
வாழ்க்கை வரலாறுகள் சுவாரசியமானவையோ என்னமோ, பிள்ளைப் பிராயத்தைப் பற்றி நனவிடைத் தோய்தல் எழுத்துகள் எத்தனை பேர் எழுதினாலும், ஒவ்வொன்றையும் ஒரு நூறு பேராவது வாசித்துச் சிலாகிப்பது நடக்கின்ற ஒன்று.
உதாரணத்துக்குத் தமிழில் சுஜாதா எழுதிய ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் எழுத்துகள். 1940, 1950களின் பள்ளிக்கூட மாணவனின் பார்வையில் அந்தக் காலத்து ஸ்ரீரங்கத்தைப் படம் பிடிக்கிற இக்கட்டுரைகளை எப்போது படித்தாலும் அங்கே போக முடியும். அதைப் படிக்கிறவர் இருபது வயதில் இருந்தாலும், ஐம்பது வருடத்துக்கு முந்தைய ஸ்ரீரங்கத்தை மனக் கண்ணில் காணக் கிடைக்கும்.
இப்படியான எழுத்து அல்புனைவாக இருந்தாலும், பயோ பிக்ஷன் என்ற தன் வாழ்க்கையை புனைவு சேர்த்துச் சொல்லுவதாக இருந்தாலும், சுவாரசியத்துக்குக் குறைவேதும் இருக்காது.
இங்க்லீஷ் பயண இலக்கியத்தில் தனி இடம் பிடித்துள்ளவர் பில் ப்ரைஸன். தமிழில் கல்கி அந்தக் காலத்தில் பயணக்கதையை நகைச்சுவையோடு எழுதிய மாதிரி படிக்க லகுவாக, நகைச்சுவை மேவியதாக எழுதுகிறவர் பில்.
மூன்று வருடம் முன்பு, தன் பிள்ளைப் பருவத்தை எழுதினார் அவர். அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலத்தில் டெஸ் மைன் நகரைப் பிறந்த இடமாகக் கொண்டவர். அமெரிக்கரான பில் ப்ரைஸன் இங்கிலாந்து நாட்டாலும், மக்கள், கலாசாரத்தாலும் ஈர்க்கப்பட்டு பிரிட்டீஷ் குடிமகனானார். என்றாலும் அவர் கிண்டல் செய்யும் நாடுகளில் முதலானது இங்க்லாண்ட் தான்.

இடியப்பா என்று தோராயமாக மொழிபெயர்க்கலாம் பில் ப்ரைஸனின் சிறார் பிராயத்தைச் சொல்லும் புத்தகத்தின் பெயரை. லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் த தண்டர்போல்ட் கிட். பில் தன்னை மிகப் பலசாலியாகவும், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போல் பராக்ரமசாலியாகவும் கற்பனை செய்து கொண்ட சிறுவர் காலம் அது. அந்தப் பருவத்தில் எந்தச் சிறுவனுக்கும், எந்த நாட்டில் இருந்தாலும் இந்தக் கற்பனைச் சரடு மனதில் தோன்றாமல் போகாது. உதாரணத்துக்கு ஒன்று.
இடியப்பா ஹோட்டலுக்குப் பெற்றோருடன் போனபோது ஜக்கில் இருந்து தண்ணீர் குடிக்கிறான்; அப்புறம் தான் தெரிகிறது நாலு மேஜை தள்ளி ஒரு நோயாளிக் கிழவனுக்கு அதே ஜக்கில் இருந்து தண்ணீர் கொடுக்கப்பட்டிருந்தது. இடியப்பா அந்தக் கிழவனை முறைத்துப் பார்க்க, இடியப்பா கண்ணில் இருந்து அக்னி கிரணம் புறப்பட்டுப் போய் அந்த வயசனைக் கொன்று போடுகிறது.
இந்தப் புத்தகத்தின் தனிச் சிறப்பு எங்கே தன்சரிதம் தடம் மாறி ஃபாண்டஸி ஆகிறது, எங்கே ஃபாண்டஸி தேய, புள்ளிவிவரம் அழுத்தமான அடிப்படை அளிக்க வரலாறு தொடங்குகிறது என்று வாசகர் மயங்கி இருக்க உரைநடைப் புனல் சீரான வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது.
