்டிகள் தன் இணையின் இருவர்களுக்கும் நல்ல நண்பர்களாக பேச்சுத் துணைவர்களாக இருந்து இறந்திருக்கிறார்கள்.

இந்த இரு உறவு நிலைகளை பெரும்பாலும் பொருளியல் தீர்மானித்தது. இவர்களின் வயோதிகத்தில் உறவுகளால் வெறுக்கப்பட்டவர்கள்  பாட்டிகள்தான். தாத்தாக்களிடம் பெருந்தன்மையாகவே இருந்தார்கள்.

இந்த நடைமுறை அடுத்த தலைமுறையின் பள்ளிக்கு, கல்லூரிக்குச் சென்று படித்த ஆண் மனநிலையை, வாழ்வை, மனைவி மற்றும் தன் பிள்ளைகளுக்கான வளர்ப்புக் கட்டுப்பாட்டை, பெண் குழந்தைகளுக்கான சுதந்திரம் எந்த இடம் வரை என அனைத்தையும் தீர்மானித்தது.

எப்படி தி.ஜா புதிதாக அதிர்ச்சி அளிக்க முடியும்? ஊரில் ராமாயணம் கேட்டவர்கள் அதிகம். ராமாயணக் கூத்துகள்தான் அதிகம் நடந்திருக்கின்றன. அன்று அது தேவையானது என அதை நடத்துபவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ராமர் ஏகபத்தினி விரதன் என்பது இவ்வளவு கொண்டடாப்படுவதன் பின்னுள்ள உளவியல் என்ன?

 மாப்பிள்ளை பார்க்கும்போது,எப்படி?” என்று கேட்டால்,ராமசந்திரமூர்த்தியாக்கும்” என்று அழுத்திச் சொல்வார்கள். அதே அளவுக்கு சீதையும். இந்த மனநிலை பதிய வைக்கப்படுகிறது. திருமணம் சார்ந்த உறவுச் சிக்கல்களுக்கு பொருளியல் மட்டும்தான் காரணம் என்று நினைத்த என் தர்க்க மனதின் மேல் ஒருஅடியைப் போட்டு,வேறு வேறு அடிப்படைகளைப் பேசுகிறது என்பதால் அம்மா வந்தாள் எனக்கு முக்கியமான நாவலாக இருக்கிறது.

மனித மனங்களின் உளவியலை நாடி பிடித்து உணர முயற்சிக்கிறது. இந்த வாசிப்பனுபவத்தை எழுதுவதற்காக நான்காவது முறையாக வாசிக்கும்பொழுதும் புதிய கதவொன்றைத் திறக்கிறது. அலைபேசி விளையாட்டில் முடிவிலாக் கதவுகள் திறப்பதைப் போல.

சரி தவறுகள், மீறல் புனிதங்களுக்கு அப்பால் மனித மனதின் ஓயாத அலைபாய்தல்கள் மற்றும் அதனால் ஏற்படும் ஆறாத காயங்களைச் சொல்கிறது. உடல் நலம்,கொஞ்சம் செல்வம் இருக்கும்போது ஏன் இத்தனை துயரங்கள்கொஞ்சம் நிம்மதியா இருக்கக்கூடாதா? என்ற கேள்விக்குப் பதிலாக இந்த நாவல் இருக்கிறது.

மனிதரை மனிதராக ஆக்கிய ஒன்றின் விசை.எந்திரன் திரைப்படத்தில் சிட்டி என்ற இயந்திரத்திற்கு உணர்வு மையம் செயல்படத் தொடங்கியதும்தான் எல்லாப் பிரச்சனைகளும் தொடங்கும்.

இந்த நாவலில் அலங்காரத்தம்மாவிற்கு தன் மனதின் மரியாதைக்குரிய மனிதருக்கு நேர்மையாக நடக்க முடியாததன் காரணம் என்ன?அவர் எந்த வகையில் ஒவ்வாதவராகத் தெரிகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிவதால் எனக்கு பாட்டிகளை புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

நாவல் வாசிப்பில் என்னை நெருடும் இடம் நாவலின் முடிவில்நீயும் அம்மா பிள்ளையாயிட்ட” என்று அப்புவை அலங்காரத்தம்மாள் சொல்வதுதான். அப்புவுக்கும் கணவனை இழந்த இந்துவுக்குமான அன்புக்கும், அலங்காரத்தம்மாவிற்கும் சிவசுக்குமான உறவிற்கும் வேறுபாடில்லையா? என்ற நெருடல்.முன்பிருந்ததை விடவும் தூய மனநிலைக்கு அப்பு செல்கிறபோது எப்படி அலங்காரத்தம்மாவும் அப்புவும் ஒன்றாக முடியும்?

அம்மா வந்தாள் என்றுமிருக்கிற சிக்கலைப் பேசுகிறது.பேசித் தீராத புரிந்துகொள்ள முடியாத விடை காண முடியாத சிக்கல் அது. பேசுபாருள் சார்ந்த நித்யம் நாவலுக்கு என்றும் உண்டு. ஒரு பக்கம் மீறல் அதற்குரிய அறத்துடன் இருக்கிறது. மறுபக்கம் வெறும் உணர்வுகள் சார்ந்த மீறலாக மட்டுமே நின்றுவிடக் கூடிய ஒன்றை இணையாகப் பேசுவதன் மூலம் மீறலின் நியாயங்கள் வலுப்படுத்தப்படுகின்றன. எந்த இடத்திலும் வாதங்களே இல்லை என்பது எழுதியவரின் கைத்திறனிற்குச் சான்று

மனித உணர்வுகள் மீது அறத்தின் ஔி படியும்போது மீறல் புனிதமாகவும், இல்லாதபோது பாவமாகவும் மாறுவதை, மீறும் மனங்கள் தாங்களே உணர்வதைக் காட்டும்அம்மா வந்தாள்’ என்றும் வாசிக்கப்படும் நாவலாக இருக்கும் என நம்புகிறேன்.

