
ஓடுதல்
நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
அதுவும் மிக விரைவான ஓட்டம்
திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறேன்
திரும்பினால் ஓடாதே என்பர்
எப்படியும் வேகமாக ஓடி
என்னை முந்திவிட எண்ணி
அவர்கள் ஓடுகிறார்கள்
நான் ஓட வேண்டாமாம்
ஏன் தெரியுமா?
நான் வளைந்து வளைந்து ஓடுகிறேனாம்
நான் தத்தித் தத்தி ஓடுகிறேனாம்
நான் திணறித் திணறி ஓடுகிறேனாம்
அவர்களைச் சேர்ந்தவர்களும்
நான் ஓடும்போது
இரு பக்கங்களிலும் நின்றுகொண்டு
கை கொட்டிச் சிரிக்கிறார்கள்
என்ன வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்
சொல்லட்டும்
நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
*
வீடுகளின் கதை
எங்கள் தெருவில்
பலவீடுகள் எப்போதும்
காலியாக உள்ளன
எல்லாமே வாடகைக்கு
எவர் வருவார் என்று
எதிர்பார்த்திருக்கின்றன
வருகின்ற பெற்றோரின்
பிள்ளைகள் தங்களை மிகவும்
காயபப்டுத்துவதாகவும்
வலிப்பதாகவும் அழுகின்றன
சில நேரம் அவை
வாசலிலேயே நின்றுகொண்டு
வெவ்வேறு முகமூடிகளுடன்
வழிமறிக்கின்றன
வருவோர் எண்ணிக்கை
அதிகமானால்
வாசற்கதவைச் சாத்துகின்றன
பல்வேறு வீடுகளும்
பாழாய்க் கிடப்பதனால்
அவற்றில் பாம்புகளும்
பல்லிகளும் பூரான்களும்
வாசம் செய்கின்றன
இப்போது அழுது அழுது
என்ன பயன்?
*