நூலில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல் மேயக் கிட்டியது இது. 1930களின் பொருளாதார நலிவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது அமெரிக்கா. ஜான் ஸ்டீன்பெக் எழுதிய The Grapes of Wrath த க்ரேப்ஸ் ஆஃப் ராத் நாவல் படிக்கக் கிடைத்தால் உடனே வாசிக்கலாம். Depression டிப்ரஷன் பற்றிய அருமையான நாவல்.
இரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்த 1940களின் மத்திய காலத்தில் உலக அளவில் தனிநபர் வருமானம் அதிகமானது அமெரிக்காவில் தான். வாஷிங் மெஷின், டெலிவிஷன், ரெஃப்ரஜிரேட்டர், வாக்கூம் க்ளீனர் என்று வீடு தோறும் மின்சார சாதனங்களை வாங்க இந்த அதிகத் தனிநபர் வருமானம் பயன்பட்டது.
என்ன தான் தனி நபர் வருமானம் அதிகரித்தாலும், 1930களின் பொருளாதார வீழ்ச்சியைக் கடந்து வந்த அந்தக் காலச் சந்ததி, எதிலும் சிக்கனம் கடைபிடித்தது. தீனி தின்ன காகிதத் தட்டைப் பயன்படுத்தி சாப்பிட்டு முடிந்து அந்த பேப்பர் ப்ளேட்டைக் கழுவி உலர்த்தி மறுபடி தன் பெற்றோர்கள் உபயோகித்ததாக ப்ரைஸன் சீரியஸாகக் கதை விடுகிறார்.

பல அமெரிக்க மாநிலங்களில் சட்டமிருந்தது – கல்யாணமான பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது. இப்போது நம்பவே முடியாத 1940களின், 1950களின் நிலை அது. மின்சார சாதனங்களை இயக்கி வீட்டுப் பராமரிப்பை நடத்தும் பொறுப்பு பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆக ஹவுஸ் மேக்கர்கள் என்று கவுரவமாக அழைக்கப்பட்ட அமெரிக்கப் பெண்கள் வீட்டைச் சுத்தம் செய்து, சமையலை முடித்து, சலவை செய்து, காய்கறி, மாமிசம் வாங்கி வந்து குளிர்பதனப் பெட்டியில் அடுக்கி வைத்து, உலர்ந்த துணிகளுக்கு இஸ்தரி செய்து நாள் முழுக்கச் சுறுசுறுப்பாக வீட்டுக் காரியம் செய்ய, அதில் ஆண்களுக்கு எந்தப் பங்கும் இல்லாமல் போனது. பில் ப்ரைஸன் காட்டும் 1950-களின் காட்சி இது.
இதிப்படியிருக்க, 1950 களில் அமெரிக்காவில் வீடு தோறும் ஒரு கார் வாங்கி வாசலில் நிறுத்திப் பயணப்பட ஆரம்பித்தார்கள். அடுத்து வீடு தோறும் இரண்டாவது கார் என்று ஓசைப்படாமல் வந்து சேர்ந்தது.
இந்தப் பொருளாதாரம் சார்ந்த தகவல் பொழிவிலிருந்து ப்ரைஸன் ஒரு ’தற்காலத் தொன்மத்துக்கு’ தாண்டிக் குதித்துப் போகிறார். 1950களின் அமெரிக்கச் சிறுநகர வெளியில் ராத்திரி இருட்டைக் கிழிக்காமல் ஒரே சத்தத்தில் இரையும் சிக்கடா பூச்சிகள் சத்தம் மாற்றிப் பையன்களின் அரையில் புகுந்து சர்வநாசம் உண்டாக்கி ஆண்குறியை நிர்மூலம் செய்துவிடும் என்ற பயத்தோடு ப்ரைஸனும் அவர் கால பையன்களும் அரையைப் பொத்திக்கொண்டு ராத்திரி நடந்து போகிறார்கள்.
அவர் சொல்கிற சிக்கடாவும் (சில்வண்டு என்ற பெயரில்), அது சிறுவர்களின் குறி சிதைப்பது பற்றிய பயமும் இங்கேயும் இருந்தவை. பயந்திருக்கிறேன்.