மோகமுள்

பதின்வயதின் முடிவிலிருக்கும் பாபுவுக்குள் தொடங்கும் அகம் புறம் சார்ந்த சிக்கல்களின் ஒவ்வொரு இழையாகப் பேசப்பட்ட நாவல்மோகமுள்’. எப்பொழுதும் தன்னுள் ஒடுங்கிய அகமுகனாக பாபுவும், எப்பொழுதும் கலகலப்பான ராஜமும் தோழர்கள். இந்தத் தோழமை நாவலில் அழகாகத் திரண்டு வந்திருக்கிறது. காவிரி மணலில் ராஜத்தின் வீட்டில், கல்லூரியில், படகுப் பயணத்தில், கோவிலில் என இவர்கள் உரையாடல்களும் கும்பகோணத்தின் அந்த இடங்களும் நினைவில் அழியாமல் இருக்கிறது. சட்டென்று வாழ்க்கை சுழற்றலில் கல்லூரி முடிந்த பின் ராஜம் வேலையின் நிமித்தம் பிரியும்பொழுது வாசிக்கும் நமக்கும் ஒரு வெறுமை வருவதைத் தவிர்க்க முடியாது.

பாபுவுக்கும் இசை குரு ரங்கண்ணாவிற்குமான உறவு அதைக் கடந்து தந்தை மகன் இடத்தை எய்துகிறது. பாபு ஒருநாள் இசை வகுப்பிற்கு வராததற்காக ரங்கண்ணா தவிக்கும் தவிப்பும் எதிர்பார்ப்பும் மனதைத் தொடுபவை. தன்னை இன்னொருவனில் கண்டுகொள்ளும் பரவசம் நிறைந்த உறவு.

பாபுவுக்கும் தந்தைக்குமான பந்தம் அதைக் கடந்து இசையில் ஆசிரிய – மாணவருக்கான நிலை வரை செல்கிறது. பனி இரவில் பிள்ளையை இசைக் கச்சேரிகளுக்கு அழைத்து செல்லும் தந்தை

பாபு தன் மனிதர்களுடன் கொண்டுள்ள உறவில் இழையோடும் நெருக்கமும் வாத்சல்யமும் அவன் இயல்பால் விழைவது. அது அவனுள் இழையும் இசையால் வந்திருக்கலாம். இத்தனை மென்மையான மனுசர்கள் உண்டா என்று தோன்றும். அந்த வாத்சல்யமே அவனை தங்கம்மாளிடம் கொண்டு விடுகிறது.

அந்த வாத்சல்யமே யாமுனா மீதான அன்பிற்குக் காரணமாகிறது. தன் அக்கா வயதை (பத்து ஆண்டுகள் மூத்த) ஒத்த யமுனாவை நெஞ்சில் சுமந்தலையச் சொல்கிறது. யமுனாவின் அழகை ஆராதிப்பதும், அன்பாயிருப்பதும், அவளை தேவியின் ரூபமாக மனதில் வரிப்பதும் என ஒரு கலைஞனுக்குரிய அக உலகு நமக்கு முன் விரிகிறது. ஆனால் அவளைக் காதலிப்பதும் திருமண பந்தத்தில் இணைப்பதும் என்பதான நாவல் போக்கு வாசித்த முதல் வாசிப்பிலிருந்து இன்றைய வாசிப்பு வரை ஒவ்வாமையை அளிப்பதாகவே உள்ளது. காரணம் தி.ஜா வின் எழுத்தின் மீதுள்ள  நெருக்கம்தான் கதையைக் கதையாய் ஏற்க விடாமல் செய்கிறது. தி.ஜா மனிதரின் உளவியலின் அடிப்படையில் எழுதியவர் என்பதாலேயே வாசிப்பில் இந்த சிக்கல் ஏற்படுகிறது. வெறொரு கற்பனாவாத எழுத்து என்றால் இது தோன்றாது. யமுனா – பாபு உறவு நாவலின் திசையில் செல்லாமல் வேறெங்கோ சென்று முட்டி நின்றுவிட்டது.

அம்மா வந்தாள் போல பறக்காமல், மோகமுள் தரையில் கனப்பதன் காரணம் பாபுயமுனாவின் அழகிய அன்பை அப்படியே விடாமல், வலிந்து மாற்றியதாக இருக்கலாம். தன் இடையில் அமர்ந்து களித்தவன், சறுக்கி இறங்கியவன், பிள்ளையென மடியில் துயின்றவன் ஒருபோதும் அந்தப் பெண்ணிற்கு காதல் துணைவனாக முடியாதவன்

மோகமுள் அதன் இசை சார்ந்த நுணுக்கங்களுக்காக,ஒரு கலைஞனின் லட்சியத்திற்காக, இசைக்கலைஞனின் மனத் தடுமாற்றங்களுக்காக, அவன் மனதின் மெல்லிய உணர்வுகளுக்காக, தொட்டால் சுருங்கும் மென்மைக்காக, அவனது பிடிவாத மனநிலை மற்றும் மன அலைகழிப்புகளுக்காக வாசிக்கப்பட வேண்டிய நூல்.

தி.ஜானகிராமனைப் பற்றி எழுதுவது என்பதை அவர் பாஷையில் சொல்வதானால் ’அமுதமாயிருக்கிறது’ எனலாம். ஒரு வாசகியாக அவர் எழுத்து இவ்வாறே தொடர்ந்து வாசிக்கப்படும் என்று அவரது நூற்றாண்டில் நினைத்துக்கொள்கிறேன்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button