சிறார் இலக்கியம்
Trending

வானவில் தீவு- 11 [சிறார் தொடர்]- சௌம்யா ரெட்

இதுவரை…

தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்தனர். கடலின் ஓரிடத்தில் இருந்த பெரிய கதவை இறகை வைத்துத் திறக்கும் முயற்சி தொடர்ச்சியாக தோல்வியிலேயே முடிந்தது. அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பித் தவித்தனர்.

இனி…

படகில் விழுந்த பாலா, ராமை தேடிக் கொண்டிருந்தான். அதற்குள் அந்தப் பயங்கரமான குரல் கேட்டது. சத்தம் வந்தது கதவிடமிருந்து.

கதவு: யாருடா என் காதுக்குள்ள இறகு விட்டு சுத்துறது?

பாலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பாலா: இதுக்கு முன்னாடி நான் பண்ணுனது தெரியலயா?

கதவு: யார் பதில் பேசறது?

பாலா: நான் தான் பாலா. இதுக்கு முன்னாடி அந்த இறக உங்க காதுக்குள்ள நான் தான் விட்டேன். ரொம்ப நேரமா ஏதேதோ செய்தேன். அது தெரியலயா?

கதவு: ஓ நான் தூங்கிட்டு இருந்தப்போ என் காதுல கிச்சு கிச்சு மூட்னது நீ தானா?

பாலா: நல்லவேள இதாவது தெரிஞ்சதே. ராம் பண்ணது மட்டும் தான் தெரிஞ்சதோனு நெனைச்சேன்.

அட! ராம் எங்க?

அவன் விழுந்தது தெரியும். ஆனால் அவனைக் காணவில்லை. எல்லோரும் கதவு பேசிய அதிர்ச்சியில் இருந்தனர்.

பாலா: டேய் மகேஷ், லூனா…. ராம் எங்க?

லூனா: ஐயய்யோ நான் கவனிக்கலயே.

அம்மு மீன்: யாரும் பயப்படாதீங்க. விழுந்த வேகத்துல படகோட உள்பகுதிக்குப் போயிட்டான்.

கரண்டு மண்டையன்: அடேங்கப்பா, எவ்வளவு பிரச்னைலயும் இந்த அம்மு மீன் மட்டும் எல்லாத்தையும் கவனிக்குதே! விளையாட்டு புள்ளனு நினைச்சேன்.

மகேஷ் ஓடிப்போய் உள்ளே பார்த்தான். ராம் மயங்கி இருந்தான். தண்ணீர் தெளித்து எழுப்பி ராமை வெளியே அழைத்து வந்தான் மகேஷ். பாலாவிற்கு கீழே விழுந்தது இன்னும் வலித்துக் கொண்டிருந்தது.

பாலா: டேய் ராம், கதவு பேசுச்சுடா. அந்த சாவித்துளை அதோட காதுனு சொல்லுச்சு.

ராம்: என்னடா சொல்ற?

எல்லோரும் சேர்ந்து நடந்ததை அவனிடம் விவரித்து முடித்தனர்.

லைட் மீன்: ஆமா! அது சாவித்துளை இல்ல. கதவோட காது தான் அப்படின்னா நாம ஏன் சாவி போட்டுத் திறக்கணும். பேசுனா போதுமே?

அம்மு மீன்: ஆமால்ல.

ராம்: இது நல்லாருக்கே. சரி பேசிப் பார்ப்போம்.

கதவு அண்ணா. திறங்க நாங்க உள்ள போகனும்.

கதவு: ஆஹா! எஎவ்வளவு பாசமா கூப்பிடற தம்பி நீ? என் பேரு மிங்க்லீ. உன் பேரு என்ன?

ராம்: என் பேரு ராம். எங்க எல்லாரையும் உள்ள போக விடுவீங்களா?

மிங்க்லீ கதவு: விடலாம் தம்பி. ஆனா என் மேல 3 தாழ் இருக்கு. மேல இருந்து பார்த்தீங்கன்னா தெரியும். முதல் இரண்டும் விடுகதையாலயும், கடைசி தாழ் மாயாஜாலத்தாலயும் பூட்டப்பட்டிருக்கு. விடுகதைகள நான் கேப்பேன். ஆனா மாயம் என்னங்கறத நீங்க தான் கண்டுபிடிக்கணும்.

ராம்: ஓ அப்படியா! சரிண்ணே. நீங்க கேள்விகளக் கேளுங்க.

மிங்க்லீ கதவு: ம்ம்ம். முதல் கேள்வி. வெள்ளைக் குதிரைக்கு பச்சை வால் அது என்ன?

ராம்: நாங்களே வண்ணங்கள தேடித்தான் வந்திருக்கோம். எங்க எல்லைய தாண்டின அப்புறம் தான் வண்ணத்தையே பார்த்தோம். என்ன வண்ணத்துக்கு என்ன பேருனு கூட எங்களுக்கு ஞாபகம் இல்லியே?

மிங்க்லீ கதவு: ஆனா இந்த கேள்விக்கு பதில் சொன்னா தானே முதல் தாழ் திறக்கும்.

மகேஷ்: கவலை படாதடா ராம். நம்ம வலசை மீன்களுக்கு எல்லா வண்ணங்களும் தெரியும்ல. அவங்க கிட்ட கேப்போம்.

ராம்: அதுவும் சரிதான்.

ஆனால் வலசை மீன்களுக்கு கடலைத் தாண்டி எதுவும் அதிகம் தெரியவில்லை. இந்தக் கேள்விக்கான பதில் எதுவும் கடலில் இருக்கும் விஷயங்களோடு பொருந்தவும் இல்லை.

ராம் ஒரு பக்கம் கையில் இறகை அசைத்தபடி, யோசித்துக் கொண்டிருந்தான். ஆளாளுக்கு ஒன்று கூறினார்கள். எதுவும் பொருந்தவில்லை. மகேஷுக்கு சலிப்பாக இருந்தது.

மகேஷ்: பசிக்குதுடா பாலா. ஏதாவது சாப்பிட்டா நல்லாருக்கும்ல.

பாலா: ரொம்ப முக்கியம். ஒழுங்கா யோசிடா.

மகேஷ்: பசில எப்படிடா யோசிக்க முடியும்.

பேசிக்கொண்டே கப்பலுக்கு உள்ளே போய், மிச்சமிருந்த காய்கள், பழங்கள் எல்லாம் எடுத்து வந்தான். சமைத்த உணவுகள் எல்லாம் எப்போதோ தீர்ந்து விட்டன.

அப்போது தான் அம்மு மீன் கத்தியது.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button