அமெரிக்காவில் பிரைஸன் காட்டும் 1940, 1950களின் நிலைமை மாறி ஆண்களும் வீடு பராமரிக்கிறார்கள்; நாம் தான் சாதனங்களை நம் பெண்மணிகளுக்கு வாங்கிக் கொடுத்து இன்னும் அதிகமாக வீட்டுக் காரியத்தில் ஆழ்த்தி வருகிறோம். சிக்கடா பூச்சி பயம் விட்டுப் போச்சு.
Bryson, Bill. The Life And Times Of The Thunderbolt Kid: Travels Through my Childhood (Bryson Book 4) Transworld. Kindle Edition.
***
ஒரு நாற்பது வருடம் முன்பு எழுத்தாளர் பாலகுமாரன் தன் வரலாறு எழுதியபோது, சுஜாதா அதை ‘சற்று அவசரமான சுயசரிதை’ என்று விமர்சித்தார். பேராசிரியர் சு.ஆ வெங்கட சுப்புராய நாயகர் – நண்பர்களுக்கு அன்போடு நாயகர்- அறுபதாம் ஆண்டு நிறைவு கருதி ஒன்றுக்கு மூன்றாக வெளியான புத்தகங்களை என்ன சொல்வார்? அவர் ஒற்றை வரியாவது எழுதிப் பாராட்டுவாராக இருக்கும். காரணம் இதுதான் –
நாயகரின் மணிவிழா மலர்த் தொகுதிகள் படைப்பாய்வு மலர், இலக்கிய மலர் மற்றும் ஆய்வு மலர் என்ற மூன்று நூல்களும் நாயகரைக் குறித்து அவரது நண்பர்கள் எழுதிய, தொகுத்துப் படிக்கிறபோது 360 டிகிரி பார்வை தருகிறவை. நாயகரை அவை எதுவும் விதந்தோதுவதில்லை.
பள்ளியில் கணக்குப் படிக்கப் போய் தேர்வில் தோற்று கல்வியைத் துறந்து குழு விளையாட்டில் நேரம் போக்கினார் பதின்ம வயது நாயகர். பாண்டிச்சேரியில் எல்லா வயதிலும் தட்டுப்படும் கூட்டம் தான் அது.
நாயகருக்கு மகத்தான மாற்றம் ஒன்று கிட்டியது அவரது வாழ்க்கைப் பாதையில். பிரஞ்சு மொழியை ஐயம் திரிபறக் கற்று அறிஞராக அவருக்கு வாய்ப்பு கிட்டியது. திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரியம்மையோ, உஜ்ஜயினி மாகாளியோ அவர் வாயில் தாம்பூலம் உமிழவில்லை. காரணம் அவர் காளமேகமோ காளிதாசனோ இல்லை. நாயகர் தான்.

அப்புறம் அவர் வாழ்க்கை முன்னேற்றம் தான். பிரஞ்சிலிருந்து தமிழுக்கு வெள்ளம்போல் புனைவிலக்கியமும் அல்புனைவுமாக மொழிபெயர்க்கத் தொடங்கினார். பிரஞ்சு, தமிழ் மொழி ஆய்வு நிறுவனத் தலைவரானார்.
மணிவிழா மலர்கள், மிகக் குறைவாகக் கூறியது கூறுதலோடு, நாயகரின் மொழி அறிஞர் முகத்தைக் காட்டுகின்றன. அதெல்லாம் சுவாரசியமானவையே. நாயகர் என்ற மனிதரைப் பற்றிச் சொல்கிற கட்டுரைகள் இன்னும் ரசமானவை.
ரொம்ப ப்ராக்டிகல் ஆனவர் நாயகர் என்ற இந்நூலின் பாட்டுடைத் தலைவர். சபரி மலைக்குப் போய்வர இருமுடி கட்டி மலையாள பூமிக்கு ஐயப்ப சரணம் விளித்துக் கொண்டு நண்பர்களோடு போகிறார். மலையேறலாம் என்று நடந்தால்., மிளகு போட்டால் மிளகு விழாத மிகப்பெரும் பக்தர் கூட்டம். என்ன போச்சு, இன்னொரு தடவை சபரிமலைக்கு வரலாம் என்று தீர்மானித்துத் தலையில் வைத்த இருமுடியோடு மலையிலிருந்து இறங்கிப் போகிறார். பின்னாலேயே நாலு அய்யப்பசாமிகள். நாயகர் வேகமாக நடக்க, அவர் வல்ய குருசாமி என்ற தகுதி பெற்ற தலைமை பக்தராக இருப்பார் என்று நினைத்து நாயகரைப் பின்பற்றி நடந்தவர்கள்!
நாயகரின் அப்பா அழுத்தமான கோட்டுச் சித்திரமாக நூல் பக்கங்களில் எழுகிறார். புதுவை சுதந்திரப் போராட்ட தியாகி அவர் மகன் மேல் அப்படி ஒரு பிரியம். பெரிசாக எதுவும் கேட்க மாட்டார். சின்னதா மூணு இழை சுத்தின ஜாங்கிரி வாங்கிட்டு வாப்பா. அவ்வளவுதான். தாயில்லாத நாயகரை அவருடைய அத்தை அல்லியங்கோதை அம்மாள் வளர்த்தது, தமிழ் சினிமா பற்றிய அத்தையின் கருத்தோட்டம் என்று செறிவான நினைவுகள்.
நாயகரின் மனைவி சிவகாமியம்மாள் அவருக்குத் தோள்பையில் தேநீர் டிப்டிப் பாக்கெட், வெந்நீர், பால், சீனி என்று பார்த்துப் பார்த்து எடுத்து வைத்து அனுப்புகிறார். நொறுக்குத் தீனியாக கேரட் மற்றும் காய்கறிகளை நறுக்கி ஒரு டப்பாவில் அதையும் அனுப்புகிறார். மற்றபடி அவரும் நல்ல மொழிபெயர்ப்பாளராக முகிழ்ந்தவர். மொழிபெயர்ப்பில் அர் விகுதி, அன் விகுதி தொடர்பான சிக்கல்கள் என்று ஆய்வுக் கட்டுரை எழுதுமளவும் தேர்வடைந்தவர் சிவகாமி. இது மனைவி சிறப்பைக் கொண்டாடும் காலம்.
(பேராசிரியர் க.அ.வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி )
***
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் குரு மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவருடைய மூத்த சீடர் வித்வான் தியாகராஜ செட்டியார். அவர் கும்பகோணம் கல்லூரியில் பேராசிரியராக இருந்தபொழுது, அங்கே ஒரு கடையில் மூக்குப்பொடி வாங்கி வாடிக்கையாளரானார். அந்தக் கடை பற்றி ஒரு செய்யுளே இயற்றிச் சிறப்பித்து விட்டார். செய்யுள் இப்படி முடியும் –
மதனன் சோம சுந்தரன் கடையில் செய்த
பொடியினைப் போடா மூக்கு புண்ணியம் செய்யா மூக்கே
தியாகராஜ செட்டியார் மூக்குப்பொடியைப் பரிந்துரைத்தது போல் சென்னை மாம்பலம் பாலாஜி பவன் காப்பியைக் கவிதையில் கொண்டாடினார் ஒரு புலவர். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்த அச்செய்யுள் –
‘மாலும் ஆழி விட்டிறங்கி
மாசில் பாண்டி கடைத்தெருவில்
காலை பனகல் பார்க்கருகே
கருடன் ஒயிலாய் நிறுத்திடுவான்
ஆலா லவிடம் ஒத்திவைத்து
ஆறு மணிக்குக் கடைவாசல்
நீல கண்டன் காத்திருப்பான்
பாலா ஜிபவன் காப்பிக்கே..
ஸ்ட்ராங்க் காபி குடித்த தெம்பில் இதை நான் தான் எழுதினேன்.
எமது பாடல் பெற்ற இன்னொரு தலம் மதறாஸ் மைலாப்பூர் காளத்தி கடை. வெண்பாவில் பரிந்துரைத்தது அங்கே கிடைத்த ரோஸ்மில்க்கை.
அசுரர்க் களித்தாய் அரவுக்கும் வார்த்தாய்
பசுமேய்த்த ஆயர் ருசித்தார் விசுவனே
தாளில் பணிந்துனக்குத் தந்தோம் அமுதுண்டு
காளத்தி ரோஸ்மில்க் கலக்கு.
இரா.முருகன்
நவம்பர் 2023
********
(தொடரும்…)